Loading

உத்ரா துருவையே வெறிக்க, அவனுக்குத் தான் அவளை பார்க்க குற்ற உணர்ச்சியாய் இருந்தது. என்ன செய்வதென்று புரியாமல், அவள் பார்வையை தாங்க முடியாமல், தவித்துக் கொண்டு நின்றிருந்தான். சைதன்யா மேலும், அவளின் கையை பிடித்து வளைக்க, உத்ரா “ஆ” வென அலறினாள்.

துருவிற்கு இவள் ஏன் அவனை தாக்காமல் அடி வாங்கி கொண்டு இருக்கிறாள் என்று தான் இருந்தது. பின், அவள் பார்வையிலேயே ‘எனக்கு இவனை அடிக்க ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் இது நீ ஆரம்பித்து வைத்தது தானே, முடிந்தால் என்னை நீயே காப்பாற்று. இல்லையென்றால் அவன் என்ன செய்தாலும் நான் அமைதியாய் தான் இருப்பேன்’ என்ற அவளின் எண்ணத்தை உணர்ந்து கொண்டான்.

ஆனால், அவர்கள் என்ன தவறு செய்தாலும் அதனை மூடி மறைத்து, அவர்களுக்கு இது வரை ஆதரவாகவே இருந்தவனுக்கு இப்போது எப்படி எதிர்ப்பது என்று தான் இருந்தது. அது சில நொடிகள் தான், ரிஷியும், உத்ராவை வந்து ஒரு அடி அடிக்க, அதற்குமேல் பொறுக்க முடியாமல், இருவரையும் அவளிடம் இருந்து தள்ளி விட்டான்.

“அதான் பத்திரத்தில கையெழுத்து வாங்கியாச்சுல இவளை இந்தியா அனுப்பி விடுங்க…” என்று துருவ் அமைதியாய் சொல்ல,

சைதன்யா, “என்னது இந்தியா அனுப்புறதா? என்னை அடிச்சதுக்கு நான் அவளுக்கு தண்டனை தராமல், அவளை எங்கயும் அனுப்புறதா இல்லை. இனிமே அவள் என் பொறுப்பு” என காஞ்சனாவை பார்க்க, அவள், “ஆம்” என்று தலையாட்டினாள் வில்லங்கமான சிரிப்புடன்.

துருவ் “யாருக்கு யார் பொறுப்பு…” என்று கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டு விட்டு,

ரிஷியிடம், ” ரிஷி, என்ன இருந்தாலும் அவள் உன் தங்கச்சி. நீ இப்படி பண்றது சரி இல்லை” என கண்டிக்க, அவன் “டேய் அவள் என் தங்கச்சியே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்… அவளை நானே என் கையால கொன்னுடறேன்” என்றவன் முன்னேறப் போக, அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தான் துருவ்.

ரிஷி, அவனை புரியாமல் பார்க்க, சைதன்யா “வேந்தா! இதுல தலையிடாத. நீ கிளம்பு” எனக் கூற, அவன் “அவளை அனுப்பி விடுங்க” என்றான் மீண்டும் அழுத்தமாக.

காஞ்சனா, “என்ன துருவ் பேசுற? என்ன பண்றோம்னு தெரிஞ்சு தான் பண்றியா. இவளை உயிரோட ஊருக்கு அனுப்புனா ரிஷியோட வாழ்க்கையே வீண் ஆகிடும்” என்று அங்கிருக்கும் கட்டையால் அவளை அடிக்க போக, துருவ் காஞ்சனாவை ஓங்கி ஒரு அறை அறைந்ததில் அந்த அறையின் மறு கோடியில் சென்று விழுந்தாள். உத்ராவே இதனை எதிர்பார்க்கவே இல்லை.

ஆண்கள் இருவரும் அதிர்ந்து அவனை “வேந்தா என்ன பண்ற?” என்று கேட்க, அவன் கண்ணில் தீப்பொறியுடன்,

“என்னை துருவா எல்லாருக்கும் தெரியும், வேந்தனா உங்க ரெண்டு பேருக்கும் என்னை பத்தி நல்லாவே தெரியும்ன்னு நினைக்கிறேன். விடுங்க அவளை” என்று ரௌத்திரத்துடன் கூற, இருவரும் அரண்டு பார்த்தனர். அவர்களுக்கு தெரியாதா அவனை பற்றி. எதிராளியாய்  இருப்பவர்களுக்கு அவன் எப்போதும் எமன் தான். அவர்கள் இருவரை விட, அவன் மிகவும் கெட்டவன் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தும் சைதன்யா, “அவளை விட முடியாதுடா… உன் முன்னாடியே அவளை தொடுறேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு” என உத்ராவின் மேலே கைவைக்க போக, அவள் அப்பொழுதும் அவனை தடுக்கவில்லை. துருவை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்.

துருவ் “பிடிவாதம் பிடிச்சவ… ஏதாவது ரியாக்ஷ்ன் குடுக்குறாளா” என்று அவளை திட்டி விட்டு, அவளை தொட போன சைதன்யாவின் கையை பிடித்து வளைத்தான். ரிஷி, துருவை தடுக்க, அவனையும் படாரென்று காலால் எத்தி விட்டான்.

