கணியின் அருகில் சென்னி அமர்ந்திருந்தான். அங்கிருந்த தொலைக்காட்சித் திரையில் நேரலை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள், என்னென்ன சங்கடங்கள் இருக்கிறது, அவைகளை எப்படி எல்லாம் களைந்து இருக்கிறார்கள் என்று தலைப்புச் செய்திகளில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது.
கணி அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் புரியவில்லை இப்படி ஒரு திட்டத்தை ஏன் ரகசியமாக செயல்படுத்த வேண்டும். தனியார் நிறுவனமான சென்னியின் நிறுவனம் இதை செய்ய ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும் இதற்கு அரசு ஏன் ஆதரவு தர வேண்டும். இப்படி பல கேள்விகள் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஏன் தஞ்சையின் அருகில் உள்ள கிராமத்தை தேர்வு செய்து அங்கு மரபணு மாற்றப்பட்ட நெற்பயிரை விளைவிக்க வேண்டும். இந்த கேள்வி குடைந்தது.
கணியன் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தையும் சென்னி அறிவான். அவனுடைய கேள்விகளுக்காகவே அவன் காத்துக் கொண்டிருந்தான். அவனிடம் சொல்வதில் அவனுக்கு தயக்கம் ஒன்றும் இல்லை. இப்பொழுதுதான் அவனுடைய திட்டத்தில் பாதி நிறைவடைந்துவிட்டது மீதியும் நிச்சயம் நிறைவடையும் ஏனெனில் சூழ்நிலை அப்படி.
அருகில் மேஜையின் மேலிருந்த தாள் கட்டையை உருட்டினான் கணி.
“சென்னி… உனக்கு இப்போ நல்லாவே தெரியும்.. நான் என்ன கேக்கப் போறேன்னு?” என்று மௌனத்தைக் கலைத்தான் கணி.
“உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்லணும்னு தான் சார் ஆசை. ஆனா அதை ஏத்துக்கிற மனநிலையில் நீங்க இருக்கீங்களா என்றுதான் தெரியல” சென்னி.
“என்னோட மனைவியை செவ்வாய்க்கு அனுப்பிய செய்திக்கே நான் பதட்டமடையாம உன் முன்னாடி உக்காந்திருக்கேன். இதுக்கு மேல நீ சொல்ற விஷயத்தைக் கேட்டு பதட்டமடைய ஏதாச்சும் இருக்கா என்ன?” என்று எதிர்வினா எழுப்பினான் கணி.
அவனைக் கூர்ந்து நோக்கிய சென்னி, “பதட்டப்படாம இருக்கது வேற. பதட்டம் வராத மாதிரி நடிக்கிறது வேற.. நீங்க எந்த ரகம்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்க வரிசையா உங்க வேள்விகளைக் கேளுங்க” சென்னி.
“நீ நினைச்சதை சாதிச்ச திமிரு இல்ல..”
“இல்ல சார்.. இன்னும் சாதிச்சது முடிக்கல. ஆனா யார் நினைச்சாலும் தடுக்க முடியாது…” என்றான் தீர்க்கமாக.
“எதுக்காக செவ்வாய் கிரகத்திட்டம்?” கணி.
“இது என்ன சார் கேள்வி? செவ்வாயில் மனிதன் வாழ எத்தனை நாடு முயற்சி செய்றாங்க தெரியுமா?” என்று மெல்லிய சிரிப்பொன்றை உதிர்க்க, உன்னைவிட மனிதர்களைக் கணிப்பதில் கற்றுத் தேர்ந்தவன் என்று கணி பார்வையில் உணர்த்தினான்.
“ஒரு நெல்மணி வளர்க்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என்றான் சற்று கோபமாக.
“தெரியும்.. நல்லாவே தெரியும்.. அதுக்கும் உன்னோட திட்டத்துக்கும் என்ன சம்மந்தம்?” கணி.
“விளைஞ்ச நெல்லுக்கு விலை சொல்ல விளைய வச்சவனுக்கு உரிமையில்ல.. அந்த உரிமையை விவசாயிக்குக் கொடுக்கத்தான் எல்லாத்தையும் செஞ்சோம்.. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோங்க.. ஒன் லைன் க்ளூ… முடிஞ்சா கண்டுபிடிங்க..” என்று கூறிவிட்டு சென்றான்.
அதியும் கீர்த்தியும் அவனை வாய்ப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சார்.. என்ன சார் இப்படி சொல்லிட்டு போறான்.. ரொம்ப குழப்புறான்.. இதுக்கு திராவிடன் எவ்வளவோ பரவாயில்லை..” அதி.
“அவன் நமக்கு எதுவுமே சொல்லணும்னு அவசியம் இல்லை. ஆனா க்ளூ கொடுத்துட்டு போறான்” என்று சிரித்தான் கணி.
“இவன் நல்லவனா கெட்டவனா?” கீர்த்தி.
“செம்பியன் நல்லவனா கெட்டவனா?” என்று கணி கேட்க, “கெட்டவன்” என்று இருவரும் ஒன்றுபோல் பதிலளித்தனர்.
“இதே பதிலை பல்லவி முன்னாடி சொல்லுவீங்களா?” என்று கணி கேட்க, இல்லை என்று தலையாட்டினர் இருவரும்.
“ஏன்..?”
“ஏனா என்னதான் செம்பியன் தப்பு செஞ்சிருந்தாலும் பல்லவியோட அப்பா அவர். பல்லவி மேடமைப் பொறுத்தளவு அவர் நல்லவர்..” என்றான் ஆதி.
“கடைசியா நம்மளுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்ச காரணமே பல்லவிக்கு அவர் நல்லவரா இருந்ததாலதான்… அதனால் செம்பியன் எல்லாருக்கும் கெட்டவர்னு சொல்ல முடியாது..” கீர்த்தி.
“அப்படிதான் சென்னியும்.. அடிபட்ட பாம்பு. செம்பியன் வேதாங்கிற முத்திரை பின்னாடி பல கெட்ட விஷயம் செஞ்சாரு.. ஆனா சென்னியின் ரகசிய திட்டம்… இந்த கோபம்.. இதற்கு பின்னாடி ஒரு நல்ல காரணம் இருக்கணும். என் கண்ணு முன்னாடி குற்றவாளியா இருக்க அவனை என் மனசு நிரபராதியா பார்க்குது..” என்றான் கணி.
“அந்த கிராமத்துக்கும் சென்னியோட திட்டத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கும்னு நினைக்கிறீங்க சார்.. என்னால ரெண்டையும் சேர்த்து வச்சு யோசிக்கவே முடியல..” அதி.
“வேளாண்மை… இது ஒண்ணுதான் சம்மந்தம்..” கணி.
“எப்படி சார்… செவ்வாய்க்கு விண்கலம் போறதும், வயலில் இறங்கி வேலைப் பார்க்குறதும் எப்படி ஒண்ணாகும்..” கீர்த்தி.
“அது சாத்தியமில்லாத வரைக்கும் பணக்காரன் வாழ்ந்துகொண்டே இருப்பான். ஏழை வாழாம கெட்டுப்போவான். அதாவது இங்க நான் சொல்றது விவசாயத்தை மட்டும்” கணி.
“புரியலை சார்..”
“புரியிற மாதிரி சொல்றேன் கேளு. இப்போ செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியும் அப்படின்னு நிரூபிச்சுட்டாங்க.. ஒரு பத்து வருஷமோ 20 வருஷமோ. நாம அமெரிக்கா போற மாதிரி செவ்வாய் கிரகத்துக்கு போனா அங்க வாழறதுக்கு நமக்கு என்ன தேவை..”கணி.
“அங்க தான் ஒண்ணுமே கிடையாதே. ஆக்சிஜனிலிருந்து எல்லாமே நாமதான் பார்த்துக்கணும்” கீர்த்தி.
