Loading

13

அறைக்குள் சென்று படுத்தவனுக்கு தூக்கம் வர மறுக்க, கப்போர்டில் இருந்த தன் குடும்ப புகைப்படத்தை எடுத்தான் ரகுநந்தன்.

அவன் கரங்கள் அந்த புகைப்படத்தை வருடிக் கொடுத்தது. உடனே தன் அலைப்பேசியை எடுத்தவன், துகிலனுக்கு அழைப்பு விடுத்து காத்திருந்தான்.

அழைப்பு துண்டிக்கப்போகும் நிலையில் தான் துகிலன் அழைப்பை ஏற்றிருந்தான். “ஹலோ… அண்ணா” என்றான் துகிலன்.

“இப்போ அம்மா எப்படி டா இருக்காங்க?” என்க,

“ம்… இப்போ பரவாயில்ல ண்ணா, நித்தி கிட்ட தான் போன் பேசிக்கிட்டு இருக்காங்க” என்றவன்,

“ஒரு நிமிஷம் லைன்லயே இரு ண்ணா. அம்மா பேசறத நீயும் கேளு” என்றவன்,  தன் அம்மாவின் அருகில் சென்று நின்றான்.

அம்பிகாவோ, தன் மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். “இப்போ பரவாயில்ல நித்தி. நீ மாப்பிள்ளையும் பேத்தியையும் பார்த்துக்கோ. நான் நார்மல் தான்” என தன் மகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

அவளோ, “ரொம்ப உடம்ப போட்டு அலட்டிக்காதனு சொன்னா கேட்கவே மாட்டேன்கிற ம்மா. எப்போ பார்த்தாலும் அண்ணன் புராணமே பாடிட்டு இருங்க” என கோபப்பட,

“என்ன டி பண்ண சொல்ற. நான் அவன புரிஞ்சுக்காம போய்ட்டதால தான என் மகன் என்னை விட்டு மூணு வருஷமா பிரிஞ்சு இருக்கான். அவன் நல்லதுக்குனு நினைச்சு நம்ம பண்ணது. இப்போ நம்ம இருந்தும் அவன் அனாதையா நிக்கிறானே” எனப் புலம்பியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அதனை துடைத்து விட்ட ராஜாராம்,

“அம்பிகா, அவனப் பத்தி தான் உனக்கு நல்லா தெரியும்ல. அவனோட விருப்பம்னு ஏதாவது உன்கிட்ட இதுவரை கேட்டு இருக்கானா? உன் விருப்பம் தான் அவன் விருப்பம்னு இருந்தவன் கல்யாண விசயத்துல அவன் ஆசைய சொன்னான், அத கேட்கிற நிலைல நீ அப்போ இல்ல. அத பேசி என்னமா ஆக போகுது, கூடிய சீக்கிரம் உன் மருமக அவன் கண்ணுக்கு கிடைக்கணும்னு உன் ஆண்டவன வேண்டிக்கோ” என சமாதானப்படுத்தினார்.

“சரி நித்தி, நீ மாப்பிள்ளைய கவனி” என்றவர், படுக்கையில் சற்று சாய்ந்து அமர்ந்தார்.

துகிலன் அங்கிருந்து வெளியேறி, தன் அலைப்பேசியை காதில் வைக்க, “அம்மா இப்போ நல்லா இருக்காங்க ண்ணா. நீ அவங்கள நினைச்சு பீல் பண்ண வேண்டாம்” என்றான் துகிலன்.

“தெரியல டா. என் மனசுக்குள்ள ரொம்ப கில்டியா பீல் ஆகுது, அம்மா பேச்ச என்னிக்காவது மீறி இருக்கனா. ஆனால் என் கல்யாண விசயத்துல மட்டும் ஏன் இப்படிலாம் நடந்துச்சு? என் ஜானுக்கு நான் உண்மையா இருக்கணும்னு நினைச்சது தப்பா டா” என்றான் ரகுநந்தன்.

