637 views

 

ரகுவரன் 20

 

கார் இருக்கையில் அமர வைத்தவன் நின்றுகொண்டு, “தங்கம் அப்பா கிட்ட பேச மாட்டியா?” உண்மையான வருத்தத்தோடு கேட்க, “அக்கா கோவமா இருக்கு உங்க கிட்ட பேசாது.” என்றது ரகுவரனின் நகல்.

 

“உன்ன அடி வெளுக்க போறேன்டா.” என்றதும் அவன் வாயை மூடிக்கொண்டு சோளப்பொறி சாப்பிடும் வேளையில் மும்முரமாக இருக்க, “சாரிடா தங்கம்” என்றான் வருத்தத்தோடு.

 

 

தந்தை வருத்தத்தோடு மன்னிப்பு கேட்டதும் பிள்ளையின் மனம் பதறி விட்டது. தன் இயல்பை மாற்றிக் கொண்டு விரிந்த கண்களோடு, “அப்பா மான்குட்டி கோபமாலாம் இல்ல. கோவமா இருக்குற மாதிரி உங்க கிட்ட விளையாடுச்சு. உங்க மான்குட்டி கிட்ட சாரி கேட்க கூடாது தப்பு.” என்று தன் கன்னத்தில் அடித்து, தந்தையை சிரிக்க வைக்க முயன்றாள்.

 

அன்பு மகளின் தூய உள்ளத்தை கண் முன் பார்த்தவன் புன்னகையோடு நெற்றி முட்ட, “கன்னக்குழி வந்திருச்சு அப்பா.” சிரிப்பதால் வெளிவந்த கன்னக்குழியில் கை வைத்து மகிழ்ந்தாள்.

 

 

இருவரும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, “ஐஸ்கிரீம் வேணுமா தங்கம்” கேட்டான் அவள் ஆசையை நிராகரித்த ஆதங்கத்தோடு.

 

 

தந்தைக்காக அவள் “இல்லை” என தலையசைக்க, “நிஜமா” என்று கேட்டான்.

 

சிரித்த முகமாக மகள் தலையசைத்ததும், “சரி வாங்க ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.” என காரை விட்டு இறக்கி விட முயன்றான்.

 

மான்விழி இறங்கிக்கொள்ள, மகிழ் வர மறுத்தான். தந்தையானவன் பலமுறை கேட்டும் காரை விட்டு இறங்க மறுத்தவன் கார்ட்டூன் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான் தீவிரமாக. தம்பிக்காக, “நாங்க இங்கயே இருக்கோம் அப்பா நீங்க போய் வாங்கிட்டு வாங்க.” என்றாள் மான்விழி.

 

 

பல யோசனைகளுக்குப் பிறகு மகளின் ஆசைக்காக ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க முடிவெடுத்தவன் இருவரையும் காரில் அமர வைத்துவிட்டு சென்றான். கடையில் சற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ஐஸ்கிரீம் வாங்க தாமதமானது. 

 

 

காரில் அமர்ந்திருந்த மகிழ்வரன் கார்ட்டூன் படங்களை பார்த்து குதிக்க ஆரம்பித்தான். தம்பியின் மகிழ்வில் தானும் மகிழ்ந்தவள் அவனோடு ஆட்டம் போட்டாள். இருவரும் கதை உலகத்திற்கு சென்று விட்டார்கள் மகிழ்வில். மான்விழி உயரமாக இருப்பதால் அமர்ந்துக் கொண்டு விளையாட, மகிழ்வரன் குட்டி என்பதால் எகிறி குதித்து விளையாடினான். 

 

 

விளையாடும் ஆர்வத்தில் இருந்த மகிழ்வரன் தெரியாமல் கார் கதவை லாக் செய்து விட்டான். இருவரும் மழலைகள் என்பதால் அவை தெரியாமல் போக, காத்திருந்து ஐஸ்கிரீம் வாங்கி வந்தவன் கார் முன்பு நின்றான். 

 

கையில் வழியும் ஐஸ்கிரீமோடு ஒரு கையால் கார் கதவை திறக்க முயன்றான். முதலில் சாதாரணமாக முயன்றவன் தீவிரத்தை உணர்ந்து ஐஸ்கிரீமை கீழே போட்டான். தந்தையின் குரல் கேட்ட பிள்ளைகள் கதவை திறக்க முயல, அப்போதுதான் இருவரும் உணர்ந்தார்கள் கதவை திறக்க முடியவில்லை என்று.

 

 

மகிழ்வரன் பயத்தில் அழுக, மான்விழி தைரியத்தோடு, “தம்பி பாப்பா அழக்கூடாது அப்பா வெளிய தான் இருக்காங்க. கொஞ்ச நேரத்துல நம்மளை வெளிய கூட்டிட்டு போய்டு வாங்க.” என தைரியப்படுத்தினாள்.

 

“தங்கம், மகிழ்” பதட்டத்தோடு வரும் தந்தையின் குரலுக்கு,

 

“அப்பா” என்றது பிள்ளைகள்.

 

“தங்கம் கதவு லாக் ஆயிடுச்சுடா நீ பத்திரமா இருக்கியா.”

 

தந்தையோடு ஒப்பிடும் பொழுது தன் பதற்றம் குறைவு என்பதால் வார்த்தை தெளிவாக வந்தது, “நான் நல்லா இருக்கேன் அப்பா.” என்று.

 

 

“தம்பி டா” என்றவன் பதட்டம் குறையாமல் காரை சுற்றி சுற்றி வந்து திறக்க முயன்றான்.

 

“தம்பியும் நல்லா இருக்கான் அப்பா.”

 

கார் திறவுகோலை உள்ளே வைத்த மடத்தனத்தை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டவன் எப்படி திறப்பது என்று தெரியாமல் குழம்பிப் போனான் பதட்டத்தில். பிள்ளைகள் பயப்படாமல் இருப்பதற்காக பேச்சு கொடுத்துக் கொண்டே காரை சுற்றி வந்தான். 

 

 

அவன் அவசர குரலை உணர்ந்த அங்கிருந்தவர்கள் உதவ முன் வந்தார்கள். தவிர்க்காமல் உதவியை ஏற்றுக் கொண்டவன், “சார் என் குழந்தைங்க ரெண்டு பேரும் காருக்குள்ள மாட்டிக்கிட்டாங்க. பதட்டத்துல என்ன பண்றதுன்னு தெரியல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்.” என்றான் கெஞ்சும் குரலில்.

 

காருக்குள் இருப்பது குழந்தைகள் என்பதால் அனைவரும் பதட்டமாகி ஒன்று கூடினர். ரகுவரன் வந்து அரை மணி நேரங்கள் கடந்து விட்டது இன்னும் கதவு திறந்த பாடில்லை. லேசாக அழுக ஆரம்பித்த மகிழ்வரன் சுற்றி கேட்கும் சத்தத்தில் மிரண்டு அழ ஆரம்பித்தான். 

 

 

உள்ளே மாட்டி இருக்கும் பயம் ஒருபுறம், தந்தையின் பதட்டமான குரல் ஒருபுறம், தம்பியின் ஓயாத அழுகை ஒருபுறம் என்று தத்தளித்தாள் மான்விழி. மூவரும் வெளியில் சென்று ஆறு மணி நேரத்திற்கு மேலாகி விட்டதால் மகிழினி தொடர்பு கொண்டாள்.

 

 

ஐஸ்கிரீம் வாங்கி வருவதற்கு முன்னர் கைப்பேசி, கார் திறவுகோல் அனைத்தையும் மகளிடம் கொடுத்து விட்டு சென்றதால் அன்னையின் அழைப்பை அவள் தான் பார்த்தாள். பதட்டத்தில் இருந்தவள் அதை காதிற்கு கொடுக்க, “ரகு இவ்ளோ நேரம் என்ன பண்ற?” விசாரித்தாள் மகி.

