14 – காற்றிலாடும் காதல்கள்
“உன் ஆளுங்க எல்லாம் எதுக்கு இங்க வந்துட்டு இருக்காங்க? ஊருக்கு வெளிய நாலு பேரு டெண்ட் போட்டு உக்காந்து இருக்காங்க. என்ன பண்ண போற நீ ?” கீதன் கோபமாகக் கேட்டான்.
“ஒளராத கீதன், நான் யாரையும் வர சொல்லல. வரேன்னு சொன்னவன கூட வரக்கூடாதுன்னு தான் சொன்னேன்.” அவளும் கோபமாகப் பதில் கொடுத்தாள்.
“உமேஷ்ன்னு ஒருத்தன் உன் பேர தான் சொல்லிட்டு இருக்கான். கோவில் பத்தி நீ ஆராய்ச்சி பண்ண வந்திருக்கறதா வேற சொல்லிட்டு இருக்கான்.” பல்லைக் கடித்தபடிக் கூறினான்.
“என்ன? இடியட்.. வா அவன போய் பாக்கலாம்.. எனக் கிளம்பியவள் கையைப் பிடித்து நிறுத்தி, “இப்ப போகவேணாம். அவன எங்க ஊரு ஆளுங்களே வெரட்டிடுவாங்க. அப்பறம் அவன நம்ம வேற இடத்துல வச்சி பாத்துக்கலாம். என் தங்கச்சிகிட்ட அதிகம் வாய் குடுக்காத.” எனக் கூறி வெளியே சென்றவன் மீண்டும் அவளருகில் வந்து,“சும்மா சொல்லக்கூடாது நீ அழுதாலும் அழகா தான் இருக்க. எனக்கு நீ தான் உனக்கு நான் தான். அது பிக்ஸ். ஐ லைக் யு.” எனக் கூறிக் கண்ணடித்துச் சென்றான்.
வெளியே சென்றவனைச் சொடக்கிட்டு அழைத்தவள்,“இந்த நெனைப்போட இருக்காத. அதுக்கு ஆள் நான் இல்ல. கைல எடுத்திருக்க வேலைய மொத முழுசா முடிக்கற வழிய பாரு.” எனக் கூறினாள்.
“வழிய கண்டுப்பிடிக்க வேண்டியது உன் வேலை. உன்ன கவனிக்கறது மட்டும் தான் என்வேல செல்லம். உனக்கு ஊர்ல பாய் ஃப்ரெண்ட் லவ்வர்ன்னு எவனாது…”
“எவனாது இருந்தா விட்ருவியா?” அசிரத்தையாகக் கேட்டாள்.
“நீ இவ்ளோ அசால்ட்டா கேக்கும்போதே தெரியுது உனக்கு யாரும் இல்லைன்னு.. தவிர உன்னமாறி ஒரு கேடிக்கு இன்னொரு கேடி தான் செட் ஆவான். அதுவும் நான் மட்டும் தான். நீ கவலப்படாத.. உனக்கு என்ன வேணும்னாலும் நான் செஞ்சி தருவேன்.“ எனக் கூறி அவளது கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிவிட்டு வெளியே ஓடினான்.
அவன் வெளியே ஓடி கயல்விழி மீது இடித்து கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடினான்.
“லூசு, ஒழுங்கா கண்ண தொறந்துபாத்து போ.” என அவனைத் திட்டியபடி வந்தவள் மிருணாளினி கன்னத்தில் கை வைத்திருக்கவும்,“என்னாச்சி அண்ணி?” என அவளது கையை எடுத்துவிட்டுப் பார்த்தாள்.
“கிள்ளிட்டானா? லூசு… லூசு.. அச்சச்சோ.. நல்லா செவந்து போச்சி.. நீங்க உள்ள வாங்க ஐஸ் வைக்கலாம்.. இல்லைன்னா ரத்தம் கட்டிரும்..” எனக் கூறியவள் அவளின் கன்னத்தில் ஐஸ்கட்டியை வைத்து ஒத்தடம் கொடுத்தாள்.
“ஐஸ் எல்லாம் எதுக்கு கயல்?”, வலியை உணர்ந்தும் கேட்டாள்.
“என்கூட பொறந்தது ஒரு கொரங்கு. நல்லா கொலு கொழுன்னு இருக்க கன்னத்த பாத்தா நறுக்குன்னு கிள்ளி காயம் பண்ணிடுவான். அது ஏன்னு அவனுக்கும் தெரியல. நாங்களும் எவ்வளவோ கண்டிச்சி பாத்துட்டோம். அந்த பழக்கம் மட்டும் போகல. கொஞ்ச மாசமா யாரையும் இப்படி கிள்ளல இன்னிக்கி உங்கள கிள்ளிட்டான். தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி.” என வாய்பேசியபடியே பத்து நிமிடங்கள் அவள் ஒத்தடம் கொடுத்ததும் வலி குறைந்தது போல இருந்தது.
“என்ன வியாதி இது? ப்பா.. இப்படி வலிக்குது.” என தன் கன்னங்களைத் தேய்த்துக் கொண்டுக் கேட்டாள்.
“என்னமோ தெர்ல அண்ணி. சின்ன வயசுல இருந்து இப்படி தான் இருக்கான். இவனாலையே எனக்கு கன்னமே இல்லாம போச்சி. சின்ன வயசுல நான் கொலுகொலுன்னு இருப்பேன். இவன் என்னை கிள்ளி கிள்ளியே ஒல்லி ஆக்கிட்டான்.“ தன் முகத்தைத் தொட்டுப் பார்த்துப் பாவமாகக் கூறினாள்.
கயல்விழிக்கு சற்று ஒடிசலான தேகம். ஒல்லி பெல்லி கணக்கில் வருவாள் அந்த அளவிற்கு தான் சதைப்பற்று இருந்தது. ஆனால் களையான முகம், கயல்விழி என்ற பெயருக்கேற்ப பெரிய கண்கள். அதைக் கண்டு தான் யுகேந்தர் அவளைக் காதலிக்க தொடங்கி இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது. ஆனால் அவன் இவளைக் காதலிக்கும் விஷயம் இவளுக்கு இன்னும் தெரியாது. சர்ப்ரைஸ்ஸாகக் கூறவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு. எப்படி சூழ்நிலை வாய்க்கிறதோ அவனது காதலைச் சொல்ல?
“இனிமே உங்கண்ணன் பக்கமே போககூடாது.“
“ஹாஹா அதெப்புடி போகாம இருப்பீங்க? எங்கண்ணன் உங்கள தான் கட்டுவேன்னு வீட்ல சொல்லிட்டானே.“ கயல்விழி இப்படி கூறியதும் அவள் அவனைத் தேடினாள்.
அவன் தோப்பின் கடைக்கோடியில் இருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டு அருகில் இருந்த பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“அவன் சொன்னா போதுமா? என் சம்மதம் வேணும்ல?” மிருணாளினி முறைத்தபடிக் கேட்டாள்.
“அதெல்லாம் நீங்க ஓக்கே சொல்லிடுவீங்க அண்ணி” எனச் செல்லமாக கயல்விழியும் அவளின் கன்னத்தைப் பிடிக்க, கீதன் அங்கிருந்து ஓடிவந்தான்.
அதற்கு முன் மிருணாளினி அவளது கைகளைத் தட்டிவிட்டு, “இங்க பாரு கயல், நீங்க நெனைக்கற மாதிரி ஆளு நான் இல்ல. எனக்கு இதெல்லாம் செட் ஆகாது. நான் கல்யாணம் காதல் கண்றாவி எல்லாம் பண்ணப்போறதே இல்ல. தேவையில்லாம எதையும் என்கிட்ட ஒளறிட்டு இருக்காதீங்க. இப்ப நீ உங்கண்ணன் கூட வீட்டுக்கு கெளம்பு.” எனக் கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுக் கதவடைத்துக் கொண்டாள்.
“என்னடா அண்ணா இது?”, சென்றவளைக் காட்டிக் கேட்டாள்.
“அவ எங்க போயிட போறா? எப்படியும் நம்ம வீட்டுக்கு வந்து தான் ஆகணும். என்கூட நான் போற எல்லா எடத்துக்கும் வரணும். விடு.. உன் ஆளுக்கு நொங்கு அனுப்பிட்டேன். ஃபோன் பண்ணி கேளு போ.” எனச் சொன்னான்.
“அதென்ன என் ஆளு? மாப்பிள்ளைன்னு சொல்லு. நீ பேசறத பாத்தா நாங்க என்னமோ காதலிச்சி கல்யாணம் பண்ண போற மாதிரி இருக்கு.”
“பைத்தியம்… கல்யாணம் தான் ஆகபோகுதே அப்பறம் என்ன? உன்னைய கல்யாணம் பண்றான் பாரு. பாவம் அவன். போ போ. போய் ஃபோன்ல பேசி காதல் பண்ண கத்துக்க. அப்பதான் இந்த அண்ணனோட வலி புரியும். உனக்கெல்லாம் இப்பவே கல்யாணம் செஞ்சி வைக்கறாங்க பாரு அவங்கள சொல்லணும்.“ எனக் கூறித் தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
“ஹலோ ப்ரதர். அங்க எங்க போறீங்க? இங்க வாங்க. நான் உள்ள போய் பாத்துக்கறேன். நீங்க போய் உங்க மாப்பிள்ளைகிட்ட நொங்கு நல்லா இருந்துச்சான்னு கேளுங்க.. போங்க..“ என அவனை வெளிய தள்ளிக் கதவடைத்துக் கொண்டாள்.
“டேய் மாப்ள. நீ எல்லாம் என்னடா பாவம் பண்ண? போயும் போயும் இவள காதலிச்சி கல்யாணம் வேற பண்ற.” எனத் தனக்குத் தானே பேசியபடி அவனுக்கு ஃபோன் செய்தான்.
“ஹலோ. சொல்றா மச்சான். என்ன ஃபோன் எல்லாம் பண்ற?”யுகேந்தர் கேட்டான்.
“உன் வருங்கால பொண்டாட்டி அனுப்புன நொங்கு வந்துச்சா?”
“வந்துச்சி மச்சான்.. அதான் சாப்டுட்டு இருக்கேன்.. நீ சாப்டியா?”
“***** ****** ******* ******** *******”
“டேய் டேய்.. இரு டா.. எதுக்கு டா இப்படி பீப்-ல திட்டற? என்னாச்சி?”
“உன் அருமை காதலிய உடனே ஃபோன் பண்ணி வீட்டுக்கு கெளம்ப சொல்லு. இல்ல உன் கல்யாணம் இந்த ஜென்மத்துல நடக்காது சொல்லிட்டேன்.“
“ரெண்டு பேரும் ஒரே எடத்துல இருந்துட்டு எனக்கு ஏண்டா ஃபோன் பண்ணி சொல்ற? நீயே சொல்ல வேண்டியது தானே?” எனச் சொன்னான்.
“******..”
“சரிடா… இரு… சொல்றேன்..“
“அது, அப்பறம் நான் கேட்டது என்னாச்சி?”
“ஒரு மணிநேரம் முன்ன தானே சொன்ன? நாளைக்கு முழு தகவலும் கெடச்சிடும். இந்த உமேஷ் பயல ஊருக்கு வெளியவே ஒரு மண்டபத்துல கட்டிப்போட்டு வச்சாச்சி. இன்னும் 5 பேர் ஊருக்குள்ள புதுசா வந்திருக்கானுங்க. அவனுங்கள என்ன பண்ணலாம்?”
“சாயிந்தரம் இந்திரன் வந்தப்பறம் பேசிக்கலாம். இப்ப உன் வருங்கால பொண்டாட்டி கதவ தொறக்கல நீ காலத்துக்கும் என் வீட்டு வாசக்கதவ பாக்க கூட முடியாது. உடனே அவளுக்கு ஃபோன் பண்ணு.”
யுகேந்தர் மறுநொடி கயலுக்கு அழைக்க அவள் அடுத்த நிமிடம் கதவினைத் திறந்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றாள்.
“டேய் அண்ணா. அவருக்கு எடுத்த டிரஸ் உடனே குடுத்து விடணுமாம். நான் வீட்டுக்கு போறேன். அம்மா வர்ற வரைக்கும் இங்கயே நில்லு. உள்ள போகாத.” எனக் கூறிவிட்டு வேகமாக நடந்துச் சென்றாள்.
“போடி. நீ சொல்லி நான் கேட்டதா சரித்திரமே இருக்ககூடாது.” எனக் கூறிவிட்டு மெல்ல விசில் அடித்தபடி மிருணாளினி அறைக்குச் சென்றான்.
அங்கே கதவு பூட்டப்பட்டு இருக்க, அதைத் தள்ளிப் பார்த்தான். நன்றாக பூட்டிக் கொண்டாள் போல என நினைத்தபடி, “மிரு செல்லம். எங்கப்பாவோட டைரி வேணுமா?” எனக் கேட்க அந்த பக்கம் பதில் இல்லை என்றதும், “ஒரு டைரி இருக்கு. இந்த மலைக்குகை இருக்குல்ல.. அதுக்குள்ள ஒரு சாமி இருக்காம். 130 வருஷம் முன்னாடி தான் குகை தானா மூடிக்கிட்டதா சொல்றாங்க. உள்ள இருக்க அம்மன் பேரு கற்பக நாச்சியம்மன். அப்பறம் அந்த குகை முகப்புல.” என அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் கதவினைத் திறந்து வெளியே வந்தவள் அவனிடமிருந்த சிறிய கையேட்டினைப் பறித்தாள்.
கீழே சென்று சோபாவில் அமர்ந்து அந்தக் கையேட்டினை ஆராயத் தொடங்கினாள். அவனும் மெல்லச் சிரித்தபடி கீழே வந்தான், மெல்ல அவளைப் பார்த்தபடி மென்னகையோடுக் கீழே வந்தவனை தலை முதல் கால் வரை அளந்தாள்.
சராசரி உயரம், மாநிறம், டிரிம் செய்த தாடி, அடர்த்தியான மீசை, சிரிக்கும்போது ஒரு பக்கக் கன்னத்தில் விழும் லேசான குழி, அதில் நிச்சயம் பெண்கள் விழுவார்கள் தான். விவசாயத்தைப் படித்து அதையவன் நேர்த்தியாகச் செய்து வருவதை தாத்தா கூறக்கேட்டிருக்கிறாள். இயற்கையான உணவினால் உடல் வலுவேறி, வயல்வேலைகள் செய்வதால் கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாரும் மறுக்க முடியாத ஆண் தான். ஆனால் அவனை மறுக்கும் நாயகிதான் வேண்டுமென்ற பிடிவாதம் அவன் கொண்டிருக்கிறான். அவளோ வேண்டவே வேண்டாமென்ற அடவாதம் செலுத்துகிறாள். இவர்களிடையில் தான் காதலும் துளிர்த்து, வளர்ந்து, பூத்து, காய்த்து பழுக்க வேண்டுமாம். நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
“என்ன விஷயம்? உமேஷ் என்ன ஆனான்? என்ன நடக்குது?” வேறு எதையும் பேசாமல் வேலையைப் பற்றி மட்டுமே மிகச் சிரத்தையாகப் பேசினாள்.
அவளைக் குறுகுறுவென்றப் பார்வைப் பார்த்தபடி அவனும் பதில் பேசாது அவளது கன்னத்தையே பார்த்தபடியே அமர்ந்திருந்தான். அவனது பார்வை மாற்றத்தையுணர்ந்த மிருணாளினி அவனின் முன்னால் இருந்த மேஜையில் சத்தமாகத் தட்டினாள்.
“கவனம் நான் பேசறதுல மட்டும் இருக்கணும்.“ பல்லைக் கடித்தபடிக் கூறினாள்.
“நீ ஈசியா சொல்லுவ. ஆனா என் கஷ்டம் எனக்கு தானே தெரியும். அந்த கன்னம் எப்படி அப்படியே மெது மெதுன்னு இருக்கு? கொஞ்சம் செவந்து போச்சி ஆனாலும் பாக்க பாக்க பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு? கன்னத்துக்கு தனியா எதுனா போடுவியா? நல்லா வழுவழுன்னு இருக்கு.” என மீண்டும் தொடவந்தான்.
“ஒழுங்கா இருந்துக்க. உனக்கு அவ்ளோ தான் மரியாதை.“ என அவள் மிரட்டும்போது சரியாக மாலாவும், வெள்ளைச்சாமி தாத்தாவும் வீட்டிற்குள் வந்தனர்.