Loading

 

நேச வெள்ளத்தில் மூழ்கி இருந்த வசுந்தரா, வெளியில் கேட்ட அலறல் சத்தத்தில் திடுக்கிட்டு, அவசரமாக அந்த பத்திரிக்கையை தன் கைப்பையில் திணித்து விட்டு, வெளியில் சென்று பார்க்க, பக்கத்து வீட்டில் கூட்டம் குழுமி இருந்தது.

‘ராதி வீட்ல ஏன் இவ்ளோ கூட்டமா இருக்கு?’ எனப் புரியாதவளாய், புருவம் சுருக்கியபடி அவள் வீட்டிற்கு செல்ல, அனைவரும் பின் புறம் நின்றிருந்தனர். அவளின் தாய் தந்தையும் அங்கு தான் இருக்க, “என்ன ஆச்சுப்பா?” எனக் குழப்பமாக கேட்ட வசுந்தரா பேயறைந்ததை போல அப்படியே நின்று விட்டாள்.

தன் கண்ணையே நம்ப இயலாதவளாக, அசையக் கூட உடம்பில் உள்ள செல்கள் ஒத்துழைக்காது போக, சிலையானாள்.

அங்கோ, சில ஆண்கள் சேர்ந்து கிணற்றினுள் இருந்து ராதிகாவின் உயிரற்ற உடலை வெளியில் எடுத்துக் கொண்டிருந்தனர். அவளது கண்கள் உறங்குவது போன்றே மூடி இருக்க, நீரில் மூழ்கி இறந்ததில் அவளது முகமே வெளிறி இருந்தது.

ராதிகாவின் உடம்பைக் கண்டதும், அவளின் தாயும் தந்தையும் கதறி அழுக, வசுந்தராவால் நடப்பதை ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. புரிந்து கொள்ளவும் இயலவில்லை.

அன்று காலையில் ராதிகாவிற்கு தேர்வு நடைபெற, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தவள், வசுந்தராவை இறுக்கி அணைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு, “சாயந்தரம் கன்னிமனூர்ல இருந்து சீக்கிரம் வந்துடு தாரா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு…” என்று கண் சிமிட்டினாள்.

இன்னும் அவளின் சிரித்த முகம் அவளுள் உதிரமாய் கலந்திருக்க, கண்கள் கண்ணீரை கூட ஏற்காமல் வற்றி இருந்தது.

சுற்றி இருப்பவர்களின் அரசல் புரசலான பேச்சுக்களும் அவளின் செவிகளில் விழத் தவறவில்லை.

“தற்கொலை பண்ணிக்கிற அளவு இந்த புள்ளைக்கு என்ன கேடு வந்துச்சு…” என ஒரு பெண்மணி தலையில் அடித்துக்கொள்ள,

“எல்லாம்… இந்த கன்னிமனூர் பயலுக பண்ற வேல தான். அந்த ஊர்க்காரன் குமரன தான் இவ விரும்பி இருக்கா போல. இன்னைக்கு அவன் கூட இவளை பார்த்ததும் அவ அப்பா சத்தம் போட்டாரு. திட்டுனது ஒரு குத்தம்ன்னு பாவி மக, உயிரையே விட்டுருக்கா.” என்ற பேச்சுக்கள் ஆங்காங்கே காதில் விழ,

ராதிகாவின் தந்தை செங்கமலமும், கண்ணீரில் கரைந்து, “அவன் கூட பேசாதன்னு தான உன்ன திட்டினேன். அதுக்கு இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டியேமா. என் ஒரே பொண்ணு இப்படி செத்து கிடக்குறாளே.” என தலையில் அடித்து அழுக, வசுந்தரா வெகு நேரம் அப்படியே நின்றாள்.

கலங்கிய கண்களுடன் நின்றிருந்த ராஜசேகருக்கு, தன் மகளின் அமைதி கண்டு பயம் எழ, “தாராம்மா!” என அவள் தோளை தொட, அவள் எதையும் கவனியாமல், ராதிகா விழுந்து இறந்த கிணற்றுக்கடியில் சென்று காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டாள்.

ஏற்பட்ட அதிர்ச்சி அவளை நிலைகுலைய செய்திருந்தது. ஒன்று ராதிகா இறந்தது. மற்றொன்று குமரனும் ராதிகாவும் விரும்பியது. மொத்தமாக மூளை கலங்கடிக்கப்பட்டது அவளுக்கு. தன் உயிர் தோழியின் இறப்பை தாங்கும் அளவு சக்தி அவளுக்கு இருக்கவில்லை. கண்களில் குளம் கட்டி நின்றது.

அக்கிணற்றை மெல்ல தடவியவள், ‘தற்கொலை பண்ணிக்கிற அளவு என்ன தாண்டி ஆச்சு? என்கிட்ட சொல்லி இருக்கலாமே ராதி…’ என மனதினுள் வெதும்பி தவித்தவளுக்கு தட்டுப்பட்டது சிவப்பு நிற குருதி.

ஆங்காங்கே திட்டு திட்டாக பிசுபிசுத்த உதிரத்தை, கண்களை நன்றாக துடைத்து விட்டு பார்த்தவளுக்குள் இருந்த வக்கீல் விழித்துக் கொள்ள, போனில் டார்ச்சை ஆன் செய்து, அந்த குருதி வழிந்த இடத்தை நன்றாக பார்வையிட்டாள்.

அங்கங்கே சிதறி இருந்தது. ‘தற்கொலை பண்ணிக்கிட்டா கிணத்துக்கு வெளியே எப்படி ரத்தம் இருக்கும்? ஏதோ சரி இல்ல… ஏதோ சரி இல்ல…’ என தலையைப் பிடித்துக்கொண்டவள், வேகமாக ஜிஷ்ணுவிற்கு போன் செய்தாள்.

சில நேரம் கழித்து போனை எடுத்தவன், தொண்டையை கணைத்து விட்டு, “நீ ஓகே தான பேப்?” என தவிப்புடன் கேட்க, அவனும் விஷயத்தை அறிந்து கொண்டான் என்று அறிந்தவளுக்கு, இத்தனை நேரம் கண்களுக்குள் சிறைப்பட்டு இருந்த கண்ணீர் துளி துளியாய் இறங்கியது கன்னத்தில்.

“ஜி… ஜிஷு… ஜிஷு… ராதி… ராதி…” என பேச வந்தவளுக்கு வார்த்தைகளும் வராது போக, “என்னால முடியல ஜிஷு. என்னால ஏத்துக்கவே முடியல.” என்றே கேவினாள்.

“வசு பேப்…! நீ அழுகாதன்னு சொல்ல மாட்டேன். ஆனா, ப்ளீஸ்… அக்செப்ட் பண்ணிக்கோ” என்றவனுக்கும் வார்த்தைகள் பிசிறடித்தது.

ஆனால், அழுகையை அடக்க தான் இயலவில்லை அவளால். சில நொடிகள் கத்தி அழுதவள், பின் அவசரமாக, “ஜிஷு ஜிஷு… நான் உன்னை பார்க்கணும் உடனே பார்க்கணும்.” என்றிட,

“என்ன உளறுற? இந்த நேரத்தில நான் அங்க வர்றதும் சரி இல்ல. நீ இங்க வர்றதும் சரி இல்ல. ஏற்கனவே குமரனும் ராதியும் லவ் பண்றதா புரளி ஓடிட்டு இருக்கு. அவன் வேற ரொம்ப பயந்து போயிருக்கான். நீ அங்கேயே இரு. இந்த நேரத்துல நீ அங்க தான் இருக்கணும்.” என்றான் அழுத்தமாக.

“இல்ல… நான் உன்ன பார்த்தே ஆகணும். உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ராதி கண்டிப்பா தற்கொலை பண்ணிருக்க மாட்டா” எனக் கூற வர,

“ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு? உன் வக்கீல் மூளையை கழட்டி வைச்சுட்டு, அரை மணி நேரம் ஆச்சு அவளுக்கு ப்ரெண்டா அழுதுட்டு அடுத்த வேலைய பாரு. போ!” என கத்தி விட்டவன், போனை அணைத்து விட, அவளுக்கு சுருக்கென இருந்தது.

ஏதோ ஒரு ஏமாற்றம் சட்டென அவளை சூழ, சுற்றி நடக்கும் அனைத்தும் தவறாக தோன்றியது. இதனை அப்படியே விட முடியவில்லை அவளுக்கு. அந்நேரம் அவளது வகுப்பு நண்பன் ஒருவன் அங்கு வந்திருக்க, அவனை தனியாக அழைத்தவள், “உங்கிட்ட ஜீப் இருக்குல்ல. யாருக்கும் தெரியாம அதை எடுத்துட்டு வா. கன்னிமனூர் வரை போகணும்” என உத்தரவிட, அவனோ குழம்பி “இல்லப்பா. இந்த நேரத்துல…” என்று இழுத்தான்.

“நீ வரமுடியுமா… இல்ல நானே போகட்டா?” அவள் பிடிவாதமாக இருக்க, பின் யாரும் அறியாமல் அவனே அழைத்து சென்றான்.

ஜிஷ்ணுவின் வீட்டை விட்டு சற்று தள்ளியே நிறுத்தியவன், “உன்ன நான் தான் கூட்டிட்டு வந்தேன்னு தெரிஞ்சா தர்மா என்னை செஞ்சுருவான். நீயே சீக்கிரம் போயிட்டு இங்க வந்துடு.” என்று விட, அவளும் இறங்கி அவன் வீடு நோக்கி நடக்க, அங்கோ நான்கு ஐந்து கார்கள் வரிசையாக நிற்க, அதனைப் பார்த்ததுமே தெரிந்தது அமைச்சர் நீலகண்டனும் அங்கு தான் இருக்கிறார் என.

‘ஆனா, இவருக்கு இங்க என்ன வேலை’ என்ற யோசனை ஒரு புறம் ஓட, அந்நேரம் நீலகண்டன் வெளியே வந்ததில், சுவற்றிற்கு அருகில் மறைந்து கொண்டாள்.

“நடந்த கொலைய அப்படியே மூடி மறைச்சுடு தர்மா. குமரனை கொஞ்ச நாளைக்கு வெளியூர் அனுப்பி வை. அதான் எல்லாருக்கும் நல்லது. அடுத்த எலக்ஷன் வேற வருது. இந்த தொகுதி நம்ம கைக்கு வந்தே ஆகணும். இல்லன்னா, ஆட்சி இந்த தடவையும் நம்ம கையை விட்டு போய்டும். பார்த்து செய். நானும் சி.எம் கிட்ட பேசி, சீட் ரெடி பண்றேன்… உனக்கு 25 வயசு முடிஞ்சுது தான” என்று கேட்டும் விட்டு நகர, வசுந்தரா உறைந்து நின்றாள்.

மனமெங்கும் கோபம் சீறிப்பாய, மனமோ சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த அவன் வயதை பற்றிய உரையாடலில் நிலைத்து நின்றது.

“டேய்… நீ என்னை விட ரெண்டு வயசு சீனியரா?” வசுந்தரா நெஞ்சைப் பிடித்துக் கேட்க, ஜிஷ்ணு “ஆமா, சின்ன வயசுல அம்மை போட்டுருந்துச்சுன்னு எங்க அம்மா ஒரு வருஷமா ஸ்கூலுக்கே அனுப்பல” என்றதில், “அம்மை போட்டதுக்கு ஒரு வருஷம் லீவ் எடுத்துருக்கன்னு சொல்லு…” என்று முறைத்தவள், “மீதி ஒரு வருஷம் என்னடா ஆச்சு?” என்றாள் புரியாமல்.

அதற்கு குமரன், “இவங்க அம்மா 6 வயசுல தான் இவனை ஸ்கூல்லயே சேர்த்தாங்க வசு. பொத்தி பொத்தி வளர்த்தாங்க…” என்று கிண்டலடிக்க, “ஓ… பொத்தி பொத்தி வளர்த்து இப்ப, அடியாள் ஆக்கி ஊர் மேய விட்டிருக்காங்க அப்படி தான…?” என அவள் பங்கிற்கு வாரி, ஜிஷ்ணுவிடம் இருந்து பல அடிகளை பரிசாக பெற்றுக்கொண்டதும், பின் அதுவே தீண்டல்களாக மாறி, முத்தங்களை பரிமாறியதும் நினைவு வந்து கசப்பைக் கொடுத்தது.

அமைச்சரும் அவரின் ஆட்களும் அங்கிருந்து அகன்றதுமே, ஜிஷ்ணுவின் முன் வந்து நின்றாள் வசுந்தரா.

அவளை எதிர்பாராது ஒரு நொடி திகைத்தவன், “வசு… உன்னை இங்க வராதன்னு சொன்னேன்ல” என்று கண்டிக்க, அவளோ “எந்த கொலையை மூடி மறைக்க சொல்லி சொன்னான் அந்த மினிஸ்டர்” எனக் கேட்டாள் விழி இடுங்க.

“உனக்கு அது தேவை இல்லாத பிரச்சனை. முதல்ல இங்க இருந்து கிளம்பு!” என்றவனின் குரலில் அதிகாரம் மிதக்க,

“ராதியை என்னடா பண்ணீங்க?” என்றாள் அதிரடியாக.

அவனோ கண்கள் சுருங்க, “நீ நிதானமா இல்ல. வீட்டுக்கு போ!” என்றதில், அவன் சட்டையை பிடித்தவள், “சொல்லுடா, ராதிக்கு என்ன ஆச்சு. அந்த ஆளு ராதி கொலையை தான மறைக்க சொன்னான். சொல்லு… அவள் கொலையை மறைச்சா, உனக்கு சீட் தரேன்னு சொன்னானா. கேவலம், உன் அரசியல் ஆசைக்காக எந்த எல்லைக்கும் போறேன்னு சொன்னவன், கூடவே இருந்த பொண்ணை கூட கொன்னுட்டியா…? சொல்லுடா சொல்லு…” என்று கத்தி தீர்க்க, சத்தம் கேட்டு வெளியில் வந்த குமரன் அவளைத் தடுத்தான்.

அவன் கண்களும் கலங்கி சிவந்திருந்தது. “வசு என்ன பேசுற? ராதி இறந்தது எங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கு. அவள் உனக்கு ஃப்ரெண்டுன்னா, எங்களுக்கும் ஃப்ரெண்டு தான்…” என்றதில், “ஓ வெறும் ஃப்ரெண்டு மட்டும் தானா?” அவள் இளக்காரமாக கேட்க,

குமரன் தான், “சத்தியமா, அவள் என் ஃப்ரெண்ட் மட்டும் தான் வசு” என கலங்கியவனிடம், “ஃப்ரெண்டு ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு தான், அவளை கிணத்துல தள்ளி விட்டீங்களா? இப்ப அவ சாவை வச்சு அரசியல் பண்றீங்களாடா…?” என மூச்சு வாங்கினாள்.

ஜிஷ்ணுவோ, “அப்படியே பண்ணாலும் அதை உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. என் விஷயத்துல தலையிடாதன்னு உன்ன ஏற்கனவே சொல்லிருக்கேன்…” என்றவன், தீப்பிழம்பாக நிற்க, “ராதிக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும். கண்டிப்பா தெரிஞ்சுக்குவேன்.” என்றாள் சவாலாக.

அந்நேரம், அங்கிருந்த டேபிளில் ராதிகாவின் போன் தென்பட, வேகமாக அதனை எடுத்தவள், “இது… இது ராதியோட போன்! இது எப்படிடா உன்கிட்ட வந்துச்சு?” என்று ஆத்திரத்துடன் வினவ,

“இது ராதி ‘போன்’னு உனக்கு எப்படி தெரியும்” எனக் கேட்டான் எகத்தாளமாக.

