1,173 views

அன்னபூரணி அங்கிருந்து சென்றதும் சிறிது நேரத்தில் அன்பினியும் வெளியில் கிளம்பி விட்டாள். ஒரு மணி நேர பயணத்திற்கு பின் அவள் நின்றது அக்னிக்கு பார்த்த அந்த பெண் வீட்டின் முன்பு தான். காலிங் பெல் அடித்தவள் கதவு திறப்பதற்காக காத்திருந்தாள். அக்னிக்கு பார்த்த பெண் கதவை திறந்தாள்.

அன்பினியை பார்த்தபின் பதட்டத்தோடு, “என்ன விஷயம் இங்க எதுக்காக வந்து இருக்கீங்க.” என்று கேட்க, அவளை தள்ளிவிட்டு உள்ளே சென்றாள். அந்தப் பெண் சத்தமிட, அவளின் பெற்றோர்கள் வெளியில் வந்தார்கள்.

பெண்ணின் தந்தை கன்னத்தில் ஓங்கி அறைந்தவள், “உன்கிட்ட என்னடா சொன்னேன் என் பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டு  கிளம்பனும்னு சொன்னனா இல்லையா. அதை விட்டுட்டு உன் சொந்தக்காரங்க அத்தனை பேரும் வெட்டியா பேசிட்டு இருக்காங்க பார்த்துட்டு இருக்க. இதுல என் அத்தை உன்னை கையெடுத்து கும்பிடுறாங்க நீயும் அமைதியா நிற்கிற எவ்ளோ தைரியம்  உனக்கு.” என்று மீண்டும் அடிக்க செல்ல, வீட்டில் இருக்கும்  பெண்கள் தடுத்தார்கள்.

“அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே எதுக்காக இங்க வந்து பிரச்சினை பண்றீங்க. ஒழுங்கா வெளிய போயிடுங்க இல்லனா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவோம்.” என்று மணப்பெண் கூறியதும் அவள் கையைப் பிடித்த அன்பினி,

“வா! ஸ்டேஷன் போவோம். நீ என் மேல கம்ப்ளைன்ட் கொடு. எவனோ ஒருத்தன் பணம் தரேன்னு சொன்னதால ஒரு குடும்பத்தையே  அசிங்கப்படுத்த பார்த்தன்னு உன் மேல நான் கம்ப்ளைன்ட் தரேன். ரெண்டு பேரும் ஸ்டேஷன்ல கும்மியடிப்போம் வா.” என்று தரதரவென்று இழுத்துச் சென்றாள் அப்பெண் கதறுவதையும் காதில் வாங்காமல்.

பெண்ணின் அம்மா அழுகையோடு வேண்ட, மனம் இறங்கி விட்டாள். “எங்கயாது என் அத்தைய பார்த்தா கண்டுக்காம போயிடனும். ஒருவேளை அவங்க வருத்தப்பட்டு பேசினா கூட நீங்க ஒரு வார்த்தை பேசக்கூடாது.” என்றவள் வீட்டை விட்டு வெளியேற வாசல் வரை வந்து விட்டாள்.

அப்போதுதான் அந்த புகைப்படத்தின் ஞாபகம் வர, “அந்த போட்டோஸ் உங்களுக்கு எப்படி கிடைச்சது.” என்று கேட்டாள்.

“தெரியல பொண்ணு கிட்ட கொடுக்க சொன்னதா யாரோ கொடுத்து  இருக்காங்க. அதை பார்த்துட்டு இருக்கும் போது தான் அந்த அம்மா உள்ள வந்தாங்க.” பெண்ணின் தந்தை கூறினார்.

யோசனையோடு நின்றவள் நடந்த அனைத்தையும் முடிச்சு போட்டு பார்த்தாள். கம்பெனியில் நடந்தது வெளியில் யாருக்கும் தெரியாது என்பதால் மகேஷ் தான் அதை செய்தான் என்று எளிதாக கண்டுபிடித்து விட்டாள். கூடவே அன்று அவன் மண்டபத்தில் எதற்காக மறைந்து நின்றிருந்தான் என்ற காரணமும் விளங்கியது அவளுக்கு.

இவனையும் சமாளிப்போம் என்று நினைத்தவள் தன் புகுந்த வீட்டை நோக்கி பயணப்பட்டாள். கார் இருக்கையில் தலை சாய்ந்தவள் நினைவு கடந்த நாட்களை வட்டமிட்டது.

அக்னி மீது சந்தேகம் கொண்டவள் அவனின் பூர்வீகத்தை விசாரிக்க ஆரம்பித்தாள். தேடியதன் பலனாக குடும்ப புகைப்படத்தோடு முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பு அவள் கைக்கு வந்தது. திறந்து பார்த்தவள் தன் அத்தையை பார்த்து அதிர்ந்தாள். சிறுவயதில் இரு முறை  அவரை பார்த்து இருக்கிறாள்.  நேராக பாட்டியின் முன்பு நின்றாள் உறுதி செய்ய. மகளின் புகைப்படத்தை பார்த்தவர் துள்ளி எழுந்தார். அன்றிலிருந்து தான் அக்னியிடம் அவளின் நடவடிக்கை மாறியது. கூடவே அக்னியின் செயல்களுக்கு முடிச்சு போட்டு முன்பே தெரிந்து கொண்டாள் என்ன செய்ய போகிறான் என்று.

தன்னையே அறியாமல் அவன் மீது ஒரு ஈர்ப்பு தோன்ற, அன்று அவன் “அன்பு” என்று அழைத்ததில் உணர்ந்து கொண்டாள் சிறுவயது சம்பவங்களை.‌ உரிமையோடு அவளின் காதல் சேட்டைகள் தொடர, அக்னியும் மனதை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தான்.

திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருக்க அவனை இழக்க கூடாது என்று துடித்தவள் பாட்டி முன்பு நின்றாள். அவரோ, “இது ஒரு பொண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காத. உன்னை உண்மையாவே காதலிச்சிருந்தா நிச்சயம் அந்த பொண்ண கல்யாணம் பண்ண மாட்டான். ஒருவேளை கல்யாணம் நடந்துட்டா அத்த மகன் என்ற உரிமையோட நிறுத்திக்க.” என்று அறிவுரை வழங்கினார்.

அவளுக்கும் கெஞ்சி தன் காதலை பெறுவதில் விருப்பமில்லை. அக்னியின் முடிவை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருக்க, எதர்ச்சியாக செல்வகுமார் நாகராஜோடு பேசுவதை கேட்டாள். எதுவாக இருந்தாலும் அக்னி ஒரு பெண் மூலம் அசிங்கப்பட்டு நிற்பதை விரும்பாதவள் தந்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தாள்.

யாருக்கும் தெரியாமல் செல்வகுமார் நாகராஜை பார்க்க சென்றிருக்க, அவருக்கே தெரியாமல் அன்பினி பாலோ செய்து அனைத்தையும் தெரிந்து கொண்டாள்.

பெண்ணின் பெற்றோர்களை தொடர்பு கொண்ட நாகராஜ் கல்யாணத்தை நிறுத்த பேரம் பேசினார்.  மறுத்த பெற்றோர்களை நேரில் பார்க்க சென்றவர் தொடர்ந்து பேரம் பேச,  கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாகராஜ்,

“உங்களுக்கு இருக்கிறது இரண்டும் பெண் பிள்ளைங்க. இந்த பொண்ண கட்டி கொடுத்துட்டு அந்த பொண்ண கட்டி கொடுக்க ரெண்டு வருஷமாது சேர்த்து வைக்கணும் . இதுவே நான் தர பணத்தை எடுத்தீங்கனா நீங்க ஆசைப்பட்டதை விட ரெண்டு பெண்ணுக்கும் ஜாம் ஜாம்’னு கல்யாணம் பண்ணி வைக்க முடியும். இதுல உங்க பொண்ணுக்கு எந்த அசிங்கமும் வராது. நான் ஒரு பெண்ண ஏற்பாடு பண்ணி முகூர்த்த நேரத்துக்கு அங்க அனுப்புவேன். அந்த பொண்ணு அக்னி காதலிச்சு ஏமாத்திட்டதா எல்லார் முன்னாடியும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவா. அதைக் கேட்டு கல்யாணத்தை   நிறுத்திட்டு கிளம்பிடுங்க.” என்று முடிவாக ஒரு கோடி பேரம் பேச, அடங்கிவிட்டனர்.

தெரிந்து கொண்ட அன்பினுக்கு தந்தை மீது கட்டுக்கடங்காத கோபம். இவ்வளவு கீழ்த்தரமான செயல்களை செய்ய எப்படி மனம் வந்தது என்று இரவெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். தன் யோசனைகளை பாட்டியிடம் இடமாற்ற, “இதுக்கு மேலயும் பொறுமையா இருக்காத அன்பினி. இப்பவே அக்னி கிட்ட எல்லாத்தையும் சொல்லிடு.” என்றார்.

சொன்னது போல் அவனை தொடர்பு கொள்ள எடுக்கவில்லை அவன். வேறு நம்பரில் இருந்து அன்பினி அழைக்க, அவள் குரல் கேட்டதும் பிளாக் செய்து விட்டான். நேரில் பார்க்கலாம் என்று ரிசப்சன் நடக்கும் இடத்திற்கு செல்ல, அப்போதுதான் அவை நடக்கவில்லை என்பது தெரிய வந்தது.

இதற்கு மேலும் தாமதித்தால் விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்ந்து பெண் வீட்டிற்க்கே சென்று விட்டாள். பேரம் பேசியதைப் பற்றி கேட்க, முதலில் துள்ளி குதித்தவர்கள் அன்பினி ஸ்டைலில் பேசவும் அடங்கி விட்டார்கள்.

“பணத்துக்காக என்ன வேணாலும் செய்வீங்களா? இதுவே உங்க பொண்ணுக்கு இப்படி யாராவது பண்ணா சும்மா இருப்பீங்களா. நல்ல வேளை இப்படி ஒரு குடும்பத்து கிட்ட இருந்து என் அக்னி தப்பிச்சிட்டான்.” என்றவள் இப்போதே அவர்களை உண்மையை சொல்ல சொன்னாள்‌.

தன் பெண் வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால் அவர்கள் காலில் விழுந்து கெஞ்ச, “இதே மாதிரி தான் அங்க பையனை பெத்தவங்க தவிச்சிட்டு இருப்பாங்க. இப்ப நீங்க உண்மைய சொல்லல போலீஸ் கிட்ட போக வேண்டியதா இருக்கும்.” என்று மிரட்டினாள்.

முழுதாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்தவர்கள் அவள் ஆட்டி வைக்கும் பொம்மை ஆனார்கள். மண்டபத்திற்கு சென்றவள் காரில் இருப்பவர்களிடம்,
“என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு மட்டும் தான் சொல்லணும். வேற எதையும் சொல்லக்கூடாது.  கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு திரும்பி பார்க்காம வந்துடுங்க.” செய்ய வேண்டியதை சொல்லிக் கொண்டிருக்க, அன்னபூரணி அழைத்திருந்தார்.

அவரிடம் தான் எடுத்திருக்கும் முடிவை சொல்ல, “உண்மையை சொல்லியே கல்யாணத்தை நிறுத்து.” என்றார்.

“வேணாம் பாட்டி ஏற்கனவே அத்தை ரொம்ப நொந்து போயிட்டாங்க. இதையும் சொல்லி ரெண்டு குடும்பத்துக்கு நடுவுல இருக்க பகையை இன்னும் வளர்க்க வேணாம். அதுவும் இல்லாம என்ன இருந்தாலும் இந்த பொண்ணோட வாழ்க்கை இதனால பாதிக்கப்படும். அந்தப் பாவம் நமக்கு வேணாம் பாட்டி.”என்றவளின் மனதை பார்த்து தங்கள் தவறை உணர்ந்தார்கள் மூவரும்.

பேசி முடித்தவள் அவர்களை உள்ளே செல்லுமாறு சொல்ல, அக்னி அவளை கடந்தான். நியாயத்தை நிறைவேற்ற துடித்தவள் அவன் உருவம் பார்த்ததும் காதல் வானில் சிறகடிக்க ஆரம்பித்தாள்.

யார் உடனோ கைபேசியில் கதை அளந்து கொண்டிருந்தவன் அழகாக தாடியை தடவி சிரிக்க, காதல் மனம் சுயநலமாக சிந்தித்தது. உள்ளிருப்பவர்களை காத்திருக்க சொன்னவள் நின்றாள் அவன் முன்பு.

கத்தி கொண்டிருப்பவனை ரசித்துப் பார்க்க, அந்த பார்வையில் கத்துவதை நிறுத்தியவன் தடுமாறினான். தடுமாறும் பார்வை சொல்லியது அவள் மீதான நேசத்தை.  சுற்றி இருக்கும் ஆட்களை பார்த்தவள் தனியாக அழைத்துச் சென்றாள்.

“இப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.” என்றவனின் வாயில் கை வைத்தவள் பேச்சை நிறுத்தினாள்.

அக்னி அமைதியாக நிற்பதை உணர்ந்து, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் எதுவும் தோணல. இப்போ இந்த நிமிஷம் சொல்லணும்னு தோணுது.” என்று அவன் முன் முட்டி போட்டவள்,

“இப்ப யோசிச்சு பார்த்தாலும் உன்னை எனக்கு பிடிக்கலைன்னு தான் மூளை சொல்லுது. ஆனா மனசு உன்ன மட்டும் தான்டா நினைக்குது. முன்னாடியே தெரிஞ்சி இருந்தா உன்கிட்ட சண்டை போடாம உன் வாழ்க்கையில ஒருத்தி வரதுக்கு முன்னாடி என் காதலை சொல்லி இருப்பேன்.” ஒரு நொடி அமைதியாகி விட்டு சொன்னாள்…

“ஐ லவ் யூ அக்னி.” என்று.

பதிலுக்காக அமர்ந்திருந்தவள் அவன் முகத்தையே பார்க்க, திரும்பிக்கொண்டான் அன்பினியை பார்க்காது. அன்பினியின் குணம் இறங்கிப் போகாமல் அந்த நிலையிலேயே இருக்க, அவளை நிராகரிக்க மனம் இல்லாது எதிர் கொள்ள முடியாமல் நகர்ந்து விட்டான்.

அக்னியின் செயலில் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு. தன் காதலை மறுக்காமல் சென்றதே பெரும் வெற்றியாக எண்ணியவள் மனம் அந்த நொடி மாற, பிளானை மாற்றினாள்.

“நாளைக்கு காலையில மண்டபத்துக்கு வரீங்க.” என்றதும் அம்மூருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“முகூர்த்த நேரத்துல கல்யாணம் பிடிக்கலைன்னு எந்த பிரச்சனையும் பண்ணாம கிளம்பிடனும். முக்கியமா இங்க நடக்கிற எதுவும் நாளைக்கு காலையில வரைக்கும் நாகராஜுக்கு தெரியக்கூடாது. என்னையும் மீறி ஏதாவது பிளான் பண்ணி மாத்தணும்னு நினைச்சீங்கன்னா வாழ்க்கை முழுக்க களி தின்ன வேண்டியதா இருக்கும்.” என்ற மிரட்டலோடு அனுப்பி வைத்தாள்.

பாட்டியிடம் தன் முடிவை சொல்ல அவரோ இதுவும் அவனுக்கு அசிங்கம் தானே என்று மறுத்தார்.

“இதை விட்டா எனக்கு வேற வாய்ப்பு கிடைக்காது பாட்டி. அவனுக்கும் என் மேல காதல் இருக்கு ஆனா கடைசி வரைக்கும் வெளிய சொல்ல மாட்டான். ரெண்டு குடும்பமும் பேசி எங்க கல்யாணத்தை நடத்தவும் வாய்ப்பு இல்லை. எல்லாரும் நான் தான் பிரச்சனை பண்ணி கல்யாணம் பண்ணதா நினைப்பாங்க. கல்யாணம் ஆகாம என் அக்னி வீட்டுக்கு போறத விட இது மேல்ன்னு தோணுது.” என்றவளை முடிந்த அளவிற்கு சமாதானப்படுத்த பார்த்தார் அன்னபூரணி.
காதல் அவள் கண்ணை மறைக்க இதிலும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்தும் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் விடியற்காலை நேரம் மண்டபத்திற்கு வந்தாள். நாகராஜ் ஏற்பாடு செய்திருந்த பெண்ணை பிடிக்க ரகசியமாக கண்காணிக்க அவளும் கைக்கு சிக்கி விட்டாள். காரினுள் அடைத்து வைத்தவள் சரியான நிறத்திற்கு மணமேடை ஏறினாள்.

***

அலுவலகம் சென்ற அக்னியின் மனம் ஒரு நிலையில் இல்லை. தாய் தன்னிடம் பேசாமல் இருப்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாதவன் விரைந்தான் வீட்டிற்கு.
மனைவியின் மனநிலை சரியில்லாமல் இருப்பதால்  மணிவண்ணனும் வேலைக்கு செல்லவில்லை.

“அம்மா” என்றழைத்தவன் அவர் காலடியில் அமர,

“அவனை இங்க இருந்து போக சொல்லுங்க” என்றார் பரமேஸ்வரி.

“ப்ளீஸ் ம்மா என்னை கொஞ்சம் பேச விடுங்க.”

“என்னடா பேச போற நீ பண்ண வேலைக்கு என்ன பேச போற. யாரைக் கேட்டு அவன் கம்பெனியில வேலைக்கு சேர்ந்த. அவனுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம். என்னை ஏமாற்றி வாங்கின மாதிரி நீ அவனை ஏமாத்தி கம்பெனியை வாங்கி இருக்க. ஒரு வார்த்தை என்கிட்ட கேட்கணும்னு தோணலையா உனக்கு.” மனதில் இருப்பதைக் கேட்டவர் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

அவர் கண்களை துடைத்தவன், “அழாதீங்கம்மா நீங்க அழுதா என்னால தாங்கிக்க முடியாது. என்னை காப்பாத்த அவர் கிட்ட உயிர் பிச்சை கேட்டு நின்ன எங்க அம்மாவுக்காக தான் இதை பண்ணேன். அவங்களை அழ வெச்சி ரசிச்ச செல்வகுமார் அழனும்னு  நினைச்சேன்.” என்றதும் மகனை பார்த்தார் பரமேஸ்வரி.

அப்பார்வையின் பொருள் உணர்ந்தவன், “எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்குமா நான் எதையும் மறக்கல.” என்றான்.

அதன் பின் பெரும் அமைதி நிலவியது அங்கு. இன்று பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்தவன், “உங்களை ஏமாற்றி வாங்குன அந்த கம்பெனிய வாங்கணும்னு தான் அங்க வேலைக்கு சேர்ந்தேன். அதுக்குள்ள கல்யாணம் முடிவானதால சொல்ல முடியல. கல்யாணம் முடிச்சுட்டு சொல்லலாம்னு இருந்தப்போ எல்லாம் மாறிடுச்சு.” என்றான்.

“நமக்கு அந்த கம்பெனி வேணாம் திருப்பி கொடுத்துடு.” முடிவாக கூறினார் பரமேஸ்வரி.

“அது மட்டும் முடியாது ம்மா. இனி அந்த கம்பெனிக்கு நீங்க தான் முழு உரிமையான ஆள். நீங்க வர வரைக்கும் உங்க இடத்துல இருந்து நான் நிர்வாகம் பண்றேன். இந்த முடிவுல எந்த மாற்றமும் இருக்காது.”
அவனும் முடிவாக கூறி விட,

“அந்த கம்பெனிய கொடுக்கிற வரைக்கும் நானும் உன் கிட்ட பேசமாட்டேன்.” என்றார் உறுதியோடு.

அன்னையிடம் கோபித்துக் கொண்டு அலுவலகம் திரும்பியவன் நினைவு சிறு வயதை திருப்பியது.

***

பரமேஸ்வரி மணிவண்ணன் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்ததற்கு சாட்சியாக அக்னிசந்திரன் பிறந்தான்.  வீட்டோடு மனைவி இருந்து விட, சிறிய அளவில் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நிலையான வருமானத்தை பெற்றார் மணிவண்ணன். சிறியவளை பள்ளியில் விட்ட பெற்றோர்கள் அக்னியோடு கடைக்கு சென்றனர். அழகாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் எதிர்பாராத விதமாக பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்தது.

அதில் மூவருக்கும் பலத்த அடி. சாலையில் இருந்தோர்கள் உதவியால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாதி மயக்கத்தில் இருந்த பரமேஸ்வரியிடம் விவரத்தை கேட்க, அந்த நிலையில் அண்ணனின் தொலைபேசி எண்ணை கொடுத்தார் உதவுவார் என்று.

அப்போது தான் வீட்டிலிருந்த மனைவி மகன் இருவரையும் டிரைவரோடு  அனுப்பி வைத்தார் செல்வகுமார். விவரம் கேட்டவர்கள் அந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்து மூவருக்கும் விபத்து என்று கூற, முழுமையாக கேட்காதவர் தன் மகன் மனைவிக்கு என்று நினைத்து மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

மணிவண்ணனுக்கு ஒரு காலில் முறிவு ஏற்பட்டு விட, பரமேஸ்வரிக்கு  பெரிதாக அடி ஒன்றும் இல்லை.  ஆனால் அக்னிசந்திரன் தான் முழுதுமாக குலைந்து விட்டான் அந்த விபத்தில். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகனை அழுகையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் செல்வகுமார் அங்கு வந்தார்.

அண்ணனைப் பார்த்தவர் அனைத்தையும் மறந்து அக்னி அனுமதித்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். மகனை கைகாட்டி அழுதவர்  கட்டியணைத்து புலம்ப,  முழு விவரம் தெரிந்தும் இறக்க படாமல் தள்ளி விட்டார் செல்வகுமார்.

“அண்ணா!” என்று பரமேஸ்வரி அழுகையோடு அழைக்க,

“ச்சீ! அப்படி சொல்லாத. எப்போ ஓடிப் போனியோ அப்பவே எல்லாமே முடிஞ்சிருச்சு.” என  உடன்பிறப்பின் நிலையை பார்த்து வருந்தாமல் துரோகத்தை உமிழ்ந்தார். மயக்கத்தில் இருந்த அக்னிசந்திரன் இவை அனைத்தையும் கேட்டான்.

அந்தப் பேச்சுக்குப்பின் பரமேஸ்வரி ஒரு வார்த்தை பேசவில்லை செல்வகுமாரிடம். தந்தையின் கைபிடித்து நின்று கொண்டிருந்த அன்பினிக்கு பாவமாக இருந்தது பரமேஸ்வரியை பார்க்க.

முழுதாக என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் அவள் இருக்க, அன்னபூரணி சொல்லி கேட்டு இருக்கிறாள் தந்தைக்கு ஒரு தங்கை இருக்கிறார் என்று.  திட்டி தீர்த்தவர் மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்  .

நள்ளிரவு நேரம் அக்னியின் உடல் தூக்கிப் போட்டது. அருகில் இருந்த பரமேஸ்வரி மகனின் நிலையைப் பார்த்து கதறி அழ அந்த சத்தத்தில் செவிலியர் வந்தார். அவசர சிகிச்சைக்கு மருத்துவரை அழைக்க, சிகிச்சை தொடங்கப்பட்டது.

பின்னந்தலையில் பலமாக அடிபட்டிருக்க, சிறு வயது என்பதால் உடனடி அறுவை சிகிச்சை தேவைப்பட்டது அக்னிக்கு.

தற்காலிகமாக அக்னிக்கு சிகிச்சை நடைபெற்றது. இருப்பினும் தொடர்ந்து அவன் உடல் நலத்தோடு இருக்க அறுவை சிகிச்சை முக்கியம் என்பதால் அதற்கான தொகையை கட்டுமாறு மருத்துவமனை கூறியது பரமேஸ்வரியிடம்.  கையில் இருந்த அனைத்தையும் திரட்டி பார்த்து விட்டார் தேறவில்லை. மணிவண்ணனும் முடியாத நிலையில் இருக்க… தன்னால் முயன்ற உதவியை செய்தும் முடியவில்லை.

நாளுக்கு நாள் அக்னியின் உடல்நிலை மோசமானது. மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடியவர் நின்றார் செல்வகுமார் முன்பு.

விக்ரம் பொதுத்தேர்வு முடித்திருக்க, பரமேஸ்வரி விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என அனைவரையும் வெளியூர் அனுப்பி வைத்திருந்தார்.  அன்பினிக்கு தேர்வு என்பதால் செல்லவில்லை.

விடியற்காலை பொழுது  வாக்கிங் முடித்து வந்தவர் வாசலில் நிற்கும் பரமேஸ்வரியை பார்த்து தகாத வார்த்தைகளில் பேச, மகனுக்காக மடிப்பிச்சை கேட்டு நின்றார்.

சிறிதும் இறக்கப்படவில்லை செல்வகுமார். அங்கிருந்து விரட்டி அனுப்பினார் தங்கையை.தூக்க கலக்கத்தில் அப்போது தான் எழுந்த அன்பினி அத்தையை பார்த்துவிட்டு மனம் கலங்கினாள்.

மனம் உடைந்து போனவர் அழுகையோடு திரும்பிட, விஷயம் நாகராஜ் காதுக்கு எட்டியது. அவர் கொடுத்த ஐடியாவின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்தார். உதவி செய்ய தான் அண்ணன் வந்திருக்கிறார் என்று பரமேஸ்வரி மகிழ,

“உன் பையன் ஆப்ரேஷனுக்கு தேவையான எல்லா பணத்தையும் நான் தரேன் அதுக்கு பதிலா அந்த கம்பெனியோட முழு உரிமையையும் எனக்கு மாத்தி கொடு.” என்று மனசாட்சி இல்லாமல் டீல் பேசினார்.

“என் மகன் உயிரை தவிர வேற எதுவும் எனக்கு முக்கியமில்லை. நீங்களே அதை வச்சுக்கோங்க.” என்றிட, அதற்கான வேலையில் இறங்கினார் செல்வகுமார்.

பள்ளி முடித்து வந்த அன்பினிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. எதுவோ சரியில்லை என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது அவளால். அதற்கு தோதாக செல்வகுமார் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, தந்தை மருத்துவமனைக்கு தான் செல்கிறார் என்பதை தெரிந்து கொண்டாள். கிளம்பும் தந்தையோடு அடம் பிடித்து அவளும் சென்றாள். இரவு நெருங்கும் நேரம் என்பதால் அழைத்துச் சென்றவர் காரில் அமர வைத்துவிட்டு தங்கையை பார்க்கச் சென்றார். அவரோ அக்னியின் கையை பிடித்தபடி அழுது கொண்டிருந்தார்.

தேவையான பத்திரங்களை பரமேஸ்வரி முன்பு நீட்ட, “முதல்ல காச கொடு.” என்று தெளிவாக இருந்தார் பரமேஸ்வரி.

பெட்டியில் இருக்கும் பணத்தை காண்பித்தவர், “நீ கையெழுத்து போட்ட அடுத்த நிமிஷம் இந்த பணத்தை கொடுத்துடுவேன்.” என்ற வார்த்தையை நம்பி அவரும் அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்து போட்டார்.

தன் வேலை முடிந்ததும், “என்னை அத்தனை பேருக்கு முன்னாடி அவமானப்படுத்திட்டு போன உனக்கு கடவுள் சரியான தண்டனைய கொடுத்துட்டார். உன்கிட்ட கையெழுத்து வாங்க தான் காசு தரேன்னு பொய் சொன்னேன். ஒரு நையா பைசா கூட தர மாட்டேன்.‌” உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்தார் செல்வகுமார்.

கதறி துடித்து சண்டையிட்டார் பரமேஸ்வரி. மகனின் உயிரை மட்டும் காப்பாற்றி கொடுக்கும்படி காலில் விழுந்தார். காரில் இருந்த அன்பினி தந்தைக்கு தெரியாமல் பின்னால் வர அனைத்தையும் பார்த்தாள். சிறு குழந்தைக்கு வரும் இரக்கம் கூட செல்வகுமாருக்கு வரவில்லை.

உதவி கேட்கும் ஒரு தாயின் கதறலை ரசித்தபடி வெளியேறினார். அவருக்கு முன்னால் வந்து காரில் அமர்ந்த அன்பினிசித்திரையின் மனம்  அத்தைக்காக வருத்தப்பட்டது. எப்படியாவது உதவ வேண்டும் என்று அவள் மனம் பரபரக்க… சில பொருட்கள் வாங்க காரை நிறுத்திய செல்வகுமார் கடைக்கு சென்றார்.

யோசித்துக் கொண்டிருந்தவள் மூளை பக்கத்தில் இருக்கும் பெட்டியை பார்த்தது. அத்தையின் அழுகையை தீர்க்க வேண்டும் என்று அதை எடுத்துக்கொண்டு ஓடினாள் கார் வந்த வழியே. மருத்துவமனையை அடைந்தவள் அத்தையை தேட, அவரோ செல்வகுமார் கொடுத்த அதிர்வில் கணவரிடம் புலம்ப அவர் அறைக்கு சென்றிருந்தார்.

அக்னி படுத்திருந்த அறையை கண்டுபிடித்தவள் உள்ளே நுழைந்தாள். யாரும் இல்லாமல் இருக்க அக்னி மட்டும் அமைதியாக படுத்திருந்தான். அருகில் சென்றவள் முகம் பார்க்க முயல முகத்தில் இருக்கும் சுவாச குழாய் மறைத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவள் முழித்துக் கொண்டிருக்க,

“யாருமா நீ இந்த ரூமுக்குள்ள எல்லாம் வரக்கூடாது வெளிய போ.” என்று சத்தமிட்டார் செவிலியர்.

திரு திருவென   முழிக்கும் அன்பினியை பார்த்து சந்தேகித்த செவிலியர் “யார்” என்று விசாரிக்க,

“நான்… நான் அன்பு..” பயத்தில் முழு பெயரை சொல்லாமல் அன்பு என்றாள். பாதி சுயநினைவில் இருந்த அக்னியின் செவியில் அவை விழுந்தது. கேட்டவன் விழிகள் லேசாக திறந்தது. உதடு மெல்ல “அன்பு” என்ற பெயரை உச்சரிக்க முயல, கவனித்த செவிலியர் ஓடினார் மருத்துவரிடம் சொல்ல.

அவர் ஓடுவதைப் பார்த்து பயந்தவள் அவசரமாக கையில் இருக்கும் பணத்தை அக்னியின் கையில் திணித்தாள். அவனை ஒரு நொடி பார்த்துவிட்டு கிளம்பிய அன்பினி என்ன நினைத்தாளோ தன்னிடம் இருக்கும் நகைகளை கழட்டி அவன் கையில் வைத்தாள். அக்னியின் கைகள் அவற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ள…வெளியேறினாள்.

மருத்துவர் உள்ளே வர, கையில் இருக்கும் பணம் நகைகளை பார்த்து பரமேஸ்வரிக்கு தகவல் சொன்னார். அந்த நிமிடம் அவருக்கு தெரிந்ததெல்லாம் தன் மகன் மட்டுமே. எதையும் யோசிக்காமல் அதை எடுத்து  மகனுக்கு தேவையான அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அக்னி உடல்நிலை தேறிய கையோடு வேறு ஊருக்கு சென்றவர்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் சென்னை வந்தனர். உதவி செய்தவர் யார் என்று தெரியாவிட்டாலும்  உள்ளத்தில்  அந்த தெய்வத்தை இன்று வரை  பூஜித்துக் கொண்டிருக்கிறார் பரமேஸ்வரி.

இதுவரை மட்டும் தான் அக்னி அறிந்தவை. அவன் அறியா பக்கம் ஒன்று உண்டு.

தப்பித்த நிம்மதியில் வெளியில் வந்தவள் திடுக்கிட்டாள் முழுவதும் இருட்டாக இருப்பதை பார்த்து. பயம் பதட்டத்தை கொடுக்க வந்த வழியை மறந்து விட்டாள். எப்படி செல்வது என்று தெரியாமல் ரோட்டில் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவள் தந்தையை தேட ஆரம்பித்தாள்.

பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தவர் மகள் காரில் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ந்தார். அங்கும் இங்கும் சுற்றி தேடியவர் பதட்டத்தோடு நடந்து வந்து கொண்டிருக்க, எதிர்ப்புறத்தில் இருந்து அன்பினி நடுக்கத்தோடு தந்தையை தேடி வந்தாள்.

மகளைப் பார்த்தவர் பயத்தோடு அணைத்துக் கொண்டார். அதுவரை வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தவள் அழ தொடங்கினாள் தந்தையை பார்த்ததும். மகளை சமாதானம் செய்தவர், “கார்ல தான இருக்க சொன்னேன் இங்க எப்படி வந்த.” என்று விசாரித்தார்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பயத்தில் நடுங்கி உளறி கொட்டினாள். அன்பினி சொல்வதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தவர், அப்போது தான் கவனித்தார் ஆடை முழுவதும் இருக்கும் ரத்த கரையை. 

புரிந்து கொண்டவர் அனைத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு விரைந்தார் வீட்டிற்கு. செய்வதறியாத நிலையில் அவர் இருக்க பயத்தில் அன்பினிக்கு உடல் கொதிக்க ஆரம்பித்தது. மனைவியை அழைத்து விவரம் சொன்னவர் உடனே கிளம்பி வர உத்தரவிட்டார்.

பெரிய மனிதியான அன்பினி சித்திரைக்கு அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.  பண ஞாபகம் வந்த செல்வகுமார் தேட ஆரம்பித்தார். காணவில்லை என்பதை உறுதி செய்தவர் மகளிடம் விசாரிக்க, அவள் பயத்தில் மீண்டும் உலரினால். அன்பினியின் பயத்தை பார்த்து அவரே யூகித்துக் கொண்டார் மகளைக் கடத்த இருக்கிறார்கள் என்று. அதை அப்படியே அன்பினியிடம் கேட்க, அவளோ தப்பிக்க “ஆமாம்” என்று விட்டாள்.

புகார் கொடுக்க சென்ற கணவனை தடுத்த நந்தினி, “வேணாங்க இதை பெருசு பண்ணாதீங்க. விஷயம் வெளிய தெரிஞ்சா கற்பனைக்கு கதை கட்டி பேசிடுவாங்க. பணம் போனா போகட்டும் பொண்ணு வாழ்க்கை முக்கியம். ” என்றார்.

அவை செல்வகுமாருக்கும் சரி என்று பட அந்த பிரச்சனையை அத்தோடு விட்டுவிட்டார். நாட்கள் சில கடந்து பயம் தெளிய ஆரம்பித்தது அன்பினிக்கு. நடந்ததை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தவள் பாட்டியிடம் கூறினார். விஷயம் கேட்டவர் ஆடிப் போய்விட்டார். அதைவிட பெரிய அதிர்ச்சியாக இருந்தது மகனின் செயல்.

அன்பினியிடம் பலமுறை கேட்டு விட்டார் மருத்துவமனை விவரம் பற்றி. அவளுக்கோ அவை சரியாக தெரியாமல் போக, அன்று தன்னைத்தானே வெறுத்து அறைக்குள் அடைந்தவர் தான் அன்னபூரணி.

அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
30
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *