Loading

அத்தியாயம் 12:

தடபுடலாக விருந்து ஏற்பாடானது, புது மண தம்பதியருக்கு. இந்திரஜித் தவிர, மற்ற மூவரும் எதிலும் கலந்து கொள்ளும் மனநிலையிலேயே இல்லை.

தாமரைக்கு, அடுக்களையில் உதவி செய்து கொண்டிருந்த வைஷாலியின் கரத்தைப் பார்த்தவர், “என்ன வைஷு. கையெல்லாம் சிவந்து போயிருக்கு.” என்று கேட்டார் சற்று பதறியவாறு.

“அது… சாதம் வடிக்கும் போது தெரியாம கையில ஊத்திருச்சுமா.” எனப் பொய்யுரைத்தவளுக்கு, இன்னும் கூட தனது மாமியார் வேண்டுமென்றே தன்னை காயப்படுத்தியது புரியவில்லை.

இருந்தும், அவரைத் தவறு கூற மனம் வராமல் சமாளிக்க, “பார்த்து செய்ய கூடாதா வைஷு. பாரு… எப்படி சிவந்து நிக்குதுன்னு. இதோட வேலை பார்க்காத. விடு…” என்று அவளைத் தடுத்திட,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. இப்போ பரவாயில்ல. நீங்க மத்த வேலையை பாருங்க. நான் மசாலா அரைச்சுட்டு வரேன்.” என்றவள், பின்கட்டில் இருந்த அம்மிக்கல்லுக்கு சென்றாள்.

அவள் எப்போது வீட்டில் இருந்தாலும், வீட்டை ஒரு இடம் விடாமல் சுத்தம் செய்வதில் இருந்து, சமைப்பதில் உதவி செய்வது வரை, அனைத்தும் செய்து விடுவாள். சமையல் மட்டும், தாயின் கைப்பக்குவம் வேண்டும். விடுதியில் தரும் காய்ந்த ரொட்டியில் நொந்திருப்பவளுக்கு, அதுவே தேனமிர்தமாக இருக்கும்.

“நீயே லீவுக்கு தான் வீட்டுக்கு வர்ற. அப்பவும் ஏன்க்கா, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சுட்டு இருக்க?” சத்யாவும் ஆதங்கப்பட்டுக்கொள்வாள்.

“நான் இல்லாதப்ப, நீங்க ரெண்டு பேருமா தான எல்லா வேலையும் பார்க்குறீங்க. ஷெல்ஃப், பரணி எல்லாம் அடிக்கடி க்ளீன் பண்ண முடியாதுல. அதான், நான் வர்றப்ப பண்ணிடுறேன். தீபாவளி பொங்கலுக்குன்னு, விசேஷத்து அப்ப மட்டும் இதெல்லாம் பண்ணும் போது, வேலை அதிகமா தெரியும் சத்யா. என்னாலையும் கரெக்ட்டா லீவ் அன்னைக்கு தான் வரமுடியுது. உங்களுக்கு அந்த நேரத்துல ஹெல்ப் பண்ண கூட முடியல.” என்று முகம் சுருக்குவாள்.

அதே போல இப்போதும், வேலைகளை கவனித்தவளுக்கு, மனம் தான் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்தது. அம்மிக்கல்லில் அரைக்க இயலாமல், கரம் வேறு எரிந்தாலும், அதனை விட மனதில் எரிச்சல் அதிகமாக இருந்தது.

“என்ன மேடம்… மனைவி போஸ்ட்லாம் எப்படி போகுது?” கிண்டலாக கேட்டபடி, அவளருகில் பலகையை இழுத்துப் போட்டு அமர்ந்தான் இந்திரஜித்.

அவனிடம் கடினப்பட்டு முறுவலித்தவள், “நல்லா போகுதே… என் தங்கச்சி என்ன சொல்றா?” எனக் கேட்டாள்.

“சாரி, உன் தங்கச்சி எப்படி கத்துறான்னு வேணா கேளு. பதில் சொல்றேன்.” என்று சலித்துக்கொண்டவனிடம், சிறு புன்னகையைக் கொடுத்தவள்,

“அவள் பேச்சு தான் அப்படிடா. ஆனா, பாசம் வச்சா, அவளை மிஞ்ச முடியாது.” என்னும் போதே, கண்ணீர் அதோ இதோவென தேங்கி நிற்க,

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்ல இந்தர்…” எனக் கேட்டாள்.

“பண்ணுனதுக்கு அப்பறம், அதை பத்தி பேசுறது வேஸ்ட்டு வைஷுமா. உன் தங்கச்சியும் கொஞ்ச நாள்ல புருஞ்சுப்பா. இதுக்காக கண்ணீரை விட்டு, மசாலாவை உப்பாக்கிடாத.” என்று அவள் கண்ணீரைப் பொறுக்க இயலாமல், கிண்டல் செய்து பேச்சை மாற்றினான்.

அதில் போலியாய் முறைத்தவள், “ரொம்ப கலாய்க்காதடா. அப்பறம், சத்யாகிட்ட சொல்லிடுவேன்.” என்று மிரட்டலாய் விழிகளை உருட்ட,

“என்ன சொல்லுவ?” என்றான் அமர்த்தலாக.

“ம்ம்… நீயும் நானும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம்ன்னு சொல்லுவேன். நம்ம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்ன்னு மட்டும் தெரிஞ்சுது, அவள் உன் தலையை உருட்டிருவா. எப்படி வசதி…” என்றதில்,

திருதிருவென விழித்தவன், “யம்மா தாயே. எதையாவது அவள்கிட்ட உளறி வச்சுடாத. சும்மாவே ஆடுறா… இதுல, மத்ததுலாம் தெரிஞ்சா, சந்திரமுகி பார்ட் 2 பேயா மாறிடுவா.” என்றான் பாவமாக.

பக்கென சிரித்த வைஷாலி, “அதை முதல்ல உன் அண்ணன்கிட்ட சொல்லு. அவன் தான் ஓட்டை வாய்.” என்று கேலி செய்ய,

“அப்படி எதையாவது உளறி வச்சுடுவானேன்னு தான் கொஞ்ச நாளைக்கு வீட்டு பக்கமே வராதன்னு ஐடியா குடுத்து இருக்கேன்.” எனக் குறும்புடன் கண் சிமிட்ட, “பாவம்டா அவன். சீக்கிரம் நீரஜாவை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லு.” என்றதில், “ம்ம்… அதுக்கு முன்னாடி அம்மாவை சரி கட்டணும்…” என்றான்.

சத்யா, காலையிலேயே வயலுக்கு சென்றிருந்தாள். அறுவடை வேலைகளை, ஆள் வைத்து பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யும் வேலையில் இருந்தவளுக்கு, இந்திரஜித் ‘எனக்கு அந்த வடையை தரவே இல்ல’ என்று கிண்டலடித்தது நினைவு வந்ததில், அவளை மீறி புன்னகைத்தாள்.

“சரியான அராத்து…!” தலையை ஆட்டி திட்டிக்கொண்டவளுக்கு கூடவே எழிலழகனின் முகமும் நினைவு வர, அத்துடன் சிரிப்பு நின்று போனது.

இங்கு, எழிலழகனுக்கு தான், கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவள் மற்றொருவனின் மனைவியாக கண் முன் நடமாடியதைக் காண இயலவில்லை. வலித்தது. மனம் முழுதும் வலி பிழிந்து எடுத்தது.

அவளுக்கும் வலிக்க வேண்டுமே! ஆனால், அவளோ உல்லாசமாக அந்த இந்தருடன் ஓடி பிடித்தல்லவா விளையாடுகிறாள்… எனக் கறுகியவனுக்கு, அவளை அப்படியே ஊருக்கு அனுப்பி விட வேண்டும் என்று பரபரத்தது.

அதற்கு வழி தேடிக் கொண்டிருந்தவனுக்கு, ஊரைத்தாண்டி இருக்கும் சிறு டௌனில் கடைக்கு செல்லும் வேலை இருக்க, யோசித்தபடியே தனது புல்லட்டைக் கிளப்பினான்.

அந்நேரம், இந்திரஜித்தும் வெளியில் வர, அவனைப் பார்த்த சாவித்ரி, “ஏய்யா எழிலு… தம்பிக்கும் நம்ம ஊரை சுத்தி காட்டு. பாவம் அதுவும் எவ்ளோ நேரம் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கும். சத்யாவும் வயலுக்கு போய்ட்டா…” என்றதில், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

என்னவோ, எழிலுடன் செல்வதில் இந்திரஜித்திற்கு ஒப்பவில்லை. அவனை அழைத்துச் செல்வதில், எழிலுக்கும் பிடித்தமில்லை.

இருந்தும், சாவித்ரி கூறியதில், தட்ட முடியாமல், அவனையும் புல்லட்டையும் ஒரு முறை பார்த்த இந்திரஜித், “நான் தான் வண்டி ஓட்டுவேன்” என்றான்.

“நான் ஒண்ணும், உன்னை கீழ தள்ளி விட்டுட மாட்டேன்…” எழில் முறைப்பாய் கூற,

“நீ தள்ளி விடுற வரை, நானும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன். புல்லட்டை ஓட்டிப் பார்க்க தான் கேட்டேன்.” என அவனும் சிலுப்பிக்கொண்டான்.

அவனை விசித்திரமாக பார்த்து வைத்த எழிலழகன், மறுக்கத் தோன்றாமல், இறங்கி நின்றான்.

புல்லட்டில் சென்ற இரு ஆடவர்களும், கடைவீதிக்கு செல்ல, இந்திரஜித் தான், “இப்போ ஏன் இங்க வந்து இருக்கோம்?” எனக் கேட்டான்.

“திங்ஸ் வாங்கணும்” என்றதோடு முடித்துக்கொண்டதில், அவனும் அங்கிருந்த துணிக்கடையைப் பார்த்தான்.

சத்யாவிற்கு கூட இதுவரை எதுவுமே வாங்கிக்கொடுக்கவில்லையே என்று அப்போது தான் உறைக்க, “ஒரு டென் மினிட்ஸ், இந்த கடைக்கு போயிட்டு போகலாம்.” என்று அங்கு வண்டியை நிறுத்தினான்.

“இங்க எதுக்கு?” புருவம் சுருக்கி எழில் கேட்டதில், “என் பொண்டாட்டிக்கு கிப்ட் வாங்க” என்று வெட்கப்படுவது போல நெளிந்தவன், அவன் பதிலை எதிர்பாராமல் உள்ளே செல்ல,

“பொண்டாட்டியாம் பொண்டாட்டி…” என முணுமுணுத்து விட்டு, “ஆனா, இங்க வேணாம் வேற கடைக்கு போகலாம்” என்று எழில் கூறும் முன்னே, அவன் உள்ளே சென்றிருந்தான்.

‘ப்ச்… இவன் என்ன… எதையும் காதுல வாங்க மாட்டேங்குறான்.’ என நொந்தபடி, உள்ளே சென்றவன் பயந்த படியே ஆகி விட்டது.

அங்கு வேலை செய்பவனான கண்ணன், “என்ன அண்ணே… நீங்க மட்டும் வந்துருக்கீங்க சத்யா அண்ணி வரல?” எனக் கேட்டு வைத்திட, இரு ஆடவர்களும் ஒரு கணம் திகைத்தனர்.

இந்திரஜித், திரும்பி எழிலை ஒரு பார்வை பார்க்க, அவனும் சளைக்காமல் பார்த்து வைத்தான்.

“இவரு யாருண்ணே…?” என கண்ணன் கேட்டதில், இந்திரஜித்தே “உங்க சத்யா அண்ணியோட, லவபிள் ஹஸ்பண்ட்.” என்றதும், அவன் விழித்தான்.

“அப்போ…” என எதையோ விழுங்கி விட்டு, எழிலைத் தயக்கமாய் பார்க்க, அவனுக்கு தான் முகம் கன்றியது.

“என்ன அப்போ?” இந்திரஜித் விடாமல் கேட்க, “ஒ… ஒன்னும் இல்லண்ணே…” என்று அவன் நகன்று சென்று விட, “என்னவாம் அவனுக்கு…” என்று இந்திரஜித்தும் அவன் பின்னால் செல்லப் போனதில், எழில் தடுத்தான்.

“நானும் சத்யாவும் லவ் பண்ணுனோம்.” என்று இறுகிய குரலில் கூறியதில், ஒரு நொடி அவனுக்குள் பெரும் பிரளயம் நிகழ்ந்தது.

“என்ன சொன்ன?” கூர்மையாய் இந்திரஜித் வினவ, “நானும் உன் லவபிள் பொண்டாட்டியும் லவ் பண்ணுனோம்ன்னு சொன்னேன். அப்பறம் பிரிஞ்சுட்டோம்.” என்றவன், அமைதியானான்.

அவனும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை. தேவையற்று மற்றவர்கள் அவர்களது உறவை திரித்துக் கூறி, இந்திரஜித் தவறாக எடுத்துக்கொள்வதற்கு, தானே கூறி விடுவது மேல் என்ற நிர்பந்தத்தில் தான் கூறினான். ஆனால், அதுவே எழிலின் நிம்மதியை கெடுக்கப் போகிறது என்று அவன் அறியவில்லை.

தன் காதில் விழுந்த வார்த்தைகளை ஜீரணிக்கவே சில நிமிடங்கள் ஆனது இந்திரஜித்திற்கு. அவளது விலகல், திடீர் திருமணத்தினால் என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு, உண்மை நெற்றிப்பொட்டில் அறைந்ததில், ஏனோ உருவமில்லா வலியுணர்வு இதயத்தை ரணம் செய்தது.

பின் தொண்டையை கனைத்துக் கொண்டவன், அதனை விடுத்து, அவளுக்கு புடவை பார்க்க ஆரம்பிக்க, அதுவே எழிலுக்கு சற்று ஆச்சர்யத்தை தான் கொடுத்தது. அதிகபட்சமாக கோபம் கொள்வான். பின், சமாதானம் செய்து கொள்ளலாம் என்று தான் தயாராக இருந்தான். ஆனால், அவன் எதிர்வினை எதுவும் காட்டாமல் போனதில், வியப்பு எழுந்தது.

கூடவே கடுப்பும்! ‘என்னை பார்த்தா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் கேனைப்பய மாதிரி இருக்கா…’ என மூச்சிரைத்துக்கொண்டவன், அவனை வெறுப்பேற்ற எண்ணினான்.

புடவை வாங்குவதில் மும்முரமாக இருந்த இந்திரஜித்திடம், “சதுவுக்கு, ப்ளூ கலர் தான் பிடிக்கும்.” என்று நக்கலாகக் கூறிட, திரும்பி அவனை முறைத்து வைத்தான்.

பின், “பெரிய பார்டர் தான் பிடிக்கும் இந்தர். இந்த புடவை கொஞ்சம் கனமா இருக்கு. சதுவுக்கு லைட் வெய்ட் க்ளாத் தான் பிடிக்கும்.” என்று அடுக்கிக்கொண்டே போக, பல்லைக்கடித்த இந்திரஜித்திற்கு சரமாரியாக எரிச்சல் எழுந்தாலும், வீம்பிற்காக அவளுக்கு பிடிக்காததை எடுக்க விரும்பவில்லை.

அதனால், எழில் கூறியது போன்றே, புடவையை எடுத்துக்கொண்டான். அதிலும் எழிலுக்கு வியப்பு தான்.

பின் இந்திரஜித், “எழில்…” என்று அமைதியாக அழைத்தான். அவன் என்னவென்று பார்த்ததில், “இனிமே அவளை சதுன்னு கூப்பிடாத.” என்றிட, எழில் ஏனென்று பார்த்தான்.

“என் பொண்டாட்டிக்கு நான் மட்டும் தான் ஸ்பெஷல் பேர் வச்சு கூப்பிடுவேன். சோ இனிமே சதுன்ற பேரை ஆசிட் ஊத்தி அழிச்சுடு.” என்றான் அழுத்தமாக.

“அப்டி தான் கூப்பிடுவேன்னு சொன்னா?” விழியுயர்த்தி எழில் கேட்க, “சிம்பிள். நானும் வைஷுவை செல்லமா கூப்பிடுவேன்.” என்றான் தோளைக்குலுக்கி.

“எதே?” என எழில் விழிகளை விரித்தான்.

“சரி சரி. நீயும் வைஷுமாவுக்கு ஏதாச்சு எடுத்துடு. சத்யாக்கு மட்டும் வாங்கிட்டு போனா நல்லா இருக்காது.” என்றவனை முறைத்தவனுக்கும், அதுவே சரியென்று பட்டது.

தாமரையும் சங்கடப்படக் கூடாதே! பின், புடவை தேடுதல் வேட்டையை எழில் தொடர, இப்போது இந்திரஜித் ஆரம்பித்தான்.

“ப்ச்… எழில், வைஷுமாவுக்கு பிங்க் கலர் தான் பிடிக்கும்…” என அவன் தோள் மீது கை போட்டு கூறிட, முறைக்கும் முறை அவனது ஆனது.

“அவளுக்கு, சில்க் காட்டன் தான் பிடிக்கும்.”

“ஹே! இப்படி நிறைய பூ போட்ட மாதிரி கொச கொசன்னு இருந்தா பிடிக்காது…”

“பார்டர், கோல்டன் கலர்ல இருந்தா பெட்டர்.”

“ஜிகு ஜிகுன்னு இருந்தா வைஷுமாக்கு பிடிக்காது எழில்…” அவனை ஓவர்டேக் செய்து, வெறுப்பேற்றினான் இந்திரஜித்.

அவர்கள் இருவரும் கல்லூரி நண்பர்கள் என்று எழிலுக்கும் தெரியும். இருந்தும், சிறு எரிச்சல் எழ, “இந்தர்…” என அழைத்தான் கடுப்புடன்.

புருவம் உயர்த்தி இந்திரஜித் என்னவெனக் கேட்க, “இனிமே அவளை வைஷுமான்னு கூப்பிடாத” என்றான் அழுத்தத்துடன்.

“என் ஃப்ரெண்டை நான் எப்படி வேணாலும் கூப்பிடுவேன்.” இந்திரஜித் அசட்டையாகக் கூற, “அப்போ, என் அத்தை பொண்ணை நானும் எப்படி வேணாலும் கூப்பிடுவேன்” என்று கடுகடுத்தான். இருவரும் சில நொடிகள் முறைத்தவாறு நின்றனர்.

பின், நேரம் செல்வதை உணர்ந்த எழில், என்ன நினைத்தானோ, இந்திரஜித் கூறியது போன்றே, புடவையை எடுத்துக்கொண்டான். அதில், அவன் மீது அர்த்தப்பார்வை வீசினான் இந்திரஜித்.

அத்தியாயம் 13

“ஆபிஸ் போற புருஷனுக்கு டிஃபன் செஞ்சு தருவோம்ன்ற அக்கறை இருக்கா. அட்லீஸ்ட் ஒரு டாட்டா கூட கிடையாது…” வெகுவாய் சலித்துக் கொண்டான் சிரஞ்சீவி.

“டாட்டா உப்பு வேணும்ன்னா இருக்கு. எடுத்து வாயில போட்டுக்கோங்க. டிஃபனுக்கு டிஃபனும் ஆச்சு. டாட்டா காட்டுன மாதிரியும் ஆச்சு.” நீரஜா அவனை முறைத்தாள்.

“அப்போ உப்பு கரிச்சா, வாட்டர் குடிக்கணுமே, உன்னை குடிச்சுக்கவா வாட்டர்?” கேலி நகையுடன் நீரஜாவை நெருங்கிட, ஒரு கணம் சிவந்து போனவள், “எனக்கு லேட் ஆச்சு. கிளம்புறேன்” என்று அவசரமாக இடத்தை காலி செய்ய எத்தனித்தாள்.

ஒரே எட்டில், அவளைப் பிடித்த சிரஞ்சீவி, “பதில் சொல்லாம கிளம்புனா என்ன அர்த்தம் நீரு.” அவளது இதழ் வடிவங்களை கண்களால் அளந்தபடி கேட்டவனிடம் இருந்து தப்பிக்க முயன்றவள், “பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம். இன்னும் எத்தனை நாளைக்கு வீட்டுக்கு போகாம இங்கயே இருக்குறதா உத்தேசம்.” வலுக்கட்டாயமாக கோபத்தை வரவழைத்தாள்.

“நீ என்கூட வர்ற வரைக்கும்”

“உங்க அம்மாகிட்ட சம்மதம் வாங்குங்க. நான் வரேன்.” அவள் விடாப்பிடியாக நிற்க,

“இப்போ போய் பேசுனா, அம்மா செம்மயா காண்டாவாங்க. அடிதடியா வீட்டுக்கு போகலாம் நீரு. அப்பறம் கொஞ்ச கொஞ்சமா சமாதானம் ஆகிடுவாங்க” எனப் பாவமாக உரைக்க, அவள் மறுத்து விட்டாள்.

“நான் ஒண்ணும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கல ரஞ்சி. என்னை இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளுனது நீங்க தான். அதை சரி பண்ண வேண்டிய கடமையும் உங்களோடது.” திட்டவட்டமாக உரைத்திட, அவனுக்கு லேசாய் எரிச்சல் எழுந்தது.

“நான் தான் எல்லா தப்பும் பண்ணுனேன். போதுமா… நான் ஒண்ணும் உன்னை வந்து என் அம்மா கால்ல விழுக சொல்லல. என் பொண்டாட்டியா உரிமையோட என் வீட்டுக்கு வா… நான் எல்லாத்தையும் சரி பண்றேன்னு தான் சொல்றேன்.” என அழுத்தமாகக் கூற,

“உரிமையோட வீட்டுக்கு வர்றதுக்கும், அழையா விருந்தாளியா வர்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ரஞ்சி.”

“அப்போ, நீயும் சரி அம்மாவும் சரி என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்க. அப்படி தான. அவங்க சொன்ன மாதிரி வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு வந்துருந்தா, உனக்கு குளுகுளுன்னு இருந்துருக்கும்.” என பின்னந்தலையை ஆதங்கத்துடன் கோதிக் கொண்டவன்,

“நான் கட்டுன தாலியை நீயே கழட்டி வச்சுடு. நான் எப்போ அம்மாவை சமாதானம் பண்றேனோ அப்போ வந்து உன் கழுத்துல கட்டி கூட்டிட்டு போய்க்கிறேன்.” கோபத்தில் குரலை உயர்த்தினான்.

அதில், நகத்தை ஆராய்ச்சி செய்த நீரஜா, “இதை தான நானும் முதல்லயே சொன்னேன். அம்மாவை சமாதானம் பண்ணிட்டு கூட்டிட்டு போங்கன்னு” என்று சிணுங்கலுடன் முணுமுணுக்க, சிரஞ்சீவி முறைத்தான்.

மெல்ல அவன் அருகில் வந்து, அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், “சரி நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வரேன். மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சுக்கோங்க.” என்றவளுக்கு, கணவனின் வருத்தத்தைக் காண இயலவில்லை.

“ஒண்ணும் தேவை இல்ல. நான் அம்மாவை சமாதானம் பண்ணிட்டே கூட்டிட்டு போறேன்.” என அவன் முறுக்கிக்கொள்ள,

அதில் விலகியவள், “அதுவும் சரி தான்.” என மீண்டும் ஆரம்பித்ததில், அவளை இழுத்து நெஞ்சில் போட்டுக்கொண்டவன், “ஒரு ஃபுளோல சொல்லி பார்த்தேன் வாட்டர். அந்த டயலாக்கை டெலிட் பண்ணிடு.” என்று அசடு வழிந்திட, நீரஜா வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.

இப்போது சிரஞ்சீவி நீரஜாவின் வீட்டில் தான் இருந்தான். அவளது தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்திருக்க, தந்தை ராகவனோ, அவரது மனைவியின் நினைவைத் தாங்கியபடி அந்த வீட்டில் இருக்க இயலாமல், ஈரோட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நீரஜாவையும் வரக்கூறிட, அவளுக்கு தாய் வாழ்ந்த வீட்டை விட்டு வர மனதில்லை. அதனால், அவள் மட்டுமே தந்தையைக் காண செல்வாள், ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை.

திடீரென ஒருநாள், மகளை வரக்கூறினார் ராகவன். அவளும் என்னவோ ஏதோவென்று அடித்து பிடித்து செல்ல, அவர் இருந்த வீட்டில், அவருடன் ஒரு பெண்மணியும் இருந்தார்.

அதில் புரியாமல் ராகவனைப் பார்த்ததில், “இவள் பேர் நீலா. என்கூட தான் வேலை பார்க்குறாங்க. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கோம்” என்றதும், நீரஜாவிற்கு கடும் அதிர்ச்சி.

தாயின் மீது அவர் வைத்திருந்த நேசத்தை தான் பார்த்திருக்கிறாளே. தனக்கும் கூட, தந்தையைப் போல அன்பாய் பார்த்துக்கொள்ளும் கணவன் கிடைக்கவேண்டும் என்று பல நாட்கள் நினைத்திருக்கிறாள்.

இப்போதோ, அவள் மனதில் பெரிய அடி ஒன்று தாக்க, “சரிப்பா. உங்க இஷ்டம்” என்று உணர்வற்றுக் கூறியவள், அதன் பிறகு திரும்பிப் பாராமல் வந்து விட்டாள்.

மீண்டும் தந்தை அலைபேசியில் அழைத்த போது கூட எடுக்கவில்லை. ஒரு முறை அவளைப் பார்க்க வந்த போதும், அலுவலக வேலை இருப்பதாக கூறி, அவர் ஊருக்கு செல்லும் வரை, வீட்டிற்கே வரவில்லை. அத்துடன், அவரும் தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

அளப்பறிய காதலும், நேசமும் உயிருடன் இருக்கும் உடம்புக்குத் தான். மரித்துப் போன உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் கிடையாது என்ற கருத்து அவளுள் ஆழமாய் பதிந்து போனது.

அப்போதும் காதலை வெறுக்கவில்லை. அப்படி வெறுத்திருந்தால், தனது தோழனின் அண்ணனான சிரஞ்சீவியைக் கண்டதும் காதல் செய்திருக்க மாட்டாளே!

அவளுக்கு வேண்டியதெல்லாம் குடும்ப அமைப்பு ஒன்றே. தான் இறந்த பிறகும், சிரஞ்சீவி தன் மீது காதலை கொட்டவேண்டும் என்றெல்லாம் அவளுக்கு பேராசை கிடையாது. அவன் வேறொரு பெண்ணை மணமுடித்துப் போனாலும், தனது குழந்தையை பார்த்துக்கொள்ள சொந்தமும், பெரியவர்களும் வேண்டும் என்பது மட்டுமே அவளது விருப்பம்.

இதனை நேரடியாக இந்திரஜித்திடமும் சிரஞ்சீவியிடமுமே கூறி இருக்கிறாள். இருவராலும் அவளை முறைக்க மட்டுமே முடிந்தது.

சிரஞ்சீவி தான், “நீ சொல்றதும் கரெக்ட் தான் வாட்டர். அப்போ நான் செத்துப்போனாலும், நீ கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும். டோன்ட் வொரி நம்ம பசங்களை நம்ம குடும்பம் பாத்துக்கும்.” என்றவனின் கூற்றில், ஒரு நொடி ஆடிப் போனாள்.

அதன்பிறகு, இருவருமே நாசுக்காக அப்பேச்சை தவிர்த்து விடுவர். அது இருவருக்குமே வலியைக் கொடுக்கும் போது, எதற்காக அதை பேசி கீறிக்கொள்ள வேண்டும் என்ற முதிர்ச்சி இருந்தது.

ஆனால், திருமணம் என்று வரும் போது, பானுரேகா இத்தனை நிச்சயமாக மறுப்பார் என்று சிரஞ்சீவி நினைக்கவே இல்லை.

நியாயமான ஆசைகளை அவர் என்றும் தடை செய்ததில்லை, அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடுவார்.

அத்தோடு, “அத்தைக்கு பிடிக்கலைன்னா, நம்ம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்” என்று உறுதியாகக் கூறிய நீரஜாவின் பேச்சில் இன்னுமாக உடைந்து போனான்.  

இருவரையும் சமாளிக்க தைரியமற்று, தாயையும் பகைத்துக்கொண்டு, திடீர் திருமணம் செய்து மனைவியையும் கோபப்படுத்தி, தற்போது சமாதானமும் செய்தாகிற்று.

🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

புடவையை வாங்கி விட்டு கடையில் இருந்து கிளம்பிய ஆடவர் இருவரின் முகமும் கடுகடுவென தான் இருந்தது.

இம்முறை, எழிலழகனே வண்டியை ஓட்டி, பார்மஸி முன்பு நிறுத்தினான். “இங்க போயிட்டு வந்துடுறேன்…” லேசாக பின்னால் திரும்பிக் கூறியதில், இந்திரஜித்தும் இறங்கிக்கொண்டான்.

பின் இருவருமே உள்ளே சென்றிட, சில மருந்துகளையும் இன்ஹேலரையும் வாங்கிய எழிலழகனிடம், “இன்ஹேலர் யாருக்கு?” எனக் கேட்டான் இந்திரஜித்.

“அத்தைக்கு. அவங்களுக்கு வீசிங் இருக்கு.” என்றதில், அவனை ஒரு கணம் அமைதியாக பார்த்து விட்டு, பின் திரும்பிக் கொண்டான்.

எழிலழகன் சம்பாதிக்க தொடங்கியதில் இருந்து தாமரைக்கு, மாத மாதம் மாத்திரை மருந்துகளை எல்லாம் அவனே வாங்கிக்கொடுப்பான்.

“நீ ஏன் எழிலு இதெல்லாம் வாங்கிட்டு வர்ற… வைஷு தான் வேலைக்கு போறாளே. அவளே வாங்கி குடுத்துருவா.” என்று மறுத்த தாமரையிடம், “நான் ஒண்ணும், உங்களால வாங்க முடியாதுன்னு நினைச்சு வாங்கி கொடுக்கல அத்தை. இது என் கடமை. என் மாமா இருந்துருந்தாலும், நான் இதையே தான் செஞ்சுருப்பேன்.” என்று திட்டவட்டமாக கூறி விட்டான்.

அதற்கு மேல் தாமரையும் சத்யாவும் அவனைத் தடுக்கவில்லை. சத்யாவுடன் ஏற்பட்ட பிரிவிற்கு பிறகும் கூட, தாமரைக்கு வேண்டியதை செய்து கொண்டு தான் இருக்கிறான்.

அதையும் சத்யா தடுத்ததில்லை. இன்னும் இவ்விஷயம் அவனது பெற்றோருக்கு தெரியாது, தெரிந்தால் தாமரைக்கே வசவு விழும்.

மீண்டும் வீட்டிற்கு சென்றவர்களிடம், “நானே உங்களுக்கு போன் பண்ணலாம்ன்னு நினைச்சேன். சாப்பாடுலாம் ஆறிப்போகுது, ரெண்டு பேரும் கை கால் அலம்பிட்டு வாங்க” என்று தாமரைக் கூறியதில், இருவரும் அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.

எழில், வைஷாலியிடம் துணிப்பையை நீட்டியதில், அவள் புரியாமல் பார்த்தாள்.

“உனக்கு தான்!” அவளைப் பாராமல் சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டதில், வைஷாலி அதனைப் பிரித்துப் பார்த்து, விழிகளை விரித்தாள்.

தனக்குப் புடவை வாங்கி வந்த கணவனின் செயலில் குதூகலித்த மனது, அவன் அதனை கொடுத்து விட்டுப்போன விதத்தை கவனிக்க மறந்தது.

உடனடியாக, அதனை உடுத்திக்கொண்டவளுக்கு ஒவ்வொரு அணுவும் கணவன் மீதுள்ள காதலில் தத்தளித்தது.

வயலுக்கு சென்ற சத்யரூபா இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. முகம் கழுவக்கூட மறந்த இந்திரஜித், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து, யோசனையில் புருவத்தை சுருக்கினான்.

சத்யரூபா எழிலழகனை காதலித்திருப்பாள் என்று நினைக்கவே அவனுக்கு மூச்சு முட்டியது. ஒருவேளை எழிலழகன் பொய் கூறி இருந்தால்…? என்று சிந்தித்தவனுக்கு, அவன் பொய் கூறியது போன்றும் தெரியவில்லை. பொய் கூறுபவர்கள் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க மாட்டார்கள்… என்ற நிச்சயம் அவனுக்கு எப்போதும் இருக்கும்.

திருமணத்திற்கு முன்பே, அவளிடம் பேசி இருக்க வேண்டுமோ? என்ற தாமத ஞானம் உதித்தாலும், பிறகேன் வைஷாலியை திருமணம் செய்தான், என்ற குழப்பமும் எழுந்தது. இறுதியில், மனைவியின் மீதுள்ள ஒரு தலைக்காதலில் சிக்கித் திணறியவனுக்கு, இதுவரை அறியாத வலி நெஞ்சமெங்கும் பரவி நின்றது.

வாசலில் கை, கால்களை கழுவி விட்டு, வீட்டினுள் நுழைந்த சத்யரூபா, எதிரில் வந்த எழிலழகனை ஒரு நொடி பார்த்து விட்டு, சட்டென திரும்பிக் கொண்டாள். அவனும் அவளை முறைத்திருக்க, கசங்கிய முகத்துடன் அறைக்குள் வந்த மனையாளை அமைதியாக ஆராய்ந்தான் இந்திரஜித். உண்மையை சொல்லப்போனால், அவள் முகத்தில் எதிரொளிக்கும் உணர்வுகளை இப்போதே சரியாக கவனித்தான்.

“என்ன இவ்ளோ லேட் ஆகிடுச்சு?” கணவனின் குரலில் பார்வையை நிமிர்த்தாமல், “ம்ம். வேலை இழுத்துருச்சு. ஊருக்கு போறதுக்குள்ள ஆள் போட்டுட்டு போகணும்ல.” என்றவள், முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.

“உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா சத்யா?” கேட்கும் போதே அவனது குரல் பிசிறடித்தது.

அதனைக் கவனியாதவள், புரியாமல் அவனைப் பார்த்து விட்டு, பின் முறைத்தாள்.

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க… அடம்பிடிச்சு திடீர் கல்யாணம் பண்ணிட்டு, இப்போ இப்படி கேள்வி கேட்டா, நான் என்ன பதில் சொல்ல முடியும்.” எரிச்சலை அடக்கிக்கொண்டு, அவனை நேராய் பார்க்க,

அவனும் அதே பார்வையுடன், “அடம்பிடிச்சு திடீர் கல்யாணம் பண்ணுனது மட்டும் தான் பிடிக்காம போனதுக்கு காரணமா?” விழி இடுங்கக் கேட்டான் இந்திரஜித்.

அதில் அவளிடம் சிறு திகைப்பு! அதுவரை அவனை அழுத்தமாய் ஏறிட்டவளின் விழிகள், இப்போது அவனை எதிர்கொள்ளத் தயங்கியது.

அங்கும் இங்கும் நயனங்களை அலையவிட்டவள், “அது மட்டும் காரணம் இல்லை.” என்றதில், இருவரிடமும் சில நிமிடங்கள் அமைதி.

காரணத்தை அவனும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.

தெரிந்து கொண்டே, மீண்டும் கேட்டு, மனதை காயப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை அவன்.

சில நொடிகளில் இயல்பாகி, “ஹே… சொல்ல மறந்துட்டேன். இந்தா பிடி.” என்று இயல்பாய் துணிப்பையை நீட்டினான் இந்திரஜித்.

அதில் அவளும் “என்ன இது?” எனக் கேட்டுக்கொண்டே பிரித்துப் பார்த்தவள், புடவையைக் கண்டு குழம்பினாள்.

“உனக்கு தான் ரூப்ஸ். பிடிச்சு இருக்கா…” தலையை சரித்துக் கேட்டதில், “எனக்கு பிடிச்ச கலர்… புடவையும் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கு இந்தர்.” என்றதும், சட்டென சோர்ந்த மனதை வெளிக்காட்டாமல் முறுவலித்தான்.

“ஆனா, இப்போ எதுக்கு புடவை?” சத்யா வினவியதும்,

“மறுவீட்டுக்கு போய், பொண்டாட்டிக்கு புடவை வாங்கிக்குடுக்கணும்ன்னு ஒரு ஃபார்மாலிட்டி இருக்காமே. அம்மா தான் சொன்னாங்க. அதான் வாங்குனேன்.” என்று பொய்யுரைத்தவன், அழகாய் மனதை மறைத்துக் கொண்டான்.

“ஓ!” என்ற சத்யரூபா, புடவையை பீரோவில் வைத்து விட்டு, “வாங்க சாப்பிடலாம்.” என்று அழைக்க, அவனும் அதனை உடுத்திக்கொள்ள சொல்லவில்லை.

மதிய உணவின் போது, அனைவரும் ஒன்றாக அமர்ந்து தான் உண்ண வேண்டிய நிர்பந்தம். கணவன் வாங்கி வந்த புடவையில் புன்னகை முகத்துடன் வலம் வந்த தோழியைக் காண்கையில் ஆற்றாமையாக இருந்தது இந்திரஜித்திற்கு.

அவளை நிமிர்ந்து பாராமல், தட்டில் புதைந்திருந்த எழிலழகனைக் கண்டு கோபம் எழுந்ததோடு, வைஷாலிக்கு முழு விவரம் தெரியவில்லை என்பதும் புரிந்தது.

தெரியும்போது, அவளது எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று எண்ணியபடியே, தட்டில் கோலமிட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள் சத்யரூபா.

எப்போதும் வாய் ஓயாமல் பேசி தன்னை இம்சை செய்பவனின், அமைதியான தோற்றத்தை பொறுக்க இயலவில்லையோ என்னவோ,

“என்ன ஆச்சு இந்தர்…? உடம்பு ஏதாவது சரி இல்லையா. சாப்டாம இருக்கீங்க. குழம்பு காரமா இருந்த ரசம் ஊத்தியாச்சு சாப்பிடுங்க.” அவனுக்கு மட்டும் கேட்கும் படி கிசுகிசுத்தவளின் அக்கறையில் கனிந்த இதயம், அந்நொடியே அனைத்து குழப்பத்தையும் தூக்கி எறிந்தது.

கணவன், அதிக காரம் சாப்பிட மாட்டான் என்று அறிந்து வைத்திருந்தவள், தாயிடம் காரத்தை குறைக்க சொல்ல மறந்திருந்தாள்.

“அம்மா, அடுத்து சமைக்கும் போது, காரம் கம்மியா செய்ங்க.” அப்போதே தாமரையிடம் கூறி விட்டவள், வேறு தட்டில், சாதத்தை போட்டு ரசத்தையும் ஊற்றி அவனிடம் கொடுத்தாள்.

அதில் தான், எழிலழகன் நிமிர்ந்து இருவரையும் முறைத்திட, அது இன்னும் கொஞ்சம் குதூகலமாக இருந்தது இந்திரஜித்திற்கு.

மேலும், அவனது எரிச்சலில் எண்ணெய் ஊற்ற எண்ணியவன், “ரூப்ஸ்… ரசமும் காரமா தான் இருக்கு” என்று முகத்தை சுருக்கினான்.

அவளும் அப்போது தான் ரசத்தை ஊற்றி இருந்தாள். அதனால், ஒரு வாய் உண்டு விட்டு, “அந்த அளவு காரம் இல்லையே இந்தர்.” எனக் குழம்ப,

“அப்டியா… இங்க குடு.” என்று அவள் தட்டை வாங்கி உண்டவன், “அட… உன் தட்டுல மட்டும் எப்படி காரம் கம்மியா இருக்கு. அப்போ நான் இதையே சாப்புடுறேன். நீ என் தட்டுல சாப்பிடு.” என்று கண்ணடித்திட, அவனை தீயாக முறைத்தாள்.

“உங்கிட்ட போய் கேட்டேன் பாரு…” பல்லைக்கடித்துக் கடிந்தவள், மறுக்காமல் அவன் தட்டிலேயே உண்டாள் இயல்பாக.

எழிலழகனுக்கு தான் புசுபுசுவென கோபம் வந்தது. அவன் தன்னை எரிச்சலூட்டுகிறான் என்று புரிந்தபின்னே, அதனை சாதாரணமாக எண்ண இயலவில்லை.

அத்துடன், எழிலுக்கு, உணவு தொண்டையில் இறங்க மறுக்க, இந்திரஜித்தோ ரசித்து ருசித்து சாப்பிட்டான்.

அவனுக்கே சிறுபிள்ளைத்தனமாக தான் இருந்தது. ஆனால், அதற்கு மேல் மனைவியின் மீதிருந்த ‘பொசெசிவ்னெஸ்’ அவள் தன்னவள் மட்டுமே என்ற உரிமையை நிலைநாட்ட நினைக்க, அதற்காக அடுத்த இரு நாட்கள் அவன் செய்த கூத்தில் எழிலுக்கு காதில் இருந்து புகை மண்டலமே வெளியாகியது.

அலைபாயும்
மேகா!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
29
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்