“ஆக்ஸிஜனுக்கு ஒரு வழி பண்ணிட்டாங்க. சயனோ பாக்டீரியா வச்சு. செவ்வாயோடு குளிரைத் தாங்க முடியாது. அங்கு தண்ணியும் திரவநிலையில் இருக்காது. அதற்கும் ஒரு வழி பண்ணிட்டாங்க. சிலிக்கா ஏரோஜெல் வச்சு” என்று ஒரு நொடி நிறுத்தினான் கணி.
மற்ற இருவரும் அவனையே பார்த்தனர்.
“அப்புறம் வாழறதுக்கு தேவையான உணவை இப்ப மாதிரி எப்பயும் பூமியிலிருந்து கொண்டு போக முடியுமா? அது சாத்தியமா?” கணி.
“சாத்தியமில்லைதான்.. அதுக்காக என்ன பண்ண முடியும்?” அதி.
“என்னோட கணிப்பு சரின்னா செவ்வாய்க்கிரகத்தில் நாம எல்லாரும் போய் வாழறோம்னு வச்சுக்கோ? அப்போ மனிதனை எதை வைத்து வகைப்படுத்துவாங்க.. ஜாதி, இனம் வச்சா?” கணி.
“கண்டிப்பா.. ஜாதி, இனம் இல்லாம மனிஷ ஜாதி வாழாது..” என்று அடித்துக் கூறினான் அதி.
“அதி.. உன்னோட தேவைகள் பூர்த்தியான பிறகுதான் ஜாதி மதம் எல்லாம் வரும்..” கணி.
“ஜாதியும் இனமும் இப்போ தேவைகளாகி நாளாயிடுச்சு..” அதி.
“இப்போ ஒரு பத்து பேரை ஒரு இடத்தில் அடைச்சு வைக்கிற. முதல்நாள் பேர், ஊர் எல்லாம் கேட்டு அறிமுகம் செஞ்சுக்குவாங்க. அதில் பிடிச்சவுங்க பிடிக்காதவுங்க குழுவாக பிரிவாங்க. அடுத்த நாள் சாப்பாடுக் கொடுக்காம இரு.. அப்போ தனக்குப் பிடிச்சவுங்ககிட்ட ஆறுதல் தேடுவாங்க. மூணாவது நாளும் சாப்பாடு கொடுக்காத.. நாளாவது நாளும் சாப்பாடு கொடுக்காத. ஐந்தாவது நாள் அங்கிருந்து தப்பிக்க ஒருத்தன் வழி சொல்றான். அப்போ அவனைப் பிடிக்காதவன் ஒதுங்கிப் போவானா?” என்று கணி வினா எழுப்ப மற்ற இருவரும் கணியை விசித்திரமாக பார்த்தனர்.
“அந்த வழி சொல்றான் இல்லையா.. அவன்தான் கடவுள்..” கணி.
“செவ்வாய்க்கு முதலில் செல்ல தகுதி பெறும் ஆட்கள் பணம் உடையவர்களும் அதிகாரம் உடையவர்களும். இவுங்களுக்கு எல்லாம் கடவுளா ஒரே விவசாயி போனா என்ன ஆகும்” கணி.
“சார் என்ன சார் புரியாம பேசுறீங்க? இங்கேயே விவசாயிகளை மதிக்கிறது கிடையாது. கொத்தடிமை மாதிரி நடத்துறாங்க. அங்க மட்டும் போய் மதிப்பாங்களா? அப்படியே மதிச்சாலும் எத்தனை காலத்துக்கு?” கீர்த்தி.
