அத்தியாயம் 14
தேவஸ்மிதாவின் முன் சொடுக்கிட்ட அமர மகரந்தன், “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல தேவா? கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனத் தலை சாய்த்து குறுகுறுப்புடன் கேட்டான்.
அதில் அனைத்து சிந்தனைகளும் தூர எறியப்பட, உடனே ஒப்புக்கொண்டால் சந்தேகம் வருமென்று எண்ணி, சற்றே சிந்திப்பது போல பாவனை செய்தவள், “கொஞ்சம் டைம் குடுங்க. யோசிச்சு சொல்றேன்” என்றாள்.
“யோசி. ஆனா, கல்யாணம் ஒரு வாரத்துக்குள்ள நடக்கணும். அதுக்கு ஏத்த மாதிரி யோசிச்சு சொல்லு.” என்றதும்,
“ஒரு வாரத்துக்குள்ளயா?” என அவள் இன்பமாய் அதிர்ந்தாள்.
“நான் கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாதுன்னு சொன்னா?” அவனைப்போன்றே தலை சாய்த்து நக்கலாக கேட்டதில், அவளை ஆழ்ந்து பார்த்தவன், “நீ ஒத்துக்குற வரை உன்னை கன்வின்ஸ் பண்ணுவேன்.” என்று அவளை நோக்கி மீண்டுமொரு அடி எடுத்து வைத்தான்.
இதயம் படபடவென துடிக்க, சுவரில் ஒட்டி அண்டியவள், “என்னைப் பத்தி தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்க ஓகே வா? இது ஒன்னும் விளையாட்டு இல்லை அமர்.” என்று தயாவிற்காக அவன் கூறிய வசனத்தை அவனுக்கே கூற, லேசாய் முறைத்தான்.
“எனக்கேவா? என் தங்கச்சிக்கு வரப்போறவன் எப்படி ஜெனியூனா இருக்கனும்ன்னு நினைக்கிறேனோ அதை விட ஒரு படி அதிக ஜெனியூனா நான் இருப்பேன் தேவா. ட்ரஸ்ட் மீ. மேரேஜ் இஸ் நாட் ஸ்கேரி. அன்டில் யூ கெட் அ ரைட் பார்ட்னர். இது செகண்ட் மேரேஜ்க்கும் பொருந்தும்.” என்றான் அவள் சுண்டு விரலை மெல்லப் பற்றி.
‘ஹையோ… லவ்ல ஜெனியூனா இருந்தா எப்படி சார் ரொமான்ஸ் பண்றது?’ என மனத்தினுள்ளேயே குத்தாட்டம் போட்டுக்கொண்டவள், அதனைக் கடினப்பட்டு வெளிக்காட்டாமல் மறைத்து, “ஆனாலும் எனக்கு இது சரியா வரும்ன்னு தோணல அமர். தயாவுக்கும் மிருவுக்கும் முதல்ல கல்யாணம் ஆனதும் இதை பத்தி யோசிக்கலாமே!” என்றவள் நிஜமான அக்கறையுடன் கூற,
“அவளுக்கு கல்யாணம் ஆகணும்ன்னா முதல்ல நமக்கு ஆகணும். அப்போ தான், நம்ம உறவுமுறையாவோம். உன் வீட்டுப் பிரச்சனையையும் சரி செய்ய இன்னும் ஈஸியா இருக்கும். அண்ட் தயாவும் மிருவும் க்ளோஸ் ஆகவும் இது ஒரு சான்ஸா இருக்கும்.” என மூச்சுப் பிடிக்கப் பேசியவன், ‘எல்லாத்துக்கும் மேல உன்னை எனக்குப் பிடிச்சுருக்கு தேவா. ஐ டோன்ட் வாண்ட் டு லீவ் யூ அலோன் எனிமோர்.’ என்ற வரிகளை மட்டும் மனத்தினுள்ளேயே சொல்லிக்கொண்டான்.
‘ம்ம்க்கும்… கல்யாணம் பண்ண இவ்ளோ கேவலமான காரணம் சொன்ன யாரையும் நான் பார்த்தது இல்லைடா அமர காவியம். மவனே… நாளை பின்ன லவ்வு அது இதுன்னு உனக்கு வராமயா போய்டும். அப்போ உன்னை அலைய விடுறேன் இரு.’ என்று உள்ளுக்குள்ளேயே அவனை வறுத்து எடுத்தாள்.
இப்போது இல்லையென்றாலும், திருமணத்திற்குப் பின் அவனிடம் காதலை வரவழைத்து விடலாம் என உறுதியாய் நம்பியவள், தற்போது தங்களது திருமணத்திற்கான அவசியத்தையும் உணர்ந்து கொண்டாள்.
ஆனால், உண்மையைக் கூறாமல் எப்படி திருமணம் செய்வது? உண்மையைக் கூறினால் நிச்சயம் இவன் இந்த பிளானை டிஸ்கார்ட் செய்து விடுவானே எனப் பலவாறாக யோசித்தவளின், நெரித்தப் புருவத்தை ஒற்றை விரல் கொண்டு வருடி விட்டான்.
“என்ன யோசனை தேவா. நான் உன்னை எந்த விதத்திலும் ஹர்ட் பண்ண மாட்டேன்.” என்றவனின் கண்களில் இறைஞ்சலும் இருந்தது.
அதில் பிடித்தமின்மையும், தங்கைக்காக திருமணம் செய்யும் எண்ணமும் துளியும் தெரியவில்லை. அதில் நெக்குருகிப் போனவள், ‘காயப்படுத்துறது நீயா இருந்தா, எவ்ளோ வேணாலும் தாங்கிப்பேன்டா என் முசுட்டுப் பூனை’ என கொஞ்சிக்கொண்டவள், அறியவே இல்ல… அவளவன் ஏற்படுத்தும் காயம் உயிரைக்கொல்லும் வலியை ஏற்படுத்துமென.
“அது… உங்க வீட்ல ஓகே சொல்லுவாங்களா முதல்ல. ஆண்ட்டி வேற பழங்காலத்துல ஊறிப்போன மாதிரி இருக்காங்களே?” எனக் குழப்பத்துடன் கேட்க,
அவனோ பெருமூச்சுடன், “அம்மாவும் நானும் பேசிக்கிறது இல்ல தேவா. மிருவுக்கு நான் வேற கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்றது அவங்களுக்குப் பிடிக்கல. இன்னும் பழைய பஞ்சாங்கத்தைப் பாடிக்கிட்டே இருக்காங்க.” என்றான் எரிச்சலாக.
“மகளுக்கே அவ்ளோ பார்மாலிடீஸ் பாக்குறவங்க, உங்க முடிவை எப்படி ஏத்துப்பாங்க அமர். எந்த நம்பிக்கைல ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவு செஞ்சீங்க. ஆண்ட்டி ஹார்ஷா இல்லைன்னாலும் மனசுல பட்டதை படக்குன்னு சொல்ற ஆளா இருக்காங்க. அது வரப்போற பொண்ணைக் கஷ்டப்படுத்தாதா? என்னை விடுங்க. நான் இதுக்குலாம் அஞ்சுற ஆள் இல்ல. இதே வேற பொண்ணா இருந்தா…? ஒவ்வொரு நாளும் நீங்க உங்க அம்மா ஹர்ட் பண்றங்களா இல்லையான்னு பாத்துக்கிட்டே இருப்பீங்களா?” என்று சற்றே சினத்துடன் கேட்டாள்.
“என் அம்மா ஒன்னும் சீரியல் வில்லி இல்ல தேவா. அவங்களுக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிடுவாங்க. ஆனா கண்டிப்பா ஒரு நாள் புருஞ்சுப்பாங்க.” என்று அவன் சமன்படுத்த வர, கை நீட்டி தடுத்தவள்,
“அவங்களை நானும் தப்பு சொல்லல அமர். ஆனா ஒரு சில வார்த்தைக்கு பவர் அதிகம். அந்த ஒரு சில வார்த்தையால வர போற பொண்ணு மனசு உடைஞ்சு போய்ட்டா, நீங்க தங்கத்தட்டுல வச்சு தங்குனா கூட, அவளால அதை ஏத்துக்க முடியாது.
கல்யாணம் ஒன்னும் நீங்களும் அவளும் வாழப்போற வாழ்க்கை மட்டுமில்ல. வாழ்க்கை முழுக்க அவள் உங்க அம்மா முகத்தையும் பார்த்து தான் ஆகணும்.
தப்பே செய்யாமல் ஒரு வாழ்க்கையை இழந்தது பத்தாதுன்னு ரெண்டாவது வாழ்க்கையையும் தப்பு செஞ்சுட்டோமோன்னு குற்ற உணர்ச்சியோடு வாழ விடுறதுக்கு அவள் தனியா வாழுறதே மேல். செகண்ட் மேரேஜை ஏத்துக்குற குடும்பமா இருந்தா பரவாயில்ல. ஆனா நீங்க மட்டுமே அவளுக்கு அத்தனை அன்பையும் குடுத்துட முடியாது அமர்.” என்று திட்ட வட்டமாகக் கூறியவளின் நிமிர்வில் ஒரு நொடி அசந்து தான் போனான்.
முதன்முறை தனது முடிவு தவறோ என்ற குழப்பம் எழுந்தாலும் கூட, அவளை விடும் எண்ணம் துளியும் இல்லை.
பேச்சுவாக்கில் உண்மையை சொல்லிவிட வந்தவளைத் தடுத்தவன், “நீ சொல்றதெல்லாம் நானும் யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன் தேவா. என் அம்மாவைப் பத்தியும் எனக்கு நல்லா தெரியும். எவ்ளோ கோபமும் எவ்ளோ அழுத்தமும் இருக்கோ அந்த அளவு அன்பானவங்க. எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு அவளோ தான். மத்தபடி வெறுத்து ஒதுக்கி வைக்கல. அந்த அளவு அவங்க நடந்துக்க மாட்டாங்க. அவங்க கூட பழகுனா அது உனக்கே புரியும். என் அன்பு சுத்தி இருந்து வர்ற கஷ்டத்தை என்னை நம்பி வந்தவளை பாதிக்காம தாங்கும்.” என்றவன், இன்னுமாக அவளை நெருங்கி மூச்சுப்பட நின்று, “என் அன்பு மட்டுமே போதும்ன்னு நினைக்கவும் வைக்கும்!” என்றான் தீவிரத்துடன்.
இதெல்லாம் மணப்பெண் அவளாக இருக்கப்போய் தான் மட்டுமே தவிர, வேறோரு பெண்ணிடம் இத்தனை அழுத்தம் இருக்காது என்று அவளுக்கும் புரிந்தது. அப்படி என்றால், அன்று காபி ஷாப்பில் பார்க்க சென்ற பெண்ணை இதே போல ஒப்புக்கொள்ள வைத்திருப்பான் தானே.
மனதில் குளுகுளுவென தென்றல் வீச, “உங்களை நம்புறேன்” என்றாள் அமர்த்தலாக.
“அப்போ கல்யாணத்துக்கு ஓகே வா?” கண்களில் வழியும் ஆர்வத்துடன் அவன் வினவ,
அதில் குதூகலித்தவள், “உடனே ஓகே சொன்னா, பெண்ணினம் என்னைக் காறி துப்பும் அமர். கொஞ்சம் பிகு பண்ணிட்டு நாளைக்கு ஓகே சொல்றேன்.” என்று இதழ் கடித்து புன்னகைக்க, செல்லமாய் முறைத்து வைத்தவனின் இதழ்களிலும் அதே புன்னகை தவழ்ந்தது.
“சரி, அப்போ நாளைக்கு நான் அப்பாவை அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு வரேன். கல்யாணத்தைப் பத்தி பேச.” என்றவனின் பார்வை அவள் மீது உரிமையாய் படர,
அதனை ரசித்தவள், “வரும் போது சாக்கோபார் வாங்கிட்டு வாங்க. எந்த ஒரு நல்ல விஷயம் பேசுறதுக்கு முன்னாடியும் ஐஸ்க்ரீம் சாப்பிடணும்ன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க.” என்றாள் குறும்பாக.
“ஐஸ்க்ரீம் மட்டும் தான் சாப்பிடணுமா?” கேலியாய் கேட்டவனின் விஷமப்பார்வை அவளது இதழ்களின் மீது தஞ்சம் கொள்ள, அது புரிந்து நாணிப் போனவள், “இப்போதைக்கு ஐஸ்க்ரீம் மட்டும் தான் சாப்பிடணுமாம்.” என்று வெட்கப்புன்னகையுடன் அவனைத் தள்ளி விட்டாள்.
அவளை ரசித்தபடி பின்னால் நகர்ந்தவன், “அப்பறம் இன்னொரு விஷயம். இப்போதைக்கு நடந்த எதுவும் என் வீட்டுக்கு தெரிய வேண்டாம்.” என்றதும், “என்ன அமர். கோர்ட்டு பிரச்சனையா?” என்றாள்.
“அதுவும், உன் கல்யாண விஷயமும்.” என்றதில், இரண்டாவது விஷயம் நடந்திருந்தால் தானே மறைப்பதைப் பற்றி வருத்தப்பட, அதனால் அதனை ஒதுக்கியவள்,
“ஆனா எப்படி அமர் இவ்ளோ பெரிய விஷயத்தை மறைக்கிறது. நாளை பின்ன ஆண்ட்டிக்கும் அங்கிளுக்கும் தெரிஞ்சா கஷ்டம்ல.
அதுவும் இல்லாம நம்ம கல்யாணத்துல ஆளுங்க அருவாளைத் தூக்கிட்டு வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லையே.” என்றாள் யோசனையாக.
“நான் பாத்துக்குறேன். இதை பிரீயா விடு.” என்றதில், எப்படியோ கல்யாணம் முதலில் ஆகட்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
—
லேப்டாப்பில் வேலையில் மூழ்கி இருந்த மிருணாளினியின் முன்பு நான்கு பழச்சாறு குவளைகள் வீற்றிருந்தது. ஆனால் எதையும் அவள் தொடக்கூட இல்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தயானந்தன், அவள் முன் கோபத்துடன் நிற்க, அவனையும் நிமிர்ந்து பார்த்தாளில்லை.
“ஜூஸை குடி மிருணா…” காட்டத்துடன் தயா கூற,
“பிடிக்கல!” என்றாள் மெதுவாக.
“ஜூஸை பிடிக்கலையா? இல்ல அதை நான் குடுத்துனால பிடிக்கலையா?” பல்லைக்கடித்து தயா கேட்டதில்,
“ரெண்டும் தான்” என்றாள் அவனைப் பாராமல்.
“உனக்குப் பிடிக்கலைன்னா பரவாயில்லை. என் பேபிக்கு குடு” என்று அவன் அழுத்தத்துடன் கூற சட்டென நிமிர்ந்தவள்,
“இது சுத்தமா பிடிக்கல. இது ஒன்னும் உங்க குழந்தை இல்ல தயா! ஆக்வார்டா என்னை பீல் பண்ண வைக்காத.” என்றதில் நக்கலாய் சிரித்தவன்,
“இதுல ஆக்வார்டா பீல் பண்ண என்ன இருக்கு நல்லி. முறைப்படி உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பா ஸ்தானத்துல இருக்குறதுக்கு எனக்கு எல்லா உரிமையுடன் இருக்கு” என்றதில் அவளுக்கு கோபம் அதிகரித்தது.
“உனக்கு இன்னும் விஷயம் தெரியலைன்னு நினைக்கிறேன். உன் அண்ணனும் தேவாவும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா முடிவு எடுத்திருக்காங்க. ஜஸ்ட் பியூ மினிட்ஸ் அகோ! அப்போ அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீ எனக்கு கட்டிக்கிற முறை ஆகிடுவ. உன் குழந்தைக்கு நான் அப்பாவாகிடுவேன். சிம்பிள்” என்று தோளைக் குலுக்கிட, அவ்ளோ விழி விரித்தாள்.
“நிஜமாவே அண்ணா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானா?” என்று வியப்பு மேலிட கேட்டவள், பின் முகம் சுருக்கி “சித்தப்பா முறை வேணாலும் ஆகலாம்.” என்றாள் திருத்தமாக.
“சித்தப்பாவோ பெரியப்பாவோ எல்லாமே அப்பா முறை தான நல்லி.” என அவளை சீண்டியதில், நொந்து போனாள்.
டேபிளில் கையை ஊன்றி அவள் முன் குனிந்த தயானந்தன், “உன்னை என்னைக்கு பார்த்தேனோ அன்னைல இருந்து உன்னை என் மனசுல சுமந்துட்டு இருக்கேன் நல்லி. என் காதலை உதறிட்டு நீ போனப்ப, வலிச்சுச்சு. காதலை மறைக்க பழகிட்டேன். ஆனா அதை கடந்து வர முடியல இப்போ வரை.
இப்ப கூட நீ ஹேப்பியா இருந்திருந்தா, உன்னை வெறும் ப்ரெண்டா மட்டும் தான் பாத்துருப்பேன். ஆனா, என் முன்னாடி நீ சந்தோஷத்தை தொலைச்சுட்டு நிக்கிறத கையாலாகாதத்தனமா பார்க்க முடியல நல்லி. பிகாஸ் உன்னை உண்மையா நான் விரும்புனேன். உன் வார்த்தைக்கு மதிப்பு குடுத்து தான் உன்னை விட்டு விலகிப் போனேன். அப்படி போயிருக்க கூடாதோன்னு இப்ப என்னை நானே செருப்பால அடிச்சுக்கணும்ன்னு தோணுது…” என தன்னை தானே அறைந்து கொண்டதில் அவள் கண்கள் பனிக்க அவசரமாகத் தடுத்தாள்.
பற்றிய அவனது கையை சட்டென விட்டு விட்டவள், “பைத்தியம் மாதிரி பேசாத தயா.” என அவனுக்கு புரிய வைக்க முயன்றவளின் வாயை ஒற்றை விரல் கொண்டு மூடியவன், “உன்னை சுமக்குற நெஞ்சுல இப்போ என் குழந்தையையும் சேர்த்து தான் சுமக்குறேன். என் காதலை உதாசீனப்படுத்து அதுக்கு உனக்கு உரிமை இருக்கு. ஆனா, இந்த குழந்தை மேல எனக்கு இருக்குற அன்பை கொச்சைப்படுத்தாத. அதை என்னால சுத்தமா தாங்க முடியாது.” என்றவன் விறுவிறுவென அங்கிருந்து சென்று விட, புயலடித்து ஓய்ந்தது போலொரு தோரணையில் இடிந்து போய் அமர்ந்திருந்தாள் மிருணாளினி.
எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, மீண்டும் அவளருகில் வந்த தயா தான், கையில் புதிய பழச்சாறை கொண்டு வந்து வைத்து, பழையதை அப்புறப்படுத்தினான்.
“இதையாவது எடுத்து குடிச்சுடு. எல்லாத்தையும் ஆறப்போட்டு குடிக்கிறது ப்ரயோஜனமே இல்லை.” என்றதில், அவள் விழிகளை மட்டும் நிமிர்த்தி பார்க்க, “நான் ஜூஸை சொன்னேன்.” என்றான் புருவம் உயர்த்தி.
“நானும் அதை தான் சொல்றேன் ஆறிப்போனத எப்பவும் புதுசாக்க முடியாது.” என அவள் தீர்மானமாய் கூறிட, அவன் முறைத்ததில் “நான் ஜூஸை சொல்லல.” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“ம்க்கும்… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆறி போச்சு ஆறாம போச்சுன்னுட்டு. மூடிக்கிட்டு எடுத்து குடிடி.” என்று கையை நீட்டி கடுப்புடன் அதட்ட, அதில் வேறு வழியற்று முகத்தை தொங்க போட்டுக்கொண்டு குடித்தாள்.
‘ஜூஸ்க்கே இந்த நிலைமைன்னா, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எல்லாம் என்னை ஜூஸா ஆக்கிடுவா போலயே’ என்று தனக்கு தானே பரிதாப்பட்டுக்கொண்டான் தயானந்தன்.
அத்தியாயம் 15
“அண்ணா தயா சொன்னது உண்மையா?” அலுவலத்தில் இருந்து தன்னை அழைக்க வந்த தமையனைக் கண்டதும் மிருணாளினி கேட்ட முதல் கேள்வி இதுவே.
அதில் மெல்ல புன்னகைத்த அமர மகரந்தன், “உனக்கு உண்மையா இருக்கணுமா பொய்யா இருக்கணுமா?” எனக் கேட்டதில், “ஐயோ அண்ணா… உனக்கும் தேவாவுக்கும் சூப்பர் பொருத்தம். ரொம்ப பாசிட்டிவான பொண்ணுண்ணா. அவள் எனக்கு அண்ணியா வர்றது எனக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு.” என்றவளுக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை.
“ஹே குதிக்காத மிரு. பாப்பா இருக்குல்ல” என்று அமர் அவளை ஆசுவாசப்படுத்த, “அட போண்ணா என்னால எக்ஸைட்மென்ட்டை கண்ட்ரோல் பண்ண முடியல. எவ்ளோ ஹேப்பி தெரியுமா?” எனக் கேட்டு அண்ணனைக் கட்டிக்கொண்டாள்.
பதிலற்று அவளது முகத்தில் தெரிந்த மகிழ்வைக் கண்டவனுக்கு நிறைவாய் இருந்தது. இதே போல அவளுக்கும் நல்லதொரு வாழ்க்கையை கூடிய சீக்கிரம் அமைத்து தர மனதில் உறுதி பூண்டு கொண்டவன், “சரி வா… வீட்ல இன்னைக்கு என்ன பூகம்பம் இருக்கோ” என தனது தாயை எண்ணிக் கூற, “அம்மாவை சமாளிக்கிறது தான் கஷ்டம்ன்னா. அதுவும் மத்த உண்மையெல்லாம் தெரிஞ்சா?” என அவள் தயங்க, “இப்போதைக்கு எதையும் சொல்ல வேணாம்டா. பாத்துக்கலாம்.” என்றான்.
“அதுவும் சரி தான். நீ நடந்ததை சொன்னா அம்மா இப்போதைக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. அவங்களை கன்வின்ஸ் பண்றதா? இல்ல அந்த கத்தி அருவாளோட வந்தவனுங்களை சமாளிக்கிறதான்னு டென்சன் ஆகிடும். முதல்ல அவங்க பிரச்சனையை எப்டியாச்சு சரி பண்ணனும்ண்ணா” என்றாள் வருத்தத்துடன்.
“ம்ம் கண்டிப்பா. அதை பத்தி தான் யோசிச்சுகிட்டே இருக்கேன். கல்யாணம் சீக்கிரமா முடியட்டும். அதுக்கு அப்பறம் அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சுடலாம்.” என்றதும் தான் சற்றே நிம்மதியாக உணர்ந்தாள்.
—
தேவஸ்மிதாவிடம் இருந்து வந்த தகவலை முதலில் தயானந்தன் நம்பவே இல்லை. “என்னடி சொல்ற… தட் பாடி பில்டர் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டானா? நீ ஆபிஸ்ல தூங்கி வழிஞ்சு கனவுல எதுவும் பேசலையே?” என சந்தேகத்துடன் கேட்க, “அடேய் அதெல்லாம் இல்லடா. தட் அமர காவியத்துக்கு என் மேல ஒரு இஸ்கு இஸ்குடா.” என்று தரையில் கோலம் போட்டாள்.
“ஹா ஹா ஹா… பிளேஷ்பேக் கேட்டா ஓடி தானடி போவாங்க. இவன் என்ன வாண்ட்டடா வந்து வெட்டுங்கடான்னு தலையை குடுக்குறான்.” என்று சத்தமாக சிரிக்க,
“ஹி ஹி இது தெரிஞ்சு இருந்தா, எப்பவோ இந்த பிளாஷ்பேக்கை சொல்லி கரெக்ட் பண்ணிருப்பேன்டா. தட் மீசை மாமாஸ் என் ஆளை கரெக்ட் பண்றதுக்கு தான் உதவி இருக்கானுங்க. அவனுங்க அடுத்து வந்தா, கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கணும்டா.” என்றாள் நக்கலாக.
“வாங்கிடுவோம். ஆனா எப்படிடி திடீர்ன்னு அவனுக்கு உன்மேல லவ் வந்துச்சு. ஐ காண்ட் பிலீவ் திஸ். அவன் தங்கச்சிய நானும் பல வருஷமா ரூட்டு விட்டேன். இப்போ வரை ஒன்னும் நடக்க மாட்டேங்குதே.” என்று பெருமூச்சுடன் கேட்க,
“ஹே… வாட் ஆர் யூ திங்கிங் அபவுட் மீ. நான் ஐஸ்வர்யா ராயவே அதிர விடுற அழகுடா.” என அவள் தற்பெருமையைக் கூற, “ஹலோ ஹலோ தேவா. சிக்கனல்ல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். வீட்டுக்கு வந்து உருட்டு.” என்று போனை வைத்து விட்டதில், “அட பன்னாடை” என்று போனையே முறைத்தாள்.
வீட்டிற்கு வந்தும் அவளது ஆட்டம் தாளவில்லை. “கல்யாணம் க க கல்யாணம்… எனக்கு கல்யாணம்” என்று பாடிக்கொண்டே அலைந்தவளின் மகிழ்வைக் கண்டு குடும்பத்தாருக்கும் மிக்க மகிழ்ச்சி.
திவ்யஸ்ரீ “எப்படிடி ஓகே வாங்குன?” என வியப்பாகக் கேட்க,
“அதெல்லாம் லவ் சீக்ரட் திவா. அது தெரிஞ்சு உனக்கு ஒரு யூசும் இல்ல. போ போய் உன் பிள்ளைக்கு டயப்பர் மாத்து. நான் போய் என் ஆளோட நைட் டூயட்க்கு என்ன காஸ்டியூம் போடுறதுன்னு செலக்ட் பண்றேன்.” என்று விசிலடித்தபடி செல்ல, “ம்ம்க்கும்… எவ்ளோ காஸ்டியூம் போட்டாலும் பியூச்சர்ல நீயும் இதே டயப்பரை தாண்டி மாத்தணும்.” என சிலுப்பிக்கொண்டாள்.
‘அதுக்கு தான் என் அமர காவியம் இருக்கே. நான் அவனைப் பாத்துப்பேன். அவன் என் பாப்பாவை பாத்துப்பான்.’ என கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
இரவோடு இரவாக ‘பேஸ் பேக்’ பூசிக்கொண்டவள், ‘ஆண்ட்டி என்ன சொன்னாங்கன்னு தெரியலையே? கால் பண்ணிக் கேட்போமா?’ என எண்ணும் போதே அவளது எண்ணத்தின் நாயகன் அவளை அழைத்தான்.
‘நூறு ஆயுசுடா.’ எனக் கொஞ்சியபடி போனை எடுத்தவள், “ஹலோ… என்ன ஆச்சு அமர். ஆண்ட்டிகிட்ட பேசுனீங்களா?” என சற்றே ஆர்வத்துடன் கேட்க, அவன் குரல் சோர்வாய் ஒலித்தது.
“ம்ம் பேசிட்டேன்”
“என்ன ஆச்சு வாய்ஸ் டல்லா இருக்கு?”
“ப்ச் அம்மா எப்பவும் போல தான். துக்கம் நடந்த வீட்ல ஒரு வருஷத்துக்கு விஷேஷம் நடக்கக் கூடாதுன்னு பினாத்துனாங்க. அப்பறம் எந்த கல்யாணத்துக்கும் மிருவும் போக கூடாதாம். இதெல்லாம் என்ன மூட நம்பிக்கையோ. ஒரு அளவுக்கு மேல கோபப்படக் கூட முடியல அவங்ககிட்ட.” என்றான் சலிப்புடன்.
“ரிலாக்ஸ் அமர். இப்போ கடைசியா என்ன முடிவு எடுத்துருக்கீங்க?” என நிதானமாகக் கேட்டாலும் அதில் ஒரு ஏமாற்றமும் தெளித்தது.
“என் முடிவ தான் ஆபீஸ்லயே சொல்லிட்டேனே. எடுத்த முடிவை அத்தனை சீக்கிரம் நான் மாத்திட மாட்டேன் தேவா. அடுத்த வாரம் கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கணும்ன்னு சொல்லிட்டேன். ஒரு கட்டத்துல அதை கூட அவங்க ஏத்துக்கிட்டாங்க. ஆனா, ‘மிரு கல்யாணத்துக்கு வரக்கூடாது. அவளும் நானும் வீட்ல இருக்கோம். நீங்க கோவில்ல சிம்பிளா கல்யாணத்தை வச்சுக்கோங்க’ன்னு சொன்னாங்க. அவங்க ரெண்டு பேரும் இல்லாம எப்படி கல்யாணம் பண்றது?” என ஆதங்கப்பட்டுக்கொண்டான்.
“சிம்பிளா மேரேஜ் பண்ணிக்கிறது ஓகே அமர். எனக்கும் இப்போதைக்கு க்ராண்டா பண்றதுல விருப்பம் இல்ல. ஆனா மிருவும் ஆண்ட்டியும் இல்லாம எப்படி? இதுக்கு மிரு என்ன சொன்னா?” எனக் கேட்க,
“அவள் என்ன சொல்லுவா. அம்மா சொல்றது சரி தான். நீ கல்யாணம் பண்ணுனா போதும். நான் வரணும்ன்னு அவசியம் இல்ல. நான் மட்டும் வீட்ல இருக்கேன்னு சொன்னா.” என்றான் வருத்தத்துடன்.
“அதெப்படி முடியும் அமர்?” அவளும் அதே வருத்தத்துடன் கேட்க, “ம்ம்… அப்படி எல்லாம் விட முடியாது. நீ வந்தே ஆகணும். அம்மா வேணும்ன்னா வீட்ல இருக்கட்டும்ன்னு சொல்லிட்டேன். அவள் ஒன்னும் பேசல. ஊஃப்!” என்றவனுக்கு மனமே பாரமாக இருந்தது.
“அப்போ நாளைக்கு?” என அவள் இழுக்க, “அப்பா வருவாரு. மிருவையும் தான் கூட்டிட்டு வரேன். உன் வீட்ல சொல்லிட்டியா?” எனக் கேட்க,
“ம்ம் சொல்லிட்டேன் அமர். எல்லாரும் ரொம்ப ஹேப்பி. நாளைக்கு ஆண்ட்டியையும் கூட்டிட்டு வர ட்ரை பண்ணுங்க அமர். சும்மா பேச தான வர்றாங்க.” என்று கூற, “ம்ம் சொல்லிப்பாக்குறேன். இல்லன்னா தூக்கி கார்ல போட்டுற வேண்டியது தான்.” என்று சிறு கேலியுடன் கூற அதில் அவளும் புன்னகைத்தாள்.
ஒரு நிமிடம் அமைதி தொடர, “வச்சுடவா?” எனக் கேட்டாள் அவள்.
அவனோ பதில் கூறாமல் அமைதி காக்க, அதில் அவளது புன்னகை மேலும் விரிந்தது.
“நாளைக்கு எப்போ வருவீங்க?” என தேவா கேட்டதில்,
“ஈவ்னிங் போல வரேன். மார்னிங் ஷோரூம்ல கொஞ்சம் ஒர்க் இருக்கு” என்றான்.
“ம்ம். டின்னர் இங்க பிளான் பண்ணுங்களேன்.” என்று கெஞ்சலாகக் கேட்க, “கல்யாணத்துக்கு அப்பறம் விருந்தே சாப்பிடலாம் தேவா.” என்றவன் “வச்சுடவா?” என்றிட, இப்போது அவளிடம் இருந்து கடும் அமைதி.
அதில் அமர் நளினமாய் புன்னகை பூக்க, “சரி சொல்லு. உனக்கு என்ன கலர் புடவை வேணும் கல்யாணத்துக்கு” எனக் கேட்டதும், மலர்ச்சியுடன் “ம்ம்… புல்லா ரெட் வித் கோல்ட் ஜரிகை வச்ச மாதிரி எடுக்கலாம் அமர். தயாவும் மிருவும் கல்யாணம் பண்ணுனதும் ஒண்ணா ரிசப்ஷன் வைக்கலாம். அதுல க்ராண்டா பண்ணிடலாம்.” என்று ஆர்வத்துடன் திட்டமிட, “உத்தரவு மகாராணி…” என்றான் ரசனையுடன்.
அக்கூற்றில் வெட்க ரேகைகள் அவள் கன்னங்களை கோடிழுக்க, “அப்பறம்” எனக் கேட்டான்.
“அப்பறம்… கோவில்ல கல்யாணம் வைக்கிறனாள அன்னைக்கு வெஜ் போட்டு ஏமாத்திடுவீங்க. அதனால ரிஸப்ஷன்க்கு கம்பல்சரி நான் வெஜ் தான் ஓகே வா?” என்று கட் அண்ட் ரைட்டாக கூற, வாய்விட்டு சிரித்து விட்டான் அமர்.
இருவரும் என்ன பேசினரென்று அவர்களுக்கே தெரியவில்லை. ஏதேதோ பேசி பின், தேவஸ்மிதா தூக்க கலக்கத்தில் கொட்டாவி விடும் போது தான், “வச்சுடவா தேவா?” என மீண்டும் கேட்டான். அவளோ பதில் சொல்லாம இருக்க, முறுவலுடன் “போய் தூங்குடி. நாளைக்கு பார்க்கலாம். குட் நைட்” என்று அவனாக வைக்க, மனமில்லாமல் அவளும் அழைப்பைத் துண்டித்தாள்.
மறுநாள், வீம்பு பிடித்த சிந்தியாவையும் பிடித்து இழுத்து வந்து விட்டனர் பெண் கேட்பதற்கு.
அமர் வீட்டினரை சந்தோஷமாக தேவஸ்மிதாவின் குடும்பம் வரவேற்றது. சிந்தியாவிற்கு முழு மனது இல்லையென்றாலும் முகத்தில் விருப்பமின்மையைக் காட்டிக்கொள்ளவில்லை.
ஏற்கனவே தேவஸ்மிதாவின் மீதிருந்த சுணக்கமும் ஒரு காரணம் தான்.
மகனுடன் மேலும் மல்லுக்கட்ட விருப்பமின்றி, துர்காவுடன் இயல்பாக பேசிக்கொண்டார். திவ்யஸ்ரீயிடம் நலம் விசாரித்தவர், “குழந்தை ராத்திரி தூங்க விடுறானா?” என விசாரிக்க, மகேஷ் குழந்தையை கையில் வைத்தபடி, “தூக்கமா அது எங்க கிடைக்கும் ஆண்ட்டி” என்று பரிதாபமாகக் கேட்டான்.
“கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும் தம்பி” என்று சிரித்தபடி கூறிய சிந்தியா, மதியை கையில் வாங்கி, பிஞ்சுக்கைகளில் இரண்டாயிரம் நோட்டை வைத்திட, “எதுக்கு ஆண்ட்டி இதெல்லாம்” என்று திவ்யஸ்ரீ மறுத்தாள்.
“இருக்கட்டும்மா. அவசரத்துல நான் எதுவும் வாங்கிட்டு வரல. அட்லீஸ்ட் பொண்ணு பாத்து பேசுற நேரமாவது நல்ல நேரமா இருக்கட்டும்னு வேகமா வந்தாச்சு: என்றிட, அங்கு வந்த தயானந்தன் தன்னவளைக் கண்டு விழிகள் மின்னியதில், அவள் அவனைப் பாராமல் தரையில் விழிகளை புதைத்திருக்க, தயாவோ சிந்தியாவிற்கு பதில் கூறினான்.
“என் ட்வின்ன பாக்க வர்ற எல்லா நேரமும் ராகு காலம் தான்” என்று கடிக்க, ‘நீ வேற ஏண்டா’ என்ற ரீதியில் அமர் முறைத்து வைத்தான்.
“ஹி ஹி… ஒரு புளோவே இருக்கேன்னு சொன்னேன்” என்றதில், “மூடு” என சைகை காட்டிய அமரின் நயனங்கள் தன்னுடைய நாயகியை வீடெங்கும் அலசியது.
“திவா, தேவாவை கூட்டிட்டு வா.” என்று துர்கா கூற, “நான் தான் கூட்டிட்டு வருவேன்” என்று தயா அவளது அறைக்குச் சென்றான்.
ரோஸ் பவுடரை முகத்தில் அடித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு, “எவ்ளோ பெயிண்ட் அடிச்சாலும் நீ வெள்ளையாக போறது இல்லை. அப்பறம் ஏன் இந்த வீண் முயற்சி.” என்று வாரினான்.
“உன்னை விட அழகா இருக்கேன்னு பொறாமைடா உனக்கு. சரி இப்ப நான் என்ட்ரி கொடுக்கவா?” எனக் கேட்டு வேகமாகக் கதவை நோக்கி நடக்க, அவளைத் தடுத்த தயா, “என்னடி இப்படி நடந்து வர்ற?” என்றான் கடுப்பாக.
“ஏண்டா என் நடைக்கு என்ன?” என்று அவள் குழப்பமாகக் கேட்க, “உன்னைப் பொண்ணு பார்க்க வந்துருக்காங்கடி. கொஞ்சம் பொறுமையா வெட்கத்தோட, அன்ன நடை போட்டு நடந்து வர்றதை விட்டுட்டு என்னவோ உன்னை அழகு போட்டிக்கு நடக்க சொன்ன மாதிரி நடந்து போற. உன் மாமியார் சாரி சாரி நம்ம மாமியார் வேற பேசுறதுக்கே நல்ல நேரம் பாக்குற ஆளா இருக்கு. நம்மகிட்ட வாக்குப்பட்டு என்ன அவஸ்தை பட போகுதோ. அட்லீஸ்ட் கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடிக்கவாவது செய்டி” என்றான்.
“அட போடா… நானே என் ஆளைப் பாக்க அவசரமா போயிட்டு இருக்கேன் என்னை நிறுத்தி அட்வைஸ போட்டுட்டு இருக்கான்” என்றவள், விறுவிறுவென வெளியில் சென்று “ஹாய் அங்கிள் ஹலோ ஆண்ட்டி. ஹே மிரு” என எல்லாருக்கும் ஹலோ சொல்லிக் கொண்டு இருந்ததில், அமர் அவள் மீதிருந்த பார்வையை அகற்றவே இல்லை.
மகேஷ் தான், “ம்ம்க்கும் உன் தங்கச்சி போன்ல சொல்ல வேண்டிய ஹலோவை எல்லாம் நேர்ல சொல்லி, அந்த அம்மாவை டென்சன் பண்ணிட்டு இருக்கா திவா” எனக் கேலி செய்ய, “சும்மா இரு மகி” என கடிந்தவள், “அடியேய்… பல்லை இளிச்சுட்டு நிக்காத.” என்று கிசுகிசுப்புடன் அதட்டினாள்.
துர்கா தான், ‘இவளை வச்சுக்கிட்டு’ என்று பல்லைக்கடிக்க, பூபாலன் சிரிப்பை அடக்கிக்கொண்டு “உட்காரும்மா” என்றிட, அவள் நேராக மிருணாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
ஏற்கனவே மிருணாவும் அமரும் அவள் வந்த தோரணையை எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள, சிந்தியா மகனை முறைத்தார்.
நெறிவாணன் தான், நிலையை சமன்செய்யும் பொருட்டு, திருமணத்தைப் பற்றி பேச, தேவஸ்மிதாவும் அமர மகரந்தனும் கண்களாலேயே பல காதல் ரகசியம் பேசிக்கொண்டனர்.
இங்கு, தயா பிரஷாந்திடம் தான் மகிழ்வாகப் பேசிக்கொண்டிருந்தான். “டேய் அடுத்த வாரமாச்சு வாடா. தேவாவோட கல்யாணம் இருக்கு” என்றதும், “கண்டிப்பா அவள் கல்யாணத்துக்கு நான் இல்லாமலா?” என்றான் தீர்மானமாக.
உயிர் வளரும்
மேகா
❤️❤️❤️அருமையான பதிவு