Loading

அத்தியாயம் 13

 

துவாரகா தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டு குளியலறையை வெளியே வந்தாள்.

 

வரும்போதே, ‘பக்கத்துல வரட்டும் மூஞ்சிலேயே பன்ச் விடுறேன்.’ என்று எண்ணிக் கொண்டே வந்தவளுக்கு ஏமாற்றமாகிப் போனது, அவளவனை அங்கு காணாமல்!

 

மூடியிருக்கும் பால்கனி கதவை தாண்டியும் அவனின் குரல் மிக மெலிதாக கேட்க, பார்வையை அங்கு திருப்பினாள் பாவை.

 

அங்கு முகம் முழுக்க கோபம் தாண்டவமாட, மிக உக்கிரமாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்த மயூரனைக் கண்டு ஒருநொடி பயந்து தான் போனாள் அந்த மயூரனின் மனைவி.

 

இதுவரை அவனின் இந்த ரூபத்தை அவள் கண்டதில்லையே!

 

‘இவனை தான் பன்ச் பண்ணுவேன்னு நீ சொன்னியா?’ என்று நேரம் காலமில்லாமல் அவளின் மனம் கேலி செய்ய, அதை அடக்கியவளுக்கே, ‘உண்மையிலேயே இவனை தான் நான் லவ் பண்ணேனா? ஒருவேளை, ட்வின்ஸா இருப்பாங்களோ. இல்லன்னா, என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டானோ?’ என்றெல்லாம் சந்தேகம் வந்து விட்டது.

 

கன்னத்தில் கைவைத்து சிந்தித்தவள், ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கி விட்டாள்.

 

அவளின் சிந்தனையை நிறைத்த நாயகனோ அங்கு காரசாரமாக அவன் தாத்தாவிடம் விவாதித்துக் கொண்டிருந்தான்.

 

*****

 

அன்று… 

 

மயூரனின் திருமண விஷயத்தை கார்த்திகேயன் சக்கரவர்த்தியிடம் கூறிய தினமே, சக்கரவர்த்தி மயூரனை அழைத்து விட்டார்.

 

“மயூரா… இந்த கார்த்தி என்னென்னவோ சொல்றானே. அதெல்லாம் உண்மையா?” என்று பதற்றத்துடன் அவர் வினவ, ஒரு பெருமூச்சுடன், “அவன் சொன்னதை அப்படியே நம்பணும்னு நீங்க நினைச்சா, அது உங்க விருப்பம் தான் தாத்தா.” என்று பொடி வைத்து பேசினான் மயூரன்.

 

அதை சரியாக புரிந்து கொள்ளாத அந்த முதியவரோ, “அதான பார்த்தேன்… என் பேரன் என்னை கேட்காம கல்யாணம் பண்ணுவானா? நீ என்ன மத்தவங்க மாதிரியா?” என்று அவர் பேசிக் கொண்டே போக, பல்லைக் கடித்த மயூரனோ, “எனக்கு கல்யாணம் நடக்கப் போறது என்னவோ உண்மை தான். ஆனா, வேறெதாவது எக்ஸ்டிரா பிட்டை உங்க மூத்தப் பேரன் போட்டுருப்பானே, அதை தான் யோசிச்சு நம்ப சொன்னேன்.” என்று தாத்தாவின் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை இட்டான் பேரன்.

 

“மயூரா என்ன சொல்ற? உனக்கு கல்யாணமா? எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. இப்போ கூட கார்த்தி சொல்லி தான் தெரிய வந்துருக்கு.” என்று விரக்தியாக பேச ஆரம்பித்தவர், “கார்த்தி சொல்லலன்னா, நீ சொல்லியிருக்கவே மாட்டேல?” என்று சற்று கோபத்துடன் கேட்டார்.

 

“சொல்லியிருந்தா மட்டும் சந்தோஷமா வந்து வாழ்த்தி இருப்பீங்களா?” என்று மயூரன் காட்டமாக வினவ, “ஏற்கனவே, இப்படி தான் ஒருத்தி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணி மானத்தை வாங்குனா. இப்போ நீயா?” என்று பேரனுக்கு சற்றும் குறையாத கோபத்துடன் சக்கரவர்த்தியும் வினவினார்.

 

“உங்க மானம் என்னால போகக் கூடாதுன்னு தான் இவ்ளோ தூரம் தள்ளி இருக்கேன் தாத்தா. சோ, திரும்ப என்னை அங்க வர சொல்லாதீங்க. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா, அது அவ கூடத்தான்.”  என்று கத்திவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.

 

அதன்பிறகு, இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

 

மீண்டும், இன்று தான் மயூரனுக்கு அழைத்திருந்தார் சக்கரவர்த்தி.

 

முதலில் அவரின் அழைப்பை ஏற்க தயங்கினான் மயூரன். இடைப்பட்ட நாட்களில், தாத்தாவின் மீதான கோபமும் சற்று அதிகரித்திருந்ததும் ஒரு காரணம்.

 

இருப்பினும், அவரின் தொடர் அழைப்புகளை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

அழைப்பை ஏற்றவன் அமைதியாக இருக்க, “மயூரா, கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று மறுமுனையில் சக்கரவர்த்தி வினவ, “ஏன், இந்நேரம் உங்க மூத்தப் பேரன் எதுவும் சொல்லலையா? இல்ல, அவன் என்னை கண்காணிக்க வச்ச ஆளுங்க அவனுக்கு தகவல் தரலையா?” என்று நக்கலாக வினவினான் மயூரன்.

 

“ம்ச் மயூரா, நான் என்ன கேட்டேன், நீ என்ன சொல்ற?” என்று விரக்தியாக கேட்டவர், சிறு இடைவெளி விட்டு, “இங்க எப்போ வர மயூரா?” என்று தயக்கத்துடன் வினவினார்.

 

அதற்கும் நக்கல் சிரிப்பை உதிர்த்த மயூரன், “அதான பார்த்தேன், உங்களுக்கு உங்க வேலை ஆகணும். அதுக்கு தான இந்த போலி விசாரிப்பு?” என்று கேட்க, “போலி விசாரிப்பு எல்லாம் இல்ல மயூரா. உண்மையான அக்கறையோட தான் கேட்குறேன்.” என்ற சக்கரவர்த்தியின் குரலில் சோர்வு எட்டிப் பார்த்து.

 

“அக்கறையா? இந்த அக்கறை அன்னைக்கு மட்டும் ஏன் இல்லாம போச்சு? இன்னைக்கு இந்த குடும்பம் இப்படி இருக்க காரணம் நீங்க தான். அதுக்கான தண்டனையா இதை நினைச்சுக்கோங்க. நான் அங்க வரமாட்டேன்.” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

 

சில நாட்களுக்கு முன்னர், சக்கரவர்த்தியிடம் அங்கு வருவதாக சொல்லிய மயூரனின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்னவோ?

 

அவன் மட்டுமே அறிந்த ரகசியம் அது!

 

அழைப்பை துண்டித்த பின்னரும் கோபம் அடங்கவில்லை மயூரனுக்கு. நடந்து முடிந்த சம்பவங்களை எண்ணிப் பார்த்தவனின் மனம் சாந்தமடைய மறுத்தது.

 

அதெல்லாம் தன்னை மறந்து உறங்கியிருந்த துவாரகாவை பார்க்கும் வரையில் தான்.

 

அவளைக் கண்டதும் தானாக அவன் உதட்டில் புன்னகை மலர, அவளை சரியாக படுக்க வைத்தவன், “நீ என்னை இவ்ளோ பாதிச்சுருக்கன்னு இப்போ தான் புரியுது. இல்லன்னா, உன்னை வேண்டாம்னு சொன்னாலும், நீ கொடுத்த கிஃப்ட்ஸ் எல்லாத்தையும் தூக்கி போடாம சேர்த்து வச்சுருக்க மாட்டேன். லவ்ல நான் கொஞ்சம் வீக் தான் போல.” என்று மென்குரலில் அவளின் உறக்கத்தை கலைக்காத வண்ணம் பேசினான்.

 

மேலும், “உஃப், உன்னை அவாயிட் பண்ணனும்னு நினைச்சு நினைச்சே… உன்னை நினைச்சுட்டே இருந்துருக்கேன் போல! ஹ்ம்ம், கடைசி வரைக்கும் அவாயிட் பண்ணவே முடியல. அப்போ நீ விடல, இனிமே நான் விடமாட்டேன்!” என்று தீர்க்கமாக கூறியவன், அவள் முகத்தை மறைத்த குழலை எடுத்து காதோரம் ஒதுக்கி விட்டான்.

 

“எதனால இந்த பாதிப்புன்னு இந்த கொஞ்ச நாளா தெரியாம தவிச்சுட்டு இருந்தேன். அதுக்கும் இப்போ பதில் தெரிஞ்சுடுச்சு. ஏன்னா, நீ என் குட்டிம்மா!” என்று அவளின் நாடியை பற்றிக் கொஞ்சியவன், அவள் முகம் சுருக்குவதை உணர்ந்து, அதற்கு மேலும் பேசி அவள் உறக்கத்தை கெடுக்க விரும்பாமல், அவளருகே சற்று இடைவெளி விட்டு படுத்துக் கொண்டான்.

 

*****

 

காலையில் அரக்கப்பறக்க திருமணத்திற்கு கிளம்பியது, அதன்பின்னான அலைச்சல், நடுவே கணவனானவனின் புரிந்து கொள்ள முடியாத திடீர் செய்கைகள் என்று சோர்ந்து போன துவாரகாவிற்கு, மதிய உணவிற்கு கூட விழிக்காத நீண்ட உறக்கம் தேவையாக இருந்தது.

 

ஐந்து மணி அடிப்பதற்குள், அவளின் வயிற்றில் மணியடிக்க ஆரம்பித்து விட, ஒருவழியாக விழிகளை மலர்த்தினாள் துவாரகா.

 

சற்று நேரத்தில் நடந்தவை, நடப்பவை, நடக்கப் போபவை அனைத்தும் தெளிவாகி விட, “அடச்சை, இப்படி தூங்கி வழிஞ்சுருக்கேன். அந்த திடீர் லவர்பாய் எதுக்கு திடீர் டெரர் பாயா மாறுனான்னு வேற தெரியலையே! இப்போ என்ன செய்ய?” என்று யோசிக்க ஆரம்பித்தவளை தடை செய்யும் விதமாக, வயிறு மீண்டும் ஒலியெழுப்ப, அதை சமாதானப்படுத்த அறையை விட்டு கீழிறங்கி சென்றாள்.

 

அங்கு கூடத்தில் கோபிநாத்தும் மயூரனும் ஏதோ தீவிரமாக உரையாடிக் கொண்டிருக்க, அவள் என்னவென்று கவனிக்கும் முன்னரே, அவள் வருவதை உணர்ந்து அமைதியாகி விட்டனர்.

 

அது அவளின் சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்தது.

 

“அப்பா, நான் வந்ததும் ஏன் பேசுறதை ஸ்டாப் பண்ணீங்க? என்ன பேசிட்டு இருந்தீங்க?” என்று அவள் உடைத்தே கேட்டுவிட, “சும்மா தான்டா துவா.” என்று மழுப்பிய கோபிநாத், “இவ்ளோ நேரமா தூங்குவ? மதியமும் சாப்பிடல. உன்னால மயூரனும் சாப்பிடல.” என்று பேச்சை மாற்றினார்.

 

அதில் தந்தையை முறைத்தவள், மறந்தும் கணவன் புறம் பார்வையை திருப்பாமல், “பசிச்சா சாப்பிட வேண்டியது தான? என்னமோ, நானில்லாம சாப்பிடக் கூடாதுன்னு பிடிச்சு வச்ச மாதிரி தான்.” என்று முணுமுணுக்க, அதற்குள் அவளின் வயிறு பசியின் அளவை அனைவருக்கும் தெரிவித்தது.

 

அதைக் கண்டு லேசாக சிரித்த கோபிநாத், “நீ மயூரனை கூட்டிட்டு வா துவாம்மா. நான் போய் எடுத்து வைக்க சொல்றேன்.” என்று அங்கிருந்து நகர, “அப்பா, இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல? இங்கயிருக்க டைனிங் ஹாலுக்கு நான் கூட்டிட்டு வரணுமா?” என்று சிணுங்கினாள் அவள்.

 

அதற்குள் அவளருகே வந்திருந்த மயூரனோ வழக்கம் போல அவளின் செவியருகே குனிந்து, “ஏன் கூட்டிட்டு போக மாட்டியா குட்டிம்மா?” என்று வினவினான்.

 

அதில் ஒருநொடி திகைத்த காரிகையோ, காதை தடவியபடி, ‘வரவர இதுவும் டேமேஜாகிட்டே போகுது போல!’ என்று நினைக்க, அவளின் மனநிலை யூகித்தவனோ, “அதெல்லாம் சரியா தான் வேலை செய்யுது. மத்தது எல்லாம் சரியா வேலை செய்யுதான்னு தான் டெஸ்ட் பண்ணனும்.” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட, அவள் தான் அவனின் இந்த அவதாரத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் அதிர்ந்து நின்றாள்.

 

“இப்போ என்னை குட்டிம்மான்னா கூப்பிட்டான்?” என்று வாய்விட்டே புலம்பியவளின் மனம் குழம்பிய குட்டையாகிப் போனது.

 

அடுத்து என்ன? மாப்பிள்ளைக்கு பெண்ணிற்கும் விருந்துபசாரம் தான்!

 

அதிலும் மாப்பிள்ளையை சற்று அதிகமாக கவனித்த தந்தையை முறைத்துக் கொண்டே விருந்தை முடித்தாள் துவாரகா.

 

சில நிமிடங்களில் பாஸ்கரும் கிஷோரும் மயூரனைக் காண வந்திருந்தனர்.

 

வந்தவுடன் பாஸ்கர் அலப்பறையை ஆரம்பித்து விட, அதில் மூழ்கிப் போன துவாரகாவிற்கு தந்தை மற்றும் கணவனின் ரகசிய பேச்சுவார்த்தை தற்காலிகமாக மறந்து தான் போனது.

 

“டேய் மச்சான், எப்படிடா இருக்க?” என்று வந்ததும் வராததுமாக மயூரனை கட்டிப்பிடித்து பாஸ்கர் விசாரிக்க, கிஷோர் தான் அவனை தடுக்க முயன்று கொண்டிருந்தான்.

 

“டேய் பாஸ்கி… விடேன்டா.” என்று முயன்று அவனிலிருந்து வெளிவந்த மயூரன், “எதுக்குடா இப்படி பண்ணிட்டு இருக்க?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வினவினான் மயூரன்.

 

பாஸ்கரின் செயலைக் கண்ட துவாரகாவோ, “க்கும், நாங்க என்ன அவரை கொடுமையா பண்ணிட்டோம்?” என்று கேட்க, “அட இது வேற செக்கிங் தங்கச்சி.  அவன் கொஞ்ச நாளாவே  சரியில்ல. திடீர் திடீர்னு என்னென்னமோ பண்றான். அதான்…” என்று பாஸ்கர் கூற, கிலுக்கிச் சிரித்தாள் துவாரகா.

 

“அடேய், இப்போ நிறுத்தப் போறீயா இல்லையா?” என்று மயூரன் கேட்க, “ஏன்? அண்ணா உண்மையை தான சொல்றாங்க.” என்று பாஸ்கரின் ஆதரவிற்கு வந்தாள் துவாரகா.

 

“அப்படி சொல்லுமா தங்கச்சி!” என்று ஆதரவு கிடைத்த சந்தோஷத்தில் பாஸ்கர் இருக்க, அவன் கரத்தை யாருமறியாமல் பிடித்து இறுக்கிய மயூரனோ, “தனியா மாட்டுவேல… அப்போ இருக்கு.” என்றான் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

‘தனியா சிக்குனா தானடா?’ என்று எண்ணிய பாஸ்கர் துவாரகாவோடு கதையளக்க ஆரம்பித்து விட்டான்.

 

“மயூரா, பாஸ்கர் இப்போ தான் சொன்னான். நீ ஊருக்கு போகப் போறீயாமே?” என்று கிஷோர் வினவ, பாஸ்கரிடம் பேசிக் கொண்டிருந்த துவாரகாவின் கவனம் மயூரனிடம் இருந்தது, அவன் கூறப்போகும் பதிலுக்காக!

 

“ஹ்ம்ம், போகணும்னு தான் நினைச்சேன் கிஷோர். ஆனா, இப்போ போக வேண்டாம்னு தோணுது.” என்று மயூரன் கூற, கோபிநாத்தின் முகத்தில் பிடித்தமின்மையின் சாயல் அப்பட்டமாக தெரிய, ‘ஓஹோ, இது தான் ரகசியமா? இந்த லவர்பாயோட ஊரு எது? எதுக்கு அங்க போக வேண்டாம்னு சொல்றான்? அப்பா எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணனும்?’ என்று வேறு சில கேள்விகள் அவளை ஆக்கிரமித்தன. 

 

*****

 

கார்த்திகேயன் ஏதோ யோசனையில் இருக்க, “ரிலாக்ஸேஷன்னு வந்துட்டு இன்னும் என்ன யோசனை?” என்றான் குமரகுருபரன்.

 

“ப்ச், இந்த மயூரனை நினைச்சு தான் என் யோசனை எல்லாம்! அவன் கல்யாணத்தை பத்தி சொன்னா, இந்த தாத்தா அவனை கண்டிச்சு குடும்பத்தை விட்டே வெளிய அனுப்பிடுவாருன்னு நினைச்சா, இன்னும் அப்படி எதுவும் செஞ்ச பாடில்லை. ரெண்டு பேரும் சேர்ந்து வேறெதோ பிளான் பண்றாங்களோன்னு எனக்கு தோணிட்டே இருக்கு.” என்றான் கார்த்திகேயன்.

 

கையிலிருந்த கோப்பையில் மதுக்குடுவையில் மீதியிருந்தவற்றை ஊற்றியவாறே, “கெழவனுக்கு என்னவாம்? அப்போ மட்டும் வீட்டை விட்டு அனுப்புனாரு. இப்போ பேரன் பாசம் தடுக்குதாமா? ஆமா, உன் இன்ஃபார்மர் கிட்ட கேட்க வேண்டியது தான?” என்றான் குமரகுருபரன்.

 

“கேட்கமலா இருப்பேன்? கல்யாணம் முடிஞ்சு அவன் அவனோட மாமனார் வீட்டுக்கு போயிட்டானாம்.” என்று கார்த்திகேயன் கூற, “அப்பறம் என்ன, அவனே அங்க செட்டிலாகிடுவான். ஃப்ரீயா விடு.” என்றுவிட்டு மதுவோடு மூழ்கி விட்டான் குமரகுருபரன்.

 

ஆனால், கார்த்திகேயனால் அப்படி எளிதாக விட முடியவில்லை.

 

மறக்க கூடிய சம்பவத்தையா மயூரன் செய்திருந்தான்?

 

கார்த்திகேயனின் கழுத்தில் காலை வைத்திருந்த மயூரன், “இங்க பாரு, உனக்கு வேணும்னா இது பணம் காய்ச்சுற தொழிலா மட்டும் தெரியலாம். ஆனா, எனக்கு இது என்னோட ஆத்மதிருப்தியை பூர்த்தி செய்யுற சர்வீஸ். இனிமே, இதுல ஏதாவது குளறுபடி நடந்துச்சு, உன்னை வாழ்க்கைல நீ பண்ண, பண்ணிட்டு இருக்க தப்புக்கெல்லாம் சேர்த்து வச்சு தண்டனை அனுபவிக்குற மாதிரி செஞ்சுடுவேன். நான் இங்க இல்லன்னு நினைச்சு ஏதாவது ஆட்டம் போட்டன்னு தெரிஞ்சுது… அது தான் உன்னோட லாஸ்ட் பீஸ்ஃபுல் டேவா இருக்கும்!” என்று நாக்கை மடக்கி சொல்லியது இப்போதும் நினைவுக்கு வந்து உடலெங்கும் குளிரை பரப்பியது.

 

அவனின் கவுரவத்திற்கு வந்த இழுக்கு என்பதால் அதனை வெளியே யாரிடமும் சொல்லவும் இல்லை கார்த்திகேயன்.

 

“அவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்.” என்று முணுமுணுத்துக் கொண்டே மதுவை வாய்க்குள் சரித்துக் கொண்டான்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்