1,070 views

மேல் ஊற்றிய நீரை குனிந்து பார்த்தவள் மீது மீண்டும்  மாட்டு சாணம் கலந்த தண்ணீரை ஊற்றி அன்புடன் வரவேற்றான் அன்பினிசித்திரையின்  கணவன் அக்னிசந்திரன்
 
” என்ன அன்பினிசித்திரை எவ்ளோ பாசமா வரவேற்கிற இப்படி  முறைக்கிறீங்க.எதுக்கு முறைக்கிறீங்க… ஹ்ம்ம் !” என எதோ யோசிப்பது போல் நடித்தவன்,
 
“ஆஹான்!  கண்டு பிடிச்சிட்டேன். என்னடா இது வெறும் அபிஷேகம் மட்டும் பண்றான் புகழ்ந்து பேசலன்னு தான முறைக்கிறிங்க. இப்ப பாருங்க.” என்றவன்,
 
நேற்றைய செல்வகுமாரின் புதல்வியே வருக!
இன்றைய அக்னியின் திருட்டு பொண்டாட்டியே வருக!
தன்னுடைய முதல் இரவுக்கு வெட்கமே இல்லாமல் தானே அலங்கரித்துக் கொண்டு இல்லை  மினிக்கி கொண்ட மேனாமினுக்கியே வருக வருக.!!
எப்படி நம்ம புகழ்ச்சி அன்பினி சித்திரை. “
 
“ஏன்! நீங்க மட்டும் தான் முதலிரவுக்கு பல்லை இளிச்சிட்டு  நிற்கணுமோ. என்னோட புருஷன் கூட இருக்க தான வந்தேன் அதுக்கு  எதுக்கு வெட்கப்படனும். கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளை முதலிரவுக்கு ரெடி பண்ணி அனுப்பாத உங்க அம்மா தான் வெட்கப்படனும்.” அன்பினி.
 
“திருட்டுத்தனமா  தாலி கட்டிக்கிட்ட உனக்கு இது ஒன்னு தான் குறை. அத்தனை பேரு முன்னாடி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம தாலி கட்டிக்க வந்தவ தான அதான் இதுக்கும் நீயே வந்துடுவேன்னு   விட்டுட்டாங்க போல. இருந்தாலும் சும்மா சொல்லக்கூடாது செம்மையா இந்த அறையை ரெடி பண்ணி இருக்க. இதுக்கு முன்னாடி முதல் இரவு அனுபவம் நிறையவோ.”
 
 
“அக்னீனீ.. ” என்று அழைத்தவளை பார்த்து சிரித்தவன்,
 
“நான் ஒன்னும் தப்பா சொல்லல. ஃபிரண்ட்ஸ்  முதலிரவுக்கு நீ தான் டெக்கரேட் பண்ணியான்னு கேட்டேன்.”
 
கோபம் கொண்டவள் அவனை அடிக்க வர, பக்கெட்டால் தடுத்து தள்ளினான். அதில் சுவற்றில் மோத சென்றவள் அவனையும் பிடித்து இழுத்தாள்.
 
வலது புறமாக அக்னியின் முகம் இருக்க அப்புறம் தன் முகத்தை திருப்பியவள், “ஃபர்ஸ்ட் நைட்ல எவனாவது பொண்டாட்டிய இப்படி வரவேற்பானா”  என்றாள் அவனை நெருங்கி.
 
விலகி நின்றவன் “அது பொண்டாட்டிய” என்றான்.
 
“அப்படின்னா நான் யாரு?”என்ற அன்பினி அவன் சட்டையை பிடித்து தன் புறம் இழுக்க, அப்போதும் நிலை தடுமாறாமல் இடைவெளி விட்டு சுவற்றில் கை வைத்து நின்றான் அக்னி .
 
அவளை மேலும் கீழும் பார்த்தவன், ” விருப்பமில்லாதவன் பின்னாடி  ஓடி வந்து ஃபர்ஸ்ட் நைட் வேணும்னு கேட்கிறதை எப்படி சொல்லலாம்” என்று யோசிப்பது போல் நடித்தவன்,
 
“ஆஹான்! இன்டைரக்ட்டா சொல்லணும்னா…” என்ற இழுக்க, 
 
“அக்னி!” பார்வையால் எச்சரித்தாள் சித்திரை.
 
 
“என் விரல் படுற அளவுக்கு நீ தகுதியானவ இல்ல.” என்று விலகினான்.
 
“பழைய டயலாக் அக்னி இது.” 
 
“நீயும் தான் பழசு.” என்றவன் மெத்தையில் படுத்துக்கொண்டான். 
 
 
 
அவனையே கோபத்தோடு பார்த்திருந்தவள் தன் மேல் வரும் வாசனையை உணர்ந்து சுத்தப்படுத்த குளியலறை கதவை திறக்க  அவளால் முடியாமல் போனது. 
 
“மேடம்! கதவு திறக்காது.” என அக்னி கூற, புரிந்து கொண்டவள் அறையின் வாசலுக்கு சென்று வெளியேற முற்பட்டாள்.
 
வெளியில் செல்லலாம் என்றவள் எண்ணத்திற்கு தடை போட்டது திறக்க முடியாமல் இருந்த கதவு. 
 
“அக்னி கதவை திறந்து விடு நான் வெளிய போகணும்.” என்றவள் வார்த்தையில் விழி திறந்தவன்,
 
“கண்டிப்பா போகணுமா” என்று கேள்வி கேட்டான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு. 
 