அதில் ரிஷி, பக்கத்திலிருந்த டேபிளை உடைத்துக் கொண்டு போய் விழுந்தான்.

சைதன்யா “வேணாம் வேந்தா… எவளோ ஒருத்திக்காக நீ எங்களை பகைச்சுக்கிற” என்று எச்சரிக்க, அவன் வாயிலேயே நங்கென்று ஒரு குத்தி குத்தினான். அதில் அவனுக்கு பல்லெல்லாம் உடைந்து ரத்தம் கொட்டியது.

உத்ராவிற்கு ரிஷி அடித்ததில் உதட்டில் இருந்து ரத்தம் வழிய, மேலும் சைதன்யா அவள் கையை நசுக்கி வளைத்ததில் கையை அவளால் தூக்க கூட முடியவில்லை. அவள் அருகில் சென்றவன், கட்டை விரலால் அவளின் உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டு அவளை பார்க்க, அப்பொழுதும் அவள் உணர்வுகள் மரக்க அவனையே அழுத்தமாகப் பார்த்தாள்.

அவளுக்கு காயமானத்தில் மேலும் கோபமானவன் ரிஷியையும், சைதன்யாவையும் வெறித்தனமாய் அடித்தான். சைதன்யா எந்திரிக்க கூட முடியாமல், “இவளை காப்பாத்த எங்களையே எதிர்க்குறியா? அவளை அணு அணுவா சித்திரவதை பண்ணி உன் முன்னாலேயே கொல்லாமல் விடமாட்டேன் வேந்தா…” என்று சபதமாய் சொல்ல, ரிஷி, “அவளுக்காக என்னை அடிச்சுட்டீல டா. இனிமே நீ என்னை பகையாளியா தான் பார்ப்ப” எனக் கூற, இருவரையும் மீண்டும் அடித்தான்.

காஞ்சனா அவன் அடித்த ஒரு அடியிலேயே மயங்கி இருந்தாள். உத்ராவை கைத்தாங்கலாக தூக்கி வெளியில் செல்ல வந்தவன், காஞ்சனாவின் கையில் இருந்த அந்த பத்திரத்தையும் எடுத்து, அதனை கிழித்து, அவன் நண்பர்கள் மேலேயே எறிந்து விட்டு போனான். வெங்கடேசன் மாத்திரையின் விளைவால் நன்கு உறங்கி கொண்டிருந்ததால் நடந்தது எதையும் அவர் அறியவில்லை.

உத்ராவை அழைத்துக் கொண்டு, நேராக மருத்துவமனைக்கு சென்றான் துருவேந்திரன். அங்கு அவள் கையில் கட்டு போட்டு, வலிக்கு ஊசியும் போட, உறங்கி போனாள். துருவ் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து, தீர்க்கமாய் ஒரு முடிவு எடுத்து விட்டு, அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

மறுநாள் அவள் கண் விழிக்கையில், துருவ் “இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்க, அவள், அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, மறுபுறம் திரும்பி கொண்டாள். துருவ் பெருமூச்சு ஒன்றை விட்டு, “வா வீட்டுக்கு போகலாம்” என அவளை தூக்க வர, அவள் அவனை தடுத்து, அவளே எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

பின், அவன் வீட்டிற்கே அவளை அழைத்து வர, அவள் புரியாமல் பார்த்தாள்.

“நீ இங்க இருக்குறது தான் சேஃப்” என  அவன் கூறியதும், அவள் வியந்து பார்த்து “உங்ககூட இருந்தா நான் ரொம்ம்ம்ப சேஃப் ஆ இருப்பேன்னு தான் நேத்து பார்த்தேனே?” என நக்கலடித்துவிட்டு, “நான் இன்னைக்கு இந்தியா கிளம்புறேன்” என்றாள்.

அவள் நக்கல் பேச்சில், சற்று தயங்கியவன் அவள் இந்தியா போகிறேன் என்றதும், “நீ தாராளமா போ. ஆனால் மாமா உனக்கு குடுத்த ப்ராஜக்டை முடிச்சு, பிசினெஸ கத்துக்கிட்டு போ!” என்றான் தீர்க்கமாக.

அவள், “ப்ச், நீங்க கத்துக்குடுத்தது வரை போதும். நான் கிளம்புறேன்” என்று  திரும்ப, அவள் அடிபடாத கையை பிடித்தவன்,

“இப்போ நீ எதுவும் வேண்டாம்னு போனா ரிஷியும், காஞ்சனாவும் உன்னை சும்மா விடுவாங்கன்னு நினைக்கிறியா? கண்டிப்பா இல்லை. உன் அப்பா சொத்து இருக்கலாம், உன் வீட்டுல இருக்குறவங்க உன்னை நல்லா பார்த்துக்கலாம் பட் உன்னை நீ காப்பாத்திக்கணும்னா உனக்குன்னு ஒரு அடையாளம் இருக்கணும். உனக்குன்னு ஒரு பவர் இருக்கணும்.

நீ திறமைசாலி தான். அந்த திறமையை நீ அவங்ககிட்ட இருந்து ஒதுங்குறதுல காட்டாத. உன் பக்கத்துல வர்றதுக்கே அவங்க பயப்படணும் அதுல காட்டு உன் புத்திசாலித்தனத்தை. சத்தியமா நான் உன்னை லவ் பண்ணல உத்ரா.

எனக்கு இதுலலாம் நம்பிக்கையும் இல்லை. இந்த முட்டாள்தனத்தை எல்லாம் மறந்துட்டு, உன் அப்பாவுக்காகவாவது பிசினெஸ் கத்துக்கோ. உன் அம்மாவை அந்த காஞ்சனா தான் படியில் இருந்து தள்ளி விட்டான்னு சொன்னீல, அதுக்கு நீ அவங்களுக்கு தண்டனை தர வேண்டாமா? இல்லை நீ ஒதுங்கி போனா எல்லாமே சரியாகிடும்னு நினைக்கிறியா? உன் அம்மா நிலைமைதா, நாளைக்கு உன் அப்பாவுக்கும், அப்பறம் உன் மொத்த குடும்பத்துக்கும்” என்றவன், மேலும்

“நான் பண்ணுனது தப்பு தான். நான் பண்ணுன தப்பை நானே சரி பண்றேன். இதெல்லாம் என்னால முடியாதுன்னு நீ என்கிட்டே இருந்து ஓட முடியாது. நான் செஞ்ச தப்பை சரி பண்ண எனக்கு ஒரு சான்ஸ் குடு!” என்று கேட்க, அவள் சிறிது யோசித்து விட்டு, “ம்ம்” என்று விட்டு உள்ளே சென்றாள்.

அவனும் சற்று நிம்மதியாகி, அவள் பின்னே சென்று அவளுக்கு அறையை காட்டிவிட்டு, “நீ ரெஸ்ட் எடு…” என சொல்ல, அவள் “ப்ச், அதெல்லாம் இந்த ஒரு மாசமா நல்லா எடுத்தாச்சு. இப்போ ஃபர்ஸ்ட் என்ன பண்ணனும்?” என்றாள்.

துருவ், அவள் அப்பா கொடுத்த ஃபைலை அவளிடம் கொடுத்து “இதை நல்லா படி” என்க, உத்ராவோ அவனை முறைத்து, ‘இதை தானடா நான் அன்னைக்கு பண்ண போனேன்…’ என்று பார்க்க, அவன் அவள் கண்ணை பார்க்க முடியாமல், வெளியில் சென்றான்.

இப்பொழுதும் அவனுக்கு அவள் மேல் காதல் எல்லாம் இல்லை. தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை என்று தான் அவன் இதெல்லாம் செய்கிறான். மேலும் அவன் நண்பர்கள் நிச்சயமாய் அவளை ஏதாவது செய்யாமல் விடமாட்டார்கள், அதனாலேயே உத்ராவை அவனுடனே தங்க வைத்தான்.

உத்ராவிற்கு துருவின் மேல் பயங்கர கோபம் தான். ஆனால் அவளுக்கு அவன் மேல் கோபத்தை காட்ட தான் முடியவில்லை. நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான் என்று மனது வலிக்க தான் செய்தது. ஆனால்  காப்பாற்றியதும் அவன் தானே என்று நினைக்கும் போது அறியாமல் செய்து விட்டான் என்றே நினைக்க தோன்றியது.

அதற்கும் மேல், அவள் அவனை உண்மையாய் தானே காதலித்தாள். அவள் மனம் எங்கும் அவன் மட்டுமே இன்னும் நிரம்பி இருக்கிறான் என்று  உணர்கையில் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இத்தனை நாட்கள் அவளை சும்மாவே இருக்க வைத்ததற்கும் சேர்த்து அவளை வேலை வாங்கினான் துருவேந்திரன். பல தொழில் நுணுக்கங்களை சொல்லி கொடுத்தான். அவள் சற்று விளையாட்டுத்தனமாய் இருந்தாலும், அவளுக்கு ஒரு மணி நேரம் லக்ச்சர் எடுப்பான். அவன் முன்னிலையிலேயே  தினமும் வீட்டில் அனைவரிடமும் வீடியோ கால் பேசுவாள். அவன் அதெல்லாம் கண்டுகொள்ள மாட்டான்.

அவ்வப்பொழுது, அவனை குத்தி காட்டி பேசவும் அவள் தவறவில்லை. ஒருமுறை, அவன் அவளிடம் யாரையும் அவ்வளவும் சீக்கிரம் நம்பிவிட கூடாது என்று சொல்ல, உத்ரா “அட! அதை தான் நீங்க எனக்கு பிராக்டிகல் ஆவே காட்டிடீங்களே, முதுகுல எப்படி குத்துறதுன்னு நல்லாவே சொல்லி தந்துடீங்கள்ல?” என்று அவனை குத்தி காட்ட, அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

அன்று, போனில் உத்ரா யாரிடமோ ரொம்ப கோபமாக திட்டி கொண்டிருந்ததை பார்த்தவன், “என்ன ஆச்சு?” என்று கேட்க,

அவள் “அஜய் தான்…! அவன் பிரெண்ட் கூட பார்ட்டி போயிருக்கான். அங்க அவனுக்கே தெரியாம ட்ரிங்க்ஸ் குடுத்துருக்காங்க. அதெப்படி அவன் குடிக்கலாம். அதான் திட்டிகிட்டு இருந்தேன். இனிமே பார்ட்டிக்கும் போக கூடாது அந்த பிரெண்ட் கூடவும் பழக கூடாதுன்னு…” என்றாள் கோபமாக.

துருவ் புரியாமல், “அவன் தெரியாமல் தான குடிச்சான். நியாயமா அவன் பிரெண்ட் மேல தான தப்பு” என்க,

உத்ரா, “அவனுக்கு தெரியும் அவன் பிரெண்ட் குடிப்பான், தப்பு பண்ணுவான்னு. அப்பறம் எதுக்கு அவன் கூட போகணும், அவன் ட்ரிங்க்ஸ் குடுத்தனால சரியா போச்சு. விஷத்தை கலந்து குடுத்துருந்தா…?” என்று கேள்வியாய் கேட்க, அவன் யோசனையில் முகம் சுருங்கினான்.

“நம்ம சுத்தி இருக்குற நண்பர்களை வச்சு தான் நம்மளோட கேரக்டரை தீர்மானிப்பாங்க. ‘உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்’ அப்டின்ற வாசகம் நீங்க கேள்விப்பட்டது இல்லையா?

என்னதான் நண்பனா இருந்தாலும் தப்பு தப்பு தான். ஒண்ணு அவனை திருத்த முயற்சி பண்ணனும் இல்லையா அந்த மாதிரி ஆளை விட்டு விலகிடனும். நண்பன்னு நினைச்சு  நம்மளும் அவன் பண்ற தப்புக்கு துணை போனா, அவன் செய்ற பாவம் அவனை விட நம்மளை தான் அதிகமா துரத்தும்.

ஏன்னா அவன் தப்புன்னு தெரியாம செய்றான். தெரிஞ்சு கூட செய்யலாம். பட் நமக்கு தெரியும் அது தப்புன்னு. அந்த தப்பு பண்ணுன்னா எந்த மாதிரி விளைவுகள் வரும்னு தெரிஞ்சுருந்தும் நம்ம பண்ணுனா, அப்போ தப்பு யார் மேல…?” என அவனை அழுத்தமாய் பார்த்து கேட்க,

அவனுக்கு அவன் செய்த தவறின் வீரியமும், மேலும், அவர்கள் செய்த பல தவறுகளுக்கு அவன் ஒத்துப்போய் செய்த பாவங்களும் அவன் கண் முன் தோன்றி அவனை அலைக்கழித்தது. அதிலும், ஒரு பாவம் அவனை பின் தொடர்ந்து, அவனை பழிவாங்கப் போகிறது என்று அவன் அறியவும் இல்லை.

மீண்டும் அஜய் அவளுக்கு போன் செய்து, “சாரி உதி! இனிமே சத்தியமா நான் அவன் கூட சேரவே மாட்டேன். எந்த பார்ட்டிக்கு போகவும் மாட்டேன். சாரி ப்ளீஸ்” என்று கெஞ்சிக்கொண்டிருந்தான். துருவிற்கு தான் ஒரே ஆச்சர்யம்.

மேலோட்டமாய் பார்த்தால் அவன் தெரியாமல் ஏமாந்து விட்டான். ஆனால் அவன் தவறு செய்ததாய் ஒப்புக்கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்டதில் துருவிற்கு தான் இன்னும் அவளிடம் ஒரு சாரி கூட கேட்கவில்லை என்று புரிந்தது.

அவள் அஜயிடம் பேசிவிட்டு, “அடுத்து என்ன பண்ணனும்?” என்று துருவிடம் கேட்க, துருவ் “சாரி உத்ரா…!” என்றான் மனம் உணர்ந்து.

அவள் அவனை குத்தும் பார்வை பார்த்து, “ரொம்ப சீக்கிரம் கேட்டுடீங்க” என அசட்டையாய் சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க போனாள்.

இப்படியே நாட்கள் செல்ல, ஒரு நாள், துருவின் அம்மா வந்து, அவனின் அப்பா அப்படி செய்கிறார் இப்படி செய்கிறார் என்று புகார் செய்ய, ஒரு பக்கம், அவனின் அப்பா போனில் அவன் அம்மாவை பற்றி கத்திக்கொண்டிருந்தார். உத்ரா, திருதிருவென கீதாவை பார்க்க, கீதா அவள் இருப்பதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

ராமர் எதற்கோ அவளை திட்டி விட்டார் என்று துருவிடம் கத்தி கொண்டிருந்தார். அவன் தலையில் கை வைத்து அமர்ந்திருப்பதை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது அவளுக்கு. உத்ராவும் அவரிடம் சென்று பேசிப்பார்த்தாள். ஆனால் அவர் இவள் பேசுவதை கூட காதில் வாங்கவில்லை. ராமரிடமும் பேச முயற்சி செய்தாள் அவர் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் கத்தினார். அவளுக்கே அவர்கள் சண்டையில் பைத்தியம் பிடித்து விடும்போல் இருந்தது.

உத்ரா துருவை பாவமாய் பார்க்க, அவன் “விடு, ரெண்டு பேர்கிட்டயும் பேசி வேஸ்ட் தான். உன் எனர்ஜி தான் வேஸ்ட் ஆகும்” என்று மெலிதாய் சிரிக்க, அவளுக்கு அப்பொழுது தான் அவனின் நிலைமை புரிந்தது. நல்ல ஒரு ஆரோக்யமான சூழ்நிலையில் அவன் வளரவும் இல்லை, நல்ல மனிதர்கள் அவனை சுற்றி இருக்கவும் இல்லை.

அவன் தவறு செய்தால் அதனை திருத்தும் அளவுக்கு அவன் பெற்றோருக்கு பொறுமையும் இல்லை என்று புரிந்து கொண்டாள். இப்படி இருந்தும், அவன் எந்த தவறும்  செய்யாமல் வேலையில் அவனை புதைத்துக் கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது அவளுக்கு வியப்பு தான்.

அதில் இருந்து அவனை குத்தி காட்டுவதை நிறுத்தி விட்டாள். அவனும் அவளிடம் சற்று சகஜமாக பேச ஆரம்பித்தான். உத்ராவும் அவனுக்கு சாப்பாடு கொடுப்பதும், சிறு சிறு விஷயத்திலும் அவனிடம் கேரிங் ஆக இருப்பது என முன்பு இருந்தது போல் அவனிடம் பாசம் காட்டினாள்.

அன்று இருவரும் பால்கனியில் நின்று கொண்டிருக்க, அவனிடம் சற்று உரிமையுடன் பேசுவதை கண்டவன், “என்ன இப்போ எல்லாம் என்னை எதுவுமே சொல்ல மாட்டேங்குற… என்ன என்மேல  சாஃப்ட் கார்னர் ஆ?” என்று கேட்க, அவளுக்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பின், ‘இல்லை’ என தலையாட்டி “எனக்கு உங்க மேல கோபம்லாம் இல்லை. வருத்தம் தான். அந்த வருத்தம் தான் உங்களை அப்போப்போ ஹர்ட் பண்ண வச்சது. பட் இப்போ உங்களை புரிஞ்சுக்கிட்டேன். அதான் அந்த வருத்தமும் போய்டுச்சு…” என்று சொல்ல, அவன் “என்ன புருஞ்சுகிட்ட?” எனக் கேட்டான் புரியாமல்.

உத்ரா, “நீங்க தகுதி இல்லாதவங்க மேல வச்ச பாசம் தான் இதுக்குலாம் காரணம்னு புரிஞ்சுக்கிட்டேன். அப்பறம், உங்க அப்பா அம்மா போடுற சண்டையை பார்த்தால் எனக்கே கல்யாணம்லாம் வெறுத்திடும் போல, அப்போ உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காமல் இருக்குறது நியாயம் தான்” என்றவள் சிறிது நிறுத்தி,

“பட் துருவ்! இந்த உலகத்துலயே ரொம்ப அழகானது அன்பு தான்…” என்று கூற வர, அவன் மறுப்பாய்  தலை அசைத்தான்.

“நீயும் தான் என்னை லவ் பண்ணுன, ஆனால் அதுல இருந்து உனக்கு என்ன கிடைச்சுது. நான் உன்னை ஏமாத்த தான செஞ்சேன். சொல்லப்போனால், என் மேல வச்ச அன்பால தான் நீ முட்டாள் ஆன. என்மேல வச்ச நம்பிக்கையால் தான நீ உன் வாழ்க்கையாவே இழக்க போன. இதெல்லாம், நம்மள பலவீனப்படுத்தும் உத்ரா.

அன்பு பாசம் எல்லாம் நம்மளை ஏமாத்த மட்டும் தான் செய்யும். ஏன்? என் பிரெண்ட்ஸ் கிட்ட நான் உண்மையா தான் இருந்தேன். பட் அவங்க என்னை யூஸ் பண்ணிட்டு, நான் அவங்களுக்கு எதிரா இருக்கேன்னு தெரிஞ்சதும் என்னையவே அழிக்க பார்க்குறாங்க” என்றான் விரக்தியாக.

உத்ரா, அவன் அருகில் சென்று, அவனை நெருங்கி நின்று “அன்பு உண்மையானது தான் துருவ். ஆனால், அதை நம்ம யார் மேல வைக்கிறோம்ன்றதுல தான் அது எந்த அளவுக்கு விலைமதிப்பில்லாததுன்னு நமக்கு புரியும். உங்களை நான் லவ் பண்ணுனேன், உங்களை நம்புனேன் கடைசி வரைக்கும்.

என்னை நீங்க அவங்ககிட்ட விட்டதுக்கு அப்பறமும் கூட நீங்க தான் என்னை காப்பாத்தணும்னு நம்புனேன். அந்த நம்பிக்கை என்னை கை விடலையே. உங்க மேல நான் வச்ச நம்பிக்கையை பார்த்து தான, என்னை நீங்க காப்பாத்துனீங்க. நான் உங்க மேல காட்டுன காதல், சின்னதா உங்க மனசை பாதிச்சனால தான இதுவரைக்கும் உங்க பிரெண்ட்ஸ்  எந்த தப்பு பண்ணிருந்தாலும், அதை மூடி மறைச்ச நீங்க, இத்தனை வருஷமா பழகுன உங்க பிரெண்ட்ஸை எதிர்த்தீங்க.

இதெல்லாம் குற்ற உணர்ச்சியில மட்டும் பண்ணுனேன்ன்னு சொல்லாதீங்க. நான் நம்பமாட்டேன். சரியானவங்க மேல உண்மையா நம்ம வைக்கிற பாசமும்,  அன்பும், அவங்களே வேண்டாம்னு மறுத்தாலும் அவங்களை பாதிக்க தான் செய்யும்.

நீங்க வேணா என்னை ஏமாத்த காதலிச்சுருக்கலாம். ஆனால் நான் உங்களை உண்மையா தான் காதலிச்சேன். இப்பவும் காதலிக்கிறேன். இனிமேலும் காதலிப்பேன்” என ரசனையுடன் கூறியவள் அவனை இழுத்து, அவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு விட்டு உள்ளே சென்றாள்.

உத்ரா பேசிய வார்த்தைகளிலும், அவள் கொடுத்த முத்தத்திலும் சிலையாக நின்றிருந்தான் துருவ். என்ன சொல்கிறாள் இந்த முட்டாள் பெண்? இன்னும் இவள் என்னை காதலிக்கிறாளா? அவளுக்கு நான் துரோகம் இழைத்தும் என்னிடம் அன்பை எதிர்பார்கிறாளா? என்று அதிர்ச்சியுடன் இருந்தவனுக்கு அடுத்து அடுத்து பல பிரச்சனைகள் வந்தது.

அதில் அவனுக்கு இப்போது பெரிய பிரச்னை என்னவென்றால், சைதன்யாவின் பெற்றோர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதால், அந்த நாட்டில் அவனை தொழில் செய்ய விடாமல் அவர்கள் மூலமாக அவனுக்கு குடைச்சல் வர ஆரம்பித்தது. மேலும், பல நாடுகளில் அவனின் தொழில் முயற்சி தோல்வியைத்  தழுவியது.

எதார்த்தமாக. அன்று நியூஸ் பேப்பரை உத்ரா எடுத்துப் படிக்கையில் தான், துருவின் தொழில் சரிவை பற்றியும், மேலும், அவன் யாரோ ஒரு பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்க்கை நடத்தி கொண்டிருப்பதாகவும், மேலும் அவன் ஒரு பெண் பித்தன் எனவும் மோசமாக எழுதி இருந்தது.

அதனைப் பார்த்து அதிர்ந்தவள், துருவிடம், “சாரி துருவ் எனக்கு ஹெல்ப் பண்ண போய் தான் உங்களுக்கு இவ்ளோ பிரச்னையும். எனக்கு இந்த சொத்துலாம் எதுவும் வேண்டாம் அவங்களே வச்சுக்கட்டும்” என அவள் பாட்டிற்கு பேச, அவனோ குழம்பி, எதற்கு இப்படி பேசுகிறாள் என பேப்பரை வாங்கி பார்க்க அதில் இருப்பதை கண்டு கடுங்கோபத்துக்கு ஆளானான்.

அதில் உத்ராவின் பெயரை போடவில்லை என்றாலும், அவளை பற்றி தவறாக இருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உச்ச பட்ச கோபத்துடன் வெளியில் சென்றவன், அந்த கட்டுரையை எழுதியவனின் கையை உடைத்து, அடுத்த நாளே, அந்த பத்திரிக்கை ஆபிஸிற்கு சீல் வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு குடைச்சல் கொடுத்தான்.

மேலும், அவனின் அதிகாரத்தை பயன்படுத்தி, சைதன்யா அவனுக்கு கொடுத்த குடைச்சலை சரி செய்ய ஆரம்பித்தான்.

பின், உத்ராவிடம், “இது என்னோட பிரச்சனை. பிசினெஸ்ல அப்ஸ் அண்ட் டௌன்ஸ் வர்றது எல்லாம் சகஜம் தான். அண்ட் இந்த மாதிரி நிறைய நியூஸ் டெய்லி வரும். அதெல்லாம் கண்டுக்கவே கூடாது” என்றான்.

உத்ராவோ கேலியாக, “அப்பறம் ஏன் அந்த பத்திரிக்கைகாரனை அடிச்சீங்க?” என்று சிறு சிரிப்புடன் கேட்க, அவன் “அது… அவன் உன்னை பத்தி எழுதி இருந்தான் அதான்” என்றதும், அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து, “என்ன பத்தி என்ன எழுதுனா உங்களுக்கு என்ன? நீங்க எதுக்கு எனக்காக சண்டை போடணும் ஹ்ம்” என்றாள் கேள்வியுடன் கூடிய குறும்புடன்.

அவளின் கண்ணில் தெரிந்த காதலில் துருவ் தான் தொலைந்து போனான். அவளையே  அவன் பார்த்து கொண்டிருக்க, உத்ரா அசால்டாக “போதும் துருவேந்திரன் சார் பார்த்தது போங்க” என்று அவனை தள்ளி விட்டாள். அவனுக்கு தான் தனக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை… அவளை பற்றியே யோசித்து கொண்டிருந்தவனுக்கு தலைவலித்தது.

இரவு முழுதும் அவன் எண்ணம் முழுதும் அவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.

மறுநாள் அவன் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருக்க, அவன் கண்ணெல்லாம் சிவந்து போய் இருந்ததில் அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள். அவன் உடம்பு நெருப்பாய் சுட, “துருவ் உங்களுக்கு ரொம்ப ஃபீவர் ஆ இருக்கு. வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்றவளிடம்,

“ப்ச் அதுவே சரி ஆகிடும். இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு நீ கிளம்பிட்டியா” என்று அசட்டையாக கேட்டான்.

“ம்ம் கிளம்பிட்டேன். சரி சாப்பிட்டு மாத்திரையாவது போடுங்க” என சொல்லி ப்ரெட்டை கொடுக்க, அவன் சாப்பிட்டு மாத்திரையை போட்டு சிறிது நேரத்திலேயே, அனைத்தையும் வாந்தி எடுத்து விட்டான்.

அதில் உத்ரா பதறி “என்னாச்சு துருவ்…?” என்று அவனுக்கு தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்த, அவன் “ஒண்ணும் இல்ல சாப்பிட்டது ஒத்துக்கல. சரி வா போலாம்” என்று கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்.

அவள் கோபமாக “எங்க போகலாம்? உங்களுக்கு தான் ரொம்ப முடியலைல. இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான” எனக் கேட்க,

“நீ ஏற்கனவே ப்ராஜக்ட் ஸ்டார்ட் பண்ணுனது ரொம்ப லேட். இதுல ரெஸ்ட் எடுக்கலாம் டைம் இல்லை” என்றான் சோர்வாக.

“ஒரு மண்ணும் வேணாம். ஒரு நாள் ரெஸ்ட் எடுக்குறதுல எதுவும் ஆகப்போறது இல்லை. ஒழுங்கா வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவன் மறுக்க மறுக்க அழைத்து சென்றாள்.

துருவ் தான், “ப்ச் இதுக்குலாமா ஹாஸ்பிடல் போறது. அதுவே சரி ஆகிடும்” என்று சொல்வதை காதில் வாங்காமல், மருத்துவமனை செல்ல, அங்கு ஊசி போட வேண்டும் என்று சொன்னதும், அவன் “அதெல்லாம் வேணாம் மாத்திரை மட்டும் குடுங்க” என்றான் திருதிருவென விழித்து.

உத்ரா அவனை முறைத்திட, அவனோ “வேண்டாம் உத்ரா வா வீட்டுக்கு போகலாம்” என்று அவளை இழுத்தான். அவள் அசையாமல், “ஊசி போட்டே ஆக வேண்டும்” என அவனை இழுத்து செல்ல, அவன் தான் “உதி ப்ளீஸ் டி. நான் வரல. எனக்கு ஊசிலாம் வேணாம்” என்று கெஞ்சவே ஆரம்பித்தான்.

அவனின் குறுகிய அழைப்பிலும், உரிமையான பேச்சிலும் சற்று நின்றவள் அவன் கெஞ்சலை ரசிக்க ஆரம்பித்தாள். நர்ஸ் அவன் இடுப்பை காட்ட சொல்ல, துருவ் மெல்ல உத்ரா காதருகில் “உதி வேண்டாம்டி எனக்கு ஊசினா பயம். நான் எதுக்குமே ஹாஸ்பிடல் வந்ததே இல்லை. வா போலாம்” என மீண்டும் கெஞ்சினான்.

அதில் மேலும் மேலும் அவனை ரசிக்க தோன்றிய மனதினை அடக்கிக்கொண்டு, “நீங்க என்ன சின்ன பாப்பாவா ஒழுங்கா இடுப்பை காட்டுங்க” என்றாள் பொய்யான மிரட்டலுடன். அவனோ நொந்து விட்டு, “சரி இடுப்புல வேணாம். கைல போட சொல்லு ப்ளீஸ்…” என்றதும், அவள் பல்லைக்கடித்து கொண்டு “இடுப்புல போட்றதுல என்ன பிரச்சனை உங்களுக்கு” என்றாள்.

அவன் தான் “அது எனக்கு வெட்கமா இருக்கு” என்று தயக்கமாய் சொல்ல, அவள் தலையில் அடித்து கொண்டு “நீங்க எப்படி அந்த ரிஷிக்கும், அந்த ஷைத்தானுக்கும்  பிரெண்ட் ஆ இருந்தீங்க. இதுல இவருக்கு நிறைய  கேர்ள் பிரெண்ட்ஸ்  வேற இருக்குன்னு மீடியால பீத்திக்கிறாங்க” என்று அவனை கிண்டலடிக்க, அவன் அவளை முறைத்தான்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என முணுமுணுத்து விட்டு,  நர்ஸிடம் கையில் போட சொல்ல, அவள் “இந்த இன்ஜெக்ஸ்ன் இடுப்புலதான் போடணும்” என்றதும், அவள் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு அவனை பார்க்க, அவன் அவளை பாவமாய் பார்த்தான்.

அந்த நர்ஸிடம் “எனக்கு ஊசி போட தெரியும், நானே போட்டுவிடறேன்” என்று அவளை ஏதேதோ தாஜா பண்ணி அவளே ஊசியை கையில் வாங்கினாள்.

துருவ் “உனக்கு எப்படி ஊசி போட தெரியும்?” என்று கேட்க, உத்ரா “அர்ஜுன் டாக்டர் தான. அவன் தான் இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும்னு சொல்லி குடுத்தான். திரும்புங்க” என்றதும், அவன் எதுவும் சொல்லாமல், திரும்பி நின்றான்.

பின், “நீ ரிவெஞ்ச் எதுவும் எடுக்கலையே?” என்று சந்தேகமாய் கேட்க, அவள் சிறு சிரிப்புடன் “சே! சே!” என்று விட்டு, ஊசியை போட்டு விட்டாள்.

அதில் அவன் ‘ஆ’ வென கத்த, “ஷ்ஷ்! உங்களுக்கு என்ன டெலிவரியா பார்க்குறேன். இந்த கத்து கத்துறீங்க” என அவனை அதட்ட, “வலிக்குதுடி! உன் கோபத்தை எல்லாம் இதுல காட்டிட்டில” என்றான் அவளை முறைப்பாய் பார்த்த படி.

உத்ரா உதட்டை கடித்து சிரிப்பை அடக்கி கொண்டு, “ஓ! சார் பண்ணுனதுக்கு நான் இவ்ளோ சின்ன பனிஷ்மென்ட் குடுப்பேன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா. அதெல்லாம் வேற லெவல்ல இருக்கும்” என்று கண்ணடிக்க,  “குடுப்ப குடுப்ப. நீ பனிஷ்மென்ட் குடுக்குற வரைக்கும் நான் வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பேனாக்கும்” என நக்கலாக கேட்கையிலேயே ‘ஷ் ஆ’ என்று இடுப்பை தடவி கொண்டிருந்தான் வலியில்.

வீட்டிற்கு வந்தும் அவன் இடுப்பை தடவிக் கொண்டே இருக்க, உத்ரா ஐஸ் கியூபை எடுத்து, “இடுப்பை காட்டுங்க! நான் ஒத்தடம் கொடுக்குறேன்” என்றாள். அவன் வேண்டாம் என்று சொன்னதை கேட்காமல், அவனை படுக்க வைத்து, அவனுக்கு ஒத்தடம் கொடுத்தாள்.

துருவ் தான் இவளிடம் மட்டும் எப்படி என்னால் இவ்வளவு சகஜமாக இருக்க முடிகிறது. என்று சிந்தித்து கொண்டிருக்க, அவள், ஈரத்துணியை வைத்து அவன் நெற்றியில் ஒற்றி எடுத்தாள். பின், அவளே ரசம் சாதம் வைத்து, அவனுக்கு ஊட்டி விட, துருவ் அவளை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான்.

பின் அவனே ஆழ்ந்த குரலில் “எதுக்கு எனக்கு இவ்ளோ பண்ற? உனக்கு என் மேல கோபமே இல்லையா? இந்நேரம் நீ என்னை வெறுத்து போயிருக்கணும். ஆனால் என்மேல ஏன் இவ்ளோ பாசம் காட்டுற?” என்று சற்று ஆதங்கமாய் கேட்க, அவள் அவனை மடியில் சாய்த்து கொண்டு,

“நம்ம குழந்தைங்க தப்பு பண்ணுனா? அதட்டுவோம், திட்டுவோம், அடிப்போம் ஆனால் வெறுக்க மாட்டோம் துருவ்.

நீங்க என் குழந்தை மாதிரி தான். இப்பவும் நான் உங்களை மட்டும் தான் முழுசா நம்புறேன். ஏன்னு எனக்கு காரணம் தெரியல? உங்கமேல என்னால கோபப்படவும் முடியல. உங்களை காதலிக்கிறதை என்னால நிறுத்தவும்  முடியல. நீங்க என்னை காதலிச்சாலும் இல்லைன்னாலும் நான் உங்களை காதலிச்சுக்கிட்டு தான் இருப்பேன் நான் சாகுற வரைக்கும்” என்று அவள் உணர்ந்து கூற, அவள் மடியில் படுத்து அவளையே பார்த்து கொண்டிருந்தவன், சட்டென்று அவளை இழுத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே…

புதை மணலில் வீழ்ந்தே
புதைந்திடவே இருந்தேன்
குறு நகையை எரிந்தே
மீட்டாய் என்னை..

விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்..

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

உறைதல் தொடரும்.
-மேகா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
67
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!