Loading

 

மைதிலியின் உரிமைப் பேச்சில் விழிகள் மின்ன இன்ப அதிர்வில் நின்றிருந்த பிரஷாந்த் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டான்.

“நான் ஒரு அப்பாவி மைலி. வாயில விரல் வச்சா கூட கடிக்கத் தெரியாது. நீ வேணும்னா வச்சுப் பாரேன்…” அவள் முன் குனிந்து குறும்புடன் உரையாடியவனின் பேச்சில் விருட்டென சிவந்து இயல்பானது பாவையின் கன்னங்கள்.

“இந்த டபிள் மீனிங்ல பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க…” என்று விரல் நீட்டி எச்சரிக்க,

“நான் சிங்கிள் மீனிங்க்ல தான் சொன்னேன். உனக்கு தான் டர்ட்டியா தோணுது” என பிரஷாந்த் அடக்கப்பட்ட நகையுடன் கூறியதில், மைதிலி தான் தடுமாறிப்போனாள்.

தங்களை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் புது மனைவியுடன் கொஞ்சிக்கொண்டிருந்த மகனைக் கண்ட நித்திலாவிற்கும் சுகுமாருக்கும் ஆத்திரம் தலைக்கு ஏறியது.

“உன் பொண்டாட்டியை கொஞ்சுனது போதும். பெத்தவங்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டு அண்ணன் செத்த கவலையும் இல்லாம, எப்படி உன்னால நிம்மதியா இருக்க முடியுது…” என்று மகனின் மகிழ்வைக் கூட பொறுக்காத சுகுமாரன் எரிச்சலடைந்தார்.

“இவளை நான் கொஞ்சுனேன் நீங்க பார்த்தீங்க… அப்படியே கொஞ்ச விட்டுட்டாலும்…” இறுதி வரியை மட்டும் சலிப்புடன் முணுமுணுத்துக் கொண்டதில், அது மைதிலியின் காதிலும் விழுந்தது.

வெளியில் முறைத்தாலும், அவன் கூறிய தோரணையில் இதழ்களை மீறி துடித்தது புன்னகை.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு? இன்னும் யார் வாழ்க்கையை கெடுக்க வந்துருக்கீங்க” எனக் கோபத்துடன் கேட்டான் பிரஷாந்த்.

நித்திலா கண்ணில் நிறைந்த நீருடன், “உன் வாழ்க்கையை யாரும் கெடுக்க வரலப்பா. நீ நல்லா இரு. பெத்தவங்களை ஜெயிலுக்கு அனுப்ப விட்டு வேடிக்கை பார்த்தவன் தான நீ. உன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகலைன்னு ஒன்னு ரெண்டு பொய் சொல்லி கல்யாணம் பண்ணுனது தப்பா. ஊர் உலகத்துல யாருமே பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணுனது இல்லையா. எந்தப் பையன் வீட்ல, முழு உண்மையை சொல்லி கல்யாணம் பண்ணி வைப்பாங்க. ஏன் பொண்ணு வீட்ல கூட தான் நிறைய விஷயத்தை மறைச்சு கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அந்த மிருணா மட்டும் என்ன ஒழுங்கா. அவளும் காலேஜ் படிக்கும் போதே அந்த அமரோட மச்சான் தயா கூட சுத்திட்டு தான இருந்துருக்கா. அதான, என் புள்ளை போய் சேரவும் விட்டது தொல்லைன்னு உடனே அவன் கூட போய்ட்டா. அப்ப அவ குடும்பத்தையும் தான் உள்ள தூக்கி போடணும்…” என்று வீட்டு வாசலில் நின்று கத்தி சண்டையிட்டார்.

பிரஷாந்த்திற்கு ஆற்றாமையாக இருந்தது.

“உங்க வாயில விஷத்தைத் தடவி வச்சுருக்கீங்களா என்ன? அநியாயமா ஒரு பொண்ணு மேல பழி போடாதீங்கமா. நீங்க சொன்னது எல்லாம் சின்னப் பொய் இல்ல. உங்களால ஒரு பொண்ணோட வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கு. அவள் தற்கொலை பண்ணிருந்தா, என்ன பண்ணிருப்பீங்க?

ஹ்ம்ம்… என்ன பண்ணிருப்பீங்க… அப்பவும் அவள் கேரக்டரை தான் அசாசினேட் பண்ணிருப்பீங்க. உங்க மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்கிறதுக்காக அடுத்தவங்களை குற்றம் சொல்லி அவங்களைக் குற்ற உணர்ச்சில தள்ளுறது எவ்ளோ கேவலம் தெரியுமா. உங்க பெரிய பையனுக்காக ஏதோ குளறுபடி பண்ணிட்டீங்க சரி. ஆனா அதை என்கிட்ட சொல்லாமல், என்னையும் கோபப்படுத்தி, ஒரு அப்பாவிப் பொண்ணு மேல சேறை வாரி இறைக்க வச்சது எந்த விதத்துல நியாயம். எவ்ளோ மன்னிப்பு கேட்டாலும், அந்தப் பொண்ணை நான் பேசுன பேச்சு எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா. உங்களுக்கு பிறந்த பாவத்துக்கு என்னை சாகுற வரை குற்ற உணர்ச்சில வாழ வைக்கிறது போதாதுன்னு, இப்பவும் வந்து விஷத்தைக் கக்குறீங்க. போதும். தயவு செஞ்சு ஊருக்குக் கிளம்பிப் போய்டுங்க. நீங்க பெயில்ல தான் வந்துருக்கீங்க. முழுசா வெளில வரல. அதை ஞாபகம் வச்சுக்கோங்க ரெண்டு பேரும்” என்று அதிகப்பட்ச கோபத்தில் நெருப்பைக் கக்கினான்.

சுகுமாரோ, “பெயில்ல தான் வந்துருக்கோம்னு சந்தோஷப்படாத. இந்த கேஸ்ல இருந்து எப்படி வெளில வரணும்னு எனக்குத் தெரியும். இப்ப வரைக்குமாவது பெத்த பையன்ற பாசம் கொஞ்சமாவது இருந்துச்சு. இனி அதுவும் இருக்கப் போறது இல்ல. நீ என்ன எங்களை கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய விடுறது… உன்னை நான் அலைய விடுறேன்” என்று வஞ்சத்துடன் கூறியவர், இருவரையும் காட்டத்துடன் பார்த்து விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு சென்று விட, பிரஷாந்த் அடக்கி வைத்திருந்த பெருமூச்சை வெளியிட்டான்.

“திருந்தாத ஜென்மங்கள்” என்று புலம்பினாலும் உள்ளுக்குள் வலித்தது.

சிறிதேனும் புரிந்து கொள்ள முயலாமல் ஏன் இப்படி வெறிப்பிடித்து அலைகின்றனர் என்ற ஆதங்கம் மிக, அவன் முகத்திலும் வேதனை அப்படியே பிரதிபலித்தது.

அவனைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையைப் பார்க்கலாம் என்ற அலட்சியத்தை தானாக உருவாக்கிக் கொண்டாலும், மைதிலியால் அதனை பின்பற்ற இயலவில்லை.

“விடுங்க பிரஷாந்த். அவங்களால ஒன்னும் பண்ண முடியாது. அவங்க பேசுறதை பெருசா எடுக்காதீங்க…” என்று சமன் செய்ய, அவனிடம் இருந்து “ம்ம்” மட்டுமே வந்ததே.

‘ப்ச் உங்களைத் தான் சொல்றேன். இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சு என்ன ஆகப் போகுது. போய் கிளம்புங்க அண்ணியோட பர்த்டே பார்ட்டி இருக்குல்ல” என்று அவனை விரட்ட,

“நீங்க மட்டும் மூஞ்சியை சிடுசிடுன்னு வச்சுக்கலாம். நான் உர்ருன்னு இருக்கக் கூடாதா. நான் உர்ருன்னு இருந்தா உனக்கு ஒரு மாறி அனீஸியா இருக்கா மைலி…” வருத்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மனையாளை ரசிக்க,

“கொஞ்சம் கேப் குடுத்துட கூடாதே… உடனே லவ் பீல்ல ஃப்ளர்ட் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுறது. ஆளையும் மூஞ்சியையும் பாரு” என்று நொடித்து விட்டு குளிக்கச் சென்றாள்.

அதில் தலையாட்டிச் சிரித்துக் கொண்டவன், காலை உணவைத் தயாரித்து வைத்து விட்டு, அவனும் கிளம்பினான்.

“போகும் போது, கிப்ட் வாங்கணும்…” என மைதிலி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, காலிங் பெல் சத்தம் கேட்டது.

இம்முறை பிரஷாந்த் தான் கதவைத் திறந்தான்.

அவனுக்கு போஸ்ட் வந்திருப்பதாக சொன்னதும், புருவம் சுருக்கி சிந்தித்தான்.

கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டவனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“என்ன போஸ்டை கையிலேயே வச்சுக்கிட்டு யோசிச்சுட்டு இருக்கீங்க?” மைதிலி கைப்பையை மாட்டியடி கேட்க,

“அதில்ல, என் அபிஷியல் பெர்சனல்க்கு எல்லாமே வில்லா அட்ரஸ் தான் குடுத்து இருக்கேன். இந்த அட்ரஸ் யாருக்கும் தெரியாது. அப்பறம் எப்படி இங்க கொரியர் வந்துச்சுன்னு தான் யோசிக்கிறேன்” என்றதும்,

“பிரிச்சுப் பாருங்க…” என்றதும் அவனும் பிரித்தான். உள்ளே வக்கீல் நோட்டிஸ் இருந்தது.

சுகுமாரின் சொத்துக்கள் அனைத்தும் அவருக்கும் அவரது மனைவிக்கும் மட்டுமே உரித்தானது என்றும், அதற்கும் பிரஷாந்திற்கும் சம்பந்தமில்லை என்றும் குறிப்பிட்டு இருக்க, தற்போது அவன் இருக்கும் வில்லாவையும் காலி செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டு இருந்தது.

அதனைக் கண்டு மைதிலிக்கு கோபம் தான் வந்தது.

“உங்க அப்பா எல்லாம் செட் பண்ணிட்டு தான் வந்துருக்காரு போல பிரஷாந்த். நீங்க தன்மையா பேசுனா, அப்படியே உங்களை கூட்டிட்டுப் போய்டலாம், இல்லன்னா உங்களை ஆட்டிப் படைக்கலாம்னு நினைச்சுருப்பாரு போல. அவங்க சொத்து எதுவும் நமக்குத் தேவை இல்லை. ஆனா வில்லா உங்களோடது தான? அது முழுக்க முழுக்க உங்க பணம் தான? அப்பறம் எப்படி இவர் அதை கேட்கலாம்” என்றாள் பொருமலாக.

பிரஷாந்திற்கு தான் முகம் கன்றியது. இறுகிய குரலில், “என் பணம் தான். ஆனா… லோன்ல தான் வாங்குனேன். என்னால துபாய்ல இருந்துட்டு இங்க லோன் எடுக்க முடியல. அதனால அகரன் அப்பா பேர்ல லோன் எடுத்துக் குடுத்தான். சோ, ப்ராப்பர்டியும் அவர் பேர்ல தான் இருந்துச்சு. இடைல ஒரு தடவை நான் இந்தியாவுக்கு வந்துருந்தப்ப, தேவாவுக்கும் தயாவுக்கும் பிளான் பண்ணுன இடத்தை மட்டும் லோன் அடைச்சுட்டு என் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டேன். எனக்குன்னு வாங்குன பிளாட்ட அப்பா பேர்ல தான இருக்கு மாத்த வேணாம்னு சொல்லிட்டேன்.

நல்லவேளை என் பேர்ல இருந்ததுனால தான், தயாவுக்கும் தேவாவுக்கும் வாங்குன இடத்தை அவங்ககிட்ட குடுக்க முடிஞ்சுது. இல்லன்னா அதையும் சுருட்டிருப்பாங்க. ஏற்கனவே அகரன்க்கு நான் அவங்களுக்கும் சேர்த்து வாங்குனதுல விருப்பம் இல்லை. அவனுக்கும் ஒன்னு வாங்குறேன்னு சொன்னதுக்கு, அவன் ஹைதராபாத்த விட்டு வரமாட்டேன்னு சொல்லி, ஹைதராபாத்ல வாங்கி குடுக்க சொன்னான்.

அங்க காஸ்ட் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. சென்னைல நான் வாங்கும் போது அந்த வில்லா ஏரியா ரொம்ப அவுட்டர். சோ கம்மி விலைக்கு தான் வாங்குனேன். அந்த லோனை அடைச்சுட்டு, ஹைதராபாத்ல அவனுக்கு வாங்கித் தரேன்னு சொன்னேன்.

இத்தனைக்கும் அவன்கிட்டயும் அப்பாகிட்டயும் நான் தெளிவா சொல்லிட்டேன். ‘நான் சும்மா வாங்கி கொடுக்கல. பிரெண்ட்ஸ்க்கு சர்ப்ரைஸ் பண்ண தான் அவங்ககிட்ட சொல்லாம வாங்குறேன். எப்படியும் தயாவும் தேவாவும் பணம் குடுக்காம வாங்க மாட்டாங்க’ன்னு சொல்லியும் அவங்களுக்கு பிடிக்கல தான். ஆனா, அந்த நேரத்துல நான் அதை பெருசா எடுக்கல. அவங்களை கஷ்டப்படுத்த வேணாம்னு தான், அப்பா பேர்ல இருந்த வில்லாவையும் என்பேர்ல மாத்திக்காம துபாய்க்கு திரும்பப் போய்ட்டேன். கொஞ்ச மாசத்துல லோனையும் அடைச்சுட்டேன். இப்போ அதுவே எனக்கு பேக் ஃபயர் ஆகிடுச்சு…” என்றவனுக்கு லேசாக கண் கலங்கியது.

மைதிலிக்கு அவனை எண்ணி சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

“நீங்க என்ன தாராள பிரபுவா. உங்களுக்கு அண்ணன்னா அவன் தான உங்களுக்கு வாங்கித் தரணும், என்னமோ குடுத்து வச்ச மாதிரி உங்ககிட்ட கேட்குறான். நீங்களும் தான தர்மம் பண்ணிட்டு இருந்துருக்கீங்க. லோனை அடைச்சுட்டு சும்மா இருந்தீங்களா, இல்ல உங்க அண்ணனுக்கு இடம் வாங்கி குடுத்தீங்களா?” என்று முறைப்பாகக் கேட்க,

கீழுதட்டை அழுந்த கடித்தவன், “அவன் கல்யாணத்துக்கு கிஃப்ட்டா அவன் ஆசைப்பட்டான்னு ஹைதராபாத்ல லேண்ட் வாங்குனேன். லோன்ல வாங்கி குடுத்தா நல்லா இருக்குதுன்னு, ரெடி கேஷ் குடுத்து வாங்குனேன்” என்றான் உள்ளே சென்ற குரலில்.

“எவ்ளோ அது?” கறாராக மைதிலி கேட்க,

“கிட்டத்தட்ட 40 லட்சம் வரும்…” பிரஷாந்த் தயக்கமாக கூறியதில்,

“அடப்பாவி… உனக்கு துபாய்ல எவ்ளோ தான் சம்பளம்?” எனக் கேட்டாள் வாயில் கை வைத்து.

“பர்ஸ்ட் 3 லட்சம் கடைசி ரெண்டு வருஷம் மட்டும் மாசம் 7 லட்சம் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன்… இன்னும் 5 இயர்ஸ் ஒர்க் பண்ணுனா ஜெனரல் மேனேஜர் போஸ்ட்க்கு ஆபர் பண்றோம்னு சொன்னாங்க நான் ரிலீவ் ஆகும் போது… பட் வேணாம்னு சொல்லிட்டேன்”

“7 லட்சமா? ஜி எம் போஸ்ட் தரேன்னு சொன்னதை விட்டுட்டு எதுக்கு வந்தீங்க இங்க. அங்கயே இருந்திருந்தா கூட, உங்க அப்பா, அம்மா சும்மா இருந்துருப்பாங்க” அதிர்ந்து போனாள் மைதிலி.

“7 லட்சம் 10 லட்சம் ஆகியிருக்கும். ஜி எம் போஸ்ட், எம் டி போஸ்ட் கூட கிடைக்கும்… ஆனா அதெல்லாம் உன் கூட இருக்குற நிம்மதியை எனக்குத் தராதே!” நிமிர்ந்து அவள் விழி பார்த்து அழுத்தமாய் கூறியதில் மைதிலி தான் சிலையாகிப் போனாள்.

“அங்க இருந்துட்டு இங்க மாறும் போது சாலரி டிக்ரீஸ் ஆகி இருக்குமே?” வருத்தத்துடன் அவள் கேட்க,

“ம்ம்… இங்க 1.5 லாக்ஸ் தான் ப்ளஸ் டீ – ப்ரமோஷனும்” என்றான் மீண்டும் விழி தாழ்த்தி.

“உங்களுக்கு என்ன பைத்தியமா பிரஷாந்த். அவன் அவன் வேலை கிடைக்காம சுத்திட்டு இருக்கான், இவ்ளோ நல்ல சான்ஸ் கிடைச்சும் கேரியரை விட்டுட்டு நல்ல வாழ்க்கையும் இல்லாம, என் கூட போராடணும்னு உங்களுக்கு தலையெழுத்தா? நான் இருக்குறதே சாபக்கேடா நினைச்சுட்டு இருக்கேன். இதுல என் சாப வாழ்க்கைல நீங்களும் ஏன் கூட சேர்ந்து சாபத்தை வாங்கிக்கிறீங்க” ஆதங்கம் தாளாமல் குரல் கம்ம கேட்டு விட்டாள்.

கண்ணில் நீர் தேங்கி இருந்தது. அவளை கண்டிப்புடன் பார்த்த பிரஷாந்த், “இது என்ன பேச்சு சாபக்கேடு அது இதுன்னு, நம்ம நினைச்ச வாழ்க்கை நினைச்ச நேரத்துல கிடைக்கலைன்றத்துக்காக, ஒட்டு மொத்தமா வாழ்க்கையே வேணாம்னு இருக்குறது மடத்தனம் மைலி.
லைஃப் ரொம்ப விசித்திரமானது. நம்ம கேக்குறது கேட்குற நேரத்துல கிடைக்காது. ஆனா கேட்காத நேரத்துல அள்ளிக் குடுக்கும். அப்போ அதை ஏத்துக்குற மனப்பக்குவம் நமக்கு இல்லைன்னா, வாழ்க்கையே பாரமா தான் இருக்கும்…” என்றவன், அவள் கன்னத்தை இரு விரலால் இறுக்கிப் பிடித்து,

“என் வாழ்க்கைல வந்த உன்னை நீயே சாபமா தான் நினைக்கிறன்னா, எனக்கு இந்த சாபம் பிடிச்சுருக்கு. இதே சாபத்தோட செத்துப் போனாலும் எனக்கு சந்தோசம் தான். உன் ப்ரெசன்ஸும் பேபியோட அன்பும் மட்டும் தான் என்னை நிறைவா வச்சுருக்கு. உனக்கு எப்படி ரகுவை குறைவா பேசுறது பிடிக்கலையோ, அதே மாதிரி எனக்கு உன்னை நீயே குறைவா பேசிக்கிறது பிடிக்கலை. இனி பேசாத. பேசுனா, கோபத்துல கிஸ் பண்ணிடுவேன்! பீ கேர்புல்” என்றான் அதட்டலாக.

அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவள் இதயத்தை உருக்கிக் கொண்டிருக்க, இறுதி வாக்கியத்தில் திருதிருவென விழித்தாள்.

‘என்னது கோபம் வந்தா கிஸ் பண்ணுவியா?’ என்ற ரீதியில் மெல்ல முறைத்தவளுக்கு அவனது பார்வையின் வீரியம் தாளவில்லை.

சட்டென விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

வழுவழு கன்னத்தின் மென்மையிலிருந்து மனமில்லாமல் விரலை எடுத்தவன், பெருமூச்சுடன் மீண்டும் அந்த நோட்டீசை பார்த்தான்.

“ப்ச்… பணம் சொத்து போனா போகட்டும் மைலி… எனக்கு அதெல்லாம் வேணாம். ஆனா இந்த வில்லா… நான் என் ப்ரெண்ட்ஸ் கூட பக்கத்துலயே இருக்குறதுக்காக ஆசையா வாங்குனேன். என் பேமிலியை விட அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ணுனது இவங்க கூட தான் மைலி. காலேஜ் படிக்கும் போதே பாரீன் போய்ட்டேன். அப்பவும் தினமும் என்கிட்ட ரெண்டு வார்த்தையாவது பேசாம தூங்க மாட்டாங்க. சில நேரம் நான் போன் எடுக்கலைன்னா கூட, ரொம்ப பதறிடுவாங்க. அந்த பதற்றத்தை என் வீட்ல கூட நான் பீல் பண்ணுனது இல்லை. அவங்களுக்கு அகரன் தான் பர்ஸ்ட். அதுக்கு அப்பறம் தான் மத்த எல்லாரும். அவ்ளோ க்ளோஸா இருந்ததுனாலயோ என்னவோ என் ப்ரெண்ட்ஸ் மேல கோபமும் சட்டுன்னு வந்துருச்சு… ஊஃப்” மீண்டும் ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டு வேதனையைக் குறைக்க முயன்றான். கலங்கிய கண்களை சிமிட்டி சிமிட்டி நீரை உள்ளிழுக்க முயன்றவனை அப்படியொரு நிலையில் பார்க்க இயலவில்லை மைதிலிக்கு.

அப்படியும் ஒரு சொட்டு கண்ணீர் கண்ணைத் தாண்டி விழுந்து விட, நொடியில் அதனைத் துடைத்து விட்ட மைதிலி, “இப்ப என்ன நோட்டீஸ் தான அனுப்பி இருக்காங்க. அந்த வில்லாவை உங்ககிட்ட திருப்பி குடுக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க உழைச்சது என்னைக்கும் வீண் போகாது பிரஷாந்த்” என்று கண்டித்திட, அவன் “ம்ம்” என்றான் இதழ் கடித்து.

இன்னும் கண்ணீரை அடக்குகிறான் எனப் புரிய, அவன் கன்னம் பிடித்து திருப்பினாள்.

“நான் தான் சொல்றேன்ல. இங்க பாருங்க என்னை” என்று அதட்டலாக அழைத்தவளிடம் உணர்வை அடக்கத் தெரியாமல், அவளைக் கட்டிக்கொண்டு அவளது தோள் மீது முகத்தை அழுத்தினான்.

ஒரு கணம் அதிர்ந்து போன மைதிலிக்கு மேனியெங்கும் மின்சாரம் பாய்ந்து ஓய்ந்தது போலொரு பிரம்மை.

“கஷ்டமா இருக்கு மைலி. அந்த வில்லாவுக்கான பணத்தைக் கூட நான் குடுத்துடுறேன் அவங்களுக்கு. ஆனா எனக்கு அது வேணும் மைலி” சிறுவன் போல அவளிடம் ஆதரவு தேடியவனை தள்ளி விட துளி கூட விரும்பாதவன், அவன் முதுகோடு அணைத்துக் கொண்டாள்.

“உங்களுக்கானது உங்களை விட்டு என்னைக்கும் போகாது பிரஷாந்த். நான் போக விட மாட்டேன்…” அவளது வார்த்தைகளில் அத்தனை அழுத்தம். அவன் வேதனையின் எதிரொலிப்பு அவளைத் தாக்கியதில், அவனது சிறு துளி கண்ணீருக்கு காரணமானவர்களின் மீது கூட அத்தனை கோபம். இவனையனைத்தும் அவன் மீதான நேசத்தின் எதிரொலிப்பு என்பதை மட்டும் வசமாக மறந்து போனவள், அவளது அணைப்பில் அவனைத் தேற்றி மீட்டாள்.

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
92
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்