550 views

 

கணவனின் முக வாட்டத்தை உணர்ந்தவள் அப்படியே நிற்க, தன்னருகில் நிற்கும் மனைவியின் நிழலை உணர்ந்தாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை ரகுவரன். நிமிடங்கள் கடந்து, “மணி ரொம்ப ஆயிடுச்சு, எந்திரிச்சு வா சாப்பிடலாம்.” என்றிட,

“தூங்க போலாம்.” என்றான்.

மகிழினி பதில் பேச வாயை திறக்க… எதையும் கண்டுகொள்ளாமல் துயில் கொள்ளும் அறைக்கு விரைந்தான். எதுவும் பேச முடியாத நிலையில் அவள் பின்தொடர, பிள்ளைகள் இருவருக்கும் நெற்றியில் முத்தத்தை இரவு பரிசாக அளித்து விட்டு, தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்கு விரைந்தான்.

என்ன செய்கிறான் என்று நோட்டம் விட்டவள் கடுப்பாகிவிட்டாள் தனியாக தூங்க முயன்ற கணவனின் முடிவால். கதவில் சாய்ந்தவாறு கைகட்டி நின்றவள், “சோ, சார்‌ இன்னைக்கு இங்க தான் தூங்க போறீங்க.” ஒரு மாதிரியான கலவையாக மனைவியின் குரல் தன்னிடம் வருகிறது என்பதை உணர்ந்தும் பதில் சொல்லாமல் குப்புற படுத்தான்.

“ரகு அப்ப இருந்த சிட்டுவேஷன்ல ஏதோ சொல்லிட்டேன். மனசுல கோவம் இருந்தா எப்பவும் போல கத்திடு. இந்த மாதிரி எல்லாம் செஞ்சு காயப்படுத்தாத. எந்திரிச்சி பசங்க கூட வந்து படு.”

….

“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் ரகு.”

…..

“தப்பு உன் மேலயும் தான இருக்கு. அப்ப திட்டாம கொஞ்சவா செய்வாங்க.”
……

“பத்து நிமிஷம் டைம் தர ரகு அதுக்குள்ள நீ அந்த ரூம்ல வந்து படுக்கணும்.” தான் மட்டுமே பேசிக் கொண்டிருக்க மௌனம் காக்கும் கணவனின் செயலில் கடுப்பானவள் எச்சரிக்கை கொடுத்துவிட்டு வழக்கமாக படுக்கும் அறைக்கு விரைந்தாள்.

மணி பதினொன்று கடந்த பின்பும் ரகுவரனின் வரவு நடைபெறவில்லை. கடுப்போடு கணவனிடம் நின்றவள், “இன்னைக்கு மட்டும் நீ அங்க வந்து படுக்கலனா இனி எப்பவும் வந்து படுக்க கூடாது. கடைசியா கேட்கிறேன் வர முடியுமா முடியாதா ரகு” என்றதற்கும் எந்த பதிலும் இல்லை அவனிடம்.

அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் கணவனின் அருகில் சென்றவள் முடியை பிடித்து இழுக்க, அவன் முகம் சொல்லியது கொண்ட வருத்தத்தை. முடியிலிருந்து கையை எடுத்தவள் மிக அமைதியான குரலில், “ரகு” என்றழைத்தாள்.

கண்மூடி திரும்பிப் படுத்தவன், “என்னால உன் குழந்தைகளை பத்திரமா பார்த்துக்க முடியாது. கூட இருந்தா அவங்களுக்கு ஏதாச்சும் ஆகிடும். இனி எல்லாத்தையும் நீயே பார்த்துக்க நான் ஒதுங்கி நின்னுக்கிறேன்.” அதன் பின் பேசாமல் போர்வைக்குள் மறைத்தான் தன் கண்ணீரை.

எவ்வளவு நேரம் சிலையாக அமர்ந்திருந்தாளோ மகிழ்வரனின் அழுகை சத்தத்தில் நினைவு திரும்பி அங்கு சென்றாள். மாலை நடந்த சம்பவத்தில் இருந்து மீளாத மகிழ்வரன் கனவில் என்ன தோன்றியதோ அலறி அழுதான்.

மகனை சமாதானப்படுத்தி தோள் மீது கிடத்திக் கொண்டவள் எண்ணம் முழுவதும் கணவன் மீதே இருந்தது. பிள்ளையோடு அவன் இருக்கும் அறைக்கு செல்ல, வருத்தத்தில் படுத்திருந்தவன் அப்படியே உறங்கிப் போய் இருந்தான். மான்குட்டியை விட்டு இங்கு படுக்கவும் முடியாது, தூங்கிக் கொண்டிருக்கும் கணவனை எழுப்பவும் முடியாது திண்டாடி போனவள் மகனை மட்டும் கணவன் பக்கத்தில் படுக்க வைத்தாள்.

கலைந்திருந்த போர்வையை இருவருக்கும் போர்த்தி விட்டவள்  மகனை தட்டிக் கொடுத்தவாறு கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் கோபத்தில் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வர, மகனை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த கை கணவனின் தலைமுடியை கோதிவிட்டது.

விழி முனையில் லேசான உவர்நீர் இருக்க, கண்கலங்கி இருக்கிறான் என்பதை அறிந்து துடித்து போனாள். காய்ந்து இருந்த இதழ்கள் அவன் நெற்றியில் குடியேற, பிரிய மனமில்லை என்றாலும் மகள் தனியாக இருப்பதால் சென்று விட்டாள் அங்கு.

***

தினமும் கட்டி அணைத்துக் கொண்டு தூங்கும் ரகுவரனுக்கு அந்த சுகம் இல்லாமல் முழிப்பு வந்துவிட, பக்கத்தில் இருக்கும் மகனைப் பார்த்து இன்பமாக அதிர்ந்தான். இது மனைவி வேலை என்பதை உடனே கண்டு கொண்டவன் யோசனையோடு படுத்திருக்க, அசைந்து படுத்த மகிழ்வரன் தந்தை மார்பின் மீது தலை வைத்தான்.

குறும்பு மகனின் வாசத்தை உணர்ந்த ரகுவரன் தன் மார்பு மீது முழுவதுமாக போட்டுக் கொண்டான். அதிகாலை நேரம் என்பதால் குட்டி ரகுவரனும் முழித்துக் கொள்ள, தந்தை மகன் இருவரும் பேசிக் கொள்ளாமல் பாதி உறக்கத்தில் படுத்திருந்தார்கள்.

“அப்பா” தூக்க கலக்கத்தில் அழைத்தவன் ஓசை லேசாக கேட்டது.

“என்னடா” என்ற அக்கறையான தலைக் கோதலில் சுகமாக கண்மூடி கொண்ட குட்டி ரகுவரன், “அக்கா” என்றான் அரைகுறையாக.

“அம்மாவும் அக்காவும் பக்கத்து ரூம்ல இருக்காங்க, போறியா?”

“ம்ம்ம்” என்றதும் மகனை எழுப்ப முயன்றான்.

செல்ல சம்மதம் கொடுத்தவன் எழ சம்மதம் கொடுக்கவில்லை. முதலில் பாசமாக எழுப்பிக் கொண்டிருந்தவன் அவன் பிடிவாதத்தில் முறைக்க, கண்மூடி இருந்ததால் அறியவில்லை சிறியவன்.

“சேட்டைகாரா எழுந்திரிடா”

“மகிழ்வரன் குட் பாய் அப்பா.” எனும்போது வார்த்தை தெளிவாக வந்தது.

மகனின் தெளிவான செயலை நினைத்து உள்ளுக்குள் புருவம் உயர்த்தி கொண்டவன், “இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்கிற மாதிரி நடிச்சியாடா கேடி பையா.” என்றான்.

கண்ணை திறக்காமல் இதழ்களை விரித்து சிரித்தவன் சற்று தலையை உயர்த்தி, “நான் இன்னும் எந்திரிக்கவே இல்ல அப்பா. பாருங்க கண்ணு திறக்கல.” முறைப்பு கூட மகனின் முகபாவணையில் காணாமல் போனது.

முகத்தை வழித்து முத்தமிட்டவன், “உங்க அம்மா மாதிரி நீ அழகுடா.” என்றிட,

“அம்மா உங்கள மாதிரி அழகுன்னு சொல்லுவாங்க.” என்றான் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து முறைப்பாக.

