285 views

அத்தியாயம் 14

பிரித்வி கூறிச் சென்றதைக் கேட்டு , காஜலுக்குத் தலையே சுற்றியது.தேவையில்லாமல் அவனுடைய நட்பையும் இழந்து விட்டோம்! என்று வருந்தினாள்.

இனி , கல்லூரி முடிந்து, வீட்டுக்குச் சென்றால், தந்தையிடமும் தரமான மண்டகப்படி கிடைக்கப் போவது உறுதி!

நெருக்கடியில் நின்றிருந்தவளுக்கு , அதிரூபாவின் மீது தான் ஆத்திரம் வந்தது.

அந்த சமயத்தில் , அவள் செய்தவற்றை எல்லாம் மறந்திருந்தாள் காஜல்.

பிரித்வியின் நட்பையாவது பெற முயற்சி செய்வோம் என்று முடிவெடுத்தாள்.

🌸🌸🌸

விஷயம் முடிந்தது என்று நினைத்தால், காஜல் அதை இன்னும் நெருக்கடியாக மாற்றி விட்டாளே! என்று பிரித்விக்குத் தலைவலியாக இருந்தது.

இனிமேலும், அதிரூபாவிடம் கூட இதைப் பற்றிப் பேச முடியாது.வீட்டிற்குப் போனான் பிரித்வி.

அவனுடைய  முகச் சுணக்கத்தைப் பார்த்து ,
“என்னாச்சு பிரித்வி? ஏன் ஒரு மாதிரியாக இருக்க?” என்று விசாரித்தார் சகுந்தலா.

“இன்னைக்கு காலேஜில் டென்ஷன் ஆகுற மாதிரி நடந்துருச்சு ம்மா! அப்போ இருந்து தலை ரொம்ப வலிக்குது” என்றான்.

“ஸ்ட்ராங் ஆக காஃபி குடி. சரியாகிடும். இரு வரேன்” என்று துரிதமாக காஃபியைக் கலக்கி எடுத்து வந்தார் சகுந்தலா.

காபி கோப்பையை அவனிடம் கொடுத்தவர்,
“அப்படி என்ன நடந்துச்சு பிரித்வி?” என்று வினவினார்.

“ஒரு பொண்ணு அவங்க அப்பாவைக் காலேஜூக்குக் கூப்பிட்டு வந்து, என்னை மாப்பிள்ளைப் பார்த்தா அம்மா!” என்று அவரிடம் எதையும்  மறைக்காமல் அனைத்தையும் கூறினான் மகன்.

“இதென்ன இப்படி எல்லாம் பண்றாங்க? உன்கிட்ட கேட்க வேண்டாமா?” என்று அவரும் பொரிந்து தள்ளினார்.

“விடுங்க அம்மா. நான் தான் பேசி அனுப்பிட்டேன்ல. இனிமேல், வர மாட்டா” என்று அறைக்குச் சென்றான்.

அவன் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, லயா பள்ளிப் படிப்பில் இருந்தாள்.

தேர்வுகள் , சிறப்பு வகுப்புகள் என்று பிஸியாக இருந்ததாலும், பள்ளியில் படிப்பவளிடம் இதையெல்லாம் கூற வேண்டாம் என்றும் லயா வீட்டில் இல்லாத சமயத்தில் தான் இந்தப் பேச்சு வார்த்தைகள் நடக்கும்.

🌸🌸🌸

அதிரூபாவிற்கு தன்னை பிரித்வியுடன் சேர்த்து வைத்துப் பேசி விட்டு, இன்றோ அவனையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தந்தையை வரவழைத்துப் பேசிய காஜலை நினைத்து ஆயாசமாக இருந்தது.

ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படிக்கும் போது, இந்த விஷயம் எல்லாம் காதுக்கு சுலபமாக வந்து விடும் தானே? அப்படித்தான் ஒரு தோழி மூலம் அதிரூபாவிற்கும் தகவல் வந்து சேர்ந்தது.

காஜலுடனான நட்பை பிரித்வி முறித்தததும், அவளுடைய கோபம் தன் மீது தான் திரும்பும் என்று சரியாக கணித்து இருந்தாள் அதிரூபா.

அதை எப்படி கையாள்வது என்பது தான் அவளுக்கான சவால்.

பிறகு, தந்தையுடன் தோட்டத்துப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றப் போய் விட்டாள் அதிரூபா.

“இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாலே நேரம் தெரியாமல், பேச ஆரம்பிச்சுடுவாங்க” என்று சலித்துக் கொண்டு,

“வாங்க சாப்பிடலாம்” என அழைத்தார் கிருஷ்ணவேணி.

தீனதயாளனும், அதிரூபாவும் , அவரையும் அமர்த்தி உண்ண வைத்தனர்.

அதிரூபாவிற்கு தம்பி, தங்கை என்று உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாததால்,
எதிலும் அவளைத் தனிமை உணர்வு வந்து விடக் கூடாது என்று தந்தையும், தாயும் அவளுடன் எப்போதும், எல்லா விஷயத்திலும் உடன் இருப்பர்.அதற்காக, அவளைச் சுயமாகச் சிந்திக்க விடாமல் இருக்க மாட்டார்கள்.

மாறாக, சுயமாக எதையும் முடிவெடுத்து, தனித்துச் செயல்படவும் அறிவுரை வழங்குவார்கள்.அதனால் தான் தனிமையைப் பெரிதாக உணர்ந்தது இல்லை அதிரூபா.

🌸🌸🌸

“அவனோட ஆட்டிட்யூட் – ஐ கவனிச்சியா காஜல்!” என்று மகளிடம் காட்டமாக கேட்டார் காசிநாதன்.

அவளுக்குப் பிரித்வி ஏன் அவ்வாறு நடந்து கொண்டான் என்பதற்குக் காரணம் நன்றாக தெரியும் தான்! அதைச் சொன்னால் தந்தையின் கோபம் தன் பக்கம் திரும்பி விடும் என்று பயந்தாள் காஜல்.

“பிரித்வி அப்படி எடுத்து எறிஞ்சுப் பேச மாட்டான் ப்பா! ஏதோ சரியில்லாத மூட்ல இருந்திருப்பான் போல, அதான் அப்படி ரியாக்ட் பண்ணிட்டான்” என்று அவனுடைய கோபத்தை நியாயப்படுத்த முயன்றாள்.

“பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியல! அந்தப் பையன் உனக்கு வேண்டாம் காஜல்” என்று முடிவாக மறுத்து விட்டார் காசிநாதன்.

“அப்பா! அவன் எப்பவும் அப்படி இருக்கிறது இல்லை, இன்னைக்குத் தான் ஏதோ டென்ஷன்னு சொல்றேன்ல ப்பா” என்று அவரைச் சமாதானம் செய்ய முயன்றாள் காஜல்.

பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை என்று பிரித்வியைக் குற்றம் சாட்டிய காசிநாதனுக்கு, அவனுக்கு விருப்பம் இருக்கிறதா? என்று தன் மகளிடம் கேட்டறிந்து விட்டு, செல்பேசியில் கூட , பேசி விட்டு, பிறகு அவனை வெளியே எங்கேனும் சந்தித்திருக்கலாம் தானே! இப்படி அவரிடமும் தவறு இருந்தது அதை மறந்து போனார் காசிநாதன்.

“சரி! அவன்கிட்ட பேசிட்டு சொல்லு” என்று போனால் போகிறது என்று  மகளுக்காகப் பிரித்வியை மன்னித்தார்.

இனி பிரித்வியை எப்படி தன் வழிக்குக் கொண்டு வருவது என்பது தெரியாமல்  விழித்தாள் காஜல்.

🌸🌸🌸

“ஹேய் அதிரூபா!” என்று உரக்க அழைத்தாள் காஜல்.

அவள் மீதிருந்த கோபம் தான் அப்படி அழைக்க வைத்திருந்தது.ஆனாலும் அதற்கு மாறாக முகத்தைச் சிரித்தபடி வைத்திருந்தாள்.

“ஹாய் காஜல்” என்று அதிரூபாவும் எதுவும் தெரியாதது போல, சிரித்தாள்.

“நேற்று நடந்ததை உங்கிட்ட சொல்ல வந்தேன்” என்று அர்த்தத்துடன் கூறினாள் காஜல்.

“என்ன நடந்துச்சு?” என்று மர பெஞ்சில் அமர்ந்தாள் அதிரூபா.

“நான் பிரித்வியை லவ் பண்றேன். அதை அப்பா கிட்ட சொல்லி, பிரித்வியைப் பார்க்கக் கூப்பிட்டு வந்தேன்” என்க,

“காலேஜூக்கா?” என்று பொய்யான ஆச்சரியத்துடன் கேட்டாள் அதிரூபா.

“ஆமாம்” என்று அவள் கூறவும்,

“ஓஹோ!” இவளும் ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

“பிரித்வி ஷாக் ஆகிட்டான் அதிரூபா! அவனுக்கு என்னப் பண்றதுன்னே தெரியல. ஏன் சொல்லாமல் கூப்பிட்டு வந்த – ன்னு, என்கிட்ட கோபமாக இருக்கான்” என்று பெருமூச்சு வேறு விட்டாள் காஜல்.

“ம்ம்! ஓகே மா. கிளாஸூக்கு நேரமாச்சு. நீயும் வந்திரு” என்று பேச்சு முடிந்தது போல, கிளம்பி விட்டாள் அதிரூபா.

“இவளுக்குத் திமிரைப் பாரு. கண்ல பொறாமை வேற தெரிஞ்சுச்சே!” என்று இல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்து கொண்டாள் காஜல்.

எதிரே வந்தவனைப் பார்த்ததும்,
“ஹாய் பிரித்வி” என்று மன்னிப்புக் கேட்கும் முக பாவனையுடன் அவனிடம் பேசினாள் காஜல்.

அவளைக் கண்டு கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தான்.

“பிரித்வி! என்னை மன்னிச்சிரு” என்று மன்றாடினாள்.

“ப்ச்! சாரி கேட்காத காஜல். எனக்கு உன் கூட ஃப்ரண்ட்ஷிப் இயல்பாக இருக்கும்னு தோணலை.அவ்வளவு தான். அதுக்கு ஏன்  கெஞ்சுற?” என்று கேட்டான்.

“நீ தான் எதுவுமே வேண்டாம்னு சொல்றியே! அப்பாவும் என் மேல் ரொம்ப கோபமாக இருக்கார். நீயும் இப்படி சொல்ற! கஷ்டமாக இருக்கு” என்று கண்ணீர் விட்டாள்.

“நானும் இப்படி சொல்றேனா? முதலில் உன் அப்பாவை நான் இங்கே கூப்பிட்டு வரச் சொன்னேனா? எனக்கே அவ்ளோ ஷாக்! ஏன் காஜல் இப்படி பண்ற?” என்று அழுத்தமாக கேட்டான் பிரித்வி.

“அப்பா கிட்ட சாரி மட்டும் கேட்க முடியுமா பிரித்வி?” என்று குற்ற உணர்வுடன் கேட்டாள் காஜல்.

“எதுக்கு?”

“நீ கோபமாகப் பேசியதால், வருத்தமாக இருக்கார் பிரித்வி. சாரி கேட்டால், நானும் அவரைச் சமாதானப்படுத்த ட்ரை பண்ணுவேன். ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள்.

கடைசியாக இதை மட்டும் செய்து விடலாம் இல்லையென்றால், இவளது தொல்லை இருந்து கொண்டே இருக்கும் என்று அதற்கு ஒப்புக் கொண்டான் பிரித்வி.

🌸🌸🌸

இன்று…

“உங்க உடம்பு சரியானதும் அதையெல்லாம் பொறுமையாகப் பேசுவோம் பிரித்வி. இப்போ ரிலாக்ஸ் ஆக இருங்க” என்று நெற்றியில் முத்தமிட்டாள் அதிரூபா.

தனக்காக மனைவி எடுக்கும் ஆபத்தான முயற்சிகளை முழுதாக கை விடச் சொன்னால், கேட்க மாட்டாள் என்று தான்,
ஒரு சில உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டான் பிரித்வி.

“நான் போய் அத்தைக்குக் கிச்சனில் உதவி பண்றேன்” என்று அறையை விட்டு வெளியேறினாள் அதிரூபா.

🌸🌸🌸

“இவனை எப்படி சாய்க்கிறதுன்னு சத்தியமாகத் தெரியல!” என்று உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தான் தன்வந்த்.

கொஞ்சம் உடல்நிலை சரியானதும் தன்னுடைய ஆட்டத்தை ஆட ஆரம்பித்திருந்தான் பிரித்வி.

‘தான் செல்லும் போது தன்வந்த்தைத் தூக்கு’ என்று பாரத் – ஐ அமைதியாக இருக்கச் சொன்னான்.ஆனால் விசுவாசியான பாரத், முதலாளியைக் கண் கொத்திப் பாம்பாக பாதுகாத்துக் கொண்டு இருந்தான்.

அதனால் , தன்வந்த்தால் அத்தனை எளிதில் மீண்டும் பிரித்வியை நெருங்கி முடியவில்லை.

கொலை முயற்சி இல்லாமல், வேறெதுவும் செய்து, பிரித்வியை உடைக்க முடியவில்லை.

அவனுடைய குடும்பமும் பாதுகாப்பாக இருந்தது. இப்போது, பாதுகாப்பு இல்லாமல், இருப்பது அவன் மட்டுமே என்பது தன்வந்த்தின் மூளைக்கு எட்டவில்லை.

அறைக்குள் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

அவனைத் தேடி வந்த தன்வந்த்தின் மனைவியோ,
“சாப்பாடு ரெடியாகிடுச்சுங்க.இங்கே கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

“சாப்பிட்ற நிலைமையில் நான் இல்லை. எடுத்துட்டு வராதே. நீ மட்டும் சாப்பிடு.என்னைத் தொல்லைப் பண்ணாத” என்று மனைவியை எச்சரித்து அனுப்பி வைத்தான் தன்வந்த்.

திருமணம் ஆகி, மூன்று வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாத வேதனையைத் தாங்கிக் கொண்டும், கணவனுடைய பாரா முகத்தையும் தினமும் வேண்டா வெறுப்பாக சகித்துக் கொண்டும் இருந்த அவனுடைய மனைவியோ தளர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

“பண்ற பாவம் எல்லாம் லிமிட் தாண்டி போய்க்கிட்டு இருக்கு. இவருக்குச் சொன்னாலும் புரிய மாட்டேங்குது” என்று
நொந்து போனாள்.

தன்வந்த்தை திருத்துகிறேன் என்று அவள் எடுத்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல ஆகியது.

இனி தன்னுடைய நிம்மதியும் கொஞ்சம் கொஞ்சமாக அனுதினமும் கரைந்து கொண்டு இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறாள் காரிகையவள்.அதை நினைத்துக் கண்ணீர் வழிந்தோடியது.

காய்ச்சலின் வீரியமும் தாளாமல், சேர்ந்திருந்தவளின் உதடுகள் முணுமுணுத்தது.

“ஏன் என்னோட புரபோஸலை ரிஜெக்ட் செய்த பிரித்வி?”

தற்போது தன்வந்த்தின் மனைவியாக வாழ்வது காஜல் தான். குழந்தையின்மை, உடல்நலக் குறைவு என்று தன்னுடைய உடலே உருக்குலைந்து போவதை எண்ணி அழுகையில் கரைந்தாள்.

“உன்னை அவ்ளோ லவ் பண்ணினேன் தான? அதைப் புரிய வைக்க எவ்ளோ முயற்சி பண்ணேன்” என்று சொல்லி சொல்லி அழுது கொண்டிருந்தாள் காஜல்.

“உனக்கு எப்படி அந்த அதிரூபா மேல லவ் வந்துச்சு?”

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்