“செவ்வாய் கிரகத்துக்கு போய் வாழனும்னா விண்கலன் தேவை. அதை இயக்க தெரிஞ்ச மனுஷங்க தேவை. அங்க வாழ்வதற்கு அந்த கான்கிரீட் தொழில்நுட்பம் தேவை. இது எல்லாம் தற்காலிகத் தேவைகள். அதாவது ஒரு முறை ஒரு மனுஷன் டிராவல் பண்றதுக்கு இது எல்லாம் இருந்தாபோதும். ஆனால் அங்கு நிரந்தரமாக வாழனும்னா நிச்சயம் உணவு வேண்டும். அதைத் தர விவசாயி வேணும். 50 பேர் அங்கு வாழ, ஒருத்தன் விவசாயியா இருக்கணும். மேம்போக்கான கணக்குதான் நான் சொல்றது. நீ சென்னி சொன்ன ஒரு வார்த்தை கவணிச்சியா? விளைய வச்சவனுக்கு விலை சொல்ற உரிமை இல்லையாம். அந்த உரிமையை வாங்கி கொடுக்க போறேன்னு சொன்னான். அப்ப என்ன அர்த்தம். செவ்வாய் கிரகத்தில் போய் ஒரு விவசாயி விளைய வச்சா அவன் சொல்றதுதான் விலை. விலையே நெல்லா இருந்தாலும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை.”
“சார் ரொம்ப குழப்புறீங்க..” அதி.
“செவ்வாய் கிரகத்தில் நெல் விலைமதிப்பில்லாத பொருள். அப்போ வேற ஒரு பொருளை வாங்க நெல்மணிகளை பணமா வச்சா..”
“இது சாத்தியமா..”
“நீ இங்கேருந்து ஏடிஎம் மெஷினை எடுத்துட்டு போக முடியும். ஆனா ஒரு படி நெல் ஆயிரம் ரூபாய்ன்னு விளைய வைக்கிறவன் சொன்னா என்ன செய்ய முடியும். நான் பூமிக்கு போய் சாப்பிடுறேன்னு வீராப்பா இருக்க முடியுமா? ஒரு சயின்ட்டிஸ்ட் எப்படி விளைய வைக்கலாம்னு ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனா மலிவா விளைய வைக்க முடியாது” என்று கணி வினவ, மற்ற இருவராலும் நம்ப முடியவில்லை.
********
செவ்வாய் கிரகம்…
இரவு உணவு முடித்து அனைவரும் உறங்கினர். செவ்வாய்க்கும் பூமிக்கு ஒரு நாள் என்பது ஓரளவுதான். அதனால் இரவு எட்டு மணிநேரம் உறங்கி காலை விழித்தனர்.
மதுபல்லவி வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். சூரிய உதயம் செவ்வாயில் அமர்க்களமின்றி நிகழ்ந்தது. பூமியில் கடலிலிருந்து சூரியன் எழுவதைப் பார்ப்பதே ஒரு தனி சுகம். இரவு முழுக்க நீருக்குள் அமிழ்ந்து வெட்பம் தணிந்தவன் விடியலில் தன்னை உலர்த்துவதுபோல் இருக்கும் அந்த காட்சி.
ஆனால் செவ்வாயில் கடலும் இல்லை. ஆழியில் முக்குளிக்க சூரியனுக்கும் கொடுத்து வைக்கவில்லை. தொலை தூரத்தில் தெரிந்த வெளி. செம்மை நிறம் படர்ந்த தரை. இரண்டும் வெகு தூரத்தில் தொட்டுக்கொள்ள, அதில் கடமைக்கு உதித்தான் ஆதவன். எழிலின் அரவமின்றி எளிதில் தோன்றிவிட்டானோ என்னமோ. நெருப்பைப் பிழம்பாய் உமிழவில்லை. நீல நிறத்தில் சிறிய வட்டமாய் மேழெழும்பினான். செவ்வாய் பூமியை விட தூரத்தில் இருப்பதால் அவனின் விட்டம் சிறுத்து சிறு வட்டமாகிப்போனான். ஒருவேளை பூமியிலும் இப்படி உதித்திருந்தால், அவனைச் சுற்றிய கவிகளும் குறைந்து போயிருக்கும்.
“அக்கா… இங்கதான் இருக்கியா..” தணிகை.
“அவுங்க மனசு ஷட்டில் இல்லாம சீக்கிரம் பூமிக்கு போயிட்டு வந்திருக்கு..” என்று கிண்டலடித்தனர் இரட்டையர்கள்.
“அட.. இது சூப்பரா இருக்கே.. அக்கா எங்களையும் ஏத்திக்கிட்டு போறது. நீயாவது யூரின் டீ தராம கூட்டிட்டு போவியா?” என்று தணிகை கூற, காப்பியன் அவன் தோளில் தட்டினான்.
“டேய்.. இதை மறக்க மாட்டியா நீ..”
“அது எப்படி சார் மறக்கும். டீ குடிக்கும் போதுலாம் இதுதான் ஞாபகம் வரும். மறக்குற விஷயமா நீ செஞ்சது.”
“சரி.. எல்லாரும் ரெடியா?” காப்பியன்.
“ஆமா.. எதுக்கு கேக்குற..”
“இப்போ உடல் பயிற்சி செய்யணும்..” என்றதும் அவனை முறைத்தான் தணிகை.
“வாவ்.. சூப்பர் சார்.. ஜிம் இருக்கா..” என்ற சித்திரனை முறைத்தான் தணிகை.
“சார்.. செவ்வாய் கிரகத்தில் மலை இருக்கா?” தணிகை.
“ஏன் கேக்குற…?” காப்பியன்.
“இருக்கு.. ஒலிம்பஸ் மான்ஸ்… 22 கிலோ மீட்டர் உயரம்.. இதுதான் சூரிய குடும்பத்தில் மிக உயரமான மலை..” காப்பியன்.
“அப்போ எவரெஸ்ட்..” ஆரெழில்.
“அது 8850 மீட்டர் உயரம்.. சரி.. நீ எதுக்குடா கேட்ட..” என்று தணிகையைப் பார்த்து வினவினான் காப்பியன்.
“இதோ இவன் ஜிம்முக்கு போய் பாடி பில்டப் பண்ணி அந்த மலைலேந்து குதிக்கப் போறானா? டூப் போடவும் யாராவது வேணுமே..” என்று தீவிரமாக யோசித்தான் தணிகை.
“அந்த மலைலேந்து உன்னைத் தள்ளிவிடுறேன் இருடா” என்று கருவினான் சித்திரன்.
“உனக்கு கோவம் வந்தாக்கூட எனக்கு சிரிப்பு வருது சின்ச்சான்..” தணிகை.
“சரி.. சரி.. உங்க பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கோங்க.. வாங்க கிளம்பலாம்..” காப்பியன்.
“சார்.. சும்மா இருந்தா போதும்னு கூட்டிட்டு வந்து இங்க எக்சர்சைஸ் பண்ண சொல்றீங்க..”
“அது அப்படித்தான் சொல்லுவோம். ஆனா இங்க எல்லாம் அட்டவணை இருக்கு. காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கணும்ங்கிறதுலேந்து எப்போ தூங்கணும், எப்போ சாப்பிடணும்..” என்று காப்பியன் அடுக்க, “எக்ஸ்க்யூஸ் மீ சார்.. எப்போ யூரின் போகணும்னு ஏதாவது சட்டம் இருக்கா?” என்றான் தணிகை.
“உனக்கு இன்னைக்கு ரெண்டு இட்லி கட்” என்று காப்பியன் கூற, அனைவரும் அவன் பின்னே சென்றனர்.
“என்ன கொடுமை சரவணன் இது” என்று புலம்பிய படியே தணிகை சென்றான்.
உடல் பயிற்சி முடித்த சற்று நேரத்தில் பசுமைக் கூண்டிற்கு அழைத்துச் சென்றான் காப்பியன். அங்கு மண்ணோடு சேர்த்து எதையோ கிளறிக்கொண்டு இருந்தனர்.
“மூன்று மாதம் நமக்கு தேவையான உணவை நாம கொண்டு வந்துட்டோம். ஆனா அதுக்கு பிறகு நமக்கு தேவையான பாதி உணவை இங்க விளைய வைப்போம்னு சொல்லிருக்கோம்..” காப்பியன்.
“யாரு சொல்லிருக்கா?” மதுபல்லவி.
“இது நாங்க சொன்ன சேலன்ஞ்.. எங்க நிர்வாகத்திடம்..” காப்பியன்.
“இது சாத்தியமா?” பல்லவி.
“சாத்தியம்தான்.. முயற்சி செஞ்சு பார்க்கலாம்..” காப்பியன்.
“ஒருவேளை விளைய வைக்க முடியலைனா?” வேதன்.
“பட்டினி போட்ற மாட்டீங்களே?” சித்திரன்.
“அடுத்த ஷட்டில் ரெண்டு மாசத்தில் வருது. அதுல தேவையான உணவு வரும்” காப்பியன்.
“இது ரிஸ்க்கா தோணலையா?” மதுபல்லவி.
“அதுக்குள்ள கண்டிப்பா விளைய வைக்கலாம்.. இங்க சயின்டிஸ்ட் இருக்காங்க. திருநல்லன் ஐயா, நீங்க எல்லாம் இருக்கீங்க.. முயற்சி செய்யலாம்..” காப்பியன்.
“செவ்வாய்ல இரும்பு ஆக்சைடு நிறைய மண்ணில் கலந்திருக்கும். அதனால்தான் இந்த கோள் சிவப்பா தெரியுது என்று சொன்னீங்களே. இந்த அதிகமான இரும்புச்சத்து நம்ம தாணியங்களுக்கு நல்லதா..” இரட்டையர்.
“இரும்புச்சத்து ஒண்ணும் பாதகம் செய்யாதுமா.. ஆனா இங்க வேற சில தனிமங்களும் கலந்திருக்க வாய்ப்பு இருக்கு. மண்ணோட தன்மை இறுகிப்போயிருக்கு. காத்தும் போகாது. அதாவது வேர் உள்ளுக்குள்ள ஊடுருவிப் போறது கஷ்டம்.. அதுக்கெல்லாம் ஏதாவது வழியிருக்கா?” என்று திருநல்லன் வினவ, அவரை ஆச்சரியம் பொங்க பார்த்தான் காப்பியன்.
“அப்படி பார்க்காதீங்க தம்பி. நான் பிறப்புலையே விவசாயி. இது தெரியலைனா அதைவிட வெட்கக்கேடு வேற எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை உணவைச் சாப்பிடும் அனைவருக்கும் இந்த அறிவு வேண்டும்” என்று அங்கிருந்த அனைவருக்கும் ஒரு கொட்டு வைத்தார்.
“சார்… நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான். இங்க உள்ள மண்ணில் பெர்க்கோலேட் என்னும் ரசாயனம் இருக்கு. அது நம்ம செடிகளுக்கு நல்லதில்லை. அப்புறம் இந்த மண்ணோட இறுக்கத்தைப் போக்க, கார்ட்போர்டை அரைத்து மண்ணுடன் கலந்து அதில் செடியை வளர்க்கணும். எல்லாமே இந்த பசுமைக் கூண்டிற்குள்தான் செய்யணும்” என்று காப்பியன் அனைவருக்கும் விளக்கினான்.
அதன்பிறகு அவர்களுக்கு அங்கிருந்த மண் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி எப்படி விதைப்பது என்று சொல்லிக் கொடுத்தனர்.
மதுபல்லவி, இரட்டையர் மற்றும் திருநல்லன் ஆகிய மூவரும் விதையிடும்பொழுது மிகுந்த ஆர்வத்துடன் செய்தனர். மற்றவர்களுக்கு பெரிதாக ஆர்வமில்லைதான். ஆனாலும் அதை செய்தால்தான் உணவு கிடைக்கும் என்று காப்பியன் கூற, அவனைத் திட்டிக்கொண்டே செய்தனர்.
ஒவ்வொரு நாளும் அதற்கு தேவையான நீர் ஊற்றி அதை வளர்க்க ஆரம்பித்தனர்.
ஆரல் தொடரும்…