Loading

 

தன்னை தாக்கிய பேரதிர்ச்சியில் ஏற்கனவே உடைந்திருந்த சஹஸ்ரா, தீரன் என எண்ணி இருந்த, தீரஜின் சினத்தில் சிக்கி சிதறினாள்.

அவள் மூச்சு விட சிரமப்படுவது புரிந்த பிறகே, கழுத்தை விட்ட தீரஜ் ஆத்ரேயன், முயன்று தன்னை அடக்கிக் கொண்டு, “சஹி…” என அழைத்தான் மென்மையாக.

வேகமாக மூச்சு வாங்கியவள், பேச முடியாமல் இருமிட, உடனே தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.

அதனை தூக்கி அவன் மீதே எறிந்தவளுக்கு, ஏமாற்றப்பட்டதன் காரணமாக சீற்றம் ஒரு புறமும், தற்போது தான் காதலித்தது யார் என்றே தெரியாத அவலம் ஒரு புறமும் வாட்ட, அப்படியே தரையில் அமர்ந்து முகத்தை மூடி அழுது தீர்த்தாள்.

சில கணம் பொறுத்தவன், அதற்கு மேல் முடியாமல், “ப்ச் சஹி… ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு.” எனத் தரையில் முட்டி இட்டு அமர்ந்து, அவளை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள விழைய,

அவளோ, அவனைப் படாரென தள்ளி விட்டாள்.

“தொடாத. உன்ன பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. உன் அண்ணன் வைஃப் கூட… எப்படி உன்னால… ச்சே! அசிங்கமா இல்ல. ஏன்டா என்னை இப்படி ஏமாத்துன. அவர என்ன செஞ்ச?” எனக் கேட்டபடி அவனை படபடவென அடித்தாள்.

பல்லைக் கடித்த தீரஜ், “எனக்கு பொறுமை ரொம்ப ரொம்ப கம்மி சஹஸ்ரா. பிஹேவ்!” என்றான் அழுத்தத்துடன்.

“என்னை ஏமாத்துனதும் இல்லாம, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம எப்படிடா பேச முடியுது உன்னால.” அவள் ஆதங்கம் தாளாமல் கத்தினாள்.

அவளின் இரு கன்னத்தையும் இரு விரலால் அழுத்திப் பற்றிய தீரஜ், அனலாக சுட்டான்.

“நான் உன்னை ஏமாத்துனேனா? இல்ல நீ என்னை ஏமாத்துனியா?” என விழி இடுங்க கேட்க, அவனிடம் இருந்து விடுபட போராடியவளுக்கு விரல்களை நகற்ற கூட இயலவில்லை.

முயன்று அவன் கையை தட்டி விட்டவள், “என்ன உளருற?” என்றாள்.

அவனின் பிடியில் சிவந்திருந்த கன்னமிரண்டையும் நோட்டமிட்டபடி, “நான் வந்து, உன்கிட்ட நான் உன் புருஷன்னு சொன்னேனா?”  எனக் கேட்டான் அமர்த்தலாக.

அவளோ விழி அகல அவனை முறைக்க, “வாயை திறந்து சொல்லுடி. நான் சொன்னேனா?” அதிகாரமாக கேட்டதில்,
இல்லை என தலையாட்டினாள்.

“என் முன்னாடி உட்காந்து ஒப்பாரி வைக்க சொன்னேனா?” மீண்டும் கேள்வி எழுப்பினான்.

அவனை மேலும் உறுத்து விழித்தவள், கடுப்புடன் தலையசைக்க,

“ம்ம்… லவ் மேரேஜ் பண்ணோம்ன்னு பினாத்த சொன்னேனா?” சற்றே திமிர் கலந்து கேட்டான்.

இதழ்களை அழுந்தக் கடித்தவள், பதில் பேசாமல் விழிகளைத் தாழ்த்த, வன்மையுடனே அம்மலர் முகத்தை நிமிர்த்தியவன்,

“சொல்லுடி… உனக்கும் அவனுக்கும் நடந்த அக்ரிமெண்ட் மேரேஜ் – அ மறைச்சு லவ் மேரேஜ் பண்ணோம்ன்னு நான் சொல்ல சொன்னேனா?” அதட்டலாக வெளிவந்த அக்கேள்வியில் அவள் திகைத்தாள்.

“இது எப்படி உனக்கு தெரியும்?” காற்று தான் வந்தது அவளுக்கு.