“ச்சீ…ச்சீ நீ என்னை மாதிரி இல்லடா. நான் எவ்ளோ அழகா இருக்கேன்.”  தன் போக்கில் மெச்சிக்கொள்ள கூட நேரம் கொடுக்காத மகிழ்வரன் இரண்டு கண்களையும் திறந்து விட்டான் தந்தையை அக்னி கொண்டு எரிக்க.

“என்னடா லுக்கு விடுற?”

“உங்களை விட நான் தான் அழகு.”

“அப்படின்னு யாரு சொன்னா?”

“எல்லாரும்ம்ம்ம்…..” என்றான் இரு கைகளையும் விரித்து.

“அந்ந்ந்த எல்லாரும்ம் யாருடா.” மகனைப் போல் இழுத்து வார்த்தையில் ஒழுங்கை காட்டி கேட்டான்.

குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு பேரையும் தூக்க கலக்கத்தில் அரைகுறையாக சொன்னவன், “டெய்லி அம்மா சொல்லுவாங்க.” பேச்சை முடித்தான்.

கை இரண்டையும் பின்னந்தலைக்கு வைத்த ரகுவரன், “வேற என்னடா சொல்லுவ உங்க அம்மா?” உளவு பார்க்கும் வேலையை ஆரம்பிக்க,

“நான் உங்கள மாதிரி அடம் பண்றன்னு சொல்லுவாங்க. பார்க்க உங்களை மாதிரியே இருக்கனாம். பண்ற எல்லாத்துலையும் உங்க பையன்னு நிரூபிக்கிறன்னு சொல்லுவாங்க.” தந்தை அறியாமல் அன்னை சொல்லியதை சொல்லியவன் தூக்கம் போகாமல் தந்தை மார்பு மீது சாய்ந்துக் கொண்டான்.

பின்னந்தலையில் இருந்த இரு கைகளும் மகனை பாதுகாப்பாக மார்போடு வைத்துக் கொள்ள, “நான் பெருசா வளர்ந்ததும் ரெண்டு ரகுவரனை அம்மா பார்ப்பாங்களாம்.” மகன் சொல்லிய வார்த்தைகளை கற்பனையில் ஓட விட்டு பார்த்தவன் தன் நகலை தன் உயரத்திற்கு இல்லை…இல்லை  தன்னைவிட உயரமாக வளர்ந்து நிற்கும் நாளை எண்ணி மகிழ்ந்தான்.

வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வை முன்னரே கணித்த பெற்றோர்கள் ஒன்றை கணிக்க மறந்து விட்டார்கள் ரகுவரனின் நகல் இரட்டை ரகுவரனுக்கு சமம் என்று. வீரியம் கொண்டு எழுந்து நிற்கும் பொழுது நம் ரகுவரன் வியந்து பார்ப்பான் வேறொரு கதை களத்தில்.

தந்தையும் மகனும் இல்லாத கதை எல்லாம் பேசி தீர்த்தார்கள் தூக்கம் வரும் வரை. இருவரையும் நித்திரை மாதா மீண்டும் தன் உலகிற்கு அழைக்க, கட்டிக்கொண்டு உறங்கினார்கள்.

தூக்கத்தில் கூட அக்காவை கேட்கும் தம்பிக்கு ஈடாக தூக்கத்தில் துலாவினாள் தம்பியை தேடி மான்விழி. அவன் இல்லாததை உணர்ந்ததும் விழி பட்டென்று தெரிந்துகொள்ள, தந்தையும் தன்னருகில் இல்லை என்றுணர்ந்து பயம் கொண்டாள்.

அன்னையை எழுப்பக் கூட எண்ணம் தோன்றாமல் இருவரையும் தேடி வெளியில் வந்தவள் கால்கள் தன்னுயிர்கள் தூங்கும் அறைக்கு சென்றது. தந்தையும் மகனும் கட்டிக்கொண்டு உறங்குவதை பார்த்த பின் தான் பெருமூச்சு விட்டாள் இன்னும் ஒரு மாதத்தில் பதினோராவது வயதை எட்டப் போகும் மூத்தவள்.

‘ஏன் இங்கு படுத்து இருக்கிறார்கள்’ என ஆழ்ந்து தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவள் மனம் தந்தை அருகில் படுக்க எண்ணியது. எண்ணம் அப்படியே செயல்பட, தந்தையின் வலது மார்போடு முகம் பதித்தாள். மகளின் வரவை அறியாமல் போனாலும் கைகள் தன்னிச்சையாக அவளை கட்டிக் கொள்ள, அவள் கைகள் தம்பியை சேர்த்தணைத்துக் கொண்டது.

வெகு நேரம் ஆனதால் மான்விழியும் கண்களை மூடி தூங்க முயற்சிக்க, அன்னையின் ஞாபகம் உதித்தது. தனியாக தூங்கும் அன்னை மீது கவலை கொண்டவள் தந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு பழையபடி அன்னையைக் கட்டிக் கொண்டு உறங்கினாள்.

கணவனின் நினைப்பில் தூங்காமல் தான் படுத்திருந்தாள் மகிழினி. மகள் எழுந்ததும் தந்தையை கேட்பாள் என்று எதிர்பார்க்க, தேடி சென்றது முறைப்பை கொடுத்தது. தன்னை விட்டு செல்லும் மகள் மீது பொறாமை கொண்ட மகி அப்படியே படுத்திருக்க, தன்னிடம் கரை சேர்ந்த முத்து கட்டியணைத்ததில் சுகமான சிரிப்பு அவள் உதட்டில்.

பெற்றோர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பிள்ளையை செல்லமாக வைத்துக் கொள்ள, மீதம் இருக்கும் பிள்ளையின் அன்பை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் மறைமுகமாக பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். தாய் தந்தையின் உலகத்தில் வளரும் இரண்டு இளசுகளும் பெற்றோர்களை பின்தொடர்ந்தாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்வார்கள் அன்பை விதைத்து.

***

விடியல் அனைவரையும் வரவேற்றது சூரியனை கிளப்பி விட்டு. நால்வரும் தாமதமாக தூங்கியதால் விழி திறக்காமல் இருக்க, மீதம் இருந்த மூன்று வீட்டின் கதவுகளும் திறந்து கொண்டது. நேற்று நடந்ததை மறந்தவர்கள் அவரவர் வேலையை கவனிக்க, ஆதவ் மட்டும் நண்பனின் குரல் கேட்காமல் சோகமாக அமர்ந்திருந்தான்.

இனன்யா எதுவும் கேட்காமல் அவன் போக்கில் விட்டு விட, சதீஷ் மகனுக்கு ஆதரவாக பேச்சு கொடுத்தான். கணவன் சிக்கிக்கொண்டதை உணர்ந்த மனைவி அங்கிருந்து நடையை கட்டிவிட, “என் சிங்கக்குட்டிக்கு என்ன வேணும்?” கேட்டான் அக்கரையாக.

“ஃப்ரெண்ட் சிங்கக்குட்டி”

“ஆஹான் ஃப்ரெண்ட் சிங்கக்குட்டியா, அது யாரு?” என்ற தந்தையை பாவமாக பார்த்தவன், “மகிழ் அப்பா” என்றான்.

“அவனையா சிங்கக்குட்டின்னு சொன்ன…” என்றவன் மகன் முறைப்பை அறிந்து கொள்ளாமல், “அவன் சிங்கக்குட்டி இல்லடா நரி குட்டி. என் குட்டிமா கிட்ட விசாரிச்சேன் அவன் தான் வெளிய போகலாம்னு ஃபிளான் போட்டு கொடுத்திருக்கான். காரை லாக் பண்ணது கூட அந்த குட்டி சைத்தான் வேலை தான். பண்ற எல்லாத்தையும் பண்ணிட்டு அழுக வேற அவனுக்கு. அவங்க அப்பா மேல ரொம்ப நாளா இருந்த கோபத்தை சேர்த்து வச்சு காட்டிட்டான்.” என்றதும் எழுந்து நின்று மூச்சு வாங்க முறைத்தான் ஆதவ்.

 

“சிங்கக்குட்டி நீ எதுக்கு இப்போ மேலயும் கீழயும் மூச்சை ஏத்தி இறக்கிட்டு இருக்க.”

உதட்டை பிதுக்கிக்கொண்டு, “மகிழ் பாவம்” சென்றான் ஆருயிர் நண்பன்.

“அப்படியெல்லாம் சொல்லாத சிங்கக்குட்டி அப்புறம் நம்ம தான் ஐய்யோ பாவம் ஆகிடுவோம்.”

“மகிழ் வரட்டும் உங்கள மாட்டி விடுறேன்.”

“சிங்கக்குட்டி நான் உன் அப்பாடா”

“மகிழ் என் பிரண்ட்.”

“அவன் கூட சேராதன்னு சொன்னேன் கேட்டியா. இப்ப பாரு… அவனை மாதிரியே அப்பன எதிர்த்து பேசுற.”

“மாமா” என்ற குரலில் அதிர்ந்த சதீஷ், “அடடே யாரு! வாங்க மருமகனே… என்ன இவ்ளோ நேரம் இன்னைக்கு.” குட்டி ரகுவரனை பாசத்தோடு வரவேற்றான்.

தந்தையின் பல் இளிப்பை பார்த்த ஆதவ் ஒரு மாதிரியாக நோக்க, மகன் பக்கம் திரும்பவே இல்லை அவன். போன முறை மகிழோடு ஏதோ ஒரு வாக்குவாதம் செய்துவிட்டான் தெரியாமல். காலையில் நடந்த சம்பவத்திற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்த குட்டி ரகுவரன் சமயம் பார்த்து ஆகாஷிடம் கோர்த்து விட்டான்.

மருமகனின் வார்த்தையை உண்மை என்று நம்பிய ஆகாஷ் பாவம் அப்பாவி ஜீவனை போட்டு வறுத்து எடுத்தான். கூடவே அவனின் தர்ம பத்தினியும் சேர்ந்து மருமகன் பக்கம் பேச, குடும்பம் மொத்தத்திற்கும் அன்று வில்லன் ஆனான் சதீஷ்.

அதில் ஏற்பட்ட பெரும் அனுபவம் தான் இப்பொழுது மருமகனை பார்த்ததும் சிரிக்க வைத்தது. தன்னை நினைத்து உள்ளுக்குள் அஞ்சும் மாமனின் எண்ணம் அறியாமல், “ஆதா நேத்து காருக்குள்ள நான் மாட்டிக்கிட்டேன்டா.” என்றான் வியப்பாக.

நேற்றிலிருந்து காதில் கேட்கும் வார்த்தை என்றாலும் ஆதவ் புதிதாக கேட்பது போல், “எப்படிடா நீ உள்ள மாட்டிகிட்ட.” என கேள்வி எழுப்ப, “அதாண்டா எனக்கு தெரியல நான் பொம்மை படம் பார்த்துட்டு அமைதியா உக்காந்துட்டு தான் இருந்தேன். திடீர்னு காரு திறக்கல. அப்பா வந்தாங்க அம்மா வந்தாங்க யாராலயுமே திறக்க முடியல.” ஏதோ அதிர்வான சம்பவத்தை கையாண்டது போல் கண்களை பெரிதாக்கி நண்பனுக்கு விவரித்தான் நேற்றைய சம்பவத்தை.

அவனாவது பரவாயில்லை ஆதவ் கண்கள் அதைவிட அதிகமாக விரிந்தது. கேள்வி மேல் கேள்வி கேட்டு நண்பனின் சம்பவத்தை தெரிந்து கொண்டான். இருவர் பேசும் பேச்சைக் கேட்க முடியாமல் சதீஷ் அங்கிருந்து ஓடிவிட, சாவகாசமாக பேச ஆரம்பித்தார்கள் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு.

“கடைசியா நீ எப்படிடா வெளிய வந்த?”

“எனக்குள்ள ஸ்பைடர் மேன் சக்தி வந்துச்சுடா.”

“ஸ்பைடர் மேனாடா” உருட்டும் நண்பனின் விழிகளை கண்டு தன் விழிகளையும் உருட்டினான் மகிழ்வரன்.

“ஆமாடா அன்னைக்கு நம்ம ஒரு படம் பார்த்தோம் இல்ல அந்த மாதிரி எனக்கு ஒரு சக்தி வந்துச்சு. அப்படியே கார ஓங்கி அடிச்சேன். அக்கா ரொம்ப பயந்துட்டா… என் சக்திய பார்த்து.”

“டேய்! அக்காவுக்கும் கொஞ்சம் சக்தி கொடுத்து இருக்கலாம்ல.” குளித்துவிட்டு தயாராகி வந்த சதீஷ் இன்னும் பேசிக் கொண்டிருக்கும் லொள்ளை கேட்டு தலையில் அடித்துக் கொண்டான்.

அதை அறியாத இருவர் அவர்கள் உலகில் ஆயிரம் கதைகளை திரித்து வைத்தார்கள். சாப்பிடும் நேரம் வந்ததும் பாட்டிகள் இருவரும் ஆளுக்கொரு பேரனை பொறுப்பேற்றுக் கொள்ள, மணாலி தந்தையின் கையில் ஐக்கியமானாள்.

இனியாவிற்கு இன்று பரீட்சை இருப்பதால் விடியற்காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுப்பு விட முயற்சித்தான். அவனின் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது கட்டியவள் ஆறு மணிக்கு எழுந்ததால். வழக்கம்போல் கண்டபடி மனைவியை வசை பாடியவன் படிக்கச் சொல்லிவிட்டு மகளை அழைத்து வந்து விட்டான். படிக்க ஆரம்பித்த இனியா தூக்கத்தை தியாகம் செய்ய விரும்பாமல் மீண்டும் துயில் கொண்டிருக்கிறாள் கணவன் அறியாது.

***

கதிரவனின் செல்ல விளையாட்டில் கண் திறந்தான் ரகுவரன். மகன் தன்னருகில் இல்லாததை உணர்ந்து சாவகாசமாக குப்புற படுத்தான். சோம்பலில் எழ முடியாமல் படுத்திருந்தவன் செவியில் செல்ல மகளின் குரலும் மனைவியின் சிரிப்பு சத்தமும் கேட்டது.

சண்டையில் பேசாமல் இருந்தாலும் மனைவியின் சிரிப்பு சத்தம் என்னவோ புத்துணர்ச்சி ஆக்கியது அவனுடலை. காலையில் தினமும் கண் விழிக்கும் பொழுது தன்னையே ரசித்துக் கொண்டிருக்கும் மனைவியின் பரிசம் இன்று கிடைக்காமல் போனதால் உடனே கால்கள் அவளிடம் சென்றது.

“அம்மா நான் போடுறேன் ப்ளீஸ்…”

“நோ மானு… சூடா இருக்கு கைல கொட்டிடும். அப்புறம் உங்க அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு.

“ப்ளீஸ் ம்மா மான்குட்டி உங்களை மாதிரி பத்தரமா பண்ணும்.”

“உன்னோட சேட்டை நாளுக்கு நாள் ரொம்ப அதிகமாகுது மானு. எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற ஓவர் செல்லம். இதுல செல்லம் கொடுத்து நான் உன் தம்பிய கெடுத்துட்டேன்னு மனசாட்சியே இல்லாம பேசுவான்.”

“அப்பாவ திட்டாதம்மா பாவம்”

“அதான!” என்றவள் சளிப்போடு, “அது என்னடி அப்பனும் மகளும் ஊர்ல இல்லாத அளவுக்கு இப்படி பாசத்தை கொட்டிக்கிறீங்க. நானும் உன் தம்பியும் இந்த மாதிரியா அலும்பு பண்ணிட்டு இருக்கோம்.”

“அம்மா எனக்கு ஒரு டவுட்டு” என்ற மான்குட்டிக்கு பதில் சொல்லாமல் பால் பொங்கி வருவதை பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழினி.

“அம்மா மான்குட்டிக்கு ஒரு டவுட்டுடுடுடு” காதருகே கேட்கும் மகளின் ஓசையில், “கத்தாதடி நேத்து பாலை ரொம்ப பொங்க விட்டுட்டேன். இன்னைக்காது சரியா ஆஃப் பண்ணனும்.” என்றாள்.

அன்னையின் வார்த்தையை கேட்ட மான்குட்டி வாயில் கைவைத்து சிரிக்க, பார்வை மாறியது மகளிடம். “உங்க அப்பாவ மாதிரியே உனக்கும் கொழுப்பு அதிகம் மானு”

“நான் அப்பாவோட மான்குட்டி அப்பா மாதிரி தான் இருப்பேன்.” என மகள் பேசிக் கொண்டிருக்கும் நேரம் அடுப்பை நிறுத்தினாள்.

“சரி சொல்லுடி உனக்கு என்ன டவுட்?”

“எப்ப பாரு நீயும் உன் அப்பாவும்னு நீங்க சொல்றீங்க, நீயும் உன் பையனும்னு அப்பா சொல்றாங்க, எதுக்கு? நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலி தான.”

கேள்வி கேட்ட மான்விழி ஆர்வமாக அன்னையின் முகத்தை பார்க்க, அவளோ மகளை ஒரு மாதிரி பார்த்தாள். அன்னையின் பார்வை அர்த்தத்தை புரிந்து கொள்ளாத மான்விழி புருவம் உயர்த்தி பதில் கேட்க,

“இந்தக் கூட்டணிய போட்டதே நீங்க தான. நீயும் உன் அப்பாவும் சேர்ந்துட்டு பண்ணாத லொள்ளு இல்ல. உங்களை வாய பொளந்து பார்க்கிறதை தவிர எனக்கும் என் மகனுக்கும் பொழப்பு இல்லாம போச்சு. சிவனேன்னு இருக்க ரெண்டு பேரும் பொழப்பு இல்லாம கூட்டணி வைக்க வேண்டியதா போயிடுச்சு. ஆனாலும் இந்த வீட்ல இருக்கிற ஒருத்தரும் உங்க கூட்டணி அளவுக்கு எங்கள பார்க்கல,மதிக்கல.” என்றதும் மான்விழியின் சிரிப்பு சத்தம் அதிகமானது.

“சிரிடி நல்லா சிரி. ஒரு நாள் உனக்கும் உன் அப்பாவுக்கும் இருக்கு பாரு. நானும் என் மகனும் இந்த கூட்டணியை பலப்படுத்தி உங்களை ஓட விடுறோம்.”

“அப்படியெல்லாம் நடக்காது” அன்னைக்கு கையசைத்துக் காட்டிய மான்விழி அதற்கேற்றார் போல் ஆடி காட்டி வெறுப்பேற்ற,

“என்னத்துக்குடி இப்போ நீ இப்படி டான்ஸ் ஆடி காட்டுற.”

“நானும் எங்க அப்பாவும் தான் இந்த கேம்ல வின் பண்ணுவோம். நீங்களும் தம்பியும் தோத்துப் போய்டுவீங்களே…” என்றவள் குதூகலத்தில் முன்னர் ஆடியதை விட அதிகமாக ஆடி காட்டினாள் இடுப்பை வளைத்து.

“இந்த கொழுப்பை தான் அடக்கணும்னு சபதம் எடுத்து இருக்கேன் நானு. அதுவும் உன்ன கூட என் பொண்ணுன்னு மன்னிச்சு விட்டுடுவேன். உங்க அப்பான்னு ஒரு கேட்டகிரி இந்த வீட்ல இருக்கே…” என்றவள் கணவன் மீது இருக்கும் கடுப்பை காட்டினால் அங்கிருக்கும் கரண்டி ஒன்றை தூக்கி போட்டு.

மான்விழி காது இரண்டையும் பொத்திக்கொண்டு கமுக்கமாக சிரிக்க, “அந்த சிடு மூஞ்சி அரை லூச என்னைக்காவது ஒரு நாள் கோபம் வந்து சாணி மாதிரி உருட்டி செவுத்துல அடிக்க போறேன். எப்ப பாரு கத்துறான் இல்லையா மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு ஓரமா போறான்.

புருஷனா போனதுனால அந்த மூஞ்சிய இன்னும் பேத்து விடாம வச்சிருக்கேன். நேத்து அவன் பண்ண காரியத்துக்கு தூங்கும்போது கல்ல போட்டு கொன்னு இருப்பேன்…. உங்க ரெண்டு பேத்துக்கும் அப்பான்னு ஒருத்தன் வேணும்னு விட்டுட்டேன். இன்னைக்கும் அதே மாதிரி தனியா தூங்க போகட்டும் தாலிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லைன்னு தூக்கிப்போட்டு நசுக்கிடுறேன் நசுக்கி.”  என்ற மகிழினி ஆத்திரத்தில் அங்கிருந்த வேறோரு பாத்திரத்தை தூக்கி போட்டு விட்டு திரும்ப, அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் அவளவன்.

கணவனை அங்கு எதிர் பார்க்காதவள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க, தந்தையை பார்த்ததும் அன்னை கடுப்பாகும் அளவிற்கு சிரித்தாள் மான்குட்டி.

எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தவன் உணவு மேஜையில் அமர்ந்தான் அன்றைய செய்தித்தாள்களை படிக்க. கணவனின் நடவடிக்கைகளை பார்த்தவள் தோள் இரண்டையும் உயர்த்தி விட்டு தன் வேலைகளை கவனித்தாள். மான்விழி தந்தையோடு அமர்ந்து செய்தித்தாள்களை படித்துக் கொண்டிருந்தாள்.

உணவு மேஜை அதிரும்படி டம்ளரை சத்தமாக வைத்த மகிழினி, “மானு உங்க அப்பாவ காபி குடிக்க சொல்லு. நேத்து ராத்திரியே ஓவர் சீன்ல சாப்பிடாம படுத்துட்டாரு.” என ஓரக்கண்ணால் கணவனை பார்த்துவிட்டு கண்டும் காணாமலும் சமையலறைக்குள் சென்று விட்டாள்.

“அப்பா நேத்து நைட்டு சாப்பிடலையா?” என்ற மகளுக்கு சமாதானங்களைச் சொல்லியவன் காபியை குடிக்காமல் காலதாமதம் செய்ய, அவர்களையே நோட்டமிட்டு கொண்டிருந்த மகிழினி வெளியில் வந்து,

“மானு இன்னும் உங்க அப்பா காப்பிய குடிக்கல.” என ஞாபகப்படுத்தி விட்டு சென்றாள்.

“அப்பா காபி குடிங்க” என்ற பின் அவனுக்கு வேறு வழி இல்லாமல் போக பருக முடிவெடுத்தான்.

கணவனின் செயலை பார்த்த மகிழினி எங்கோ பார்த்துக் கொண்டு நிற்க, ஒரு வாய் வைத்தவன் கடும் ஆக்ரோஷத்தோடு முறைத்தான் மனைவியை. ஓரக் கண்ணால் அதை கண்டு கொண்டவள் பூனை நடையாக நகரப் பார்க்க, மனைவியின் முதுகை வெறித்தான் ரகுவரன்.

கடந்த கால நினைவுகளை பால்கனியில் அமர்ந்தவாறு சிந்தித்துக் கொண்டிருந்த பெண்வளை தடுத்து நிறுத்தினார் ரேகா. அவரின் குரல் ரகுவரனுக்கும் கேட்க,

“என்ன மேடம் பலத்த சிந்தனை போல” விசாரித்தார் மகிழினிடம்.

லேசான புன்னகையை அழகாக கொடுத்தவள், “கொஞ்சம்” என்றாள்.

“எதை பத்தின தெரிஞ்சுக்கலாமா?”

“என் புருஷன பத்தி” எனும் பொழுது அதிகமாக சிரித்தாள்.

“பாருடா!” என்றவர், “உங்களோட அழகிய கனவ கலைச்சிட்டேனா…” கேலி செய்தார்.

“கலைக்கிறது கொஞ்சம் கஷ்டம். அதெல்லாம் கலையாத பொக்கிஷங்கள்.”

“அவ்ளோ காதலா”

“தெரியல, இந்த கேள்விக்கு பதில் இதுவரைக்கும் கிடைச்சதில்லை.”

“அப்புறம் என்ன புருஷன் கிட்ட பேசலாமே.”

“பேசலாமே…. எனக்கு விருப்பம் இல்லாததை செய்ய வேணாம்னு அவன் சொன்னதும்.”

“அப்படி எதை ரகுவரன் உன்ன செய்ய சொல்லி கட்டாயப்படுத்துனாரு.”

“சொன்னா தாங்க மாட்டீங்க. அப்புறம் இந்த வாய் ரகுவரனுக்கு சப்போர்ட் பண்ணாது. நீ எல்லாம் என்ன மனுசன்னு சண்டை போட வைக்கும்.”

மகிழினியின் வார்த்தையை‌ கேட்டு ரேகாவின் முகம் மாறியது. ஆழ்ந்த சிந்தனைக்கு சென்ற ரேகா அதன் பின் பேசாமல் மௌனம் காக்க, “ரொம்ப யோசிக்காதீங்க வேலையை பார்க்கலாம் வாங்க.” என்று அழைத்துச் சென்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
26
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்