321 views

அத்தியாயம் 13

சுபாஷினியின் குரல் கொடுத்த சத்தத்தில் அங்கிருந்த பலர் அவர்களைத் திரும்பிப் பார்த்து விட , இளந்தளிர் வழக்கம் போல் தங்கையைக் கண்டிப்பதற்காக உடனே தயாரானது அவளது கண்களும் , இதழ்களும்.

 

” சுபா ! ” கத்தவில்லையானாலும் , கண்டிப்பு இருந்தது அவளது குரலில்.

 

” ஹி ஹி சாரிக்கா ” 

 

அவள் அழைத்தது கோவர்த்தனனுக்குக் கேட்டு விட்டதல்லவா ! அது மட்டுமின்றி அங்கே அவளருகில் நின்றிருப்பது இளந்தளிர் அல்லவா ! 

 

அவர்களுக்கு அருகில் செல்லும் இவனிடம் விரைந்து வந்தான் ஹரீஷ்.

 

” கோவர்த்தனா ! ஏன் அன்னைக்குப் பாத்தும் பாக்காம போனீங்கன்னுக் கேக்கப் போறியா ?” 

 

அவர்களை நெருங்குவதற்கு முன்னரே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தான் ஹரீஷ்.

 

” இல்லடா. சுபாஷினி இருக்காங்க பாரு. அந்தப் பொண்ணோட ஹெல்த்தை விசாரிக்கப் போறேன் ” 

 

இவர்கள் இப்படி பேசிக் கொள்ள ,அங்கு தமக்கையிடம் ,

” அந்த சார் கூட வர்றது அவரோட ஃப்ரண்டா க்கா ? ” 

 

தளிரிடம் தெரியாத்தனமாகக் கேட்டுவிட ,

 

” எனக்கு எப்படித் தெரியும். அவங்க வந்ததும் கேளு ” 

 

இவர்களிடம் முன்பே பேசியிருந்தாலும் தங்கையிடம் சொன்னப் பொய்யை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதாக நினைத்து அப்படிக் கூறி இருந்தாள்.

 

அவர்களுக்கருகில் வந்த நண்பர்கள் இருவரும் ,  அக்காவையும் , தங்கையையும் புன்சிரிப்புடன் பார்த்தனர்.

 

சுபாஷினி , ” ஹாய் சார் ! ” 

கோவர்த்தனனிடம் பேச ஆரம்பித்து விட , 

 

அவனும் இளந்தளிர் மௌனமாக இருப்பதால் அவளைச் சங்கடப்படுத்தி விடக் கூடாதென சுபாஷினிக்கு பதிலளிக்க வாய் திறந்தான்.

 

” ஹாய் சுபாஷினி. நல்லா சாப்பிட்றீங்க தான ? ” 

 

அன்று மருத்துவமனையில் சேர்த்ததற்குப் பிறகு வெகு நாட்கள் கழித்து தானே அவளைச் சந்திக்கிறான். அதனால் சுபாஷினியின் உடல்நலம் பற்றிய விசாரிப்பில் பேச்சைத் தொடங்கினான்.

 

” ம்ம். நல்லா சாப்பிட்றேன் சார். இவங்க என்னோட அக்கா இளந்தளிர் . அப்போ ஹாஸ்பிடல்ல மீட் பண்ணி இருந்தாலும் மறந்து இருப்பிங்க. சோ இப்ப ஒரு தடவை இன்ட்ரொடியூஸ் ஆகிக்கோங்க ! ” என்று சுபாஷினி சொல்ல , இளந்தளிர் அவனைச் சங்கடமாய்ப் பார்க்க , கோவர்த்தனனும் அதே பார்வையைத் தான் பார்த்திருந்தான் அவளை.

 

வழக்கம் போல்  நண்பனுக்கு உதவி புரிவதாய் நினைத்து முன்னேறிய ஹரீஷ்,

 

” ஹாய் மா. ஐ யம் ஹரீஷ். இவனோட பெஸ்ட் ஃப்ரண்ட் ” 

 

என்று அவனே முன்வந்து தன்னை சுபாஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

” ஹாய் அண்ணா ! “

இவளும் சிநேகப் புன்னகை உதிர்த்திட்டாள்.

 

” அப்றம் ஹேய் இளந்தளிர் சிஸ்டர் ! நாம ஒரு தடவை மீட் பண்ணி இருந்தோம். அப்போ நான் செஞ்ச குரங்குச் சேட்டையால உங்களுக்கு கோபம் எதுவும் இருந்திருந்தா சாரிங்க ” 

 

அவன் ஒன்றை நினைத்து மன்னிப்புக் கேட்டுவிட , ஆனால் அவனுக்கு  எதிரே இளந்தளிர் முதல்முறையாக தங்கையைப் பயத்துடன் பார்த்து இருந்தாள்.

 

” என்னது ! ஹாஸ்பிடல்ல தான் பாத்துருக்கிங்கன்னு நினைச்சா ! அதுக்கப்புறமும் மீட் பண்ணி இருக்கிங்களா ?” 

 

சுபாஷினி தமக்கையின் பயந்த பார்வையைக் கண்டு விழி விரித்து நின்றாள்.

 

கோவர்த்தனன் இளந்தளிரின் பயம் நிறைந்த முகத்தையும் , சுபாஷினியின் குழப்பம் நிறைந்த கேள்வியையும் பார்த்த பின்பு நண்பனைக் கண்டான்.

 

ஹரீஷ் , ” ஏன் இவங்க இப்படி ஷாக் ஆகுறாங்க ? நண்பா இப்பவும் சம்பந்தமில்லாமல் உளறிட்டேனா ? ” வெள்ளந்தியாய்க் கேட்டான்.

 

” சம்பந்தம்லாம் இருக்கு நண்பா. ஆனால் தளிர் தான் கோபப்பட்டுத் தங்கச்சியைத் திட்டிப் பாத்துருக்கேன். இந்த சீன்ல தங்கச்சியப் பார்த்து இவங்க முறைச்சுட்டு நிக்குறாங்களே ! ” 

இவனுக்கும் ஐயம் ஏற்பட்டது.

 

அதைத் தெளியப்படுத்தும் விதமாக சுபாஷினி  பேசினாள்.

 

” சொல்லுங்க அக்கா , ஹரீஷ் அண்ணா சொன்னது உண்மையா ? ” 

 

தமக்கை இவ்விஷயத்தில் பொய் சொன்னது ஏன் ?  என்று அறிந்து கொள்ள நினைத்தாள் சுபாஷினி.

 

கோவர்த்தனனையும் , ஹரீஷையும் முறைத்துக் கொண்டே ,

  ” ஆமாம் சுபா ” 

 

அக்காவே அதை ஒப்புக் கொண்டதும் ,

‘ என்ன அம்மாகிட்ட பொய் சொல்லக் கூடாதுன்னு கண்டிச்சுட்டு இத்தனை நாளா நீங்க என்ட்டப் பொய் சொல்லி இருக்கிங்க ‘ 

 

அக்காவைக் குற்றம் சுமத்தியது இவளின் பார்வை . வெளியில் கேட்டு விட்டிருந்தால் அந்நிய நபர்கள் முன்னிலையில் சச்சரவு தேவையற்றது என்பதால் சுபா வேறெதுவும் பேசினாளில்லை.

 

கோவர்த்தனன் , ஹரீஷ் அங்கிருப்பதால் , மேற்கொண்டு , பேசிட தோன்றாமல் ,

 

” கோவர்த்தனன் சார் , ஹரீஷ் அண்ணா எனக்கு இப்போ தான் ஞாபகம் வருது. நாளைக்கு நெக்ஸ்ட் செமஸ்டருக்கான சப்ஜெக்ட்ஸ்ஸைச் செக் பண்ணி , அதுல இருக்கிறப் பாடத்துக்கு மெட்டீரியல்ஸ் கலெக்ட் பண்ணனும்னு சொல்லி இருந்தாங்க. நான் அந்த வேலையை முடிக்கனும். நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குக் கிளம்பறோம். நீங்கப் படம் பாருங்க. ஹேவ் அ ஹேப்பி டே ” 

 

விருவிருவென ஸ்கூட்டியி நிறுத்தியிருந்தப் பகுதிக்குச் சென்று , நின்று கொள்ள , 

” சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் ” 

என்று கூறி அவர்களைத் தவிர்த்து விட்டு , தங்கையிடம் போனாள்.

 

” நாம ஏதோ சொதப்பி இருக்கோம்  ஹரீஷ் . சுபாவோட முகமும் சரியில்லை. தளிரும் முகம் சுருங்கிப் போறாங்க. நாம அவங்களைப் பார்த்துப் பேசியிருந்ததை தளிர் அவங்க சிஸ்டர்கிட்ட சொல்லல போல. அதான் சுபா கோவமா போறாங்க. ” 

 

அவன் தெரிந்தோ தெரியாமலோ சரியாகக் கணித்திருந்தான் சகோதரிகள் இருவரையும்.

 

” அய்யோ ! என்னோட வாயால தான்டா இதெல்லாம் நடந்துருச்சு. நீயும், தளிரும் கோபத்தை மறந்து சுமூகமா பேசுறதுக்கான சரியான சுவிட்ச்வேஷன் இது . ஆனா என்னால எல்லாம் போச்சு ! ” 

 

இந்த முறையும் தன்னால் இப்படி ஆனதை எண்ணி ஹரீஷிற்கு வருத்தம் ஏற்பட ,

” விடுடா. அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் எப்போதும் துணையா தான் இருப்பாங்க. இப்படி இருக்கறவங்க எப்பவும் சண்டை வந்தாலும் சீக்கிரம் சேர்ந்துடுவாங்க. தளிர் தங்கச்சியை கன்வின்ஸ் பண்ணிடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ” 

 

” நாமளும் படம் பாக்க வேணாம்டா. எனக்கு ரொம்பவே கில்ட்டியா இருக்கு . கிளம்பலாம் ” கனத்த இதயத்துடன் அங்கிருந்து அகன்றனர்.

 

ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்ததும் சுபாவை சைட் மிரரில் பார்த்திட்டாள் இளந்தளிர்.

 

சுபாவோ , ” சீக்கிரம் வண்டியை ஸ்டார்ட் பண்ணுக்கா ” 

 

வீட்டிற்குப் போவதில் குறியாய் இருந்தவளிடம் அங்கே போய் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று வண்டியில் பயணம் செய்ய ,

 

” வீட்டுக்குப் போனதும் நீ என்ன சொன்னாலும் நான் கன்வின்ஸ் ஆகப் போறதில்லக்கா. சோ ட்ரை பண்ணாத ” 

 

குரல் உடைந்திருந்தது அவளுக்கு. தங்கை அழுகிறாள் என்றதும் ,

” சுபா ப்ளீஸ்டி. அழாத. இனிமேல் நான் உன்னை ஏமாத்த அப்படிச் சொல்லல ” 

தளிர் இறைஞ்சிட,

 

” நான் எதுவும் சொல்ற மாதிரி இல்லைக்கா ” 

அதற்குப் பிறகு இளந்தளிரும் தங்கையிடம் இறைஞ்சவில்லை. சுபாவும் அக்காவிடம் தன்மையாகப் பேசிக் கொள்ளவில்லை.

 

குட்டித் தங்கையின் கோபம் எத்தனை நாளைக்கு என்று விட்டு விட்டாள் தளிர்.

 

” இந்த தடவையும் என்னால தான ! ” 

விஷயத்தை விடவே மாட்டேனென்கிறான் ஹரீஷ்.

 

 கோவர்த்தனன் , ” தளிர் சமாளிச்சுக்குவாங்கன்னு சொல்லிட்டேன்ல. நீ ஃபீல் பண்ணாத. விடு ” 

 

இவனுக்கு மனம் ஆறுதல் அடைந்தால் தானே ! 

 

சுபாஷினியை தற்போது முதல் தடவையாக சந்திக்கும் வேளையில் இஃது நிகழ்ந்து விட்டது. அவனுக்கு அவளைப் பார்க்க மைதிலி போல் இருந்ததாலேயே அவள் அண்ணா என்றதும் அத்தனை சந்தோஷம் எழுந்தது அவனுக்குள்.

 

இளந்தளிரையும் சிஸ்டர் என்று தானே விளித்துக் கொண்டு இருந்தான். அவர்களுக்கிடையில் தாமே கலகம் மூட்டி விட்டதைப் போல் உணர்ந்தான். 

 

” எதிர்பாராம நடந்ததுக்கு உன்னைத் தப்பு சொல்லிக்காதடா. அவங்க தங்கச்சிகிட்ட சொல்லலன்னு நமக்குத் தெரியுமா

 என்ன  ? தளிர் மறைக்காம சொல்லியிருப்பாங்கன்னு தான நினைச்சோம் ” 

 

கோவர்த்தனன் இவனைப் பழைய துறுதுறு சுபாவத்திற்கு மாற்றுவதற்காகப் பிரயத்தனப்பட்டான். அதே சமயம் அவனுக்குள்ளும் எழுந்தது சில சந்தேகங்கள்.

 

 ‘ பிடிக்கலனா ஒதுங்கிடனும்னு நினைச்ச மனசு, பாத்ததும் பேசத்தான் தோனுச்சு. அதை என்னன்னு சொல்ல ! ‘ 

 

திரையரங்கிலிருந்து வீட்டை அடைந்த கோவர்த்தனன் , அவர்களது அடுத்த சந்திப்பு இருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான நாளில் தான் நிகழும் என்பதை அறிந்திருக்கவில்லை. 

 

” மூனு மணி நேரப் படம் தான ? நீங்க முப்பது நிமிஷத்துல வந்துட்டிங்க ? ” 

சிவசங்கரி மகள்களிடம் கேட்டார்.

 

ஆசையாகப் படம் பார்க்கப் போகிறோம் என்று கூறிச் சென்று விட்டு , வீடு திரும்பிய சின்ன மகளின் அமைதி அவருக்கு சரியாகப்படவில்லை.

 

அதற்குள் தளிர் , “ரொம்ப கூட்டம் மா. டிக்கெட் கிடைக்கல. அதான் வந்துட்டோம் ” 

 

அவளைத் தொடர்ந்து ,

” ஆமாம் மா. காலேஜ்ல குடுத்த வேலையை வேற நான் மறந்துட்டேன்.  இப்போ போய் அதைப் பண்றேன். முடிக்க அட்லீஸ்ட் ஒரு மணி நேரமாவது ஆகும் ” 

 

உடை மாற்றிய பின் அவள் கல்லூரியில் தனக்களித்த வேலையைச் செய்ய , தளிர் அவளைத் தொல்லை செய்யாது குற்ற உணர்வின் தாக்கத்தினால் கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்வையிட்டாள்.

 

ஆனால் கவனம் முழுவதும் தங்கையிடம் பொய் சொல்லி அவளை ஏமாற்றிய விஷயத்தில் தான் இருந்தது.

 

சுபாஷினி பிழை செய்து தமக்கையிடம் அறிவுரை வாங்கியது போய் , இன்று அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்காகத் தக்க சமயத்தை எதிர்நோக்கி  இருந்தாள் இளந்தளிர்.

 

அவளது எண்ணவோட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்பது சுபாஷினிக்குத் தெரியாமல் இல்லை. அவர்களை சந்தித்ததை தன்னிடம் சொல்லாமல் மறைத்ததற்கானக் காரணத்தையும் , அவசியத்தையும் என்ன சொல்லித் தெளிவுபடுத்தப் போகிறாள் ? என்பதை செல்லின் தொடுதிரையில் தெரிந்தவற்றைப் பார்த்துப் பேனாவின் உதவியுடன் கையேட்டில் எழுதிக் கொண்டு இருந்த சுபாஷினி யோசித்துக் கொண்டே அக்காவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

 

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்