Loading

அத்தியாயம் 14

“இந்த ஊர்ல சுத்தி பார்க்க எதுவுமே இல்லையா ரூப்ஸ்…” இந்திரஜித் கேட்டதில்,

“இந்த ஊர்ல எதுவும் இல்ல. போனா, தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலுக்கு தான் போகணும்.” என்ற சத்யரூபா, துணி மடித்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ அங்க போகலாமே. நான் இதுவரை போனதே இல்ல.” குரலில் உற்சாகம் பொங்கக் கேட்டதில், அதனைக் காதில் வாங்கியபடி கையில் பலகாரத்துடன் வந்த சாவித்ரி, “அதுக்கு என்ன தம்பி ஜோடியா போயிட்டு வாங்க. வைஷுவையும் எழிலையும் கூட வர சொல்றேன்.” என்றார்.

அவர் கொண்டு வந்த அதிரசத்தை ஆவலாக வாயில் வைக்க போனவன், அப்படியே ‘ஜெர்க்’ ஆனான்.

‘அவனையும் கூட கூட்டிட்டு போய் ஆரத்தி எடுக்கவா… சரியான பேய் கிழவி! சின்னஞ்சிறுசுங்களை தனியா விடுறாங்களா…’ என அவரை மானசீகமாக முறைத்து வைக்க,

சத்யாவிற்கும் அதிர்வு தான். “இல்ல ஆயா… நாளைக்கு நைட்டு ஊருக்கு வேற கிளம்பணும். இன்னைக்கு அலைஞ்சுட்டு வந்தா, சரியா வராது.” என்று மறுக்க,

“நீயா பஸ்ஸு ஓட்ட போற. பாவம் தம்பி ஆசைப்படுதுல… கூட்டிட்டு போ சத்யா.” என்றிட,

அவளுடன் வெளியில் சென்றிட இந்திரஜித்திற்கும் ஆவல் எழுந்தது.

எழிலுடனும் வைஷாலியுடனும் செல்ல மனமற்று, “இல்ல ஆயா… நான் போகல. அவரு மட்டும் வேணும்ன்னா போயிட்டு வரட்டும்.” என்றதில், “சொல்லு பேச்சே கேட்க மாட்டா…” என முணுமுணுத்து விட்டு சென்றார் சாவித்ரி.

ஆனால், இந்திரஜித் விடவில்லை. அவள் மடித்த துணிகளை எல்லாம் கலைத்துப் போட்டவன், “இப்ப என் கூட வர போறியா இல்லையா?” என்று அடம்பிடிக்க, அவளுக்கு வந்ததே கோபம்.

“யோவ்… இவ்ளோ நேரமா மடிச்ச துணியை எல்லாம் இப்படி கலச்சு வச்சுட்ட. காண்டாமிருகம்…” எனக் கோபத்தில் கத்தியவளிடம்,

“நீ கரடி மாதிரி கத்துனா, பீரோல இருக்கிற துணியையும் சேர்த்து கீழ போட்டு மிதிப்பேன்டி.” என்று அவனும் வம்புக்கு நின்றான்.

இருவரும் முறைத்தபடி நிற்கும் போதே, தாமரை அவசரமாக அங்கு வந்து, “சத்யா என்ன சத்தம்?” எனப் பதறிட,

அவளை முந்திக்கொண்டு இந்திரஜித் ஆஜரானான்.

“கோவிலுக்கு கூப்ட்டா வரமாட்டேங்குறா அத்தை. கொஞ்சம் கூட பக்தியே இல்லை…” தலையை ஆட்டி, மனையாளைக் குறை கூறிட, அவளுக்கோ கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

“என்ன சத்யா இது? மாப்பிள்ளை கூப்பிட்டா போக வேண்டியது தான. ஏன் இப்படி வீம்பு புடிச்சுட்டு இருக்க.” என்று கடிந்ததில், அவள் மட்டும் அறியும் வண்ணம், கள்ளப் புன்னகையுடன் நாக்கை துருக்கினான் இந்திரஜித்.

‘வேணும்ன்னே என்னை கோர்த்து விடுறான்…’ என கறுவி விட்டு, “சரிம்மா போறேன்.” என்றாள் அமைதியாக.

“அது… யாருகிட்ட…” என காலரை தூக்கி விட்டுக்கொண்டவனை, தீயாக முறைத்தபடியே புடவையை எடுத்துக்கொண்டு, குளியலறைக்கு சென்றாள்.

தாமரை, வைஷாலியையும் எழிலையும் அவர்களுடன் செல்ல சொல்ல, வைஷாலிக்கு முகம் மலர்ந்தது. கணவனுடன் செல்லும் முதல் ‘அவுட்டிங்’ ஆகிற்றே. ஆனால், எழில் தான் தொண்டையில் சிக்கிய துக்கத்தை விழுங்கவும் இயலாமல் வெளியில் கொட்டவும் இயலாமல் துடித்தான்.

சத்யாவிடம் காதலைப் பகிர்ந்த இடமாகிற்றே அது. அவர்களின் மலரும் நினைவுகள் அங்கு ஏராளம். திருமணத்திற்குப் பின், முதலில் அங்கு தான் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டது இன்னும் கண் முன்னே பசுமையான காட்சியாய் அவனைக் கலங்க வைக்க, இங்கோ, குளியலறையினுள் முகத்தில் நீரை அடித்துக் கண்ணீரை மறைக்க முயன்றாள் சத்யரூபா.

எத்தனை முயன்றும், வலியில் கதறிய மனதை அடக்க இயலவில்லை. எப்போதடா, மறுவீடு முடிந்து இங்கிருந்து செல்வோம் என்றிருந்தது.

எழிலுக்கும் அதே உணர்வு தான். ‘அதான், நாங்க காதலிச்சோம்ன்னு தெரியுதுல. அவளை கூட்டிட்டு போய் தொலைய வேண்டியது தான… இப்ப இந்த ஊர சுத்தி பாக்குறது அவனுக்கு ரொம்ப முக்கியமா? என்னை எரிச்சல் படுத்துறதுக்காகவே இதை பிளான் பண்ணிருப்பான்.’ என்று இந்திரஜித்தை திட்டித் தீர்த்தான்.

குளியலறையில் இருந்து அறைக்கு வந்த சத்யரூபா, கலைந்த துணிகளெல்லாம் அழகாய் மடிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு, “இதை முதல்லயே செஞ்சுருந்தா எனக்கு வேலை மிச்சம் ஆகி இருக்கும்” என்று முணுமுணுத்திட, இந்திரஜித் கேலியாய் முறுவலித்தான். 

பின் பெரியவர்களின் வற்புறுத்தலிலும், இந்திரஜித்தின் பிடிவாதத்திலும் எழில் வீட்டில் இருந்த காரை எடுத்து வர, அதிலேயே தஞ்சாவூர் நோக்கி பயணப்பட்டனர்.

கோவிலுக்கு செல்லும் வரை நால்வரிடமும் அமைதியே பரவியது.

கலைச் சிற்பங்களை தன்னுள் அடக்கிய ராஜராஜசோழனின் கோவிலுக்குள் நுழைந்ததும், “வாவ்… செம்ம ப்ளேஸ்.” என்று வியந்த இந்திரஜித், அலைபேசியை எடுத்து, சத்யரூபாவிடம் கொடுத்தான்.

‘ஆரம்பிச்சுட்டான்… இப்ப இவனுக்கு நான் போட்டோகிராபரா வேற மாறணுமா?’ என நொந்த சத்யா, “முதல்ல சாமி கும்பிடலாம் இந்தர்.” என்று முறைத்தபடியே அவனது போனை அவளது ஹேண்ட் பேகினுள் போட்டுக்கொண்டாள்.

“போனை குடுத்துட்டு சாமி கும்பிடலாம்” இந்திரஜித்தும் முறைத்து வைக்க,

“ஏன், உங்க கேர்ள்ஸ் ஆர்மிகிட்ட இருந்து போன் வருமா?” எனக் கேட்டாள் ஒரு மாதிரியாக.

“அஃப்கோர்ஸ். ஏகப்பட்டது வரும்…” கூறி விட்டு, அவளை ஓரக்கண்ணில் ஆராய்ந்தான் இந்திரஜித்.

