Loading

ஜிஷ்ணு தர்மனின் கூற்றில் குழம்பிய கௌரவ், ‘இவருக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?’ என்று புலம்பியபடியே நகர, இங்கு பரத் கன்னத்தில் கை வைத்து வசுந்தராவையே முறைத்திருந்தான்.

“சோ… நீ இன்னும் அவனை லவ் பண்ற?” என போட்டு வாங்க, ஒரு நொடி தடுமாறியவள்,

பின் “இல்ல. நான் லவ் பண்ணல. ஆனா, அதுக்காக இல்லாத ஒரு விஷயத்தை இருக்குற மாதிரி என்னால காட்ட முடியாது பரத். ராதி சாவுக்கும் அவனுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கு. பட், கண்டிப்பா அது நீ சொல்ற மாதிரி இருக்காது.” என்று தீர்மானமாக கூறி விட்டு, அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.

“இனிமே இதை பத்தி டிஸ்கஸ் பண்ண நினைச்சா, நீ கிளம்பி ஊருக்கு போய்டு” எனத் திட்டவட்டமாக உரைத்தவளை, பெருமூச்சுடன் ஏறிட்டான் பரத்.

கன்னிமனூரில் ஆட்கள் பலர் குவிந்து வேலைகள் ஒவ்வொன்றாய் நடைபெறத் துவங்கியது. இதற்கிடையில், ஜிஷ்ணு செய்த கொலைகளுக்கான ஆதாரத்தை திரட்டிக் கொண்டிருந்த வசுந்தரா, கன்னிமனூரில் நடக்கும் வேலைகளை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற தீவிர சிந்தனையில் இருந்தாள்.

அப்பொழுது அவளருகில் வந்த அர்ச்சனா, “தாரா மேம். நாளைக்கு ஒரு இம்பார்ட்டண்ட் ஹியரிங் இருக்கு. ஒரு பொண்ணை ரேப் பண்ணி கொன்ன, பிசினெஸ் மேன் பையனுக்கு எதிரா இருக்குற எவிடன்ஸ் இந்த ஃபைல்ல இருக்கு மேம். கிட்ட தட்ட 6 வருஷமா அந்த பொண்ணோட அப்பா, அவரு பொண்ணுக்கு நியாயம் கிடைக்க அலையுறாரு மேம். நாளைக்கு நம்மளால அவனுக்கு தண்டனை கிடைச்சா, அதை விட பெரிய ஹேப்பி வேற எதுவுமே இருக்காது…” என தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவளை நோக்கி, மென்முறுவல் பூத்த வசுந்தரா,

“கண்டிப்பா! அவன் நம்மகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது அர்ச்சு. எவிடன்ஸ் பத்திரம். நான் வெளிய போயிட்டு வந்துடுறேன்.” என்று வெளியில் கிளம்பியவள், நேராக சென்றது கன்னிமனூருக்கு தான்.

அப்பொழுதே அந்தி சாயத் தொடங்கிய நேரம். பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த ஊருக்கு இப்போது தான் பயணப்படுகிறாள். ‘சுருக்! சுருக்!’ என உள்ளம் குத்தினாலும், அதனை உதாசீனப்படுத்தி விட்டு, அவ்வூரை நோட்டம் விட்டவள், மலைக்கு அருகில் செல்ல, அங்கோ சிலர் மலை அடிவாரத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.

‘இங்க ஏன் குழி தோண்டுறானுங்க?’ என நெற்றியைத் தேய்த்தவள், மரத்தின் பின் ஒளிந்தபடி அனைத்தையும் வீடியோ எடுத்தாள்.

ஒரு சில ஆட்கள், காட்டினுள் சென்றும் மரங்களை ஒவ்வொன்றாக வெட்ட முனைய, அவர்களறியாது பின் தொடர்ந்தவளுக்கு தொக்காக மாட்டியது அவர்களின் உரையாடல்.

“ஏண்டா மருது… எதுக்குடா இப்படி காடு மேடு எல்லாம் தோண்ட சொல்லிட்டு இருக்காக.” என அவனுக்கு அருகில் நின்ற பாண்டி வினவ,

“உனக்கு விவரமே தெரியாம தான் வேலைக்கு வந்தியாக்கும். கன்னிமனூர் நிலத்துக்கு அடியில விலை மதிக்க முடியாத புதையல் எல்லாம் இருக்காம். அதை தோண்டி எடுக்க தான், நம்ம தர்மா ஐயா, இந்த ஊர பெருசாக்க போறேன்னு சொல்லிட்டு, ஒவ்வொரு இடமா சோதனை பண்ணிட்டு இருக்காரு. விவசாய நிலத்தை கூட விட்டு வைக்கலையே. எல்லாத்தையும் தோண்டி போட சொல்லிட்டாரு.”
எனப் பேசிக்கொண்டதில் வசுந்தரா குழம்பினாள்.

“புதையலா? என்ன உளறுறானுங்க?” என புருவம் சுருக்கியவளின் கவனத்தை ஈர்த்தது மருதுவின் குரல்.

“அது மட்டும் இல்ல. அதோ தெரியுது பாரு மல. அந்த மல முழுக்க இருக்குற கல்லு எல்லாம் ரொம்ப விலையாம். அதை உடைச்சா, நல்லா காசு பாக்கலாம்ன்னு, நம்ம மினிஸ்டர் போட்ட திட்டம் தான் இது எல்லாம்…” என்று வியந்து கொள்ள,

பாண்டியோ, “அப்ப, இங்க இருக்குற சனங்கள என்ன பண்ணுவாக மருது?” என வினவினான்.

“என்ன பண்ணுவாங்க. கொஞ்சம் பேர காச குடுத்து ஊர விட்டு அனுப்பிட்டு, இங்க இருந்து போக மாட்டேன்னு சொல்றவங்களை இங்கயே புதைச்சுடுவாங்க. சனங்க இருந்தா, இந்த வேலையெல்லாம் சரியா செய்ய முடியாதுல. அதான், கொஞ்ச நாளைக்கு எல்லாரையும் அப்புறப்படுத்தி இங்க எல்லா வசதியும் செஞ்சு குடுக்க போறோம்ன்னு பொய் சொல்லி, தர்மா ஐயா சனங்களையும் நம்ப வைச்சுருக்காரு.”

என்றவன் சுற்றி முற்றி ஒருமுறை பார்த்து விட்டு, ரகசியமாக “அது மட்டும் இல்ல பாண்டி. அப்படி அவரு சொல்லு பேச்சு கேட்காத ரெண்டு மூணு பேரை, இங்கயே போட்டு தள்ளிட்டாரு.” என்றதில், வசுந்தராவிற்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

“வெறிப்பிடிச்சவன்… காசுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு வெறிப்பிடிச்சு அலையுறான். ம்ம்க்கும்… கூட இருந்த பொண்ணோட சாவையே அவன் ஆதாயத்துக்கு தான யூஸ் பண்ணிக்கிட்டான். பொறுக்கி.” என மனத்தினுள்ளேயே ஜிஷ்ணுவை கரித்துக் கொட்டியவளுக்கு, அவனை இப்படியே விட கூடாது என்ற ஆதங்கம் பொங்கியது.

இந்த வீடியோ ஆதாரத்தை வைத்தே, அவனை மடக்க வேண்டும் என எண்ணியவள், விடிந்ததும் மருதுவையும் பாண்டியையும் தூக்க வேண்டுமென தனக்குள் உறுதி பூண்டு விட்டு திரும்ப, அங்கோ ஜிஷ்ணு தர்மன் தான், இடுப்பில் கை வைத்து இளக்காரப்பார்வையுடன் நின்றிருந்தான்.

அவனை எதிர்பாராது அவள் திகைக்க, ஜிஷ்ணு தாடையை தடவியபடியே, “நீ அடங்கவே மாட்டீல வக்கீலு?” என நக்கல் நகையுடன் கேட்டவன், அவளைத் தரதரவென காட்டினுள் இழுத்து செல்ல,

“டேய்… விடுடா. விடுன்னு சொல்றேன்ல. உன்ன கொன்றுவேன். கையை விடுடா.” என்று கத்திட, அதனை எல்லாம் காதில் வாங்காதவன், அவனின் இரும்பு பிடியை தளர்த்தாது காட்டின் நடுப்பகுதிக்கு அழைத்து சென்றான்.

சுற்றி மரங்களும், இருட்டையும் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு. மரத்தின் மீது சாய்ந்திருந்தவளை, நகர முடியாதவாறு நெருங்கி நின்றவனின் வெப்ப மூச்சு அவள் மீது படர, அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றாள்.

“மவனே உன்ன சாவடிச்சுடுவேன்… ஒழுங்கா தள்ளி போய்டு” என்று காடு அதிர கத்த,

“ஹா ஹா…” என வெடிப்பு சிரிப்பு சிரித்து, “யாரு யாரை சாகடிக்கிறான்னு பாப்போம் வக்கீலு.” என எக்களித்தவன், அவள் கையில் இருந்த போனை பறிக்க, அவளோ விடாப்பிடியாக அதனை பிடித்துக்கொண்டாள்.

“போனை குடுடி…” சினம் மெல்ல மெல்ல விழிகளில் பரவ ஜிஷ்ணு உறுத்து விழிக்க, “குடுக்க முடியாதுடா. பொறுக்கி நாயே.” என்று பல்லைக்கடித்தவளின் கையை பாரபட்சம் இன்றி முறுக்கினான்.

“ஆஆ…” என வலியில் கத்தியவள், அப்போதும் அழுத்தமாக போனை இறுக்கிப் பற்றிக்கொண்டாள்.

“கையை உடைச்சுடுவேன்டி.” அவன் கர்ஜிக்க, அவளோ மற்றொரு கரம் கொண்டு அவனை தாறுமாறாக அடிக்க, அவனோ அதனையும் இலகுவாக பிடித்து வளைத்தான்.

“விடுடா பொறுக்கி, அடியாளு… கையை விடுடா” என்ற அவளின் கத்தலை எல்லாம் பொருட்படுத்தாது, அவளிடம் இருந்து போனை பிடுங்குவதில் குறியாக இருந்தவன், தரையில் அவளை சரிய வைத்து, அவள் மீது பரவினான்.

அதில் அவள் திடுக்கிட, “டேய் எந்திரிடா” என அவனை தள்ள, அவனோ சாவகாசமாக அவள் மீது படுத்து, “இவ்ளோ நாள் இந்த யோசனை வரல. இப்போ ஏன் இதையே செய்யக்கூடாதுன்னு ஒரு யோசனை வருது…” என்றான் அவள் இதழ் அருகில் நெருங்கியபடி.

அவளோ முகத்தை மறுபுறம் திருப்பி, அவன் கன்னத்தில் நகங்களை வைத்து கோடு கிழிக்க, அதற்கு பழி வாங்கும் விதமாக, அவ்விரல்களை கடித்து வைத்தான்.

வசுந்தரா வலியில் அலற, “என்ன யோசனைன்னு கேட்க மாட்டியா வக்கீலு?” என அவன் கூற்றில் குறியாக இருந்தவன்,

“சரி நானே சொல்றேன். நான் ஏன் இப்படி உங்கிட்ட சண்டை போட்டு மல்லு கட்டிட்டு இருக்கணும்? நீயும் ஏன் கஷ்டப்பட்டு என்னை ஃபாலோ பண்ணி, ஆதாரம் ரெடி பண்ணனும்? அதுக்கு ஈஸியா ஒரு வழி சொல்லிடவா?” என கண் சிமிட்டியவனின் கரங்கள் இன்னும் அவளிடம் இருந்து போனை பறிப்பதில் தான் கவனமாக இருந்தது.

அவளோ, பெருமூச்சுக்கள் வாங்க அவனை முறைத்து வைக்க, “பேசாம, உன்ன நான் கடத்திட்டு போய், என் ரூமுக்குள்ள அடைச்சு வச்சு…” என ஒரு மாதிரியான பாவனையில் அவன் கூற, அவளோ நெற்றிக்கண்ணை திறந்தாள்.

“ஏய்… நான் அவ்ளோ மோசமானவன் இல்லடி. உனக்கு தாலி கட்டி தூக்கிட்டு போயிடுறேன். அப்பறம் கட்டுன புருஷனுக்கு எதிரா ஆதாரம் ரெடி பண்ண நீயும் ஃபீல் பண்ணுவ. ரெண்டு பேரும் இப்படியே சண்டை போட்டுட்டு இருந்தா கிக்காவும் இருக்கும். நானும் உன்னை அடக்குன மாதிரி இருக்கும். எவ்ளோ நாள் தான் தள்ளி நின்னே சண்டை போடுறது. போர் அடிக்கும்ல. ம்ம்?” என திமிருடன் பேசுவது போல, அவளை மிரட்டினான்.

ஆணவனின் அனல் மூச்சை கன்னங்கள் சுட்டிருந்தாலும், விழியால் அவனை சாம்பலாக்கிக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

“டேய்… பொறுக்கி. அரசியல்வாதி அடியாளு… ஒழுங்கு மரியாதையா தள்ளி போய்டு. இல்ல, நாளைக்கு ஹெட் லைன்ல எம். எல். ஏ ஜிஷ்ணு தர்மன் பரிதாபமான முறையில் மரணம்ன்னு நியூஸ் வரும்…” என்றாள் அடிக்குரலில்.

அவனும் சளைக்காது, “இருந்தாலும் உனக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் வக்கீலே. ஹெட் லைன்ல நான் மரணம்ன்னு வராது. கருப்பு கோர்ட்டும் வெள்ளை சட்டையும் அந்திவான காட்டினுள் உருண்டு பிரண்டு சண்டையிட்டதால், தரையில் தூவி இருந்த கற்கள் மரணம்ன்னு தான் நியூஸ் வரும். என்ன வக்கீல் மேடம் நியூஸ் குடுக்கட்டுமா?” ஒற்றை விழி உயர்த்தி வெற்றிப் புன்னகை சிந்தினான்.

அதில் அவளுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏற, அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவள், “என் நிழலை தொடனும்ன்னு நினைச்சாலும் உன்ன கொன்றுவேன்.” என்றாள் முகத்தை சுருக்கி.

மேலும் இதழ்களை பெரிதாக விரித்தவன், மீசையை நீவி விட்டபடி, “என் வழில குறுக்க வராத வரை தான் நீ மிஸ் வசுந்தராவா இருப்ப. மீறி என்னை சீண்டிப் பார்த்த… மிசஸ். வசுந்தரா ஜிஷ்ணுவா என் கைக்குள்ள இருப்ப. சோ பீ கேர்ஃபுல்…” என வெகுவாய் எச்சரித்தான்.

“என்னடா மிரட்டுறியா? உன் இஷ்ட டேஷுக்கு ஒரு கிராமத்தையே அழிக்க பார்ப்ப. அதை தட்டிக் கேட்டா எல்லா வில்லத்தனமும் பண்ணுவ. இதெல்லாம் பார்த்திட்டு நான் சும்மா இருப்பேன்னு நினைக்கிறியா?

லுக் தர்மா. ஒழுங்கு மரியாதையா இந்த கிராமத்தை விட்டா நீ எம் எல் ஏ ஜிஷ்ணுவா இருப்ப. இல்லன்னா ஜெயில்ல அக்கியூஸ்ட் ஜிஷ்ணுவா கம்பி எண்ணுவ…” என்றாள் எகத்தாளமாக.

“ஹா ஹா…! நான் சொன்னதும் நீ சொன்னதும் கிட்டதட்ட ஒண்ணு தான் வக்கீலே. ரெண்டுமே நாலு சுவரு இருக்குற ரூம்ல அடைக்கிறது தான்.” என கண் சிமிட்டியவனின் உட்பொருளை அறிந்து திகைத்தவளை, நமுட்டு நகையுடன் ஏறிட்டவன்,

“நான் வெளிய இருந்தாலும் நான் சொல்றது தான் நடக்கும். உள்ள இருந்தாலும் நான் நினைக்கிறது தான் நடக்கும். என்ன பத்தி எல்லார விடவும் உனக்கு நல்லாவே தெரியுமே வசு பேப்…” எனக் கூற வந்தவன், “மிஸ் வசுந்தரா” என்று அழுத்தத்துடன் கூறினான்.

