2,041 views

இரவு உணவை தயாரித்தவள் கார் ஓட்டுனரிடம் கொடுத்து அனுப்பினாள் மருத்துவமனைக்கு. ஆதிலட்சுமி கணவருக்காக அங்கேயே தங்கிக் கொண்டிருக்கிறார். அவர் இல்லாததால் தோட்டத்திற்கு நீரூற்றிக் கொண்டிருந்தவள் எதர்ச்சையாக மேலே பார்க்க, அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் தரணீஸ்வரன்.

அவன் இருக்கும் திசை பக்கம் சூரியன் மறைந்து கொண்டிருப்பதால் பொன்னிற கதிர்களை வீசி செந்தனல் நிறத்தை படர செய்திருந்தது முகத்தில். மின்னும் கணவனின் முகத்தை கண்டு புன்னகைத்தவள்,

“அதுக்குள்ள சார் எழுந்தியாச்சா” என்பதற்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.

“இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு. நீங்க பண்ணதா அத்தை சொன்னாங்க. இப்படி ரசனை உள்ள ஆளா நீங்கன்னு ஆச்சரியமா இருக்கு. இப்ப எதுக்கு இதெல்லாம் அவாய்ட் பண்ணி வச்சிருக்கீங்க?” என்றவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“பதில் சொல்ல விருப்பம் இல்லையா? இல்ல என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லையா?”

….

“எதுக்கு இதெல்லாம் இவ கேக்குறான்னு நினைக்கிறீங்க தான”

….

“நம்ம மேல என்னடா புதுசா அக்கறைன்னு தோணுதா?” அவள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்க, இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பதில் சொல்லாமல் பார்ப்பவனிடம் இதழ்களை வளைத்து கழுத்தை கோணியவள் திரும்பும் நேரம், “பசிக்குது” என்றான்.

கையில் இருக்கும் தண்ணீர் குழாயை அப்படியே போட்டவள் திரும்பி அவன் முகம் நோக்க, ஆடை இல்லாததால் வயிறு உடலோடு ஒட்டி இருப்பது நன்கு தெரிந்தது. அவன் அறைக்கு உணவை எடுத்துச் சென்றாள். சாப்பாடு கேட்டவன் அதை உண்ணாமல் பிசைந்து கொண்டிருக்க,

“எதுக்கோ வருத்தப்படுறீங்கன்னு தெரியுது ஆனா எதுக்குன்னு தெரியல. சொன்னீங்கன்னா என்னால முடிஞ்ச ஐடியாவை தருவேன்.” என்றாள் அகல்யா.

“உயிருள்ள மனுஷங்களையும் தாண்டி நான் நேசிச்ச அத்தனை விஷயங்களையும் கஷ்டப்படுத்தி இருக்கேன். வெளிய வரணும்னு நினைக்கும் போதெல்லாம் உடல் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்குது அகல்.” என்றவனுக்கு சாப்பிடுமாறு கண்ணை காட்டினாள்.

லேசாக உணவை உண்டவன், “எது எனக்கு வேணும்னு தெரியல. ஆனா எதுவோ ஒன்னு வேணும்னு மனசு ஆசைப்படுது. அது என்னன்னு கண்டுபிடிக்க முடியல.” என்றான்.

“சாப்பிட்டு முடிங்க உங்களுக்கு என்ன வேணும்னு நான் சொல்றேன்.”

“உனக்கு எப்படி தெரியும்?”

“எங்கிட்ட ஒரு மேஜிக் இருக்கு. அதை பண்ணா உங்க மனசுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சுரும்.” என்றவளை அவன் நம்பாமல் சிரிக்க, “இப்படி எல்லாம் சிரிச்சா என் மேஜிக் வேலை செய்யாது.” என்று ஏதேதோ நம்பிக்கை தூபம் போட்டாள்.

தனக்கான வழியை ஒருத்தி காட்டப் போகிறாள் என்ற நம்பிக்கையில் சாப்பிட்டு முடித்தான். அவள் தட்டை வாங்கிக் கொள்ள கை நீட்ட, மறுத்து சமையலறை சென்றவன் சாப்பிட்டதை கழுவி வைத்து விட்டு வந்தான்.

“நீ சாப்டியா அகல்.”

“பசிக்கலப்பா, கொஞ்ச நேரம் போகட்டும் சாப்பிடுறேன்.” என்றவள் தோட்டத்துப் பக்கம் அழைத்து சென்று முக்கால்வாசி மறைந்த சூரியன் முன்பு அவனை நிறுத்தினாள்.

‘என்ன செய்யப் போற’ என்ற கண்ணசைவிற்கு, “கண்ண மூடுங்க” என்றாள்.

“எதுக்குன்னு சொல்லு?”

“சொல்றதை அப்படியே செய்யணும் அப்பதான் மேஜிக் வேலை செய்யும்.” என்று சிணுங்கியவள் பேச்சில் சூரியனை பார்த்தவாறு கண்களை மூடினாள்.

“தரணி நான் சொல்றதை அப்படியே கேட்டுக்கோங்க. இப்போ உங்க கண்ணுக்குள்ள சில நிறம் தெரியும். கண்மூடி இருக்க தோல் மூலமா நுண்ணிய நரம்புகள் தெரியும். அது தெரியும் போது கண்ண இன்னும் கொஞ்சம் இறுக்கமா மூடுங்க… அந்த நிறமெல்லாம் மறஞ்சு கருப்பா இருட்டு தெரியும்.” மனைவி வார்த்தையில் ஆழ்ந்து நோக்கியவன் உணர்ந்தான்.

முழுக்கதிர்வீச்சு இல்லாத நேரம் லேசான ஒளி அவன் கண்களில் பட, உள்ளுக்குள் கூசியது. ஆரஞ்சு மஞ்சள் கலந்த நிறம் கண் முன் தோன்றியது. கூடவே லேசான இருட்டும் துரத்திக் கொண்டு வருவது போல் இருக்க, புன்னகைத்தான்.

“பரவால்ல உன் மேஜிக் கொஞ்சம் வேலை பார்க்குது.” என்றவனோடு அவளும் சிரிக்க,

“எதையும் யோசிக்காம அப்படியே கொஞ்ச நேரம் இருங்க தரணி. நீங்க மட்டும் தனியா நிக்கிற மாதிரி தோணும். காத்து மட்டுமே உங்கள சுத்தி இருக்கும். தனியா நிக்கிற உங்களை  பார்க்க ஒருத்தர் வருவாங்க. அது யாருன்னு தெளிவா பார்த்துக்கோங்க. நீங்க பார்த்த அடுத்த நிமிஷம் அவங்க உருவம் மறையும். பதறாம கண்ணை திறங்க ரெண்டு பேரும் அவங்கள பார்க்க போகலாம்.” அவன் சிந்தனைகளை கட்டிப்போட்டு ஆழ்மனதோடு பேச விட்டாள்.

புன்னகை சிந்தும் பூக்கள் போல் அவன் தனி ஒருவனாக நின்று கொண்டிருக்க, இருள் சூழ்ந்த உலகில் நீரும் அவனை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது கஷ்டம் போல். தப்பித்து வர வழி தெரியாமல் அதில் சுழன்று கொண்டிருக்க, ஒரு உருவம் அவனை நோக்கி வந்தது. மனைவி சொன்ன வார்த்தை பலித்து விட்டதால் உற்சாகத்தோடு அதை காண முயன்றான்.

மனிதனுக்கு இரு கால்கள் இருப்பதற்கு பதிலாக நான்கு கால்கள் இருந்தது. ‘வரது ரெண்டு பேரா!’ என்ற ஆச்சரியத்தில் அவன் முகத்தைப் பார்க்க ஆர்ப்பரிக்க, நீண்ட நாக்கை தொங்க போட்டபடி வந்து நின்றது அவனின் ஆருயிர் தமையன் ஜீபூம்பா. அவன் ஆசை ஆசையாக வளர்த்த நாய். ராஜபாளையம் நாய் தான் தனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி வளர்த்தான்.

சிவானி வருவதற்கு முன்பு வரை அவனின் காதலி ஜீபூம்பா தான். ஒரே மெத்தையில் தான் இருவரும் படுத்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் செல்லும்போது மட்டும்தான் வெளியில் இருக்கும் கூண்டு தேவைப்படும் இருவருக்கும். சிவானிக்கு நாய் மீது விருப்பம் இல்லாததால் வீட்டிற்கு வந்ததும் முகம் சுழித்தாள்.

மனைவியை சமாதானப்படுத்தி நாட்களை கடத்திக் கொண்டிருக்க, துயரம் அவனை கடத்தியது. ஓராண்டு மிதமான மதுவிற்கு அடிமையானவன் அடுத்த ஆண்டு சுயநினைவு இழந்தான். பாசம் கொட்டி வளர்த்தவன் தன்னருகில் இல்லாமல் போனதால் சாப்பிட மறுத்தது ஜீபூம்பா. ஆதிலட்சுமி அதற்காக தனியாக மகனை திட்ட ஆரம்பித்தார். நாளுக்கு நாள் உணவு உண்ணாமல் உடல்நிலை மோசமானது அதற்கு. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலைமைக்கு ஜீபூம்பா செல்ல, தன் உயிரின் உயிராவது மிஞ்சட்டும் என்று மனதை கல்லாக்கி கொண்டு வேறு ஒருவரிடம் பணம் வாங்காமல் விற்றான்.

இமை மூடி இருந்தவனிடம் ஜீபூம்பா எதற்காக என்னை விட்டு சென்றாய் என்று கேட்க, உதடுகள் துடித்து கண்ணில் இருந்து நீர் கொட்டியது. அவனையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தவள் அவன் தோளை தொட, ஆடை கிழிந்து விடும் அளவிற்கு இறுக்கமாக கட்டிப்பிடித்தான். அவள் பேச்சு கொடுக்காமல் முதுகை தடவி விட, “சாரி ஜீபூம்பா.” என்றான் அழுகையின் இடையில்.

நன்றாக இருள் சூழ்ந்து கொண்டது இதுவரையும். அழுகையை நிறுத்தியவன் அவளை விட்டு பிரிந்து நிற்க, “மிஸ்டர் ஜீபூம்பா யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” எனக் கேட்ட மனைவிக்கு விளக்கினான் அவனுடனான தொடர்பை.

“அந்த குட்டி பாஸ் எங்க இருக்காங்கன்னு தெரியுமா? இப்ப வேணா பார்க்க போகலாமா.” முட்டக்கண் இரண்டும் இன்னும் அகலமாக விரிந்தது‌ பேசும்பொழுது.

“என் ஜீபூம்பாக்கு கூட உன்னை மாதிரி பெரிய கண்ணு.”

“அப்போ என்னை உங்க ஜீபூம்பான்னு சொல்றீங்களா?” என முறைக்க, “ச்சீ! என் ஜீபூம்பா ரொம்ப அழகா இருப்பான்.” என அவளை வெறுப்பேற்றினான்.

இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள, தரணியின் தம்பியை பார்க்க கிளம்பினார்கள். ஒரு மணி நேரம் ஆனது அவன் இருக்கும் இடத்திற்கு செல்ல. ஒரு வீட்டின் பின்புறம் நின்றவன் இங்கு தான் ஜீபூம்பா இருக்கிறான் என்பதை சொல்வதற்குள், குரைத்து அவன் வரவை கண்டுகொண்டதாக உணர்த்தியது ஜீபூம்பா.

“வாவ் தரணி….! எப்படிங்க நீங்க வந்ததை இவ்ளோ கரெக்டா கண்டுபிடிக்குது.” என அதிசயிக்கும் மனைவிக்கு,

“அடிக்கடி இங்கு வந்து நிற்பேன். ஒவ்வொரு தடவையும் என்னை சரியா கண்டுபிடிச்சு குலைக்க ஆரம்பிச்சிடுவான். ஓடிப் போய் அவனை கட்டிப்பிடிச்சு கொஞ்சனும்னு தோணும். ஆனா அவன் முன்னாடி போய் நிற்க சங்கடமா இருக்கும்.” என காரின் கண்ணாடி பக்கத்தில் தலை சாய்ந்தான்.

உள்ளே இருந்த ஜீபூம்பா விடாமல் குலைத்துக் கொண்டே இருந்தது. அரை மணி நேரங்கள் கடந்த பின்பும் அதனின் ஓசை குறையவில்லை. அகல்யாவிற்கு மனம் வலித்தது அதை நினைத்து. வாயில்லா ஜீவன் கஷ்டப்படுவதை காண விரும்பாதவள் அவனோடு புறப்பட்டாள் வீட்டிற்கு.

இரவு வந்ததும் பழையபடி அவன் தனக்குள் சுருங்கிக் கொண்டான். கடினப்பட்டு நள்ளிரவில் தூங்க வைத்தாள். நள்ளிரவு தூக்கம் என்பதால் விடியல் சீக்கிரமாக வந்துவிட்டது அவளுக்கு. நான்கு பேருக்கு தேவையான உணவுகளை சமைத்தவள் தயாராவதற்குள் அவன் எழுந்து விட்டான். இன்றும் கம்பெனி செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க,

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லைங்க. நீங்க அங்க போய் தான் ஆகணும். நேத்து மாதிரி மதியம் ஆனதும் வீட்டுக்கு வந்துடுங்க.”

“என்னது வந்துடுங்களா? அப்போ நீ வரமாட்டியா!”

“கொஞ்சம் வேலை இருக்குங்க முடிச்சுட்டு நேரம் இருந்தா அங்க வரேன். இல்லனா வீட்ல பார்க்கலாம்.” என குழந்தை போல் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

வெளியில் வந்தவன் காரை ஆன் செய்ததும் அதற்கான உயிர் மருந்து இல்லை என்பதை புரிந்து கொண்டான். அன்றே ஆதிலட்சுமி அவனிடமிருந்து அனைத்தையும் வாங்கி விட்டதால் உயிர்ப்பித்த காரை நிறுத்தியவன் தன் நிலை எண்ணி கலங்கினான். இத்தனை நாள் போட்ட ஆட்டத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்து வைத்த ஞாபகம் இல்லை அவனுக்கு.

கார் கிளம்பாமல் இருப்பதை அறிந்து, “இவ்ளோ தூரம் வந்துட்டு எதுக்கு அடம் பிடிக்கிறீங்க. ஒழுங்கா கிளம்பி போங்க.” என்றிட,

மிக மெல்லிய குரலில், “ஆயில் இல்ல…அகல்.” என்றான்.

சில நொடி அமைதியில் கழிந்தது. மனைவியின் முகத்தைப் பார்க்க அவன் சங்கடப்பட, “டீசல் தானங்க இல்ல. அதுக்கு எதுக்கு மூஞ்சி இப்படி இருக்கு.” என்று முகத்தை நிமிர்த்தினாள்.

அவளைப் பார்க்காமல் அவன் குனிந்து கொள்ள, “உங்க பர்ஸ்ல காசு வச்சு ரெண்டு நாள் ஆகுது. அதை கூட கவனிக்காம இருந்திருக்கீங்க. தன்னை சுத்தி என்ன நடந்தாலும் கவனம் சிதறாம உஷாரா இருக்கணும். இல்லனா நம்ம மீண்டு வரது கஷ்டம். மணியாச்சு சீக்கிரம் கிளம்புங்க.” என்றவள் முகத்தை ஆழமாக உள்வாங்கியவன் கண்களால் கிளம்புவதாக சொல்லிப் புறப்பட்டான்.

அவள் இருந்தாலே தாக்குப் பிடிக்க முடியாது தரணியால். தன்னை அரவணைக்கும் கை இல்லாமல் மதியத்திற்கு முன்னரே ஓடி வந்து விட்டான் வீட்டிற்கு. மனைவி வீட்டில் இல்லாமல் இருக்க உடலை சுவற்றில் முட்டி சிதைத்து கொண்டவன் முடியாமல் சரிந்தான் மெத்தையில்.

***

“தரணி!”

“தரணி எந்திரிங்க” என கணவனை அவள் எழுப்ப,

“முடியல அகல் என்னை கொன்னுடு.” என நொந்து கொண்டு எழுந்தவன் மேல் வந்து பாய்ந்தது ஜீபூம்பா.

ஆக்ரோஷமான அன்பை கொடுத்தது முகத்தை நாக்கால் நக்கி. பதில் கொடுக்காமல் கண்ணீர் மட்டுமே சிந்திக் கொண்டிருந்தான். குரைத்து அவன் மீது உள்ள கோபத்தை காட்டிய சிறு குழந்தை அவனையே சுற்றி வந்தது. அது இருக்கும் உயரத்திற்கு அமர்ந்திருக்கும் தரணி வாட்டமாகி போக, கால்களை தூக்கி தோள் மீது வைத்தது.

“சாரி!” என்ற அண்ணனின் கண்ணீர் புரிந்ததோ என்னவோ அதையும் நாக்கால் நக்கி தோளில் சாய்ந்து கொண்டது. இறுக்கமாக கட்டிக் கொண்டவன் சத்தமிட்டு அழுதான்.

****

“தேங்க்யூ சோ மச் சார்!. நான் கேட்டதும் உடனே ஜீபூம்பாவை கொடுக்க சம்மதிச்சதுக்கு.”

“பரவால்ல மேடம். இவரு கொண்டு வந்து விட்டதுல இருந்து அது கிட்ட எந்த மாற்றமும் இல்லை. நான் எவ்ளோ ட்ரைனிங் கொடுத்தாலும் என்கிட்ட பழக மாட்டேன்னு அடம் பிடிக்கும். அடிக்கடி சம்பந்தமே இல்லாம கத்திட்டு இருக்கும். நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எதனால கத்துதுன்னு எனக்கு புரிஞ்சுது. இதுக்கு மேலயும் அதை கஷ்டப்படுத்த என்னால முடியாது.” இவ்வளவு நாள் ஜீபூம்பாவை பார்த்துக் கொண்டிருந்தவர் தரணியிடம்,

“எந்த காரணத்துக்காகவும் இனிமே அதை விட்டுடாதீங்க சார். மனுஷங்க கூட உங்க மேல இந்த அளவுக்கு பாசமா இருக்க மாட்டாங்க.” என்று கடைசியாக ஜீபூம்பாவை தொட்டு முத்தமிட்டு கிளம்பினார்.

மனைவியை அவன் புன்னகையோடு பார்க்க, “உங்க பாச கடல்ல மூழ்கி முத்து எடுத்தாச்சா.” என்றவாறு மெத்தையில் அமர,

“லொள்!” என்று குரைத்தது ஜீபூம்பா.

அலறியடித்து எழுந்து நின்றவள் பயத்தோடு அதைப் பார்க்க, முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது ஜீபூம்பா. இத்தனை வருடங்கள் தன்னை விட்டுப் பிரிந்து இருந்தும் சிறிதும் மாற்றம் இல்லாமல் இருக்கும் வளர்ப்பு ஜீவனை பார்த்தவன் புன்னகைத்தான். அதில் கடுப்பானவள் முறைத்தாள்.

மீண்டும் ஒருமுறை சத்தமாக சிரித்துவிட்டு ஜீபூம்பாவின் உடல் முழுவதும் தடவி விட்டான். அதுவோ பல வருடங்கள் கழித்து அவன் கொடுக்கும் சுகத்தை உணர்வதால் ஒருவித பரவச நிலையில் மடியில் அமர்ந்தது. முத்தமிட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டவன்,

“சாரிடா, இதுக்கு மேல உன்னை நான் எங்கயும் அனுப்ப மாட்டேன். நீ என்னோட குழந்தை.” என்றதும், அதனிடம் மெல்லிய ஓசை உருவானது.

“நம்புடா! சத்தியமா இனிமே உன்னை எங்கயும் அனுப்ப மாட்டேன்.” வளர்ப்பு ஜீவனின் உணர்வுகள் புரிந்து அவன் பேசினான்.

இருவரும் விளையாடிக் கொண்டிருக்க ரசித்துக் கொண்டிருந்தாள் அகல்யா. விளையாட்டுக்கு நடுவில் மனைவியின் பார்வையை கண்டு கொண்டவன், “ஜிபூம்பா இது நம்மோட புது பிரிண்ட். இனிமே அகல நீ தான் பத்திரமா பார்த்துக்கணும்.” என்றதும் நான்கு கால் ஜீவனின் பார்வை அவளிடம் சென்றது.

கைநீட்டி மனைவிய அழைத்தவன், “ஹாய் சொல்லு ஜீபூம்பா.” என்றான்.

அவளோ அருகில் வர பயந்து கொண்டு தூரமாக நிற்க, “ஒன்னும் பண்ண மாட்டான் அகல் கிட்ட வா.” என அவளை ஒரு கையில் பிடித்துக் கொண்டவன் ஜீபூம்பாவின் முன் கையை அதில் வைத்தான்.

முதல் முறையாக  இவ்வளவு பெரிய நாயின் கால்கள் தன்மேல் பட்டதும் பயம் அதிகரித்து நகர்ந்து நின்றாள். “லொள்! லொள்ள்ள்!” என்று ஜீபூம்பா ஓசை கொடுக்க, இன்னும் பதறி நகர்ந்து நின்றாள்.

“அவன் நீ கை கொடுக்காம விலகி போனதுல கத்துறான் அகல், கிட்ட வா!” என்ற பின்பு கூட அவள் வர மறுத்தாள்.

எழுந்து சென்றவன் தன்னோடு சேர்த்தவாறு ஜீபூம்பா முன்பு நிறுத்தினான். அது அழகாக மெத்தையில் ஏறி நிற்க இருவரையும் விட உயரமாக தெரிந்தது. அதன் தோற்றத்தைக் கண்டு உள்ளுக்குள் எச்சில் விழுங்கிக் கொண்டவள் தரணியை பார்க்க, அவள் கை பிடித்து தம்பியிடம் நீட்டினான்.

நன்றாக உத்துப் பார்த்த ஜீபூம்பா ஒரு காலை தூக்கி உறவை வளர்த்துக் கொண்டது. நடுக்கமாக அதை பற்றி கொண்டவள் கை மீது தன் கையை வைத்தவன், “அகல் என்ன சொன்னாலும் கேட்கணும். நான் இல்லாத அப்போ கூடவே இருக்கணும்டா.” என்றதும்  குரைத்த செல்லப்பிராணி அவள் வாசத்தை நுகர்ந்து கொண்டது.

வெகு நாட்கள் கழித்து ஜீபூம்பாவை கண்டவன் நடுக்கத்தை மறந்து விளையாடிக் கொண்டிருந்தான். தோட்டத்திற்கு சென்றவர்கள் உடல் வேர்க்க மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்க, அன்றைய மாலை பொழுதே வந்துவிட்டது. மனம் மாறாமல் இருக்கும் கணவனின் நடவடிக்கையில் புன்னகைத்தவள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வந்தாள்.

“ஆஹாங்ங்க்க்!” என்று அதிர, பாவமான முகத்தோடு அவள் முன்பு நின்றது செல்லப்பிராணி. இன்னும் பயம் இருப்பதால் அவள் முழித்துக் கொண்டு நிற்க, அருகில் சென்ற ஜீபூம்பா அவள் துணியை பிடித்து இழுத்தது. பதறி துடித்து போனவள் தரணீஸ்வரனை அழைக்க, அவனோ வரவில்லை.

அவள் கத்துவதை காதில் வாங்காத ஜீபூம்பா துணியைப் பிடித்துக் கொண்டு வேகமாக வெளியில் இழுத்து வந்தது. கத்திக்கொண்டே வாசலுக்கு வந்தவள் கணவன் சிரிப்பதை கண்டு கடுப்பானாள். “இங்க தானங்க இருக்கீங்க நான் கத்துறது காதுல விழலையா?” என்று கோபம் கொள்ள,

“எதுக்கு கத்துற? அவன் உன்ன என்ன பண்ண போறான்? நான்தான் உன்னை கூட்டிட்டு வர சொன்னேன்.” என்று அவளிடம் நன்றாக திட்டுகளை வாங்கிக் கொண்டான்.

அண்ணனை திட்டுவதை உணர்ந்த ஜீபூம்பா அவளிடம் சண்டையிட, “ரொம்ப குரைக்காத திரும்ப கொண்டு போய் அங்கயே விட்டுடுவேன். இத்தனை வருஷமா உன்ன கண்டுக்காம இருந்திருக்காங்க கோபமே இல்லாம இப்படி வாலாட்டிட்டு நிக்கிற. இனிமே அவங்க அது சொன்னாங்க இது சொன்னாங்கன்னு என்கிட்ட வந்த வால நறுக்கிடுவேன்.” என்று மிரட்டினாள்.

செல்லப்பிராணி தரணியை திரும்பி பார்க்க, அவன் முகத்தை பாவமாக வைத்தான். அண்ணனை எதிரில் இருப்பவள் திட்டுகிறாள் என்பதாக நினைத்த ஜீபூம்பா பற்களை வெளிக்காட்டி உர்ர்ர்ர்….என்றது. அதில் அலறியவள் தரணியோடு ஒட்டிக்கொள்ள, “லொள்… லொள்!” என்று குரைத்தது அவை பிடிக்காமல்.

தடவிக் கொடுத்து சமாதானம் செய்தவன் உணவு கொடுத்தான் வெகு வருடங்களுக்குப் பிறகு. மனம் நிறைந்து சாப்பிட்ட ஜீபூம்பா உறக்கத்தையும் மேற்கொள்ள, சிரிப்பு மாறாமல் தடவி கொடுத்துக் கொண்டிருந்தான்.

“ரொம்ப க்யூட்ல ஜீபூம்பா.” என்ற மனைவிக்கு அவன் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைக்க,

“உங்க மேல எந்த அளவுக்கு பாசம் வச்சிருந்தா இத்தனை வருஷமா உங்களை நினைச்சி வாழ்ந்திருக்கும். உங்களுக்கு அன்ப தர இத்தனை பேர் இருக்கும் போது யார நினைச்சு வருத்தப்படுறீங்க தரணி?” என்ற கேள்வியில் சிரிப்பை நிறுத்தியவன் அவளை ஏறிட,

“இந்த மாதிரி ஒரு அன்ப காசு கொடுத்து உங்களால சம்பாதிக்க முடியுமா? மிஞ்சி போனா இதுக்கு என்ன போட்டு இருப்பீங்க மூனு வேளை சாப்பாடு மட்டும் தான. அதுக்கு எவ்ளோ பாசம் கொடுக்குது பாருங்க. இந்த ஒரு அன்புக்காக எத்தனை பேரோட அன்ப வேணாலும் நீங்க இழக்கலாம். இதுக்கு மேலயும் பழசை நினைச்சு கை உதறுது கால் உதறுதுனு சொன்னீங்கன்னா உங்களை விட பெரிய முட்டாள் யாரும் இருக்க முடியாது.” என்று எழுந்து சென்று விட்டாள்.

***

வீட்டின் குட்டி இளவரசர் எழுந்ததும் எஜமானனை தேடி வந்து விட, அதை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள் மருத்துவமனைக்கு. உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதால் காரில் வைத்திருக்க, விஷயம் தெரிந்த ஆதிலட்சுமி ஓடி வந்துவிட்டார். அவரையும் தன் அன்பால் எச்சில் செய்து வருத்தத்தை புரிய வைத்தது.

பல நாட்கள் கழித்து மகனின் முகத்தை பார்த்தார். அதில் தெரியும் மகிழ்வை கண்டு பார்வை மருமகளிடம் தாவியது. எதை நினைத்து அகல்யாவை மருமகளாக மாற்றினாரோ அதன் கதவு திறந்து விட்டது என்பதை உணர்ந்து ஆனந்தம் கொண்டார். பிரிவு என்ற ஒன்றை தராமல் மகனுடன் சேர்ந்து வாழும் எண்ணத்தை மருமகளுக்கு கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டினர்.

இரவு உணவை மருத்துவமனையில் முடித்தவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள். தரணீஸ்வரனின் மாற்றத்தை இப்படியே தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு அவள் அறைக்குள் நுழைய, அண்ணன் தம்பி இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்து இருந்தார்கள்.

முகம் சுளித்தவள் தரணியை எழுப்ப முயற்சித்தாள். பரம நிம்மதியில் தூங்கிக் கொண்டிருந்தவன் பதில் கொடுக்காமல் போக, இருவரையும் முறைத்துக் கொண்டு தரையில் படுத்தாள்.

சில நாட்களாக சரியாக தூக்கம் இல்லாததால் படுத்ததும் தூங்கிவிட்டாள். நள்ளிரவு நேரம் மழை பெய்யும் சத்தம் கேட்டது. தூக்கம் லேசாக கலைய திரும்பிப் படுத்தவள் தன்மீது சுமை இருப்பது போல் உணர்ந்தாள். விழி திறந்து பார்க்க, அவளை அணைத்த படி படுத்திருந்தான் கணவன்.

இருட்டில் தெளிவில்லாத முகமாக இருந்தாலும் அதை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். “எழுப்பிட்டனா?” விழி திறக்காமல் அவன் ஓசை கொடுக்க, “ம்ஹூம்!” என்றாள்.

“தேங்க்ஸ்!”

“எதுக்கு?”

“எல்லாத்துக்கும்.”

“நானும் தேங்க்ஸ்!”

“எதுக்கு?”

“நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டதுக்கு.” என்றவளுக்கு கண்மூடிய நிலையில் புன்னகைத்தான். மௌனமாக காதில் விழும் மழை ஓசையை இருவரும் ரசித்துக் கொண்டிருக்க, பெரும் இடி சத்தம் ஒன்று உருவானது. அதில் அகல்யாவின் உடல் தூக்கி போட, லேசாக சிரித்தான்.

கையை கிள்ளி விட்டவள், “இதுல என்ன சிரிப்பு?” என முறைத்தாள் இருட்டில் முறைப்பது தெரியாது என்பதை மறந்து.

“இடி சத்தத்தைக் கேட்டு ஜீபூம்பாவே அசராம தூங்கிட்டு இருக்கான். நீ என்னடான்னா பயந்து நடுங்கற”

“நான் குழந்தை பிள்ளை.” என்றதும் விழி திறந்தவன், “நட்ட நடு ராத்திரியில பொய் சொல்லாத இடி மேல விழுந்துடும்.” என்று அவளிடம் இருந்து அடிகளை வாங்கிக் கொண்டான்.

மழை லேசாக விட்டிருக்க, “இவ்ளோ நேரம் தூங்காம இருந்தா எப்படி காலையில கம்பெனிக்கு போவீங்க.” அவள் முழித்து இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக ஆகிவிட்டதால் கேட்டாள்.

“ரொம்ப நேரமா தூங்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அகல். தூக்கம் தான் வர மாட்டேங்குது.” என்றவன் நிமிர்ந்து படுத்து அறையின் விட்டத்தை வெறித்தான்.

பதில் கொடுக்காமல் அவன் மனநிலையை புரிந்து கொள்ள முயன்றாள். அதற்குள் அவன் பலமுறை புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். அவன் இருக்கும் பக்கம் நகர்ந்து படுத்தவள் தலை வருடி விட, அதை எடுத்து நெஞ்சோடு வைத்துக் கொண்டவன் கை கால்களை குறுக்கிக் கொண்டு படுத்தான்.

அவனுக்கு எது வேண்டும் என்பதை புரிந்து கொண்டவள் எழுந்த அமர்ந்தாள். தான் தொட்டது பிடிக்காமல் எழுந்து கொள்வதாக உணர்ந்தவன் கண்களால் மன்னிப்பு வேண்ட, ‘என்ன வேணும்’ என்றாள் அதே கண்களால்.

சொல்ல தோன்றாது அவன் தலையசைக்க, படுத்தவள் தன்னோடு சேர்த்துக் கொண்டாள் அவனை. இந்த அணைப்பு இல்லாமல் தான் தூங்க முடியவில்லை என்பதை வாய் விட்டு சொல்ல முடியாதவன் தவித்துக் கொண்டிருக்க, உணர்வுகளை படம் பிடித்துக் கொண்டவள் திரையிட்டாள் தன் மார்போடு சேர்த்து.

வலது பக்க மார்பில் தலை வைத்து கைகளை வயிற்றில் போட்டுக் கொண்டவன் இன்னும் அவளோடு நெருங்கி படுத்தான். சிக்கி இருக்கும் கைகளை அவன் பின்னந் தலையோடு சுற்றிக்கொண்டு லேசாக வருடி விட,

“ரொம்ப நேரமா இதைக் கேட்க முடியாம கஷ்டப்பட்டுட்டேன் அகல், தேங்க்ஸ்!” என்றவன் இருவருக்கும் ஒரே போர்வையை போர்த்திக் கொண்டு சுகமாக தூங்கினான்.

எண்ணங்கள் எங்கெங்கோ சென்று கொண்டு இருக்க, அவளையும் அறியாமல் தூங்கிப் போனாள். எங்கும் திரும்ப முடியவில்லை அவளால். அந்த அளவிற்கு படுத்துக் கொண்டிருந்தான் பக்கத்தில் இருந்தவன். மரத்துப்போன கை கால்களால் தூக்கம் கலைந்து விட்டது. தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்தவள் தலையில் அடித்துக் கொண்டாள் அவனுக்கு பக்கத்தில் படுத்து இருக்கும் ஜீபூம்பாவை பார்த்து.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
80
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *