245 views
அத்தியாயம் 15
ஆம்! காஜல் தான் தன்வந்த்தின் மனைவி.பிரித்வி கடைசி வரை முடியாது என்று மறுத்து விட்டதால், தந்தையின் வற்புறுத்தலால், தன்வந்த்தைக் கல்யாணம் செய்து கொண்டாள்.
தனக்கு ஏற்ற வாழ்க்கை இது தானோ என்று வாழ பழக ஆரம்பித்து விட்டாள். ஆனாலும், தன்வந்த்தின் ஒரு சில குணங்கள் அவளுக்குப் பிடிக்கவில்லை.
ஆனாலும் ஒரு வெறுமை அவளை வெகுவாக தாக்கியது. பணத்தால் மட்டும் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியாதல்லவா? தனக்கு அன்பான கணவன் வேண்டும் என்று எதிர்பார்த்தாள் காஜல்.
தன்வந்த் தொழிலில் தன்னுடைய மொத்த கவனத்தையும் வைத்திருக்க, காஜலோ கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு நிறைந்து காணப்பட்டாள்.
திருமணம் ஆகி, ஒரு வருடம் ஆக போகிறது! ஆனாலும், அவள் கர்ப்பம் தரிக்கவில்லை.
குழந்தையின்மை காரணமாக அவளது புகுந்த வீட்டில் எதுவும் கேட்டு, அவளை நோகடிக்கவில்லை தான்.
ஆனால், தன்வந்த்த் குழந்தையை எதிர்பார்த்தான் போலும்.
இப்போது நடந்ததை எல்லாம், யோசித்து யோசித்தே, உடல் உபாதைகள் அதிகமாகியது. ஒரு நிலைக்கு மேல் அவளாலேயே சமாளிக்க முடியவில்லை.இந்த முறை குழந்தைப் பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறியிருந்ததால், கவனமாக இருந்து வருகிறாள் காஜல்.
பிரித்வி தன்னை மறுத்தது தான் இன்றளவும் அவளுள் உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம்.
🌸🌸🌸
“பிரித்வி உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கிறதா சொல்லி இருக்கார் ப்பா” என்று தன் தந்தையிடம் கூறினாள் காஜல்.
“உண்மையாகவா?” என்று நம்பிக்கை இல்லாமல் கேட்டார் காசிநாதன்.
“ஆமாம் ப்பா. இப்போ அவனுக்குத் தான் கால் பண்ணப் போறேன்” என்று பிரித்விக்கு அழைத்தாள் காஜல்.
“ஹலோ! பிரித்வி! நானும், அப்பாவும் ரெடியா இருக்கோம்.எங்கே வரனும்?” என்று தந்தைக்குத் தான் பேசுவது கேட்காமல், சற்று தள்ளி நின்று பேசினாள்.
“ரெஸ்ட்டாரெண்ட் நேம் சொல்றேன் வந்துரு” என்று பெயரைச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான் பிரித்வி.
“ரெஸ்ட்டாரெண்ட்டுக்குப் போகனும் அப்பா” என்று அவரை அழைத்துக் கொண்டு, உணவகத்திற்குச் சென்றாள் காஜல்.
அங்கே ஏற்கனவே வந்திருந்த பிரித்வியோ,
“காஜல்!” என்று கையசைத்து அழைத்தான்.
விறைப்பாக வந்த காசிநாதனோ மிடுக்காக அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
வேறு வழியின்றி, காஜல் தன் தந்தையின் அருகில் உட்கார்ந்தாள்.
பிரித்வி,
“ஹாய் அங்கிள்! நான் உங்ககிட்ட அப்படி பேசுனதுக்கு, நடந்துக்கிட்டதுக்கு ரியலி வெரி சாரி!” என்று மன்னிப்புக் கேட்டான்.
இப்போது தான் காஜலுக்கு நிம்மதியாக இருந்தது.
காசிநாதன், “ம்ம்! பரவாயில்லை பிரித்வி.அட்லீஸ்ட் , இந்தளவுக்கு ஆவது, உனக்கு மரியாதை தெரிஞ்சு இருக்கே!” என்று கூறினார்.
தன்னை வேண்டுமென்றே அவர் அசிங்கப்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொண்ட பிரித்வி,
“ஓகே அங்கிள். நான் கிளம்பறேன். பாய் காஜல்” என்று கிளம்ப ஆயத்தம் ஆனான்.
“இன்னும் எதுவுமே ஆர்டர் பண்ணி சாப்பிடாமல் கிளம்புறியே பிரித்வி?” என்று வேகமாக கேட்டாள் காஜல்.
அவன் உடனே செல்வதைப் பார்த்தால், தந்தை தன்னைத் தான் திட்டுவார் என்று முழுவதும் சுயநலமாக யோசித்தாள்.
“இருக்கட்டும் காஜல். லேட் ஆச்சு. வர்றேன்” என்று பொதுவாக கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் பிரித்வி.
“பிரித்வி நல்ல டைப் ஆளுப்பா. உங்ககிட்ட அவனே வந்து மன்னிப்புக் கேட்டுட்டுப் போறான் பாருங்க”என்று அவனுடைய பெருமையைப் பேசி சிலாகித்துக் கொண்டாள் காஜல்.
” அப்படி எதுவும் எனக்குத் தெரியலையே? நீ சொல்றதை மட்டும் வச்சு நான் முடிவு பண்ண மாட்டேன். பிரித்வியைப் பற்றி டீடெய்ல்ஸ் கேட்டுப் பார்த்துட்டு, முடிவு சொல்றேன் ” என்றதும் அதிர்ந்து போனாள் காஜல்.
அவனைத் திருமணம் செய்து கொள்ள ஆசை என்று தந்தையிடம் சொன்னதும், பிரித்வியைப் பார்க்க வேண்டும் என்று உடனே கல்லூரிக்குக் கிளம்பி வந்து விட்டார் காசிநாதன்.
மறுநாள் கல்லூரிக்கு வந்த காஜல்,
“அப்பா கிட்ட சாரி கேட்டதுக்கு தாங்க்ஸ் பிரித்வி” என்று அவனைப் பார்த்து சிநேகப் புன்னகை புரிந்தாள்.
ஆனால் , அவன் தான் தன் நிலையில் இருந்து மாறக் கூடாது என்று இருக்கிறானே! அதனால்,
“இட்ஸ் ஓகே காஜல்” என்று பட்டும் படாமல் பேசினான் பிரித்வி.
“நம்ம ஃப்ரண்ட்ஷிப்பை மட்டும் வேண்டாம்னு சொல்லாத பிரித்வி! எனக்கு உன் ஃப்ரண்ட் ஆக கூட இருக்கிறதுக்குத் தகுதி இல்லையா?” என்று நீலிக் கண்ணீர் வடித்தாள்.
“காஜல்!!” என்று அடிக்குரலில் சீறியவன்,
“நீ என்னைப் பத்தி நிறைய வதந்தியைப் பரப்பி விட்ருக்க! அதுனால எனக்கு எவ்ளோ டென்ஷன் ஆச்சு தெரியுமா? இதில் எந்த நம்பிக்கையில் மறுபடியும் நான் உன் கூட மறுபடியும் ஃப்ரண்ட் ஆகுறது?” என்று கேட்டான்.
அவனது கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தாள்.
“இங்கே பார் காஜல்! இத்தோடு விட்ரு.உங்க அப்பா கிட்ட சாரி கேட்டதோட எல்லாம் முடிஞ்சது” என்று தீர்க்கமாக கூறி விட்டான் பிரித்வி.
அதற்கு மேல் அவனிடம் எப்படி பேசுவது? என்று பரிதவித்தாள் காஜல்.
ஒதுங்கிப் போவது போல தற்காலிகமாக அவனிடம் இருந்து தள்ளி இருந்து கொண்டாள்.
ஏனோ இப்போதெல்லாம் அதிரூபாவை ரசிக்க ஆரம்பித்து இருந்தான் பிரித்வி.
காஜலோ அவனிடம் தவற விட்ட நட்பை அதிரூபாவிடம் தொடர முயற்சித்தாள்.ஆனால், அவளோ ஒரு எல்லைக்கு மேல், காஜலைத் தன்னுடன் இழைந்துப் பழக விடவில்லை.
அடிக்கடி பிரித்வி பற்றிய பேச்சை எடுத்தால், அதிரூபாவே அதை மாற்றி விடுவாள்.பல நேரங்களில், யாஷிகா உடனேயே சுற்றினாள்.
காஜல் பரப்பி விட்ட வதந்தியைப் பிரித்வி உண்மையாக்க நினைத்தானோ, என்னவோ அதிரூபாவைப் பார்க்கும் போதெல்லாம், பரவசமானது அவனது உள்ளம்.
அது தான் அவர்களுக்கு இடையே தோன்றிய முதல் விரிசல்.
– தொடரும்