460 views

வானம் 13

ன்றியுரைக்க சரயுவை தேடியவனின் கண்களில் சிக்கினாள் அவள். வாடிக்கையாளர் ஒருவருக்கு தேவையான பொருளை எடுக்க உதவி செய்து கொண்டிருக்க, “சரயு” என அழைத்தன அவனது இதழ்கள்.

சித்தார்த்தின் அழைப்பால், வாடிக்கையாளரிடம் “ஒரு நிமிஷம்” என்றவள் அவனை நோக்கி சென்றவள், “சொல்லுங்க சார்” என அவன்முன்பு நிற்க, அவனுக்கோ தான் ஏன் அவளை அழைத்தோம் எனப் புரியாமல் திருதிருவென முழித்தான்.

“சார்” என அவள் மறுபடியும் அழைக்க, “அதுவந்து… ஸ்டாக் எதும் தீர்ந்திருச்சானு கேட்க கூப்ட்டேன் சரயு. பாண்டியன் எங்க?” என அவன் சமாளிக்க முற்பட, அவர்கள் அருகிலே தான் பாண்டியனும் இருந்ததால் அவனின் சமாளிப்பால் திருதிருவென முழிப்பது அவளின் முறையாயிற்று.

“அண்ணா, உங்கள தான் சார் தேடறாரு” என பாண்டியனை பார்த்துக் கூறியவள், சித்தார்த்தை ஒருமுறை அழுத்தமாக பார்த்துவிட்டு தன் பணியை பார்க்கச் செல்ல, சித்தார்த்தின் அருகே வந்தான் பாண்டியன்.

“என்ன ண்ணா, நான் இங்க தான இருக்கேன். என்னை தேடுனதா சரயு சொல்றாங்க?” என்க, “அதுவந்து, ஏதோ ஞாபகத்துல மாத்தி கூப்டுட்டேன் பாண்டியா” என்றவன் இருப்பு உள்ள பொருட்களை பற்றி விசாரித்துவிட்டு பாண்டியனை அனுப்பியவன் நெற்றியை அழுந்த தேய்த்தான்.

“சித் நீ நீயா இரு. கன்ட்ரோல் யுவர் செல்ப்” என தன்னைத் தானே ஒருநிலைப்படுத்த முயன்றான் சித்தார்த். அதற்குமேல் அவனால் அங்கு அமர முடியாமல் போக, இதழிகாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என்றெண்ணி இதழிகாவை அழைக்க, சரயுவிடம் கூறிவிட்டே அவள் கிளம்ப, சித்தார்த்தோ குழம்பிய மனநிலையில் அங்கிருந்து கிளம்பினான்.

அவனின் தடுமாற்றத்தை உணர்ந்த சரயுவோ, ‘இவருக்கு என்னாச்சு’ என்ற யோசனையிலேயே இருக்க அவள் அருகில் வந்த சம்யுக்தா, “சரயு, என்ன டி ஆச்சு… நான் வந்து பக்கத்துல நிக்கிறது கூட தெரியாம அப்படி என்ன யோசனைல நிக்கிற?” என அவளை உலுக்கினாள்.

“ஆன்…” என அவள் திருதிருவென முழிக்க, “கிழிஞ்சது கிருஷ்ணகிரி” என தலையில் அடித்துக் கொள்ள, “என்ன சம்யு… என்ன சொன்ன நீ?” என வினவினாள் சரயு. “அதுசரி… நான் இப்போ எது சொன்னாலும் நீ அப்படிலாம் ஒன்னுமில்லனு தான் சொல்லுவ. எதுக்கு என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணிக்கிட்டு… வா, வேல முடிஞ்சுது. ஹாஸ்டலுக்குப் போவோம்” என கிளம்ப எத்தனிக்க, அவளை தடுத்தவள், “நீ வந்தத கவனிக்காம விட்டுட்டேன். அதுக்கு ஏன் இப்போ இப்படி பேசிட்டு போற, உனக்கு என்னாச்சு?” என வினவினாள் சரயு.