பின், தன்னை மீட்டு, “தீரன்னு நினைச்சு உன்கிட்ட பேசும் போதே, நீ இல்லைன்னு சொல்லி இருக்கணும். நான் பேசுனது தீரன்னு நினைச்சு தான். அம்னீஷியா வந்த மாதிரி நடிச்ச உன்கிட்ட இல்ல.” என்றாள் எரிச்சலாக.

ஒரு நொடி முகம் சுருங்கியவன், பின் அதே கோபத்தோடு, “நான் நடிச்சேன்னு உனக்கு தெரியுமாடி? எனக்கு அம்னீஷியா வந்தது உண்மை. என் பேரே எனக்கு சரியா ஞாபகம் இல்லாதப்ப, நீ யாருன்னு எனக்கு எப்படிடி தெரியும். நீயா வந்த, எனக்காக அழுத, எனக்காக பேசுன, என் கூடவே இருந்த, இதுல லவ் மேரேஜ்ன்னு உளருன. உண்மையாவே நீ என் வைஃப்ன்னு நினைச்சுட்டேன். இது என் தப்பு இல்ல.” அசட்டையாக தோளைக் குலுக்கினான்.

அவளோ அவனை நம்பாத பார்வை பார்க்க, “நீ நம்புனாலும் இல்லைன்னாலும் இதான் உண்மை.” அழுத்தம் திருத்தமாக கூறியவனிடம்,

சரி. நம்புறேன். உனக்கு அம்னீஷியா வந்தது உண்மையாவே இருக்கட்டும். ஆனா அதுக்கு அப்பறம் உனக்கு எதுவுமே ஞாபகம் வரலையா? கேரளால கூட… நீ நீ… உனக்கு எல்லாம் ஞாபகம் வந்துச்சு தான. பொய் சொல்லாம சொல்லு.” என்றாள் முறைப்பாக.

அக்கேள்வியில் அதிர்வது அவன் முறையாகிற்று. அதுவும் ஒரு கணம் தான். சட்டென இயல்பானவன், பதில் கூறாமல் எழுந்து திரும்பி நிற்க, அதில் அவளும் எழுந்தாள்.

“பதில் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? அப்போ, என்கிட்ட நெருங்கும் போது உனக்கு தெரியும் நான் உன் வைஃப் இல்லன்னு அப்படி தான?” என சீறினாள்.

கண்ணை மூடித் திறந்து தன்னை ஆசுவாசப்படுத்தியவன், திரும்பி அவள் கண்ணை பார்த்து, “ஆமா, எனக்குத் தெரியும்” என்றான் தீர்க்கமாக.

“முதல்ல அம்னீஷியா வந்தது என்னவோ உண்மை தான். ஆனா அதுக்கு அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் ஞாபகம் வர ஆரம்பிச்சுடுச்சு.” என்றவனின் குரல் மெதுவாய் ஒலித்தது.

“அதான் ஞாபகம் வந்துச்சே அப்பவே என்கிட்ட உண்மையை சொல்லிருக்கணும்ல. ஏன்டா சொல்லல…” அவன் சட்டையை பற்றி அவள் மூச்சிரைக்க, அவன் புருவம் நெறித்து அவ்விழிகளுக்குள் தன் விழிகளை புகுத்திட முனைந்தான்.

அவ்விழி கூறும் செய்தி நித்தமும் அவள் அறிந்தது தான். ஆனால், அதை தீரனிடம் அல்லவா அவள் எதிர்பார்த்தாள்.

பழகியதும், திருமணம் செய்ததும் ஒருவனுடன். ஆனால் காதலித்ததும், சேர்ந்து வாழ்ந்ததும் இன்னொருவனுடன்.

நினைக்கவே உள்ளம் பதறியது. கட்டிய கணவனுக்கும் இவனுக்கும் வித்தியாசம் தெரியாத அளவு முட்டாளா நான். வெறும் ஒப்பந்த திருமணம் மூலம் கணவனை எப்படி அறிந்து கொள்ள முடியும்? அதிலும், பொறுக்கியாக தன்னுள் உருவகப்படுத்தி வைத்தவனுடன் அல்லவா தன்னை இழந்திருக்கிறோம் என்று நினைக்கும் போதே மேனி நடுங்கியது.

நிஜம் எது? நிழல் எது? என்று புரியாமல், இப்போது என்ன தான் செய்ய வேண்டும் என்ற முடிவு தெரியாமல் தடுமாறிப் போனாள். இதில் அவனது பார்வை வேறு!

அழுத்தமான நேசத்தை பிரதிபலிக்கிறதா அவன் கண்கள்? சட்டெனப் பார்வையை மாற்றிக் கொண்டவள், அவன் கண்களை மட்டும் சந்திக்க முயலவில்லை.

இன்னும் தீரனை உற்றுக் கவனித்து இருந்தால், அவனுக்கும் இவனுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரிந்து இருக்குமோ? 

என்ன தான், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக இருந்தாலும் இருவரின் குணாதிசயங்களிலும், அணுகுமுறைகளிலும், ஏன் பார்க்கும் பார்வையில் கூட அத்தனை வித்தியாசம் இப்போது தெரிகிறதே!

அவனை மருத்துவமனையில் பார்க்கும் போதே, அவனது உடல்மொழியிலும் பேச்சிலும் இருந்த மாற்றம், அவளுக்கும் பிடித்ததினாலேயே அதனை ஆராயாமல் விட்டு விட்டாளோ! ஒவ்வொன்றாக எண்ணும் போதே, தலை கிண்ணென்று வலி எடுத்தது.

ஆனால், அவளை மனைவியாக நினைத்ததை அவனுக்கு மறந்த போது கூட ஏற்றுக் கொள்ள இயலும். அனைத்தும் நினைவு வந்தும் எப்படி இவனால், தன்னுடன்…? நினைக்கவே அருவருத்தது.

அன்று சொன்னதை இன்று சாதித்து விட்டானே! என்ற ஆத்திரம் அலையலையாக அவளுள் பாய, “நீ நினைச்சதை சாதிச்சுட்டீல?” என்றாள் கோபம் தலைக்கு ஏற.

அவளின் ஒவ்வொரு முக மாற்றத்தையும் நுணுக்கமாக கவனித்து வந்த தீரஜ், “சோ, இப்ப என்ன பண்ண போற?” என்றான் கையை கட்டிக் கொண்டு.

அவள் இறுதியில் இங்கு தான் வந்து நிற்பாள் என அவனுக்கும் தெரியும். 

அவனை தீயாக முறைத்து வைத்தவள், பதில் கூறாமல் விறுவிறுவென வெளியில் சென்றிட, தீரஜ் ஆற்றாமையுடன் மேஜையில் நங்கென குத்தினான்.

ஏற்கனவே உள்ளே சத்தம் கேட்டதில், அவன் அறைக்குள் செல்வோமா வேண்டாமா என குழம்பி நின்றிருந்த நிக்கோலஸ், சஹஸ்ரா அழுது சிவந்த கண்களுடன் வெளியில் வந்து அவன் மீதும் ஏகத்துக்கும் வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றதில், யோசிக்காமல் உள்நுழைந்தான்.

“ஏன் அவ அழுதுகிட்டே போறா?” எனத் தயக்கமாக கேட்க, தீரஜ் அவனை வெறியாய் முறைத்து வைத்ததில், நிக்கோலஸ் தலையை சொரிந்தான்.

“பாஸ்… நான் வீட்டுக்கு தான் போக சொன்னேன். அவளா தான் உங்களை பார்த்தே ஆகணும்ன்னு வந்தா. எல்லாம் தெரிஞ்சிருச்சா?” வருத்தத்துடன் கேட்டவனை, மேலும் தீரஜின் விழிகள் சாட, அதற்கு மேல் நின்றால் மரணம் நிச்சயம் என்றுணர்ந்தவன், நாசுக்காக நகரப் போனான்.

பல்லிடுக்கில் கடுப்பை மறைத்து, “டேய்…” என தீரஜ் அழைக்க, நிக்கோலஸ் லேசாய் அசடு வழிந்து, “எஸ் பாஸ். ஏதாவது வேணுமா?” என்றான் அடக்க ஒடுக்கமாக.

அங்கும் இங்கும் சுற்றித் தேடியவன், கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து நிக்கோலஸை தாக்கினான், “துரோகி” என்று.

“அய்யோ… அம்மா… பாஸ். உங்க பொண்டாட்டிக்கும் உங்களுக்கும் பிரச்சனைன்னா என்னை ஏன் அடிக்கிறீங்க.” என்று அறை முழுதும் அவனிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஓட,

“வேணாம்டா. என்னை கொலைகாரன் ஆக்காத. ஒழுங்கா வந்து நாலு மிதி வாங்கிட்டு போய்டு.” என கண்டித்தவன், இரெண்டெட்டில் தாவி அவனைப் பிடித்து முதுகிலேயே கும்மினான்.

“அய்யோ பாஸ்… நான் பேச்சுலர் பாஸ். என்னை விட்டுடுங்க.” எனக் கத்தியவனை மேலும் சுளீரென அடிக்க, “ஆ” வென கத்தி விலகியவன்,

“மச்சி… இன்னும் ரெண்டு அடி அடிச்ச, உண்மையாவே கொலை கேஸ்ல நீ தான் உள்ள போகணும். நான் சாகுறதை பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா என் தங்கச்சி தான், தனியா காலம் தள்ளனும் அந்த ஒரு நல்ல எண்ணத்துல சொல்றேன் மச்சி. என்ன விட்டுடுடா.” என்று தப்பிக்க முயற்சித்தான்.

“விடவா? நாயே… எல்லா பிரச்சனையும் உன்னால தான்டா. நீ எல்லாம் எப்படி கமிட் ஆகுறன்னு நானும் பாக்குறேன்.” கடுப்புடன் நிக்கியின் தலை முடியைப் பற்றி ஆட்டினான் தீரஜ்.

நிக்கி வலி பொறுக்க இயலாமல், “என் கூட டைம் வேஸ்ட் பண்றதுக்கு சஹாவுக்கு சிட்டுவேஷனை புரிய வைக்கலாம்ல மச்சி. அவ வேற ரோஷக்காரி. பொட்டி படுக்கையை எடுத்துட்டு கிளம்பிட போறா.” என்றதும் தான் தன் பிடியை விட்டவன்,

மெல்ல முறுவலித்து, “அப்படியே பொட்டி படுக்கையை எடுத்துட்டு போனாலும், என்கிட்ட திரும்பி வந்து தான் ஆகணும் நிக். பிகாஸ் ஷீ கான்ட் லிவ் வித் அவுட் மீ.” என்றான் கர்வத்துடன்.

“அது சரி. நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டியா?” நிக்கி யோசனையுடன் கேட்க,

தீரஜ் இறுக்கத்துடன், மறுப்பாக தலையாட்டினான்.

நிக்கிக்கும் என்ன கூறுவது என்று புரியவில்லை. “அவள் கோபத்தை சீக்கிரம் சரி பண்ணு தீரஜ்…” எனக் கூற,

அவனோ, ‘அவள் கோபத்தை எப்படி சரி செய்யணும்ன்னு எனக்கு தெரியுமே…’ என தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். ஆனால், தன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவள் தன்னவள் என்ற உண்மை அவனுக்கு தான் புரியாமல் போனது.

நிக்கோலஸிற்கு தீரன் பாஸ் என்றால், தீரஜ் ஆருயிர் நண்பன். கல்லூரி காலத்தில் இருந்தே இவர்களின் நட்பு தொடர, தீரஜும் நிக்கோலசும் சிவில் துறையில் தான் படித்தனர்.

தீரன் வேறொரு கல்லூரியில் படித்ததில், அவனிடம் வேலைக்கு சேர்ந்த பிறகே பழக்கம் ஏற்பட்டது. அதுவும் பாஸ் என்கிற அளவில் நின்று விடும்.

தீரனும் அவனிடம் பேச்சை வளர்க்க மாட்டான். தாய் இறந்த பின்னே, மறுமணம் செய்து கொண்ட அவர்களின் தந்தை, விட்டு சென்ற கட்டட தொழிலை படிப்பை முடித்து இருவருமே எடுத்து நடத்தினர்.

என்ன தான், இரு சகோதரர்களும் ஒருவர் மீது ஒருவர் அத்தனை அன்பு கொண்டிருந்தாலும், இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்தது. அது சில நேரம் மனக்கசப்பையும் கொடுக்க, ஒரு கட்டத்தில் இரு ஆடவர்களும் தனி தனியாக தொழில்களை பிரித்து பார்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

அவரவர் திறமையில் உருவான தொழில்கள் ஒரு புறம் இருந்தாலும், எந்த ஒரு புது முயற்சி எடுக்கும் போதும் தீரஜ் இல்லாமல் அதனை முடிக்க மாட்டான் தீரன் ஆத்ரேயன்.

