“உன் கைல ரத்தம் வருது” விஸ்வயுகா கூறியதில் குனிந்து கை முஷ்டியை பார்த்த யுக்தா, “எல்லா விஷயத்துலயும் பிடிவாதம் பிடிச்சா இப்படி தான் ஆகும்” எனக் குத்தலாகக் கூறிட, அதில் ஒரு நொடி முகம் கறுத்தாலும் “உனக்கும் இது பொருந்தும்” என்றாள் காட்டமாக.
அந்நேரம் யுக்தாவின் அலைபேசி அழைத்ததில் அதனை ஏற்றவன், எதிர்முனையில் கூறிய செய்தியைக் கேட்டு புருவம் சுருக்கியபடி போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு “கேஸ் விஷயமா தான் போறேன். வர்றியா?” எனக் கேட்டான்.
நடப்பதை தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவலில் அவள் உடனடியாக தலையசைக்க, “பட் நம்மளோட பிரைவேட் ஒன் அவர்க்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. ஆல்ரெடி நேத்து மிஸ் ஆகிடுச்சு. சோ இன்னைக்கு அதுக்கும் நீ காம்பென்சேட் பண்ணனும் ஓகே வா?” என கிசுகிசுப்பாகக் கேட்டவனிடம்,
“கண்ணாடி உன் கைல குத்துனதுக்கு பதிலா கண்ணுல குத்தி இருக்கலாம்” என முறைக்க, அதற்கு லேசாய் இதழ் விரித்தவன், கார் சாவியை அவளிடம் தூக்கிப் போட்டு, “காரை ஓட்டு. மரத்துல இடிக்காம ஓட்டு” என்ற அறிவுரையுடன் முன்சீட்டில் அமர்ந்தான்.
டேஷ்போர்டில் வைத்திருந்த முதலுதவிப்பெட்டியைப் பயன்படுத்தி தனது காயத்திற்கு மருந்திட்டவனைப் பார்த்தபடி காரை எடுத்தவள், “இது காரா இல்ல கண்டெய்னர் வீடா. கடப்பாறைல இருந்து கட்டுப்போட மருந்து வரை வச்சுருக்க” எனக் கேட்க,
“இது என் செகண்ட் ஹோம்” என்றான் கேலிச் சிரிப்புடன்.
அத்துடன் நில்லாமல், “வீட்ல போர் அடிச்சா கார்ல கேர்ள் பிரெண்டோட என்ஜாய் பண்ண பிடிக்கும் ஏஞ்சல்” என்ற இடைச்சொருகள் வேறு.
‘இந்த பைத்தியத்துக்கிட்ட போய் கேட்ட பாத்தியா உன் புத்தியை பிஞ்சு செருப்பால அடி’ என வாயை இறுக மூடிக்கொண்டு தன்னைத் தானே கடிந்து கொண்டாள் விஸ்வயுகா.
கட்டிட்டு முடித்தபடி அவள் புறம் மெல்லச் சாய்ந்தவன், “சோ என்ஜாய் பண்ணலாமா?” என அடிக்குரலில் விஷமத்துடன் கேட்க,
“ம்ம் பண்ணலாம். எதிர்ல வர்ற லாரில கொண்டு போய் காரை மோதுறேன். ரெண்டு பேரும் ஸ்ட்ரெய்ட்டா நரகத்துக்குப் போய் எண்ணைச் சட்டிக்குள்ள என்ஜாய் பண்ணலாம்” என்றாள் எரிச்சலுடன்.
“ஹா ஹா இட்ஸ் ஓகே ஏஞ்சல்… நீ என் கூட வர்றன்னா நரகம் கூட ஓகே தான் எனக்கு” என வெகு தீவிரத்துடன் கூற,
“ப்பா… ப்ளர்ட்டிங் ஓவர்டோஸ்ல போகுது. கேஸ்ல ஏதாவது லீட் கிடைச்சுதா?” எனப் பேச்சை மாற்றினாள்.
அதில் நேராக அமர்ந்து சாலையைப் பார்த்தவன், “சீரியல் கில்லரா இருக்குமோன்னு ஒரு டவுட் இருக்கு” என்றதும், காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள்.
“வாட்? சீரியல் கில்லரா? அப்போ இனியும் கொலை தொடருமா?” எனத் திகைத்துக் கேட்க,
“வாய்ப்பிருக்கு. பட், எல்லா கொலையிலயும் உன் மேட்ரிமோனி தான் லிங்காகி இருக்கு. கொலை செஞ்சது ஒரு ஆம்பளை தான். சோ, உன் கூட சுத்துறானே உன் பாய் பெஸ்டின்னு ஒருத்தன், அவனையும் உன் அண்ணனையும் எப்ப வேணா தூக்கி உள்ள வைப்பேன்…” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டான்.
“இட்ஸ் இன்சேன்… யாரோ செஞ்ச கொலைக்கு அவங்களை எப்படி நீ தண்டிக்க முடியும் யுக்தா. அப்படியே நீ அவங்களைத் தூக்கி உள்ள வச்சா நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன்” எனப் பொங்கினாள்.
“முதல்ல இது சீரியல் கில்லிங்னு எப்படி சொல்ற?” காரை மீண்டும் எடுத்தபடி அவள் வினவ,
அதற்கு பதில் கூறாதவன், “ஹே ஏஞ்சல்… உன்னை நான் ப்ரொடெக்ட் பண்ண தான் ட்ரை பண்றேன். உன்னோட மேட்ரிமோனி தான் அந்த சீரியல் கில்லரோட டார்கட் அப்படின்னா, நீங்க நாலு பேருமே அவனோட டார்கெட்டா தான் இருக்க முடியும். இந்த கேஸ்ல லீட் கிடைக்குதோ இல்லையோ, அவனை கையும் களவுமா பிடிக்கிறவரை சஸ்பெக்ட் லிஸ்ட்ல நந்தேஸும் மைத்ரேயனும் கண்டிப்பா இருப்பாங்க. அவன் கொஞ்சம் அலெர்ட் ஆகிட்டா, அவனோட கொலை பண்ற ஸ்டைலை மாத்திடுவான். அது இன்னும் டேஞ்சர்!” எப்போதும் இருக்கும் குறும்புத்தனத்தை மொத்தமாக துடைத்து எடுத்தவன் போல கூர்மையுடன் பேசினான்.
அதுவே நிலையின் தீவிரத்தை உணர்த்த, பாவையின் விழிகளில் லேசான பயம் தெரிந்தது.
“கொலை பண்ற ஸ்டைலா?” அவள் எச்சிலை விழுங்கியபடி கேட்க,
“ம்ம்… எல்லாருமே ஒரே மாதிரி விஷம் குடிச்சு இறந்துருக்காங்க. எல்லாரோட கைலயும் டெத் நோட். நடந்த மூணு கொலையிலயுமே உன்னோட மேட்ரிமோனி மூலமா தான் கல்யாணம் நடக்க இருந்துருக்கு” அவன் முடிக்கும் முன்னே, அவள் இடைமறித்தாள்.
“அப்படியே வச்சுக்கிட்டாலும், பர்ஸ்ட் நடந்த மர்டர்ல பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து தான இறந்தாங்க. அப்போ செகண்டா நடந்ததுலயும் மாப்பிள்ளை இறந்துருக்கணுமே. இங்க பொண்ணு மட்டும் தான இறந்து போனா. இது எப்படி சீரியல் கில்லர் செஞ்சதுன்னு ஆகும். உண்மையாவே சூசைடா இருந்துருக்கலாம் இல்லையா?” என கேள்வி எழுப்ப,
“அவன் சாகலைன்னு யார் சொன்னா?” என ஒற்றைப்புருவம் உயர்த்தி யுக்தா கேட்டதில், விஸ்வயுகாவின் விழிகள் அதிர்வில் விரிந்தது.
“அ… அப்போ!” எனத் திணற,
“ம்ம் இப்ப நம்ம மர்டர் நடந்த இடத்துக்கு தான் போகப்போறோம். இது இப்படியே கன்டினியூ ஆகுறது ரிஸ்க். எனக்கு இன்னும் உன் பிசினஸ் பத்தி ஃபுல் டீடெய்ல் வேணும். இந்த மர்டர் எப்படி நடந்துருக்குன்னு பார்த்துட்டு உன் ஆபிஸ்க்கு போகலாம்” என்றவனின் கூற்று காதில் விழுந்தாலும் அதற்கு எதிர்வினையாற்றத் தோன்றாமல் தன்னை நொந்து காரை செலுத்திக் கொண்டிருந்தாள்.
திருவல்லிக்கேணியில் அமைந்திருந்தது சுரேஷின் வீடு. முந்தைய நாள் தான் மணப்பெண் இறந்திருக்க, மறுநாளே மணமகனும் இறந்த சோகம் வீட்டாரை சூழ்ந்தது.
முன் நடந்த இறப்பு போலவே தான் சுரேஷும் வாயில் நுரை தள்ள, கையில் இறுக்கிப் பிடித்திருந்த டெத் நோட்டுடன் விட்டத்தை உயிரின்றி வெறித்திருந்தான்.
விஸ்வயுகாவை காரிலேயே அமரும்படி பணித்து விட்டு யுக்தா மட்டுமே இறந்த உடலைப் பார்வையிட்டு வந்தான்.
பின் இருவரும் நேராக விஸ்வயுகாவின் அலுவலகத்திற்குத் தான் சென்றனர்.
அங்கு ஏற்கனவே விஷயம் கேள்விப்பட்ட மூவரும் மரண பீதியை வெளியில் காட்டிக்கொள்ளாமல் விஸ்வயுகாவின் அறையிலேயே அமர்ந்திருந்தனர்.
“இதுக்கு தான் நான் இன்னைக்கு லீவ் போட்டுட்டு வீட்ல தூங்குறேன்னு சொன்னேன் கேட்டியா… ஐயோ எங்கும் கொலை எதிலும் கொலைன்னு எவனோ நம்மளைக் கதற விடுறானே” என நந்தேஷ் காதைப் பொத்திக்கொண்டு கதறினான்.
மைத்ரேயன் திகிலுடன், “இதுல ஹைலைட்… எல்லா கருமமும் அந்த யுக்தா சார்ஜ் எடுத்ததுக்கு அப்பறம் தான் நடக்கணுமா?” என கடுப்பாக,
ஷைலேந்தரி, “அட அட்லீஸ்ட் அவனாவது வந்தானேன்னு சந்தோஷப்படு மைதா. இல்லன்னா, வழக்கு வறண்டு போயிருக்கும்” என உதட்டைப் பிதுக்கியதில், “வழக்கு வறண்டுருக்குமா இல்ல உன் ஜொள்ளு வறண்டுருக்குமா?” என நக்கலாக கேட்டான்.
“எல்லாம் தான்…” என முணுமுணுக்க, மைத்ரேயன் முறைத்தான்.
சரியாக அப்போது விஸ்வயுகாவும் யுக்தா சாகித்யனும் அங்கு வந்து விட்டனர்.
விஸ்வயுகாவின் சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்த யுக்தா, நாற்காலியை சுழற்றியபடியே “அடுத்து எப்போ மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு?” எனக் கேட்க, விஸ்வயுகா அவனை முறைத்தபடியே “அடுத்த வாரம்” என்றாள்.
“ம்ம்…” என்றவன் யோசனையில் ஆழ்ந்து விட, “என்னமோ இவனோட அப்பன் வீட்டு சொத்து மாதிரி ஜங்குன்னு வந்து உட்காந்து இருக்கான்” என்று மைத்ரேயன் தான் சின்னக் குரலில் கடுகடுத்தான்.
நந்தேஷோ, “பிசினஸ்மேனா மாறுனா கெத்து காட்டலாம்னு நினைச்சேன். ஆனா சிபிஐ ஆனா தான் கெத்து காட்ட முடியும் போலருக்கு. பேசாம இந்த பிசினஸை விட்டுட்டு நானும் சிபிஐக்கு படிக்கவா?” எனக் கேட்டான் சந்தேகமா.
விஸ்வயுகா தான், “அது ஒழுங்கா வரலைன்னு தான ஈவண்ட் மேனேஜ்மெண்ட் படிச்ச. மூடிட்டு நில்லு” என்றதில், மைத்ரேயனும் ஷைலேந்தரியும் நமுட்டு நகை புரிந்தனர்.
யுக்தா விரல்களால் மேஜையின் மீது தாளமிட்டபடி, “இந்த மேட்ரிமோனியோட ஆப்பனன்ட் யாரு? இதுவரை இங்க எத்தனை மேரேஜ் நடந்து இருக்கு. எத்தனை மேரேஜ் நின்னு போயிருக்கு. இதுக்கு முன்னாடி நடந்த பிரச்சனைன்னு எனக்கு ஒன்னு விடாம தகவல் வேணும்” என்றதும் விஸ்வயுகா ஷைலேந்தரியைப் பார்க்க, அவள் ஏற்கனவே அனைத்தையும் ஒரு பைலாக தயாரித்து வைத்திருந்ததில் அதனை யுக்தாவிடம் பவ்யமாகக் கொடுத்தாள்.
சில நிமிடங்கள் செலவழித்து யுக்தா அந்த ஃபைல் முழுக்க பார்வையிட்டதில் ஷைலேந்தரி மெல்ல அந்த பைலை எட்டிப்பார்த்து விட்டு, “சிபிஐ சார்… ஸ்கூல்ல மிஸ்கிட்ட ரெகார்ட் நோட்ட கரக்ஷன் பண்ண குடுத்துட்டு, தப்பா இருந்தா அடி வெளுப்பங்களேன்னு பயத்துல நிக்கிற மாதிரி இருக்கு. கொஞ்சம் இதெல்லாம் எதுக்கு கேட்டீங்கன்னு சொல்றீங்களா?” எனக் கேட்டாள் கண்ணைச் சுருக்கி.
அதில் லேசாய் சிரித்தவன், “எவனாவது உங்களை பழிவாங்குறேன்ற பேர்ல இப்டி அப்பாவி பொண்ணையும் மாப்பிள்ளையும் கொன்னு, உங்க மேட்ரிமோனி பிசினஸை சிதைக்கப்பாக்குறாங்களோன்னு எனக்கு ஒரு டவுட். உங்க பிஸினஸ பத்தி ஐ டோன்ட் கேர். பட் இதுனால சாகுறது ஒரு தப்பும் செய்யாத அப்பாவிங்க. இதே மாதிரி போனா, உங்க கம்பெனிக்கு சீல் வைக்க வேண்டியது வரும்” என்றதில் நால்வரும் அவனை முறைத்துப் பார்த்தனர்.
“நியாயமா இப்பவே இதெல்லாம் நான் செஞ்சுக்கணும் ஏஞ்சல். ஏதோ உன்மேல இருக்குற ஒரு மயக்கத்துல ஆக்ஷன் எடுக்காம தள்ளிப் போட்டு இருக்கேன். இந்த பைல்ல இருக்குற டீடெய்ல் எல்லாம் பத்தாது. நல்லா யோசிச்சு இதெல்லாம் யார் செய்ய பாசிபிள் இருக்குன்னு டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுங்க” என்று எழுந்திட,
நந்தேஷ், “அப்போ அடுத்த வாரம் நடக்கப்போற கல்யாணத்தை நிறுத்த சொல்லிடலாமா?” எனக் கேட்டான்.
“நோ. அது எப்பவும் போல நடக்கட்டும். பட் ஃபுல் போலீஸ் ப்ரொடெக்ஷன்ல என் கண் பார்வைல எல்லா ஏற்பாடும் செய்ங்க. லைக் கேட்டரிங், டெக்கரேஷன் பிளா பிளா இது எல்லாமே யார் யார்கிட்ட கான்டராக்ட் எடுக்குறீங்கன்னு எனக்குத் தெரியணும். எப்படியும் எப்பவும் குடுக்குற இடத்துல தான எல்லாமே ஏற்பாடு செய்வீங்க?” எனக் கேள்வியுடன் நிறுத்த, நந்தேஷ் விழித்தான்.
ஷைலேந்தரி தான், “அது… ரோஜாவோட கல்யாணத்து அப்போ மட்டும் வேற கேட்டரிங் தான் புக் பண்ணுனோம்” என்றதில் விஸ்வயுகா, அவளையும் நந்தேஷையும் மூக்கு விடைக்க முறைத்தாள்.
“என்னைக் கேட்காம எதுக்கு புது கான்டராக்ட் எடுத்தீங்க” எனப் பல்லைக் கடிக்க,
“எனக்கு சத்தியமா தெரியாது விஸ்வூ உன் அண்ணன் பார்த்த வேலை தான் அது” என்றதில், நந்தேஷ் வேகமாக “அது… வந்து விஸ்வூ ரோஜாவுக்கு நார்த் இந்தியன் புட் தான் பிடிக்கும். அதான் நார்த் சைட் ஸ்பெஷலிஸ்ட்டா புக் பண்ணேன்” என்று விட்டு எச்சிலை விழுங்க,
“எனக்கு வர்ற கோபத்துக்கு…” என்று பல்லைக்கடித்து அவனை அடிக்க எண்ணி கையை கட்டுப்படுத்திக் கொள்ள, ஷைலேந்தரி தான், “ஏண்டா அண்ணா இதுவரை எனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு வாங்கி குடுத்து இருக்கியா?” என வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“நீ தான் என்ன குடுத்தாலும் தின்பியே. அதை வேற எதுக்கு கேட்டுக்கிட்டு” என்றதில், “பாயிண்ட்டு தான்” எனத் தீவிரத்துடன் பதில் அளித்தான் மைத்ரேயன்.
“அடேய் மைதா” என ஷைலேந்தரி அவனை அடிக்கப்போக, “உங்க ட்ராமாவை ஸ்டாப் பண்றீங்களா?” என்று கண்டனத்துடன் கர்ஜித்தான் யுக்தா சாகித்யன்.
கையில் இருந்த பைலை தூக்கி எறிந்து விட்டு, “லாஸ்ட்டா மர்டர் நடந்த ரெண்டு கல்யாணத்துக்கும் என்ன என்ன ஏற்பாடு செஞ்சீங்க, யார் மூலமா செஞ்சீங்கன்னு புல் டீடெய்ல் எனக்கு ஈவ்னிங்குள்ள வந்துருக்கணும். பீடா கான்டராக்ட் கூட மிஸ் ஆகிருக்கக் கூடாது… இன்னும் ஒரு டெத் உங்க மேட்ரிமோனி லிங்க் ஆகி நடந்தா கூட, உங்க நாலு பேரோட கேரியர், லைஃப் எல்லாம் மொத்தமா காலி…” என்று கையால் சைகை செய்து அழுத்தம் திருத்தமாகக் கூறியதில் நால்வரின் முகமும் விளக்கெண்ணெய் குடித்தது போல கசந்து போனது.
அத்தனை நேரமும் முகத்தில் தீவிரத்தை ஏற்றி இருந்தவன் கிளம்பும் போது மட்டும் “சீ யூ சூன் ஏஞ்சல்” என்று விஸ்வயுகாவின் கன்னத்தைத் தட்டி விட்டுச் சென்றான்.
அதனைக் கூட உணராமல் சிலையாகி நின்றிருந்தவளை மைத்ரேயனின் குரல் தான் அசைத்தது.
“உன்னை எதுக்கு அவன் தொட்டுத் தொட்டுப் பேசுறான். அவன் கையை வெட்டிப் போடுற அளவு…” என்று கத்த வரும்போதே, “க்கும்” என்ற யுக்தாவின் குரல் கனைக்கும் சத்தம் கேட்டு வார்த்தையை தொண்டைக்குள் விழுங்கி கொண்டான்.
“என்ன வெட்ட போற?” எனக் காதை இரு விரல்களால் சொறிந்தபடி யுக்தா கேட்க, ஷைலேந்தரி தான் அவசரமாக “இந்த கேஸ் நல்லபடியா முடிஞ்சுட்டா உங்களுக்காக ஆடு கையை வெட்டி விருந்து வைக்கப்போறேன்னு சொல்லிட்டு இருந்தான் சார்… அதை முழுசா பேசுறதுக்குள்ள ஹா ஹா நீங்க வந்துட்டீங்க ஹீ ஹீ…” என கேவலமாக சமாளிக்க,
“ஆடுக்கு கை இருக்காடி” என்ற முக்கிய சந்தேகத்தை முன்வைத்தாள் விஸ்வயுகா.
“ரொம்ப முக்கியம்… இவனுங்க அடிச்சுட்டு உருள கூடாதேன்னு வாய்க்கு வந்ததை சொன்னேன்டி. செத்த சும்மா இரு”
நந்தேஷ் வேகமாக, “உங்க கண்ணாடியை மறந்துட்டீங்க அதான…” என மேஜை மீதிருந்த கண்ணாடியை மரியாதையாக எடுத்து யுக்தாவிடம் கொடுத்ததில்,
“காலைல தான் இவனைக் கழுவி ஊத்துனான். இப்ப எப்படி பம்முறான் பாரேன். பரதேசி” என்று தமையனை விஸ்வயுகா கழுவி ஊத்த, “எல்லாம் பயம் செய்யும் மாயம்” என்று நக்கலடித்தான் மைத்ரேயன்.
கண்ணாடியை வாங்கி ஸ்டைலாக போட்டுக்கொண்ட யுக்தா, “யூ…” என மைத்ரேயனின் முன் ஒற்றை விரலை நீட்டி, “வாய் பத்திரம்” என்று எச்சரிக்கையுடன் கண்டித்து விட்டுச் சென்றான்.
“இவனை…” என எகிறப்போன மைத்ரேயனைப் பிடித்த விஸ்வயுகா, “அதான் போய்ட்டான்ல விடு…” என்றாள்.
“இருந்தாலும் நீ அவன்கிட்ட ரொம்ப இறங்கிப்போற விஸ்வூ. இவன் ஒருத்தன்தான் இருக்கானா பிரச்சனையை சால்வ் பண்ண. அவன் சொல்றதை நீ ஏன் கேட்கணும்?” என்று அந்தக் கோபத்தை விஸ்வயுகாவிடம் காட்டினான்.
அதற்கு பதில் கூறாதவள், “இப்ப கேஸை சால்வ் பண்றது தான் முக்கியம் மைதா. அதைப் பார்க்கலாம்” என்று திட்டவட்டமாக உரைத்ததில், “பாக்குறேன்… அவனுக்கு நீ எவ்ளோ இடம் குடுக்கப் போறன்னு” என விடாமல் பொறிந்தான்.
ஷைலேந்தரி, “அவள் என்ன வேணும்னேவா செய்றா. அவன் விடாக்கொண்டான் கடாக்கண்டனா இருக்கான். அவன் வழில போய் அவனை மடக்க நினைக்குறா… வேற அவனை எப்படி ஹேண்டில் பண்றது மைதா” என்று சமாதானம் செய்ய,
“இல்ல ஷைலா. எனக்கு என்னமோ இதெல்லாம் நடக்கும்னு தோணல. இவளை யூஸ் பண்ணிக்கப் பாக்குறான். அது கூட இவளுக்குப் புரியாம…” என்று பேசி முடிக்கும் முன்னே, “அது கூட புரியாத அளவு நான் முட்டாள் இல்ல மைத்ரா” என்றாள் கண்டிப்புடன்.
அவள் முகமே சினத்தில் சிவந்திருந்தது. நந்தேஷ் “மைதா என்ன இது?” என அதட்ட, அவனோ நிறுத்தவில்லை.
“அவன் இவளை ஏஞ்சல்னு கூப்புடுறதுல இவள் வீக் ஆகுறாளோன்னு எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு நந்து” என மனதில் இருப்பதை பளிச்செனக் கூறி விட,
“ஜஸ்ட் ஸ்டாப் இட் மைத்ரா. அவன்கிட்ட நான் வீக் ஆகிடுவேனா? நெவர்… நான் எதுக்காக அவன் சொல்றதை கேட்குறேன்னு உனக்கே தெரியும் தெரிஞ்சுக்கிட்டே இப்படி உளறாத” என்றதில், அவனும் அமைதியாகி விட்டான்.
“சரி சரி இப்ப இந்த ஆர்க்குமெண்ட் தேவையா? ஆக வேண்டியதை பேசுங்க” என்று ஷைலேந்தரி பேச்சை மாற்றி விட, நந்தேஷ் யோசனையுடன் “கைஸ்… எனக்கு ஒருத்தன் மேல டவுட் இருக்கு” என்றான் தீவிரத்துடன்.
மற்ற மூவரும் அவனைப் புரியாமல் பார்க்க, “நரேஷ். நம்ம அத்தைப்பொண்ணு அபர்ணாவோட எக்ஸ் லவர்!” என்று நிறுத்தியதில் விஸ்வயுகாவிற்கும் பொறி தட்டியது.
“இந்த லவ்வர்ஸ்னாலே பிரச்சனை தான். அதுலயும் எக்ஸ்னா ஓவர்டைம் ப்ராப்ளம் போல இருக்கே. இப்ப அந்த நரேஷ் எங்க இருப்பான்?” எனக் கேட்க,
“அபர்ணா டெத்துக்கு அப்பறம் அவன் நார்த் சைட் போய்ட்டதா சொன்னாங்க விஸ்வூ” மைத்ரேயன் விளக்கம் கொடுத்தான்.
“அவனை முதல்ல பிடிக்கணும். இந்த டவுட்டை யுக்தாகிட்டயும் சொல்லி வைக்கலாம். ஷைலா நீ ப்ராப்பரா டாக்குமெண்ட் ரெடி பண்ணு. லாஸ்ட்டா நடக்க இருந்த ரெண்டு கல்யாணத்துக்கும் என்ன மாதிரி அரேஞ்மெண்ட்ஸ் பண்ணோம்னு க்ளியரா இருக்கணும். பாஸ்ட்” என்றதில், ஷைலேந்தரியும் நந்தேஷும் பரபரப்பாக வெளியில் சென்றனர்.
மைத்ரேயன் வெளியில் செல்லாமல் அங்கேயே நிற்க, அவனை நிமிர்ந்து பாராமல் தன்னிடத்திற்குச் சென்று அமரப் போனவளைக் கைப்பற்றி நிறுத்தினான்.
“சாரி விஸ்வூ…” தணிந்த குரலில் அவன் மன்னிப்பு வேண்ட,
“என் லைஃப்ல லவ், மேரேஜ், கமிட்மென்ட் இது எதுக்கும் இடம் இல்லைன்னு எல்லாரையும் விட உனக்கு நல்லாவே தெரியும் மைதா. தெரிஞ்சும் நீ என்னை அவன்கூட லிங்க் பண்ணி பேசுறது ஹர்ட் பண்ணுது” என்றவளின் வார்த்தைகளில் வேதனையின் சாயல்.
“இதெல்லாம் உன் லைஃப்ல இருக்க கூடாதுன்றதுல எனக்கு உடன்பாடு இல்லை விஸ்வூ. ஆனா உனக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் அவன் பறிச்சுடுவானோன்னு பயமா இருக்கு. அவன்கிட்ட கேர்ஃபுல்லா இரு. மனுஷனைக் கொத்துற கழுகு மாதிரி இருக்கு அவன் பார்வை.”
“ஐ நோ. நான் அவனை ஹேண்டில் பண்ணிப்பேன் மைதா. என்னோட ஒரே நோக்கம், இந்த பிரச்சனைல இருந்து வெளில வர்றதும், மொத்தமா எல்லா பிரச்சனையையும் முடிச்சு விடுறதும் தான். எல்லாம் முடியவும் அவனோட திமிரையும் எப்படி கட் பண்றதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். யூ ஜஸ்ட் ஸ்டே காம். அவனைக் கைக்குள்ள போடணும்ன்னா கொஞ்சம் ப்ளர்ட் பண்ணவும் கத்துக்கணும். அவனை மாதிரி!” என்றவளின் இதழ்களில் இகழ்ச்சிப் புன்னகை.
“இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு விஸ்வூ. இனி இந்த மாதிரி உன்கிட்ட பேசவே மாட்டேன். சாரி” என மூக்கைச் சுருக்கி பணிந்திட, அவன் தோளில் தட்டியவள் “போடா போய் வேலையைப் பாரு” என்று புன்சிரிப்புடன் அனுப்பி வைத்தாள்.
அவன் சென்ற சில நொடிகளில் அந்த சிரிப்பு மறைந்து கம்பீரம் மீண்டது.
—–
“சிவகாமி…” மோகன் மனையாளை யோசனையுடன் அழைத்தார்.
கையில் ஒரு கோப்பு வைத்து சோதித்துக் கொண்டிருந்த சிவகாமி தனது அரக்கு நிற பட்டுப்புடவையின் முந்தானையை கையில் எடுத்தபடி “சொல்லுங்க” என்க,
“விஸ்வாவோட கல்யாணத்தைப் பத்தி உங்கிட்ட பேசணும்னு நினைச்சேன்” என்றார்.
சட்டென அவர் விழிகள் கூர்மையடைய, “நானும் யோசிச்சேன். ஆனா…” என இழுத்தார் சிவகாமி.
“இப்படியே யோசிச்சுட்டு இருந்தா ஆகாது சிவகாமி. நம்ம தான் ஏதாவது செய்யணும். மைத்ரா வீட்ல பேசலாமா?” பட்டென உடைத்தார் மோகன்.
“ம்ம் பேசிடலாம்” என்று பேசும்போதே அங்கு காயத்ரி வந்தார்.
“இருந்தாலும் விஸ்வாகிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுக்கோங்க அக்கா” என்று முயன்று வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் கூற,
“அவள்கிட்ட என்ன கேட்கவேண்டியது இருக்கு. இதான் என் முடிவு. அவள் அதுக்கு கட்டுப்பட்டு தான் ஆகணும்” என்றார் சிவகாமி.
அதில் முகம் கறுத்த காயத்ரி, “நீங்க சொன்னா சரி தான்” என்று விட்டு அவர் அறைக்குச் சென்று கோப பெருமூச்சுகள் விட்டார்.
மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த அசோக்கிடம் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார் காயத்ரி.
“என்னங்க நினைச்சுட்டுருக்கா அந்த சிவகாமி? மைத்ரேயன் நம்ம பார்த்து வளர்ந்த பையன். இப்போ பிஸினஸ்லயும் தலையைக் குடுத்து விஸ்வா நடத்துற பிசினஸ்க்கே முதுகெலும்பா இருக்கான். அவனும் ஷைலுவும் செஞ்ச ‘ஆப்’ ரீச் ஆகி தான விஸ்வாவுக்கு பிசினஸ் பிக் அப் ஆச்சு. என் பொண்ணு காலேஜ் டாப்பர். அவள் ஆவரேஜா படிச்ச விஸ்வாவுக்கு கீழ வேலை பார்க்குறா. மைத்ராவும் கூட வெறும் எம்.டி தான் அங்க.
எப்பவும் குடும்பத்தோட குடுமி உங்க அண்ணன் குடும்பத்தோட கைல தான் இருக்குமா. வீட்ல தான் இந்த நிலைமைன்னு பிஸினஸைத் தனியா பார்த்துட்டு இருக்கோம். இப்ப என்னனா நம்ம பொண்ணுக்கும் இதே பிரச்சனை. அதுவும் இல்லாம மைத்ராவை நான் ஷைலுவுக்கு தான் மேரேஜ் பண்ணி வைக்க நினைச்சேன். அதை பத்தி நான் பேசுறதுக்கு முன்னாடியே புருஷனும் பொண்டாட்டியும் அவங்களா ஒரு முடிவு எடுத்துக்கிட்டாங்க… இதுக்கு மேலயும் என்னால பொறுக்க முடியாது. கல்யாணம் ஆகி வந்த நாள்ல இருந்து, குடும்பம் பிரிய கூடாது மண்ணாங்கட்டின்னு அந்த சிவகாமி ஆடுற ஆட்டத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டேன். இப்போ என் பொண்ணோட பியூச்சர் அஃபெக்ட் ஆகுறதை நான் வேடிக்கை பார்க்க முடியாது” என்று மூச்சு வாங்க பொங்கி எழுந்தவரை கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டிருந்தார்.
“உன் வருத்தம் எனக்குப் புரியுது காயு. ஷைலுவும் மைத்ராவும் ஆப் பண்ணுனாங்க. ஒதுக்குறேன். ஆனா அதுக்கான மூலக்கரு, ஐடியா எல்லாமே விஸ்வாவோடது தான. அவங்களுக்குள்ள இருக்குற ஒற்றுமையை நம்ம ஏன் குலைக்கணும்” என அசோக் பேசி முடிக்கும் முன் காயத்ரி வெடித்தார்.
“அதான, உங்க அண்ணன் குடும்பத்தை விட்டுக்கொடுப்பீங்களா. மாட்டீங்களே… ச்சை…”
“கொஞ்சம் நிதானமா யோசி காயு. மைத்ராவும் விஸ்வாவும் தான் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ். அவங்க கல்யாணம் பண்ணிக்கிறது சரி தான?”
“ம்ம்க்கும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு, நம்ம பொண்ணோட உழைப்பையும் வாங்கிகிட்டு ரெண்டு பேரும் அவளை துரத்தி விட்டுடுவாங்க. இந்தப் பேச்சே வேணாம். மைத்ரா ஷைலுவை தான் கல்யாணம் பண்ணிக்கனும். பொறுப்பான அப்பாவா அதுக்கு என்ன வழியோ அதை பண்ணுங்க.”
திட்டவட்டமாக மனைவி கூறி விட்ட பின்பு செய்வதறியாமல் தவித்துப் போனார் அசோக்.
இங்கோ, வி. யூ மேட்ரிமோனி ஆரம்பித்த நாள் முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் தொகுத்து, யுக்தா கேட்ட தகவல்களை எல்லாம் திரட்டினர்.
அப்போதுதான் ஏதோ தோன்ற மைத்ரேயன், “விஸ்வூ இங்க பாரேன்… ரோஜா கல்யாணத்துக்கு கேட்டரிங் எடுத்த கான்டராக்ட் நேம் ‘நரே கேட்டரிங்’னு போட்டு இருக்கு” என்று காட்ட, “அதுக்கு என்ன இப்ப?” அவளுக்கு முன் ஷைலேந்தரி கேட்டாள்.
“ப்ச், ஹே உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சா? அபர்ணாவோட எக்ஸ் லவர் நரேஷ் அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி கேட்டரிங் முடிச்சு இருந்தான். அண்ட், நார்த் டிஷ் எல்லாம் நல்லா செய்வான்னு ஒரு தடவை அபர்ணா கூட சொல்லிட்டு இருந்தாளே…” என்றதும் தான், நந்தேஷ் “கரெக்ட் மைதா. ஆனா இது அவன்னு சொல்றியா?” என்றான் சந்தேகமாக.
“கண்டிப்பா. அவன் போட்டோஸ் ஏதாவது இருக்கா?” என விஸ்வயுகாவிடம் கேட்க,
“ம்ம்க்கும் செத்துப்போன என் அத்தைப் பொண்ணு அபர்ணா போட்டோவே இல்ல. இதுல அவ ஆளோட போட்டோவை நான் ஏன்டா வச்சுருக்க போறேன்” என்றாள் நக்கலாக.
ஷைலேந்தரியும் “பட் எனக்கும் மைதா சொன்ன மாதிரி இவன் அவன் தான்னு தோணுது. இந்த நரேஷ் தான் சீரியல் கில்லரா மாறி நமக்கு ஆட்டம் காட்டுறானோ?” என யோசிக்க,
விஸ்வயுகா, “கைஸ் கைஸ்… அவனை நான் ஒரு ரெண்டு மூணு டைம் பார்த்து இருக்கேன். ஆனா அந்த மூஞ்சி சீரியல் கில்லரா மாறுறதுக்கு எல்லாம் வாய்ப்பு இருக்குறமாதிரி தெரியலையே. அண்ட், அவனோட பிரேக் அப் ஆனதுக்கு அப்பறம் தான் அபர்ணா நம்ம மேட்ரிமோனி ப்ரொபைல செலக்ட் பண்ணுனா, அப்படி பார்த்தா கூட அவள் அவனை ஏமாத்துன மாதிரி ஆகாதே. மோட்டிவ் க்ளியரா இல்லாத பீல் மைதா” என்றிட,
“இந்த மோட்டிவ் மொட்டை வெயில் எல்லாம் நமக்கு எதுக்குடி. இந்தக் கருமத்தை அப்படியே சிபிஐக்கு பார்வர்டு பண்ணுவோம். அவன் மீதியைக் கண்டுபிடிக்கட்டும். நம்மளே சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்கிறதுக்கு அவனை எதுக்கு கவர்மெண்ட் சம்பளம் குடுத்து வச்சுருக்கு…” என அசட்டையாகக் கூறினாள் ஷைலேந்தரி.
“அதுவும் சரி தான். இரு அவனுக்கு போன் பண்றேன்” என்று வேகமாக விஸ்வயுகா போனை எடுத்து யுக்தாவிற்கு அழைக்க, எதிர்முனையில் உடனே அவன் அழைப்பை ஏற்றான்.
“சொல்லு ஏஞ்சல்.”
“எங்க இருக்க?”
“ஒரு முக்கியமான ஆபரேஷன்ல”
“ஹான்… ஆபரேஷனா. நீ சிபிஐ தான என்னமோ பைல்ஸ் ஆபரேஷன் பண்ற டாக்டர் மாதிரி பேசுற. நான் இப்ப உன்னைப் பார்க்கணும். ஒரு இம்பார்ட்டண்ட் மேட்டர்” என்றாள் தீவிரத்தன்மையுடன்.
“என்னைப் பார்க்க எதுக்கு பெர்மிஷன் எல்லாம்… லொகேஷன் சென்ட் பண்றேன். கம் பாஸ்ட் ஏஞ்சல்” என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட, ‘என்னமோ இவன்கூட ரொமான்ஸ் பண்ண வரப்போறது மாதிரி கிசுகிசுன்னு பேசுறான் மெண்டல் பைய…’ எனத் தனக்குள் முணுமுணுக்கும்போதே, அவன் லொகேஷனும் அனுப்பி இருந்தான்.
அவளது அலுவலகத்தில் இருந்து வெறும் ஐந்து நிமிடமே காட்டியது.
ஷைலேந்தரியோ “இவன் ஹாட்ஸ்பாட் மாதிரிடி. எங்க இருந்தாலும் ஈஸியா வைஃபை ஆக்சஸ் பண்ணலாம்” என்று வாய் விட்டு சிரிக்க, மற்ற மூவரும் அவளை முறைத்து வைத்தனர்.
“நல்ல ஜோக் தான. நல்லா இல்லையா” என்று அசடு வழிந்தவளை தலையில் அடித்து இழுத்துச் சென்றனர்.
நெடுஞ்சாலையில் எதிரெதிரில் உணவகங்கள் இருக்க, வாகனங்கள் அதீத வேகத்தில் கடந்து கொண்டிருந்தது.
“நம்ம ஆபிஸை தாண்டுனா ஹை வே தான் இருக்கு. இங்க என்ன பண்றான் இவன்” என்றபடி காரை ஒரு ஹோட்டலுக்கு அருகில் பார்க் செய்தவள், “இருங்கடா அந்த பைத்தியம் எங்கன்னு பார்த்துட்டு வரேன்” என்றபடி கீழே இறங்கினாள் விஸ்வயுகா.
கூடவே கரங்கள் தானாக அவனுக்கு போன் செய்தது.
“வந்துட்டியா ஏஞ்சல்?” இன்னும் அவன் கிசுகிசுப்பாகவே பேச,
“நீ எங்க இருக்க” என எதிர்கேள்வி கேட்டாள்.
“உன்னை சுத்தியே தான் இருக்கேன்…” கிறக்கமாக வந்த குரலில் அலெர்ட் ஆனவள், “செத்து கித்து ஆவியாகி எதுவும் சுத்திட்டு இருக்கியாடா. உன் பேச்சும் டோனும் சரி இல்ல. வாய்ஸ் மட்டும் தான் வருது ஆளையும் காணல. உன் செகண்ட் ஹவுஸ் காருக்குள்ள உன் கேர்ள் பெஸ்டி கூட கசமுசா பண்ணும்போது லாரி எதுவும் அடிச்சு தூக்கிடுச்சாடா” என்றாள் ஐயத்துடன்.
“சேச்சே… இப்போதைக்கு என் கேர்ள் பெஸ்டி நீ தான் ஏஞ்சல். இன்னும் தான் நமக்குள்ள எதுவும் நடக்கலயே” என்ற ஏக்கப் பெருமூச்சுடன் கூறியவன், அவள் காட்டத்துடன் பேச வரும்போதே, “சரி அதை விடு. உனக்குப் பக்கத்துல இருக்குற ஹோட்டல் வாசல்ல, சிவப்பு கலர் சட்டையும் ப்ளூ கலர் பேண்டும் போட்டு ஒருத்தன் சிகரெட் பிடிச்சுட்டு இருக்கானா?” எனக் கேட்டான்.
அவளும் ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு, “ஆமா இருக்கான்” என்றிட,
“சரி அவன்கிட்ட போய் டைம் என்னன்னு கேட்டு பேச்சுக்குடு” என்றான் கட்டளையாக.
“வாட்… வை மீ? கண்ட நாய்கிட்ட நான் ஏன்டா போய் பேசணும் அண்ட் மோர் ஓவர், கைல ஸ்மார்ட் வாட்ச் இருக்கு, போன் இருக்கு டைம் பார்க்க. அதை விட்டுட்டு அவன்கிட்ட போய் கேட்க எனக்கு என்னை உன்னை மாதிரி பைத்தியமா?”
“ப்ச் சரிய்ய்ய்ய்… ஏதாவது அட்ரஸ் கேளு”
“அட்ரெஸை அவன்கிட்ட எதுக்கு கேட்கணும். எனக்கு சென்னைல எல்லா இடமும் அத்துப்படி. அப்படியே வேணும்னாலும் மேப் போட்டுப்பேன்”
அவளும் அவன் பேசும் அனைத்திற்கும் எதிர்பேச்சு பேச, “இப்ப நான் சொல்றதை செய்யல. என் டீம் காருக்குள்ள இருக்குற மூணு பேரையும் அள்ளிட்டுப் போய்டும்…” என்றான் மிரட்டலாக.
பற்களை நறநறவெனக் கடித்தவள், “செஞ்சு தொலைக்கிறேன்…” என்று கரித்து கொட்டியபடி, யுக்தா அடையாளம் கூறிய நபருக்கு அருகில் சென்றாள்.
“ஹலோ… உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே” எனப் பேச தொடங்க, அவன் திருதிருவென விழித்தான்.
அவளோ விடாமல், “நீங்க சென்னை தானா?” என்று கை கொடுக்க வர, அவனும் கை கொடுத்துப் பேச வந்தான்.
ஆனால், பாதியிலேயே எங்கிருந்தோ வந்த யுக்தாவின் புல்லட்டுகள் அவனது பின்னந்தலையைப் பதம் பார்த்திருக்க, கை கொடுக்கும் முன்னே அவனது உயிர்ப்பறவை பிரிந்து தரையில் சரிந்தான்.
விஸ்வயுகாவிற்கு பேச்சும் மூச்சும் நின்று விட, சில நொடிகள் அதிர்வின் தாக்கத்தில் இருந்தவள் “ஆஆஆ” எனக் கத்தி மயங்கியே விழுந்து விட்டாள்.
“அய்யயோ! ஏஞ்சல் ஏஞ்சல் எந்திரியேன் என்னைப் பாரு” என்று யுக்தா ஓடி வந்து கையோடு கொண்டு வந்த பாட்டில் நீரால் அவள் முகத்தை நனைக்க, மெல்லக் கண் விழித்தவள், யுக்தாவின் மடியில் படுத்திருப்பதையும் தனக்கு அருகில் இன்னும் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன மனிதன் அவளையே பார்ப்பது போல இருந்ததையும் கண்டு, துள்ளி அலறி யுக்தாவின் கழுத்தையே இறுக்கமாகக் கட்டிக்கொள்ள, அவனது முரட்டு அதரங்களில் மென்புன்னகை வீற்றிருந்தது.
மோகம் வலுக்கும்
மேகா
சம்பவம் பண்ணினால் கட்டிபிடிப்பாள் இவளை சம்பவம் பண்ண எடுத்து வரச் சொன்னான் போல.