“ஷப்பா… முடியல டி உன்னோட. நான் எதுவும் கேட்கில, நீயும் எதுவும் பண்ணல. இப்போ வா மொதல்ல ஹாஸ்டலுக்கு போவோம்” என முன்னால் செல்ல, அதன்பின் எதுவும் பேசாமல் அவள் பின்னே சென்றாள்.

விடுதியை அடைந்ததுமே அவர்களை ஆர்பாட்டமாய் வரவேற்றாள் வானதி. தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொள்ள, “என்ன சரயு, இப்படி முழிக்கிற… பெரிய ஆளு தான் நீ” என்றவளின் பார்வை அவள்மேல் கேலியாய் படிய,

“நீங்க என்ன சொல்றீங்கனு புரியல” என புரியாமல் வானதியை நோக்கினாள் சரயு. “மகள பிடிச்சா அப்பன் வழிக்கு வந்துருவான்னு நினைச்சு கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்ருப்ப போல” என்றவளின் வார்த்தைகளில் நக்கல் துள்ளலாடியது.

“வாட்!” என சரயு அதிர, “என்ன கேட்கணுமோ அத நேரடியா கேளுங்க வானதி” என்றாள் சம்யுக்தா சற்றே எரிச்சலோடு.

“இன்னுமா உனக்கும் உன் பிரண்டுக்கும் புரியல… மொத அந்த குட்டிப் பொண்ணோட பிரண்ட்டாகி இப்போ அவங்க அப்பாவ கரெக்ட் பண்ணிட்ட போல” என்றவளின் வார்த்தைகளில் அதிகமான நக்கல் படித்திருந்தது. சம்யுக்தாவின் கரங்கள் அவள் கன்னத்தை பதம்பார்க்க உயர்ந்திருக்க அதனை தடுத்திருந்தாள் சரயு.

“என்னை ஏன் டி தடுக்கிற. நாக்கில நரம்பில்லாம பேசறா பாரு, மொத விடு… கன்னம் பழுக்க ஒரு அப்பு வைக்கலனா என் மனசே ஆறாது” என சரயுவின் கரங்களில் இருந்து தன் கையை விடுவிக்க முற்பட, “சம்யுக்தா” என்ற சரயுவின் அழைப்பில் சற்றே அழுத்தம் கூடியிருந்தது.

“என்னை எதுக்கு இப்போ கன்ட்ரோல் பண்ற… உன்னை தான அவ சொல்றா, உனக்கு கோபம் வரல?” என்றவளின் கண்களில் அத்தனை கோபம்.

“சம்யு… மொதல்ல உன் கோபத்த கண்ட்ரோல் பண்ணு” என்ற சரயுவிடம் பொங்கி எழுந்தாள் சம்யுக்தா.

“அவ உன்னை தான் சொல்றா டி, இன்னுமா அவ சொல்ல வர்றது புரியல உனக்கு” என்ற சம்யுக்தாவிடம், “என்ன அர்த்தத்துல சொன்னானு எனக்கு புரியாம இல்ல” என்றவள் வானதியை அழுந்தப் பார்த்துவிட்டு, “சூரியன பார்த்து நாய் குலைச்சா யாருக்கு நஷ்டம் சம்யு… பேசாம வா” என அவளை இழுத்துக்கொண்டு அறைக்கு செல்ல, தன்னை நாயோடு ஒப்பிட்டுச் செல்பவளை கண்டு வானதியின் கண்களில் வன்மம் தெறித்தது.

“ச்ச… இந்த ஹாஸ்ட்டல் சோத்துல கொஞ்சம் சேர்த்து உப்பு போட சொல்லலணும். வரவர சொரணையே இருக்க மாட்டேங்கிது” என நங்கென கட்டிலில் அமர்ந்தாள் சம்யுக்தா.

அவளருகில் அமர்ந்த சரயுவோ, “இப்போ எதுக்கு இவ்ளோ கோபம் சம்யு?” என கூலாக வினவ, “சோத்துல உப்பு போட்டு தான சாப்டற… ஏன் டி அவ எப்படி பேசறா, நீ என்னடானா அமைதியா இருக்க… என்னையாச்சும் பேச விடுறியா, என்னையும் சேர்த்து இழுத்துட்டு வந்துட்ட” என முறைத்தவளை தோளோடு அணைத்துக் கொண்டவள்,

“சம்யு உன் கோபம் எனக்கு புரியுது. இன்பேக்ட் எனக்கு உன்னைவிட அதிக கோபம் வந்துச்சு தான். ஆனா அந்த கோபத்த காட்டுனா உடனே தான் சொன்னது எல்லாம் பொய்னு ஒத்துக்குவாளா… இல்ல தான, அப்புறம் எதுக்கு தேவ இல்லாம நாம எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும்” என்றவளை முறைத்தாள் சம்யுக்தா.

“இப்போ எதுக்கு இப்படி கேவலமா லுக் விடற?” என்ற சரயுவிடம், “இதுக்கு தான் நான் மொதல்லயே சொன்னேன். அந்த பக்கம் போகாதனு. ஆனா நீ கேட்டியா, இப்போ பாரு கண்டவலாம் அவ இஷ்டத்துக்கு பேசற அளவுக்கு வந்துருச்சு. இது இதோட முடியாது டி. இன்னிக்கு இந்த வானதினா, நாளைக்கு இன்னொருத்தி இப்படி சொல்லுவா. அப்புறம் இந்த ஹாஸ்டல் முழுக்க இதே பேச்சா தான் இருக்கும். தேவையா உனக்கு?” என்றாள் கோபத்தோடு.

“இதே தான் நானும் சொல்றேன். இன்னிக்கு இவ பேசுறானு அடிக்க போன நீ, நாளைக்கு ஹாஸ்டல் முழுக்க பேசும்போது எல்லாரையும் அடிச்சு திருத்தப் போறியா… இல்ல நான் அப்படி இல்லனு எக்ஸ்ப்ளைன் பண்ண சொல்றியா! இங்க நாம என்ன பண்ணாலும் குத்தம் சொல்ல ஆயிரம் பேர் இருக்கத் தான் செய்வாங்க சம்யு. அதெல்லாம் நம்ம மண்டைக்குள்ள ஏத்திக்கிட்டா இந்த சமூகத்துல நம்மனால வாழவே முடியாது. நல்லது பண்ணாலும் குத்தம் சொல்லும், கெட்டது பண்ணாலும் குத்தம் சொல்லும். ஏன், நம்ம செத்தா கூட குத்தம் சொல்ற ஊர்ல தான் வாழறோம். இப்படி ஒவ்வொன்னுக்கும் நம்ம ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சா நம்ம வாழ்க்கைய நம்ம வாழ முடியாது. நான் கியூட்டிகிட்ட பேசுனா அதுக்கு எதிர்வினைகள் எவ்வளவு வரும்னு தெரிஞ்சே தான் பேசத் தொடங்குனேன். சோ, இதெல்லாம் காதுல வாங்கிக்காம நாம நம்ம வேலைய பாப்போம்” என்றவள் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள, சம்யுக்தாவோ நீண்ட யோசனையிலேயே அமர்ந்திருந்தாள்.

சரயு குளித்துவிட்டு வெளியே வரும் வரைக்கும் சம்யுக்தா அதே நிலையில் அமர்ந்திருக்க, “என்ன சம்யு, இன்னும் அதே யோசனை தானா!” என வினவியவாறே தன் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த நீர்துளிகளுக்கு துண்டால் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“நீ சித்தார்த்த லவ் பண்றியா டி?” என பட்டென வினவ, “உனக்கு அப்படி தோணுதா சம்யு?” என எதிர்கேள்வி தொடுத்தாள் சரயு.

“ப்ளீஸ் டி, நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு” என்றவளை புன்னகையோடு எதிர்நோக்கியவள், “இப்போ வரைக்கும் இல்ல. பட் இந்த ஐடியாவும் நல்லா தான் இருக்கு. ட்ரை பண்ணட்டுமா!” என குறும்பாக கண்ணைச் சிமிட்டினாள் சரயு.

அவளில் பதிலில் “ஙே” என முழிப்பது சம்யுக்தாவின் முறையாயிற்று. “என்ன மேடம் முழிக்கிறீங்க. நீ தான கேட்ட, அதான் என் பதில சொன்னேன். சித் ஒன்னும் அவ்ளோ மோசமானவரா தெரியல. என்ன, அவருக்கு ஒரே ஒரு தடவ கல்யாணம் ஆகி, ஒரே ஒரு புள்ள மட்டும் இருக்கு. பரவால்ல, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். லவ் பண்ணிறட்டுமா சம்யு?” என வினவியவளைக் கண்டு விழிபிதுங்க அமர்ந்திருந்தாள் சம்யுக்தா.

“லவ் பண்றியானு நான் கேட்டா, நீ என்ன டி என்கிட்ட லவ் பண்ணட்டுமானு கேட்கிற!” என்றவளைப் பார்த்து குறுநகையை படரவிட்டவள், “அப்புறம் நீ தான எனக்கு இந்த ஐடியாவையே குடுத்த. இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணம் எனக்கில்ல. பட் இதுக்கு அப்புறம் முயற்சி பண்ணி பாக்கலாமானு யோசிக்கிறேன்” என்ற சரயுவிடம், “ஆர் யூ சீரியஸ்?” என்றாள் கண்களை திருதிருவென உருட்டியவாறே.

“இதிலென்ன சந்தேகம் சம்யு. நான் சீரியஸ்ஸா தான் சொல்றேன்” என்றவளின் முகத்தில் தற்போது குறும்பு மறைந்திருந்தது. ‘சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ ஏனோ அப்போது இந்த பழமொழி தான் சம்யுக்தாவின் ஞாபகத்திற்கு வந்தது.

சம்யுக்தாவின் முகம் போன போக்கை பார்த்தவள் வாய்விட்டு சிரித்தவாறே அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு, “இந்த நிமிஷம் வரைக்கும் அதுமாதிரியான எண்ணம் எனக்கில்ல சம்யு. ஆனா இப்போ ஏன் பண்ணக்கூடாதுனு யோசிக்கத் தோணுது. எனக்கு கியூட்டிய ரொம்ப பிடிக்கும், கியூட்டியோட அப்பா சித்தார்த்த பிடிக்காதுனும் இல்ல, பிடிக்கும்னு இல்ல. பாக்கலாம், பியூச்சர்ல என் மனசு என்ன சொல்ல போகுதுனு” என கண்ணை சிமிட்டியவாறே எழுந்து செல்ல, சம்யுக்தாவிற்கு வேர்த்து விறுவிறுத்திருந்தது.

இதுவரை அப்படி ஒரு எண்ணமே இல்லாமல் இருந்தவளை தான்தான் குழப்பி விட்டுவிட்டோமோ என்ற பதபதைப்பு தொற்றிக்கொள்ள, சரயுவின் குடும்பத்தை நினைத்து மனம் பதறத் தொடங்கியது.

கண்டதும் காதல் பற்றிக் கொள்ளாவிட்டாலும் சுற்றி உள்ளவர்களின் தூண்டுதலால் காதலிக்கத் தொடங்கிய ஜோடிகளை கண்களால் கண்டறிந்தவளால் அதேப்போல் இதுவரை சரயுவின் மனதில் காதல் என்ற விதை முளைக்காமல் இருந்திருக்க அதை தானே தோண்டி கிளறி விட்டுவிட்டோமோ எனத் தோன்றியது.

ரிகாரத்தை நிறைவேற்ற அருகில் இருந்த
கோவிலில் தினந்தோறும் விளக்கேற்றி வழிபடத் துவங்கி இருந்தாள் ரம்யா. அன்றும் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றிருக்க அவளை பார்ப்பதற்காக கோவில் அருகே இருந்த மரத்தினடியில் தன் வண்டியில் சாய்ந்தவாறு நின்றிருந்தான் பிரஷாந்த்.

பிரஷாந்தை கண்டவளுக்கு லேசான படபடப்பு ஏற்பட, முகத்தை தரையை நோக்கியவாறே அவனை கடந்து செல்ல முற்பட்டவளை அவனின் “ரம்யா” என்ற அழைப்பு நிற்க வைத்தது.

அவன்புறம் திரும்பாமல் அமைதியாக அதே இடத்திலே நின்றவள், “ம்” என மட்டுமே பதில் கொடுத்தாள். “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் பிரஷாந்த்.

அதற்கு சம்மதமாய் அவள் தலையாட்ட, “எனக்கு இந்த கல்யாண பேச்சுல சுத்தமா விருப்பம் இல்ல” என அவன் நேரடியாக விசயத்திற்கு வர, அவளது முகமோ வேகமாக அவனை நோக்கியது.

“சாரி… என் அம்மா என் சம்மதம் இல்லாம தான் உங்க வீட்ல வந்து பேசி இருக்காங்க. அதான் நேரடியா உன்னை பார்த்து பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றவன் அவள் முகம் பார்க்க அவள் முகத்தில் ஏமாற்றம் மின்னி மறைந்தது.

அந்த ஏமாற்றத்திற்கு தானும் ஒரு காரணம் என நினைத்தவன், முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். “உனக்கு இது கஷ்டமா தான் இருக்கும்னு தெரியும் ரம்யா. ஆனா இப்போ நான் இத சொல்லனா அப்புறம் வாழ்க்கை முழுக்க கஷ்டத்த மட்டுமே சந்திக்க வேண்டியதா போய்ரும். என் மாமன் பொண்ணு ரேவதிய உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்” என்றவன் தற்போது அவள் முகம் பார்க்க, தெரியும் என்பதாய் அவள் தலை ஆடியது.

“எனக்கு சின்ன வயசுல இருந்தே ரேவதிய ரொம்ப பிடிக்கும், இப்பவும்” என்றவன் தான் சொல்ல வருவதை அவள் புரிந்துக் கொண்டாளா என அவள் முகத்தைப் பார்க்க, “புரியுதுங்க. இப்போ நான் என்ன பண்ணனும்?” என வினவினாள்.

“தேங்க்ஸ் ரம்யா, நான் சொல்ல வந்தத புரிஞ்சுக்கிட்டதுக்கு. நான் என்ன சொன்னாலும் அம்மா கேட்கிற சூழ்நிலைல இல்ல. இந்த கல்யாண பேச்ச உன்னால மட்டும் தான் நிறுத்த முடியும். என்னை பிடிக்கலனு சொல்லிரு, ப்ளீஸ்” என்றவனைக் கண்டவளுக்கு கண்களில் இப்பவோ அப்பவோ என நீர்த்துளி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

தனது வீட்டார் கல்யாண பேச்சை எடுக்கும்போது அவ்வளவு பெரிதாய் ஆர்வம் இல்லாவிட்டாலும்  பிரஷாந்தோடு கல்யாண பேச்சை ஆரம்பிக்கும்போது ஆர்வம் ஒட்டிக் கொண்டது. அவனை எந்த குறையும் சொல்லி தட்டிக்கழிக்க முடியாததால் அவனோடு ஒரு அத்தியாய வாழ்க்கையையே கனவுலகில் வாழ்ந்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் பேச்சு மனதில் பலத்த அடியை கொடுத்தது.

“இனி நமக்கு கல்யாண பேச்ச எடுக்க மாட்டாங்கங்க. நீங்க தைரியமா போங்க, எங்க வீட்ல நான் பேசிக்கிறேன்” என்றவளுக்கு நன்றியுரைத்தவன் கிளம்ப எத்தனிக்க, “ஒரு நிமிஷம்” என்றாள் ரம்யா.

‘என்ன’ என்பதாய் பிரஷாந்த் அவளை பார்க்க, “ஆல் தி பெஸ்ட்” என்றவளை புரியாமல் நோக்கினான். “உங்க காதலுக்கு” என சிறு புன்முறுவலோடு பதிலளித்தவள் கோவிலுக்குள் செல்ல ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன் பின் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்றபின்பு அவன் சென்ற திசையை நனைந்த விழிகளோடு நோக்கினாள் ரம்யா.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment