சாரி ஃபார் லேட் அப்டேட் டியர்ஸ்… ஊருக்குப் போய்ட்டு சண்டே தான் வந்தேன். மன்னிச்சூ🙈 அண்ட் happy new year dears… 🥳🥳🥳 Elarukum reply panna mudiyala naa Konjam free agitu unga cmnts ku reply panren drs . 🥰🥰🥰🥰🥰🥰 Thank you sooo much alll 🩷🩷
கல்கத்தாவில் இருந்து சென்னைக்குத் திரும்பிய நேரம் மாலைப் பொழுதைக் கடந்திருந்தது. விமான நிலையத்திலேயே மகேஷ் நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் மகிழினி ஓடிச் சென்று கட்டிக்கொள்ள, “என்ன அண்ணா, இங்க நின்னுட்டு இருக்கீங்க” என மைதிலி வியப்பாகக் கேட்டதில்,
“ஆமா, ரெண்டு மூணு நாளா என் செல்லத்தை நான் பார்க்கவே இல்லை. அதான் நீங்க வர்ற டைமை கணக்கு பண்ணி நானே வந்துட்டேன். மகியை நான் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வீட்டுக்கு வாங்க” என்று மகிழினியைத் தூக்கிக் கொண்டான்.
“நான் நாளைக்கு கூட்டிட்டு வரேனே அண்ணா” என மைதிலி மறுக்க, “அம்மா நான் மாமா கூட போய் பாப்பாவைப் பார்க்க போறேன். ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.
“ஆமா மைதிலி நாங்க ஷாப்பிங் போறோம். அதான் கையோட மகியையும் கூட்டிட்டுப் போக வெயிட்டிங்” என்றதும் மைதிலி புரியாமல் பார்க்க, தலையில் கை வைத்த மகேஷ்,
“உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பாரு. நாளைக்கு திவாவோட பர்த்டே. ஒரு சின்ன சர்ப்ரைஸ் பிளான் பண்ணிருக்கேன். நாளைக்கு லன்ச்க்கே கண்டிப்பா ரெண்டு பேரும் வந்துடுங்க. இப்பவே இழுத்துட்டு போயிருப்பேன். டிராவல் பண்ணிட்டு டயர்டா இருப்பீங்கன்னு தான் விட்டுட்டுப் போறேன்” என்று கண்டிப்புடன் அழைத்து விட்டு மருமகளையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
மைதிலிக்கு தான், இன்றிரவு இவனுடன் தனியாகவா? காதல்ன்ற பேர்ல ஓவரா பேசுவானே என்ற லேசான மிரட்சி தலைதூக்கினாலும், பின் எப்படியும் எல்லை மீறிவிட மாட்டான் என்ற தைரியம் அதிகம் இருக்கவே பிரஷாந்த்துடன் அமைதியாக காரில் வீட்டை நோக்கிப் பயணித்தாள்.
அவன் அவ்வப்பொழுது அவளைத் திரும்பிப் பார்ப்பதும், பின் சாலையைப் பார்ப்பதுமாக இருக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து “என்ன?” எனக் கேட்டாள் காட்டமாக.
“என்ன என்ன?” மெல்லச் சிரித்தபடி பிரஷாந்த் புருவம் உயர்த்த, “எதுக்கு இப்படி பார்த்துக்கிட்டே வர்றீங்க?” என்றாள் முறைத்தவாறு.
“சே நான் பார்க்கலை மைலி” என மறுப்பாக தலையசைத்தவன், பின் குறுஞ்சிரிப்புடன் “உன்னை ரசிச்சுட்டு வந்தேன்” எனக் குறும்புடன் கூற, அவள் முறைத்தாள்.
“நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்குறது ரொம்ப ரேர்ல. அதான் உன் கூட இருக்குற இந்த தனிமையை ரசிச்சுட்டு வர்றேன். ஒரு மனுஷனுக்கு ரசனை கூட இருக்கக் கூடாதா மைலி…” என்று உதட்டைப் பிதுக்கி பரிதாபம் போல கேட்க, அவளால் தான் என்ன பதில் கூற முடியும்?
தொட்டால் தொடாதே எனலாம், கண்ணைத் தாண்டி அவன் பார்வை போனாலும் கண்டிக்கலாம், என்னைக் காதலித்த ஆகவேண்டுமென சண்டை போட்டாலாவது அதட்டி விடலாம்… இவனை என்ன தான் செய்வது? இவனிடம் எப்படி தான் நடந்துகொள்வது? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
காரணமின்றி கோபம் மட்டும் பொத்துக் கொண்டு வந்தது. ஒவ்வாத காதலென அவளே நினைத்துக் கொண்டதனால் வந்த விளைவோ என்னவோ, வீட்டை அடைந்ததும் கதவை டொம்மென திறந்தாள்.
திடீரென்ற அவளது கோபத்தின் காரணம் புரியாது, “என்ன ஆச்சு மைலி” எனக் கேட்ட பிரஷாந்தின் மீது அனல் பார்வை வீசியவள், “சஞ்சீவ் அண்ணா என்ன செஞ்சாங்க. அவங்களை அப்படி ஹர்ட் பண்ணிருக்கத் தேவை இல்லை பிரஷாந்த்” என்று சம்பந்தமே இன்றி ஒரு காரணத்தைக் கூறினாள்.
அவளை அரைநொடிக்கும் அதிகமாக அமைதியாய் ஏறிட்டவன், தாடையைத் தடவியபடி “இது தான் உன் கோபத்துக்குக் காரணமா?” என்றான் சந்தேகமாக.
அதில் சற்றே திகைத்தவள், சட்டென தன்னை சமன்செய்து, “ஆ… ஆமா… அவங்க வீட்ல சாப்பிடாம வந்து இன்சல்ட் பண்ணிருக்கக் கூடாது பாவம்ல…” என்று தடுமாற,
“உனக்கு என்னைத் தவிர எல்லாருமே பாவமா தான் இருப்பாங்க…” என்று நக்கலாகக் கூறியவனைக் கண்டு பாவையின் பார்வை அனல் கூடியது.
அதில் கையை மார்புக்குக் குறுக்கே கட்டியவன், “கொஞ்சம் உன் கோபத்தை குறைச்சுட்டு நான் பேசுனதுக்கான காரணத்தை யோசிச்சுப் பாரு மைலி. சஞ்சீவ் மேல எனக்கு தனிப்பட்ட வருத்தம் எதுவும் இல்லை. அவன் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதுக்கு காரணம் யார் தெரியுமா. நீ!
அவன் பிரெண்டு ஒரு பொண்ணோட வாழ்க்கைல விளையாடிட்டான்ற குற்ற உணர்ச்சில அவன் கல்யாணம் பண்ண பயந்துகிட்டு பிரம்மச்சாரியாவே வாழ நினைச்சு இருக்கான். அது அவன் பேசும் போதே எனக்கு ஃபீல் ஆகிடுச்சு. இப்போ அவன் வருத்தப்படக்கூடாதுன்னு ஆறுதல் சொல்லி, கல்யாணம் பண்ணிக்க அட்வைஸ் பண்ணி, சாப்பிட்டு வந்துருந்தா அவனோட குற்ற உணர்ச்சி வேணும்னா மறைஞ்சுருக்கலாம். ஆனா கல்யாணம் பண்ணி இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க வேணாம்ன்ற எண்ணம் மறையாது.
இப்போ, ஆல்ரெடி இருக்குற குற்ற உணர்ச்சியை இன்னும் தூண்டி விட்டுட்டு வந்துருக்கேன். நம்ம சாப்பிடாம வந்தது அவனுக்கு உறுத்தும். திரும்பி நம்மளை வரவைக்க, கண்டிப்பா ட்ரை பண்ணுவான். அதுக்காகவாவது கல்யாணத்துக்கு சம்மதிப்பான். அவன் கல்யாணத்துக்கு இன்வைட் செய்றதுக்கு நம்மளைப் பார்க்க கண்டிப்பா வருவான். அவனுக்கு என்ன தலையெழுத்து, கடைசி வரை பிரம்மச்சாரியா வாழனும்னு. ஹீ டிசர்வ் பார் ஹேப்பி பேமிலி லைஃப். அது ரகுவுக்கே கிடைச்சுருக்கும் போது அவனுக்கு ஏன் கிடைக்கக் கூடாது?” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டான்.
மைதிலி தான் மலைத்து நின்றாள். உண்மை தான். அதன் பிறகு பல முறை அவனைத் திருமணம் செய்யக் கூறியும் ‘இன்னொரு பொண்ணோட பாவம் எனக்கு வேணாம்’ என்று முடிவாய் மறுத்து வந்தானே ஒழிய, மனதை மாற்றிக்கொள்ளவில்லையே!
இருப்பினும், பிரஷாந்தின் கூற்றை ஆமோதிக்க வறட்டுப் பிடிவாதம் அனுமதிக்கவில்லை. “அதுக்காக இப்படி கிளம்பி வந்துட்டா இன்னும் கொஞ்சம் பிரேக் தான் ஆவாங்க. இனிமே ரகு சம்பந்தமான எந்தப் பேச்சும் நமக்குள்ள வேணாம்” என்றாள் தீர்மானமாக.
“ஏன்?” அழுத்தத்துடன் பிரஷாந்த் கேட்க,
“என… எனக்கு அவரை குறைவா பேசுறது பிடிக்கல” என அவனைப் பாராமல் பதில் அளித்தாள்.
“உள்ளதை தான் சொல்றேன்” அவன் அசட்டையுடன் கேட்டதில்,
“பிடிக்கல அவ்ளோ தான்…” என்றாள் அழுத்தமாக. மெல்லக் குரலும் நடுங்கியது.
“ரகு” என்ற ஒற்றைப் பெயர் அவளது கம்பீரத்தை ஒட்டு மொத்தமாக இழக்க வைப்பது புரிந்தது அவனுக்கு.
அது வலியையும் கொடுப்பது வழக்கம் தானே! அந்த வலியை சிறு முறுவலுடன் தாங்கிக் கொண்டவன், மௌனமாகவே அறைக்குச் சென்று விட்டான்.
அவன் சென்ற பிறகும் சில நிமிடங்கள் இடத்தை விட்டு அசையாமல் நின்றிருந்தாள் மைதிலி.
எப்போதும் பதிலுக்கு பதில் பேசி விட்டுச் செல்பவன் தானே! இதற்கு பதில் அளிக்காமல் சென்றதிலேயே அதிகமாய் அவனை வருத்தி விட்டோமெனப் புரிந்தது. ஆகினும், இந்த ஒட்டு மொத்த சூழ்நிலைக்கும் காரணமானவன் அவன் ஒருவன் தான். தன் வாழ்வில் வேறொருவன் இருந்து மறைந்து விட்டது தெரிந்தும் காதலெனப் பிதற்றுவது முழுக்க முழுக்க அவனது தவறே! ஆக, இந்த வலியையும் அவன் அனுபவித்து தானே ஆக வேண்டும். ஆனால், எனக்கு ஏன் இப்போது குற்ற உணர்வில் நெஞ்சம் குறுகுறுக்கிறது.
எப்போதும் யார் தவறு இழைத்தாலும், நான் குற்றம் செய்தவள் போல இந்த இதயம் தன்னையே தாக்குகிறது. ரகு விஷயத்திலும் அப்படி தான். அவன் செய்தது தவறு என்று தெரிந்து சண்டை இட்டாலும், அவனுக்காக வக்காலத்து வாங்கி தன்னை அடக்கியது இந்த பாழாய் போன காதல் இதயம்.
இப்போது இவனுக்காகவும் குறுகுறுக்கிறது. இத்தனைக்கும் இவனை ஒன்றும் தான் காதலிக்கவும் இல்லை. கணவனாகவும் எண்ணவில்லை. அப்படி இருந்தும், அவன் வருந்தினால் எனக்கு ஏன் இப்படி எரிகிறது? என்னை ஏன் இப்படி எரிக்கிறது இந்த மனது. புரியவில்லை அவளுக்கு. காரணம் தேடித்தேடி தலைவலி வந்ததே மிச்சம்.
தலையைப் பிடித்தபடி அறைக்குச் செல்ல, அங்கு மெத்தை மீது சாய்ந்து சட்டமாக அமர்ந்திருந்தான் பிரஷாந்த்.
‘அதான் இப்போ மகி இங்க இல்லையே அப்பறம் எதுக்கு இங்க வந்து ஜம்பமா உட்காந்துருக்கான்’ என்று கறுவியவள், அமைதியாக மறுபக்கம் சென்று படுத்துக் கொள்ள, வெகு நேரமாக இருவரும் அவரவர் அலைபேசியிலேயே புதைந்து கொண்டனர். அப்போது மகேஷின் எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வந்தது.
மகிழினி தான் பேசினாள். “இன்னும் தூங்கலையா மகி” எனக் கேட்டதும், “இல்லமா. நீங்களும் அங்கிளும் இல்லாம தூக்கமே வரல பேபிக்கு. அங்கிளை வந்து என்னைக் கூட்டிட்டுப் போக சொல்றீங்களா?” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“என்ன அதிசயம் எப்பவும் அங்க போனா ஜாலியா இருப்பியே மகி” என மைதிலி கேட்டதற்கு, “இவ்ளோ நேரம் ஜாலியா தான் இருந்துச்சு. இப்ப அங்கிள் வேணும்” என அழுகுரலில் கூற, “அப்ப கூட உனக்கு அங்கிள் தான் வேணும். அம்மா வேணாம்…” என்றவளின் குரல் மகளை சாட, பேந்தப் பேந்த விழித்த மகிழினி, “ரெண்டு பேருமே வேணும்மா” எனப் பாவமாக உரைத்தாள்.
“ஒன்னும் தேவை இல்ல. நீ உன் அங்கிள்கிட்டயே பேசு” என்று போனை பிரஷாந்திடம் நீட்ட, அவன் கமுக்கமாக சிரித்தான்.
“ஹாய் பேபி… என்ன உங்க அம்மாவை டென்ஷன் பண்ணிட்டு இருக்கீங்க” என அவளை ஓரக்கண்ணில் பார்த்தபடி கேட்க, “எனக்கு அங்கிளும் வேணும் அம்மாவும் வேணும் அங்கிள். அம்மா தான் என் கூட டூ விட்டுட்டாங்க” என உதட்டைக் குவிக்க,
“உன் அம்மாவுக்கு என் மேல ஓவர் பொஸசிவ் மகி பேபி. அதான் நீ என்னைத் தேடுனா கூட கோபப்படுறா” என்று நக்கலாகக் கூறியதில், வெடுக்கென போனை வாங்கிய மைதிலி, “அதெல்லாம் இல்ல மகி. அம்மாவுக்கு உன் மேல தான் பொஸசிவ். உன் அங்கிள் வந்ததுல இருந்து என்கிட்ட நீ பேசுறதே இல்ல. என்னைத் தேடுறதும் இல்ல!” என்றாள் குறையாக.
இதுவரை இம்மாதிரியான பேச்சுக்கள் அவளிடம் வந்ததே இல்லை. புதிதாய் ‘பொஸசிவ்’ எனப் பேசிய தாயை வேற்றுக்கிரகவாசி போலப் பார்த்து வைத்தாள் மகிழினி.
மகளது வியப்பைக் கண்டு லேசாய் சுருக்கென்றது.
எப்போதும் மைதிலி வேலையென வெளியில் சென்ற பின் முழுக்க முழுக்க மல்லிகாவுடனே தான் இருப்பாள். வீட்டில் இருக்கும் நேரம், மகளுக்கு உணவு ஊட்ட, கதை கூற, உறங்க வைக்கவென அனைத்தும் பார்த்தாலும் உருகி உருகி கொஞ்சியது கிடையாது.
இப்போது அவளே அறியாமல், மகளின் அன்பையும் குடும்ப அமைப்பையும் அவளது உள்மனது விரும்பத் தொடங்கி விட்டதை உணராமல், அதற்கும் பிரஷாந்தையே முறைத்து வைத்தாள்.
மெலிதான தன்னவளின் மாற்றங்களை சிரிப்பை அடக்கியபடி பார்த்தவன், மகிழினியிடம் பேச்சை மாற்றி கதை கூறத் தொடங்கினான்.
“மகி பேபி அங்கிள் கதை சொல்றேன். நீங்க அப்படியே தூங்குவீங்களாம். நாளைக்கு மார்னிங் அங்கிளும் அம்மாவும் உங்க முன்னாடி நிப்போம் ஓகே வா?” என்று சமன்செய்திட, “அப்போ எனக்கு கதை வேணாம் அம்மாவைப் பாட சொல்லுங்க” என்றதும், மைதிலி “வீடியோ கால்ல எப்படி பாட முடியும் மகி” என்றாள் தயக்கமாக.
அனைவரும் அவர்களது உரையாடல்களை கவனித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியும் தானே அவளுக்கும்.
“ப்ளீஸ்மா” என மகிழினி கெஞ்ச, மைதிலியைக் காப்பாற்றும் விதமாக பிரஷாந்த், “நான் வேணும்னா பாடவா பேபி. என் குரலைக் கேட்டு இசையே எழுந்து டான்ஸ் ஆடும் தெரியுமா?” என்று விழிகளை உருட்டியதில்,
“ஐயோ அங்கிள் நான் டான்ஸ் ஆட பாட சொல்லல. தூங்க தான் பாட சொன்னேன்” என்று வாயைப் பொத்தி சிரித்தாள்.
மைதிலி உடனே மெத்தையை விட்டு இறங்க முயல, “எங்க போற?” என்றான்.
“வெளில தெருநாய் இருந்தா கட்டி வச்சுட்டு வரேன் பிரஷாந்த். பாவம் பயந்துடும். கூடவே ஹம்மிங் போட கழுதையையும் கூட்டிட்டு வரேன்…” என்று அடக்கமாக கேலி செய்ய, “எதுக்கு தெருவுல இல்லாத கழுதையை தேடிப் போகணும். நீயே கூட சேர்ந்து ஹம்மிங் பண்ணு. ரெண்டு பேரும் இசை மழைல நனையலாம்” எனக் கண்சிமிட்டினான்.
“ஹலோ நான் கழுதையா? இவர் பெரிய ஏ. ஆர் ரகுமான்” என நொடித்தாள்.
மகேஷ் வீட்டில் தூங்காமல் அடம்பிடித்த மகிழினியை அமரும் தேவஸ்மிதாவும் தான் அவர்களது அறைக்கு தூக்கி வந்திருந்தனர்.
தேவஸ்மிதாவும் எத்தனை நேரம் தான் வாயை அடக்கி பொறுமை காப்பாள்.
“அட ச்சை. யாராவது பாடி பிள்ளையை தூங்க வைங்க…” என்று முறைத்தவள், “நீ படுத்துக்கோ மகி” என்று மகிழினியை மெத்தையில் படுக்க வைத்தாள்.
பிரஷாந்த் தொண்டையை செருமி டியூன் செய்ய, மைதிலி தான் “உங்களை என்ன சூப்பர் சிங்கர் ஆடிஷன்க்கா பாட சொல்றா. சீக்கிரம் ஏதாவது பண்ணி அவளைத் தூங்க வைங்க. மணி பத்துக்கு மேல ஆகுது” என்று பல்லைக்கடித்தாள்.
“நீயும் படுத்துக்கோ” என்று தலையணையைக் கண் காட்ட, :ஹெலோ நீங்க கனைக்கிறதை கேட்டு அவள் வேணா தூங்கலாம்… நான் தூங்க மாட்டேன். மனசுல சின்னத் தம்பி பிரபுன்னு நினைப்பு…” என்று முணுமுணுத்தபடி பிரயாண அசதியில் அவளும் படுத்துக்கொண்டாள்.
மென்புன்னகை வீசியவன், ஆழ்ந்த குரலில் பாட தொடங்கினான்.
மழை மேகமாய்
உருமாறவா உன் வாசல்
வந்து உயிா் தூவவா மனம்
வீசிடும் மலராகவா உன்
கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக உனை
கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அடி உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
கண்ணுக்குள்ள உன்னை வந்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
உயிரை உருக்கும் இசையில் தன்னவளை எண்ணி அவ்வரிகளுக்கு உயிர் கொடுத்தான் பிரஷாந்த்.
அவன் பாடத் தொடங்கும் போதே காரணமின்றி இதயம் பிசைந்து கண் கலங்கியது மைதிலிக்கு. முயன்று அடக்கியபடி தலையணையில் முகம் புதைத்து காதை மூட எத்தனித்தாலும் மூடிய செவிகளினுள்ளே புகுந்து ஆட்டிப்படைத்து அவனது குரல். முழு பாடலையும் மீண்டும் மீண்டும் பாடியதில், ஒரு கட்டத்தில் அதில் இலயித்துப் போனவள், அவன் இசை தந்த இதத்திலேயே உறங்கியும் போனாள்.
அங்கு மகிழினியும் உறக்கத்திற்குச் செல்ல, வீடியோ காலை அணைத்தவன், திரும்பி மைதிலியைப் பார்க்க, அவளது கன்னம் வழியே வழிந்த கண்ணீர் காய்ந்து சருகாகி இருந்தது.
அவளை நெருங்கி படுத்துக்கொண்டவன், ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை வருடினான்.
“ரகு மேல காட்டுற காதல்ல கொஞ்சூண்டு என்மேலேயும் காட்டேன் மைலி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா இப்போ மனசு சின்ன சின்னதா ரொம்ப எதிர்பார்க்குது மைலி. இந்த உணர்வில்லாத கண்கள் என்னைப் பார்த்து படபடன்னு அடிச்சுக்கணும், என்னை வலிக்க வைக்கவே பேசுற இந்த உதடு எனக்காக துடிக்கணும், இந்த பில்லோல புதைஞ்சு போற முகம், என் நெஞ்சுல புதைஞ்சு ஆறுதல் தேடணும். இதெல்லாம் நடக்குமா மைலி?” எனக் கேட்டு அவள் கரத்துடன் தன் கரத்தைக் கோர்த்துக் கொண்டான்.
பின் சிறு முறுவலுடன் “இதெல்லாம் நடக்கலைன்னா கூட பரவாயில்ல. இதே மாதிரி என்னை முறைச்சுக்கிட்டு என்னை அவாய்ட் பண்ண ட்ரை பண்ணிட்டுன்னாச்சும் எப்பவும் என்கூடவே இரு மைலி. தூங்கும் போது உன்னைப் பார்த்தே தூங்கி, விடியும் போதும் உன் முகத்துலேயே முழிச்சு பழகிடுச்சு எனக்கு. லவ் யூ அ லாட்” என்றபடி பிடித்திருந்த அவளது கரத்தின் மீது இதழொற்றியவன், பிடியை தளர்த்தாமலேயே உறங்கிப் போனான்.
மறுநாள் விடிந்ததும் மைதிலியின் கண்களுக்கு அகப்பட்டது பிரஷாந்தின் முகம் தான். அவள் முகத்திற்கு வெகு அருகே தெரிந்த அவனது முகத்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.
இதுவரை இத்தனை அருகில் அவனை எதிர்நோக்கியது கிடையாதே. சிறப்பம்சமாக அவளது கையும் அவனிடம் சிறைபட்டிருந்தாலும், விடுதலைக்காக ஏங்கவில்லை அவ்விரல்கள். அவனின் கைச்சூட்டின் இதத்தில் பாந்தமாக அவனது முரட்டு கைகளுக்குள் பதுங்கி இருந்தது.
சட்டென கையை உருவிக்கொண்டவள், ‘உருண்டு என் பக்கத்துல வந்து படுத்துருக்கான் பாரு தார்னி டெவில்’ என்று அவனைத் திட்டும்போதே வாசலில் அழைப்பு மணி அடித்தது.
‘இந்த நேரத்துல யாரு?’ என்றெண்ணியபடி கதவைத் திறந்தவளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக வாசலில் நின்றிருந்தனர் பிரஷாந்தின் பெற்றோர் நித்திலாவும் சுகுமாரும்.
அவர்களைக் கண்டு கோபம் எழுந்தாலும், பிரஷாந்தின் பெற்றோர் என்ற ஒரே காரணத்திற்காக தன்னை அடக்கிக்கொண்டாள்.
“என்ன வேணும் உங்களுக்கு?” கூர் விழிகளுடன் அவர்களை நோக்க, “உனக்கு என்ன வேணும் அவன்கிட்ட இருந்து?” என்று எதிர்கேள்வி கேட்டார் நித்திலா. அவர் முகத்தில் அடக்கப்பட்டிருந்த கோபம் அப்படியே பிரதிபலித்தது.
அக்கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல், “எனக்கு என்ன வேணும்னா என்ன அர்த்தம்?” எனப் புருவம் சுருக்க,
“அதெப்படி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்குற. வக்கீல்னு அவன் உன்னை நம்பி அண்ணன் கேஸை குடுக்க, நீ அந்த அமர் கூட சேர்ந்துக்கிட்டு, எங்களுக்கு எதிராவே ஆதாரம் திரட்டி எங்க குடும்பத்தையே ஒன்னும் இல்லாம ஆக்கிட்டு, இப்போ அவனையும் கைக்குள்ள போட்டு வச்சுருக்க” என்று முகம் சுளித்தார்.
“இங்க பாருங்க நீங்களா ஏதாவது நினைச்சுட்டு உளறாதீங்க. நீங்க செஞ்ச தப்புக்கு தான் மாட்டிக்கிட்டீங்க. என்னமோ பொய் கேஸ் போட்ட மாதிரி பேசிட்டு இருக்கீங்க” மைதிலிக்கு எரிச்சல் அதிகரித்தது.
சுகுமார் தான் எகிறினார். “எங்க மூத்த பையனுக்காக நாங்க நல்லதுன்னு நினைச்சு செஞ்சதுக்கு எல்லாம் கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டான் அந்த அமர். கூடவே என் ரெண்டாவது பிள்ளையையும் நம்ப வச்சுட்டீங்க. எங்க அவன் ஹைதராபாத்க்கு போனா எங்கமேல பாசம் வந்துடும்னு உன் வீட்லயே வச்சுக்கிட்டு அசிங்கம் பண்றியே வெட்கமா இல்ல உனக்கு” என்றதும் அவளுக்கு சுளீரென கோபம் வந்தது.
“வார்த்தையைப் பார்த்து பேசுங்க. வச்சுக்கிட்டேன் அது இதுன்னு பேசுனீங்க மரியாதை கெட்டுடும். பிரஷாந்தும் நானும் கல்யாணம் பண்ணிருக்கோம். நாங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்” என்றாள் திண்ணமாக.
“ஆமா பெரிய இந்த கல்யாணம் இது… தனியா இருக்குறவன், கொஞ்சம் சூது வாது தெரியாதவன், கை நிறைய காசு வச்சு இருக்கான்னு ரெண்டாவது புருஷனா வச்சுகிட்டு” எனப் பேசி கூட முடிக்கவில்லை, “ம்மா!” என்று கர்ஜித்தான் பிரஷாந்த். கழுத்து நரம்புகெல்லாம் சூடானது அவனுக்கு.
மைதிலியோ அவர்கள் பேசிய அனைத்தையும் விட்டு விட்டு, பிரஷாந்தின் சட்டையைப் பிடித்தாள்.
“டேய் தார்னி டெவில். நீ சூது வாது தெரியாதவனாடா?” என்று கண்ணைச் சுருக்கி முறைக்க, அவளது உரிமைப் பேச்சில் இன்பமாக அதிர்ந்தான் பிரஷாந்த்.
உயிர் வளரும்
மேகா