“அவள் பர்த்டேக்கு நான் தான் இதை கிஃப்ட் பண்ணேன். வீட்ல மட்டும் தான் இதை யூஸ் பண்ணுவா. இவள் போன் இங்க எப்படி வந்துச்சு…” என்றவள் பல்லைக்கடித்துக் கொண்டு கேட்டதில், அதனை வெடுக்கென பிடுங்கியவன், “கீழ கிடந்துச்சு…” என்றான் தோளைக் குலுக்கி.

அதில் வெறியானவள், ஜிஷ்ணுவை சப்பென அறைந்து, “என்னடா… நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். ஓவரா பண்ற… உன்ன உரசிக்கிட்டே இருக்குறனால நீ என்ன பண்ணாலும் உன் கால்ல விழுவேன்னு நினைச்சுட்டியா? புடிச்சு உள்ள தள்ளிடுவேன். நீ எவ்ளோ பெரிய இவனா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல…” என்றவளை இன்னும் சினத்துடன் ஏறிட்டவன், அவள் கழுத்தை பிடித்திருந்தான்.

“இங்க பாரு… நானும் அதே தான் சொல்றேன். தேவை இல்லாம, என்கிட்ட எதையாவது பேசிட்டு இருந்த, இங்கயே கொன்னு புதைச்சுடுவேன் உன்ன. நான் தான் சொன்னன்ல… என் அரசியல்ல நான் ஜெயிக்கணும்ன்னா எந்த எல்லைக்கு வேணும்ன்னாலும் போவேன்!” என அனலை கக்க குமரன் தான் அவனை தடுத்தான்.

“மாப்ள என்னடா பண்ற விடு அவளை…” என்று அவனிடம் இருந்து அவளை பிரிக்க, அவளோ விழிகளில் நெருப்பை உமிழ்ந்தாள்.

“பொறுக்கி நாயே…! கூடவே இருந்துட்டு குழி பறிச்சு இருக்கீல… உனக்கு சீட் தரேன்னு என்னை கூட்டி குடுக்க சொன்னாலும் குடுத்து இருப்ப அப்படி தான?” சுத்தமாக பொறுமை அவள் கை மீறி சென்றிருந்தது.

சில நொடிகள் அவளை வெறித்தவன், அசட்டையாக, “செஞ்சுருப்பேன்…” எனக் கூறியதில், அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

குமரனோ, “டேய் என்ன பேசுற?” என அதட்டி விட்டு, “வசு நீ மொதல்ல கிளம்பு ப்ளீஸ்…” என்றான் கெஞ்சலாக.

“என்னால கிளம்ப முடியாது. ராதிக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்” என்று கத்தியவள், ஜிஷ்ணுவின் கையில் இருந்த அவளது போனை பறிக்க, அவன் அதனை இறுக்கி பிடித்திருந்தான்.

“போனை குடுடா!” என அவள் வம்படியாக நிற்க, ஜிஷ்ணுவோ பளாரென அவளை அறைந்திருந்தான்.

“எனக்கு ரொம்ப பொறுமை இல்ல வக்கீலே. ஒழுங்கா கிளம்பி போற வழிய பாரு. இல்ல… கொன்னுடுவேன்” என்றவனின் விழிகளில் ஆத்திரம் வழிந்தது.

அவன் அறைந்ததில் வசுந்தரா தான் திகைத்து நின்றிருந்தாள். அவன் கரம் பட்ட கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பதற்கு பதிலாக இப்போது வலியில் எரிந்தது. மனதும் தான்.

“இப்ப நான் போனேன்னா மொத்தமா போய்டுவேன்… அதுக்கு அப்பறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல…” என தீர்க்கமாக உரைத்தவளின் கண்கள் சிவந்திருந்தது.

அவள் மீது கோபப் பார்வையை படர விட்டவன், விறுவிறுவென வீட்டினுள் சென்று, அவனது வக்கீல் யூனிஃபார்ம் – ஐ எடுத்து வந்து வாசலில் போட்டான். 

வசுந்தராவை முறைத்தபடியே, அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்து, அதை கொளுத்தி விட, பெண்ணவள் மேலும் இறுகினாள். ‘உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’யென சூசகமாக சொல்லி விட்டவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் வெறித்தவள், “இனிமே நீ என்னை வக்கீலா தான் பாப்ப தர்மா. ராதியோட சாவுக்கு காரணம் தெரியுற வரை உன்ன நிம்மதியா இருக்க விட மாட்டேன்…” என சபதம் எடுத்து விட்டு, அவனைத் தாண்டி செல்ல எத்தனிக்க,

ஜிஷ்ணுவோ, அவளின் கையை பிடித்து, “என்னை என் வேலையை பாக்க விடாம செஞ்ச… நானும் உன்ன நிம்மதியா இருக்க விட மாட்டேன் வக்கீலு.” என கர்ஜித்தவனை உதறி விட்டு வேகநடையுடன் முன்னேறினாள். அவன் கையை மட்டுமல்ல, அத்துடன் அவனது உறவையும் உதறி விட்டாள்.

குமரனுக்கு தான் ஆற்றாமை தாளவில்லை. அவள் பின்னேயே வந்து, “வசு வசு… என்ன இது ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க. இப்ப தான் ஒருத்தியை இழந்து இருக்கோம். ப்ளீஸ் வசு… நம்ம ஃப்ரெண்ட்ஷிப் எந்த காரணத்தை கொண்டும் உடைய கூடாது.” என்றவனுக்கு கண்ணை கரித்தது.

அதில் நின்றவள், அவனை தீயாக முறைத்து, “குட் பை… நீங்களும் உன் ப்ரெண்ட்ஷிப்பும்…” என பல்லைக்கடித்து ஏதோ பேச வந்தவள், மேலும் வார்த்தை வராமல் கிளம்பி சென்று விட்டாள்.

இங்கு பரத்தும் அர்ச்சனாவும் தான் பேயறைந்ததை போல நின்றிருந்தனர்.

பரத்தோ, “அடிப்பாவி, ஏதோ க்ளாஸ்மேட்ன்னு தான சொன்ன. இப்ப என்னடான்னா இவ்ளோ பெரிய ரொமான்ஸ் சீன்ஸ் ஓட்டி வச்சுருக்க?” என்று வாயை பிளக்க,

அர்ச்சனா, “அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு மேம். நீங்க எம். எல். ஏ சார்கிட்ட பேசலையா?” என்று வினவ, “நான் என்ன இதுக்கு அவன்கிட்ட பேசணும். இப்பவும் எனக்கு எந்த லாஸும் இல்ல… அவனை தூக்கி போட்டுட்டு அடுத்த வேலையை பார்த்துட்டேன்.” என எகத்தாளமாக கூறியவள், “ப்ச்… தேவை இல்லாம முடிஞ்சு புதைஞ்ச விஷயத்தை எல்லாம் பேசிக்கிட்டு…” என்று எரிச்சலாய் முகம் சுளித்தாள் வசுந்தரா.

“பரத், எந்த காரணத்தை கொண்டும் கன்னிமனூர்ல இருக்குற மலைகள் அழியக் கூடாது. இதை கண்டிப்பா தடுத்து நிறுத்தணும்” என்ற சிந்தனையில் மூழ்கியவள், அடுத்து அடுத்து வேலைகளை பணிக்க, பரத் தான் அவளை அமைதியாக பார்த்தான்.

அர்ச்சனாவை கிளம்ப சொல்லி விட்டு, வசுந்தராவை தடுத்து நிறுத்திய பரத், “தாரா… உண்மையை சொல்லு. தர்மா உன்னை விட்டு போனதுனால உனக்கு உண்மையாவே வருத்தம் இல்லையா?” எனக் கேட்டான் கூர்மையாக.

