Loading

14

கண்ணாடி தடுப்பு வழியே தெரிந்த தார் சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள் மிதிலா.

அவளின் எதிரே அமர்ந்திருந்தவனோ, அவளையே தான் கண் சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டு, இல்லை இல்லை அவன் மொழியில் கூற வேண்டுமானால் ரசித்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.

வெயிட்டர் அவன் அருகே வர, “ரெண்டு தேங்கா பால்” என்றான் ரகுநந்தன்.

“நான் சொன்னனா எனக்கு தேங்கா பால் வேணும்னு” என அவள் முறைக்க,

அவரிடம், “எனக்கு ஒரு தேங்கா பால் ண்ணா…” என்றவன் அமைதியாக, அந்த வெயிட்டரோ மிதிலாவைப் பார்த்து, “மேடம், உங்களுக்கு?” என்றார்.

“எனக்கும் ஒரு தேங்கா பால்” என்றாள் மிதிலா. ‘இத தான நானும் சொன்னேன்’ என்ற ரீதியில் அவளைப் பார்க்க,

“அத நான் தான் சொல்லணும். எனக்கு வேணுங்கிறத நீங்க எப்படி சொல்லலாம்?” என்றாள் அவள் சிறு முறைப்புடன்.

வெய்ட்டரோ இருவரையும் ஏதோ வேற்றுகிரக வாசியை பார்ப்பது போல் பார்த்து விட்டு நகர்ந்தார்.

அவளோ, அவனிடம் பேச மனமில்லாமல் மீண்டும் சாலையையே வெறிக்க,

“ஜானு…” என மெல்ல அழைத்தான் ரகுநந்தன்.

“கால் மீ மிதிலா” என கோபப் பார்வை அவள் பார்த்து வைக்க, “சரி மிது. இப்போ எதுக்கு இவ்ளோ கோபம்?” என்றான் ரகுநந்தன்.

“நான் ஏன் சார் உங்க மேல கோபப்படணும். நீங்க யார் எனக்கு?” என பட்டென பதில் வந்தது.

அவள் பதில் அவன் மனதை தாக்கினாலும், “நான் யாருனு தெரியாம தான் என் கூட காஃபி ஷாப்ல உட்கார்ந்து இருக்கீங்களா மிதிலா?” என அவனும் பன்மைக்கு தாவினான்.

“நானா ஒன்னும் வரல, நீங்க தான் இங்க வெய்ட் பண்ண சொன்னதா என் கூட பொறந்தவ சொல்லி என்னை வண்டி ஓட்ட விடாம தடுத்தா. இப்போ அவளையும் ஆட்டோ பிடிச்சு வலுக்கட்டாயமா அனுப்பி வச்சுட்டு, என்கிட்ட இந்த கேள்விய கேட்குறீங்க. இது நியாயமா?” என்றாள் மிதிலா.

“சரி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்துல உட்கார வேண்டாம். கிளம்பு” என்றான் ரகுநந்தன்.

அவனின் இந்த பதில் அவள் எதிர்ப்பார்க்காதது. “நான் எப்போ போகணும்னு எனக்கு தெரியும்” எனும் போதே ஆவி பறக்க தேங்காய் பால் கொண்டு வந்து வைத்தார் வெயிட்டர்.

அவள் அதனை ஆற அமர ரசித்து ருசித்துக் கொண்டிருக்க, அவளை ரசித்தவாறே தேங்காய் பால் குடித்தான் ரகுநந்தன்.

இடையே, “இந்த கடைல தேங்கா பால் நல்லா இருக்குல்ல” என்க, அவள் தலை தானாக ஆடியது.

பின், “நான் பொறந்து வளர்ந்த ஊரப் பத்தி எனக்கே சொல்லி தர்றீங்களா?” என்றாள் சட்டென்று.

“நான் ஊரப் பத்தி சொல்லல, தேங்கா பால் பத்தி தான் சொன்னேன்…” என்றவன்,

“என் ஜானுவுக்கும் இந்த கடை தேங்கா பால்னா ரொம்ப பிடிக்கும்” என்றவாறே அவளை பார்க்காதது போல் அவள் முன்பு வெறித்த சாலையை இவனும் வெறிக்க, அவள் இதழ்கள் கொஞ்சமே கொஞ்சம் விரிந்தது.

ஆனால் பொய்யோ! எனும் அளவிற்கு உடனே முகத்தை இறுக்கிக் கொண்டாள் மிதிலா.

ஆனால் அவளின் கள்வனோ அந்த ஒற்றை நொடி இதழ் விரிதலை திருடிக் கொண்டான்.

இருவரும் குடித்து முடித்திருக்க, தனக்கான பணத்தை அங்கு வைத்து விட்டு எழுந்தாள் மிதிலா.

அவனோ, அந்த பணத்தை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன், இருவருக்கும் சேர்த்து பணத்தை வைத்து விட்டு எழ அவளின் முறைப்பிற்கும் ஆளானான்.

கடையை விட்டு வெளியே வந்தவள், தன் இருசக்கர வாகனத்தை உயிர்பிக்க, “என்னையும் கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா?” என்றவாறே அவள் அருகில் வந்தான் ரகுநந்தன்.

“அதான் உங்க வண்டி இருக்குல்ல” என்க, “அத சிரஞ்சீவி எடுத்துட்டு போய்ட்டான்” என்றான் ரகுநந்தன்.

‘ஆக, எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணி இருக்கீங்க. என் தங்கச்சிய ஆட்டோ பிடிச்சு அனுப்பிட்டு, உங்க வண்டில உங்க ப்ரண்ட்ட போக சொல்லிட்டு இப்போ என்கிட்ட வந்து பவ்யமாக நிக்கிறத பாரு’ என அவனின் தில்லாங்கடி வேலையை திட்டிக் கொண்டவள்,

“ம்… ஏறுங்க” என்றாள் மிதிலா. அந்த வண்டியோ மிதிலாவின் உயரம் தான் போலும். குள்ளமாய் இருக்க, அதில் அமர்ந்த ரகுநந்தன் என்னமோ பனை மரமாய் தெரிந்தான்.

இதில் கால் வேறு வைக்க முடியாமல் மிதிலாவின் காலருகே அவன் கால்களை வைக்க, அவள் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தாள்.

சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தவன் போக போக அவளை நெருங்கி அமர்ந்தான் ரகுநந்தன்.

அவனின் மூச்சுக்காற்று அவள் கழுத்துப் பகுதியைத் தீண்ட அக்காற்று அவளுக்கு வெட்பத்தை உண்டாக்கியது.

ஸ்பீட் பிரேக்கர் வந்ததைக் கவனிக்காமல் அவள் அவனின் மூச்சுக்காற்றில் அவஸ்தைப் பட, வண்டி ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கும் நேரம் அவன் தடுமாறி, அவள் இடையை பிடித்திருந்தான்.

அவனின் கரங்கள் அவள் வெற்றிடையில் பட அதன் வெட்பம் அவளின் தளிர் மேனி எங்கும் பரவியது.

வண்டியை பிடிக்க அவள் தடுமாற, “ஹே, பார்த்து ஜானு” என்றவன் அவளை இன்னும் நெருங்கி முன்னால் வண்டியின் ஹேண்ட் ஃபாரை பிடித்து வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

அவளோ வண்டி நின்றவுடன் புள்ளி மானாய் துள்ளிக் குதித்து அவனை விட்டு விலக, வண்டியை ஒழுங்காக பிடித்தவன்,

“ஸ்பீட் பிரேக்கர்ர கவனிக்காம விட்டுட்டியா ஜானு?” என்றான் கண்களில் காதல் மின்ன.

“யூ ராஸ்கல்…” என அவள் பஞ்சு போல் இருந்த கைகளால் அவனை அடிக்க அவனோ சுகமாய் தாங்கினான் அவளின் அடியை.

“முதல்ல வண்டிய விட்டு கீழ இறங்குங்க” என்றாள் மிதிலா.

அவன் சமத்துப் பிள்ளையாய் கீழிறங்க, வண்டியை எடுத்தவள், “எப்படியாவது காலேஜ் வந்து சேருங்க” என்றவாறே வண்டியை செலுத்தினாள்.

“ஜானு… ஜானு, இனி எதுவும் பண்ண மாட்டேன், ப்ராமிஸ்” என்றவனின் குரல் காற்றில் தான் ஒலித்தது. அவள் அவன் கண் பார்வையில் இருந்து மறைந்திருந்தாள்.

“கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டமோ!” என தலையில் அடித்துக் கொண்டவன், புன்னகை மலர லிப்ட் கேட்க தயாரானான் ரகுநந்தன்.

அவளோ, கோப முகமூடியை அணிந்து கொண்டாலும் அவன் தொட்ட இடம் இன்னும் அவளுக்கு குறுகுறுத்துக் கொண்டு தான் இருந்தது.

டிபார்ட்மெண்டில் அமர்ந்து அடுத்த  வகுப்பிற்கான குறிப்புக்களை எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் மூச்சுக்காற்று அவளின் கழுத்தருகே கூச விளிர்த்து எழுந்தவள் சுற்றி முற்றிப் பார்த்தாள் மிதிலா.

அமைதியாக அமர்ந்திருந்தவள் திடுமென எழுவதைக் கண்டு டிபார்ட்மெண்ட்டில் இருந்த அனைவரும் அவளைப் பார்க்க, அவர்களின் பார்வையை சங்கடமாக ஏற்று அமர்ந்தாள் மிதிலா.

“என் பக்கத்துல இல்லயே. அப்புறம் ஏன் எனக்கு மூச்சுக் காத்து பட்ட மாதிரி ஃபீல் ஆச்சு?” என யோசனையில் இருந்தவள், சந்தேகத்துடன் எதிரே இருந்த வேதியியல் துறையைப் பார்த்தாள் மிதிலா.

அவளின் உள்ளம் கவர்ந்த கள்வன் தான் அவளை கண்களால் பருகிக் கொண்டிருந்தான்.

ஒரு முறைப்பு பார்வையை அவனை நோக்கி வீசியவள், எழுந்து வகுப்பிற்கு சென்றாள்.

அவனோ, “கூடிய சீக்கிரம் உன் ராமனா உன் முன்னாடி நிப்பேன் ஜானு” என்றவாறே தன் வேலைகளைக் கவனிக்கலானான்.

நறுமுகையோ, குழப்பத்துடனே வகுப்பில் அமர்ந்திருக்க கூட இருந்த தோழியர் கூட்டம் அவளையும் தங்களின் அரட்டையில் இழுக்க முயன்றது.

அவர்களுள் ஒருத்தி, “ஏய், இன்னிக்கு நந்தா சார்ர பார்த்தீங்களா டி. செம ஹேண்ட்சம்மா வந்துருக்காரு, காலைல ஒரு ஸ்மைல் பண்ணாரு பாரு. அப்படியே ப்ளாட் ஆயிட்டேன்” என மெய் மறந்து அவனை ரசித்தவள் கூற,

நறுமுகைக்கோ கோபம் தலைக்கேறியது. அடுத்தவளோ, “இன்னிக்கு நம்ம சிரஞ்சீவி சார் முகத்துல கூட தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரிஞ்ச மாதிரி இருந்தது டி. கிளாஸ்ல பாடத்த கவனிக்கவே முடியல, அவர தான் சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன்” என்க,

இன்னொருத்தி மீண்டும் ரகுநந்தன் புராணம் பாடினாள். கோபத்தை அடக்கி கொண்டிருந்தவளை அவர்களின் பேச்சால் எரிமலையாய் வெடிக்க வைத்தனர்.

“என்ன டி பேசுறீங்க எல்லாரும். அவங்க ரெண்டு பேரும் நமக்கு பாடம் எடுக்கிற லெக்சரர்ஸ். அவங்கள போய் இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க?” எனக் கோபப்பட,

அவள் கரம் பற்றிய உமையாள், “இப்போ ஏன் முகி கோபப்படற, சார்ர பத்தி தான பேசிக்கிட்டு இருக்காங்க. விடு” என்றாள்.

“இல்ல உமா, நமக்கு பாடம் எடுக்கிற சார்ர இப்படி வர்ணிக்கிறது நல்லாவா இருக்கு” என்றவள் ஏகத்திற்கும் குதிக்க,

“ஏன் டி, ஏதோ புதுசா பேசற மாதிரி சொல்ற. எப்பவும் பேசறது தான” என்றாள் ஒருத்தி.

உண்மை தான், என்றும் பேசக் கூடிய ஒன்று தான், ஆனால் இன்று ஏனோ அவர்கள் இருவரையும் இவர்கள் புகழ்வது எரிச்சலை உண்டாக்கியது அவளுக்கு.

அவள் மனமோ, ‘நந்தா சார சொல்றது உனக்கு பிடிக்காது. ஏன்னா அவரு உன் அக்காவோட ஆளு, ஆனா ஏன் சம்பந்தமே இல்லாம சிரஞ்சீவி சார சொன்னாலும் கோபப் படற?’ என கேள்வியை எழுப்பியது.

“அமைதியா இரு, அவர சொன்னா எனக்கென்ன. நான் பொதுவா தான் சொன்னேன், நமக்கு பாடம் எடுக்கிற லெக்சரர்ஸ்ஸ சைட் அடிக்கிறது தப்பு” என்க,

‘யாரு. அத நீயா சொல்ற? வந்த முத நாளே உங்க ஹெச். ஓ. டி சார சைட் அடிச்சவ தான நீ?’ என்றது மனசாட்சி.

“இப்போ என்ன பிரச்சனை உனக்கு?” எனக் கோபப்பட்டவள், உமையாளை இழுத்துக் கொண்டு கேன்டீனுக்கு சென்றாள் நறுமுகை.

அவளின் செயல்களில் மாற்றத்தைக் கண்டவள், “என்னாச்சு முகி உனக்கு?” என்க,

“அதெல்லாம் ஒன்னுமில்ல. எனக்கு பசிக்குது, வா சாப்பிடலாம்” என்றவள் தனக்கு பிடித்ததை ஆர்டர் செய்து உண்ண ஆரம்பித்தாள்.

அப்பொழுது அவள் டேபிளில் ஒரு ஃபலூடா ஒன்றை ஒருவன் வைக்க, சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், ‘ஃபலூடாவ எவன்டா இங்க வச்சது’ என நிமிர்ந்தவள் அதிர்ந்தாள்.

உமையாளோ, எதிரே நின்றிருந்தவனைக் கண்டு “சார்…” என எழப் போக, “உட்காரு மா…” என்றவன் அவர்களுக்கு எதிரே அமர்ந்தான் ரகுநந்தன்.

“ஃபலூடா உனக்கு தான் முகி” என அவள் புறம் ஃபலூடாவை நகர்த்தியவன், “உனக்கு என்ன வேணுமோ அத ஆர்டர் பண்ணிக்கோ மா. முகிக்கு ஃபலூடா பிடிக்கும்னு தெரியும், அதான் அவளுக்கு மட்டும் ஆர்டர் பண்ணேன்” என்க,

“எனக்கு எதுவும் வேண்டாம் சார்…” என பயத்தில் எச்சிலை முழுங்கியவாறே உமையாள் கூற,

“ஹே. ரிலாக்ஸ், ஏன் என்னைப் பார்த்து இவ்ளோ பயப்படற, பாரு உன் பிரண்ட் ஃபலூடா தான் முக்கியம்னு எப்படி உள்ள தள்ளிக்கிட்டு இருக்கானு” என்க,

“வாங்கி குடுத்துட்டு அப்புறம் என்னை குத்தம் சொல்லக் கூடாது” என்றவள் தன் ஃபலூடாவை தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

உமையாளோ, “முகி, நான் கிளாஸ்க்கு போறேன். நீ சார்கிட்ட பேசிட்டு வா” என ஓட்டம் பிடித்தாள்.

நறுமுகையோ எதிரே இருந்தவனைக் கவனிக்காது ஃபலூடாவை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

“முகி…” என்க, “என்ன ஹெல்ப் பண்ணனும் நான்?” என்றாள் நேரடியாக.

“கற்பூர புத்தி டா கண்ணம்மா உனக்கு, ஆனா பாரு உன் அக்காக்கு தான் புரியவே மாட்டேங்கிது” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற,

“அதான் காலைலயே அவளுக்கு பிடிச்ச தேங்கா பால் வாங்கி தரேன்னு என்னை ஆட்டோல ஏத்தி விட்டீங்களே. இன்னுமா அவ சமாதானம் ஆகல சார்?” என்றாள் நறுமுகை.

“இல்ல முகி, உன் அக்காவ இன்னும் நீ ஒழுங்கா புரிஞ்சுக்கல. அவ தேங்கா பாலுக்குலாம் மயங்கிறவ கிடையாது” என்க,

“அப்போ என்னை ஃபலூடாவுக்கு மயங்கிறவனு நினைச்சீங்களா?” என சீற்றமாய் பதில் வர,

“ஆமா.. இல்லை” என இரண்டையும் அவன் கூற, அவளோ முறைத்தாள்.

“ஏற்கெனவே உன் அக்கா ஒரு மூட்டை முறைப்ப, பார்க்கும் போதெல்லாம் தர்றா. இப்போ நீயும் ஆரம்பிச்சுராத தாயே!” என்றான் ரகுநந்தன்.

அதில் சிரித்தவள், “சார் ஏற்கெனவே நான் பயங்கர கொழப்பத்துல இருக்கேன். நீங்க சொல்றதுல எனக்கு தலையும் புரியல, வாலும் புரியல. அப்படி என்ன தான் சார் உங்க பிரச்சனை?” என்றாள் நறுமுகை பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

“எனக்கே பாதி புரியாம தான் சுத்திக்கிட்டு இருக்கேன்” என்றவனைப் பார்த்து, “ஙே…” என விழித்தாள் நறுமுகை.

“உண்மை அது தான் முகி. உன் அக்காவ புரிஞ்சுக்க முடியாம தான் உன்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்து நிக்கிறேன்” என்றான் ரகுநந்தன்.

“தயவுசெஞ்சு என்ன விசயம்னு சொல்லிருங்க சார். வீட்டுக்கு போனா ஒரு போட்டோவ எடுத்து வச்சுக்கிட்டு, ‘எப்போ ராம் என்னைப் பார்க்க வருவனு’ அவ புலம்புறா. நீங்க என்னடானா, ‘நான் தான் கிருஷ்ணானு சொல்றீங்க’, எனக்கு மண்டைய பிச்சுக்கலாம் போல இருக்கு” என அவள் சீரியஸ்ஸாக கூற,

அங்கு வந்த சிரஞ்சீவியோ, “அம்மா, தாயே. அத மட்டும் பண்ணிறாத. ஏற்கெனவே பார்க்க முடியல, இதுல நீ மண்டைய பிச்சுக்கிற மாதிரிலாம்…. ப்பா… சான்ஸே இல்ல” என அவன் தலையை சிலுப்ப,

அவனை கொலைவெறியுடன் பார்த்தாள் நறுமுகை.

“டேய், ஏன்டா நீ வேற. நானே இப்போ தான் அவள சமாதானப்படுத்தி கொஞ்சம் பேசுனேன், அதுக்குள்ள நீ ஏன்டா வந்து குட்டைய கொழப்புற?” என்றான் ரகுநந்தன் தன் நண்பனைப் பார்த்து.

“அது வந்து டா. பச்சை மிளகா ஏதோ மண்டைய பிச்சுக்கிறேன்னு சொல்லவும்…” என்றவனின் வார்த்தைகள் அந்தரத்திலே தொங்கியது அவளின் முறைப்பில்.

“டேய். கொஞ்சம் நேரம் உன் திருவாய மூடிட்டு இரு டா, அது போதும் எனக்கு” என்றவன்,

“அவன் சொல்றத கண்டுக்காத கண்ணம்மா… ப்ளீஸ் எனக்காக” என ரகுநந்தன் கெஞ்ச,

“உங்களுக்காக தான் உட்காந்து இருக்கேன் சார். இல்லைனா வந்த கோபத்துக்கு” என சிரஞ்சீவியை முறைக்க,

அவனோ, “டேய், இத நீ நம்பிராத டா. இன்னும் ஃபலூடா இருக்கு, இது முடிஞ்சோனே தான் எந்திரிச்சு போவாங்க மேடம். உனக்காக தான் உட்கார்ந்து இருக்கேனு சொல்றத தயவுசெய்து நம்பீராத” என்க,

அவனை முறைப்பது இப்போது ரகுநந்தனின் முறையாயிற்று.

“மூடிட்டு உட்கார்ரதுனா உட்காரு டா. இல்லனா…” என முறைக்க,

தன் வாயில் விரல் வைத்தவன் அமைதியானான்.

“ஜானு கிட்ட நீ தான் பேசணும் முகி” என்றான் ரகுநந்தன்.

“அதெல்லாம் சரி சார். ஆனா, நீங்க கிருஷ்ணானு சொல்றீங்க. அவ என் ராமன் எனக்காக வருவான்னு காத்திருக்கா, எனக்கு அது தான் புரிய மாட்டேங்கிது, அந்த ராமன் யார் சார்?” என்றாள் நறுமுகை.

“அவ அளவுக்கதிகமா வெறுக்கிற கிருஷ்ணனும் நான் தான், அளவுக்கதிமா அவ விரும்புற ராமனும் நான் தான்” என்றவனின் பதிலில் அங்கிருந்த இருவருமே அதிர்ந்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments