மஹாபத்ராவின் முத்த மழையில் தன்னை நனைத்தவன், அவளது வார்த்தைகள் தந்த கதகதப்பில் மனம் கிறங்கினான்.
‘இதெல்லாம் வடிகட்டின முட்டாள்தனம்’ என மூளைக்கு புரிந்தாலும், மனது அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. அறிவுரை கூறிய மூளையை ஓரம் கட்டியவன், “அதான் ஒன்னும் ஆகலைல. விடு பத்ரா…” என்றான் மென்குரலில்.
அதில் நிமிர்ந்தவள், “என்னடா ஒன்னும் ஆகல. இதுக்கு மேல என்ன ஆகணும்” என்று முறைத்து, “என்ன நடந்துச்சு?” எனக் கேட்டாள் சிவந்த விழிகளுடன்.
நடந்ததை கூறினால், தேவையில்லாத பிரச்சனை முளைக்கும் என்றெண்ணி, சமாளிக்க எண்ணியவனை, அப்படியே விட்டு விட்டால் அது மஹாபத்ரா அல்லவே!
இறுதியில், விஷயத்தை கூறிய தஷ்வந்தை ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்.
“உனக்கு என்ன பெரிய தெலுங்கு ஹீரோன்னு நினைப்பா. சரியா யாரையும் அடிக்க கூட தெரியாதுன்னு தெரியும்ல. அப்பறம் எதுக்குடா அந்த நாய்கிட்ட தனியா சமரசம் பேச போன. நீ சமாதானம் பேசுனதும், அவன் தலையை ஆட்டிட்டு போய்டுவானா?” என பொரிந்து தள்ளியவள், “முதல்ல அவள் பிரச்சனைக்கு நீ ஏன் தலையை குடுக்குற… அமி…” என ஆரம்பித்தவள், அதோடு நிறுத்திக் கொண்டாள்.
முதலில் கூறியதை எல்லாம் அமைதியாக கேட்டவன், இறுதி வரியில், “அவள் என் ஃப்ரெண்டு. அவளுக்காக நான் போக தான் செய்வேன்.” என்றான் அழுத்தத்துடன்.
“அப்போ என்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தான. இதென்ன உன் ஊருன்னு நினைச்சியா? கண்ண மூடி திறக்குற நேரத்துல போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பாங்க. ஏதோ அவன் அரை லூசா இருக்க போய், அடிதடியோட நிறுத்தி இருக்கான்டா இடியட்.” ஆதங்கம் தாளாமல் அவன் சட்டையை பிடித்தாள்.
அவளது நடுக்கம் உணர்ந்தாலும், அதனை ஒதுக்கி விட்டு, “எல்லாரும் உன்னை மாதிரியும், உன் அப்பா மாதிரியுமா இருக்க போறாங்கன்னு நினைச்சேன்…” என்றான் சாவகாசமாக.
“நிச்சயமா இல்ல. ஏன்னா, இப்படி அடிச்சுலாம் நான் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்.” என கூறி முடிக்கும் முன், “லிவ் இன் போர் அடிச்சதும் என்னை ஒரேடியா போட்டு தள்ளிடுவ அப்படி தான…?” என்று விட்டு, அவளை ஆராய்ந்தான்.
தோள் குலுக்கலோடு அக்கேலியை ஒதுக்கி விட்டவள், “நீ ரெஸ்ட் எடு. ஐ வில் பீ பேக்…” என எழுந்து சென்றவளுக்கு, கண்களில் நெருப்பு ஜுவாலை எரிந்தது.
“தட் லலித், அப்பறம் அவனோட அடியாளுங்க எல்லாரும் இப்போ என் முன்னாடி இருக்கணும்.” என்று அர்த்தத்துடன் மதனைப் பார்க்க, அப்பார்வையை புரிந்து கொண்டவன், அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரையும் அவளின் தந்தைக்கு சொந்தமான ஒரு குடோனில் அடைத்து வைத்தான்.
அவர்களை கொலைவெறியுடன் நோக்கியவள், “நீ ஹாஸ்பிடல் போ மதன்.” என உத்தரவிட, அவனும் கிளம்பி விட்டான்.
“சாரி தஷு. என்னால தான் இவ்ளோ பிராப்ளம்…” என தஷ்வந்தின் முன் அமர்ந்து கண்ணை கசக்கிக் கொண்டிருந்தாள் மந்த்ரா.
“ஹேய் லூசு மாதிரி பேசாத. அதுக்காக அவன் என்ன செஞ்சாலும் சும்மா இருக்க சொல்றியா? விடு மந்த்ரா. இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு பேசிக்கிட்டு…” என்னும் போதே, அமிஷும் ஆஷாவும் நடந்தது கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்தனர்.
அமிஷிற்கு மந்த்ரா மீது தான் கடும் கோபம். ‘பிரச்சனைன்னா என்கிட்ட சொல்ற அளவு கூட உனக்கு நான் முக்கியமா படலைல…’ என்ற ஆதங்கம் மிக, தஷ்வந்தின் அறைக்குள் நுழைந்து, மந்தராவை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.
‘நீ தான அவளோட பெரிய பிரச்சனையே’ என அவனது மனசாட்சி கேலி செய்தாலும் அதனை ஒதுக்கி விட்டு, மஹாபத்ராவை தேடினான்.
ஆஷா, “ஆர் யூ ஆல்ரைட் நொவ்?” என தஷ்வந்திடம் கேட்க, தலையை மட்டும் ஆட்டினான்.
மந்த்ரா பார்வையை நிமிர்த்தாமல் அழுகையில் கரைய, “ப்ச் நான் தான் சொல்றேன்ல. முதல்ல அழுகையை நிறுத்து மந்த்ரா.” என மீண்டும் கூறிய தஷ்வந்திடம் பத்தாவது முறையாக மன்னிப்பு கேட்டுவிட்டாள்.
அதில் மாதவ் தான், “பாஸ்… அவளை மன்னிச்சுட்டேன்னு சொல்லிடு. இல்லன்னா அவளோட கண்ணீர் கடல்ல மூழ்கி, நம்ம படகுல தான் வீட்டுக்கு போகணும்…” என நக்கலடித்ததில், மந்த்ரா முறைக்க,
தஷ்வந்த், சிறு புன்னகையுடன், “படகுலாம் கவுந்தாலும் கவுந்துரும் பாஸ். கப்பல் தான் கரெக்ட்டா வரும்” என்று மேலும் கேலி செய்ததில், இப்போது அவள் இதழ்களிலும் சிறு புன்னகை.
அந்நேரம், மதன் உள்ளே வந்து, குடிக்க ஏதாவது வேண்டுமா எனக் கேட்க வர, அமிஷ் தான், “மஹூ எக்கட உண்டி…?” எனக் கேட்டதில், மதன் விழித்தான்.
“அது… ஒரு வேலையா போயிருக்கா…” என்றவன், தஷ்வந்தை கண் காட்டினான்.
அமிஷும் ஆஷாவும் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ‘அந்த தலித்த நானே சாவடிக்கிறேன்.’ என்ற கடுப்பில் அமிஷ் மீண்டும் ஒரு முறை மந்த்ராவை விழிகளால் வருடி விட்டு வெளியில் சென்றான்.
தஷ்வந்தும் அப்போது தான் வெகு நேரமாக மஹாபத்ரா அங்கில்லாததையே உணர்ந்து, “பத்ரா எங்க மதன்?” எனப் புருவம் சுருக்கிக் கேட்க, அவனுக்கும் அதே பதிலைக் கொடுத்தான்.
“என்ன வேலையா போயிருக்கா?” கூர்மையுடன் அவன் கேட்டதில், மதன் திணறினான்.
பின்னே, தஷ்வந்திற்கு எதுவும் தெரிய வேண்டாம் என்பது மஹாபத்ராவின் உத்தரவாகிற்றே.
“உன்ன தான் கேட்குறேன் மதன்…!” தஷ்வந்த் மீண்டும் வினவ, “தெரியல சார்” என்றான் அப்பாவியாக.
“இதை நான் நம்பணுமா?” என முறைத்தவனுக்கு, அவள் லலித்தை சும்மா விடப்போவதில்லை என்று மட்டும் உறுதியாக தெரிந்தது. ‘என்ன செஞ்சு வச்சுருக்காளோ…’ என்று பதறியவன், “நான் அவளை பார்க்கணும்.” என்றான்.
“அவளே வந்துடுவா சார்” மதன் கூறிய சமாதானங்களை ஏற்காமல், “இப்ப நீ என்னை அவள் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போறியா? இல்ல… நானே அவளை தேடி அவள் வீட்டுக்கு போகட்டுமா?” எனக் கேட்டு மதனை லாக் செய்திட, அவனுக்கும் செய்வதறியாத நிலை தான்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் தஷ்வந்த் கேட்காமல் போக, இறுதியில் வேறு வழியற்று மஹாபத்ரா இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றான் மதன்.
அங்கு, தன்னெதிரில் கையில் கத்தியுடன், வஞ்சம் கக்க நின்றிருந்த மஹாபத்ராவைக் கண்ட லலித்திற்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது.
“உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்திருந்தா, என் தஷ்வா மேல கை வச்சு இருப்ப. இந்த கை தான என் அமுல் பேபியை அடிச்சுச்சு…” எனக் கேட்டுக்கொண்டே அவனருகில் வந்தவள், நொடி நேரத்தில் லலித்தின் ஒரு கையை பதம் பார்த்திருந்தாள்.
அவன் வலியில் கதறி, “அவரு உங்களுக்கு வேண்டப்பட்டவருன்னு எனக்கு தெரியாது மேடம். தெரிஞ்சுருந்தா, நான் அவர் பக்கமே போயிருக்க மாட்டேன். இந்த ஒரு தடவை என்னை விட்டுடுங்க மேடம்.” எனக் கெஞ்சினான்.
பெண்ணவளின் அதரங்கள் குரூர புன்னகை சிந்த, “உன்னை உயிரோட விடுறதுக்கா, இங்க கடத்திட்டு வந்துருக்கேன். வாட் லலித்? நீ என் மேல கை வச்சிருந்தா கூட உன்னை பொழைச்சு போன்னு விட்டுருப்பேன். ஆனா, நீ கை வச்சது என் அமுல் பேபி மேல. அந்த கையும் சரி… அவனை அழிக்கணும்ன்னு நினைச்ச நீயும் சரி… நீ சொன்னதை கேட்டு அவனை அடிச்ச இவனுங்களும் சரி… இனிமே இந்த பூமிக்கு பாரமா இருக்கவே வேணாம். ஹேப்பி ஜர்னி!” நக்கல் போல பேசியவளின் முகத்திலும் குரலிலும் ரௌத்திரம் வழிந்தது.
“வே… வேணாம்… மேடம்… நான் நான்… அரசியல்வாதியோட பையன். எனக்கு ஏதாவது ஆனா, நீயும் உயிரோட இருக்க மாட்ட…” அவன் பயத்துடன் மிரட்டி பார்க்க,
“ஹா… ஹா… நல்ல காமெடி பண்ற லலித். நீ செத்ததுக்கு அப்பறம் சிரிக்கிறேன் ஓகே வா” என்றாள் அவள் கிண்டலாக.
எச்சிலை விழுங்கிய லலித், “எனக்கு நிஜமா அவரு உங்க ஆளுன்னு தெரியாது மேடம். மந்த்ராவோட பிரெண்டுன்னு மட்டும் தான் நினைச்சேன். ப்ளீஸ்… என்னை விட்டுடுங்க. இனிமே நீங்க இருக்குற திசை பக்கம் கூட வர மாட்டேன்.” காலில் விழாத குறையாக கெஞ்சினான் லலித்.
“ஓ… அப்போ உங்கிட்ட ட்ரெயினிங் வர்ற பொண்ணுக்கிட்ட தப்பா நடந்தது உனக்கு தப்பா தெரியல.” என மஹாபத்ரா இழுத்ததில்,
“அதுவும் தப்பு தான் மேடம் தப்பு தான்” என்றான் அவன் அவசரமாக ஆமோதித்து.
“ச்சு! ச்சு! ரொம்ப சீக்கிரம் ஒத்துக்கிட்ட. இதே மாதிரி எத்தனை பொண்ணுங்களை டார்ச்சர் பண்ணுன?” விழி உயர்த்தி அவள் கேட்டதில், அவனோ மிரண்டான்.
“அப்படி எல்லாம் இல்ல மேடம்…” என அவன் மறுக்க வரும் போதே, அவனது மற்ற கரத்தில் இருந்தும் அவளின் கத்தியின் விளைவால் குருதி வழிந்தது.
“ஆ… சொல்றேன்… நிறைய பொண்ணுங்க இந்த மாதிரி போஸ்டிங் வருவாங்க மேடம். அதுல ஃபைனான்ஷியலா வீக் – ஆ இருக்குற பொண்ணுங்களை நான்…” என பயத்துடன் சொல்லி முடிக்கும் முன்னே, அவனது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.
அமிஷ் தான், கோபத்தின் உச்சியில் நின்றிருந்தான்.
“பொறுக்கி நாயே… ஃபைனான்ஷியலா வீக் – ஆ இருந்தா, உன் இஷ்டத்துக்கு அவங்களை டார்ச்சர் பண்ணுவியா? என் மந்துகிட்ட உன்னோட விளையாட்டை காட்ட நினைச்ச உன்னை எல்லாம் உயிரோடயே விட கூடாது…” என ஆத்திரத்துடன் அவனை ஓங்கி மிதித்தான்.
லலித்திற்கோ ஐயோ என்றிருந்தது. மந்த்ராவையும் தஷ்வந்தையும் பார்க்கும் போது, அவர்களுக்கு இப்படி ஒரு இணை இருப்பார்கள் என்று அவன் கனவில் கூட எண்ணியது கிடையாதே…!
அதற்குள் அடியாள் ஒருவன், அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் மஹாபத்ராவை தாக்க வர, நொடியில் அவனை தடுத்தவள், ஓடிய அவனது காலை உடைத்திருந்தாள்.
“இங்க இருந்து எவனாவது அசைஞ்சீங்க… கண்ணு முன்னாடி கை கால் எல்லாம் தனி தனியா போய்டும். மைண்ட் இட்.” என மிரட்டியதில், லலித், “உனக்கு தைரியம் இருந்தா என் அப்பாவுக்கு போன் செஞ்சு இங்க வர சொல்லு.” என்று வாய்க்கு வந்ததை உளறினான்.
“கண்டிப்பா சொல்றேன் லலித். உன்னை போட்டு தள்ளிட்டு, கண்டிப்பா உன் அப்பாகிட்ட நான் தான் கொன்னேன்னு சொல்றேன். அப்பவும் உன் அப்பாவால என் ஹேரை கூட புடுங்க முடியாது…” எனப் பல்லைக்கடித்து, கத்தியை அவன் கழுத்தை நோக்கி குத்த வரும் போதே, தஷ்வந்த் அவள் கையைப் பிடித்திருந்தான்.
“என்ன பண்ற பத்ரா… உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா.” என தஷ்வந்த் அதட்ட, அவனை அங்கு எதிர்பாராமல் திகைத்தவள், திரும்பி மதனை முறைத்தாள்.
பின், “நீ ஏன் இங்க வந்த தஷ்வா. இதுல தலையிடாத கிளம்பு.” என்று அழுத்தமாக கூறியதில், அவள் கையில் இருந்த கத்தியை பறித்தவன், “இதென்ன முட்டாள்தனம்? அவனுங்களை விடு.” என்றான் கடுப்பாக.
“சொன்னது கேட்கலையா உனக்கு. முதல்ல போ. இவனுங்களை கொன்னா தான் என் ஆத்திரம் தீரும்.” என்றவளின் கோபத்தைக் கண்டு துணுக்குற்றவன், தரதரவென இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
“கொன்னுட்டா எல்லாம் சரியாகிடுமா பத்ரா. மனுஷங்க உயிர்ன்னா உனக்கும் உன் அப்பாவுக்கும் ரொம்ப சாதாரணமா போச்சா. டாக்டருக்கு படிக்கிறது உயிரை காப்பாத்த தான். எடுக்குறதுக்கு இல்ல.” என கத்தியவனிடம்,
“இந்த தியரி எல்லாம் உனக்கு மட்டும் தான். எனக்கு இல்ல. ஜஸ்ட் கெட் லாஸ்ட் ஃப்ரம் ஹியர்.” என அவளும் கடிந்தாள்.
“நீ வராம நான் இங்க இருந்து போக மாட்டேன்.” அவன் உறுதியாக கூற,
“உன்னை கொல்ல நினைச்சவனை கொலை பண்ணாம நானும் இங்க இருந்து வரமாட்டேன் அமுல் பேபி…” அவளும் விடாப்பிடியாக நின்றாள்.
“கடவுளே… நீ வெறும் கையை காலை தான் உடைக்கிறன்னு நினைச்சேன். அப்போ அப்போ கொலையும் பண்ணிட்டு இருக்கியா…” அவன் தலையில் கை வைத்து நிற்க,
“ப்ச், ஹே… ஓவரா இமேஜின் பண்ணாத. இதான் என்னோட ஃபர்ஸ்ட் மர்டர் அட்டம்ப்ட்.” அவள் அசட்டையாக கூறியதில்,
“ஹப்பாடா” என நிம்மதியானான்.
“ரொம்ப சந்தோசம். இப்ப அவனுங்களை விட்டுட்டு என்கூட வா. ப்ளீஸ் பத்ரா.” தஷ்வந்த் கெஞ்சும் நிலைக்கே செல்ல,
“சாரி அமுல் பேபி. நீ சொல்றதை இந்த விஷயத்துல என்னால கேட்க முடியாது. உன் மேல கை வச்சா என்ன ஆகும்ன்னு தெரிய வேணாம். தெரிய வச்சே தீருவேன்.” என்றவளது அழுத்தம் அவனைக் குடைந்தது.
லலித்தை கொலை செய்யும் அளவிற்கு செல்வாள் என்று அவனும் எண்ணவில்லையே. தன் மீது அவளுக்கிருக்கும் பாசம் கண்டு வியப்பதா… அல்லது நொந்து கொள்வதா எனப் புரியாமல், “ப்ளீஸ் பத்ரா. என்னால கொலைகாறி ஆகாத. தயவு செஞ்சு வா.” அவன் ஆயாசத்துடன் அழைத்தான்.
“நோ வே.”
அதில் பெருமூச்சு விட்டவன், “சோ, நீ வர மாட்ட. நான் சொல்றதை கேட்க மாட்ட. அப்படி தான.” என சலனமற்று பார்க்க,
அவனை நேர்கொள்ளா இயலாமல், “மாட்டேன் அமுலு…” என்று அவள் மறுப்புடன் தலையசைக்கும் போதே, அடிபடாத கரம் கொண்டு அவளைத் தன்னருகில் இழுத்தவன், ரௌத்திரத்தில் துடிக்கும் அதரங்களை தன்வசப்படுத்தினான்.
நொடி நேரத்தில் நிகழ்ந்த இதழ் பரிமாற்றத்தில் பாவையும் தடுமாறி விழிகளை அகல விரிக்க, அவனோ முத்தத்தின் மூலம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
ஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்து விட்ட முத்தத்தை நிறுத்த மனம் வராமல் ஆடவனது உணர்வுகள் சதி செய்ய, ஒரு கட்டத்தில், அவளாகவே விலகி நின்றாள் மூச்சு விட சிரமப்பட்டு.
கன்னங்கள் ரத்த நிறத்தில் சிவந்திருக்க, அவனது தயவில் இதழ்களும் சிவப்பு நிறம் பூசி இருந்தது.
இன்னும் அம்முத்ததின் வீரியத்தில் இருந்து வெளிவராமல், விழிகளை மூடியும் திறந்தும் தன்னை ஆசுவாசப்படுத்தியவளுக்கு, வியப்பும், ஒரு வித வெட்கமும் இழையோடியது.
அவனோ, இது எதையும் கருத்தில் கொள்ளாமல், கருமமே கண்ணாக, “ப்ளீஸ் பத்ரா… அவங்களை விட்டுடு. எதுவும் பண்ணாத. எனக்காக…” என அவள் காதோரம் கிசுகிசுக்க, “ம்ம்…” என்றாள் மெல்லிய மயக்கத்தில்.
“தேங்க் காட். அப்போ வா… வந்து எல்லாரையும் போக சொல்லு.” அவன் சட்டென விலகி ஆசுவாசமாக, அவனை நிமிர்ந்து முறைத்தவள், “இதுக்காக தான் கிஸ் பண்ணியா?” எனக் கேட்டாள் பட்டென.
அவனோ திருதிருவென விழித்து, பின், “இதுக்காகவும் தான்…” என்றான் எழுந்த புன்னகையை மறைத்துக் கொண்டு.
அவனது பாவனையில் விழிகளை திருப்பிக் கொண்டவள், “ஓகே… உயிரோட விடுறேன். ஆனா அப்படியே விட முடியாது.” எனக் கூறிக் கொண்டு மீண்டும் உள்ளே செல்ல, அமிஷும் மதனும் அங்கிருந்தவர்களை அடித்து பிரித்துக் கொண்டிருந்தனர்.
“பத்ரா… சொன்னா கேளு” என்றபடி, காலில் அடிபட்டதால் வேகமாகவும் நடக்க இயலாமல் தாங்கி தாங்கி உள்ளே வந்தவனுக்கு காலில் வலி எழ, “ஆ” வென கத்தினான்.
அதில் பதறி அவனருகில் வந்தவள், “என்னடா ஆச்சு? வலிக்குதா?” எனக் கேட்டு விட்டு, லலித் மீது கோபத்துடன் பார்வையை செலுத்த,
“போட்ட பெயின்கில்லர் எல்லாம் டோஸ் முடியப்போகுதுன்னு நினைக்கிறேன். அதுக்குள்ள ஹாஸ்பிடல் போனா பெட்டர்…” என உதட்டைப் பிதுக்கினான்.
“உன்னை யாருடா இப்ப வர சொன்னா? இன்ஃபக்ஷன் ஆகிட போகுது. இடியட். மதன் இவனை கூட்டிட்டு போ” என்றிட,
“இப்ப நீ வர போறியா இல்லையாடி. இன்னொரு லிப் லாக் தர்றதுன்னாலும் எனக்கு ப்ராப்ளம் இல்ல…” சிறு குறும்புடன் கூறினான் தஷ்வந்த்.
மஹாபத்ரா தான் திகைத்தாள். ‘இவனுக்கு என்ன ஆச்சு…’ எனக் குழம்பியவள், அவனது குறும்புகளை ரசிக்கவும் தவறவில்லை.
அவர்களை ‘ஆ’ வென பார்த்திருந்த மதனையும் அமிஷையும் இயல்பாக ஏறிட்டவள், “அமி… அவங்களை உயிரோட விடலாம். ஆனா… இனிமே எந்த பொண்ணுட்டயும் அவன் வாலாட்ட கூடாது. சோ, பாத்து செஞ்சுடு.” என அவனுக்கு கண்ணை காட்ட, அமிஷும் கண்ணை மூடி திறந்து ஆமோதித்தான். இதழ்களில் வன்ம புன்னகை.
தஷ்வந்த் தான், புரிந்தும் புரியாமலும், “என்ன செய்ய போற…?” எனக் கேட்டு எச்சிலை விழுங்க,
அவனை இழுத்து வந்து காரினுள் அமர வைத்தவள், “நெட்ஒர்க் இருந்தா தான கனெக்ஷன் இருக்கும்…” என்று கண்சிமிட்டினாள்.
“அடிப்பாவி…” என வாயில் கை வைத்தவன், “அவனுக்கு தேவை தான்…!” என ஒப்புக்கொண்டான்.
“ஆனாலும், அவனை கொல்ல மாட்ட தான…?” என சந்தேகத்துடன் கேட்டவனின், அருகில் நெருங்கியவள், “நீ சாதாரணமா சொன்னாலே கேட்டுக்குவேன். இப்போ, ஸ்பெஷலா சொல்லிருக்க. அதை மீற முடியுமா அமுல் பேபி.” என்றாள் வெட்கப்புன்னகையுடன்.
அவனுக்கும் ஒரு வித கூச்சம் தாக்க, அவளைக் காணாமல் ஜன்னலோரம் திரும்பிக் கொண்டான்.
அதில், அவன் முகத்தை திருப்பியவள், அவனது இதழ்களை அளந்தபடியே, “இன்னொரு லிப்லாக் தரேன்னு சொன்ன…? எப்போ?” எனக் கேட்டாள் ஹஸ்கி குரலில்.
அவளது கேள்வியில், பெரிதாக புன்னகைத்தவன், “நெக்ஸ்ட் எப்ப கொலை பண்ண போறன்னு சொல்லு. அப்ப தரேன்.” என்று கேலியுடன் கூறியதில், முதலில் முறைத்தவள், பின், அவனது புன்னகை முகம் கண்டு அவளும் புன்னகைத்துக் கொண்டாள்.
காயம் ஆறும்!
மேகா!