 

“அப்பா காருக்கு வெளிய இருக்காங்க அம்மா” என்ற மகளின் குரலில்  அடித்து பிடித்து எழுந்து நின்றவள்,

 

“மானு என்னடா ஒரு மாதிரி பேசுற, என்ன ஆச்சு?” சற்றென்று பயம் தொற்றிக் கொண்டது அவளை.

 

மான்குட்டி பதில் அளிப்பதற்கு முன்னர் மகனின் அழுகை சத்தம் இன்னும் அவளுக்குள் அபாயம் அடிக்க, “மானு எங்கடா இருக்கீங்க, அப்பா எங்க? எதுக்காக தம்பி அழுறான்?” அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தாள்.

 

“நாங்க கார்ல இருக்கோம் ம்மா காரை திறக்க முடியல. அப்பா வெளிய இருக்காங்க.” வார்த்தைகளைப் பிச்சி போடும் மகளின் வாசகத்தில் மூச்சே நின்றது அவளுக்கு.

 

 

அடுத்த கேள்வியை கேட்க வாய் வராமல் சதி செய்ய… பிள்ளையின் அழுகை சத்தம் தான் இயல்புக்கு மீட்டது. மகள் சொன்ன வார்த்தையை திரும்ப சொல்லி கேட்டவள், “எங்கடா இருக்கீங்க இப்போ” என்று அழுக,

 

“நம்ம எப்பவும் வருவோம் இல்லம்மா அங்க தான் இருக்கும்.” அன்னையின் அழுகையில் பிள்ளைக்கும் அழுகை வந்துவிட்டது.

 

“மான்குட்டி அழாதடா செல்லம். ஒன்னும் இல்ல அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுவேன். என் பொண்ணு நான் வர வரைக்கும் அழுகாம தைரியமா இருக்கணும்.” தைரியம் கொடுத்தவள் கைபேசியை மகனிடம் கொடுக்க சொல்ல, அழுது கொண்டிருக்கும் மகன் வாங்க மறுத்தான்.

 

 

 

கைபேசியை ஒலிபெருக்கியில் வைக்க சொல்லி, “மகிழ் நீ அழுதா அக்காவும் அழுவா. நீதான் தைரியமா இருந்து அக்காவை பார்த்துக்கணும். அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க கூட இருப்பேன்.” என ஆயிரம் வார்த்தைகள் சொன்னாலும் கேட்பதாக இல்லை சிறியவன். 

 

 

பயத்தோடு பேசிக்கொண்டு  வந்தவளை பார்த்த முதியவர்கள் என்னவென்று விசாரிக்க, அரைகுறையாக பதில் சொன்னவள் புறப்பட்டாள். பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ என்ற பயத்தில் வேகமாக ஓடி வந்தவள் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அங்கு நின்றாள். 

 

 

எங்கே இருக்கிறார்கள் என சில நொடி தேடியவள் கண்டு கொண்டதும் அழுகையோடு அங்கு விரைய, ரகுவரன் மிகுந்த பதட்டத்தோடு கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். மனைவியை பார்த்ததும் கண் கலங்கி  தன் பயத்தை அவளிடம் கொட்ட செல்ல, 

 

“அறிவில்லையா ரகு உனக்கு? பசங்கள கார்ல விட்டுட்டு நீ எங்க போன. எத்தனை தடவை சொல்லி அனுப்பினேன் பத்திரமா பார்த்துக்கனு. அவங்கள பார்த்துக்காம அப்படி என்னடா பண்ணிட்டு இருந்த. ஒரு ஆறு மணி நேரம் பிள்ளைங்களை உன்னால பத்திரமா பார்த்துக்க முடியலன்னா எதுக்காக வாய் கிழிய நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்த. உன்னால என் பசங்க ரெண்டு பேரும் உள்ள சிக்கிட்டாங்க.

 

 

இந்த மாதிரி நீ ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவன்னு தான் உன் கூட பசங்கள அனுப்ப மாட்டேன்னு சொன்னேன். திமிரா பேசுற அளவுக்கு செயல்ல ஒன்னும் இல்ல ரகு நீ. போறதுதான் போற கார் கதவை திறந்து விட்டுட்டாது போயிருக்கலாம்ல. அந்த ஃபேசிக் அறிவு கூட உனக்கு இருக்காதா? என் பிள்ளைகளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு…. கொன்னுடுவேன் உன்ன.” கோபத்தில் கணவனின் குணத்தை மறந்து பேசினாள்.

 

 

துயரத்தை கொட்ட வந்தவன் அதிர்ந்து மனைவியை பார்க்க, அவளோ கண்டு கொள்ளாமல் கார் பக்கத்தில் நின்று கொண்டு பிள்ளைகளிடம் பேசினாள். ரகுவரனின் உடல் மொத்தமும் இறுக்கமாக நின்று கொள்ள, சுற்றி இருந்தவர்களின் உதவியால் கார் திறக்கும் நபர் அங்கு வந்தார். வந்தவர் உதவியால் அடுத்த சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட, வாரியணைத்துக் கொண்டாள் தன் உயிர்களை மகிழினி.

 

 

பெரியவளை விட சிறியவன் அதிக பயத்தில் இருந்ததால் தேற்ற வெகு நேரம் ஆகியது தாய்க்கு. மூவரும் கட்டியணைத்து பாச போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, பிள்ளைகள் கூட தன்னிடம் வரவில்லை என்ற ஆதங்கத்தில் ஓரமாக நின்று கொண்டான் ரகுவரன். 

 

உதவி செய்த அனைவரும் பிள்ளைகள் நலமாக இருப்பதை அறிந்து அவரவர் வேலைகளை கவனிக்க செல்ல, நால்வர் மட்டும் இப்பொழுது. ஆண் பிள்ளை தாயின் மார்போடு ஒட்டிக்கொள்ள, பெண் பிள்ளை தந்தையை தேடியது. கண் கலங்கி நிற்கும் தந்தையை பார்த்ததும் அவன் காலடியில் நின்றவள் “அப்பா” என்றழைக்க, தண்ணீர் அடுக்கடுக்காக கொட்ட ஆரம்பித்தது அவனிடம்.

 

 

தந்தையின் அழுகையில் மனம் வருந்தியவள், “எங்களுக்கு எதுவும் ஆகலப்பா. நாங்க நல்லா இருக்கோம், அழாதிங்க.” என்று ஆறுதல் படுத்த, பிள்ளையை  தன்னோடு சேர்த்துக் கொண்டவன் பயம் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தான்.

 

 

மகள் முகம் முழுவதும் முத்தத்தை மஞ்சளாக பூசியவன் மகனையும் சேர்த்தணைத்தான் தன்னோடு. சகஜ நிலைக்கு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் திரும்ப, “இனிமே இந்த மாதிரி நான் கூட இல்லாம பசங்கள கூட்டிட்டு வராத ரகு. கொஞ்ச நேரத்துல உசுரே போன மாதிரி இருந்துச்சு.” என்ற மகிழினி எதுவும் பேசாமல் கார் ஓட்டும் இருக்கையில் அமர்ந்தாள்.

 

 

ரகுவரன் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள, பிள்ளைகளையும் அமர வைத்து, வீடு வந்து சேர்ந்தாள். அதற்குள் படம் பார்க்கச் சென்ற அனைவரும் வீட்டிற்கு வந்து விட்டனர். விஷயம் கேட்டு ஆள் ஆளுக்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

 

அவர்கள் புறப்படும் முன் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். அனைவரும் பிள்ளைகளை சூழ்ந்து கொண்டு தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். பாசப் போராட்டங்கள் அனைத்தும் முடிந்த பின்னர் திட்டவில்லை என்றாலும் குறை கூறினார்கள் ரகுவரனை.

 

“பாட்டி அப்பா எங்களை விட்டுட்டு போகல தம்பி பாப்பா தான் வர மாட்டன்னு சொன்னான். நான்தான் அப்பாவ மட்டும் போக சொன்னேன். அப்பாவை திட்டாதீங்க” தந்தைக்காக மகள் பேசினாள்.

 

 

“உங்க அப்பாவ ஒன்னு சொல்லிட கூடாது உடனே உனக்கு வந்துடும்…” சலித்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு படி ஏறினாள் ரகுவரனின் மனைவி.

 

 

செல்லும் மனைவியின் முதுகை வெறித்துக் கொண்டிருந்தவன் பார்வை எங்கோ திருப்பிக் கொள்ள, “அப்பாவை யாரும் திட்டலை மானு. உங்க மேல எவ்ளோ அக்கறை இருக்குன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது ஜாக்கிரதையா இருங்கன்னு தான் சொல்றோம்.” என்றதோடு பேச்சை முடித்தார் லட்சுமி.

 

 

 

“சரிப்பா விடு ஏதோ நடந்து போச்சு. பிள்ளைகளை கூட்டிட்டு மேல போ நான் சாப்பாடு கொடுத்து விடுறேன்.” என்ற சாந்தி சாப்பாடு எடுத்து வர உள்ளே செல்ல, அனைவரும் கலைந்தார்கள்.

 

 

பிள்ளைகள் இருவரும் தந்தையை பார்த்தவாறு நின்று கொண்டிருக்க, சாப்பாடு எடுத்து வந்த சாந்தி, “இன்னும் என்னப்பா இங்க நின்னுட்டு இருக்க. மகி ஏதோ கோபத்துல பேசி இருப்பா. சண்டை போட்டுக்காம சாப்பிட்டு தூங்குங்க.” என்றவர் அவன் கையில் சாப்பாட்டை திணித்தார்.

 

***

 

உணவை மேஜை மீது வைத்தவன் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். உடை மாற்றி வந்த மகிழினி பிள்ளைகளோடு ஓய்வாக அமர்ந்தாள். நடந்த கலவரத்திலிருந்து இன்னும் இருவரும் வெளிவரவில்லை என்பதை முகத்தை வைத்து கண்டு கொண்டவள் இரு பிள்ளைகளையும் தன் மீது சாய்த்துக் கொண்டாள்.

 

அன்னையோடு ஒன்றிய பிள்ளைகள் அமைதியாக இருக்க, “இப்ப நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பாதுகாப்பா அம்மா கூட இருக்கீங்க. பயப்படாம அந்த விஷயத்தை மறக்க ஆரம்பிக்கணும்.” என்று இருவரின் தலைமீதும் முத்தம் கொடுத்தாள்.

 

 

அன்னையின் பேச்சுக்கு தலையாட்டிய இருவரும் சற்று நேரத்தில் இயல்பாக மாற, “இன்னொரு தடவை அம்மா அப்பா இல்லாம கார்ல தனியா இருந்தா டோர் எல்லாத்தையும் ஓபன் பண்ணி விடணும். ஒருவேளை இன்னைக்கு நடந்த மாதிரி இன்னொரு தடவை நடந்தா பதட்டப்படாம நல்லா மூச்சை இழுத்து விட்டு மூளைய சுறுசுறுப்பாக்கனும்.” அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும்போதே சும்மா இல்லாத குழந்தைகள்,

 

“எதுக்கும்மா?” என்ற வினாவை எழுப்பினார்கள்.

 

“நம்ம பதட்டப்பட்டா சாதாரணமா இருக்க விஷயம் கூட பெருசா தெரியும். பதட்டத்துல உணர்வுகள் தன்னோட இயல்பை மறந்து யோசிக்க விடாம செஞ்சிடும். அந்த மாதிரி நேரத்துல பதட்டப்படாம இருக்கிறது ரொம்ப கஷ்டம் தான் இருந்தாலும் கொஞ்சமாவது நிதானமா இருந்தா தான் வெளிய வர முடியும்.” 

 

 

தன்னால் முடிந்தவரை நடந்த சம்பவத்திலிருந்து பிள்ளைகளை வெளிக்கொண்டு வந்தாள். பசி எடுக்கும் நேரம் என்பதால் அவை தோதாக மறந்து போக, பசியாற்றிய அன்னை உறங்கு வைக்கும் வேளையில் ஈடுபட்டாள். தூக்கம் அவர்களிடம் வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, கத்தி கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் யாரையும் தூங்க விடாமல்.

 

 

 

மாடியில் நின்றிருக்கும் ரகுவரனுக்கு பிள்ளைகளின் சத்தம் நன்றாக கேட்டது. நடந்த சம்பவத்திலிருந்து வெளிவந்து விட்டார்கள் என்ற நிம்மதியில் மூச்சை நன்றாக இழுத்து விட்டவன் திரும்ப, அவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள் மகிழினி.

 

 

மனைவியை பார்த்ததும் அவள் பேசிய அனைத்தும் ஞாபகத்திற்கு வர, அமைதி காத்தான். கணவன் மீது இருக்கும் கோபம் இன்னும் குறையாத காரணத்தினால், “மணி ஆயிடுச்சு சாப்பிட வா.” என்றழைத்தாள்.

 

 

பதில் சொல்லாத ரகுவரன் பழைய நிலைமையில் நின்று கொண்டு வானத்தை வெறிக்க, “மணி ஆகுது நீ சாப்டினா நான் தூங்க போய்டுவேன்.” அழைத்தும் நகராமல் இருக்கும் கணவன் மீது இருக்கும் கோபம் இன்னும் அதிகரித்தது.

 

 

“எனக்கு பசிக்கல, நீ போய் தூங்கு.”

 

“பசிக்கலைன்னா என்ன அர்த்தம்? இருக்கிற பிரச்சினைய சாப்பாட்டுல காட்டாத ரகு. நீ கதை சொன்னா தான் தூங்குவன்னு உன் பசங்க அடம் பிடிக்கிறாங்க. சாப்ட்டு வந்து அவங்களை தூங்க வைக்கிற வேலைய பாரு. ஏற்கனவே பயத்துல இருக்காங்க இதுல லேட்டா தூங்குனா சரி வராது.” என்றவள் கடமை முடிந்தது போல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

 

பிள்ளைகளின் பெயர் அடிபட்டதால் எதுவும் பேசாமல் நகர்ந்தான் அவள் பின். சாப்பாட்டை ஒதுக்கி வைத்தவன் சோபாவில் அமர்ந்துக் கொண்டு பிள்ளைகளை அழைக்க, தந்தையை பார்த்ததும் மான்விழி உடனே ஓடிவிட்டது. அக்காவிற்காக தந்தை மடிமீது அமர்ந்தான் மகிழ்வரன்.

 

 

 

போன வாரம் சொல்லிய யானை கதையை சொல்லி தட்டிக் கொடுக்க, மெல்ல தூக்கம் ஆட்கொள்ள ஆரம்பித்தது இருவரையும். சீரான மூச்சு வருவதை அறிந்தவன் பிள்ளைகள் இருவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் கண் எடுக்காமல்.

 

அவன் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த மகிழினி எதுவும் பேசாமல் மகனை தூக்கிக்கொண்டு மெத்தையில் படுக்க வைத்து, மகளையும் தூக்க வந்தாள். எப்பொழுதும் மகளை தூக்க விட்டதில்லை ரகுவரன். அவள் தூக்க வரும் பொழுது தோள் மீது போட்டுக் கொள்பவன் கூடவே படுத்துக் கொள்வான். இன்று அமைதியாக இருக்கும் கணவனை அப்பொழுதுதான் கவனித்தாள் மகிழினி.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்