தோளைக் குலுக்கிக் கொண்டவள், “அதை சாமி கும்புட்டுட்டு பேசிக்கலாம்.” என்று உள்ளே சென்றாள்.

‘கொஞ்சமாவது பொறாமை படுறாளா பாரேன்…’ வாய்க்குள் முணுமுணுத்தபடி அவள் பின்னே சென்றவனுக்கு, தன் மீது காதல் இருந்திருந்தால் தான் ‘பொசெசிவ்நெஸ்ஸும்’ தானாக வந்திருக்குமே என்ற எண்ணமும் தோன்றி அலைக்கழிக்க, அதனை கவனமாக தவிர்த்தவன், யோசனையுடன் நின்றான்.

அவர்களிடம் இருந்து சற்று தள்ளி நடந்து வந்து கொண்டிருந்த எழிலழகனும் வைஷாலியும் அமைதியே உருவாய் இருந்தனர்.

வைஷாலி, கணவனை அவ்வப்பொழுது ரசிப்பதும், பின் திரும்பிக் கொள்வதுமாக இருக்க, அவனுக்கோ பலவித நினைவுகள் நெஞ்சை கொய்தது.

அவளை வலிக்க செய்ய செய்த திருமணத்தில், அவனுக்கே வலி அதிகம் ஆகிப் போனதில், இன்னும் கோபம் பெருக்கெடுத்து ஓடியது.

அதனை முகத்தில் காட்டாமல் இருக்க அரும்பாடுபட்டவனிடம், வைஷாலி ஏதோ பேச வரும் முன், தரிசனம் நடக்கும் இடத்திற்கு வந்து விட்டனர்.

அங்கு வந்ததும், எழில் வலுக்கட்டாயமாக கண்ணை மூடிக்கொள்ள, சத்யாவும் விழிகளைத் திறக்க பயந்தாளோ என்னவோ, கண்ணை இறுக்கி மூடி, கடவுளிடம் குமுறினாள்.

“இந்த நிலைமையை எப்படி கையாள்றதுன்னு எனக்கு தெரியல. முறிஞ்சு போன காதலையும், கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள நடந்து முடிஞ்ச கல்யாணத்தையும் நானா உன்கிட்ட கேட்டேன். இப்போ ரெண்டையுமே ஏத்துக்க முடியாம தவிச்சுட்டு இருக்கேன்.” கண்ணில் நீர் சேராமல் இருக்குமாறு பிரம்மபிரயத்தனம்பட்டு, அவள் மனமுருகி கொண்டிருக்க, யாரோ அவள் தோளை சுரண்டியதில், விழித்தாள்.

சாட்சாத் அவள் கணவனே தான். “என் போனை குடுத்துட்டு, நீ கடவுள்கிட்ட அப்ளிகேஷன் போடு கரடி… கைல போன் இல்லைன்னா, கையே இல்லாத மாதிரி ஒரு ஃபீலிங்…” வெகு தீவிரமாய் அவன் கேட்டதில்,

“கோவில்ன்னு பாக்குறேன். மூடிக்கிட்டு சாமி கும்புடுயா. காண்டாமிருகம்.” பல்லைக்கடித்து கடிந்தவள், மீண்டும் கண்ணை மூடி, “கடவுளே… இவன் இம்சயை எல்லாம் தாங்குற அளவு எனக்கு மனவலிமையை குடு.” என நொந்து போனவளுக்கு, பானுரேகா அவனை அதட்டிக்கொண்டே இருப்பதன் காரணம் நன்றாகவே புரிந்தது.

‘கொஞ்ச நேரம் கூட வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டேங்குறான்…’ அத்தனை நேரம் இருந்த இறுக்கமான மனநிலையை முற்றிலும் மாற்றியது கணவனைப் பற்றிய எண்ணம். அதனை அவள் உணரத்தான் இல்லை.

சத்யாவை முறைத்துக்கொண்டிருந்த இந்திரஜித்தை, முழங்கையால் இடித்த வைஷாலி, “சாமி கும்புட்டு முடிச்சுட்டு சைட் அடிடா” என கிசுகிசுக்க,

“அவளை சைட் அடிக்கிறதே, அவள் கண்ணையும் வாயையும் மூடிட்டு இருக்கும் போது தான். காட் கோச்சுக்க மாட்டாரு வைஷுமா.” என தனது இரு கன்னத்திலும் தட்டிக்கொண்டவன், மீண்டும் மனையாளின் மீது பார்வையைப் பதித்திருக்க,

“இன்னைக்குன்னு பார்த்து நான் எக்ஸ்டரா டிரஸ் கூட எடுத்துட்டு வரல” என்றாள் வைஷாலி.

அதில் திரும்பி அவளை ஏனென பார்த்தவனிடம், “உன் ஜொள்ளுல, கோவிலுக்குள்ள வெள்ளமே வந்துடும் போல இந்தர். அதுல நனைஞ்சுட்டா…” என சிரிப்பை அடக்கிக்கொண்டு நக்கலடிக்க,

“அதை நீ சொல்லாத. வர்ற வழில எல்லாம் உன் ஜொள்ளுல தான் ரோடு முழுக்க தண்ணி தேங்கி நின்னுச்சு…” என்று வாரினான்.

லேசாய் வெட்கம் எழுந்ததில், “ச்சு… போடா.” என்று அவன் கையை கிள்ளி வைத்திட, இருவரும் முணுமுணுவென பேசியதில் கண் விழித்த எழிலழகன், அவர்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்ததில் கடியானான்.

அவர்கள் பேசியதை கேட்டிருந்தால் கூட, மனையாளின் மனம் புரிந்திருக்கும் அவனுக்கு. அதுக்கு வாய்ப்பின்றி போக, “ரெண்டு பேரும் வாயை மூடுறீங்களா.” என எரிச்சலுற்றான்.

எழிலின் கோபத்தில், வைஷாலி சட்டென சிரிப்பை நிறுத்திக்கொள்ள, இந்திரஜித்தோ, “மை வாய். மை ரூல்ஸ். மை டாக். மூட முடியாது.” என அசட்டையுடன் கூறியவன், இன்னும் தியானத்தில் மூழ்கி இருந்த சத்யாவின் குவித்த கைகளைப் பிடித்து இறக்கி விட்டான்.

“எவ்ளோ நேரம் தாண்டி, கடவுளை டிஸ்டர்ப் பண்ணுவ. வா… போய் போட்டோ எடுக்கலாம்.” என வம்படியாக அழைத்துச் சென்றதில், சத்யா தலையில் அடித்துக்கொண்டாள்.

அவளுடன் விதவிதமாக போட்டோக்களை எடுத்துக் குவித்தான் இந்திரஜித். எழில் வேறு இருவரையும் முறைத்திருக்க, சத்யாவிற்கு தான் சங்கடமாக இருந்தது.

“போதும் இந்தர். நீங்க மட்டும் எடுங்க.” என நழுவிக் கொள்ள முயல, அவளது முக மாற்றத்தில் அவனுக்கும் சோர்வானது.

‘நீ எத்தனை வம்படியாக இழுத்தாலும், அவள் உன்னிடம் உருக மாட்டாள்’ என்று எகத்தாளமிட்டதோ எழிலின் பார்வை!

சட்டென வாடிப் போனவனுக்கும் கூட, அவளைக் கையாளும் விதம் தெரியவில்லை.

போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டவன், அதன் பிறகு அமைதியாய் வந்திட, சில கணங்கள் பழைய நினைவுகளில் மூழ்கிப் போன சத்யரூபாவிற்கு, எதுவோ குறைவது போல இருந்தது.

அதில் திரும்பி இந்திரஜித்தை பார்த்தவள், என்ன நினைத்தாளோ, “இந்த நந்தி சிலைகிட்ட போட்டோ எடுங்க இந்தர். நல்லா இருக்கும்” என்று வேகமாகக் கூறியதில், “நீ வந்தா நானும் எடுத்துக்குறேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அதனை மறுக்க இயலாமல், தலையை ஆட்டிட, பிறகு மீண்டும் அவர்களின் போட்டோ ஷூட் ஆரம்பித்தது.

தங்கையையும் நண்பனையும் மனம் குளிர பார்த்த வைஷாலி, “கடவுளே! என் தங்கச்சி எப்பவும் இந்தர் கூட சந்தோஷமா இருக்கணும். ரெண்டு பேரும் பார்க்க மேட் ஃபார் ஈச் அதரா இருக்குற மாதிரி, வாழ்க்கை முழுக்க, எல்லா விதத்துலயும் மேட் பார் ஈச் அதரா இருக்கணும்”. என வேண்டுதலையும் போட்டுக்கொண்டாள்.

பின், அவர்களைப் பார்த்து, அவளுக்கும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆவல் பிறக்க, மெல்ல எழிலைப் பார்த்தாள்.

“அத்தான்…! நம்மளும் போட்டோ எடுத்துக்கலாமா?” வைஷாலி கேட்டதில்,

“நீ இப்ப தான் முதல் தடவை இங்க வர்றியா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம். கிளம்பலாம்.” என்று முகத்தில் அடித்தது போல கூறி விட, முகம் சுண்டிப் போனது அவளுக்கு.

பின், நால்வரும் மதிய உணவிற்காக அருகில் இருந்த பெரிய உணவகத்திற்கு செல்ல, எதிரில் அமர்ந்திருந்த தமக்கையை மருந்துக்கும் நிமிர்ந்து பார்க்கவில்லை சத்யா.

ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தவளுக்கு தங்கையின் பாராமுகம் மேலும் வதைத்தது.

அதனை அழகாய் முகத்தில் காட்டாமல் மறைத்துக்கொண்டாள்.

எழிலுக்கு போன் வந்ததில், அவன் “எதாவது ஆர்டர் பண்ணுங்க” என்று விட்டு எழுந்து வெளியில் செல்ல, வைஷாலியும் ரெஸ்ட் ரூமிற்கு சென்றிருந்தாள்.

அவர்கள் வரும் வரை, ஆர்டர் கொடுக்க என எண்ணி, இந்திரஜித் சத்யாவிடம் கேட்க,

“எனக்கு ஒரு மீல்ஸ் போதும்.” என்றதும், அவனும் அதையே அனைவருக்கும் ஆர்டர் செய்ய எத்தனிக்க, சத்யா தடுத்தாள்.

“இல்ல… எழில் மாமா மீல்ஸ் சாப்பிடாது.” என்றவள், அவன் எப்போதும் உண்ணும் ரொட்டியையும் பன்னீர் க்ரேவியையும் ஆர்டர் செய்திட, இந்திரஜித் “ஓ!” என்று அமைதியானான்.

போன் பேசி முடித்து விட்டு வந்தவன், டேபிளில் இருந்த பன்னீரையும் ரொட்டியையும் கவனித்து விட்டு, இந்திரஜித்தைப் பார்க்க, அவன் எழிலை முறைத்தான்.

எப்படியும் சத்யா தான் ஆர்டர் செய்திருப்பாள் என்று அவனுக்கும் தெரியும். அதில் கேலி நகை உருவாக, எகத்தாளத்துடன் இருக்கையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்ததோடு அல்லாமல், “சாப்பாடு ரொம்ப டேஸ்ட் – ஆ இருக்கு. இல்ல இந்தர்” என அவனை வம்பிழுத்தான்.

“ஆமா ஆமா… பல்லி விழுந்த சாப்பாடா இருக்கும். அதான் டேஸ்ட் நல்லா இருக்கு.” எனக் குத்திட, எழில் பார்வையில் அனலைக் கக்கினான்.

அத்தியாயம் 15.  

“எது விழுந்தா என்ன… ஆர்டர் செஞ்சது எனக்கு பிடிச்சதா இருக்கே.” என்ற எழில் உண்ணத் தொடங்கினான். இருவரும் வெளியில் பார்க்கும் போது சாதாரணமாக தான் பேசிக்கொள்வது போல இருந்தது. அவர்களுக்குள் நடக்கும் உள்நாட்டுப்போரை உணராமல், இப்போது சத்யா ‘ரெஸ்ட் ரூமிற்கு’ செல்ல, வைஷாலி வந்து அமர்ந்தாள்.

வந்தவள், அவள் இடத்தில் பிரிஞ்சியும், இந்திரஜித் முன்பு மீல்ஸ் இருப்பதையும் கண்டு, “நீ தான் மீல்ஸ் சாப்பிட மாட்டியே இந்தர். ஏன் இதை ஆர்டர் பண்ணுன?” எனக் கேட்டாள்.

அவனுக்கும் தெரியவில்லை. சத்யா கேட்டதும், அவனுக்கும் அதையே சொல்லி விட்டான். பதில் சொல்ல தெரியாமல் அமர்ந்திருந்தவனிடம், “மீல்ஸ என்கிட்ட குடு. இதை நீ சாப்பிடு.” என்று பிரிஞ்சியை நகற்றி வைத்தவள், மீல்ஸை உண்ணத் தொடங்க, ‘அவன் என்ன சாப்பிட்டா இவளுக்கு என்ன?’ என்று திரும்பி வைஷாலியை முறைத்தான் எழில்.

அவனது கோபம் கண்டு, இப்போது இந்திரஜித் குஷியாகி, “நீயும் பிரிஞ்சி தான சாப்பிடுவ வைஷுமா. நீ அதை வை. நான் இன்னொன்னு சொல்றேன். இல்லைன்னா ஷேர் பண்ணி சாப்ட்டுடலாம்.” என்று அவன் தட்டில் இருந்ததை அவளுக்கும் வைக்க, எழில் பல்லைக்கடித்தான்.

“எனக்கு போதும்டா. நீ சாப்பிடு. கரெக்ட் டைம்க்கு சாப்பிடலைன்னா உன் வயிறு கண்ணா பின்னான்னு கத்த ஆரம்பிச்சுடும்.” தோழனின் அக்கறையில் பங்கெடுத்தவளுக்கு, அவன் பசி தாங்க மாட்டான் என்பதும் தெரியும்.

‘அப்ப எங்க வயிறுலாம் குத்து பாட்டா பாடும்…’ எழில் எரிச்சலுடன் எண்ணிய படி, ரொட்டி மீது கோபத்தைக் காட்டினான்.

இரு ஆடவர்களும் மாறி மாறி எரிச்சலையும் நக்கலையும் கொட்டி விட்டே, உணவகத்தை விட்டு வெளியில் வந்து, மீண்டும் கோவிலுக்கே சென்றனர்.

இந்திரஜித் வேகமாக சத்யரூபாவின் கையைப் பற்றிக்கொள்ள, அவள் திடுக்கிட்டு கையை உருவிட முயன்றாள்.

“கோவில்ல ஒரே கூட்டமா இருக்கு ரூப்ஸ். நான் பாட்டுக்கு தொலைஞ்சு போய்ட்டா. சோ என் கையை பிடிச்சு பத்திரமா கூட்டிட்டு போ! நான் என் அம்மாவுக்கு ஒரே ஒரு ரெண்டாவது பையன்.” என பாவமாகக் கூறிட, முதலில் புரியாமல் விழித்தவள், பின் “உங்களை வச்சுக்கிட்டு…” என திட்டினாலும், அதன் பிறகு அவன் கையை விடவில்லை அவள்.

அவளை உரசியபடியே அவனும் ஏதேதோ பேசி, எழிலின் வயிறை எரிய விட்டான்.

மாலை வேளையில் தான் வீடு திரும்பினர் நால்வரும்.

அன்றிரவு, இரவு உணவு வேலை நடந்து கொண்டிருக்க, சாவித்ரி இந்திரஜித்திற்கு சத்யரூபாவின் சிறு வயது புகைப்படத்தை காட்டிக்கொண்டிருந்தார்.

‘இப்ப இது ரொம்ப முக்கியமா ஆயா?’ என்பது போல அவரை முறைத்து வைத்திட, அவரோ அடுக்களைக்கு சென்று விட்டார்.

தன்னவளின் புகைப்படத்தை ஆவலுடன் பார்த்த இந்திரஜித், “ஹே ரூப்ஸ்… நீ இவ்ளோ செக்சியான பீஸ்ன்னு எனக்கு தெரியாம போச்சே… ஒன் பீஸ் போட்டோ சூப்பர்…” என்று குறும்புடன் கூற, அதில் திகைத்தவள், அவசரமாக போட்டோவை வாங்கிப் பார்த்தாள்.

ஒன்றரை வயது புகைப்படம் ஒன்றில், அவள் உள்ளாடையுடன் நிற்கும் புகைப்படத்தை வைத்து, தன்னை கிண்டலடிக்கிறான் என்று புரிய, “ச்சை… உன் புத்தி ஏன் இப்படி போகுது இந்தர்.” என்று கடுப்பானாள்.

“நீ தான் அப்படி போஸ் குடுத்து இருக்க…” அவனும் விடாமல் வார, அதில் “நீ மட்டும் இந்த வயசுல கோர்ட் சூட் போட்டா போஸ் குடுத்து இருப்ப. ஜட்டி கூட போட்டு இருப்பியோ மாட்டியோ…” என அவனை திட்டும் நோக்கில் பேசிட, அவன் வாய் விட்டு சிரித்து விட்டான்.

அதன் பிறகே தான் பேசியது உறைக்க, நாக்கைக் கடித்துக்கொண்டவளுக்கு, லேசாய் வெட்கமே வந்தது.

“உன் கூட பேசி பேசி, நானும் லூசு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டேன் இந்தர்.” சிணுங்கலுடனே கூறியவள், அவன் நமுட்டு நகை புரிந்ததில், மெல்லப் புன்னகைத்தாள்.

பின், மற்ற புகைப்படங்களையும் பார்க்க ஆரம்பித்தவன், அவள் மஞ்சள் நீராட்டு விழா புகைப்படத்தைப் பார்த்து விட்டு, “ஹால்ஃப் சேரி உனக்கு அழகா இருக்கு ரூப்ஸ்.” என்றான் ரசனையாக.

அதற்கும் மெலிதாய் புன்னகைத்தவளுக்கு, அவன் புகைப்படத்தில் தன்னை குறுகுறுவெனப் பார்ப்பது என்னவோ போல் இருக்க, “ஒரு போட்டோவை எவ்ளோ நேரம் பார்ப்பீங்க.” என்று மறு பக்கத்தை திருப்பினாள்.

“ஒரு கலாரசிகனுக்கு தடை போடாத ரூப்ஸ்.” போலியாய் அவன் முறுக்கிக்கொள்ள,

“போட்டோல கலான்னு யாருமே இல்லை இந்தர்” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

அதில் அவனும் சிரித்திட, மற்ற புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தவன் பாதியில் மூடி வைத்தான்.

முக்கால்வாசி புகைப்படங்கள், எழிலுடன் தான் இருந்தது. ஏனோ அதனைப் பார்க்கும் அளவு தற்போது மனவலிமை இல்லை அவனுக்கு. அவளுக்கும் அதனைக் காண வலித்ததோ என்னவோ, அவன் ஆல்பத்தை மூடியதில் நிம்மதியாகவே உணர்ந்தாள்.

அந்நேரம், தாமரை வந்தவர், “சத்யா… உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என ஆரம்பிக்க, அவள் நிமிர்ந்தாள்.

“ஆனந்தி வைஷுவை வேலைக்கு போக வேணாம்ன்னு சொல்லிட்டா போல…” என தயங்கியதில், “அதுக்கு… என்னை என்ன பண்ண சொல்றீங்க?” சத்யா காட்டமாக கேட்டாள்.

“வைஷுவும் எதிர்த்து பேச மாட்டா. நீ எழிலுகிட்ட சொன்னா…” என்றதும், அவள் எகிறினாள்.

“யாருக்காகவும் யாரும் பேச முடியாதும்மா. அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க தான் பாத்துக்கணும்.” என்று திட்டவட்டமாக கூறியதில்,

“நீ என்ன சொன்னாலும் எழிலு கேட்டுக்கும் சத்யா. அதான் சொன்னேன்” தாமரை விவரம் புரியாமல் சொல்லி வைக்க, அது அவளுக்கே சங்கடமாக இருந்தது போலும். விழிகளைத் திருப்பி இந்திரஜித்தை ஒரு பார்வை பார்த்திட, அவனும் அந்நேரம் அவளை தான் உணர்வற்று பார்த்திருந்தான். சத்தியமாக அப்பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை. அதில் தெரிந்த தவிப்பும் புரியவில்லை.

சில நொடிகளுக்கு மேல் அதனை ஏறிட இயலாமல், சட்டென பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

மறுநாள், ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகினர் இந்திரஜித்தும் சத்யரூபாவும்.

“என்கூட சென்னைக்கு வந்துடுமா…” இத்துடன் பலமுறை அழைத்து விட்டாள் சத்யா.

“புரியாம பேசாத சத்யா. தோட்டத்தையும் வீட்டையும் அப்படியே போட்டுட்டு எப்படி வர முடியும். நம்பிக்கையான ஆள் கிடைக்கட்டும். பாத்துக்கலாம். வைஷுவும் இங்க இருக்கும் போது, விட்டுட்டு வர்றது நல்லா இருக்காது” என்று மறுத்த தாமரையை முறைத்தாள் சத்யா.

“உன் அம்மாவை நான் பாத்துக்குறேன். நீ எதை பத்தியும் யோசிக்காம கிளம்பு சத்யா” சாவித்ரி கூறியதில்,

“ம்ம்க்கும் உன்னை பாத்துக்கவே பத்து பேர் வேணும். நீ அம்மாவை பாக்க போறியா ஆயா. ரெண்டு பேரும் கவனமா இருங்க” என்றவளுக்கு கிளம்ப மனமே இல்லை.

அவள் கிளம்பும் போதாவது தன்னிடம் பேசுவாள் என எதிர்பார்த்த வைஷாலியைக் காயப்படுத்தும் வண்ணம், அவளை நிமிர்ந்து கூட பாராமல், கிளம்பி விட்டாள் சத்யா.

“பை… கால் பண்ணு.” சைகையிலேயே தோழியிடம் விடை பெற்ற இந்திரஜித்திற்கும் சத்யாவின் கோபத்தைக் கண்டு வருத்தம் எழுந்தது.

‘அவளே ஒரு புள்ளை பூச்சி. அவள்கிட்ட இவ்ளோ கோபத்தை காட்டணுமா…?’ எனத் தோழிக்காக சற்று கோபம் வந்தது.

சென்னைக்கு திரும்புவதற்காக வாடகை காரை ஏற்பாடு செய்திருந்தான் இந்திரஜித். அதிலேயே இருவரும் பயணத்தைத் தொடர, “பஸ்ல போகலையா இந்தர்? அவ்ளோ தூரம் கார் ஓட்டணுமே.” என சத்யரூபா கேட்டதில்,

“பஸ்ல பிரைவசி இல்ல” என்றவன், “வைஷு பாவம் சத்யா. ஏன் இப்படி அவளை அவாய்ட் பண்ற?” மனம் தாளாமல் கேட்டு விட்டான்.

“என்னைக்கு என்னையும் அம்மாவையும் துச்சமா நினைச்சு, அவள் வாழ்க்கையை தேடி ஓடுனாளோ அப்பவே அவள் என் அக்கா இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். இதை பத்தி நம்ம பேச வேண்டாம் இந்தர். அவளை பத்தி பேச எதுவும் இல்லை” அழுத்தம் திருத்தமாக கூறியதில், அவனுக்கும் கோபம் எழுந்ததோ என்னவோ, வேகத்தை அதிகப்படுத்தினான்.

சத்யா சென்றவுடன், வைஷாலியையும் அழைத்துச் சென்றால், தாமரை வருத்தப்படுவார் என அன்றிரவு அங்கேயே தங்கினான் எழிலழகன்.

மறுநாள், அவளும் புகுந்த வீட்டிற்கு செல்ல, அவளை தன் வீட்டில் விட்டதோடு, தஞ்சாவூருக்கு கிளம்பி விட்டான். அப்போதும் அவளிடம் பேசாமல் போனதில், வைஷாலி உடைந்தாள்.

இனி வார இறுதியிலாவது வருவானா? என்ற துக்கம் நெஞ்சை அடைக்க, அதனைக் கேட்கவும் தைரியமற்றுப் போனாள்.

மகன் தஞ்சாவூருக்கு கிளம்பிய மறுநிமிடம் ஆனந்தி அவரது ஆட்டத்தை ஆரம்பித்தார்.