அவன் பார்வையின்  அர்த்தம் அறிந்தவள் பதில் சொல்லாமல் அமைதி காக்க, “சரி வா” என்று எழுந்தவன் அவளை அழைத்துக்கொண்டு பால்கனி பக்கம் சென்றான். 
 
 
கதவைத் திறந்தவன் ஒரு ஆள் நிற்கக்கூடிய சிறிய அளவிலான பால்கனியில் அவளை தள்ளி விட்டு, “என்ஜாய் யுவர் ஃபர்ஸ்ட் நைட்.” அவள் கத்திக் கொண்டிருப்பதையும் காதில் வாங்காதவன் கதவை நன்கு பூட்டிவிட்டு தூங்க ஆரம்பித்தான். 
சாமர்த்தியம் கொண்டவள் பால்கனியில் இருந்து இறங்கினாள்.
 
நள்ளிரவு நேரம் அக்னியின் அறை கதவு வேகமாக தட்டப்பட்டது. தூக்கத்தில் இருந்தவனுக்கு எங்கோ ஓசை வருவது போல் இருக்க, விழித்திறக்காமல் இருந்தான். “அண்ணா கதவை திற.”  திவ்யாவின் குரலில் அடித்து பிடித்து எழுந்தவன் வேகமாக கதவை திறந்தான். 
 
பதட்டத்தில் வந்தவன் முதலில் தன் அம்மாவை பார்த்தான். அவர் அமைதியாக நின்றிருக்க… தந்தை, தங்கை என்று சென்று கடைசியாக அவர்கள் மூவருக்கும் பின்னால் நிற்கும் அன்பினிசித்திரையை பார்த்தான்.
 
 
அவன் ஊற்றிய மாட்டுச் சாணம் காய்ந்து, மேனியை அலங்கோலம்படுத்தி இருந்தது‌. ஆனால் முகம் மட்டும் பாவமாக இருந்தது.  அவளை சந்தேகத்தோடு பார்க்க, “ஏற்கனவே ஒரு தடவை உன் மேல வைத்திருந்த நம்பிக்கைய இழந்துட்டேன். திரும்பவும் இழக்க வைக்காத.   உன்ன நம்பி வந்த பொண்ண கஷ்டப்படுத்தாம இரு.” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
 
 
“நம்பிக்கை இழக்குற அளவுக்கு நான் ஒன்னும் பண்ணல ம்மா‌” என்றவனை முறைத்தவர்,
 
“ஒன்னுமே பண்ணாம தான் இவ இப்போ இந்த வீட்டுல இருக்கா‌.” என்றார்.
 
 
“உண்மையாவே நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் தாலி கட்டினேன். இவளோட சேர்ந்து வாழ்ந்தா இவ சொன்ன அத்தனை வார்த்தையும் உண்மையாகிடும். உங்க மகன் மேல வச்ச நம்பிக்கையை நீங்க இழக்கலாம் என் மேல வச்ச நம்பிக்கையை நான் இழக்க மாட்டேன்.” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் நேரம்,
 
“மாமியாரே போதும் உங்க பஞ்சாயத்தை காலையில வச்சுக்கோங்க எனக்கு தூக்கம் வருது.” என்று அந்த பட்டிமன்றத்தை கலைத்தவள் உள்ளே சென்றாள். 
 
மகனை  முறைத்தவர் எதுவும் பேசாமல் சென்று விட, அவர் பின்னால் மற்ற இருவரும் சென்று விட்டனர். உள்ளே வந்தவன் கோபத்தோடு அவளிடம் நெருங்க, “இங்க பாரு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் பண்ற மூடுல நான் இல்ல. எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்.” என்று மெத்தையில் சாய, 
 
 
“எதுக்காக டி எல்லாரையும் எழுப்பி கூட்டிட்டு வந்த.” மெத்தையில் சாய சென்றவளை  அமர வைத்தவன் கேட்க, 
 
“நீ எதுக்காக என்னை இந்த மாதிரி அலங்கோலம் பண்ண. எதுக்காக பால்கனியில தள்ளி விட்ட. இந்த மாதிரி கிறுக்குத்தனமான வேலையை என்கிட்ட வச்சுக்காத. புருஷன் கொடுமையை தாங்கிக்கிட்டு அமைதியா போற பொண்ணு நான் இல்ல.” என்றாள்.
 
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, குளியல் அறைக்குச் சென்று  சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள். கண்ணாடியில் தன்னை  பார்த்தவள், “கொடுத்து வைக்கல இவனுக்கு.”என்ற முணுமுணுப்போடு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
 
 
படுத்திருந்தவள் ஒரு கண்ணை மட்டும் அடிக்கடி திறந்து பார்த்தாள் அக்னி என்ன செய்கிறான் என்று. வெகு நேரமாக பார்வையை அவளிடம் வைத்திருந்தவன் நகர ஆரம்பிக்க, கண்களை மூடிக்கொண்டாள்.
 
இரவு விளக்கை அணைத்தவன் மெத்தையில் படுத்தான். மனதுக்குள் குத்தாட்டம் போட்டாள் அன்பினி. அதெல்லாம் அரை நொடி கூட நிலைக்கவில்லை. தலையணை உரையை கழட்டியவன் வலுக்கட்டாயமாக அவள் வாய்க்குள் திணித்தான். ஆர்ப்பாட்டம் செய்து அன்பினி எழ, தன் கட்டுப்பாட்டில் அடக்கியவன் கைகளை கட்டிலில் கட்டினான். கால் இரண்டையும் சேர்த்து கட்டிவிட, “ம்ம்ம்” என்று முனங்கிக் கொண்டிருந்தாள்.
 
 
“பால்கனியில படுத்திருந்தாலே நல்லா படுத்திருப்ப தேவையா இது உனக்கு. என் பக்கத்துல படுக்க ஆசை பட்டதுக்கான  தண்டனை. இப்படியே துள்ளிட்டே தூங்கு.” என்றவன் நிம்மதியாக படுத்துக்கொள்ள, கட்டியிருக்கும் துணியை கழற்ற முயற்சித்தவள் சோர்ந்து கண் அயர்ந்தாள். 
 
***
நாகராஜிற்கு அழைத்த செல்வகுமார் கோபம் முழுவதையும் கொட்ட ஆரம்பித்தார். அவரை விட அதிக கோபத்தில் இருந்த நாகராஜ், 
 
“என்ன செல்வகுமார் என்கிட்ட விளையாடுறியா? உனக்கு தெரியாமலா உன் பொண்ணு அங்க போய் அவனை கல்யாணம் பண்ணி இருக்கா. குடும்பத்தோட சேர்ந்து ரெண்டாவது முறையா என்னை அசிங்கப்படுத்திட்டீங்க.” என்று செல்வகுமாரிடம் சண்டை பிடித்தார்.
 
தனக்கு இவை எதுவும் தெரியாது என்று செல்வகுமார் மன்றாட, நண்பனை நம்ப ஆரம்பித்தார் நாகராஜ். தொடர்ந்து அக்னி குடும்பத்து ஆட்களை வசை பாடி கொண்டிருக்க, “நீ ஏற்பாடு பண்ண பொண்ணு என்ன ஆனா?” விசாரித்தார் செல்வகுமார்.
 
“அதுவும் உன் பொண்ணு வேல தான். அவளுக்கு எப்படி விஷயம் தெரியும்னு தெரியல. நான் ஏற்பாடு செஞ்ச பொண்ண மிரட்டி ஓட வச்சிருக்கா.” என்று நொந்து கொண்டிருந்தார் நாகராஜ்.  
 
“நான் பெத்ததே எனக்கு எதிரா நின்னுடுச்சு. இதுக்கும் சேர்த்து அந்த அக்னிய பழி வாங்காம விடமாட்டேன்.” என்ற செல்வகுமாருக்கு ஏற்றவாறு நாகராஜும் பேசினார்.
 
***
 
“என்னதான் நடக்குது இங்க? எவனோ ஒருத்தன்  கம்பெனிய அவன் பேருக்கு மாத்திட்டான். வீட்டுல இருந்த ஒருத்தி திருட்டுத்தனமா அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. நீங்க என்னடானா புதுசா ஒரு குடும்பத்தை உறவுன்னு சொல்றிங்க.” மூன்று நாட்களாக அவனை சுற்றி நடக்கும் மர்மங்களை விக்ரம் கேட்க,
 
“வாய மூடு விக்ரம் நான் யாரையும் உறவுன்னு சொல்லல.” என்றார் செல்வகுமார். 
 
“அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன்னு அவங்க சொல்றாங்க. தங்கச்சி செத்துப் போய் பல வருஷம் ஆகுதுன்னு நீங்க சொல்றீங்க. இப்ப என்னன்னு சொல்ல போறீங்களா இல்லையா.” என்று விக்ரம் கத்தினான்.
 
 
“பரமேஸ்வரி என் பொண்ணு.இந்த வீட்டோட மகாலட்சுமி.”  மாடியில் நின்று அன்னபூரணி கூற,
 
“என்ன பாட்டி சொல்றீங்க.” ஓரளவுக்கு யூகித்த விஷயம் என்றாலும் இதுவரை வாயை திறக்காத தன் பாட்டி இவ்வளவு தூரம் பேசியதை பார்த்து அதிர்ந்தவாறு கேட்டான்.
 
“பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் என் பொண்ணு நிர்வாகம் பண்ண கம்பெனி. இதோ உங்க அப்பா இருக்கானே அவனோட பிரண்டு தான் மணிவண்ணன். நிர்வாகம் பண்றதுல உங்க அத்தை அடிச்சுக்க ஆளில்லை. அதுல அசந்த என் புருஷன் அந்த கம்பெனி பொறுப்பு மொத்தத்தையும் மகள் கிட்ட கொடுத்தார். அந்த பொறாமையில இருந்த உங்க அப்பா அவசர அவசரமா அவளுக்கு ஒரு கல்யாணம் ஏற்பாடு பண்ணினான்.” என்றவர் பெற்ற பிள்ளைகளின் ரகசியத்தை உடைத்தார்.
 
பரமேஸ்வரி ஆளுமை கொண்ட பெண். தந்தையின் பல தொழில்களை அண்ணன் செல்வகுமார் பார்த்துக் கொண்டிருக்க, பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் தான் தனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து நிர்வாகிக்க தொடங்கினார். காலப்போக்கில் அவரின் ஆளுமை  கம்பெனியின் மொத்த பொறுப்பையும் தலைமை ஏற்க அழைத்தது. 
 
 
தன்னை விட தங்கை நிர்வாகிக்கும் திறமையை அடிக்கடி தந்தை புகழ்ந்து பேசுவதை பார்த்து உள்ளுக்குள் பொறாமை கொண்டார் செல்வகுமார். அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து வைத்தால் கணவன் வீட்டோடு சென்று விடுவாள் என தவறாக எண்ணியவர் தன்னுடைய தோழனை பேசி முடித்தார். பரமேஸ்வரி முடிவாக மறுத்து விட சில நாட்கள் ஓடியது. அன்னபூரணியின் கணவர் காலமாக, வீட்டை  முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார் செல்வகுமார்.
 
 
அண்ணன் தங்கை நடுவில் அடிக்கடி பிசினஸ் தொடர்பான வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இதற்கிடையில் மணிவண்ணன் மீது காதல் வயப்பட்டார் பரமேஸ்வரி. மணிவண்ணன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். கல்லூரியில் செல்வகுமாரோடு நட்பாகி பரமேஸ்வரி டெக்னாலஜிஸில் வேலை பார்த்தார். அவரின் பணிவு பிடித்துப் போக பின்னாளில் அவரையே பிடித்துப் போனது. காதலை தைரியமாக தெரிவிக்க, விருப்பம் இருந்தும் பொருளாதார நிலையை காரணம் காட்டி மறுத்தார் மணிவண்ணன்.
 
 
மீண்டும் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தார் செல்வகுமார். அதே நண்பன் நாகராஜ் இப்போதும் பரமேஸ்வரி வேண்டும் என்று அடம் பிடிக்க, பேச்சு வார்த்தை தொடங்கியது. மகன் முன்பு அன்னபூரணியின் பேச்சு எடுபடாமல் போனது. வலுக்கட்டாயமாக பரமேஸ்வரியின் எதிர்ப்பையும் மீறி திருமண ஏற்பாடு நடந்தது. மணிவண்ணனிடம் மீண்டும் பேச சென்ற பரமேஸ்வரிக்கு தோல்வியே கிட்ட, திருமண நாளும் வந்தது.
 
முகூர்த்த நேரத்திற்கு முன்பாக கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறினார். நேராக மணிவண்ணன் முன்பு நிற்க, செய்வதறியாது தவித்தவர் தன்னை தேடி வந்த பெண்ணை கைவிட மனம் இல்லாது மணமுடித்தார். விஷயம் அறிந்த செல்வகுமார் இருவரையும் தகாத வார்த்தைகளில் பேசி நோகடித்தார். 
 
 
மணிவண்ணன் நத்தை கூடு போல் தனக்குள் ஒடுங்கிக் கொள்ள, பரமேஸ்வரி தந்தையின் தொழிலை நிர்வாகிக்க அலுவலகம் சென்றார். தங்கையை வாசலில் தடுத்து நிறுத்தினார் செல்வகுமார். எதிர்த்து தைரியமாக பரமேஸ்வரி போராட செல்வகுமாரும் உறுதியோடு போர் புரிந்தார். விஷயம் மணிவண்ணன் காதை எட்ட, 
 
“என்னை நம்பி வந்துட்டு இப்ப நம்பிக்கை இல்லாம அப்பா சொத்துக்காக சண்டை போடுறது நல்லா இல்ல. என்னால உன் குடும்பம் அளவுக்கு வசதியா வாழ வைக்க முடியாது அதே நேரம்  ஒரு குறையும் வராம பார்த்துக்க முடியும். நம்பிக்கை இருந்தா எல்லாத்தையும் விட்டுட்டு என் மனைவியா வா.” என்றிட அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும் மனதளவில் அனைத்தையும் விட்டு வெளியேறி மணிவண்ணன் மனைவியாக வாழ தொடங்கினார். 
 
 
அன்னபூரணி சொல்லி முடிக்க செல்வகுமார் வாக்குவாதங்களில் ஈடுபட்டார் தன் மீது தவறில்லை என்று. “நந்தினி நாளைக்கு ரெடியா இரு ரெண்டு பேரும் பரமேஸ்வரி வீட்டுக்கு போயிட்டு வந்துடலாம்.” நேற்று வரை அமைதியாக இருந்தவர் தைரியமாக பேச ஆரம்பித்து விட்டார். 
 
 
“அந்த வீட்டுக்கு போனீங்கன்னா இந்த வீட்டுல கால் வைக்க கூடாது.” என்று செல்வகுமார் உறுதியோடு பிடிவாதம் பிடிக்க,
 
“இது என்னோட வீடு.” என்ற ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் அன்னபூரணி.
விக்ரம் அமைதியாக தன் அறைக்கு சென்று விட, தொடர்ந்து அடிபட்ட பாம்பாக செல்வகுமார் துடித்துக் கொண்டிருந்தார் உள்ளுக்குள். 
 
 
அந்த நேரம் வீட்டிற்கு வந்த மகேஷ், “அங்கிள் பல தடவை அவனை பத்தி சொல்லும் போது நம்பல நீங்க. இப்ப பாருங்க உங்க குடும்பத்தையே உங்களுக்கு எதிராக திருப்பிட்டான். எவ்ளோ அழகா பிளான் பண்ணி இத்தனை வருஷமா உங்களை ஏமாத்தி இருக்கான். அவனை சும்மா விடக்கூடாது. நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க உங்களுக்கு நான் இருக்கேன்.” என்று அவரின் கோபத்தை தூண்டி விட்டான்.
 
