Loading

அத்தியாயம் 14

 

முன்னிரவு நேரம்… 

 

பாஸ்கரும் கிஷோரும் அவர்களிடத்திற்கு செல்ல கிளம்பினர். செல்லும் சமயத்திலும் பாஸ்கர், “ரெஸ்ட் இன் பீஸ் மச்சான். நாளைக்கு எதுவும் சேதாரம் இல்லாம உன்னை பார்க்கணும்னு கடவுளை வேண்டிக்குறேன்.” என்று முணுமுணுக்க, இம்முறை அவனை முறைக்கும் பொறுப்பு துவாரகாவினுடையதாகிற்று.

 

அவனை அடியிலிருந்து காப்பாற்றி பெரும் உதவி செய்து வீட்டிற்கு அழைத்து சென்றான் கிஷோர்.

 

அப்போது கிடைத்த தனிமையில், “உங்க ஊரு எது? ஏன் அங்க போக வேண்டாம்னு சொல்றீங்க? உங்க குடும்பத்தை பத்தி இப்போவாச்சும் சொல்லுவீங்களா? இல்ல, இப்பவும் ஏதாவது சொல்லி மழுப்பிடுவீங்களா?” என்று சற்று கறாராகவே கேட்டாள் துவாரகா.

 

“ஹ்ம்ம், நான் கூட நீ வேகமா வரதை பார்த்து, வேற ஏதாவது ஸ்பெஷலா கேட்கப் போறன்னு நினைச்சேன்.” என்றவன், ஒரு பெருமூச்சுடன், “என் குடும்பம்… ஹ்ம்ம், இப்போ நீ என் ஒய்ஃப், கண்டிப்பா நம்ம குடும்பத்தை பத்தி நீ தெரிஞ்சுக்கணும் தான். ஆனா…” என்று நிறுத்தியவன், சிறிது இடைவெளி விட்டு, “ஓகே, இப்போவே சொல்றேன்.” என்றான்.

 

பின், தன் அலைபேசியிலிருந்த புகைப்படத்தை அவளிடம் காட்ட, “இதென்ன குரூப் ஃபோட்டோவா? ஆமா நான் உங்க ஃபேமிலியை மட்டும் தான் கேட்டேன். உங்க ரிலேடிவ்ஸ் பத்தி  எல்லாம் இப்போ எனக்கு தெரிஞ்சுக்க வேண்டாம்.” என்று கூறினாள் அவள்.

 

“நம்ம ஃபேமிலி!” என்று முதலில் அவளை திருத்தியவன், “இதோ இவங்க எல்லாரும் தான் நம்ம ஃபேமிலி.” என்று கூற, “எதே? இவங்க எல்லாரும் ஒரே குடும்பமா?” என்று முதற்கட்ட அதிர்ச்சியில் உறைந்தாள் அவள்.

 

சில நொடிகளில் உறைநிலையிலிருந்து வெளிவந்தவள், “இவங்க எல்லாரும் ஒரே வீட்டுலயா இருக்காங்க?” என்று வாயை பிளந்து கொண்டு அடுத்த சந்தேகத்தை கேட்க, அதற்கு அவனோ புன்னகையுடன், ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

 

அதில் மேலும் திகைத்தவள், அப்படியே அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்து கொள்ள, “ஓய், என்ன நம்ம குடும்பத்தை பத்தி சொல்ல வேண்டாமா?” என்று அவன் வம்பு வளர்த்தான்.

 

“ஒரு ஊரையே ஃபேமிலியா வச்சுட்டு என்னன்னு எனக்கு சொல்லுவீங்க? ஃபேமிலி ட்ரீ வரைஞ்சு தான் மனப்பாடம் பண்ணனும் போல!” என்று தன்னைப் போல் பேசியவளின் அருகில் அமர்ந்தவன், “உன் சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைக்க தான நான் இருக்கேன்.” என்று உதட்டை மடக்கி சிரித்தபடி அவன் கூறினான்.

 

அதில் அவனை சந்தேகமாக அவள் பார்க்க, “சந்தேகமே வேண்டாம். நீ, என்ன நினைச்சியோ அதே மீனிங் தான்.” என்று கூறியபடி அவன் எழ, “ஹலோ, நான் என்ன நினைச்சேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று மல்லுக்கு நின்றாள் அவள்.

 

“அப்போ ஏதோ வில்லங்கமா நினைச்சுருக்க, அப்படி தான?” என்று பேச்சையே மாற்றி விட்டான் மயூரன்.

 

“நான் வில்லங்கமா நினைச்சேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்.” என்று ‘அப்பாவி’ துவாரகாவும் அந்த பேச்சில் சிக்கிவிட, அது அவர்களை கோபிநாத் உணவுண்ண அழைக்கும் வரை தொடர்ந்தது.

 

வழக்கம் போல மாப்பிள்ளையை நன்றாக கவனிக்க, அதை ஒரு பொருமலுடனே கவனித்து சாப்பிட்டு எழுந்தாள் துவாரகா.

 

‘அடுத்து என்ன?’ என்று அவள் யோசிக்கும் போது தான், அன்றைய இரவின் முக்கியத்துவத்தை அவளின் மூளை மணியடித்து உணர்த்தியது.

 

‘ஹையோ! இதை எப்படி மறந்தேன்?’ என்று ஒரு புறம் அவள் பதற, ‘என்னமோ, அப்படியே உன்மேல பாயுற மாதிரி தான்! ஹீ இஸ் பக்கா ஜென்டில்மேன்.’ என்று எடுத்துரைத்தது அவளின் மனம்.

 

‘க்கும், முன்னாடி எல்லாம் ஜென்டில்மேன் தான். ஆனா, இப்போ சில நாளா ஒரு மாதிரி பேசுறான், ஒரு மாதிரி பார்க்குறான். ஹ்ம்ம், இந்த ஆம்பளைங்களை நம்பவே கூடாது!  ஒருவேளை பாஞ்சுட்டான்னா?’ என்று அவளுக்குள்ளே பேசிக் கொண்டாள்.

 

*****

 

துவாரகாவின் அறை, முதலிரவிற்கான சர்வ அலங்காரங்களுடன் தயாராகி இருக்க, அதில் மருண்ட பார்வையுடன் அவளும், கிறக்கமான பார்வையுடன் அவனும் நின்றிருந்தனர்.

 

அவனின் பார்வை மாற்றத்தைக் கண்ட பாவையோ பயந்து பின்னே அடியெடுத்து வைத்தபடி, “இது… இதெல்லாம்… இப்போ வேண்டாம்… மயூ…ரன்…” என்று திக்கி திணற, “எனக்கு வேணுமே.” என்றபடி அவளை நெருங்கினான் அவன்.

 

அதற்கே அவளுக்கு வியர்த்து வழிய, “நோ… எனக்கு இப்போ… இதுல… விருப்பம் இல்ல.” என்று தந்தியடித்தன அவளிடமிருந்து வெளிவந்த வார்த்தைகள்.

 

ஆனால் அவனோ, “ஆனா, எனக்கு விருப்பம் இருக்கே.” என்றதோடு, “இதை எல்லாம் யோசிக்காமலா என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண?” என்று கண்ணடித்து வினவினான்.

 

“அப்போ… பழிக்கு பழியா?” என்று அவள் கேட்க, “அஃப்கோர்ஸ் பேபி.” என்றான் அவனின் அக்மார்க் நமுட்டுச் சிரிப்புடன்.

 

மேலும், “நீதான் என்னை லவ் பண்ணேல?” என்று கேட்டபடி, அவளின் கரத்தை பற்ற, அதோடு அதில் சுற்றியிருந்த முந்தானையும் அவன் கரத்திற்குள் அடங்கி விட, “ஹையோ, அது தான் நான் செஞ்ச தப்பு!” என்று கண்களை மூடி கத்தியே விட்டாள்.

 

அப்போது அவளின் தோளை தொட்ட கரத்திற்கு சொந்தக்காரனோ, “நான் இல்லாமலேயே தப்பு பண்ணிட்டியா என்ன?” என்று கேட்க, திடுக்கிட்டு கண்களை திறந்தவளுக்கு, அப்போது தான் அனைத்தும் அவளின் மனம் காட்டிய படம் என்றே விளங்கியது.

 

அவளின் மனமோ, ‘கையை பிடிச்சதுக்கே இப்படி வியர்த்து வழியுதே!’ என்று நேரம்காலம் இல்லாமல் கேலி செய்ய, அதை முயன்று அடக்கியவள், அவளெதிரே அவளின் பதிலுக்காக புன்னகையுடன் காத்திருந்தவனை பார்வையால் எரித்தாள்.

 

“ஷப்பா, ரொம்ப ஹாட்டா இருக்கே. அப்படி என்ன சீன் இந்த மண்டைக்குள்ள ஓடுச்சு?” என்று அவளின் தலையின் மீது கரத்தை சுற்றிக் வட்டமிட்டு காட்ட, மீண்டும் அந்த காட்சி கண்முன் விரிவதை தடுக்க நினைத்து தலையை உலுக்கியவள், “இங்க பாருங்க, இப்போதைக்கு நமக்குள்ள எதுவும் வேண்டாம்.” என்று போட்டு உடைத்து விட்டாள்.

 

“ஓஹ், அப்போ அதை தான் யோசிச்சுட்டு இருந்தியா?” என்று அவன் கேட்டு முடிக்கும் முன்னரே அங்கிருந்து ஓடியிருந்தாள் துவாரகா.

 

பின்னே, இன்னும் சற்று நேரம் நின்றாலும், மீண்டும் மீண்டும் அதையே பேசி கேலி செய்திருப்பானே? இதில், அவனின் நமுட்டுச் சிரிப்பு வேறு!

 

அங்கு ஆரம்பித்த அவளின் ஓட்டம், அவளின் அறையில் தான் முடிந்தது.

 

உள்ளே நுழையும் முன்னர், ஒருநொடி அவள் கண்ட காட்சியை எண்ணி தயங்கியவள், முயன்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

 

அங்கு, அவளின் கற்பனைக்கு அப்படியே எதிர்பதமாக, எவ்வித அலங்காரங்களும் இல்லாமல் எப்போதும் போன்று இருந்தது அவளின் அறை.

 

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், காலையில் அவசரத்தில் கிளம்பியதால், அப்படியே விட்டுச் சென்ற அலங்கார பெருட்களும், உடைகளும் கூட எடுத்து வைக்கப்படாமல் அப்படியே இருந்ததில், திகைத்து தான் போனாள்.

 

திகைப்பின் காரணம் ஏமாற்றமோ?

 

‘நம்ம எதுவும் சீக்கிரம் வந்துட்டோமோ?’ என்று எண்ணியவள், அவளின் எண்ணப்போக்கை அறிந்து தலையில் கொட்டிக் கொள்ள, “நீ இவ்ளோ டிசப்பாயிண்ட்டாவான்னு தெரிஞ்சுருந்தா, ஃபர்ஸ்ட் நைட்டை கேன்சல் பண்ண சொல்லியிருக்க மாட்டேனே.” என்ற குரல் பின்னிருந்து வந்தது.

 

மீண்டும் தலையிலடித்துக் கொண்டவள், “ஐயா சாமி, அறியா பிள்ளை தெரியாம, உங்களை துரத்தி துரத்தி ஓட வச்சுட்டேன். அதுக்காக, இப்போ என்னை பழிவாங்குறது எல்லாம் நியாயமே இல்ல.” என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாக அவள் கூற, அதற்கும் சிரிப்பு தான் வந்தது மயூரனுக்கு.

 

அவனும் என்னதான் செய்வான்? அவளை படுத்த வேண்டாம் என்று முயற்சிக்கிறான் தான். ஆனாலும், அவளை சீண்டி விளையாட அவனுக்கு பிடித்திருக்கிறதே!

 

“ஹ்ம்ம், சரி என்ன பண்ணலாம்?” என்று அவனும் அவள் வழியே செல்ல, “நம்ம வேணும்னா ஒரு டீலிங் போட்டுக்கலாம். இதுவரை நடந்த எல்லாத்தையும் அழிச்சுட்டு, முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமே?” என்று அப்பாவித்தனத்தை மொத்தமாக குத்தகை எடுத்த குரலில் கேட்டவள், “ஃபிரெண்ட்ஸ்?” என்று அவனை நோக்கி கரத்தை நீட்டினாள்.

 

நீட்டிய அவளின் கரத்தையும், அவளின் வதனத்தையும் மாறி மாறி கண்டவன், “ஃபிரெண்ட்ஸா? எப்படி எப்படி பார்த்த முதல் நாளே காதலை சொல்லி, கல்யாணம் நடந்த முதல் நாள், எல்லா கோட்டையும் அழிச்சுட்டு, புதுசா ஃபிரெண்ட்ஸ்னு ஆரம்பிக்குறதா?” என்று கேட்டான் அவன்.

 

“நீங்க தான் சொன்னீங்க, நான் செஞ்சது பேரு காதலே இல்லன்னு.” என்று சொல்லியவளின் குரல் கரகரத்தது, அந்நினைவுகளின் தாக்கத்தால்!

 

அவளின் இந்த முயற்சி எதற்காக என்று அவனுக்கும் புரிந்து தான் இருந்தது.

 

இருவருக்கிமிடையே நடந்த கசப்பான சம்பவங்களை அப்படியே கடக்க எண்ணாமல், மறக்க நினைக்கிறாள் மயூரனின் துவாரகா.

 

புரிந்த பிறகும் மறுப்பானா என்ன?

 

அவளை மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்க விடாதவனாக, “ஆமா, எவ்ளோ நாள் ஃபிரெண்ட்ஷிப் இது? அடுத்து என்ன ஸ்டேஜ்? டீலிங் எப்படி அக்ரீமெண்ட் போட்டா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்க, “எது அக்ரீமெண்ட்டா?” என்று கேட்டவள், அவனை முறைத்தாள்.

 

“ஹலோ, இதென்ன பிசினஸா அக்ரீமெண்ட் எல்லாம் போட?” என்று உதட்டை சுழித்து அவள் வினவ, “நீதான் ஜென்சி கிட்டாமே! துரத்தி துரத்தி லவ் பண்றது மாதிரி அக்ரீமெண்ட் மேரேஜ் கான்செப்ட் பிடிக்குமோன்னு நினைச்சேன்.” என்று தோளை குலுக்கினான் அவன்.

 

அதில் பல்லைக் கடித்தவள், “அக்ரீமெண்ட் போடலாம்… அதுல முதல் பாயின்ட்டே, இப்படி சும்மா சும்மா என்னை கிண்டல் பண்ணக் கூடாதுங்கிறது தான்.” என்று கூற, “அது சரி, இப்படி வாசல்ல வச்சே அக்ரீமெண்ட் போட போறோமா?” என்று அவன் கேட்டதும் தான், அத்தனை நேரம் இருவரும் துவாரகாவின் அறை வாசலில் நின்று பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

 

“ஓஹ் சாரி சாரி…” என்றவள், அவன் உள்ளே நுழைவதற்கு வழி விட்டு நிற்க, அப்போது தன அவளின் அறை இருக்கும் நிலை அவளுக்கு உரைத்தது.

 

உடனே, அவனை வெளியே தள்ளி விட முயற்சிக்க, “அதான் நான் எல்லாத்தையும் பார்த்துட்டேனே. அப்பறம் எதுக்கு மறைக்கணும்?” என்று அவன் அவளை எளிதாக சமாளித்து உள்ளே நுழைந்தபடி கூறினான்.

 

அவன் கூறியவற்றைக் கேட்டு அவள் நெஞ்சில் கைவைத்துக் கொள்ள, அப்போது தான் அவனுக்கும் அவன் உதிர்த்த வார்த்தைகள் நினைவுக்கு வர, “அட, நான் இப்போ சிங்கில் மீனிங்ல… அதுவும் ரூமோட கண்டிஷனை தான் சொன்னேன். நீயா வேற அர்த்தம் எடுத்துக்கிட்டா, அதுக்கு நான் பொறுப்பில்ல.” என்றான்.

 

அவனை முறைத்தவளின் முகம் முழுக்க சிவப்பு பூசிக் கொண்டது. அது கோபத்திலா இல்லை அரிதாக முளைக்கும் வெட்கத்திலா என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

 

“இதோ… இதுவும் ஆடட்! ஃபிரெண்ட்ஷிப் ஸோன்ல இருக்க வரை நோ டபிள் மீனிங் டாக்ஸ்.” என்று அவள் கூற, அவன் ஏதோ கேட்க வருவதற்கு முன்னரே, “முதல்ல, ஃபிரெண்ட்ஷிப் ஸோனை மட்டும் ஃபோகஸ் பண்ணுவோம்.” என்றாள் கறாராக.

 

“க்கும், கிழிஞ்சது!” என்ற அவன் முணுமுணுப்பு அவளுக்கு கேட்டாலும், அதை அவள் கண்டு கொள்ளவில்லை.

 

அவன் அந்த அறையை சுற்றி பார்க்கும் போதே, “அடுத்து, என் ரூம் இப்படி தான் இருக்கும். மியூசியம் மாதிரி எல்லாம் இருக்காது. சோ, ஒழுங்கா அரேஞ் பண்ணலன்னு எல்லாம் சொல்லக் கூடாது.” என்றாள் வேகமாக.

 

‘அடிப்பாவி, சும்மா பார்க்க தான செஞ்சேன்.’ என்று விழிகளாலேயே வினவியவன், “ஆமா, அதென்ன நீ மட்டும் கண்டிஷன்ஸை அடுக்கிட்டே இருக்க? எனக்கும் கண்டிஷன்ஸ் இருக்கு.” என்று கட்டிலின் ஒரு பக்கத்தில் அவன் அமர்ந்து கொள்ள, மறுபக்கத்தில் இயல்பாக அமர்ந்தவளும், “எல்லா கண்டிஷன்ஸும் அக்செப்ட் பண்ணுவேன்னு நினைக்காதீங்க. எனக்கு எது ஓகேவோ, அதை மட்டும் தான் அக்செப்ட் பண்ணுவேன்.” என்றாள் அவள்.

 

‘அக்ரீமெண்ட்’ என்று ஆரம்பித்த அவர்களின் பேச்சு, இறுதி வரை ‘அக்ரீமெண்ட்’ போடப்படாத பேச்சாகவே நீண்டது.

 

இப்படியே சாதாரணமாக பேசி பேசி அந்த இரவை இயல்பாக கழித்தனர் மணமக்கள் இருவரும்.

 

இருவருக்குமே அந்த நேரம், அந்த சூழல் பிடித்தே இருந்தது. அவசர திருமணம், ஒருவிதத்தில் கட்டாய திருமணம் என்பது அவர்களின் நினைவிலேயே இல்லை எனலாம்.

 

கடந்து போனவற்றை மறக்க எண்ணியவர்கள், அதில் வெற்றி பெறுவரா என்பது மறந்தால் தானே தெரியும்? காலமும் சூழலும் அதற்கு துணை புரியுமா? இல்லை, மறந்து விட்டதாக எண்ணுபவற்றை கிளறி எடுத்து புதிய ரணங்களை பரிசளிக்குமா? பதில் காலத்தின் கைகளில்…

 

*****

 

இரு நாட்கள் சென்ற வேகமே தெரியவில்லை.

 

அந்த இரு நாட்களும், மயூரனின் ஜாகை துவாரகாவின் இல்லத்தில் தான். அதில், பெண்ணவளுக்கு இன்னமும் மகிழ்ச்சி தான்!

 

இடைப்பட்ட சமயத்தில், இருவரும் நண்பர்கள் என்னும் போர்வையில் நெருங்கி இருந்தனர், பேச்சுக்களின் மூலம்!

 

அவன் அவளுக்கு மயூவாகி இருந்தான். அவள் அவனுக்கு வராவாகி இருந்தாள்.

 

மறந்தும், அவளை ‘குட்டிம்மா’ என்று அவன் அழைக்கவில்லை. அதன் பின் இருக்கும் ரகசியம் என்னவோ?

 

அன்றைய நாள் காலை மயூரன், துவாரகா, கோபிநாத் மூவரும் உணவுண்டு கொண்டிருந்தனர்.

 

எதையோ யோசித்தபடி இருந்த மயூரன், திடீரென்று, “மாமா, ஊருக்கு போகலாம்னு நினைக்குறேன்.” என்று மொட்டையாக கூற, கோபிநாத் சந்தோஷமாக அதற்கு ஒப்புக்கொள்ள, ஒன்றும் புரியாத துவாரகாவோ, வாயில் வைத்து வடையுடன் கணவனை பாவமாக பார்த்து வைத்தாள்.

 

அவள் மனதிலோ, ஹையோ, இன்னும் ஃபேமிலி ட்ரீ போடவே இல்லையே. எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே!’ என்ற பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
27
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்