ஊருக்கு செல்லும் வரை, இந்திரஜித் மனையாளிடம் அறவே பேசவில்லை. எப்போதும் இவ்வளவு நேரம் பேசாமல் இருக்க மாட்டானே என உறுத்தினாலும், கார் ஓட்டும் போது மனதை திசைதிருப்பக்கூடாதென்று அவளும் அமைதியே காத்தாள்.

நடு இரவில் வீடு திரும்பியவர்கள், சத்தம் வராமல் அறைக்குள் சென்று உறங்கி விட்டனர்.

காலையில் எழுந்ததுமே, எப்போதும் போல “அம்மா காபி…” என தூங்கி வழிந்த முகத்துடன் கீழே வந்தவனைப் பார்த்த பாலகிருஷ்ணன், “அதுக்குள்ள மறுவீடு முடிஞ்சுருச்சா? உன் தொந்தரவு இல்லாம நானும் என் பொண்டாட்டியும் நிம்மதியா சண்டை போடாம இருந்தோம். அது உனக்கு பொறுக்கலையாடா?” என மகனை கேலி செய்தார்.

“புள்ள இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்டானாம்…” இந்திரஜித் நக்கலாக முணுமுணுக்க, இருவரின் இயல்பான பேச்சிலும் சத்யரூபா தான் விழிக்க வேண்டியதாகப் போயிற்று.

சிறு முறுவலுடன் அவளும் அடுக்களைக்கு செல்ல, அங்கு, அவசரமாக காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த பானுரேகா, மருமகளைக் கண்டதும் புன்னகைத்தார்.

“ப்ரெஷ் ஆகிட்டியா சத்யா. டிபன் முடிஞ்சுது. நானும் இன்னைக்கு கார்மெண்ட்ஸ்க்கு போகணும். அவசர வேலை…” என்றதில்,

“சமைக்க ஆள் வரலையா அத்தை?” எனக் கேட்டாள்.

“காய்ச்சல்ன்னு லீவ் போட்டு இருக்கா. வர ஒரு வாரம் ஆகும்ன்னு நினைக்கிறேன்” என அவர் பதில் கூறியதும்,

“ஓ. சரி நீங்க போய் கிளம்புங்க. நான் சமைக்கிறேன்.” என்றதில், “டிராவல் டயர்ட் இல்லையா உனக்கு?” என்றார்.

“மொத்தமா சமையல் முடிச்சுட்டு ரெஸ்ட் எடுத்துக்குறேன் அத்தை. கார்ல தான வந்தோம்.” என்றதும், அவரும் சரியென கிளம்பச் சென்றார்.

அவர் விட்டுச்சென்ற வேலைகளை தொடர்ந்தவள், மதிய உணவையும் தயாரித்தாள்.

“இந்த வீட்ல ஒரு காபி சீக்கிரம் தர்றாங்களா?” எனக் கோபமாக மூச்சிரைத்த இந்திரஜித், பானுரேகா அறைக்கு சென்றதை கவனிக்கவில்லை.

அதில், “மம்மி… ஒருத்தன் மூணு நாள் கழிச்சு வந்துருக்கானே அவனை ஆரத்தி எடுத்து வரவேற்கணும்ன்ற எண்ணம் இருக்கா…” என சிணுங்களாக கேட்டபடி அடுக்களைக்கு வந்தவன், அங்கு சத்யா இருப்பதைக் கண்டு, குறும்பாய் புன்னகைத்தான்.

கணவனின் பேச்சு காதில் கேட்டாலும், அடுப்பில் தாளித்துக் கொண்டிருந்தவள், அவனை திரும்பி முறைத்து விட்டு காபி தயாரிக்க, “எனி ஹெல்ப் ரூப்ஸ்?” எனக் கேட்டுக்கொண்டே அடுப்படி திண்டில் அமர்ந்தான்.

“நீங்க கிளம்பி ஆபிஸ் போறதே மிகப்பெரிய ஹெல்ப் தான் இந்தர்.” அவள் நக்கலடிக்க,

“சே! சே அந்த மாதிரி பெரிய ஹெல்ப் எல்லாம் நான் பண்ண மாட்டேன் ரூப்ஸ்.” என்னும் போதே, அவனிடம் காபியை நீட்டினாள்.

அதில், “நான் இன்னும் ப்ரஷ் பண்ணலையே” என்று பாவமாக கூறிட,

“காண்டாமிருகம்ல்லாம் பல்லா விலக்குது” அவனைப் போலவே வாரினாள்.

அவளை போலியாய் முறைத்தவன், “பாருங்கம்மா. கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள உங்க ரூல்ஸை பிரேக் பண்றா. ப்ரஷ் பண்ணாம காபி தர்றா. இது எவ்ளோ பெரிய தப்பு. என்ன நீங்க மருமகளை வளர்க்குறீங்க.” என்று சத்யாவிற்கு பின்னால் நின்றிருந்த பானுரேகாவிடம் குறை கூற, சத்யா பதறி திரும்பினாள்.

பானுரேகா அவளை முறைத்து, “இனிமே அவன் குளிக்காம கீழ வந்தா பச்சை தண்ணி கூட கொடுக்காத சத்யா. உனக்கும் சேர்த்து தான்.” என்று கடிந்து விட்டு போக, “உனக்கு போய் பாவம் பார்த்தேன் பாரு…” என்று கையில் இருந்த கரண்டியை வைத்து கணவனை அடிக்க சென்றாள்.

அவளிடம் இருந்து தப்பித்து ஓடியவன், மறக்காமல் காபியையும் கையோடு எடுத்துச் சென்றான்.

“அராத்து! அராத்து…” இந்திரஜித்தை மனதினுள் திட்டிக்கொண்டே வேலையையும் முடிக்கையில், காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

மற்ற மூவரும் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்ததில், அவளே சென்று கதவை திறக்க, அங்கு சிரஞ்சீவி தான் நின்று கொண்டிருந்தான்.

தாயை எதிர்பார்த்தவன், இவளைக் கண்டு திருதிருவென விழிக்க, சத்யரூபா அவனை விழிகளால் எரித்தாள்.

“ஓடி ஓடி… கால் வலிச்சுருச்சோ?” வெகு நக்கலுடன் அவள் கேட்டதில், அசடு வழிந்தவன், “எஸ். எஸ். அதான் வீட்டுக்கு வந்து இளைப்பாறிட்டு போகலாம்ன்னு வந்தேன் சவுண்டு… ச்சி… சாரி சத்யா…” என்று சமாளித்தான்.

பற்களை நறநறவெனக் கடித்தவள், “அத்தை” என வீடு அதிர கத்த, காது இரண்டையும் பொத்திக் கொண்டான் சிரஞ்சீவி.

அத்தியாயம் 16. 

‘இவள் இருக்கான்னு தெரிஞ்சுருந்தா நான் வீட்டுப்பக்கமே வந்துருக்க மாட்டேனே. அம்மாவே என்னை வீட்ல சேர்த்தாலும் இவள் கத்தியே துரத்தி விட்டுடுவா போல…’ என மனதினுள் நொந்து கொண்டான் சிரஞ்சீவி.

அப்போது தான் அவனருகில் வந்து நின்ற நீரஜாவும் மிரண்டு, “என்ன ரஞ்சி… வைஷுவோட தங்கச்சி ரக்கட் கேர்ள்ளா இருப்பா போல. இந்தர் எப்படி இவள்கிட்ட விழுந்தான்…” என யோசிக்க, நீரஜாவைக் கண்டதும் சத்யாவினுள் ஒரு அதிர்வு.

கையில் ஸ்டிக்குடன் நின்றிருந்தவளைக் கண்டதும், தானாக மனது சற்று இளகியது.

ஆனால், அப்பார்வை தான் நீரஜாவிற்கு பிடிக்காமல் போக, அந்நேரம் பானுரேகா அங்கு வந்து விட்டார்.

“ஏன் சத்யா கத்துன?” எனக் கேட்டபடி வந்தவர், வாசலில் நின்ற மகனைக் கண்டதும், கோபத்தில் கொந்தளித்தார்.

“யாரு நீ? வழி மாறி இங்க வந்துட்டியா?” பானுரேகா அழுத்தமாகக் கேட்டதில், சிரஞ்சீவிக்கு மனம் சுட்டது.