“அண்ணா நீ முதல்ல அண்ணிய சீக்கிரம் இங்க கூட்டிட்டு வர பாரு ண்ணா. மருமகள பார்த்தோனே அம்மா கண்டிப்பா மாறிருவாங்க. அவங்க ஆசை உன் கல்யாணம் தான், நீ கவலப்படாத ண்ணா. தூங்கு, அம்மாவ நான் பார்த்துகிறேன்” என்றவன்,

“அண்ணா…” என தயங்க, “சொல்லு டா” என்றான் ரகுநந்தன்.

“நித்திய அடிச்சுட்டீங்களா ண்ணா…” என்றவனின் குரல் கம்மி இருக்க,

“ம்…” என்று மட்டுமே பதில் வந்தது.

“அவ இன்னும் உன்மேல உள்ள கோபத்துல அண்ணிய பத்தி தப்பா ஏதும் சொல்லிட்டாளா ண்ணா?” என்றான் துகிலன்.

“ஊர்மி சொன்னாளா…” என ரகுநந்தன் கூற,

“ஆமா ண்ணா… அவ தான் சொன்னா” என்றான் துகிலன்.

நடந்த அனைத்தையும் கூறியவன், “இன்னிக்கு என் கண் முன்னாடியே என் ஜானு என்னை விட்டு போக இருந்தா டா. எவ்ளோ வலி தெரியுமா? அது தெரியாம நித்தி கண்டதையும் பேசவும் கோபம் வந்துருச்சு, அவசரத்துல கை ஓங்கிட்டேன்” என்றான் ரகுநந்தன்.

“சரி ண்ணா, அவ அத நினைச்சு பீல் பண்ணலாம் மாட்டா. நீங்க அண்ணிய முதல்ல பாருங்க, சீக்கிரம் நம்ம வீட்டுக்கு மருமகள கூட்டிட்டு வாங்க. இங்க இருக்கிற பிரச்சனை எல்லாம் சால்வ் ஆகிரும்” என்றவன் அலைப்பேசியை வைக்க ரகுநந்தனின் மனமோ பாரமானது.

நித்திலவள்ளி தன் தங்கை தான் என்றாலும் இன்று வேறொருவனின் மனைவி அல்லவா! எந்த உரிமையில் அவளை அடித்தேன். ‘திரும்ப அவக்கிட்டயும், அம்மாகிட்டயும் நார்மலா பேச ஆரம்பிச்சா கல்யாண பேச்சுல தான் வந்து நிப்பாங்கனு தான ஒதுங்கி ஒதுங்கி போறேன். ஆனா அவ அதப் புரிஞ்சுக்காம…’ என நினைத்தவன் கட்டிலில் தன் கை முஷ்டியால் குத்தி தன் கோபத்தை தணிக்கப் பார்த்தான்.

மூன்று வருடங்களுக்கு முன் அந்த வீட்டில் அனைத்தும் அவனின் ராஜ்ஜியம் தான். அம்மா பிள்ளை. எதற்கெடுத்தாலும் தன் அம்மாவின் ஆலோசனை கேட்டு நிற்பான் ரகுநந்தன்.

ஆனால் அந்நாள் மட்டும் அவனின் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் இன்று அவர்களை விட்டு பிரிந்திருக்க தேவையில்லையோ என்னமோ!.

கடினப்பட்டு கண்களை இறுக மூடி உறங்க எண்ண அவன் இமைக்களுக்கிடையே அவனின் ஜானு தோன்ற அவளின் அணைப்பின் சுவாசத்தோடு தானும் கலந்து உறவாட ஆரம்பித்தான் நித்திரையில்.

ஆதவன் தன் செங்கதிர்களை மெல்ல மெல்ல நிலமகளின் மீது படரவிட கோயம்புத்தூர் மாநகரமே பரபரப்பாக இருந்தது.

“குண்டச்சி எழுந்திரு டி. காலேஜ்க்கு லேட்டாச்சு” என மிதிலா நறுமுகையை  எழுப்பிக் கொண்டிருக்க, அவளோ “இன்னும் கொஞ்சம் நேரம் டி குட்டச்சி” என போர்வையை இன்னும் நன்றாக இழுத்து போர்த்த,

“இவள…” என சுற்றும் முற்றும் எதையோ தேடியவளின் கண்களில் ஒன்றும் சிக்காமல் போக, ஓங்கி அவளை ஒரு உதை விட போர்வையோடு நறுமுகை கட்டிலில் இருந்து கீழே உருண்டிருந்தாள்.

“அடியேய் குட்டச்சி” என கண்களை அவள் உருட்டிக் கொண்டே எழுந்து நிற்க, தன் தங்கையைக் கண்டவளுக்கு சிரிப்பு பீறிட்டு வந்தது.

“அழகு டி கண்ணம்மா” என மிதிலா திருஷ்டி சுற்ற,

“ஏன் டி, எட்டி உதைச்சுட்டு கிண்டல் வேற பண்றியா” என அவளை துரத்த ஆரம்பித்தாள் நறுமுகை.

வெளியே ஹாலுக்கு ஓடி வந்த மிதிலாவோ, தன் தந்தையின் பின் ஒளிந்து கொள்ள “என்ன மா மிது?” என அவர் கேட்டு முடிப்பதற்குள்,

நறுமுகை கலைந்த தலையுடன் கோபத்தில் மூக்கு சிவக்க அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவளைக் கண்ட சுந்தரேசனுக்கு புரிந்து விட, “இன்னும் உங்க சண்டைய விட மாட்டீங்களா ரெண்டு பேரும். பேருக்கு தான் லெக்சரர், காலேஜ் ஸ்டூடண்ட்” என்றார்.

“அப்பா அவ எழுப்பி விட்டா எழுந்திரிக்க மாட்டேன்டா ப்பா. அதான்” என அவள் பக்க நியாயத்தைக் கூறினாள் மிதிலா.

“இன்னும் டைம் இருக்கு ப்பா. அதுக்குள்ள என் தூக்கத்த கெடுத்துட்டா இந்த குட்டச்சி” என வாதி தன் அக்காவின் மேல் புகார் பட்டியல் வாசிக்க, பிரதிவாதியோ தன் அம்மாவின் கை வண்ணத்தால் உருவான பில்டர் காஃபியை உறுஞ்சி உறுஞ்சி குடித்துக் கொண்டிருந்தாள்.

“பாரு, எரும மாடு கழணி தண்ணி குடிக்கிற மாதிரி குடிக்கிறத” என நறுமுகை முகத்தை சிலுப்ப,

“அத ஒரு கழுதை சொல்லுது” என்றவள் காஃபியை ரசித்து ருசித்துக் கொண்டிருக்க,

“அம்மா… எங்க எனக்கு காஃபி” என்றவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் நறுமுகை.

மிதிலாவோ, ஆற அமர உட்கார்ந்து தன் அன்னையின் காஃபியை பருகி கொண்டிருக்க அழைப்பு மணி அடித்தது.

“காலங்காத்தால யாரு ப்பா?” என்றவாறே காஃபியை உறிஞ்சிக் கொண்டே கதவைத் திறந்தாள் மிதிலா.

எதிரே நின்றவனைக் கண்டவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்திருக்க அவள் இதழ்கள் அருகே கொண்டு சென்றிருந்த காஃபி கப் அங்கேயே அந்தரத்தில் ஊசலாடியது.

அவள் உறிஞ்சி குடித்திருந்த, காஃபி அவள் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டிருந்தது.

இரவு உடையில், முடி கலைந்திருந்தாலும் அதிர்ந்த விழிகளுடன், எந்தவித செயற்கை ஒப்பனையும் இல்லாமல் சந்தன நிறத்தில் இருந்தவளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.

அவன் கண்கள் அவளின் பவள இதழ்கள் மேல் படர, தன்னை உடனே சரிப்படுத்திக் கொண்டவள், “யார்… வேணும்?” என அவள் திக்கி திணறி கூற,

அதற்குள் சுந்தரேசனின் குரல் ஒலித்தது. “யாரும்மா மிது?” என்க,

அவள் என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்தவளைக் கண்டு அணைக்க துடித்த கரங்களை அடக்கிக் கொண்டவன்,

“அங்கிள் நான் தான்…” என அவன் பதிலளித்தான்.

“அட நீயா பா! உள்ள வாங்க தம்பி, பாப்பா அவர உள்ள கூப்பிடு ம்மா” என்றார் சுந்தரேசன்.

“அப்பாவுக்கு இவர எப்படி தெரியும்?” என யோசனையில் இருந்தவளை, “இப்போ உள்ள வரலாமா மேடம்” என்றான் ரகுநந்தன் குறும்பாக.

அவனை அவள் முறைக்க, “பவள இதழ இப்படி போட்டு சுருக்க வேண்டாம் ஜானு, அப்புறம் எனக்கு என்ன என்னமோ தோணும். அதுக்கு அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்ல” என்றவனின் பார்வை அவள் இதழ் மேல் படர்ந்திருக்க அவள் அக்னி பழமாய் சிவந்தாள் கோபத்தில்.

உள்ளே ஒரு நெருப்பு கனலே கனன்று கொண்டிருந்தது.

அவனோ அவள் கோபத்தை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டவன் அவளைத் தாண்டி வீட்டினுள் சென்றிருந்தான்.

“வாங்க தம்பி, உட்காருங்க” என உபசரித்த சுந்தரேசன்,

“குடிக்க காஃபி இல்ல டீ?” என்றார்.

அவன் கண்கள் மிதிலாவின் கரங்களில் இருந்த காஃபி கப்பில் மேல் படர்ந்து, “காஃபி அங்கிள்” என்றான் ரகுநந்தன்.

“அம்மாடி மிது, அம்மாவ காஃபி போட சொல்லுமா” என்க,

அவனைக் கண்டு முறைத்தவள், “சரிங்க ப்பா…” என்றவாறே கிட்சனுக்குள் நுழைந்தாள் மிதிலா.

“யாரு மிது வந்துருக்கிறது” என பூங்கோதை வினவ, நறுமுகையோ, “நந்தா சார் வாய்ஸ் கேட்டுது. சார் வந்துருக்காரா?” என்றவாறே அவள் வெளியே வந்தாள்.

தன் அன்னைக் கொடுத்த காஃபியை கொண்டு வந்து அவள் நீட்ட, நறுமுகையோ, “இப்போ நம்ம என்ன பண்றது?” என யோசித்தாள்.

“என்ன முகி? உங்க சார் வந்துருக்காரு, அமைதியா இருக்க” என்றார் சுந்தரேசன்.

“வா… வாங்க சார்” என்றவள், தான் நின்ற கோலத்தைக் கண்டு அறைக்குள் சென்றாள் நறுமுகை.

“உனக்கு தம்பிய அடையாளம் தெரியுதா மா மிது? நம்ம சரவணம்பட்டி ஏரியால இருந்தப்போ என்கிட்ட டியூசன் வந்த தம்பி தான். எனக்கே அடையாளம் தெரியல, நேத்து எதேட்சையா பார்த்து பேசுனாரு” என தன் மாணவனைப் பற்றிக் கூற,

அவளோ தன் தந்தை அறியா வண்ணம் அவனை முறைத்தாள்.

“சரியா ஞாபகம் இல்ல ப்பா… உங்க கிட்ட எத்தனையோ பேர் டியூசன் படிக்க வந்தாங்க, எல்லாரையும் ஞாபகம் வச்சுக்க முடியுமா?” என்றாள் மிதிலா அவன் புறம் கோபப் பார்வையை வீசி.

அவனோ, ‘எதிர்ப்பார்த்தது தான்!’ என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்.

“உங்க கல்லூரில தான் தம்பி வேலை பார்க்கிறதா சொன்னாரு, அப்போ தான் நானும் நீங்க ரெண்டு பேரும் அங்க தான் போறீங்கனு சொன்னேன். என்கிட்ட படிச்ச பையன் இப்போ நல்ல பொஸிசன்ல இருக்கிறத பார்க்கும் போது சந்தோசமா இருக்கு தம்பி” என தன் மாணவனின் புகழ் பாட,

மிதிலாவோ தீயில் நிற்பதை போல் உணர்ந்தாள். அவனோ அவளையே பார்த்துக் கொண்டு காஃபியை அருந்த,

“பார்க்கிறத பாரு, கண்ணை நோண்டி காக்கைக்கு போட்ருவேன்” என விரல் நீட்டி எச்சரிக்க, அந்நேரம் பார்த்து சுந்தரேசன் “இருங்க தம்பி, வந்தறேன்” என தன் அறைக்குள் சென்றார்.

அவனோ அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவன், அவள் அருந்திய காஃபி கப்பை அவள் எதிர்ப்பார்க்காத நேரம் தான் எடுத்துக் கொண்டு தன் கப்பை அவள் கரங்களில் திணித்தான்.

மிதிலா கோபமாக ஏதோ கூற வருவதற்குள், அறைக்குள் சென்ற சுந்தரேசன் வெளியே வர தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் மிதிலா.

அவனோ அவள் இதழ் படிந்த கப்பிலே தன் இதழையும் பதித்தவன், காஃபியை உறிஞ்சினான்.

அப்பொழுது பூங்கோதையும் சமையற்கட்டில் இருந்து வெளியே வந்து, “வாங்க தம்பி. நேத்து அவரு சொன்னாரு உங்கள பத்தி. சின்ன பையன்ல பார்த்தது. அப்பா, அம்மாலாம் எப்படி இருக்காங்க பா” என நலம் விசாரித்தார்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க ஆன்ட்டி, உங்க காஃபி பிரமாதம் ஆன்ட்டி. இவ்ளோ டேஸ்ட்டா நான் எங்கையும் குடிச்சது இல்ல” என்றவனின் பார்வை மிதிலாவின் மேல் பதிந்திருக்க,

ஒரு கூடை ஐஸ் மழைப் பொழிந்தாற் போல் இருந்தது பூங்கோதைக்கு.

மிதிலாவோ அவன் பேச்சில் உஷ்ணப் பார்வை பார்த்தவள், அவன் தன் கரங்களில் திணித்திருந்த கப்பை அப்படியே சிங்கில் கொண்டு போய் ஊற்றி விட்டு,

“காலேஜ் கிளம்பணும் ம்மா…” என்றவள் தங்கள் அறைக்குள் சென்றாள்.

ஆனால் இங்கு ரகுநந்தனோ, தன்னவளின் காலை தரிசனம் கிடைக்கும் என்றே எதிர்ப்பார்த்து வந்திருக்க, இப்பொழுதோ தித்திப்புடன் அவள் இதழ் பட்ட காஃபி வேறு போனஸ்ஸாக கிடைத்திருக்க அதனை ரசித்து அருந்தத் தொடங்கினான்.

சிறிது நேரம் சுந்தரேசனிடம் பேசிக் கொண்டிருந்தவன், “சரிங்க அங்கிள். நான் கிளம்புறேன், காலேஜ்க்கு கிளம்பணும்” என்றவனின் பார்வை மிதிலாவின் அறையை வலம் வந்தது.

ஆனால் அவளோ உள்ளே நுழைந்தவள் தான், அதன்பின் எட்டி கூட பார்க்கவில்லை.

அவன் கிளம்பும் நேரத்தில் தான் அவன் கரங்களில் ஏற்பட்டிருந்த சிராய்ப்பைக் கண்ட சுந்தரேசன், “கைல என்ன தம்பி? அடி ஏதும் பட்ருச்சா?” என்றார்.

அந்த கேள்வி தன் அறையில் இருந்த மிதிலாவின் காதிலும் விழுந்தது. அப்பொழுது தான் அவன் காயம் பற்றி ஞாபகம் வர தலையில் அடித்துக் கொண்டவள், “இத எப்படி மறந்தேன். வலி இன்னும் இருக்கானு கூட கேட்காம விட்டுடனே” என அவள் மனம் பதற ஆரம்பித்தது.

இதுவரை அக்னி ஜீவாலையாய் கொதித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று இளக, “ஏய், குட்டச்சி. என்ன டி ஆச்சு?” என்றாள் நறுமுகை.

“ஒன்னுமில்ல” என்றவளுக்கு ஹாலிற்கு சென்று அவன் கரங்களைப் பார்க்க உந்திய மனதை அடக்கி, குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“ஒன்னுமில்ல அங்கிள், வண்டில போகும் போது ஆப்போசிட்ல வந்த வண்டி லைட்டா உரசிருச்சு” என சமாளித்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

“பார்த்து ப்பா” என்றவரிடமிருந்து, தலையசைத்து விடைபெற்றவனின் மனம் என்னவோ அங்கேயே தான் இருந்தது.

இருவரும் கிளம்பி காலை உணவை முடித்தப் பின், நறுமுகையும் மிதிலாவும் கல்லூரிக்கு கிளம்பினர்.

கீழ் தளத்திற்கு வந்து பார்கிங் ஏரியாவில் நின்றிருந்த தன் இருசக்கர வாகனத்தை உயிர்பித்தாள் மிதிலா.

அவளின் வரவுக்காக காத்திருந்தார் போல் அங்கு வந்தான் ரகுநந்தன்.

அவனைக் கண்டும் காணாதது போல் இருந்தவளின் ஓரப் பார்வை, அவன் கரங்களின் ஏற்பட்டிருந்த காயங்கள் மேல் இருந்தது.

அவனோ, அவள் அருகில் வர ‘இந்த லவ் பேர்ட்ஸ் தொல்லை தாங்கல ப்பா… எனக்கே இன்னும் பாதி புரியாம இருக்கிற நிலைமைல இவங்களுக்கு இந்த லுக்லாம் தேவையா?’ என நினைத்தாள் நறுமுகை.

அவனோ, “எனக்கு கைல வலி. அதுனால வண்டி ஓட்ட முடியாது” என அவன் யாருக்கோ கூறுவது போல் கூற,

மிதிலாவோ சுற்றி முற்றிப் பார்த்து விட்டு, “ஜீவி சார்…” என சிரஞ்சீவியை அழைத்தாள்.

அவன் அருகில் வர, “உங்க ஹெச். ஓ. டி சார்க்கு கைல கொஞ்சம் வலியாம் சார், அவர டிராப் பண்ணிருங்க” என்றவள், நறுமுகையிடம் “குட்டச்சி, வந்து வண்டில ஏறு” என்றாள் மிதிலா.

சிரஞ்சீவியோ, ‘நாங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா தான போவோம். இவன் எதுக்கு இப்போ இப்படி சீன் போடறான்’ என நினைத்தவன், தன் நண்பனைப் பார்க்க அவனோ அவனை முறைத்தான்.

“டேய், உங்க காதலுக்கு நடுவுல நான் தான் சிக்குனனா டா” எனப் புலம்பியவன்,

“அம்மாடி மிதிலா, உன்னை கையெடுத்து கும்பிடறேன். அவன தயவுசெய்து உன் வண்டில கூட்டிட்டு போ ம்மா” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

“ஹலோ. ஹலோ, நான் எப்படி போவேன்” என நறுமுகை குறுக்கிட,

“இந்த பச்சை மிளகாய மறந்துட்டனே” என அவன் பாவமாக தன் நண்பன் முகம் பார்க்க,

“அடுத்த தெருவுல இருக்கிற காஃபி ஷாப் கிட்ட வெய்ட் பண்ணுங்க முகி” என்றவன்,

“நீ வண்டிய எடு டா…” என்றான் தன் நண்பனிடம்.

“என்னவோ, பிளான் பண்ணிட்டான். இதுல இடைல மாட்டிக்கிட்டது நானும் இந்த பச்சை மிளகாயும் தான் போல!” எனப் புலம்பியவாறே இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான் சிரஞ்சீவி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்