313 views

எதிர்பாராத, அன்புக்குரியவரின் இழப்பின் காரணமாக கதையை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது தொடர்ந்து எழுதப் போகிறேன் நண்பர்களே! 

அத்தியாயம் 13

அன்றிலிருந்து அதிரூபாவே கணவனுக்கு உணவு கொடுப்பதை தொடர்ந்தாள்.

பிரித்வியும் உடல் முழுமையாக குணமாகும் வரை வீட்டிலிருந்து வேலை பார்த்தான்.

பாரத், “சார் ! உங்களோட வொய்ஃப் அதிரூபா மேடம் அந்த தன்வந்த் பத்தி டிடெக்டிவ் கிட்ட டீடெய்ல்ஸ் கேட்டு இருக்காங்கன்னு தகவல் வந்திருக்கு” என்க,

பிரித்விக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.அதிரூபா எப்படி இதைச் செயல்படுத்த நினைத்தாள்? தன்வந்த்தைப் பற்றி அத்தனை தூரம் சொல்லியும் துணிந்து செயல்பட்டிருக்கிறாள்.அவளுக்கு அந்த தைரியமும், ஆளுமையும் உள்ளது என்பதை முன்னரே அறிந்திருந்தானே!

“நீ எதுவும் அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் பாரத். அவங்க செய்றதை செய்யட்டும். ஆனால் ஒரு கண் வச்சுக்கோங்க.எதாவது பிரச்சினை வந்தால், உடனே ப்ரொடக்ட் பண்ணுங்க” என்றான் பிரித்வி.

அந்நேரத்தில் அதிரூபா அவர்கள் அறையில் இல்லை. அவளறியாமல் தான் இதைப் பேசிக் கொண்டிருக்கிறான்.

எதுவாக இருந்தாலும், தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு, கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அடுத்து வந்த நாட்களில், அதிரூபா வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள்.

ஏற்கனவே ஒரு விஷயத்தில் அவளை வம்பு பேசிய கூட்டம் , இப்போது மறைமுகமாக பேசிக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் காதில் வாங்காமல், தன் வேலையைப் பார்த்தவளிடம் ,

“ரூபா! அண்ணாவுக்கு  இப்போ பரவாயில்லையா?” என்று பிரித்வியைப் பற்றி விசாரித்தாள் சுஷ்மா.

“குணமாகிட்டு வர்றார் சுமி.ஒரே அதிரூபாவோட புராணமா இருக்கே?” என்று கண்களால் சுற்றிக் காட்டிய படி கேட்டாள் அதிரூபா.

“ஆமாம் ரூபா. உன்னைப் பத்திப் பேச அவங்களுக்கு சொல்லியா தரனும். பிரித்வி அண்ணாவோட ஆக்ஸிடன்ட் தான் இப்போ ஹாட் டாபிக்” என்று விளக்கினாள் சுஷ்மா.

“உஃப்!!” என்று சலித்துக் கொண்டாள் அதிரூபா.

இதெல்லாம் தெரிந்த விஷயம்!

“அவங்க வாயை அடைக்க முடியாது. விடு” என்று  அவளிடம் கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சொன்னாள் சுஷ்மா.

தன்வந்த்தின் விவரங்கள் எல்லாம் அதிரூபாவிடம் வந்து சேர்ந்தது. புத்தி வேலை குறைவு. ஆனால் , குறுக்கு வழியில் தான் எல்லாமே செய்திருந்தான். அலுவலகங்கள் முதற்கொண்டு, கார் ஷோரூம்கள் எல்லாம், அவனது குறுக்குச் புத்திக் கொடுத்தது தான்.

‘என்ன இவன் இப்படி ஃபோர்ஜரி பண்ணியிருக்கான்?’ என்று ஆச்சரியமும், கோபமும் கொண்டாள் அதிரூபா.

‘இவனை இன்னுமா விட்டு வச்சுருக்காங்க?’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள்.

அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போது, பிரித்வியிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ அதி!”

“ஹலோ பிரித்வி!”

“ஆஃபீஸில் இருந்து கிளம்பிட்டியா?” என்று கேட்டான்.

“இப்போ தான் கிளம்ப போறேன் பிரித்வி” என்று கைப்பையை எடுத்துக் கொண்டாள் அதிரூபா.

“ஓகே அதி” என்று அழைப்பைத் துண்டிக்கவும்,

“கிளம்பலாம் ரூபா” என்று சுஷ்மாவும் வந்து விட்டாள்.

அவளை வீட்டில் விட்டு விட்டு, தன் இல்லத்திற்கு வந்தாள்.

“வா அதி” என்று அவளை வரவேற்றாள் சகுந்தலா.

“அவர் என்னப் பண்றார் அத்தை? சாப்பிட்டாரா?” என்று கணவனைப் பற்றி கேட்டாள்.

“சாப்பிட்டான்மா. லேப்டாப்பில் வேலைப் பார்க்கிறான். நீ மேல போய் பாரு. நான் காஃபி கொண்டு வர்றேன்” என்று அவளை அனுப்பினார்.

“ஹாம் பிரித்வி!” என்று புன்னகையுடன் வந்த மனைவியைப் பார்த்து தானும் புன்னகைத்தவன்,

“ஹாய் அதி!” என்று அவளை அருகில் வந்து அமரச் சொன்னான்.

“வெயிட் பா. நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என்று துரிதமாக குளியலறைக்குப் போய், முகம், கை, கால் கழுவி வந்தாள் அதிரூபா.

கணவனுக்கு வலப்புறம் அமர்ந்தவள், அவனது மடிக்கணினியை வேடிக்கைப் பார்த்தாள்.

“இப்போ பெட்டரா ஃபீல் பண்றீங்களா பிரித்வி?” என்று உடல்நிலையைப் பற்றிக் கேட்டாள்.

“ம்ம்! பெட்டர் அதி. என்னோட மொபைலில் ஒன்னு விடாமல், பிரிச்சு மேய்ஞ்சிருக்கப் போல?” என்று கேட்டவாறு அவளுடைய நெற்றியில் இதழ் பதித்தான் பிரித்வி.

அவனுடைய இதழ் ஒற்றலில் ஒன்றிப் போக இருந்த மனம், கேள்வியில் திடுக்கிட்டுப் போனது.

அறியாத பாவனையை வெறியேற்றியவளது கண்களை ரசனையுடன் பார்த்தான்.

“பிரித்வி!” என்று தடுமாறினாள் மனைவி.

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் அதி. நான் சந்தேகப்பட்டுக் கேட்கலை. இந்த விஷயம் எனக்கு முன்னாடியே தெரியும். உங்கிட்ட கேட்க வேண்டாம்னு நினைச்சேன். ஆனாலும், எதனால் இதை நீ பண்றன்னு எனக்குத் தெரியனும். அதனால் தான் கேட்கிறேன். சொல்லு அதி?” என்று மென்மையாக வினவினான் பிரித்வி.

“எனக்கு உங்களை அப்படி ஆக்ஸிடன்ட் ஆகி பார்த்ததும் என்னப் பண்றதுன்னே தெரியலை பிரித்வி. உடைஞ்சு போயிட்டேன்.என்னால் முடிஞ்சதை எதாவது நான் செய்யனும்னு தான் அந்த தன்வந்த்தைப் பத்தி டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண சொன்னேன்” என்று விளக்கினாள்.

“புரியுது அதி. இதனால் உனக்கு எதாவது ஆச்சுன்னா என்னால் தாங்கிக்க முடியாது மா. இனிமேல் நான் பாத்துக்கிறேன்” என்று அவளது கன்னத்தில் உதடுகளை ஒற்றி எடுத்தான் பிரித்வி.

“நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன் பிரித்வி. அதுக்கு நோ சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை” என்று வாக்குவாதம் செய்தாள்.

அதைக் கேட்டு சிரித்த பிரித்வி,

“கண்டிப்பாக மா. எனக்கு டெக்னிக்கல் ஆக ஹெல்ப் பண்ணு” என்று அனுமதி அளித்தான்.

“அப்பறம்! எனக்கு ஆக்ஸிடன்ட் ஆனதால், உன்னோட மனசை மாத்திக்க வேண்டாம். நம்மளோட கருத்து வேறுபாடுகளைச் சரி செய்துட்டு வாழ்க்கையைத் தொடங்கலாம்”என்று அவளிடம் உறுதியாக கூறினான்.

தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, அவளைப் பலவீனப்படுத்த விரும்பவில்லை பிரித்வி.

” சரிங்க”  என்று மட்டும் கூறியவளால், தான் அனைத்தையும் மறந்து விட்டதாக சொல்ல முடியவில்லை.

🌸🌸🌸🌸

“பிரித்வி மேல உனக்கு எதாவது க்ரஷ் ஃபீல் வருதா அதிரூபா?” என்று அவளுடன் பயிலும் தோழி காஜல் வினவினாள்.

“எதுக்கு இப்படி கேட்கிற காஜல்?” என்று நிதானமாக கேட்டாள் அதிரூபா.

“இல்லை… நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி பேசிக்கிறீங்க! அது மட்டுமில்லாமல், அவன் உங்கிட்ட தான் நோட்ஸ் கேட்கிறான். எங்களை எல்லாம் மதிக்கவே மாட்டேங்குறான்” என்று பொறாமையுடன் கூறினாள்.

“அப்படி தெரியலையே காஜல். உங்க கிட்டயும் தான் அவர் பேசறார்.நான் பார்த்து இருக்கேனே!”

“பேசறான் தான். ஆனால், நாங்களா போய் பேசினால் தான் பதில் சொல்றான். உன் கூட மட்டும் தான் அவனே வந்து பேசறான்” என்று காஜல் விஷத்தைக் கக்கினாள்.

“ஃபர்ஸ்ட் க்ரஷ் ஃபீல் இருக்கான்னு கேட்ட? இப்போ, பேச்சு வேற மாதிரி போகுது காஜல். ரொம்ப தப்பு. அப்படியே க்ரஷ், லவ்ன்னு இருந்தாலும் , அது என்னோட பர்சனல் அதில் தலையிட உனக்கு உரிமையில்லை” என்று அவளுக்குப் பதிலைக் கொடுத்து விட்டு, கல்லூரி நூலகத்திற்குச் சென்று விட்டாள் அதிரூபா.

தன்னுடைய மற்ற தோழிகளில் ஒருத்தி வராததால், காஜல் மட்டுமே தன்னுடன் இருக்க, அவளிடம் இயல்பாகப் பேசிய அதிரூபாவிடம்  மனம் நோகப் பேசி விட்டாள்.

மாலையில் வீடு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தை எடுத்தவளிடம் வந்தாள் காஜல்.

“சாரி அதிரூபா. உனக்கும், பிரித்விக்கும் இருக்கிற ஃப்ரண்ட்ஷிப்பைத் தப்பா நினைச்சுட்டேன் ” என்று நல்ல பிள்ளையாக மன்னிப்புக் கோரினாள்.

“பரவாயில்லை காஜல்” என வண்டியை இயக்கிச் சென்று விட்டாள் அதிரூபா.

மறுநாள் இவ்விடயம் எப்படியோ பிரித்விக்குத் தெரிந்து விட்டது.

“நீ தான் இப்படி அதிரூபாகிட்ட சொல்லி இருக்கிற காஜல்! எனக்கு லவ் வந்தால், நான் அவகிட்ட சொல்லிக்கிறேன். எனக்குத் தூது வேலைப் பார்க்காத”என்று கடுமையாக திட்டி விட்டான்.

அத்தோடு நில்லாமல், அதிரூபாவிடமும் மன்னிப்புக் கேட்டான்.

“இட்ஸ் ஓகே பிரித்வி. நானும் எதையும் மனசில் வச்சுக்கலை”என்று விஷயத்தை அத்தோடு விட்டு விட்டனர் இருவரும்.

அதிரூபாவின் உற்ற தோழிக்கும் விஷயம் சென்று விட்டது.

” நான் திட்டிட்டேன் யாஷ். நீ எதாவது சொன்னால், பிரச்சனை ஆகிடும்” என்று சமாதானம் செய்தாள்.

தான் அவமானப்பட்டதாக உணர்ந்த காஜல் , கொஞ்ச நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை.

அதை அதிரூபாவும், பிரித்வியும் கண்டு கொள்ளவில்லை.தங்கள் படிப்பில் கவனம் செலுத்தினர்.

அதற்கடுத்த நாள் கல்லூரிக்கு வந்த காஜல், பெரிய பிரச்சினையையும் உடன் இழுத்து வந்தாள்.

தன் தந்தையுடன் வந்திருந்தவள், பிரித்வியிடம் வந்தாள்.

“உன் பேர் தான் பிரித்வியா?” என்ற அழுத்தமான குரலில் நிமிர்ந்து பார்த்தான்.

“ஆமாம் அங்கிள்” என்று அருகிலிருந்த காஜலையும் அடையாளம் கண்டு கொண்டான்.

“என் பொண்ணு காஜல் உன்னை விரும்புறா பிரித்வி. உன்னோட பேரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு சொல்லு. நாங்க வீட்டுக்கு வந்து முறையாகப் பேசறோம்” என்று கூறவும், அதிர்ந்து எழுந்தான் பிரித்வி.

“என்ன சொல்றீங்க அங்கிள்? உங்க பொண்ணு ஏற்கனவே என்னையும், என் கிளாஸ்மேட் – ஐயும் சேர்த்து வைத்துப் பேசின கோபமே இன்னும் எனக்குப் போகல. இதில் அவ என்னை லவ் பண்றான்னு வேற சொல்லிட்டு இருக்கீங்க!” அவரிடம் கேட்டவன்,

காஜலிடம், “கொஞ்ச நாள் முன்னாடி நீ பேசினது ஞாபகம் இருக்குல்ல? அப்பறம் ஏன் உங்க அப்பாவைக் காலேஜூக்குக் கூப்பிட்டு வந்து இப்படி பேச வைக்கிற?” என்று கடிந்து கொண்டான் பிரித்வி.

அவனுக்கு இவர்கள் யார் தன்னிடம் இப்படி வந்து பேசுவது? என்ற கோபம் கண்ணை மறைத்தது.

தந்தையின் முறைப்பில் அஞ்சி நடுங்கிய காஜல்,

“அப்பா வீட்டுக்குப் போனதும் எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்றேன் பிரித்வி. ப்ளீஸ்!!” என்று கெஞ்சினாள்.

பின்னர் தன் தந்தை காசிநாதனிடம்,

“நீங்க வீட்டுக்குப் போங்க அப்பா. நான் பேசிக்கிறேன்”என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

அவருக்குப் பிரித்வியின் தோரணை அவ்வளவு பிடித்தமாக இல்லை.மகளுக்காக காரில் ஏறிக் கிளம்பி சென்று விட்டார்.

” என்னப் பண்ணி வச்சிருக்க காஜல்?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.

“நான் உன்னை சின்சியர் ஆக லவ் பண்றேன் பிரித்வி. நீ அதிரூபாவை விரும்புறியோன்னு பயந்து தான், அவகிட்ட அப்படி பேசினேன். உங்க ரெண்டு பேருக்கும் இடையே லவ் இல்லைன்னு தெரிஞ்சதும், இவ்ளோ நாளாக அப்பாவைக் கன்வின்ஸ் பண்ணி, கூப்பிட்டு வந்தேன். ஆனால், எதிர்பாராமல் இப்படி நடந்துருச்சு பிரித்வி” என்று தன் பக்கத்தை அவனுக்குப் புரிய வைக்க நினைத்தாள் காஜல்.

“நீ முதலில் என்கிட்ட பேசி இருக்கனும். அப்பறம் அப்பாகிட்ட சொல்லனும். அதை விட்டுட்டு, நீங்களா முடிவெடுத்து வந்துருவீங்களா?” என்று காட்டமாக கேட்டான்.

“தப்பு தான் பிரித்வி. இதனால், நம்ம ஃப்ரண்ட்ஷிப் பாதிக்காதுல்ல?” என்று பயத்துடன் கேட்டாள்.

“சாரி காஜல். இது சரி வராது” என்று அவளுடனான நட்பை முறித்துக் கொண்டான் பிரித்வி.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்