1,946 views

 

“ஹலோ! யார் நீங்க? என் வீட்டுக்குள்ள  இருக்கீங்க. முதல்ல வெளிய போங்க.” என்றவள் வார்த்தையை கேட்டு புன்னகைத்தவன் சமையலறை நுழைந்தான்.

“நான் தான் தரணீஸ்வரன். இந்த வீட்டோட சொந்தக்காரன்.”

“அப்படியா…!  நான் வந்து ரொம்ப நாள் ஆகுது உங்கள பார்த்ததே இல்லை.”

“நல்லவங்க கண்ணுக்கு மட்டும் தான் நான் தெரிவேன்.” என்றதும் அவனை முறைத்தவள், “அப்போ நான் இன்னைக்கு தான் நல்லவளா இருக்கன்னு சொல்றீங்களா?” என்றாள்.

அழகான புன்னகையை சிந்தியவன், “இன்னைக்கு ஏதோ தெய்வ சக்தி குறைஞ்ச நாள்னு நினைக்கிறேன். அதனால தான் தீய சக்தி உன் கண்ணுக்கு நான் தெரிஞ்சிருக்கேன்.” என்றவனை அடிக்க துரத்தினாள்.

பிடிக்க முயன்றவள், “நில்லுங்க! என்னை பார்த்தா உங்களுக்கு தீய சக்தி மாதிரியா தெரியுது. தீய சக்தி இன்னைக்கு உங்களை என்ன பண்ணுதுன்னு பாருங்க.” அவளிடம் சிக்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், 

“நீ மட்டும் என்னை நக்கல் பண்ணலாமா.” என்றான்

“இத்தனை நாளா ஏதோ சைக்கோ மாதிரி இருந்துட்டு திடீர்னு இவ்ளோ அழகா வந்து நின்னா யாரா இருந்தாலும் கேட்கத்தான் செய்வாங்க.”

“யாரடி சைக்கோன்னு சொல்ற.” ஓடிக்கொண்டிருந்தவன் அவளை முறைக்க, நாக்கை கடித்துக் கொண்டு இப்பொழுது அவள் ஓடினாள் துரத்துபவனின் கைக்கு சிக்காமல் இருக்க.

“சைக்கோ யார் என்னன்னு தெரியாம கடிச்சு வைப்பானாம் தெரியுமா. இன்னைக்கு இந்த சைக்கோ உன்னை கடிச்சு ரத்தம் பார்க்கிறேன்” 
என்றவாறு அவளைப் பிடித்து விட்டான்.

கண்களை உருட்டி அவள் கெஞ்சி கொண்டிருக்க, “இவ்ளோ பெரிய கண்ண எங்க இருந்து வாங்குன அகல்.” என்று கேலி செய்தான் அவள் முட்ட கண்ணை பார்த்து.

“ம்ம்! வாங்குனாங்க செவ்வாய் கிரகத்துல இருந்து.” கொனட்டிக் கொண்டு அவனை விட்டு நகர்ந்து, “கம்பெனி போற அன்னைக்கு அடி வாங்கிட்டு போகாதீங்க. ஒழுங்கா சாப்பிட்டுட்டு கிளம்புற வழிய பாருங்க.” என்றாள்‌.

“வேணாம் அகல்” என்றவனை அவள் கேள்வியோடு பார்க்க, “ஒரு மாதிரி பயமா இருக்கு. நாலு வருஷம் ஆச்சு கம்பெனி வேலைய கவனிச்சு. திடீர்னு அங்க போய் என்ன பண்றதுன்னு தெரியல. அங்க வேலை பார்க்கிற எல்லாருக்கும் நான் ஒரு குடிகாரனா தெரிஞ்சு இருக்கேன். இப்ப போய் எப்படி அவங்களை அதட்டி வேலை வாங்குறதுன்னு சங்கடமா இருக்கு.” என்று சோர்வாக சோபாவில் அமர்ந்தான்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “நீயும் கூட வரியா.” கெஞ்சும் பார்வையோடு கேட்டான்.

அகல்யா மறுப்பாக தலையசைக்க, “ப்ளீஸ் அகல்.” என்றான். மறுப்புகளை தெரிவித்துக் கொண்டு அவன் அருகில் வந்தவள், “யாரு பின்னாடியும் ஒளிஞ்சி நிக்காதீங்க. இந்த உலகத்துல யார் குடிக்கல உங்களை தப்பு சொல்ல. குடிச்சிட்டு வேற யார் கிட்டயும் நீங்க ஒன்னும் தப்பா நடந்துக்கலையே. இந்த உலகத்துல அயோக்கியத்தனம் பண்ற எத்தனையோ பேர் நல்லவன் வேஷத்துல இருக்காங்க. சூழ்நிலை தான் உங்கள மாத்துச்சே தவிர உங்க மனம் மாறாம இன்னும் அப்படியே தான் இருக்கு. யாராவது உங்கள பத்தி தப்பா பேசுனா என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுங்க.” என்றவளின் வார்த்தைக்கு அவன் தலை குனிய,

“முதல் முதல்ல கம்பெனிக்கு போகும்போது எல்லாம் தெரிஞ்சுகிட்டா போனீங்க.” கேட்டாள் தாடையை நிமிர்த்தி.

அவன் மறுத்து தலையசைக்க, “எல்லாரும் ஏதாவது ஒரு ஆரம்ப புள்ளியில இருந்து தான் வாழ்க்கைய ஆரம்பிப்பாங்க. உங்களுக்கு இது இரண்டாவது புள்ளினு நினைச்சுக்கோங்க. எல்லாத்தையும் மாத்திக்க முடியும் நம்மளால. முக்கியமா உங்களால.” என்று புன்னகைக்க, அவள் வயிற்றை கட்டிக் கொண்டான்.

அகல்யா பொறுமையாக முதுகை தட்டிக் கொடுக்க, “எல்லாம் புரியுது அகல். ஆனா மத்தவங்க என்னை ஒரு மாதிரி பார்க்குறதை பார்க்கும்போது ரொம்ப அசிங்கமா இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ என்கூட வா. நாளைல இருந்து நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.” என்றவன் வார்த்தையில் இருக்கும் நம்பிக்கையின்மை தெரிய,

“சரி இன்னைக்கு ஒரு நாள் நான் உங்க கூட வரேன்.” என்றாள்.

உடனே அவளை விட்டு விலகியவன் புன்னகை முகமாக எழுந்து நிற்க, “சார் இப்போ சாப்பிட வரீங்களா.” என்றாள் அவளும் புன்னகைத்து.

இருவரும் காலை உணவை முடித்தார்கள். அவளுக்கு உதவியாக அனைத்தையும் தயார் செய்து முடித்தவன், “கிளம்பலாமா” என்று கேட்க, “சாமி கும்டுட்டு போலாம்.” அழைத்துச் சென்றாள் பூஜை அறைக்கு.

இங்கு வந்தும் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது தரணிக்கு. கையெடுத்து கும்பிட கரங்கள் மறுக்க, “சாமி உங்களுக்கு எந்த துரோகமும் பண்ணலங்க. இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் உங்களை தாங்கி பிடிக்க ஒன்னுக்கு ரெண்டு ஜீவன கொடுத்திருக்காரு. அதுக்காக வாழ்க்கை முழுக்க நீங்க நன்றி சொல்லணும்.” என்றவள் அவன் இரு கரங்களையும் கடவுள் முன்பு உயர்த்திப் பிடிக்க,

“உன்னோட சேர்த்து மூனு.” என்றவன் கண்மூடி கடவுளை வணங்கினான். புன்னகையோடு அவளும் கடவுளிடம் வேண்டுதல் வைத்துவிட்டு திருநீற்றை அவன் நெற்றியில் வைத்தாள்‌.

***

புன்னகை முகமாக பெற்றோர்களின் முன்பு நின்றான் தரணி. மகனைக் கண்டதும் உள்ளம் பூரித்துப்போன தயாளன் தன்னை மறந்து எழுந்த அமர முயற்சிக்க, வலி கொடுத்த முனங்களில் ஆதிலட்சுமி திரும்பி மகனைப் பார்த்தார். கண்கள் விரிந்து கல் ஆனது.

அன்னையின் அதிர்வில் அவன் புன்னகைக்க, இந்தப் புன்னகையை அவர் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டதால் கண்கள் கலங்கியது. அன்னையின் அழுகையில் இன்னும் தோரணையாக நின்று, “நான் கம்பெனிக்கு போறேன் அம்மா.” என்றான்.

மகனுக்கு பதில் சொல்லாதவர் பின்னால் நிற்கும் மருமகளை பார்க்க, அவள் பார்வை கணவனின் தோரணை மீது இருந்தது. இருவரையும் கண்டு உள்ளம் மகிழ்ந்தவர் எதுவும் பேசிக்கொள்ளாமல் திரும்பிவிட, தரணி திரும்பி மனைவியை பார்த்தான். அவள் கண்மூடி சமாதானங்கள் சொல்ல,

“இனிமே கம்பெனி மொத்தமும் என்னோட பொறுப்பு அப்பா. உங்க மகன்  நீங்க எதிர்பார்த்த மாதிரி இருப்பான் அம்மா கிட்ட சொல்லிடுங்க.” என்று கிளம்பினான்.

“ரெண்டு பேருக்கும் சாப்பாடு இதுல இருக்கு. நானும் கம்பெனி வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்.” கணவன் பின்னே அவளும் வெளியேறினாள். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அர்த்தத்தோடு.

***

கம்பெனி முன்பு இறங்கியவனை சூரிய ஒளி வரவேற்று கண்களை கூசவைத்து. அதையும் அவன் நன்றாக கவனித்து வருடங்கள் ஆகிவிட்டதால் புன்னகையோடு தலை உயர்த்தி ரசித்தான். என்னவோ புதியதொரு உலகத்தில் தன்னை தள்ளி விட்டது போல் உணர்ந்தான். அவனின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இறங்கியவள்,

“சார்! நீங்க கம்பெனி முதலாளி. இப்படி நடுரோட்ல நின்னுட்டு வானத்தைப் பார்த்து சிரிச்சா பைத்தியம்னு நினைச்சுப்பாங்க.” என கேலி செய்தாள்.

“என்னை பார்த்தா இல்ல. என் கூட நீ இருக்கிறதை பார்த்தா உலகமே கண்டுபிடிச்சிடும்.” அவனும் பதிலுக்கு பதில் கொடுக்க, சிரிப்பை நிறுத்திவிட்டு முறைத்தாள்.

நன்றாக பற்கள் தெரியுமாறு சத்தமிட்டு அவன் சிரிக்க, சிரிக்க கூட தெரியுமா என்ற தோரணையில் பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா. தாடி எல்லாம் முழுவதுமாக எடுத்துவிட்டு முழு கம்பீரத்தோடு நின்றிருக்கும் கணவனை இப்பொழுதும் நம்ப முடியாமல்  பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெகு நேரமாக பேச்சு கொடுக்காமல் இருக்கும் மனைவி முன்பு கையசைத்து நடப்புக்கு கொண்டு வந்தவன், “ஐய்யா அழக ரசிச்சது போதும் வாங்க மேடம்.” அவளோடு நகர்ந்தான்.

காவலாளி கதவை திறக்கும் பொழுது அவர் பார்வை தன்னை எடை போடுவதை உணர்ந்து அதுவரை இருந்த நம்பிக்கை வற்றியது தரணிக்கு. உடனே மனைவியின் கை பிடித்துக் கொண்டான். தன்னிடம் வந்த கைகள் நடுங்குவதை உணர்ந்து அவள் திரும்ப, தலை குனிந்து கொண்டு நடந்தான் அவளோடு.

அவனைக் பார்த்த சில பேர் ஆச்சரியத்தோடு வரவேற்க, தலை குனிந்தவாறு பதில் கொடுத்தான். அவர்கள் பேச்சு மட்டுமே சிரிப்போடு இருக்கிறது என்பதை அவன் உள்ளம் நம்பியது. விழி உயர்த்தி பார்வையை சந்தித்தால் தன் மீதான அழுக்கு தெரிந்து விடும் என்பதால் யாரையும் சந்திக்கவில்லை.

அவன் நிலையை உணர்ந்தவள் மின்தூக்கில் நுழைந்தாள். இரண்டாம் தளம் என்பதால் உடனே அவை வந்துவிட, உள்ளே எப்படி நுழைவது என்ற தயக்கத்தோடு கால்கள் நின்றது.

“என்னை பாருங்க” என்றவள் வார்த்தைக்கு அவன் பதில் கொடுக்காமல் இருக்க, “என்னை பாருங்கன்னு சொன்னேன்.” என்று அவனை பார்க்க வைத்தாள்.

“காலங்காலமா சொல்ற வார்த்தை தான் இது. இருந்தாலும் உங்களுக்கு சொல்றேன். செய்யுறது சரியோ தப்போ நிமிர்ந்து நில்லுங்க. இந்த மாதிரி தலை குனிஞ்சு இருந்தா எதிர்ல இருக்குறது நண்பனா துரோகியான்னு கண்டுபிடிக்க முடியாது.

கீழ விழுறது தப்பு இல்லைங்க. ஐயோ நான் விழுந்துட்டேன்னு அப்படியே இருக்குறது தான் தப்பு. எந்திரிச்சி திரும்ப ஓடுங்க. வெற்றியோ தோல்வியோ ஒரு கை பார்த்துடலாம்.” என்று அவன் தோள்பட்டையில் கை வைத்து தைரியம் கொடுக்க, தலையசைத்து புன்னகைத்தவன் அவள் கை பிடித்துக் கொண்டு தனக்கான ராஜ்யத்தை ஆள நுழைந்தான்.

யார் பார்த்தாலும் கவலை இல்லை என்பது போல் வேகம் நடை போட்டவன்  பக்கத்தில் வருபவளின் திணறலை உணர்ந்து சிரித்தான் உள்ளுக்குள். அறைக்குள் வந்ததும் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு,  “ஏதோ சிங்கத்து கிட்ட மாட்டின மாதிரி ஒரு உணர்வுங்க.” என்றவளுக்கு அவன் புன்னகையை பதிலாக கொடுத்தான்.

அகல்யா கம்பெனிக்கு வராமல் இருந்த நாட்கள் குறைவு என்பதால் தனக்கு தெரிந்தவரை அனைத்து தகவல்களையும் கொடுத்தாள். “சரிடா. மேனேஜர் கிட்ட பேசுனா இன்னும் நல்லா புரியும்.” என்றான்.

உடனே அவள் அழைக்க செல்ல, “மேடம் நீங்க இங்க வேலை பார்க்குற பழைய அகல்யா இல்ல.” என்று நகைக்க, பழக்க தோஷத்தில் ஓடியதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள்.

தரணியின் அழைப்பில் உள்ளே வந்த மேனேஜர் அனைத்து தகவல்களையும் கொடுத்தார். அவருக்கு தரணியின் ஆளுமை தெரியும் என்பதால், “ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் திரும்பவும் நீங்க இங்க வந்தது. இனிமே இந்த கம்பெனி பல மாற்றங்களை பார்க்கும்.” என்று வாழ்த்து தெரிவித்தார்.

புன்னகை முகமாக நன்றி உரைத்தவன், “மேடம்க்கு இங்க ஒரு சீட் ரெடி பண்ணி வைங்க. நாங்க கம்பெனிய பார்த்துட்டு வந்துடுறோம்.” என்றவன் புறப்பட்டான் மேற்பார்வையிட.

“எனக்கு எதுக்கு தரணி இதெல்லாம்.”

“கொஞ்ச நாள்ல இந்த கம்பெனிய முழுசா நிர்வாகம் பண்ண போறது நீதான.” என்றதும் நடந்து கொண்டிருந்தவள் அதிர்ந்து நின்றாள்.

சிலையாகிய மனைவி தோள் மீது கை போட்டு தன்னுடன் சேர்த்துக் கொண்டவன், “முதலாளி அம்மா ஷாக்காகி நிக்கிறதை பார்த்தா எல்லாரும் பைத்தியம்னு நினைக்க போறாங்க.” என்று நிறைவடையாத புன்னகையோடு அவள் புன்னகையை வாங்கிக் கொண்டவன் நகர்ந்தான்.

****

புன்னகை முகமாக கம்பெனியை சுற்றி வந்தவன் தன் அறையில் அமர, லேசாக நடுக்கம் பிறந்தது. அதை தொடர விரும்பாதவன் அவளோடு பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தான். இருந்தும் மனம் லேசாக முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. பேச்சில் தடுமாற்றத்தை உணர்ந்தான். முழுவதும் தன்னை பலவீனப்படுத்தி  சோர்வடைவதற்குள் இருக்கையை விட்டு எழுந்தவன் வேகமாக நடக்க தொடங்கினான்.

கணவன் நடவடிக்கையை கண்டுகொண்டாள். தன்னால் முடிந்தவரை அவன் மனதை மாற்ற முயற்சிக்க, “முடியல அகல்” என்றவன் நடையும் இப்பொழுது தளர ஆரம்பித்தது. தரையில் அமர்ந்தவன் தலையில் கை வைத்துக் கொண்டு புலம்பினான். தாங்கள் இருக்கும் அறை கதவை சாற்றி விட்டு வந்தவள்,

“ரிலாக்ஸ்!” என்று முதுகை நீவி விட துவங்கினாள். பத்து நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் வேகமாக எழுந்து நிற்க, பயத்தில் அவளும் எழுந்து நின்றாள். “இதுக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்  குடிச்சுக்கட்டுமா.” என்று கெஞ்சியவன் அவள் மறுக்க ஆரம்பித்ததும் முரண்டு பிடித்தான்.

“உங்க கிட்ட இந்த வார்த்தைய எதிர்பார்க்கலங்க. இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு இப்ப என்ன? இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கம்பெனியில இருந்திடுங்க நாளைல இருந்து உங்களுக்கே பழகிடும்.” என்று சமாதானப்படுத்த, அவை எதுவும் வேலை செய்யவில்லை.

அவள் காலடியில் விழுந்தவன் காலை பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்தான். அவன் கொடுத்த அழுத்தத்தில் அமரக்கூட முடியவில்லை அகல்யாவால். குனிந்தவாறு அவனை எழுப்பிக் கொண்டிருக்க, கண் மூடி தளர்ந்து படுத்தான் தரையில்.

பக்கத்தில் அமர்ந்துக் கொண்டவள் தன் மடி மீது அவன் தலையை மாற்றி வைத்து, “அவ்ளோ தான் இன்னும் பத்து நிமிஷம் போனா எல்லாம் சரியாகிடும். உங்க அப்பா அங்க முடியாம ஹாஸ்பிடல்ல இருக்காரு. அவங்க வர வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு. அப்போ தான் உங்க அம்மா பழைய மாதிரி உங்க கிட்ட பேசுவாங்க. கொஞ்சம் பொறுத்துக்கோங்க.” மெதுவாக அதே நேரம் அழுத்தத்துடன் தலைகோதிக் கொண்டு பேசினாள்.

வயிற்றோடு ஒட்டிக்கொண்டவன், “தல ரொம்ப பாரமா இருக்கு. வயிறெல்லாம் ரொம்ப எரியுது. யாரோ என்னை கட்டிப்போட்டு வச்சிருக்க மாதிரி தோணுது.” என்றவனோடு சாய்ந்து கொண்டவள்,

“சரியாகிடும் இன்னும் கொஞ்ச நேரம் தான்.” முதுகை தடவி கொடுத்தாள்.

கையில் நடுக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது அவன் மன அழுத்தத்தை போல். கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் தரையில் விழ… தலையில் அடிபட்டது. கணவனின் தலையை தூக்கி  அவள் தடவி கொடுக்க, அதையும் மீறி நான்கு ஐந்து முறை வேகமாக முட்டிக் கொண்டான் வேண்டுமென்று.

அன்று போல் அவள் கை வைத்து தடுக்க வர, அதை பற்றி தடுத்து முட்டும் வேலையில் இறங்கினான். நேரம் செல்ல  இடிக்கும் வேகமும் அதிகரித்தது. அவளால் தடுக்க முடியாமல் போக, சோர்ந்து கண் மூடினான். லேசாக கண் கலங்கியது அகல்யாவிற்கு. அதை தனக்குள் உறிஞ்சி கொண்டு மடிமீது தலையை தூக்கி வைத்தாள்.

இடிக்கும் பொழுது இருந்த வெறி குறைந்து இப்போது வலிக்க ஆரம்பித்தது. முகம் சுருங்குவதை வைத்து உணர்ந்து கொண்டவள், “இதுக்கு தான் சொன்னங்க கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு. இப்ப யாருக்கு வலிக்குது உங்களுக்கா எனக்கா? வேற ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க? உங்க அப்பாக்கு பக்கத்துல நீங்களும் படுக்க வேண்டியது தான். அப்புறம் நானும் உங்க அம்மாவும் நடுதெருவுல தான் உட்காரனும்.” அவள் கோபத்தோடு திட்டிக் கொண்டிருக்க,

“திட்டாத அகல் ரொம்ப வலிக்குது.” முகத்தை வயிற்றோடு புதைத்துக் கொண்டான். பின்னந் தலையில் அழுத்தம் கொடுத்து நன்றாக தேய்த்து விட்டவள் இன்னும் தன்னோடு சேர்த்துக் கொண்டாள். பின்னந்தலை கொடுத்த வலியில் உதறல் கொஞ்சம் நின்றது. அதனால் அவன் விலகி, “சாரி” என்றிட, முறைத்துக் கொண்டே அவனை விட்டு விலகினாள்.

தவறு செய்து விட்டதால், “இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன். முறைக்காத அகல் பார்க்கவே பயமா இருக்கு.” என அவளை சிரிக்க வைக்க முயற்சிக்க, இன்னும் தான் அவளின் கோபம் அதிகரித்தது.

அதை உணர்ந்து அவன் பாவமாக முகத்தை வைக்க, அறை கதவு தட்டப்பட்டது. தரணி எழுந்து  கதவை திறக்க சென்றான். வழி மறித்து முன்னாள் நின்றவள், “இன்னொரு தடவை உங்கள நீங்களே தண்டிக்கிறதை பார்த்தேன் அப்புறம் நான் தண்டிக்க வேண்டியதா இருக்கும்.” என்று விட்டு கலைந்திருந்த அவன் முடியை சரி செய்தாள்.

புன்னகையோடு அவன் கதவை திறக்கச் செல்ல, மீண்டும் வழி மறித்து  கலைந்திருந்த சட்டையை அழகு படுத்தினாள். அகல்யாவின் இரு  கன்னங்களையும் கிள்ளியவன், “ரொம்ப நேரமா தட்டிட்டு இருக்காங்க. திறக்கலைன்னா நம்ம ஏதோ பண்றதா தப்பா நினைச்சுப்பாங்க. உன் கூட எல்லாம் ஏலியன் கூட குடும்பம் நடத்தாதுன்னு அவங்களுக்கு தெரியாது பாரு.” என்றவளின் முறைப்பை வாங்கிக்கொண்டு கதவை திறந்தான்.

தயாளன் இல்லாததால் கையெழுத்து வாங்க வேண்டிய பத்திரங்களை நீட்டினார் மேனேஜர். அவனது கைகள் மனைவி புறம் திரும்ப, பத்திரம் இடம் மாறியது அவள் கைகளுக்கு. தரணியை அவள் யோசனையோடு பார்க்க, “படிக்கிற நிலைமையில நான் இல்ல.” மறைமுக பொருள் கொடுத்தான் அவளுக்கு.

உண்மை என்பதால் ஒரு வரி மாறாமல் படித்துப் பார்த்து அவனிடம் கொடுத்தாள்‌. மனைவி கொடுத்த நம்பிக்கையில் எதையும் பார்க்காமல் கையெழுத்து போட்டான். வந்தவர் கிளம்ப, இருவரும் கம்பெனி தொடர்பான விஷயங்களை கலந்தாலோசித்தார்கள்.

கூர்பார்வையோடு பேசிக் கொண்டிருந்தவன் விழிகள் தடுமாறுவதை வைத்து அவன் மீண்டும் மாறுகிறான் என்பதை புரிந்து கொண்டாள். எழுந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்குள் வேகமாக இருக்கையின் பின்புறம் நின்றாள். நெற்றியில் ஒரு கையும் அவன் கழுத்தை சுற்றி ஒரு கையும் வைத்துக் கொண்டவள் அவன் முகத்தருகே தன் முகத்தை வைத்து,

“அவ்ளோ தான் முடிஞ்சிடுச்சு. இன்னும் அரை மணி நேரம் இருந்துட்டீங்கன்னா மதியம் வந்துடும். இன்னைக்கு இதுவரைக்கும் போதும் வீட்டுக்கு கிளம்பிடலாம்.” என கழுத்தை சுற்றி இருந்த கையை மார்பில் வைத்து தடவி விட்டாள்.

நடுக்கம் கையில் அதிகரித்தது. இருக்கையின் கைப்பிடியில் வைத்து அதை கட்டுப்படுத்த நினைத்தவன் தோற்றுப் போனான். தன்னை கைக்குள் வைத்திருக்கும் மனைவியை வேகமாக கீழே தள்ளிவிட்டு அவன் வெளியேற பார்க்க, வழி மறைத்து நின்றாள் ஓடி சென்று.

“ப்ளீஸ்! கொஞ்சம் என் நிலைமைய புரிந்துக்கோ. மதியத்துக்கு மேல என்னால ஒரு நிமிஷம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. குடிச்சு திரும்பவும் என் அம்மா முன்னாடி அசிங்கப்படுறதுக்கு பதிலா வீட்டுக்குள்ள இருந்துக்கிறேன். என் கண்ணுல ஏதாச்சும் பட்டுச்சுன்னா அவ்ளோ தான். இங்க நடக்க வேண்டிய எல்லாத்தையும் நீயே பார்த்துக்க.” என்று வெளியேற முயல, அவனை தடுத்துக் கொண்டிருந்தாள் விடாமல்.

பொறுமையைக் கடந்தவன் கோபத்தோடு அவளை கடக்க, சட்டையை பிடித்து கீழே தள்ளினாள். மனதில் வெறி உண்டாக வேகமாக அவளை அடிக்க நெருங்கினான். பயந்து நகர்பவளின் பின்னந்தலையில் அழுத்தம் கொடுத்து ஐவிரல்களை இறுக்கியவன் அடிக்க கை உயர்த்தினான். மருண்ட விழியோடு அகல்யா அவனை ஏறிட, அந்த பார்வை தான் கட்டுப்படுத்தியது.

அவளை விட்டு விலகியவன் மண்டியிட்டு அமர்ந்து, “என்னால இதுக்கு மேல முடியாது நான் இங்க இருந்து போய் ஆகணும்.” என்று கத்தினான்.

அகல்யா சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, “சொன்னா புரியாதாடி உனக்கு? நான் இப்போ என் கண்ட்ரோல்ல இல்ல.” என்று வெளியில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் படி கத்தியவன் அங்கிருந்து வெளியேறினான்.

வேகமாக கார் ஓட்டி செல்வான் என்ற பயத்தில் அவளும் பின்னால் ஓடி வந்து காரில் அமர்ந்துக் கொண்டாள். எதுவும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தான். வேகமாக அறைக்குள் ஓடியவன் ஆடைகளை கலைத்துவிட்டு முழு குளிர்சாதன குளிரை ஏற்படுத்தி தரையில் படுத்தான்.

அவன் மனம் அடங்கட்டும் என்று அமைதி காத்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் உதறல் எடுத்தது அங்கு வீசும் குளிரால். ஆடையோடு இருக்கும் அவளுக்கே அந்த நிலைமை மோசமாக இருந்தது. அவனை பார்க்க, வெற்று உடலோடு கை கால்களை மடக்கிக் கொண்டு ஒரு ஓரமாக படுத்திருந்தான் தரணீஸ்வரன். மனைவியின் வருகையை உணர்ந்து கொண்டவன் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு, “முடியல அகல் என்னை கொன்னுடு.” என்றான் நடுங்கிக் கொண்டு.

எடுத்து வந்த போர்வையை அவன் உடலோடு சுற்றி தன் மார்போடு சேர்த்துக் கொண்டவள் எதுவும் பேசாமல் தலையை வருடிக் கொண்டிருக்க, “குளிருது!” என்றான் நடுங்கிக் கொண்டு.

குளிர்சாதனப்பெட்டியை நிறுத்துவதற்காக அவள் எழ, அனுமதிக்காமல் தன்னுடன் வைத்துக் கொண்டான். கடினப்பட்டு கட்டில் வரை அவனோடு நகர்ந்தவள் மெத்தையில் இருக்கும் இன்னொரு போர்வையை சுற்றினாள். மெல்ல குளிர் குறைய தொடங்கியது.

அவன் மனம் அடங்குவதை உணர்ந்து, “இன்னும் எத்தனை நாளைக்கு உங்களை இப்படி கஷ்டப்படுத்த போறதா உத்தேசம். சரியோ தப்போ உங்க வாழ்க்கைய விட்டு அவ போய்ட்டா. இத்தனை வருஷம் ஆனதுக்கு அப்புறமும் அதே இடத்துல இருக்குறது நல்லதுக்கு இல்லங்க. கம்பெனில உங்கள பல பேர் தப்பா பார்ப்பாங்கன்னு நினைச்சீங்களே… உண்மை என்னன்னு தெரியுமா?” என்றவள் வார்த்தையில்  தலை உயர்த்தி பார்த்தான்.

“பணத்துக்கு ஆசைப்பட்டு உங்கள மயக்கி கட்டிக்கிட்டன்னு பல பேர் பேசி இருப்பாங்க. நீங்களும் நானும் ஜோடியா வரும்போது நிறைய கண்கள் அதை ஒரு அசிங்கமா பார்த்திருக்கும். அதுக்கு எல்லாம் வருத்தப்பட்டு இருக்க முடியுமாங்க. இன்னைக்கு நம்மள பார்க்குறவங்கள நாளைக்கு இந்த உலகம் அசிங்கமா பார்க்கும்.

யாரும் இங்க ஒழுக்கமும் இல்ல. யாரும் முறை தவறி போறதும் இல்ல. குடிய நிறுத்துறது அவ்ளோ கஷ்டம் இல்ல. அதுவும் மூனு வேலையும் அதுலயே இருந்துட்டு ஒரு மனுஷன் வெளிய வரது ரொம்பவே கடினம். ஆனா வந்து தான் ஆகணும். ஒரு மகனா நீங்க செய்ய வேண்டிய கடமை இன்னும் நிறைய இருக்கு. ஒருவேளை இந்த விபத்துல உங்க அப்பா இறந்து இருந்தா…” என்றவளின் வாயை வேகமாக மூடினான்.

அதை எடுத்து விட்டவள், “இருக்குற அப்போ கஷ்டப்படுத்திட்டு போனதுக்கு அப்புறம் வருத்தப்படுறதுல எந்த லாபமும் இல்லங்க. உங்க அப்பா அம்மாவ மனசுல நினைச்சுக்கோங்க எல்லாம் சரியாகிடும். மதுவ விட இந்த உலகத்துல போதை தர விஷயம் நிறைய இருக்கு. அதுல எது உங்களுக்கு தேவைப்படும்னு நீங்க தான் ஆராய்ச்சி பண்ணனும்.” என்று இன்னும் அவனுக்கு தேவையான வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்க, கண்கள் சொருக ஆரம்பித்தது தரணீஸ்வரனுக்கு.

அறையில் இருக்கும் குளிரை தடுத்து நிறுத்தியவள் தோழியின் உதவியோடு மருத்துவரை அணுகினாள் கைபேசியில்.

முழுவதையும் கேட்டவர், “அவர உடனே நிறுத்த  விட்டிருக்க கூடாது. உடம்பு மதுக்கு அடிமையா இருந்திருக்கு பல வருஷமா. கொஞ்சம் கொஞ்சமா அளவை குறைச்சு இருக்கணுமே தவிர மொத்தமா தடை சொல்லி இருக்கக் கூடாது. இத்தனை நாள் அவர் தாக்குப் பிடிச்சதே பெரிய விஷயம். கடந்த கால மனைவியோட எண்ணங்கள் அவர் மனசுல இன்னும் இருக்கு.

ஆனா அதெல்லாம் காதலிச்ச தருணம் இல்ல ஏமாற்றிய தருணம். அவருக்கு என்ன எல்லாம் பிடிக்கும்னு தெரிஞ்சு அது அத்தனையும் அவர் மூலமா செய்ய வையுங்க. எத்தனை கோபத்தை கொட்டினாலும் விலகிப் போகாம கூடவே இருங்க. இப்ப அவர் மனசுக்கு அது மட்டும் தான் ஒரே மருந்து.” என்றவர் மேலும் பல தகவல்களை கொடுத்தார்.

அத்தனையும் கேட்டவள் வைக்கப் போகும் நேரம், “ஒருவேளை அவர் உங்களை சந்தேகப்படவும் அதிக வாய்ப்பு இருக்கு அகல்யா.” என்றதும் குழப்பத்தோடு காரணம் கேட்க,

“முன்னாள் மனைவி மாதிரி நீங்களும் விட்டுட்டு வேற ஒருத்தர் கூட போயிடுவீங்களோன்னு நினைக்கலாம். இல்லையா நீங்க காட்டுற பாசம் பொய்யின்னு சந்தேகப்படலாம். எல்லாத்துக்கும் தயாரா இருங்க. முரட்டுத்தனமான குழந்தை இப்போ உங்க கையில இருக்கு. கையால போற உங்க கவனம் சிதறாம இருக்கணும்.” என்றிட, தன்னை சந்தேகப்படுவானோ என்ற எண்ணத்தோடு அழைப்பை துண்டித்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
57
+1
0
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *