Loading

13 – விடா ரதி… 

 

அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல எழுந்து சமையல் அறையில் நுழைந்தாள். 

 

இன்னும் யாரும் எழவில்லை, அதிகாலை அமைதியும், புது காற்றும் அவள் மனதை இறகாய் வருடியது. தனக்கு டீ போட்டுக் கொண்டு சமையலறையின் பக்கக்கதவை திறந்துப் பக்கவாட்டில் இருந்த கருங்கல் மேடையில் அமர்ந்து, காற்றை ஆழ சுவாசித்தாள். 

 

நேற்று இரவு பூத்த மனோரஞ்சித மலரின் நறுமணம் நாசியின் வழியாக உடல் முழுதும் பரவி, குதூகலமான உணர்வை ஏற்படுத்தியது, 

 

அருகில் இருந்த பவள மல்லியும் மெல்லிய வாசனையை அவ்விடத்தில் நிரப்பி இருக்க, கண்மூடி அமர்ந்த நொடி இந்த பிரபஞ்சம் அவளின் மலர்மடியாக இருப்பதைப் போல பிரம்மையை ஏற்படுத்தியது. 

 

மலர்களுக்கு தான் எத்தனை சக்தி, அந்த மணம் நம் மூளையையும், மனதையும் இலகுவாக்கி, இயல்பை மீட்டெடுத்துவிடுகிறது. 

 

மெல்ல மெல்ல அவளும் டீ பருகியபடி தன்னை லகுவாக்கி, இயல்பாக்கிக் கொண்டிருந்தாள். 

 

“ஹேய்… நீ இங்க இருக்கியா? உன்ன காணோம்னு உள்ள தேடிட்டு இருந்தோம்….”, எனக் கூறியபடி ஸ்வேதாவும், சவிதாவும் அவளருகே வந்து அமர்ந்தனர். 

 

“நல்லா இருக்கு டி இந்த இடம்….. இங்க ஒரு டேபிள் போட்டா நைட் டின்னர் இங்க உக்காந்து சாப்பிடலாம்… “, சவிதா கூறினாள். 

 

“ஆமா…. ஸ்ட்ரெஸ் ரெலீப் குடுக்குது…. மலைவாசி ஆகிட்ட ரதி.. இனிமே எப்படி உன் பழைய கனவுப்படி வாழ்க்கை போகுமா? இல்ல புதுசா எதாவது யோசிச்சி இருக்கியா?”, ஸ்வேதா கேட்டாள். 

 

“எந்த பிளானும் இல்ல ஸ்வே….. வாழ்க்கை போற போக்குல போகணும் அவ்ளோ தான்… இருங்க உங்களுக்கு டீ எடுத்துட்டு வரேன்….”, என உள்ளே சென்று கணவனுக்கும் போட்டு பிளாஸ்கில் ஊற்றி வைத்துவிட்டு, மற்ற இருவருக்கும் எடுத்து வந்தாள். 

 

“ நல்லா டீ போட்ற டி நீ….. நல்ல வாசனை….”, என சவிதா கூறியபடி எடுத்துக் குடித்தாள். 

 

“அண்ணா எப்போ வராரு ஸ்வே? நாம போய் பிக்கப் பண்ணிட்டு வரணும்ல?”

 

“இல்ல ரதி.. .அவரே வந்துடுவாரு.. நான் லொகேஷன் அனுப்பிட்டேன்….. இந்நேரம் வந்துட்டு இருப்பாரு…..”

 

“அப்போ நான் எந்த ரூம் போக? அவர வேற ரூம்ல தங்க சொல்லிடு….. “, சவிதா. 

 

“ரூமா இல்ல உனக்கு? இன்னொரு ரூம் பக்கத்துல இருக்கு.. அதுல இருந்துக்கோ டி…”

 

“இல்ல டி நாம ஒன்னா இருக்கலாம்ல… ரொம்ப நாள் ஆச்சு…. ரெண்டு பேர் புருஷங்களையும் ஒண்ணா விட்டுட்டு நாம ஜாலியா இருக்கலாம் இன்னிக்கி நைட்…”, சவிதா இப்படி கூறவும் ரகு, அவளை முறைத்தபடி வெளியே வந்தான். 

 

“சிஸ்டர்…. உங்க ஹஸ்பண்ட் கூட்டிட்டு வந்திருந்தா ஜோடியா இருந்து இருக்கலாம்…. அத விட்டுட்டு ஏன் தனியா கஷ்டப்படறிங்க ?”, எனக் கூறியபடி ரதி அருகில் அமர்ந்து அவளை தன்னருகில் இழுத்துக் கொண்டான். 

 

“அண்ணா… உங்க பொண்டாட்டி உங்களுக்கு முன்ன எனக்கு ஃப்ரெண்ட்.. அதனால இன்னிக்கி நீங்க இவ ஹஸ்பண்ட் கூட பேசி ப்ரெண்ட் ஆகிடுங்க.. நாங்க பேச பல விசயம் இருக்கு… அதனால் ரெண்டு நாளைக்கு ரதிய தொந்தரவு பண்ணாதீங்க….. “, என ரதியை அவள் பக்கம் இழுத்தாள். 

 

“அவர்கிட்ட நான் பகல்ல பேசி ஃப்ரெண்ட் ஆகிடுவேன்….. சோ நீங்களும் பகல்லையே பேசி முடிச்சிக்கோங்க..”,என மீண்டும் அவளை தன் பக்கம் இழுத்தான். 

 

“ஹேய் … என்ன ரெண்டு பேரும் விளையாடறீங்களா ?”, ரதி எழுந்து வேறு பக்கம் அமர்ந்து, “ரகு…. சவி சொன்னமாதிரி நான் இன்னிக்கி கீழ படுத்துக்கறேன். அண்ணா வந்தா பக்கத்து ரூம்ல இருந்துக்கட்டும்…. ஃப்ளைட்ல வந்த டையர்ட்னஸ் இருக்கும்…. சரி வாங்க சமைக்கலாம்… “, என தோழிகளுடன் அவள் உள்ளே சென்றுவிட்டாள், இவன் தான் பந்தை தொலைத்தக் குழந்தையைப் போல ஏமாற்றம் கலந்த கோபத்துடன் அமர்ந்திருந்தான். 

 

ஜன்னல் வழியாக அதைக்கண்ட ரதி சிரிப்புடன் காலை உணவைத் தயாரிக்கச் சென்றாள். 

 

அவனுக்கு பிடித்த சிக்கன் குழம்பு வைத்து, சூடாக மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லி செய்துவிட்டு, பெரிய வெங்காயம் போட்டு கோழி துண்டுகளையும் தாளித்து வைத்தாள். 

 

ஸ்வேதா பச்சை மசாலா (கொத்தமல்லி, பொதினா, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு) தயார் செய்து பொரிக்க கோழி கால் துண்டுகளை அதில் ஊறவைத்தாள். 

 

சவிதா சப்பாத்தி மாவு பிசைந்து வைத்துவிட்டு, மற்ற உதவிகளை செய்துக் கொண்டிருந்தாள். பெண்கள் மூவரும் படபடவென அனைத்தும் முடித்து ஹாட்பேக்கில் வைத்துவிட்டு, குளிக்கச் சென்றனர். 

 

ரகு அவளுக்காக அங்கேயே குளிக்காமல் கூட அமர்ந்து இருந்தான். மீண்டும் எதையோ தேட வந்த சவி அவன் அமர்ந்து இருக்கும் விதம் கண்டு ரதியை அழைத்துக் காட்டினாள். 

 

“உன் புருஷன் ஒரு நைட் உன்ன விட்டு இருக்க முடியாம எப்படி உக்காந்து இருக்காரு பாரு…”, எனக் கிண்டலடித்தாள். 

 

“மலை ஏறிட்டாரா? அச்சோ…. உன்னால தான் டி.. நானும் ஆசைப்பட்டு உங்கூட இருக்கேன்னு சொல்லிட்டேன்…. இவர மலை இறக்கரதுக்குள்ள எனக்கு தான் பாடா இருக்கும்…. உன் வாய வச்சிட்டு கம்முன்னு இருக்கவே மாட்ட நீ…. நீ போ…. சத்தம் வந்தா யாரும் வெளிய வராதீங்க…. நான் சமாதானம் பண்ண போறேன்….”

 

“சமாதானம் எல்லாம் ரூமுக்குள்ள பண்ணு… நாங்க சத்தம் வந்தா வெளிய வந்து ஃப்ரீ ஷோ பாப்போம்….”, என மீண்டும் அவள் விஷமமாகப் பேசிச் சிரித்துக் கொண்டே சென்றாள். 

 

“உன்ன கொல்ல போறேன் டி…. ஓடிரு….”, ரதி அவளைத் துரத்திவிட்டு அவனிடம் சென்றாள். 

 

“ரகு… இங்க என்ன பண்றீங்க இன்னும்? குளிக்களியா? கடைக்கு போகணும்ல?”, முகத்தைச் சாதாரணமாக வைத்தபடி அருகே சென்றாள். 

 

அவன் அவளைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் அப்படிசெய்தது சிறு குழந்தையின் கோபமாகவே அவளின் கண்களுக்கு தெரிந்தது. 

 

“என் செல்ல ராக்கிக்கு என்னாச்சி? ஏன் இந்த கோவம்?”, என சிறு குழந்தையிடம் பேசுவதைப் போலவே கேட்டாள். 

 

அவன் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பி அமர்ந்துக்கொண்டான். அவள் அவன் அருகில் அமர்ந்து தோள் உரசியபடி, “டார்லிங்…. என்னடா கோவம் உனக்கு? ஏன் மூஞ்சி ஜின்ஜெர் ஈட்டிங் மங்கி மாறி இருக்கு?”

 

“உனக்கு அப்படிதான் தெரியும் டி… உன் ஃப்ரெண்ட்ஸ் வந்ததும் என்னை யாரோ மாறி பாக்கறல்ல…..”, என அவன் கூறவும் அவள் தான் சற்று உடைந்துப் போனாள். 

 

தன்னை சமாளித்து கொண்டு, “நீ மட்டும் உன் ஃப்ரெண்ட்ஸ் பாத்தா இப்படி தங்கிக்க மாட்டியா டா? அவங்கள பாத்தே பல வருஷம் ஆச்சி… மறுபடியும் இப்படி ஒண்ணா தங்கற சூழ்நிழை வருமா தெரியாது டா செல்லம்… இப்படி நீ கோச்சிக்க கூடாது….”, எனக் கூறி அவள் அப்போது முகம் திருப்ப அவன் அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தான். 

 

“சாரி டி பேபி….. இத நா யோசிக்கவே இல்ல…. சரி இன்னிக்கி ஒரு நைட் தான்… டீல்?”, என அவள் கன்னம் கொஞ்சி சமாதானம் செய்தான். 

 

சவிதாவும், ஸ்வேதாவும் ஜன்னல் வழியாக அங்கு நடப்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். 

 

“நல்லவேளை அவள புரிஞ்சிக்கறாரு ஸ்வே… நான் கூட பயந்தேன் லேட் மேரேஜ், கான்ஃப்பிளிட்ஸ் இருக்குமோன்னு… “

 

“அவருக்கும் அவமேல ஒரு விருப்பம் இருந்திருக்கு சவி.. ஆனா ரெண்டு பேருமே நேருக்கு நேர் பேசிக்கல.. அதனால தான் இத்தன வருஷம் வீணா போச்சி…. இனிமே அவங்க லைஃப் நல்லா இருக்கும்ன்னு நம்புவோம்….”, எனக் கூறிவிட்டு ஸ்வே அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள். 

 

ரகுவும், ரதியும் பேசியபடி தாங்கள் அறைக்கு வந்து, ரதி முதலில் குளித்துத் தயாராகி கீழே செல்லவும் ரகுவும் தயாராகி வந்தான். 

 

ரகு வரும்போதே ஸ்வேதாவின் கணவர் வருண் வந்திருந்தார். 

 

“வாங்க ப்ரோ…. ஜேர்னி எப்படி இருந்தது?”, ரகு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். 

 

“லாங் ஃப்ளைட் தான் ப்ரோ… வாழ்த்துக்கள்….. எப்படியோ ரதிய மிஸஸ் ஆக்கிட்டீங்க… ரொம்ப சந்தோசம்….”, எனக் கூறினார். 

 

“ஆமா ப்ரோ… இனிமே சமாளிக்கறது தான் எப்படின்னு தெரியல.. கொஞ்சம் டிப்ஸ் குடுங்க….”, எனக் கூறி ரதியைப் பார்த்துக் கண்ணடித்தான். 

 

“குடுங்க அண்ணா…பத்து நாள்லயே கொறை சொல்றாரு…”, எனக் கூறியபடி ரதியும் அவனைப் பார்த்துப் பழிப்புக் காட்டினாள். 

 

“பத்து நாள் கழிச்சி தான் சொல்றாரா? அதுவே பெரிய விசயம் தான் ரதி.. அவ்ளோ நல்ல பொண்ணா மாறிட்டியா என்ன?”, வருண் அவளை வார என கலகலப்பான சிரிப்பொலி அவ்விடத்தை ஆக்ரமித்தது. 

 

“அண்ணா…..”, என ரதி அவரையும் ரகுவையும் முறைத்து பின் அவளும் சிரித்துவிட்டாள். 

 

“சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்…”, சவிதா அழைத்தாள். 

 

“நீங்க சாப்பிடுங்க நான் குளிச்சிட்டு வந்துடறேன்….”, என அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று 30 நிமிடங்கள் கழித்து வந்தான். 

 

“யாரும் சாப்பிடலியா?”, அனைவரும் அவன் சென்றபோது அமர்ந்த இடத்தில் தான் இன்னும் இருந்தனர். 

 

“சேர்ந்து சாப்பிடலாம் வாங்க ப்ரோ….”, ரகுவும் வருணும் நன்றாக பழக ஆரம்பித்துவிட்டனர். 

 

“அப்பாடா… ரெண்டு பேரும் செட் ஆகிட்டாங்க… இன்னும் முகுந்தன் அண்ணா செட் ஆகிட்டா நமக்கு பிரச்சினை இல்ல…”, என ஸ்வேதா ரதியிடம் முணுமுணுத்தாள். 

 

“என்னடி ரகசியம் பேசறீங்க?”, சவி கேட்டாள். 

 

“ஒன்னும் இல்லடி.. இன்னிக்கி ரிசப்ஷன் புடவையா, லெஹங்காவான்னு பேசிட்டு இருக்கோம்…..நீ என்ன போடற?”, ஸ்வேதா ரதிக்கு முன் பதில் கூறினாள். 

 

“புடவை தான்…. அத தூக்கவே கொடுமையா இருக்கு.. இந்த மனுஷன் எங்க போனாலும் அவரே தூக்கிப்பாரு, இப்படி தனியா வரப்போ தான் கஷ்டமா போயிடுது… “

 

“இதெல்லாம் ஒரு வகைல நம்மள சொகுசு பண்ணி சோம்பேறி பண்றது தான்… அப்பப்போ எதாவது செஞ்சிட்டு இருந்தா தான் மனசும் உடம்பும் நல்லா இருக்கும்..”, ரதி கூறியபடி எல்லோருக்கும் பரிமாறிவிட்டு அவளும் அமர்ந்தாள். 

 

“அக்கறையா பாத்துகிட்டா இப்படியா சொல்றது சிஸ்டர்?”, வருண் கேட்டான். 

 

“இந்த பழக்கம் எப்பவும் ஒருத்தர சார்ந்தே வாழ பழக்கிடும் அண்ணா… நம்ம அம்மா பாட்டி எல்லாம் இத தான் செஞ்சாங்க… எல்லாருக்கும் ஆழமான அன்பு கலியாண பந்தத்துல வரது இல்லயே… காதல் நெறய பேருக்கு வரதே இல்ல. அப்படி இல்லாத பட்சத்துல இதுமாதிரியான பழக்கம், சமையல் சுவை எல்லாம் தான் தன் இணைய தக்க வச்சிக்க வைக்கும்ன்னு நம்பினாங்க… நிறைய பேருக்கு அப்படி தான் வாழ்க்கையும் போச்சி… மனசுல நிஜமான அன்பு உருவாகாதப்போ நம்ம துணை நம்ம கைவிட்டு போயிட கூடாதுன்னு பண்ற முயற்சிகள் தான் இது எல்லாம்… “

 

“உண்மை தான்… நானும் நிறைய பாத்து இருக்கேன்… அப்படியும் பற்று வரலைன்னா தான் குழந்தைங்கள காரணமா வச்சி ஒண்ணா பேருக்கு வாழறாங்க… ஆனா அது கொடுமையான விசயம்… “, வருண் கூறியதும் ஒரு கனத்த அமைதி நிலவியது. 

 

“சரி போதும் உங்க ஆராய்ச்சி எல்லாம்.. நீங்க அந்த ரூம்ல படுத்து தூங்குங்க.. சாயிந்தரம் ரிசப்ஷன் போகணும்…. “, என ஸ்வேதா தன் கணவனை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு செல்ல கூறினாள். 

 

அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும், “நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க ப்ரோ.. நானும் கடைக்கு கிளம்பறேன்…. இங்க இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு தான் நீங்க போகணும்…. “, எனக் கூறிக் கடைக்குச் சென்றான். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
18
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்