முழுதாக கூறவில்லை என்றாலும், அவன் சொல்ல வந்த வார்த்தை புரிந்து விழி கலங்க ஆயத்தமாக அதனை வலுக்கட்டாயமாக உள்ளிழுத்துக் கொண்டவள்,

“உன்ன பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. உன் அரசியல் பலத்தை வச்சு மக்களை பலவீனமாக்குன, என் மொத்த கோபத்தையும் நீ பாக்க வேண்டியது இருக்கும். எல்லாரை விட உனக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும் ஜிஷு…” என பேச வந்து இறுதி வார்த்தையை “மிஸ்டர் ஜிஷ்ணு தர்மன்” என மாற்றினாள்.

அவள் கூற வந்த பெயரை அறிந்து, அவனுக்குத் தாடை இறுகி முகம் ரௌத்திரதில் மின்னியது.

“சரி தான் பாக்கலாம் டி… உன்னால முடிஞ்சத செஞ்சுக்க. ஆனா பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்ல… தாலி கட்டியோ கட்டாமையோ அப்படியே தூக்கிட்டு போய்டுவேன். எப்படி இருந்தாலும், ஒரு கட்டத்துல நீ என்கிட்ட மயங்கிடுவ தான வக்கீலு…” என ஒற்றைக் கண்ணை சிமிட்டி அவளை கடுப்பேற்றினான்.

“நீ தாலி கட்டி தூக்கிட்டு போற வரை, நான் என்ன வேடிக்கை பாத்துட்டு இருப்பேன்னு நினைச்சியா? உன்ன மாதிரி அரசியல்க்காக சொந்த ஊரையும், கூட இருந்த பொண்ணையும் கூட்டி குடுத்த பொறுக்கியோட நிழல் கூட என்மேல படாது. அப்படியே பட்டுருந்தா கூட, உன்ன உள்ள தள்ளுன அடுத்த செகண்ட் ஆசிட் ஊத்தி என்னையவே எரிச்சுக்குவேன்…” என்று கிட்டத்தட்ட வெறிப்பிடித்தவள் போல கத்தினாள்.

அவனிடம் இருந்து வந்த பெரிய பெரிய மூச்சுக்களே, பொங்கும் பெரும் சினத்தை அடக்க முயல்கிறான் என்பதை உணர்த்த, படக்கென அவளிடம் இருந்து எழுந்தவன், “எண்ணி அஞ்சே நிமிசத்துல நீயே இந்த போனை என்கிட்ட குடுப்ப…!” என்றான் தீப்பார்வையுடன்.

அவளோ, கேலிப்புன்னகை உதிர்த்து, “கனவுல தான் நடக்கும்” என அசட்டையாக கூற,

ஜிஷ்ணுவும் அதே கேலிப்புன்னகையுடன், “நாளைக்கு உனக்கு கோர்ட்ல முக்கியமா கேஸ் ஹியரிங் இருக்குல்ல? ரொம்ப கஷ்டப்பட்டு, ஒரு பொண்ணோட ரேப் கேஸ்க்கு ஆதாரம் ரெடி பண்ணிருந்தீல. நாளைக்கு அதை கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணலைன்னா, ப்ச்… பாவம் அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்காதுல.” என வெகு பாவமான தோரணையுடன் அவன் வருந்திக் கேட்க, அவளோ அதிர்ந்தாள்.

“என்னடா என்னை டைவர்ட் பண்றியா? உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்…” என திமிராக கூற முயன்றவளுக்கு, ஒரு வித உறுத்தல் தொடர,

“அட நீ தான் சும்மா பேச்சு வார்த்தைக்குலாம் பயப்பட மாட்டன்னு எனக்கு தெரியுமே வக்கீலே. அதான், அந்த ஆதாரத்தை எல்லாம் நானே எடுத்து பத்திரமா வைச்சிருக்கேன். இப்ப நீ இந்த போனை தந்துட்டு திரும்பி பார்க்காம ஓடல… நாளைக்கு உன் கேஸ் ஹோகையா தான்…” என்றான் உதட்டைப் பிதுக்கி.

“உன் பேச்சை நான் நம்ப மாட்டேன்…” என கோபத்துடன் போனை எடுத்தவளுக்கு, அதில் சிக்னலும் இல்லை. ஆனால், சில நிமிடங்களுக்கு முன்பே, அர்ச்சனா அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறாள். கற்பழிப்பு வழக்கிற்கான ஆதாரங்களை காணவில்லை என்று.

அதில் வசுந்தராவிற்கு கோபமும் ஆற்றாமையும் பொங்க, ஜிஷ்ணுவை தீயாக முறைத்தாள்.

அதனை ஏறெடுத்தும் பாராதவன், “அஞ்சு எண்ணுவேன். அதுக்குள்ள போன் என் கையில இருக்கணும். நீயே முடிவு பண்ணிக்கோ, உன் ஈகோ முக்கியமா இல்ல நீதி முக்கியமான்னு. எனக்கு என் ஈகோ தான் முக்கியம். ஆனா, வக்கீலம்மா சட்டத்தை மதிச்சு, நீதி நேர்மைன்னு பேர் எடுத்து, இதுவரை எல்லா கேஸ்லயும் ஜெயிச்சு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி குடுத்து இருக்கீங்க. என்னை தவிர…” என்று எகத்தாளம் புரிந்தவன், “ஒன்னு…” என எண்ணத் தொடங்கும் போதே, போனை அவன் முன் நீட்டினாள்.

அவனை வெற்றுப்பார்வை பார்த்து, “அந்த ஆதாரத்துக்கு ஏதாவது ஆச்சு…” என விரல் நீட்டி எச்சரித்தவள், “உன்ன இதே ஊர்ல, அந்த மலைக்கு அடியிலேயே கொன்னு புதைக்கிறேன் தர்மா” என்று வார்த்தைகளை துப்பி விட்டே நகர்ந்தாள்.

மறுநாள், அவள் ஏற்றுக்கொண்ட வழக்கை வெற்றிகரமாக முடித்தவளுக்கு, தலைவலித்தது. அதே தலைவலியோடு வீட்டிற்கு வந்தவளை பார்த்த ராஜசேகர், “ஏன்மா ஒரு மாதிரி இருக்க…?” எனக் கேட்க, “வேலை அதிகம்ப்பா” என சோர்வாய் புன்னகைத்தவள், அறைக்குள் செல்லப் போக, ராஜசேகர் அவளை தடுத்தார்.

“தாராம்மா. உங்கிட்ட கொஞ்சம் பேசணும் வந்து உட்காரு…” என அழைக்க, அவளும் யோசனையுடன் அவரருகில் அமர்ந்தாள்.

“நான் சொல்றதை கொஞ்சம் குறுக்க பேசாம கேளும்மா. நீ கேஸு கோர்ட்டுன்னு அலையுறது எல்லாம் சரி தான். ஆனா, என்ன இருந்தாலும் நீ எனக்கு ஒரே பொண்ணு. உனக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கணும்ன்னு எங்க எல்லாருக்கும் ஆசை இருக்கும்ல. உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகுதே. இப்ப என்ன அவசரம்ன்னு நீ மறுக்க கூட முடியாது. ஒவ்வொரு தடவை இதை பத்தி பேச வரும் போதெல்லாம், கண்டுக்காத மாதிரி போய்டுற. இந்த தடவை மறுப்பு சொல்லாம, கல்யாணத்துக்கு சரின்னு சொல்லும்மா” என இறைஞ்சினார்.

அவள் மௌனம் காத்ததில், “எனக்கு தெரியும் நீ தர்மாவை விரும்புனன்னு” என அவர் நிறுத்த, ஒரு நொடி நிமிர்ந்து தந்தையை பார்த்தவள் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

“ஆனா, உன் அன்புக்கு தகுதி இல்லாதவன் தாராம்மா அவன். அவனை நினைச்சு நீ ஏன் உன் வாழ்க்கையை அழிச்சுக்கணும். இப்ப உனக்கு இருக்குற பணத்துக்கும் புகழுக்கும் போட்டி போட்டுட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்க மாப்பிள்ளைங்க வர்றாங்க. உன் அண்ணியோட உறவுமுறை பையனுக்கு கூட உன்ன ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்காங்க…” என்றவர் அவள் முகம் பார்த்தார்.

அவளும் நன்றாக அவர் புறம் திரும்பி, “என்னை பொறுத்தவரை, அவன் எப்பவோ செத்துட்டான்ப்பா…” என்று தீர்க்கமாக கூறியதில், ராஜசேகரின் முகம் நிம்மதியில் மிளிர்ந்தது.

ஆனால் அவளோ, “ஒருவேளை அவன் உண்மையாவே செத்துருந்தா நான் என்ன பண்ணிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க… எல்லாத்தையும் மறந்துட்டு, இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போய்டுவேன்னா.” எனக் கேட்டவளின் இதழ்களில் விரக்தி புன்னகை.

“இல்லப்பா. எனக்குள்ள இருக்குற அவனோட ஸ்பரிசமும், நினைவுகளும் கடல் தேடி ஓடுற நதி இல்ல. கடந்து போய்க்கிட்டே இருக்குறதுக்கு. தேங்கி போன குளம். அதுல அவனோட ஞாபகத்தை மட்டும் தூர்வார நினைச்சா, மறுபடியும் மறுபடியும் ஊருறது அவன் விட்டுப்போன காயம் மட்டும் தான்.

நான் அவனை விரும்பல. எந்த காரணத்தை கொண்டும், அவன் முன்னாடி மண்டி இட மாட்டேன். ஆனா, உள்ளுக்குள்ள மண்டி இருக்குற அவனை மறந்து போகவும் மாட்டேன். சாரிப்பா என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என எங்கோ வெறித்தபடி கூறி முடித்தவள், பேச்சற்று அவள் அறைக்குள் புகுந்து கொள்ள ராஜசேகர் உறைந்திருந்தார்.

அது தான் அவள் தந்தையை இறுதியாக அவள் பார்த்தது. மாலையில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பும் போதே மரகதம் அழுது தீர்த்தார்.

“உன் அப்பாவும் நானும் சேர்ந்து தான் கோவிலுக்கு போனோம் தாரா. வாசல்ல நின்னு போன் பேசிட்டு தான் இருந்தாரு. வெளிய வந்து பார்த்தா, அவரோட ரத்தம் படிஞ்ச சட்டை மட்டும் தான் இருக்கு” என்று அழுது அரற்ற, வசுந்தரா திடுக்கிட்டாள்.

ஏதோ தவறாகப் பட, ஜிஷ்ணுவின் மீதே மொத்த கோபமும் திரும்பியது அவளுக்கு. சிவந்த விழிகளுடன் அவன் வீட்டிற்கு சென்றவளை, சோஃபாவில் கர்வத்துடன் அமர்ந்திருந்த ஜிஷ்ணு விழி உயர்த்திப் பார்க்க, “எங்கடா என் அப்பா?” என்றாள் அடக்கப்பட்ட சினத்துடன்.

அவனோ, “டேய் பி. ஏ” என கௌரவை அழைத்து, “இவளோட அப்பா, நம்ம லாக்கர்ல இருக்காரான்னு பாரு.” என தீவிரத்துடன் கூறியவன், “ப்ச்… இல்லையாமே வக்கீலு. எதுக்கும் உன் வீட்டு பீரோல்ல ஒளிஞ்சு இருக்காரான்னு பாரு…” என்றான் வெகு நக்கலுடன்.

“தர்மா… விளையாடாத. எனக்கு என் அப்பா வேணும். அவரை நீ தான் ஏதோ பண்ணிருக்க. ஒழுங்கா சொல்லிடு.” என்று கோபத்துடன் கேட்டவளின் குரலோ நடுங்கியது. அன்று காலையில் தந்தையிடம் பேசியது வேறு நினைவு வந்து வதைக்க, அப்போது தான் அங்கு வந்த குமரன் ஜிஷ்ணுவிடம் கண்களாலேயே கெஞ்சினான்.

அதனை ஒதுக்கியவன், “உன் அப்பனை காணோம்ன்னா போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் குடுடி.” என தோளைக் குலுக்கியதில், அவளுக்கு கொலைவெறியே வந்தது.

அப்பொழுது தான் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த சுந்தர், “டேய்… உன்ன கொல்லாம விட மாட்டேன். எங்கடா என் அப்பா?” என்று எகிற, ஜிஷ்ணுவோ காதை குடைந்தான்.

“சப்பா… குமரா இந்த பைத்தியத்தை வெளிய தூக்கி போடு” என எரிச்சலாக, சுந்தரோ தங்கையிடம் கோபத்தை காட்டினான்.

“எல்லாம் உன்னால தான். நீ தான இவன் கூட ஒட்டிக்கிட்டு திரிஞ்ச. மொதோ ராதி குடும்பத்துல இருக்குற எல்லாரையும் காவு வாங்குனான். இப்ப நம்ம குடும்பத்தை காவு வாங்குறான்.

என்னமோ, நான் எவளையோ ஏமாத்துன ரேஞ்சுக்கு அன்னைக்கு என்னை வீட்டை விட்டு துரத்துன. நீ மட்டும் ரொம்ப ஒழுக்கமோ. இவன் கூட ஊர்மேஞ்சுட்டு தான இருந்த. படுத்து படுத்து அலுத்து போய், அவனை விட்டுட்டு வந்துட்டு, இப்ப அவனுக்கு எதிராவே எல்லாமே பண்றேன்னு பாவ்லா காட்டி, அவன் மேலயே போய் விழுந்து, மொத்த ஊரையும் நாசம் பண்றியா. நீ எப்ப இங்க வந்தியோ அப்ப ஆரம்பிச்சுது இந்த தலவலி” என தங்கை என்ற நினைவின்றி பழைய வஞ்சத்தை மனதில் ஏற்றி வார்த்தைகளில் விஷத்தை தடவினான்.

சுற்றிலும் கட்சி ஆட்களும் இருந்ததில், வசுந்தரா, உதட்டைக் கடித்து தன்னை அடக்கிக்கொள்ள, மறுகணமே சுந்தரின் வாயில் இருந்து பொலபொலவென உதிரம் பீறிட்டது.

எதிரில் ஜிஷ்ணு தர்மன் தான், ஐய்யனாராய் நின்றிருந்தான். கையில் அரிவாள் மட்டுமே இல்லை.

“வாய் இருக்குன்னா என்ன வேணாலும் பேசுவியா நீ.” என அவன் வாயிலேயே ஏறி மிதித்தவனை, வசுந்தரா தள்ளி விட்டாள்.

“அவன் ஒண்ணும் இல்லாததை பேசல!” என்று உணர்வுகளை துடைத்தெறிந்த விழிகளுடன் ஜிஷ்ணுவைப் பார்க்க, இம்முறை அவள் விழிகளை ஏறிட இயலாமல் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டவன், கோபத்தை அடக்க இயலாமல், சுந்தரின் வயிற்றில் நங்கென்று மிதித்தான்.

அதில் சுந்தர் வலியில் சுருண்டு மயங்கிட, வசுந்தராவை பார்த்தபடியே “குமரா… இவனை தூக்கி வெளிய போடு!” என்றான் உத்தரவாக.

குமரனும் தன்னை நொந்து, அவன் சொன்னதை செய்ய, அப்போதும் ஜிஷ்ணுவின் பார்வை அவள் மீதே இருக்க, அவளும் அவனை தான் சாடினாள்.

பின் அவனே தன் கம்பீரத்தை மீட்டு, “உன் அப்பா உனக்கு வேணும்ன்னா, நான் சொல்றதை நீ செய்யணும்” என அவளை கூர் விழியால் மடக்க, அவளோ அவன் கூறிய செய்தியில் அதிர்ந்திருந்தாள்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
90
+1
3
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்