மகேஷிற்கும் அக்னியின் குடும்ப விவரம் அதிர்வு தான். அக்னி மீது உள்ள கோபத்தில் கம்பெனி டெக்னிக்கல் லேபர் ஒருவரை பிடித்து அன்று நடந்த சிசிடிவி காட்சிகளை புகைப்படமாக மாற்றினான்.  மணப்பெண்ணிற்கு புகைப்படங்களை அனுப்பி திருமணத்தை நிறுத்தலாம் என்று அவன் ஒரு கணக்குப் போட்டிருக்க, அவற்றை முறியடித்தாள் அன்பினி சித்திரை. 
 
 
அந்தக் கோபத்தில் மண்டபத்தில் மறைந்திருந்தவனுக்கு வரப்பிரசாதமாக குடும்ப சிக்கல் கிடைத்தது. இதை வைத்து அக்னி, அன்பினி இருவரையும் சேர்த்து பழி வாங்கி விடலாம் என்ற எண்ணத்தோடு செல்வகுமாரிடம் பேச, தனித்து விடப்பட்டதை உணர்ந்தவர் கைகோர்த்துக் கொண்டார் அவனுடன். 
 
முதலில் அவனிடமிருந்து கம்பெனியை கைப்பற்ற வேண்டும் பிறகு அன்பினியை பிரிக்க வேண்டும் என்ற இரு சபதத்தோடு கூட்டணி வைத்தார்கள். இரண்டுமே அவனிடமிருந்து வராது என்பதை அறியாத மடையர்கள். 
 
 
 
***
 
காலையில் கண்விழித்தவன் முதலில் பார்த்தது அன்பினியை தான். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவஸ்தையோடு படுத்திருந்தாள். என்ன நினைத்தானோ முடிச்சை அவிழ்த்து விட்டான். சிவந்திருந்தது அவன் முடிச்சிட்ட இடங்கள். வாயில் இருக்கும் துணியை எடுக்க, அதில் அசைவு பெற்றாள். 
 
இருவரின் முகங்களும் நெருக்கமாக இருக்க, அன்பினி விழிகளில் நேசம் கொட்டினால் அவனின் விழிகள் நேசத்தை புறக்கணித்தது. எழ முயல்பவனை தடுத்தவள் பக்கத்தில் படுக்க வைத்து அவன் மீது சாய்ந்துக் கொண்டாள். 
 
 
“ப்ச்! காலைலயே வாங்கிடாத எந்திரி.” என்று மேல் இருப்பவளை தள்ளி விட,
 
“சும்மா இரு அக்னி கொஞ்ச நேரம் தூங்குறேன்.” என்று இறுக்கி கட்டிக்கொண்டாள்.
 
“சொன்னா கேளு டென்ஷன் படுத்தாத.”
 
“பொண்டாட்டி சொல்றதை நீ கேளு அடிமை.” என்றதும் அவளை ஆக்ரோஷமாக தள்ளினான். 
 
தள்ளிய வேகத்தில் கைகள் கட்டில் மேல் சுவறோடு இடித்து விட, “ஸ்ஸ்ஆ! அடிமை…” என்று ஆரம்பிப்பதற்குள் அவளின் கழுத்தைப் பிடித்தவன்,
 
 
“யாரு யாருக்குடி அடிமை. உங்க அப்பன் சொல்லி அனுப்பினானா நான் ஏமாத்தி அவங்களை அடிமையா கெஞ்ச வச்ச மாதிரி நீயும் பண்ணுன்னு. அப்படியே புதைச்சிடுவேன் பூமியில. மரியாதையா உங்க அப்பன் வீட்டுக்கு ஓடிரு.” என்றவன் கண்கள் சிவக்க முறைக்க, அவனை விட அதிக உஷ்ணம் அவள் முகத்தில்.
 
 
இருவரும் பார்வையால் ஒருவரை ஒருவர் குத்தி கிழித்துக் கொண்டிருக்க, அலார சத்தத்தில் விலகினார்கள். அன்பினி எதுவும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்து விட, அக்னி அன்னையைப் பார்க்க சென்றான்.
 
 
விடியற்காலை எழுந்து சமையலை முடிப்பவர் அக்னி எழுந்து வரும் நேரம் அவனுக்காக காத்திருப்பார். இன்று எல்லாம் தலைகீழாய் நடந்தது. இன்னும் அறையை விட்டு வெளியில் வரவில்லை பரமேஸ்வரி. மணிவண்ணன் மட்டும் ஹாலில் அமர்ந்திருக்க,
 
“அப்பா அம்மா எங்க காணோம்?” என்றான் தேடியவாறு. 
 
அவர் பதில் சொல்லாமல் அமைதி காத்திட, “என்ன ப்பா உங்க பையன் கிட்ட பேச மாட்டீங்களா.” என்று அவர் காலடியில் அமர்ந்தான்.
 
உடனே மணிவண்ணன் எழுந்து விட, வருத்தத்தோடு அமர்ந்திருந்தான் அக்னி. அவன் தோள் மீது யாரோ கை வைக்க, திரும்பினான்.
 
 
திவ்யா நின்றிருந்தாள். சோபாவில் அமர வைத்தவன் அவள் மீது தலை வைத்துக் கொண்டு கண் மூட, தலை கொதி விட்டாள். இக்காட்சியை வெளியில் வந்த பரமேஸ்வரி பார்க்க,
 
“ஆனாலும் நான் சொன்ன மாதிரி கடைசி நேரத்துல ஒருத்திய கூட்டிட்டு வந்து கல்யாணத்தை முடிச்சிட்ட. பலே ஆளு தான் நீ.” ஆறுதலாக பேசி அவன் மனக்குமுறலை ஆற்றுவதற்கு பதிலாக கேலி பேச, முறைத்தான் தங்கையை.
 
தொடர்ந்து அவள் கிண்டல் செய்து கொண்டிருக்க, என்றும் உடனே பதில் தருபவன் இன்று முறைக்க மட்டுமே செய்தான். “சும்மா சொல்ல கூடாது செமையா இருக்காங்க.” என்றதும் அவளை அடிக்க துரத்தினான். 
 
 
 
இருவரும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, “திவ்யா உனக்கு காலேஜ்க்கு டைம் ஆகலையா.” என்று விளையாட்டை நிறுத்தினார் பரமேஸ்வரி. 
 
அண்ணனை பார்த்தவள் அமைதியாக அறைக்கு சென்று விட, அக்னி அலைந்து கொண்டிருந்தான் அன்னை பின்னால்.  அவரோ கண்டு கொள்ளாமல் வீட்டு வேலையை கவனித்துக் கொண்டிருக்க, மணிவண்ணன் மீண்டும் வந்தார்.
 
 
மகள் கணவனுக்கு மட்டும் உணவை பரிமாறியவர் அக்னியை கவனிக்காமல் இருக்க, “அம்மா அண்ணனுக்கு இட்லி வைங்க.” என்றாள் திவ்யா. 
 
 
மகளை முறைத்தவர் தன் அறைக்கு சென்று விட்டார். சாப்பிட வந்த அன்பினி அங்கு நடக்கும் பாச போராட்டங்களைக் கண்டு கொள்ளாது சாப்பிட ஆரம்பித்தாள். அவள் வந்து அமர்ந்ததும் மணிவண்ணன் எழுத்துக் கொள்ள, திவ்யா முழித்துக் கொண்டிருந்தாள் செல்வதா வேண்டாமா என்று.
 
 
நடப்பதை பார்த்த அக்னி, “நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்துட்டு இப்படி நடு வீட்டுல உட்கார்ந்து சாப்பிடுற வெக்கமா இல்ல உனக்கு.” என அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தட்டை தள்ளி விட்டான்.
 
 
“அக்னி” என்று மகனின் செயலை கண்டித்த மணிவண்ணன், “எதிரியா இருந்தாலும் கோபத்தை சாப்பாட்டுல காட்டாத. ” என்று விட்டு அமைதியாக தன் அறைக்கு செல்ல,
 
“அதேதான் மாமா உங்களுக்கும் நான் எதிரி வீட்டு பொண்ணா இருந்தாலும் இப்ப உங்க மருமகள். நான் சாப்பிட வந்ததும் எந்திரிச்சு போறீங்க, இது எந்த விதத்துல நியாயம்.” என்ற நியாயமான கேள்வியை அவர் முன்பு வைத்தாள். 
 
 
அறை நோக்கி நகர்ந்தவர் கால்கள் உணவு மேஜை நோக்கி நடந்தது. மாமனார் வருகையை அறிந்தவள் சிரிப்போடு தட்டில் காலை உணவை நிரப்ப, அமைதியாக சாப்பிட ஆரம்பித்தார். திவ்யா பார்வையால் அண்ணன் மனைவியை மெச்சிக்கொள்ள, 
 
 
“பார்த்தது போதும் சாப்பிடு நாத்தனாரே” என அன்பினி அவளுக்கும் இரண்டு இட்லியை வைத்தாள்.
 
“போதும் அண்…”பேச ஆரம்பித்தவள் அன்பினியை எப்படி அழைப்பது என்று தெரியாமல் கூச்சத்தோடு பாதியில் நிறுத்த,
 
“அண்ணின்னு சொன்னா உங்க வீட்டு கௌரவம் ஒன்னும் குறைஞ்சிடாது நாத்தனாரே.” என்றவள் தனக்கொரு தட்டில் உணவை வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
 
 
திவ்யா சங்கடத்தோடு சாப்பிட ஆரம்பிக்க, மணிவண்ணன் தலையை நிமிர்த்தாது சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  நடப்பதை கவனித்துக் கொண்டு தான் இருந்தார் பரமேஸ்வரி ஆனாலும் மனம் இறங்காமல் மௌனம் காத்தார். 
 
 
அக்னி அங்கிருந்து அமைதியாக நகர்ந்து விட்டான். மணிவண்ணன் சாப்பிட்டு முடிக்கும் நேரம் இன்னொரு இட்லியை தட்டில் வைக்க, கையசைத்து வேண்டாம் என்றார். தந்தை செல்லும் வரை அமைதியாக இருந்த திவ்யா,
 
“அண்ணி” என்றழைத்தாள்.
 
புருவம் இரண்டையும் மேல் தூக்கி அவள் என்னவென்று விசாரிக்க, “உங்க லவ் ஸ்டோரி என்ன?” என்று ஆர்வமாக கேட்டாள்.
 
 
“அதுவா “என்று 
இழுத்தவள் “கிட்ட வா” என்றிட, அண்ணனின் காதல் கதையைக் கேட்க ஆர்வமாக அன்பினி அருகில் சென்றாள். 
 
“இனிமே தான் லவ் பண்ணவே ஆரம்பிக்கணும்.” என்றதும் திவ்யா அதிர்ந்து வாயை திறக்க, ஒரு இட்லியை திறந்து இருக்கும் வாயில் அடைத்த அன்பினி, “அண்ட சராசரமும் ஒரு இட்லில அடங்கி போச்சு. அடடா ஆச்சரிய குறி!” என்றாள் குறும்புகள் கூட.
 
 
“வரேவா! எனக்கு ஏத்த அண்ணி தான் நீங்க‌ . இனிமே நம்ம ரெண்டு பேரும் ஒரு கட்சி.” என்று சத்தமாக புது கூட்டணியை அவ்வீட்டில் உருவாக்க, வாயில் கை வைத்து அமைதி படுத்தியவள்  “கட்சி தலைவரை நம்ம பக்கம் இழுக்கிற வரைக்கும் அடக்கி வாசிக்கணும் நாத்தனாரே.”என்றாள்.
 
***
 
புது கூட்டணி உருவாகி தீவிரமாக கட்சி பணிகளைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருக்க, “உள்ள வரலாமா” என்றார் வாசலில் நின்றிருந்த அன்னபூரணி.
 
 
பாட்டியை பார்த்த மகிழ்வில் அன்பினி பேச வருவதற்குள் வேகமாக   வெளியில் வந்தார் பரமேஸ்வரி. அன்னையின் குரல் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது என்றாலும் மறக்க முடியாத குரல் அல்லவா அது! அடித்துப் பிடித்து வெளியில் வந்தவர் கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்தது. மகளைப் பார்த்த அன்னபூரணி உத்தரவு வருவதற்கு முன்பாகவே வீட்டில் கால் வைத்தார். 
 
“என் செல்ல மகளே!”என்றவர் அதற்கு மேல் பேசாமல் அழத்துவங்கினார். நந்தினி மாமியாரை சமாதானப்படுத்த, பரமேஸ்வரி திரும்பினார் தன்னறைக்கு. 
 
 
நடப்பதை பார்த்த அன்பினி பாட்டியை உபசரித்து சோபாவில் அமர வைக்க, அவரின் பார்வை மகளின் அறை நோக்கியே இருந்தது. பாட்டியை மகிழ்விக்க எண்ணியவள், “பாட்டி உங்களோட இன்னொரு பேத்தி திவ்யா.” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
 
 
முதியவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திவ்யா அப்படியே பரமேஸ்வரியின் சாயல். மகளைப் பார்த்ததும் அள்ளி அணைத்து முத்தமிட துடித்த தாயின் மனது பேத்தியை அணைத்துக்கொண்டது. இவையெல்லாம் திவ்யாவிற்கு புதிது. உறவுமுறை சொல்லி பழகும் அளவிற்கு வேறு யாரும் அவர்கள் வாழ்வில் வந்ததில்லை. ஒரு வயதில் திவ்யா அன்னையிடம் இதைப் பற்றி கேட்க,
 
“நமக்கு சொந்தம்னு யாரும் இல்ல இதை பத்தி கேட்டு அம்மாவ சங்கடப்படுத்தாத.”என்று விட்டான் அக்னிசந்திரன்.
 
 
அதன்பின் கேட்பதை நிறுத்தி விட்டாள். இருப்பினும் மனதினுள் மற்றவர்களை பார்க்கும் பொழுது ஏங்கி இருக்கிறாள். பேத்தியின் நெற்றியில் முத்தமிட்டவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நந்தினி மருமகளை ஆசையோடு அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். 
 
 
அலுவலக அறையில் இருந்து வெளியில் வந்த மணிவண்ணன் இவர்களை பார்த்து அங்கேயே நின்று விட்டார். அவரைப் பார்த்த அன்னபூரணி எழுந்து நிற்க, “உட்காருங்க மேடம்.” என்றார் தயக்கத்தோடு.
 
 
“இன்னும் என்ன மாப்ள மேடம்னு. உங்கள என் மருமகனா ஏத்துக்கிட்டு பல வருடம் ஆகுது. வெளிய தான் பெருமையா சொல்லிக்க முடியாத சூழ்நிலை. என் பேத்தி தயவால இனி அந்த குறை எனக்கு இருக்காது.” என்றவரை இன்னும் தயக்கத்தோடு  பார்த்தார் மணிவண்ணன். 
 
 
வந்தவர்களை உபசரித்தவர் மனைவியை வெளியில் அழைக்க, அவரோ அமைதியாக வந்து நின்றார் கணவனின் வார்த்தைக்கு. “பரமு வந்தவங்கள கவனிக்காம உள்ள என்ன பண்ற.” என்றதோடு அவர்களுக்கு ஏதாவது கொடுக்கும்படி உத்தரவிட, சமையல் கட்டிற்குள் நுழைந்தார்.
 
 
இருவர் கையிலும் காபியை கொடுத்தவர் எதுவும் பேசாமல் நின்றிருக்க, “அம்மாடி இந்த அம்மா கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டியா.”  ஏக்கமாக கேட்டார்.
 
 
அழுகை முட்டிக்கொண்டு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தார் பரமேஸ்வரி. “எப்படிமா இருக்க?” மகள் பேசவில்லை என்றாலும் தொடர்ந்து அவர் கேட்டுக் கொண்டிருக்க,
 
“உங்க மகன் கொடுத்த எல்லா தொந்தரவுல இருந்தும் தப்பிச்சு நிம்மதியா இருக்கோம்.” என்று அதற்கு மட்டும் பதில் அளித்தார் பரமேஸ்வரி. 
 
 
“பரமு என்ன இது வந்தவங்க கிட்ட.” என்று மணிவண்ணன் மனைவியை கண்டிக்க,
 
“விடுங்க மாப்பிள்ளை அவ பேசுறதுல எந்த தப்பும் இல்லை.” என்றார் அன்னபூரணி.
 
 
அதன்பின் எந்த பேச்சு வார்த்தைகளும் அங்கு இடம் பெறவில்லை. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, 
“எங்க மாப்ள என் பேரனை காணோம்.” என்று இந்த முறையும் அன்னபூரணியே ஆரம்பிக்க,
 
“உங்க பேரன் உங்க வீட்ல இருப்பான் இங்க வந்து எதுக்கு கேக்குறீங்க.”என்றவாறு படி இறங்கினான் அக்னிசந்திரன்.
 
 
 
 
“நீயும் என் பேரன்  தானப்பா.” என்றதும்,
 
“உங்களை எனக்கு யாருன்னே தெரியாது திடீர்னு வந்து சொந்தம் கொண்டாடுறீங்க. முதல்ல யாரைக் கேட்டு என் வீட்டுக்குள் வந்தீங்க.” முகத்தில் அடித்தது போல் கேட்டான்.
 
 
“அக்னி பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா.” என்ற தந்தையை பார்த்தவன்,
 
“வயசு ஆகிட்டா மட்டும் பெரியவங்க ஆகிட முடியாது ப்பா. இத்தனை வருஷம் இல்லாம இப்ப எங்க இருந்து வந்துச்சு இந்த பாசம். எல்லாரையும் வெளிய போக சொல்லுங்க இனி இந்த வீட்டுக்கு யாரும் வரக்கூடாது.” என்றான்.
 
அதுவரை பார்வையாளராக இருந்த அன்பினி ” அவங்க உன் அம்மாவோட சொந்தக்காரங்களா வரல என்னோட சொந்தக்காரங்களா வந்திருக்காங்க. என் அம்மாவும், பாட்டியும் என்னை பார்க்க வரதை தடுக்க உன்னால முடியாது  அக்னி.”
 
“ஓ! நீயே இந்த வீட்டுக்கு சொந்தக்காரி இல்ல இதுல உனக்கு சொந்தக்காரங்க வேற. அன்னைக்கு என்னமோ மண்டபத்துல உங்க அப்பன் அந்த துள்ளு துள்ளுனான். நான் சொன்ன மாதிரி பொண்ண அனுப்புற மாதிரி அனுப்பிட்டு பின்னாடியே ஒவ்வொருத்தரா வராங்க. எதுக்கு இந்த வெட்டி பந்தா.” என்றவனின் பேச்சை நிறுத்தினாள்,
 
“அக்னி என் மேல இருக்க கோவத்தை இவங்க கிட்ட காட்டாத.” என்று அன்பினி.
 
அவளைக் கண்டு முறைத்தவன், “உன்னை பார்க்க யாராச்சும் வந்தா அவங்களை வாசலோட நிறுத்தி பார்த்துக்க. என் வீட்டுக்குள்ளே எனக்கு பிடிக்காதவங்க வந்தா இப்படி தான் பேசுவேன்.” 
 
 
 
“சந்திரா என்னப்பா இப்படி பேசுற. இத்தனை நாளா எவ்ளோ அன்பா என்கிட்ட பேசின அது எல்லாம் பொய்யா.” மன ஆதங்கத்தோடு நந்தினி கேட்டார்.
 
“இன்னுமா புரியல அது எல்லாம் பொய்யின்னு.” 
 
“பாட்டி என்ன பண்ணாங்க. உன் கோபத்தை அவங்க கிட்ட காட்டுறது நல்லா இல்ல.” என்றதும் அன்பினியை கடுமையாக பார்த்தவன்,
 
” எங்க அம்மா வந்து நின்னப்போ எங்க போனாங்க இவங்க? இரண்டு உயிரை காப்பாத்த  மடிப்பிச்சை கேட்டவங்களை நயவஞ்சகமா ஏமாற்றும் போது எங்க போனாங்க. தயவு செஞ்சு எந்த உறவு முறையும் சொல்லிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வராதீங்க.”  என்றவன் வீட்டை விட்டு கிளம்பினான்.
 
 
மகன் இவ்வளவு பேசியும் பதில் பேசாமல் அமைதியாக நின்று இருந்தார் பரமேஸ்வரி. மனைவியின் அமைதியை பார்த்த மணிவண்ணன் பேசுமாறு கேட்க, மறுத்துவிட்டார். அன்பினி பாட்டி மனம் நோகாமல் இருக்க ஆறுதல் சொல்ல, அவளுக்காக சிரித்தார் அன்னபூரணி.
 
 
 
பேச்சுக்களுக்கு இடமின்றி வெறுமையாக அவ்வீடு இருக்க, “சரிங்க மாப்பிள்ளை நாங்க கிளம்புறோம்.” என்றார்.
 
 
“இருங்க இன்னைக்கு தான வந்திருக்கீங்க சாப்பிட்டு போகலாம்.”  வழக்க பேச்சுக்கு மணிவண்ணன் பேச,
 
“பரவாயில்லை மாப்பிள்ளை இருக்கட்டும். என் மகளும் பேரனும் மன்னிக்கட்டும் மனசார விருந்தே சாப்பிடுறேன்.” என்றவர்   கிளம்பினார். 
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
25
+1
2
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *