Loading

தீரஜை முதன் முறை சந்தித்த தினத்தை கண்ணீருடன் எண்ணிய சஹஸ்ராவிற்கு ஆதங்கம் தாளவில்லை.

தன் வீட்டிற்குள் நுழைந்து தன்னிடம் அத்து மீறி விடுவானோ என்ற பயத்தில் அல்லவா அவள் தீரனை அவசரமாக திருமணம் செய்து கொண்டாள்.

இன்றோ! அவள் வாழ்க்கையினுள்ளேயே அனுமதியின்றி நுழைந்து, அவளின் ஒட்டு மொத்த நேசத்தையும் இத்தனை நாட்கள் அனுபவித்த காதல் இன்பத்தையும் கேள்விக்குறி ஆக்கி விட்டானே!

இதற்கு அவன் என்னை கொன்றே போட்டிருக்கலாம்… என்ற பரிதவிப்பில் மனம் வெந்தாள்.

அப்போது தான் அவள் அறைக்குள் வந்த தேவிகா, கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த தோழியைக் கண்டு பதறினாள்.

“சஹா… என்ன ஆச்சு. ஏன் இப்படி அழுதுட்டு இருக்க?” பதற்றத்துடன் வினவிய தேவிகாவைக் கண்டதும், மெல்ல அடங்கிய அழுகை மேலும் வலுப்பெற்றது.

“தேவ்…” என அவளைக் கட்டிக் கொண்டவள், “நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன் தேவ். ஏன் எனக்கு இப்படிலாம் நடக்கணும். என் அப்பா கூடவே நானும் போய்ருக்கணும் தேவ்.” என்றே தேம்பிட, சற்றே அதிர்ந்த தேவிகா தான்,

“என்ன பேசுற சஹா. முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு. அண்ணாவுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டாள்.

“அண்ணவாம் அண்ணா. அவன் ஒரு ஃபிராடு தேவ். என்னை ஏமாத்திட்டான்.” என்று சீறியவள் நடந்ததை உரைத்தாள், தீரனுக்கும் அவளுக்கும் நிகழ்ந்த ஒப்பந்த திருமணத்தை மட்டும் மறைத்து விட்டு.

தேவிகாவிற்கு சிறிது நேரம் பேச்சே எழவில்லை. அவிழ்க்க இயலாத சிக்கலில் அல்லவா இவள் வாழ்க்கை சிக்கி இருக்கிறது என எண்ணும் போதே, நெஞ்சத்தில் அத்தனை வேதனை பொங்கியது.

கூடவே, தீரஜின் மீதும் நிக்கோலஸ் மீதும் கோபம் பொங்கி வழிய, “இவனுங்கள சும்மா விடக் கூடாது சஹா. போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி உள்ள தள்ளணும்.” என்றாள் சினத்துடன்.

“கம்ப்ளைண்ட் செஞ்சு? கூட கொஞ்சம் அசிங்கப்படவா? ப்ச்… தல சுத்துது தேவ்.” என்றவளின் முகத்தில் அத்தனை சோர்வு.

சில நிமிட அமைதிக்குப் பின், “தேவ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா?” எனக் கேட்டாள் சஹஸ்ரா.

“இதை செய்னு ஆர்டர் போடாம, என்னடி ஹெல்ப் அது இதுன்னு பேசுற.” என வருந்திய தேவிகாவிற்கு ஆற்றாமை தாளவில்லை.

இறுகிய விழிகள் இலக்கின்றி எங்கோ வெறித்திருக்க, “நானும் சவியும் தங்க ஒரு வீடு வேணும். ஈவினிங்குள்ள ரெடி பண்ணி தர முடியுமா?” என்றிட,

“வீடுலாம் அரேஞ்ச் பண்ணிக்கலாம் சஹா. நீங்க ரெண்டு பேரும் என் வீட்ல இருங்க. பொறுமையா பாக்கலாம்.” என சொல்லி முடிக்கும் முன், “உன்னால முடியாதுன்னா விட்டுடு. நான் பாத்துக்கிறேன்” என முகத்தில் அடித்தது போல கூறி விட, தேவிகாவிற்கு என்னவோ போல் ஆகி விட்டது.

“ஏண்டி யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுற.” எனக் கண் கலங்கியவள், அவளின் மன அழுத்தத்தை உணர்ந்து கொண்டு, “உடனே வீடு ரெடி பண்றேன்.” என்றபடி வெளியில் சென்றாள்.

வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள். அடுத்து என்ன செய்வது? நிகழ்ந்த சூறாவளியில் இருந்து எப்படி வெளிவருவது என்ற கேள்விகளுக்கு விடை புரியவில்லை என்றாலும், இனி ஒரு நொடி கூட அவன் மூச்சுக்காற்று தன் மீது படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

இறந்த கணவனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்த விடாமல் செய்து விட்டானே! இவனென்ன மனிதன். இப்போது நினைத்தால் கூட தீரனுக்காக அழத் தோன்றவில்லையே. இந்த அளவுக்கா உடலும் மனமும் அவனிடம் அடிபணிந்து இருந்து இருக்கின்றது! எனத் தீயாய் கனன்ற உள்ளத்தை முயன்று சமன் செய்தவளுக்கு, அடுத்த அரை மணி நேரத்தில் தேவிகா போன் செய்தாள்.

“வீடு ரெடி பண்ணிட்டேன் சஹா. நீ ஒரு தடவ வந்து பாக்குறியா?” என்க,

“வேணாம். நான் திங்ஸ் ஓட வந்துடுறேன்.” என்றவள், சவிதாவின் பள்ளிக்கு சென்று பாதியிலேயே அழைத்துக் கொண்டாள்.

அவளோ, “எதுக்குக்கா இப்படி பாதில கூட்டிட்டு வர்ற? எங்க போறோம்.” என பல முறை கேட்டும் அவளிடம் பதில் இல்லாது போக, நேராக தீரஜின் வீட்டிற்கு சென்றாள்.

உள்ளே நுழைந்ததும், அவனுடன் இழைந்த நிமிடங்கள் தேவையற்று நினைவு வர, தன்னையே மானசீகமாக அறைந்து கொண்டவள், சவியிடம் திரும்பி, “உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணு.” என்றாள்.

“வாவ். நம்ம மறுபடியும் டூர் போறோமாக்கா?” அவள் விழி விரித்துக் கேட்க, கேரளா டூர் நினைவில் ஆடி அவளை அலைக்கழித்தது.

முணுக்கென்று நீர் கோர்த்த கண்களை அவளறியாமல் துடைத்த சஹஸ்ரா, “டைம் வேஸ்ட் பண்ணாம, உன் எல்லா திங்க்ஸயும் பேக் பண்ணு சவி. நம்ம வேற வீட்டுக்கு போறோம்.” என்றவள், மேலும் வளவளக்காமல், அவள் அறைக்கு செல்ல கால்கள் துவண்டது.

எதைப் பற்றியும் சிந்திக்க மனம் வராமல், அவனுடன் கூடிக் கழித்த படுக்கையை பார்க்க சகிக்காமல், பெட்டியை எடுத்து அனைத்தையும் அடுக்கத் தொடங்கினாள்.

இங்கு சவிதாவோ தீவிர சிந்தனையில் இருந்தாள்.

‘வேற வீட்டுக்கு போறோம்ன்னு மாமா என்கிட்ட சொல்லவே இல்ல.’ என யோசித்தவள், சில நாட்களுக்கு முன் அவளுக்காக அவன் வாங்கிக் கொடுத்த அலைபேசியில் இருந்து தீரஜிற்கு அழைத்தாள்.

அதை வாங்கிக் கொடுக்கும் போதே சஹஸ்ரா அவனைக் கடிந்தாள். “இந்த வயசுல அவளுக்கு எதுக்கு போன் தீரா?” என்று.

“வீட்ல இருக்கும் போது ஒரு எமர்ஜென்சிக்கு தேவைப்படும் சஹி.” என்றவன், பள்ளிக்கு எடுத்து செல்லக் கூடாது என்ற உத்தரவுடன் தான் கொடுத்தான்.

இப்போது சவிதாவிடம் இருந்து அழைப்பு வந்ததில் புருவம் சுருக்கியவன், “சவி… போனை ஸ்கூலுக்கு எடுத்துட்டுப் போய் இருக்கியா என்ன?” எனக் கேட்டான்.

“ஐயோ மாமா. நான் ஸ்கூல்லயே இல்ல. வீட்டுக்கு வந்துட்டேன். அக்கா தான் அவசரமா கூட்டிட்டு வந்தா. ஆமா நம்ம வேற வீட்டுக்கு போக போறோமா மாமா.?” என உளறி வைக்க, அவனோ அதிர்ந்தான்.

அவள் ஏதோ திட்டத்துடன் இருப்பதை உணர்ந்தவன், அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டில் இருக்க, அறைக் கதவில் சாய்ந்து கையைக் கட்டியபடி பையில் துணியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளை அமைதியாகப் பார்த்திருந்தான்.

அவனிடம் இருந்து வரும் பிரத்யேக பெர்ஃப்யூம் வாசனையே அவன் வரவை அவளுக்கு உணர்த்தி இருக்க, அவ்வாசம் நாசியில் நுழையாதவாறு மூச்சை அடக்கினாள்.

கண்களோ அவன் இருக்கும் திசைக்கே திரும்பவில்லை.

அவளைப் பார்த்தபடியே மெல்ல அடி எடுத்து வைத்த தீரஜ், அடுக்கப்பட்டிருந்த துணிகளை அள்ளி கீழே போட்டான்.

அதில் மூக்கு விடைக்க அவனை முறைத்த சஹஸ்ரா, கீழே விழுந்த துணிகளை மீண்டும் எடுத்து பையில் திணிக்க, தீரஜோ வலுக்கட்டாயமாக மீண்டும் அத்துணிகளை எடுத்து காலில் போட்டு மிதித்தான்.

அவனிடம் வாக்குவாதம் கொள்ள முற்றிலும் விருப்பமற்றவள், கைப்பையில் தேவையான பொருட்களை எடுத்து வைக்க, அதனையும் பிடுங்கி தூக்கி எறிந்தான்.

அத்தோடு பொறுமை இழந்தவள், “உனக்கு அவ்ளோ தான் லிமிட். என் கண்ணு முன்னாடி வராத.” என விரல் நீட்டி எச்சரித்து, கீழே விழுந்த கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது.

அவளிடைகள் அவன் இருகைகளின் வசம் இருக்க, “விடுடா என்னை… பொறுக்கி விடுடா.” என்று அவன் நெஞ்சிலேயே படபடவென அடித்தாள்.

எதற்கும் அசையாமல் கல் போல் நின்றவன், அதற்கு மேல எதிர்க்க இயலாமல் சோர்ந்து மூச்சு வாங்கியவளின், கலைந்த கேசத்தை காதோரம் ஒதுக்கினான்.

வெடுக்கென அதையும் தட்டி விட்டவள், “இன்னொரு தடவ என் மேல கை வச்ச…” எனக் கோபத்துடன் கூற,

அவனோ மெல்ல இதழ் விரித்து, “என்ன பண்ணுவ பிரின்ஸஸ்?” என்றான் அவனுக்கே உரித்தான கிசுகிசுப்பான குரலில்.

“என் கையை உடைச்சுடுவியா?” நக்கலுடன் அவன் கேட்க, சஹஸ்ரா மௌனமாக நின்றாள்.

“இல்ல என் தலையை வெட்டிடுவியா? ம்ம்? ” கேட்டபடி அவள் நெற்றியில் முட்ட, முகத்தை பின்னால் நகர்த்தியவள்,

“என்னை நானே எரிச்சுக்குவேன். அப்பறம் நீ என் சாம்பலை தான் தொடணும்.” என நிதானமாகவே அவன் மீது அமிலத்தை ஊற்ற, மறு வினாடியே அவள் மேனியில் படர்ந்திருந்த கரங்களை பின்னிழுத்திருந்தான்.

முகத்தில் கோப ரேகைகள் தாண்டவமாட, கையை இறுக்கி மூடி அதனை அடக்கியவன், “எங்க போற?” என்றான் உணர்வற்ற குரலில்.

“அது உனக்கு தேவை இல்ல. நான் எங்கயோ போறேன். அதை கேட்க உனக்கு எந்த ரைட்ஸ் – உம் இல்ல.” என பதில் அளிக்க,

“ரைட்ஸ்?” கேட்டபடி ஒற்றைப் புருவத்தை திமிராக உயர்த்தியவன், அவள் விழிகளை ஊடுருவிட, சட்டென பார்வையை திருப்பினாள்.

பாவையின் முன் சொடுக்கிட்டவன், அவளின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை சுட்டிக் காட்ட, அவனை உறுத்து விழுத்தவள்,

“என்னை ஏமாத்தி நீ கட்டுனதுக்கு பேர் தாலின்னா இது எனக்கு வெறும் செயின் மட்டும் தான்.” என அசட்டையாக அதனை கழட்டி எறியப் போனவளை தடுத்தான் தீரஜ்.

கண்களில் சீறல் மின்ன, “வேணாம் சஹஸ்ரா, என் பொறுமைய சோதிக்காத” என்றான் பல்லைக் கடித்து.

“என்னடா ஏதோ முறையா கல்யாணம் செஞ்சு, உண்மையா வாழ்ந்த மாதிரி கோபப்படுற…” அவள் தொனியில் நக்கல் தெறித்தது.

அதே நக்கல் அவன் முகத்தில் மிதக்க, “அஃப்கோர்ஸ் கோபப்படுவேன் சஹஸ்ரா. உனக்கு நீயே கட்டிக்கிட்ட தாலிக்கே நீ அவ்ளோ இம்பார்டன்ஸ் குடுத்தப்போ, என் சுயநினைவோட, உன்னை மட்டும் மனசுல நினைச்சு, உன் சம்மதத்தோட கட்டுன தாலிக்கு நான் இம்பார்டன்ஸ் குடுக்குறதுல தப்பு இல்ல” என்றான் அழுத்தமாக.

சஹஸ்ராவின் முகமோ அதிர்ந்திருந்தது. தனக்கும் தீரனுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரிந்தது? என்ற திகைப்பில் ஆழ்ந்து இருந்தவள், கீழுதட்டைக் கடித்தாள்.

அவர்களின் ஒப்பந்த திருமணம் நடைபெறுகையில் தீரஜ் இந்தியாவிலேயே இல்லை.

தீரனும் அவளையே தாலி கட்டிக் கொள்ளக் கூறுவான் என்று அவளும் எண்ணவில்லை. இருவருக்குள்ளும் எந்த உறவும் இருக்காது என்றவன், முறையாக திருமணமாவது செய்திருக்கலாம் என்ற உறுத்தல் இருந்தது என்னவோ உண்மை தான். பின், பதிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டதும் தான் சற்று நிம்மதி வந்தது.

எப்படி இருந்தாலும் சட்டப்படி அவள் தீரனின் மனைவி தானே.

அதில் தீரஜை கண்கள் சுருக்கி முறைத்தவள், இதையே திருப்பிக் கூற, அவனோ வாய் விட்டு சிரித்தான்.

“சட்டப்படி? நீ கையெழுத்து போட்டுட்டா உடனே சட்டப்படி கல்யாணம் ஆகிடுமா?” தோளைக் குலுக்கி அவன் கேட்டிட,

“பின்ன ஆகாதா?” அவளும் வீம்பாக நின்றாள்.

அதற்கு பதில் கூறாமல், சில நொடிகள் அவளையே பார்த்தவன், வார்த்தைகளை உள்ளுக்குள் அடக்கி, “லீவ் இட். இப்ப நீ என் வைஃப் சஹஸ்ரா. உன்னை என்னை விட்டு போக நான் அலோ பண்ண மாட்டேன்.” என்றான் உறுதியாக.

“உனக்கு வெட்கமாவே இல்லையா? உன் அண்ணனோட வைஃப் நான். அவரோட பத்து நாள் வாழ்ந்து இருக்கேன். நீ என்னை ஏமாத்தி என் வாழ்க்கையவே அழிச்சுருக்க. ஆனா கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம வைஃப்ன்னு சொல்ற…” என்றவளின் முகம் அருவருப்பில் சுருண்டது.

“எனக்கு வெட்கமா இல்ல. அட் த சேம் டைம், ஒரு நிமிஷம் கூட நீ அவனுக்கு பொண்டாட்டியா இல்ல. ஐ மீன், சட்டப்படியும் சரி, முறைப்படியும் சரி உனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகல. அப்படி இருக்கும் போது உன்னை என் பொண்டாட்டின்னு சொல்ல நான் வெட்கப்பட தேவை இல்ல சஹஸ்ரா.

அண்ட், நீ விரும்புனது என்னை, வாழ்ந்தது என் கூட… அப்படி இருக்கும் போது உன்னை என் வைஃப்ன்னு சொல்றதுல எனக்கு எந்த வெட்கமும் இல்ல.” தீரஜ் தீர்க்கமாக கூறி முடிக்க,

“உளறாத. எனக்கும் தீரனுக்கும் சட்டப்படி கல்யாணம் ஆனது உண்மை. நான் கூட வாழ்ந்ததும், விரும்புனதும் தீரனை தான். உன்னை இல்ல.” என்றாள் எகத்தாளமாக.

அவன் முகமோ அதிகப்படியான கோபத்தைக் கொண்டிருந்தாலும் அதில் பலவித வலிகளும் கலந்து இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தாலும், அவளால் அவனை சிறிதளவு கூட ஏற்க இயலவில்லை.

பின் அவளே ஏதோ நினைவு வந்தது போல, “வெயிட். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன, மனசுல என்னை மட்டும் நினைச்சு தாலி கட்டுனியா?” எனக் கேட்கவள்,

விரக்திப் புன்னகை பூத்து, “இந்த பொய்யை எத்தனை பொண்ணுங்ககிட்ட சொன்ன. அன்னைக்கு ஆபிஸ்ல கூட ஒட்டிக்கிட்டு வந்தியே அவள் ஒருத்தி, அப்பறம், என் அக்கா.

என்னை தொடும் போது கூட அவளை காதலிச்சது உனக்கு நெருடலைல. உனக்குலாம் மனசு, காதல் ஒரு கேடு.” என வாய்க்கு வந்தபடி திட்டிய சஹஸ்ராவின் காய்ந்த கண்கள் கண்ணீரை பரிசளித்தது.

“உன்னால தான்டா… என் வாழ்க்கைல இவளோ பிரச்சன. உன்ன மட்டும் பாக்காம இருந்துருந்தா, நீ என் அக்காவை கல்யாணம் பண்ணிக்க போகாம இருந்துருந்தா, நான் உன் அண்ணனை கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன். பொறுக்கி. யார்கிட்ட இருந்து தப்பிக்கணும்ன்னு நினைச்சேனோ, அவன்கிட்டயே என்னை…” மேலும் பேச முடியாமல் கேவியவள்,

“இனிமே என் மூஞ்சில முழிக்காத.” என்று கடிந்து விட்டே அங்கிருந்து நகர, அவனோ திக்பிரம்மை பிடித்தவன் போல நின்றிருந்தான். கணமான பாறை ஒன்று நெஞ்சில் மோதியது போன்றதொரு வலி உயிரை பிய்த்தது.

பின், பொறுமையாக தன்னை தானே தேற்றியவன், வேகமாக நிக்கோலஸ்ஸிற்கு போன் செய்தான்.

“நிக்… எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு தான. இல்ல இன்னும் எதையாவது மறந்துட்டேனா?” எனக் கேட்டவன் பின்னந்தலையை கோதினான்.

“ஆக்ஸிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடி வரை எல்லாமே ஒண்ணு விடாம சொன்னியே மச்சி. அப்பறம் என்ன?” என்றவனுக்கும் புரியவில்லை.

“ம்ம்” என ஏதோ சிந்தித்தவன், போனை அணைத்து விட்டு, சஹஸ்ராவின் பின் சென்றான்.

“சவி கிளம்பிட்டியா?” என்று சவிதாவின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தவளை முறைத்தவன்,

“எனக்கு எல்லாம் மறந்தப்ப உன்னை லவ் பண்ணுனேன்னு சொன்ன, இப்ப எல்லாம் ஞாபகம் வந்ததும் உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்க போனேன்னு சொல்ற… உன் மனசுல என்னடி நினைச்சுட்டு இருக்க.” என்று எகிறினான்.

“போதும் உன் நடிப்பை இதோட நிறுத்திக்க.” என அவள் பேசும் போதே, சவிதா வந்து விட, “எங்கக்கா போறோம்?” என அவள் மீண்டும் ஆரம்பித்தாள்.

சஹஸ்ரா பதில் கூறும் முன்னே, “எங்கேயும் போகல சவி. நீ உள்ள போ.” என்றதும், ” நம்ம இங்க இருந்து போறோம் சவி.” என்றாள் சஹஸ்ரா.

தீரஜ், சினத்தை உள்ளுக்குள் அடக்கியபடி, சவிதாவின் கையில் இருந்த பையை பிடுங்கி, “நீ உள்ள போ சவி. நான் பாத்துக்கிறேன்.” என்றதில் அவள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

சஹஸ்ராவோ, “உனக்கு என்ன பிரச்சனை. எங்கள விட போறியா இல்லையா?” எனப் பல்லைக் கடித்தாள்.

இருவருக்கும் இடையில் ஏதோ சண்டை என்று உணர்ந்த சவிதா வெளிறி விழிக்க,

அவனோ, “உன் அக்காவுக்கு என் கூட சண்டை போடலைன்னா பொழுதே போகாது சவி. ஆஃப்டர் ஆல் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி தரலைன்னு கோச்சுக்கிட்டு வீட்ட விட்டு போறா.” என முயன்று புன்னகைத்தவன்,

“உன் அக்காவுக்கு நான் ஐஸ் குடுத்து சமாதானம் பண்றேன். நீ போ.” என்று கண்ணைக் காட்ட, அதனை உண்மை என்று நம்பிய சவிதாவும், “சே இதுக்கு தான் இவளோ பில்ட் – அப் குடுத்தாளா.” என தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

நடப்பதை புரிந்து கொள்வதற்குள், சஹஸ்ராவை தரதரவென அவன் அறைக்கு இழுத்துச் சென்றான் தீரஜ்.

அதாவது, அவனின் உண்மையான அறைக்கு. சுவற்றில் ஆங்காங்கே தீரஜின் புகைப்படம் இருக்க, அவனின் விருப்பத்திற்கு ஏதுவாக, லாவண்டர் நிற வண்ணப்பூச்சும்,  அதற்கு ஏற்றாற் போல உள் அலங்காரங்களும் இருக்க, எதையும் நிமிர்ந்து பார்க்க விருப்பமற்று வாசலிலேயே நின்றாள் சஹஸ்ரா.

இன்னும் அவள் உள்ளே வராததை உணர்ந்த தீரஜ், “வெல்கம் டூ அவர் ரியல் ப்ரைவேட் ஸ்பேஸ் சஹி…” என பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து அழைக்க, நிமிர்ந்து முறைத்தவள்,

“எனக்கு இங்க இருக்க பிடிக்கல நான் போறேன்.” என்றாள் பிடிவாதமாக.

ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன், அவளை வலுக்கட்டாயமாக அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டினான்.

சட்டையின் கைப்பகுதியை மடித்தபடி, அவள் முன் நெருங்கி நின்றவன், “இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இங்க இருந்து போகணும்ன்னு நினைச்ச, நேரா உன்ன பரலோகத்துக்கே அனுப்பிடுவேன். உன்னை மட்டும் இல்ல, உன் தங்கச்சியையும் சேர்த்து தான்…” என மிரட்டியவனை அரண்டு பார்த்தாள்.

“இன்னொரு தடவை என்னை கேட்காம இங்க இருந்து கிளம்பணும்ன்னு முடிவு எடுக்க மாட்டன்னு நம்புறேன்.” அடிக்குரலில் சீறியவன், புயலாக அங்கிருந்து சென்றான்.

‘நான் மாட்டியதும் இல்லாமல், தாயுடன் இருந்த தங்கையையும் சேர்த்து அல்லவா இக்கட்டில் மாட்டி விட்டு விட்டோம்.’ என நொந்தவளுக்கு, வேதனையே பொங்கியது.

அன்று முழுதும், தீரஜும் வீட்டிற்கு வரவில்லை. மறுநாள், சவிதாவை பள்ளிக்கு அனுப்பி விட்டு, மனமே இல்லாமல் அலுவலகம் சென்ற சஹஸ்ராவை திகைப்பூட்டும் விதமாக அவளின் அறையில் ரோலிங் சேரில் சுற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான் தீரஜ்.

அவனுக்கு எதிரில் நிக்கோலஸ் பாவமாகவும், தேவிகா இருவரையும் முறைத்தவாறும் நிற்க, “நீ எதுக்கு இங்க வந்த?” எனக் கேட்டுக் கொண்டே வந்த சஹஸ்ராவை, அனலாக சுட்டவன்,

“இதான் ஆபிஸ்க்கு வர்ற நேரமா?” என்றான் அதிகாரமாக.

அவளுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ஹலோ, இது என் ஆபிஸ். இங்க நான் எப்ப வேணாலும் வருவேன். முதல்ல எந்திரிச்சு வெளிய போறீங்களா?” ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவள் கூற,

“லுக் சஹஸ்ரா, இது உன் ஆபிஸ் மட்டும் இல்ல. இங்க நடக்குற லாப நஷ்டத்தில எனக்கும் பங்கு இருக்கு. ஐ ஆம் ஆல்சோ ஒன் ஆஃப் த பார்ட்னர். மைண்ட் இட்.” என்றான் அவளுக்கு நினைவு படுத்தும் விதமாக.

“நீ மைண்ட் பண்ணுடா. நான் பார்ட்னர்ஷிப் வச்சுக்கிட்டது உன் கூட இல்ல. தீரன் கூட.”
அவளும் கோபத்தில் மூச்சு வாங்கினாள்.

“எஸ். அப்சொலியூட்லி. ஆனா, நீ சைன் பண்ணுன பார்ட்னர்ஷிப் அக்ரிமெண்ட்ல என் பேரும் இருக்கு. விச் மீன்ஸ், ஆதுவுக்கு…” எனக் கூறும் போதே, அவனுக்கு தொண்டை அடைக்க, குரலை கனைத்து சரி செய்தவன்,

“ஐ மீன், தீரனுக்கு வேற வேலை வந்து பிசினஸை பார்த்துக்க முடியாம போனாலோ ஆர், ஹெல்த் இஸ்யூ ஆனாலோ அந்த பிசினஸை நான் ஓவர்டேக் பண்றதுக்கு எனக்கு ஃபுல் அதாரிட்டி இருக்கு. அக்ரிமெண்ட் பேப்பரை படிச்சு சைன் பண்ணுற பழக்கம் இல்லையோ!” ஏகத்துக்கும் நக்கல் வழிந்தது அவன் குரலில்.

எரிச்சலான சஹஸ்ரா, “நல்லா படிச்சேன். ஆனா, எனக்கு உன்கூட எந்த பார்ட்னர்ஷிப் – உம் தேவை இல்ல” என்றாள் முகத்தை சுளித்து.

கேலி நகை புரிந்த தீரஜ் தான், “அட்லீஸ்ட் அதையாவது ஒழுங்கா படிச்சியே…” என கேலி செய்து விட்டு, “வெரி சாரி மிஸஸ் சஹஸ்ரா தீரஜ் ஆத்ரேயன்” என அழுத்தி உச்சரித்தவன்,

“ரெண்டு வருஷத்துக்கு இந்த கான்ட்ரேக்ட்ட நீ கேன்சல் பண்ண முடியாது. நானா மனசு வச்சா வேணும்ன்னா அவனோட பார்ட்னர்ஷிப்ப கேன்சல் பண்ணலாம்…” என இழுத்தபடி தன் மனையாளை ஓரக்கண்ணில் ஏறிட்டான்.

மொத்த சினத்தையும் விழிகளில் தேக்கி அவனைக் கொன்று விடும் நோக்கில் முறைத்துக் கொண்டிருந்தவளை சில நொடிகள் ரசித்தவன்,

“பட்… நான் மனசு வைக்க மாட்டேனே.” என்று கையை விரித்து உதட்டைப் பிதுக்கினான்.

“க்கும். அதான பாத்தேன்” என்ற நிக்கோலஸை, தேவிகா பார்வையால் சுட, அவனுக்கோ ‘ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடியே நம்ம லவ்வு புட்டுக்குமோ’ என்றிருந்தது.

தீரஜ் வாகாக காலை தூக்கி டேபிள் மீது நீட்டி, “இது மட்டும் இல்ல மிஸஸ் சஹஸ்ரா தீரஜ். இதையும் பாருங்க.” என்று அவள் முன் சில பத்திரங்களையும் நீட்டினான்.

ஒவ்வொரு முறை அவன் அவள் பெயரை நீட்டி முழக்கி, அவனின் பெயருடன் இணைத்து அழைக்கும் போது இரத்தம் சூடேறியது. அதனை காட்டும் வழி தெரியாமல் பற்களை அழுத்திக் கடிக்க, அது அறைபடும் சத்தம் அவனுக்கும் கேட்டது.

பத்திரங்களை வாங்காமல், “முதல்ல காலை கீழ போடு.” என்றாள் கடுப்பாக.

“ஓகே. ஃபைன்” என்றவன், சமத்தாக காலை கீழே போட்டு விட்டு மீண்டும், பத்திரங்களை கண் காட்டி, “இதெல்லாம் உன் அப்பாவோட ப்ராப்பர்ட்டிஸ் தான” எனக் கேட்டான்.

அவளோ புரியாமல் அதனை வாங்கிப் பார்க்க, “இந்த ப்ராப்பர்ட்டீஸ எல்லாம், கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ஆது தான் வாங்கி இருக்கான். யூ க்னோ தட்?” என வினவிட, அவளுக்கும் இது புது செய்தி தான்.

ஆனால், தீரஜோ நிக்கோலஸ் புறம் திரும்பி, “ஒரு ப்ராப்பர்ட்டி வாங்குனா அதை முறையா ரெஜிஸ்டர் பண்ண மாட்டீங்களா? கேஷ் குடுத்ததுக்கான அக்ரிமெண்ட் பேப்பர் மட்டும் தான் இருக்கு. ஏன் நிக்?” எனக் கூர்மையாக கேட்க,

“எனக்கும் தெரியல தீரா. நிறைய வேலை இருந்ததுனாள ரெஜிஸ்டரேஷன் தள்ளிக்கிட்டே போய்டுச்சு.” என்றதில்,

“இஸ் திஸ் த ரீசன்…? இர்ரெஸ்பான்சிபில் இடியட்.” என்றான் கடுமையாக.

பின், சஹஸ்ராவை நோக்கி, “நீ வித்த ப்ராப்பர்ட்டிய ரெஜிஸ்டர் பண்ணிக் குடுக்கணும்ன்ற சென்ஸ் இல்ல” என அதே கடுமையுடன் கேட்க, அவளுக்கோ கடும் குழப்பம்.

இவை அனைத்தையும் முன் நின்று விற்றது தாயும் தமக்கையும் தான். ஆனால், அவளுமே கையெழுத்திட்டதாக நினைவில் இல்லை.

அந்த நேரம் இருவரும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தில், எதை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள் என்று கூட தெரியவில்லை.

இப்போது பார்த்த பிறகே, அடி மாட்டு விலைக்கு அவசரமாக விற்று அதனையும் சில மாதங்களிலேயே காலி செய்திருக்கின்றனர் என்று புரிந்தது.

ஆனால், தீரன் தான் இத்தனையையும் வாங்கி இருக்கிறான் என்று தெரியவில்லை அவளுக்கு.

நடப்பது புரியாமல் விழித்தவள், தீரஜின் கருவிழிகள் தன்னையே சுற்றி வருவது கண்டு, “இப்ப என்ன? ரெஜிஸ்டரேஷன்க்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் சைன் பண்றேன்.” என்றாள்.

“நீ பண்ணுவ. ஆனா உன் அக்காவும், அம்மாவும் சைன் பண்ணுவாங்களா? அதுவும் பணத்தை வாங்கி இத்தனை மாசம் கழிச்சு…” என்று கிண்டலாக கேட்டவன்,

“பட், நீங்க வந்து சைன் பண்ணினாலும் இதெல்லாம் எனக்கு வேணாம். எனக்கு என்ன தலையெழுத்தா இத்தனை பிசினஸையும் வச்சு மேய்க்கணும்ன்னு.
சோ, நான் இந்த டீலை கேன்சல் பண்ணிக்கிறேன்.” என்றான் அசட்டையாக.

“என்னது கேன்சல் – ஆ?” என காரமாக அவள் பார்க்க,

“எஸ். மிஸஸ் தீரஜ். நான் முன்னாடியே சொன்ன மாதிரி, ஆது கமிட் ஆன பிசினஸை நான் எப்ப வேணாலும் ஓவர் டேக் பண்ணிக்கலாம். அட் அ சேம் டைம் எப்ப வேணாலும் ப்ரேக் பண்ணிக்கலாம். எனக்கு ரைட்ஸ் இருக்கு.” என்றான் அவளை குறுகுறுவென பார்த்தபடி.

‘பிசினஸ மட்டுமா?’ வாய்க்குள் முணுமுணுத்தவள்,

“என்ன விளையாடுறியா? இதெல்லாம் சேர்த்து கோடிக்கணக்குல வரும். அதை எப்படி நான் திருப்பி தர முடியும்? நான் வித்தது வித்ததாவே இருக்கட்டும்.” என்றதில்,

“இருக்கட்டும் தான்… ஆனா, எனக்கு இன்டரெஸ்ட் இல்லையே” என மூக்கை சுருக்கினான்.

நெற்றியைத் தேய்த்தபடி நின்றவளுக்கு ஆத்திரம் மழையாக பொழிந்தது.

பின் அவனே, “சரி உனக்காக ஒரு ஆஃபர் தரேன். இந்த பணத்தை நீ திருப்பி தர வேணாம். நான் இதுல இன்வெஸ்ட் பண்ணுனதா இருக்கட்டும். இங்க பார்ட்னரா இருக்குற மாதிரி, மத்த பிசினஸ்லயும் நான் பார்ட்னரா இருந்துக்குறேன்.” என்று ஒரு தீர்வு கூறியவன், அவளின் பதிலை எதிர்பார்க்காமல், நிக்கோலஸிடம், “அதுக்கான பேப்பர்ஸ் ரெடி பண்ணு நிக்.” என்றான்.

“நான் இன்னும் பதில் சொல்லல.” சஹஸ்ரா சீறிட,

“சரி சொல்லு.” என்றபடி சேரின் பின்னால் வசதியாக சாய்ந்து கொண்டான்.

என்ன சொல்வது என்று அவளுக்கும் தெரியவில்லை. மூளை வேறு முழுதாக செயலிழந்து இருக்க, பேந்த பேந்த விழித்தாள்.

முழுதாக இரு நிமிடங்கள் உதட்டுக்குள் சிரிப்பை ஒளித்தவன், அவள் மீதே பார்வையை ரசனையாக படிய வைத்து தாடையை தடவினான்.

அதற்கு மேலும் அவளிடம் பதில் இல்லை என்றதும், திமிர் துள்ளலுடன் எழுந்தவன், “நிக் பேப்பர் ரெடி பண்ணு” என அவளைப் பார்த்தே கூறி விட்டு, வெளியே சென்றான் அவளது தோளை உரசியபடி.

வெடுக்கென தள்ளி நின்ற சஹஸ்ரா, “பொறுக்கி…! என்னை ட்ராப் பண்றான்.” என உள்ளுக்குள் அவனை வறுத்தெடுத்தாள்.

யாரோ இவள்(ன்)
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
34
+1
117
+1
3
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்