“இல்ல” என்று அடுத்த நொடியே பதிலளித்த வசுந்தரா, “இந்த அனுதாப பார்வை எல்லாம் எனக்கு தேவை இல்ல பரத். அவன் அவ்ளோ ஒர்த் இல்ல…” என கடுமையாக கூறியவள், காரில் ஏறி அமர்ந்து வீட்டை நோக்கி சென்றாள். செல்லும் போதே, கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றாக உருவாகி கன்னம் வழியே பயணித்துக் கொண்டிருந்தது.

இலகுவாக அவனும் இவளை தூக்கி போட்டு விட்டான். இவளும் அவனை தூக்கி எறிந்து விட்டாள். ஆனால், அப்பிரிவு ஒன்றும் அவளை அத்தனை பலமாக்கவில்லை. முற்றிலும் பலவீனமாக்கியது. ஒரு புறம் உயிர்தோழியின் திடீர் மறைவு, ஒரு புறம் உயிர் நண்பனின் பிரிவு, மற்றொரு புறம் ஊனில் கலந்து அணுவில் நிறைந்தவனின் நிராகரிப்பு அவளை தோய வைத்தது.

திடீரென ஏற்பட்ட தனிமை அவளை பித்தாக்கியது. வெகு நாட்கள், எங்கோ வெறித்தபடி தன்னை மறந்து சுற்றம் மறந்து அப்படியே அமர்ந்திருக்கிறாள். ராதிகாவின் மறைவின் உண்மை காரணம் அறியும் வரை, கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தவள், அதனை முயன்று கடைபிடிக்க முயன்றாள்.

இறுதியில், அவன் அளித்த இதழ் காயம் எரிச்சலைக் கொடுக்கும் போது, அவனுடன் படர்ந்திருந்த மொத்த நிகழ்வும் நினைவில் உதித்து, காய்ந்திருந்த கண்களை கலங்க வைக்க, வலுக்கட்டாயமாக அதனை உள்ளிழுத்து, “அவனை நினைச்சு அழகுற அளவு அவன் தகுதியானவன் இல்ல. என் ராதிக்காக மட்டும் தான் நான் அழுவேன்…” என்று தன்னைத் தானே அடக்கி, அந்த அடக்குமுறையில் அழுத்தம் ஏறி, ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து போனாள்.

அவனில்லாத வாழ்வில் அனைத்தும் சூன்யமாகி விட்டதை மூளை உரைத்தாலும், அதனை அவள் ஏற்க மறுத்து விட்டாள். இப்படியே அவள் வாழ்வு வீணாகி விடுவமோவெனே பயந்த ராஜசேகர் தான், அவளின் சித்தப்பா நகுலனை அழைத்திட, அவரும் மகளின் நிலை கண்டு பதறினார்.

பின், அவளை வற்புறுத்தி அவருடனே அழைத்துச் சென்று, சீனியர் வக்கீலிடம் பயிற்சிக்காக சேர்த்து விட, சிறிது சிறிதாக அவளும் தொழிலில் கவனத்தை செலுத்தி அதில் வெற்றியும் கண்டாள்.

வீட்டிற்கு சென்றும் யாரிடமும் பேசாமல் அமைதியாக அவள் வேலையை செய்திட, பரத் அவளைத் தேடி வந்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னடா இந்த நேரத்துல?” என புருவம் சுருக்கி வினவ, “ஒரே குழப்பமா இருக்கு தாரா. உன் ஃப்ரெண்ட் ராதிகா இறப்புல ஏதோ உறுத்திக்கிட்டே இருக்கு. எனக்கு தெரிஞ்சு தர்மா உன்ன லவ் பண்ணல. ஜஸ்ட் உன்ன யூஸ் பண்ணிட்டு இருந்துருக்கான்” என்று தயக்கத்துடன் கூறியவன், அவள் அமைதி காக்கவும், மேலும் தைரியம் வந்து,

“எனக்கு என்னவோ, ராதிகாவை ரேப் பண்ணிருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு… அதெப்படி திடுதிப்புன்னு அவள் கிணத்துல விழுந்து சாவா. அதுவும் கிணத்தை சுத்தி ரத்தமா இருந்துச்சுன்னு வேற சொல்ற. அன்னைக்கு அவன் வேற ஒரு மார்க்கமா இருந்து இருக்கான். இதெல்லாம் வச்சு பார்க்கும் போது, அவன் ஏன் அவனை கண்ட்ரோல் பண்ண முடியாம, ராதிகாவ ரேப் பண்ணிருக்க கூடாது.” என்று கூறி முடிக்கும் முன்னே, அவன் கன்னத்தில் இடியென அவளது கை ரேகை பதிந்தது.

எதிரில் நின்ற வசுந்தரா காளியாக அவதாரம் எடுத்திருந்தாள். “இங்க பாரு பரத்… அவன் கொலை பண்ணிட்டான்னு சொல்லு… ஏமாத்திருக்கான்னு சொல்லு. நான் ஒத்துக்குவேன். ஆனா, இன்னொரு பொண்ணை தப்பா தொட்டான்னு சொல்லாத. அறைஞ்சு பல்லை கழட்டிடுவேன். அவன் தப்பானவன் தான். ஆனா, ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை தொடுற அளவு கீழ்த்தரமானவன் இல்ல” என்று விரல் நீட்டி எச்சரித்தவள், “கெட் அவுட்” என்று உறுமிட, பரத் திகைத்து நின்றான்.

இங்கோ, நான்கைந்து குவளை விஸ்கியை உள்ளே தள்ளி இருந்தான் ஜிஷ்ணு. கௌரவ் தான் அவன் புறம் குனிந்து, “ஜீ… ஏற்கனவே நடுராத்திரி ஆகிடுச்சு. நீங்க தூங்க போகல” என பவ்யமாக வினவ, “ம்ம்…” என்றவன் குடிப்பதை நிறுத்தவில்லை.

அதன் பிறகே கௌரவ் பதற்றமாக இருப்பதை கண்டவன், “என்ன” என்று விழிகளாலேயே வினவ, “அதில்ல ஜீ… நம்ம கட்சி ஆளுங்களுக்கு காலைல இருந்து ஒரே வேல…” என்று தலையை சொரிய, ஜிஷ்ணு விஸ்கியை பருகியபடி அவனை கூர்மையாக பார்த்திருந்தான்.

“அதான் கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்ன்னு ஃபீல் பண்றாங்க” என திக்கித் திணறி கூறியதில், ஜிஷ்ணு அர்த்தத்துடன் ஏறிட்டு “ஜாலியான்னா?” என வினவ,

“அதான் ஜீ… குடி, பொண்ணுன்னு…” என்று மேலும் நெளிய, அவனை ஒரு மாதிரியாக பார்த்த ஜிஷ்ணு, “என்னத்தையும் பண்ணி தொலைங்க. நாளைல இருந்து வேலை இன்னும் நிறைய இருக்கும்.” என்றதில், பிரகாசமான கௌரவ், “ஜீ… உங்களுக்கும் ஏற்பாடு பண்ணவா?” எனக் கேட்டான் நாராசமாக.

குடிப்பதை நிறுத்தி விட்டு, அவனை ஏற இறங்க பார்த்த ஜிஷ்ணு, “நீ எப்ப பி. ஏ வேலையை விட்டுட்டு மாமா வேலைக்கு சேர்ந்த?” என நக்கலாகக் கேட்க, அவனோ அசடு வழிந்து, “இல்ல ஜீ… அடுத்த எலக்ஷன்ல நீங்க ஜெயிச்சாலும் என்னையவே பி. ஏ வா வச்சுக்கணும்ல…” என இழுத்ததில், “மூடிட்டு போடா” எனக் கடுப்படித்தான்.

அவனோ நகராமல், “அப்போ உண்மையாவே வேணாமா ஜீ…?” என்று சந்தேகமாக கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்த ஜிஷ்ணு தர்மன், நாற்காலியில் நன்றாக சாய்ந்து, கால் மேல் கால் போட்டு, “நான் ஏகபத்தினி விரதன்” என்றான் அழுத்த விழிகளுடன்.  

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
101
+1
4
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்