“சாரிமா…” தலையைக் குனிந்து கொண்டு அவன் மன்னிப்பு வேண்டியதில், “மன்னிப்பு எல்லாம், தெரியாம செஞ்ச தப்புக்கு தான். தெரிஞ்சே செஞ்ச தப்புக்கு இல்ல. உன்னை நம்புனது தான் நான் செஞ்ச மிகப்பெரிய முட்டாள்தனம். இனிமே அதை பண்ண மாட்டேன்!” என உறுதியாகக் கூறியவர், நீரஜாவையும் அழுத்தமாக முறைத்து விட்டே வெளியில் சென்று விட, சிரஞ்சீவிக்கு கண்ணில் நீர் பெருகியது.

இந்திரஜித் கூட சரமாரியாக திட்டு வாங்கி இருக்கிறான். ஆனால், சிரஞ்சீவி அனைத்திலும் தாயின் பாராட்டுதலையே பரிசாகப் பெறுவான். அதுவே அவனுக்கு கர்வமும் கூட! இதனை எதிர்பார்த்து வந்திருந்தாலும், தாயின் கோபத்தில் துடித்த மனதை சரி செய்ய இயலாமல் தவித்தான்.

நீரஜாவிற்கு தான் அப்படியே வீட்டிற்கு சென்று விடலாமா என்று கூட தோன்றியது. ஆகினும், சிரஞ்சீவியை அப்படியே விட்டுச் செல்ல மனமின்றி நிற்க,

“நீ வாசல்ல நின்னு கண்ணீரால தண்ணி தெளிச்சு விட்டது போதும். உள்ள வா!” பாலகிருஷ்ணன் மகனை முறைத்தபடி அழைத்தார்.

அதில், “சாரிப்பா.” என்றான் அழுகுரலில்.

“அதை என்கிட்ட கேட்டு, நான் பரவாயில்ல விடுடான்னு சொல்லி, உன் அம்மாகிட்ட செருப்படி வாங்கணும் அதான உன் பிளானு. நான் மசிய மாட்டடேன்டா. உன் அம்மா மலை இறங்காம, நானும் இறங்குறதா இல்ல.” என்றதில்,

“குடும்பத் தலைவன்னு மதிச்சு சாரி கேட்டா… குசும்புப்பா உனக்கு!” எனத் தந்தையை திட்டியபடி, நீரஜாவை உள்ளே அழைத்தான்.

அவள் தயங்கியபடி நிற்க, “உள்ள வா நீரஜா. அதான் நான் கூப்புடுறேன்ல” பாலகிருஷ்ணன் அழைத்ததில், யோசியாமல் வீட்டினுள் நுழைந்தாள்.

சத்யா தான் மாமனாரையும் சேர்த்தே முறைத்து வைத்தாள். அவளுக்கு இருக்கும் கோபத்திற்கு சிரஞ்சீவியை, கன்னத்திலே ஓங்கி குத்தி இருப்பாள். நீரஜாவின் உடல்நிலை தான் அவளை சற்று நிதானப்படுத்தியது.

டிப் டாப்பாய் அலுவலகம் கிளம்பி வந்த இந்திரஜித், “ஹாய்… நீரஜ்…” என்று தோழியைக் கண்டு சிரிப்புடன் ஆரம்பித்தவன், மனைவியைக் கண்டதும், சட்டென நிறுத்திக்கொண்டு, “ஹாய். அண்ணி. வெல்கம் ஹோம்.” என்று வெகு மரியாதையாய் பேசி விட்டு, “உன்ன வந்து பார்த்துக்குறேண்டா அண்ணா…” என தமையனிடம் கோபப்பார்வை வீசி விட்டு சென்றான்.

பாலகிருஷ்ணன் தான், “நம்மளை விட பொண்டாட்டிக்கிட்ட பெர்ஃபக்ட்டா நடிக்கிறான்.” என வியந்து விட்டு, அவர்களை உணவு அருந்தக் கூறினார்.

“சாப்டாச்சு அங்கிள். எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு. கிளம்புறேன்.” என்றவளை, சிரஞ்சீவி அலுவலகத்தில் இறக்கி விட்டு, அவனும் கார்மெண்ட்ஸ்க்கு சென்றான். சிறிது நேரத்தில், பாலகிருஷ்ணனும் கிளம்பி விட, சத்யாவிற்கு தான் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

‘இந்த வீட்ல யாருக்குமே வாய் கம்மி இல்லை போல.’ என நொந்து கொண்டு, அறைக்கு சென்றவளுக்கு, நேரம் தான் செல்லவில்லை.

தாய்க்கு போன் செய்து பேசியவள், செய்வதற்கு வேலை இல்லாமல் பொழுதைக் கடத்தினாள்.

மீண்டும், மாலை நேரத்தில் ஒவ்வொருவராய் வீட்டிற்கு வர, சிற்றுண்டி தயாரித்தவள், நீர் அருந்துவதற்காக அங்கு வந்த நீரஜாவைப் பார்த்தாள்.

“ஏதாவது வேணுமாக்கா.” எடுத்ததுமே உரிமையாய் பேசிய சத்யாவிடம், “தண்ணி குடிக்க வந்தேன்…” என்றவள், சற்று உயரமாய் இருந்த ஆர். ஓ பைப்பை எக்கி திறக்க, “நான் பிடிச்சு தரேன்” என்று அவளே நீர் பிடித்து கொடுக்க, நீரஜா வாங்காமல் நின்றாள்.

“நீ எல்லார் மேலயும் கோபமா தான இருக்க. அப்போ என் மேல மட்டும் ஏன் இந்த கரிசனம்?” நேரடியாக கேட்டு விட, சத்யாவிற்கு தான் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை.

“உன் பரிதாபப் பார்வை எனக்கு தேவை இல்ல சத்யா. என் மேலயும் கோபத்தைக் காட்டு. இல்லன்னா, நடந்த குழப்பத்தை மறந்துட்டு, எல்லாரையும் மன்னிச்சு விட்டுடு. எனக்கு கால் தான் ஊனம். மனசு இல்ல.” என்று சுள்ளெனக் கூறி விட்டு, நீரையும் வாங்காமல் சென்றிட, சத்யா தான் வாயடைத்து நின்றாள்.

வைஷாலியிடம் அவள் பேசவே இல்லை என்று இந்திரஜித் மூலம் தெரிந்து கொண்டவளுக்கு, ஆற்றாமையாக இருந்தது. வைஷுவினால் சிறிய துக்கத்தைக் கூட தாங்க இயலாது என்று தெரியுமே. மூவருக்கும் கிட்டத்தட்ட பத்து வருடப் பழக்கம். ஒருவேளை தன் மீதும் சினப்பார்வை வீசி இருந்தால், அவளும் இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பாளோ என்னவோ!

சத்யாவிற்கும் நீரஜா மீது பரிதாபமும் தோன்றவில்லை. கோபமும் எழவில்லை. அவளிடம் இயல்பாகத் தான் இருந்தாள். அதனை தவறு என குத்தி விட்டு சென்றவளிடம் என்ன விளக்கம் கூறுவது என்று தெரியாமல், தோளைக் குலுக்கி விட்டு, வேலையைப் பார்க்கலானாள்.

பானுரேகா தான், சிரஞ்சீவி என்றொருவன் அந்த வீட்டில் இருப்பது போன்றே காட்டிக்கொள்ளவில்லை. அவன் முகத்தை ஏறிடவும் இல்லை. சிரஞ்சீவி பேச முயற்சிக்கும் போது, அதனை கண்டுகொள்ளாமல், அறைக்குள் புகுந்து கொண்டதில், வருத்தம் எழுந்தது அவனுக்கு.

அப்போது தான் வீட்டிற்கு வந்த இந்திரஜித்தும் அதனை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். சோபாவில் சுருங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த சிரஞ்சீவியின் அருகில் அமர்ந்து, “இப்போ ஏன் நீ சோக கீதம் வாசிக்கிற. அம்மா ரெண்டு மூணு நாள்ல சரி ஆகிடுவாங்கடா” என்று தேற்ற, அந்நேரம் அவன் முன் டொம்மென காபி கப்பை வைத்தாள் சத்யா.

கூடவே, காரப்பார்வையும்.

அதனை ரசித்து தொலைத்த மனதுடன், “காபி வித் காரம்ன்றது இது தானா ரூப்ஸ்…” என நக்கலடிக்க, “உடம்பு ஃபுல்லா திமிரு.” என முணுமுணுத்தவள், சிரஞ்சீவிக்கும் காபியை கொடுத்து விட்டு நகர்ந்தாள்.

“ச்ச்சே… என்ன ஒரு டிபிகல் மருமகள். கோபம் இருந்தாலும் காபி குடுக்கணும்ன்ற மனசு இருக்கே அந்த மனசு…” என சிலாகித்தவனை, கேவலமாய் ஒரு பார்வை பார்த்த இந்திரஜித், “பெஸ்ட் அட்வைஸ். அதை வச்சுட்டு போய்டு” என்றான்.

“உனக்கு பொறமைடா! பாத்தியா உனக்கு மட்டும் டேபிள்ல வச்சுட்டு போனவ, எனக்கு கைல குடுத்துட்டு போயிருக்கா. மரியாதை தெரிஞ்ச பொண்ணுடா.” என்று பேசியபடியே காபியை குடித்தவனின் முகம் அஷ்டகோணலாகியது.

“என்ன கருமம்டா இது. தொண்டையை கவ்வுது” என குமட்டிட, அசட்டையாக தனது காபியை குடித்த இந்திரஜித், “கடந்த மூணு நாளா, நான் இந்த காபியை தான் குடிக்கிறேன். சோ நீயும் குடிச்சாகனும்.” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“நீ குடிடா. வை மீ? நான் என் பொண்டாட்டிகிட்டயே காபி கேட்டுக்குறேன் போங்கடா…” என எழும் போதே,

“அத்தை… உங்க பெரிய பையனுக்கு நான் காபி குடுத்தேன். ஆனா, அவரு குடிக்காம போறாரு.” என்று பானுரேகாவின் அறை வாசலில் நின்று கத்தினாள் சத்யரூபா.

அதில் படக்கென சோபாவில் அமர்ந்த சிரஞ்சீவி, “கிராதகி…” என நொந்தபடி, அந்த கொடூரமான காபியை பருகியதில், இந்திரஜித் வாய் விட்டு சிரித்தான்.

மனையாளின் குறும்புகள் அவனை பித்தாக்கியது. ஆனால், வைஷாலியை நினைத்து தான் அவ்வப்பொழுது கவலை எழுந்தது.

அவளுக்கு அழைத்தபோது பல முறை அவள் போனை எடுக்கவே இல்லை. இரவு பத்து மணி அளவில் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.

“சாரிடா… காலைல இருந்து போனை பார்க்கவே முடியல. கொஞ்சம் வேலை. நாளைக்கு ஃப்ரீ ஆகிட்டு கால் பண்றேன்.” என்ற செய்தியைக் கண்டதும் அவன் புருவம் சுருங்கியது.

இருப்பதே, அவள் மாமனார் மாமியார் மட்டும் தான். சமையல் வேலை செய்தால் கூட, நாள் முழுக்கவா செய்யப் போகிறாள், அதிலும் போனை கூட பார்க்காமல்… என்றவனுக்கு எதுவோ சரியாகப் படவில்லை.

காலையில் விடிந்ததுமே, அவளுக்கு போன் செய்து விட்டான்.

உடனே எடுத்தவள், “என்னடா இவ்ளோ காலைல போன் பண்ணிருக்க? ஒண்ணும் பிரச்சனை இல்லைல. சத்யா நல்லா இருக்காளா?” என அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்ப, “இங்க எந்த பிரச்சனையும் இல்ல. அங்க என்ன பிரச்சனை?” எனக் கேட்டான்.

“இங்க ஒரு பிரச்சனையும் இல்லேயே இந்தர்…” என வைஷாலி கூறியதும், “அப்போ ஏன் எழில் உன்னை அவன் கூட கூட்டிட்டு போகல…” என்றான் எரிச்சலாக.

அதில் ஒரு கணம் பேச்சை நிறுத்தியவள், “வீடு பாத்துட்டு இருக்கேன்னு சொன்னாருடா. உடனே கிடைக்கணும்ல.” என அவள் சமாளிக்க,

“உன் ஆபிஸ்ல தான் ஒர்க் பிரேம் ஹோம் தருவாங்களே. அப்படி வேலை பார்க்காம ஏன் வேலையை விட்ட?” இந்திரஜித் மேலும் துருவினான்.

“இங்க அத்தை அதெல்லாம் சரியா வராதுன்னு சொன்னாங்க அதான்…” எனத் தயங்கியவளிடம், “உன் வாயை வாடகைக்கு விட்டு இருக்கியா?” எனக் கடிந்தான்.

“எதையும் வாயைத் திறந்து பேசணும் வைஷுமா. உனக்கு பல தடவை சொல்லிட்டேன். இப்படி இண்ட்ரோவெர்ட்டா இருக்காதன்னு.” என்று அதட்டியதில்,

“நீ மட்டும் உன் லவ்வை என் தங்கச்சிகிட்ட சொல்லிட்டியாக்கும்” எனக் கேலி செய்து பேச்சை மாற்ற முயன்றாள்.

அதனைப் புரிந்து கொண்டவன், “பேச்சை மாத்தாத. நான் டைம் வரும் போது கண்டிப்பா சொல்லுவேன். ஆனா, நீ அதுக்கான சான்ஸ் கிடைச்சா கூட சொல்லமாட்ட. அது தான் உன் பிரச்சனையே!” என்று சலித்ததில், பொங்கி வந்த கண்ணீரை அடக்கினாள்.

அவனோ, “ஒழுங்கு மரியாதையா எழில்கிட்ட பேசி அவன் கூட தஞ்சாவூருக்கு போ! இல்லன்னா, அவனை டிரான்ஸ்பர் வாங்கிட்டு இங்க வர சொல்லு. நீ ஜாபை கன்டினியூ பண்ணுன மாதிரியும் இருக்கும். நீ பேசுனா தான் அவனுக்கும் புரியும் வைஷுமா.” என்றான் கண்டிப்பாக.

எழிலிடம் பேசுவதா? அதற்கு அவன் முகம் கொடுக்க வேண்டுமே… இதனை பேசும் அளவு எல்லாம் தைரியம் இல்லை என்று எப்படி அவனிடம் கூறுவது என்று புரியாமல், தலையை ஆட்டி விட்டு போனை வைத்தவளுக்கு, அடுத்துடுத்து வேலைகள் மலையாக குவிந்தது.

இப்போதெல்லாம் ஆனந்தியின் குத்தல் பேச்சுக்கள் அவளை சோர்வாக்கியது. மறுவீட்டிற்கு சென்று விட்டு, வெறும் கையோடு வந்த மருமகள் அவள் மட்டும் தானாம்! சில நேரம் அவளது வளர்ப்பு சரி இல்லை என்று கூறும் போது உள்ளம் சுட்டது.

அதனை நாசுக்காய் அவள் சந்தேகப்படாதவாறு, குடையும் விதம் தெரிந்த ஆனந்தி, வார்த்தைகளால் அவளை அவ்வப்பொழுது துன்புறுத்தினார்.

வைஷாலியிடம் பேசி விட்டு போனை வைக்கும் நேரத்தில், சத்யரூபா அறைக்குள் வந்தாள்.

“உங்களுக்கு இன்னைக்கு டிபன் வேணாமா?” எனக் கேட்டதில், ஏன் எனப் பார்த்தான்.

“மணி ஒன்பதாக ரெண்டு நிமிஷம் தான் இருக்கு.” என்று கேலியாய் உரைத்திட, அதன் பிறகே மணியைப் பார்த்தவன், அரக்க பறக்க கிளம்பி கீழே சென்றான். ஒன்பதைத் தாண்டினால், காலை உணவை கண்ணில் காட்ட மாட்டாரே பானுரேகா.

அப்படியும் அவன் வருவதற்கு பத்து நிமிடம் தாமதமாகி விட, “பத்து மணிக்கு ஆபிஸை வச்சுக்கிட்டு இவ்ளோ நேரம் தூங்குறதுலாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல இந்தர். இதுல பிசினஸ் வேற பண்ண போறாராம். முதல்ல பங்க்சுவாலிட்டியை கத்துக்க.” என்று பானுரேகா சரமாரியாகத் தாக்க, ‘நான் தான் இன்னைக்கு ஏழு மணிக்குலாம் எந்திரிச்சுட்டேனே.’ என்றெண்ணி விழித்தான்.

அவன் திட்டு வாங்குவதை ஆசை தீர பார்த்த சத்யரூபா, “நான் கூட எழுப்புனேன் அத்தை. இவரு எந்திரிக்கவே இல்லை.” என்று அவனை மேலும் மாட்டி விட, ‘உன் வேலை தானா இது…’ என மனையாளை முறைத்தவனிற்கு காலை உணவெல்லாம் கிடையாது என்று அலுவலகத்திற்கு கிளம்ப சொல்லி விட்டார் பானுரேகா.

சிரிப்பை அடக்கியபடி கணவனிடம் மதிய உணவு பையை நீட்டினாள் பவ்யமாக.

“லஞ்சையாவது கரெக்ட் டைம்க்கு சாப்பிடுங்க இந்தர். பாவம்… காலைலயும் சாப்பிடல. இன்னைக்குன்னு பார்த்து இடியாப்பமும், தேங்காய் பாலும் பண்ணிருந்தேன். உங்களுக்கு பிடிக்குமாமே. ப்ச். சரி உங்களுக்கு குடுத்து வச்சது அவ்ளோ தான்…” முகத்தை பரிதாபமாக வைத்தபடி, அவனைக் கேலி செய்தாள்.

‘துரோகி…! உன்னை வச்சுக்குறேன் இருடி…’ எனப் பல்லைக்கடித்தவன், பின் குறும்பு நகை பூத்தான்.

அவனது சிரிப்பிலேயே சத்யா சற்று ‘அலர்ட்’ ஆனாலும், அவன் செய்ய வேண்டியதை சிறப்பாக செய்தான்.

“அம்மா… சத்யா நல்லா ஸ்டிட்ச் பண்ணுவாளாம்.” என்றான் அவளை நக்கலாய் பார்த்தபடி.

‘இவன் ஏன் இப்ப நம்மளை கோர்த்துவிடுறான்’ என்பது போல அவள் புருவம் சுருக்க, பானுரேகா நிமிர்ந்து, “அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற?” என்றார் எகத்தாளமாக.

“இல்ல… ஜஸ்ட் சொன்னேன். நீங்களும் எவ்ளோ நாள் தான் கார்மெண்ட்ஸை தனியா பார்க்க ஓடுவீங்க. சத்யாவையும் ஹெல்ப்புக்கு வச்சுக்கோங்க.” என்று லேசாய் கல்லெறிந்து விட, பானுரேகாவும் யோசனையுடன் அறைக்கு சென்றார்.

‘இதெல்லாம் இப்ப தேவையா? லூஸ் டாக் விடுறதே வேலையா வச்சிருக்கான் காண்டா மிருகம்…’ என்றவள், அதன் ஆழம் தெரியாமல், அசட்டையாக எடுத்துக்கொண்டாள்.

“அநியாயமா இன்னைக்கு இடியாப்பம் போச்சு…” என முணுமுணுத்தபடி, அவன் சோகமாக வண்டியை எடுக்கையில், அவசரமாக வாசலுக்கு வந்த சத்யரூபா, “இந்தர்” என அழைத்தாள்.

“என்னடி?” அவன் கடுப்பாய் கேட்டதில், “பொரியல் வைக்க மறந்துட்டேன், லன்ச் பேகை கொடுங்களேன்.” என்றாள்.

“ரொம்ப முக்கியம். இருக்குறது போதும் விடு. டைம் ஆச்சு…” என்றவனுக்கு உண்மையாகவே நேரம் ஆக, “ப்ச். ரெண்டு நிமிஷத்துல தந்துடுறேன்.” என வம்படியாக வாங்கி விட்டு சென்றவள், பின் மீண்டும் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதனை வாங்கிக்கொண்டு, வண்டியில் பறந்தவனுக்கு, யோசனை முழுக்க வைஷாலியை சுற்றித் தான். சத்யாவை பேச சொல்லலாம் என்றால், அவள் மசியமாட்டேன் என்கிறாளே! என பெருமூச்சு விட்டவனுக்கு, முதலில் எழிலுக்கும் சத்யாவிற்கும் நடுவில் என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள நினைத்தான்.

அதே நினைவுடன், அலுவலகத்திற்கு சென்று விட்டதும், குறுஞ்செய்தி ஒன்று அவனை தழுவியது.

“இந்தர்… ஆபிஸ் போய்ட்டீங்களா?” சத்யரூபாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை வியப்பாய் பார்த்தவன்,

“என்ன ஒரு அதிசயம், கரடி வாட்சப் பண்ணுது…” என கேலி செய்திட,

“காண்டாமிருகம் வண்டி ஓட்டும் போது, கரடி வாட்சப் பண்ணாதா என்ன?” என பதில் அளித்தவளின் இதழ்களில் புன்னகை உறைந்திருந்தது.

அவனிடமும் அதே புன்னகை மிளிர, அவளே மீண்டும் அனுப்பினாள்.

“உங்க லன்ச் பாக்ஸை ஓபன் பண்ணுங்க.”

“ஏய்… இப்பவே திறந்தா, ரொம்ப அல்பமா நினைப்பாங்கடி.”

“ஐயோ… திறந்து பாருயா…” அவள் ‘கத்தி’ ஸ்மைலியுடன் அனுப்பியதில், வெண்பற்கள் ஒளிர சிரித்தவன், “ஒன்னு கத்துற… இல்லன்னா கத்தி அனுப்புற” என கிண்டலடித்தபடி, லன்ச் பேகை திறந்தான்.

அதில் மேலே இருந்த டிபன் பாக்ஸில் காலை உணவு இருக்க, அதில் விழி விரித்தவன்,

“ஆப்பும் வைக்கிற, ஆப்பமும் வைக்கிற. யூ ஆர் கிரேட் ரூப்ஸ்…” என வாயைப் பொத்தி நகைத்ததில்,

“கொழுப்புயா உனக்கு. போனா போகுதுன்னு டிபன் குடுத்து அனுப்புனேன்ல. என்னை சொல்லணும்…” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள், அவனிடம் இருந்து பதில் வராமல் போனதில், “இந்தர் சாப்பிட்டு வேலையை பாருங்க. ரொம்ப ஆறிடும்.” என்றவளின் அக்கறையில் கரைந்தவன், “சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன் புஜிலி…” என அனுப்பிட,

“என்னது புஜிலியா?” என்று புரியாமல் கேட்டாள்.

“ஹி… ஹி… சாப்பிட்டுக்கிட்டே டைப் பண்றேனா… அதான் டைப்பிங் மிஸ்டேக் ஆகிடுச்சு.” என சமாளிக்க, “ஓ… ஓகே” என பதில் அளித்தவள், போனை கட்டிலில் போட்டு விட்டு அமர்ந்தாள்.

அவனைக் கோபப்படுத்தி, சண்டையிடுவதற்கென்றே அவனிடம் வம்பிழுத்தாலும், அதனை முழுதாய் செய்ய இயலவில்லை.

அவன் அருகில் இல்லாத நேரமெல்லாம், தன்னை நிர்பந்தத்தில் திருமணம் செய்ததை எண்ணி கடுகடுத்தாலும், அருகில் இருக்கையில் அவனுக்கு ஈடாய் குறும்பு செய்யவே தோன்றியது. இது என்ன மனநிலை என்று புரியாமல் தலையைப் பிடித்து நொந்திருக்கும் போதே, அவளவனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

“டிபன் சூப்பர் ரூப்ஸ். இடியாப்ப டிசைன்ல உன் கைக்கு ஒரு காப்பு போடணும்ன்னு என் மனசு அடிச்சுக்குது. அப்பறம் தான் யோசிச்சேன், தங்கத்துக்கே தங்கம் போட்டா, தங்கமே டல்லாகிடும்ன்னு…” என சிரிப்பது போல ஸ்மைலி அனுப்பியிருந்ததில்,

“அராத்து…” என திட்டிக்கொண்டவளுக்கும், இதழோரம் புன்னகை மலர, தலையை ஆட்டி சிரித்துக்கொண்டாள்.

அலைபாயும்
மேகா!

அடுத்த ud Monday than drs… Happy wkend 🏃🏃🏃

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
61
+1
158
+1
5
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்