அப்படி தான் சஹஸ்ராவுடன் பார்ட்னர்ஷிப் கொண்ட போதும், தீரஜிடம் கூற,

“ப்ச் ஆது… இருக்குற வேலை எல்லாம் பத்தலையா உனக்கு. இதுல எதுக்கு பார்ட்னர்ஷிப் எல்லாம்…” என தீரனிடம் சலித்தான்.

அவனோ, “உனக்கு விஸ்வநாதன் சார் தெரியும்ல அவரோட பிசினஸ் தான் தீரா.” என்று சகோதரனிடம் சமாளிக்க,

அவனும், “என்னமோ பண்ணு. ஆனா கடைசில அந்த வேலையையும் என் தலைல கட்டிடாத ஆது.” என்று கண்டிப்புடன் கூறியதில்,

பற்வரிசை தெரிய புன்னகைத்த தீரன் தான், “சே சே… உன்ன இதுல இன்வால்வ் பண்ண மாட்டேன்” என்றான் சத்தியம் செய்யாத குறையாக.

தீரஜ் அப்படி கூறியதற்கும் காரணம் இருந்தது. அளவிற்கு மீறி வியாபாரங்களை விரிவுபடுத்திய தீரனுக்கு அதனை பார்த்துக் கொள்ள 24 மணி நேரம் போதவில்லை.

சில நேரம் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுவதில், சில பணிச்சுமை தீரஜின் மீது தான் விழும்.

“பிளீஸ் தீரா. இந்த ஒரு தடவை பிராஜக்ட் – அ எடுத்து பண்ணு.” என கெஞ்சலாக கேட்கும் சகோதரனை முறைக்க மட்டுமே முடியும் தீரஜால்.

இறுதியில், வேறு வழியற்று அவனே பொறுப்பை எடுத்துக் கொள்ளும் நிலை வந்து விடும். அதற்காகவே அத்தனை முறை எச்சரித்தான்.

அப்படி ஒரு நாள், சஹஸ்ராவின் அலுவலகத்திற்கு வர முடியாத தீரன், தீரஜிடம் அன்று ஒரு நாள் பார்த்துக் கொள்ளுமாறு கூற,

“மவனே சாவடிச்சுடுவேன்! இன்னைக்கு ஃபுல்லா நான் ரொம்ப பிசி ஆது.” என்றான் கோபமாக.

தீரன் தான் நமுட்டு சிரிப்புடன், “பொய் சொல்லாத தீரா. இன்னைக்கு ரோஸி பொண்ணு கூட உனக்கு டேட்டிங் தான. அதுக்காக இன்னைக்கு எல்லா ஸ்கெடியூலையும் கேன்சல் கூட பண்ணிட்டன்னு கேள்விபட்டேனேடா.” என நக்கலடிக்க, தீரஜ் முறைத்தான்.

“இந்த நிக், உனக்கு செகரட்ரி வேலை பாக்குறானா? இல்ல ஸ்பை வேலை பாக்குறானா? எப்படியும் வீக் எண்ட் என்கூட தான குப்பை கொட்டுவான்.  வரட்டும் பாத்துக்குறேன் அவன” எனப் பல்லைக்கடித்தான்.

அவனுக்குத் தெரியும், இந்த விஷயத்தை தீரன் காதில் போட்டது அவனாகத் தான் இருக்கும் என்று.

பொங்கிய சிரிப்பை அடக்கிய தீரன், “சரி விடுடா. நீ வேணும்ன்னா உன் டேட்டிங் ப்ளேஸ, சஹா ஆபிஸ்க்கு சேஞ்ச் பண்ணிடேன். அங்க போய் ஜஸ்ட் மேனேஜ் பண்ணிக்கிட்டா போதும் பெருசா வேலை இல்ல…” என்று தீரஜின் மூளையை சலவை செய்து, ஒப்புக்கொள்ள வைத்தான்.

அன்று தான், ரோஸியுடன் சஹஸ்ராவின் அலுவலகம் வந்திருந்தான் தீரஜ்.

தன்னுடைய அலுவலக அறைக்குள் நுழைந்த சஹஸ்ராவிற்கு அழுகை மட்டும் நின்றபாடில்லை.

‘பிராடு… பொறுக்கி… உன்னை அடிச்சதுக்காக என்னை பழி வாங்கிட்டீல…’ என நொந்து போனவளுக்கு, முதன் முறை தீரஜை பார்த்த நினைவு கசப்பாக நினைவில் ஆடியது.

தீரஜைப் பற்றி அவள் கேள்விபட்ட விஷயங்கள் எதுவும் உவப்பாக இல்லை தான். ஆனால், அலுவலகத்திற்கு பெண்ணுடன் வருவான் என்றெல்லாம் அவள் எண்ணவில்லை.

அவனைக் கண்டிக்கவே, அனுமதி கூட கேட்காமல் பட்டென கதவை திறந்தாள்.

அங்கு அவன் இன்னொரு பெண்ணிற்கு முத்தமிட செல்வது அறிந்து, கோபத்தில் கத்த, அப்போது தான் தீரஜை நன்றாகவே பார்த்தாள்.

தீரனுக்கு இரட்டை சகோதரன் இருக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அச்சு அசலாக ஒரே போல இருப்பார்கள் என்று அவளுக்கு தெரியாது.

தீரஜை பார்த்து ஒரு கணம் விழி விரித்தவள், உறைந்து நிற்க, அதன் பிறகே தீரஜ், “கதவை தட்டிட்டு வரமாட்டியா” என்று அதட்டியது.

அவனுமே, அவளின் அகன்ற விழியில் ஒரு நொடி விழுந்து எழுந்தான் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அதன் பிறகு அவள் அவனையே அதிகாரம் செய்து பேசியதில் கடுப்பானவன், அவளை கோபப்படுத்த அவளின் அலுவலகத்தை குப்பை என்று கூற, அக்கோபத்தில் அவள் அவனை அடித்து விட்டாள்.

அதில் மேலும் சீறியவன், “ஏய்…” என சஹஸ்ராவை அடிக்க வர, இதற்கிடையில் ரோஸி என்ற பெண் பயத்தில் கிளம்பி விட்டாள்.

சஹஸ்ராவோ அசராமல், “என்னடா அடிச்சுடுவியா? எங்க அடிச்சு தான் பாரேன். ஆபிஸ்ல வந்து அசிங்கம் பண்ணிட்டு, திமிரா வேற பேசுற. இதை எல்லாம் உன் வீட்ல வச்சுக்கோ.” என்றாள் முகம் சுளித்து.

அவனோ பதில் பேசாமல், லேசர் விழிகளால் அவளை மேலும் கீழும் அளவெடுத்தான்.

அப்போதும் அந்த பார்வையில் தான் எத்தனை அழுத்தம்!

தாடையை தடவியபடி, இன்னுமாக அவள் முகத்தை ஆராய்ந்தவனின் கவனம், பெண்ணவளின் இதழில் நிலைக்க, அவளுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

‘எப்படி பாக்குறான் பாரு! கண்ண நோண்டி கொள்ளில போடணும்.’ அவனை மனதினுள் வெகுவாய் வறுத்தவளிடம்,

“ஃபைன். நீ சொல்றதும் சரி தான். நான் இதெல்லாம் வீட்லயே வச்சுக்குறேன். பட், என்கூட நீ தான் வரணும். அட்லீஸ்ட் ஃபார் ஒன் நைட்” என அசட்டையாக அதே நேரம் நிறுத்தி நிதானமாகக் கேட்டு வைக்க, அவளோ ஆடிப் போனாள்.

“யூ… பொறுக்கி…!” கோபத்தின் உட்சத்திற்கே சென்றவள், அவனை அடிக்க கையை ஓங்க, இலாவகமாக அவள் கையைப் பற்றி முறித்தான்.

“ஏற்கனவே நீ அடிச்சதுக்கு, உன் கணக்கு முடியலடி. இப்போ தேவை இல்லாம, உன் பாவ கணக்கை அக்கௌண்ட்ல ஏத்திக்காத.” என எச்சரித்தவன்,

குறும்பு வழியும் குரலில், “நீ எப்ப ஃப்ரீன்னு சொல்லு. நம்ம ரெண்டு பேரும் என் வீட்டுக்கு போலாம்… ஃப்ரீ இல்லைன்னாலும் பரவாயில்ல. நானே உன்ன கடத்திட்டு போயிடுறேன்.” என கண் சிமிட்டி, காற்றிலேயே ஒரு முத்தத்தை பறக்க விட்டு, அவள் கன்னத்தையும் மெல்ல தட்டி விட்டு மின்னலாக அங்கிருந்து கடந்தவனைக் கண்டு உறைந்திருந்தாள் சஹஸ்ரா.

யாரோ இவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
32
+1
104
+1
4
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Saki kalyanam pannathu 🤔🤔🤔reyannaka irukumo🤔🤔🤔