1,892 views

தீரனைப் பற்றிய யோசனையுடனே உறங்கிப் போன சஹஸ்ரா, மறுநாள் சோம்பலுடன் கண் விழிக்க, அவளருகில் படுத்திருந்த தீரன் தான் அவளை விழி அகற்றாமல் பார்த்திருந்தான்.

அப்பார்வையின் வீரியம் தாளாமல், கண்ணைக் கசக்கியவள், மெல்லமாகவே அவனது கைச்சிறையில் இருந்து விடுபட்டு எழுந்திட,

“சாரி” என்ற அவனது அழுத்தக் குரலில் மீண்டும் திரும்பினாள்.

“எதுக்கு?” அவள் புரியாமல் கேட்க,

“நேத்து நிதானம் இல்லாம உன்னையும் பயமுறுத்திட்டேன்ல.” கண்ணை சுருக்கி அவன் பேசிய விதத்தில், லேசாக முறுவலித்தவள்,

“இப்போ பெட்டரா?” எனக் கேட்டாள்.

அதற்கு பதில் கூறாமல் அவளையே ஆராய்ந்து கொண்டிருந்தவன், “நான் சாரி அதுக்கு மட்டும் கேட்கல” என்றான் நிறுத்தி.

மேலும் குழம்பிய முகத்துடன், ‘வேற எதுக்கு?’ என்பது போல பார்த்திட,

“ஒரு நாள் நைட்ட வேஸ்ட் பண்ணிட்டேன்ல அதுக்கும் தான்” என்றவனைக் கண்டு முதலில் விழித்தாள்.

அதன் பிறகே, இதழோரம் குறும்பு நகையைக் கண்டவள், அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து, சிவந்தாள்.

அதரங்களை அழுந்தக் கடித்தபடி, “நம்ம டூருக்கு தான் வந்து இருக்கோம்.” என்று நினைவுபடுத்த, அதற்கும் குறுஞ்சிரிப்பைத் தவிர அவனிடம் பதிலில்லை.

அதுவே அவளுக்கு உதறலைக் கொடுக்க, “நம்ம எங்கயாவது வெளிய போய்ட்டு வரலாம் தீரா.” என அவசரமாக மொழிந்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொள்ள,

வாய்விட்டே சிரித்தவன், அவள் சென்ற திசையை பார்த்தபடியே தலையணையைக் கட்டிக் கொண்டான். ஆனால், முன்பிருந்த புன்னகை இப்போது இல்லை.

சிவப்பு நிற குர்தியும், ஜீன்ஸையும் அணிந்து வெளியில் கிளம்பத் தயாராக இருந்த சஹஸ்ரா, தீரனையும் வம்படியாக கிளம்ப வைக்க, அவனும் அவளை அழைத்துக் கொண்டு கேரளாவின் அழகை ரசிக்க கிளம்பினான்.

ஏற்கனவே, சவிதாவின் பள்ளியில் எங்கெங்கு அழைத்து செல்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தபடியால், அவள் செல்லும் இடத்திற்கே சஹஸ்ராவும் செல்ல, தீரனோ,

“இட்ஸ் டூ மச் சஹி. அவள ஃப்ரீயா விடேன்.” என்று சலித்தான்.

சவிதாவும் தமக்கை கண்ணில் படும் போதெல்லாம் அவளை முறைக்காமல் இல்லை தான்.

தீரன் எவ்வளவு கூறியும் அவள் கேட்காததில், “நீ இப்படி சொன்னா கேட்க மாட்ட.” என்றவன், காரை வேறு திசையில் திருப்பினான்.

“தீரா என்ன பண்றீங்க?” சஹஸ்ரா பதற்றமாக கேட்க,

“ம்ம். உன்ன கடத்திட்டு போறேன். ஏண்டி, அவளையும் சுத்தி பார்க்க விட மாட்டேங்குற. என்னையும் சுத்தி பாக்க விட மாட்டேங்குற… உன்ன கேரளா கூட்டிட்டு வந்ததுக்கு என் பழைய கேர்ள் ஃபிரெண்ட கூட்டிட்டு வந்து இருக்கலாம்.” என வேண்டுமென்று வாரினான்.

அத்துடன், காற்று போன பலூனாக பொசுங்கியவள், “கேர்ள் ஃபிரெண்டா?” என மெலெழும்பாத குரலில் கேட்க,

“ஆமா, என் எக்ஸ் லவர்…” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“இதை நம்ம லவ் பண்ணும் போதே நான் சொல்லி இருப்பேனே. சொல்லலயா?” தீவிரமாய் யோசிப்பது போன்று அவன் கேட்டதில்,  அவளுக்கு தான் நெஞ்சில் பாரம் கூடியது.

‘ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணுனனாள தான், என்னை அக்ரிமெண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டாரோ’ என்ற கேள்வி அவளை வதைக்க, இல்லையென மறுப்பாக தலையாட்டினாள்.

நமுட்டு நகை புரிந்தவன், “பாரேன். லவ் பண்ணி கல்யாணமே செஞ்சுகிட்ட உன்ன ஞாபகம் இல்ல. என் எக்ஸ் லவ்வர எல்லாம் ஞாபகம் இருக்கு. ஒருவேளை உண்மையா லவ் பண்ணிருப்பேனோ.? இருக்கும்…” என வினாவும் அவனே விடையும் அவனே என்பது போல பேசியதில் அவளுக்கு கண்ணீர் அதோ இதோவென கண்ணில் முட்டிக் கொண்டு நின்றது.

“ஆமா ஆமா… அப்போ அவளையே கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தான!” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவள், கார் நேராக ஹோட்டலில் நிற்கவும், அவனைப் பாராமல் இறங்கிக் கொண்டாள்.

மந்தகாசப் புன்னகையை ஒளிர விட்டபடியே துள்ளல் நடையுடன் அவள் பின்னே சென்றவன், அறை வாசலில் சிவந்த விழிகளுடன் நின்றவளை சிரிப்பு முட்ட பார்த்தான்.

தன்னிடம் இருந்த ‘ஆக்ஸஸ் கார்டு’ கொண்டு கதவை திறந்த நொடி, அவள் விறுவிறுவென உள்ளே சென்று விட, அதனை விட வேகமாக, கதவை அடைத்து விட்டு, அவளை அணைத்துக் கொண்டான்.

தீரனிடம் இருந்து விடுபட முயன்ற சஹஸ்ரா, “விடுங்க…” என நகர போக, ஒரு துளி கண்ணீர் அவன் கையில் பட்டதில்,

“ஹே சஹி…” என்று அவள் கன்னத்தை தாங்கி கொண்டான்.

திருமணம் நடக்கும் போதே அவன் மற்றொரு பெண்ணை காதலித்தது தெரிந்திருந்தால் கூட, இந்த அளவு பாதித்து இருக்குமா என தெரியவில்லை. ஆனால் இப்போது வலித்தது.

“ஏய்… பிரின்ஸஸ்! நான் சும்மா உன்ன டீஸ் பண்ணுனேன்டி. இதுக்குலாமா அழுவாங்க.” என்ற அவனின் வார்த்தைகளை காதில் வாங்காதவள்,

“நீங்க அவளை தான லவ் பண்ணுனீங்க. அப்போ அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிருக்கலாம்ல…” என மூக்கை உறிஞ்சினாள்.

“அட பைத்தியம். நான் யாரையும் லவ் பண்ணவே இல்லடி” என்றபடி அவளை மீண்டும் சமாதானம் செய்ய, அவளுக்கோ கண்ணீர் நிற்கவே இல்லை.

“பிரின்ஸஸ் இங்க பாரேன்.” என அவளை நிமிர்த்தி அவன் கண்களை பார்க்க வைத்தவன், சிவந்திருந்த விழிகள் கண்டு, “என் லைஃப்ல ஒரே ஒரு லவ் தான். ஒரே ஒரு பொண்ணு தான்.  அது நீ மட்டும் தான்.” என்றான் அத்தனை தீவிரத்துடன்.

அக்கண்களில் வழிந்த காதலிலும், அழுத்தத்திலும் செயலற்று நின்றவளை, மெல்லிய புன்னகையுடன் ஏறிட்டான்.

“நம்பலையாடி…!” ஆழ்ந்த குரலில் கேட்டவன், அவள் நம்பும் படியாக, காதலை கொட்ட ஆரம்பித்தான் கணவனாக.

முத்தங்களுடன் முடித்து விடுவான் என அதனை இமை மூடி ரசித்து ஏற்றவளுக்கு, அவனது கரங்கள் அத்து மீறிய பிறகே, நிஜம் உறைத்தது.

ஆனால், அப்போது மறுக்கும் நிலையில் அவளும் இல்லை. மறுப்பை ஏற்கும் நிலையில் அவனும் இல்லை. இருவருமே தேகத் தீண்டல்கள் தந்த மயக்கத்தில் தன்னிலை மறந்திருந்தனர்.

நாணம் ஒரு புறமும், ஆடவன் அளித்த கதகதப்பு ஒரு புறமும் சஹஸ்ராவை தோய வைக்க, “தீரா…” என அவள் வெட்கத்தில் தளர்ந்து பேசும் முன், அவளின் செவ்விதழ்கள் அவன் வசம் இருந்தது.

அப்போது மட்டுமல்ல, ஒவ்வொரு முறை அவள் தவித்து மருகி துவண்டு, அவன் பெயரை உச்சரிக்கும் போதும் அவளை பேச விட்டானில்லை.

எங்கே மறுத்து விடுவாளோ என்ற ஒரு வித தவிப்பே, அம்முத்தங்களின் வெளிப்பாடு, என்பது அவன் மட்டுமே அறிந்தது.

“யூ ஆர் கில்லிங் மீ சஹி…” ஏதேதோ உளறியவன், சற்று அவசரமாகவே அவளிடம் தன் உரிமையை நிலைநாட்டினான்.

கடந்து சென்ற இன்ப நிமிடங்களின் தாக்கத்தில் இருந்து மெல்ல மீண்டு, தன்னவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன், குறும்பு புன்னகையுடன் அவளை விட்டு விலக, அவளுக்கோ அவனது முகம் பார்க்கவே வெட்கம் பிடுங்கித் தின்றது.

கண்களை இறுக்கி மூடி படுத்திருந்தவளை வெகுவாக ரசித்தவன், அவளது காதோரம் ஏதோ கிசுகிசுக்க, மேலும் சிணுங்கியவள், அவன் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அந்நாள் முழுக்க, அவளை சற்றும் பிரிந்தானில்லை.

இதுவே அடுத்த நாளும் தொடர, “நம்ம ரூருக்கு வந்து இருக்கோம் தீரா…” என மீண்டும் நினைவுபடுத்தினாள் கேலியாக.

கரங்களை அவள் மேனியில் படர விட்டவன், “நான் வந்தது ஹனிமூன்க்கு தான் பிரின்ஸஸ்.” என்று கண் சிமிட்ட,
அவள் நெளிந்தாள்.

“மனுஷக்குரங்கு…” உதட்டுக்குள்ளேயே செல்லமாக திட்டிக் கொண்டு, அவன் கேசத்தை கலைத்து விட,

“ஐ காட் யூ டி. இன்னைக்கு மனுஷ குரங்கா தான் நான் இருக்க போறேன்.” என கடிப்பது போல பாவனை செய்தவனை தள்ளி விட்டாள்.

“இன்னைக்கு மட்டும் தான் இப்படி இருக்கீங்களாக்கும்…” வெட்க புன்னகையுடன் முந்தைய நாள் நினைவில் அவளது தேகம் சிவந்திட, விழிகளுக்குள் பெண்ணவளை சிறைப் பிடித்தவன், அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

பின்னால் நகர்ந்த படியே, “வாங்க வெளிய போய்ட்டு வரலாம்” என அவள் கூச்சத்துடன் கூற, “நீ கேரளா பார்த்ததே இல்லையா?” எனக் கேட்டான் கேள்வியாக.

“பாத்து இருக்கேனே. காலேஜ் படிக்கும் போது டூர்க்கு இங்க தான் வந்தோம். எல்லாம் இடமும் பாத்து இருக்கேன்.” என்று உளறி வைக்க, சிரிப்பை அடக்கியவன்,

“அப்பறம் எதுக்கு இப்ப வேற வேஸ்ட் – ஆ சுத்தி பார்த்துக்கிட்டு…” என இளநகை புரிய, ‘பே’ வென விழித்தாள்.

அத்துடன் அவனிடம் அவளும், அவளிடம் அவனும் அடங்கினர்.

அவளுக்கும் வெளியில் செல்ல விருப்பம் இல்லை தான். அவனுடன் தனிமையில் கழிக்கும் இந்நிமிடங்களை அணு அணுவாக தன் அணுவில் நிறைத்துக் கொண்டாள்.

இரு நாட்கள் கேரளா வாசம் முடிந்து, மூவரும் சென்னை திரும்பி இருக்க, அங்கு தொடர்ந்த மோகம் இங்கும் அழகாக தொடரவே செய்தது.

ஒரு வாரம் கடந்திருக்க, அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த தீரன், வார்ட்ரோப் – இல் இருந்த லாக்கரை திறந்தான்.

ஏதோ ஃபைல் போல ஒன்றிருக்க, புருவம் சுருக்கி அதனை எடுத்தவன், “சஹி… இந்த ஃபைலை எனக்கு இங்க வச்ச ஞாபகமே இல்ல. என்ன இது?” எனக் கேட்டபடி நிமிர, அப்போது தான் குளித்து முடித்து வந்தவள், அந்த கோப்பை கண்டு திகைத்தாள்.

அது இருவரின் திருமணம் பற்றிய ஒப்பந்த பத்திரம். அவளும் அதில் கையெழுத்திட்டு இருந்தாள்.

இதயம் வெளியில் வந்து விடும் அளவு வேகமாக துடிக்க, “அது… அது… வந்து…” என திக்கி திணறினாள்.

அந்நேரம் நிக்கோலஸ் போன் செய்ததில், அவனிடம் பேசிக் கொண்டே மீண்டும் அந்த கோப்பை அங்கேயே வைத்து விட்டு, அலுவலகம் சென்று விட, இங்கு சஹஸ்ரா தான் தளர்ந்து அமர்ந்தாள்.

‘நான் அவர ஏமாத்துறேன். ரொம்ப செல்பிஷ் – ஆ இருக்கேன். இதெல்லாம் தெரிஞ்சா அதுக்கு அப்பறம்… இந்த காதல் எதுவுமே இல்லாம போய்டும்… என்னை கண்டிப்பா வெறுத்துடுவாரு.’ எனக் கேவியவளுக்கு, அவனை விட்டு பிரியும் எண்ணம் துளியும் இல்லை.

அதிலும், அவன் காட்டும் காதலையும் அன்பையும் தான் வேறு யாரேனும் காட்டக் கூடுமா? அவள் உடலில் ஒரு பகுதியாகி விட்டவன், தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டால்… என்ற பயமே அவளைக் கொன்றது.

அவளுக்கு தெரியவில்லை… தன்னுடலின் ஒரு பகுதியாக எண்ணுபவனை தானே வெட்டி எறியப் போவதை…

அலுவல் வேலை ஒரு புறமும், காதல் வாழ்க்கை ஒரு புறமும் அழகாக நகன்றது இருவருக்கும்.

அவ்வப்பொழுது, “உங்க தம்பிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை ஆச்சு” என அவள் கேட்க, அவனோ இறுகி விடுவான்.

அதன் பிறகு, பழைய விஷயங்களை அவள் கிளருவது இல்லை.

அவனும், சாமர்த்தியமாக அவள் கவனத்தை தன் மீது கொணர்ந்து விடுவான். தெளிந்த நீரோடையாக நாட்கள் நகர்ந்தாலும், சில நேரங்களில் தனக்குள் எதையோ உருப்போட்ட படி, எங்கோ வெறித்திருப்பான் தீரன்.

“ஆர் யூ ஓகே தீரா…” என சஹஸ்ரா கேட்டதும் நொடியில் முக பாவத்தை மாற்றி விடுபவன், முத்த மழையை பொழிய, அவளுக்கே அவன் முகத்தில் கண்ட குழப்பமும், இறுக்கமும் உண்மை தானா என்றே சந்தேகம் வந்து விடும்.

அன்று, இரவு தாமதமாக வீட்டிற்கு திரும்பிய தீரனை முறைத்தவள், “ஏன் விடிஞ்சதும் வந்துருக்க வேண்டியது தான?” எனக் கோபம் கொள்ள,

உதட்டை மடக்கி சிரித்தவன், “அப்படி தான் நினைச்சேன் சஹி. அப்பறம் தான் என் பிரின்சஸ் என் கிஸ் இல்லாம, என் ஹக் இல்லாம தூங்க மாட்டங்கன்னு ஞாபகம் வந்துச்சா. அதான் ஓடி வந்துட்டேன்.” என்றான் அவள் கன்னம் கிள்ளி.

உண்மையில் அவன் இன்றி அவளால் உறங்கிக் கூட முடிவதில்லை தான். அந்த அளவு அவனிடம் மயங்கச் செய்திருந்தான் கள்வன்.

“இப்பவாவது ஞாபகம் வந்தச்சே…” என சிலுப்பியவளை கொஞ்சி கெஞ்சி சமன் செய்தவனுக்கு அடுத்த இரு நாட்களும் அலுவலகத்தில் வேலை கழுத்தை நெறிக்க, அப்படியும் எவ்வளவு தாமதமானாலும் வீட்டிற்கு வந்து விடுவான்.

அதுவரை அவனிடம் சண்டை இடுவதற்காகவே காத்திருப்பவளை, தன் வசீகர புன்னகையில் மனதை மாற்றி விடுவான்.

“நீயும் காலைல ஆபிஸ் போய்ட்டு அலைஞ்சுட்டு தான வர்ற. சீக்கிரம் தூங்க வேண்டியது தான சஹி…” என செல்லமாக அதட்டிக் கொண்டாலும், தனக்காக ஒரு ஜீவன் வீட்டில் காத்திருக்கிறது என்ற உண்மையே அவனை சிலிர்க்க வைத்தது.

ஆனாலும், அவளைக் கடிந்தவன், “இன்னும் ரெண்டு நாள் மட்டும் பொறுத்துக்கோ பிரின்ஸஸ். அப்பறம் நீ ஆபிஸ் விட்டு வர்றதுக்கு முன்னாடி நான் வந்து வெயிட் பண்ணுவேன்.” எனக் கிறங்கிட, அவளும் உருகினாள்.

மறுநாள் இரவு முழுக்க அவன் வராது போக, விடியும் வரை பொறுமை காத்தவள், முதல் வேலையாக கிளம்பி அவன் அலுவலகத்திற்கு சென்றாள்.

தீரனின் அலுவலகம் அமைந்திருக்கும் இடம் தெரிந்தாலும் இதுவரை சென்றதில்லை. இப்போது தான், அப்பெரிய கண்ணாடி கட்டடத்தின் முன் வண்டியை நிறுத்தியவளை வாட்ச்மேன் யாரென்று பார்க்க, அவளுக்கு பதில் கூற தெரியவில்லை.

தொழில் வட்டாரத்தில் அவர்களுக்கு திருமணம் ஆனது யாருக்குமே தெரியாது. திருமணம் முடிந்து அடுத்த பத்து நாட்களில் ரிசப்ஷன் வைத்து அனைவரையும் அழைப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் தான் என்னன்னவோ நிகழ்ந்து விட்டதே.

தீரனின் மனைவி என்று கூறினால், வாட்ச்மேன் அவளை மேலும் கீழும் ஒரு மாதிரியாக பார்க்க, அதற்கு மேல் விளக்கம் கூற பிடிக்காமல், தீரன் எண்ணிற்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்காமல் போனதில், நிக்கோலஸ்ஸிற்கே போன் செய்தாள்.

“அண்ணா… நான் அவர பாக்கணும். என்னை உள்ள விட சொல்லுங்க” எனக் கூற, நிக்கோலஸ் லேசாய் திகைத்து, விழித்தான்.

“இன்னும் ஒன் ஹவர்ல பாஸ் வீட்டுக்கு வந்துடுவாரு சஹா.” என தடுமாற,

“ஏன் நான் வந்தா உங்க பாஸ் எல்லாருக்கும் என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கிறாரா…” கேட்கும் போதே தொண்டை கமறியது.

“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல சஹா. இரு நான் வரேன்.” என்றவன், மீட்டிங்கில் இருக்கும் தீரனிடமும் விவரம் கூற முடியாமல், சஹஸ்ராவையும் தவிர்க்க இயலாமல் குழம்பி, இறுதியில் அவளை அலுவலகத்திற்குள் அழைத்து வந்தான்.

அனைவரின் பார்வையும் அவள் மீதே இருக்க, ‘ஒரு ஃபார்மலிட்டிக்காகவாவது அவரு எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கலாம்’ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

அவள் உள்ளே வரும் நேரத்தில் மீட்டிங் முடிந்து தீரனின் அறையில் இருந்து, கோர்ட் சூட் அணிந்த சில ஆடவர்கள் வெளியில் வர, “நானே அவரை பாத்துக்கிறேன் நிக்கி அண்ணா.” என உடன் வந்த நிக்கோலஸை தடுத்து, அவளே உள்ளே சென்றாள்.

நவீனத்தின் உச்சமாக, நளினத்துடன் அமைந்திருந்த அவன் அறையில் அத்தனை வசதிகளும் இருக்க, தீரன் மடிக்கணினியில் வேலையில் ஆழ்ந்திருந்தான். இரவு உறங்காததில் கண்கள் சிவந்திருந்தது அவனுக்கு. அவனைப் பாராமல் உறக்கம் தொலைத்ததில் அவளின் விழிகளிலும் சிவப்புத் தடம்.

கோப மூச்சுக்களுடன் அவன் அருகில் நின்றவளை, சில நொடிகள் கடந்த பிறகே நிமிர்ந்து பார்த்தவன் மெலிதாக அதிர்ந்தான். 

“சஹி நீ இங்க என்ன பண்ற?” எனக் கேட்டவனின் குரலில் மெல்லிய வியப்பும் சேர்ந்து பரவ,

அவளோ, அவனை முறைத்தாள்.

“நைட்டு வீட்டுக்கு கூட வர முடியாத படி அப்படி என்ன வேலை தீரா.” இடுப்பில் கை வைத்து கோபமாக கேட்டவளை மற்றவை மறந்து ரசித்தவன்,

“கண்ணெல்லாம் சிவந்து இருக்குடி. தூங்கலையா பிரின்சஸ்…” என அவள் கையை பிடித்து அருகில் இழுத்த படி கேட்க, அந்நேரம் கதவு தட்டப்பட்டதில் அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டு தள்ளி நின்றாள்.

‘இந்த நேரத்துல எந்த கரடி…’ என கடுப்பானவன், “கம் இன்” எனக் குரல் கொடுக்க, அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவன் அவனிடம் கையொப்பம் வாங்க வந்திருந்தான். கூடவே, அவன் பார்வை சஹஸ்ராவை யார் என்பது போல ஆராய, ஒரு வித இளக்காரமும் இருந்தது.

மேஜையை தட்டிய தீரன் தான், அதட்டும் குரலில், “ஃபைல்…” என்று கர்ஜிக்க, அதில் அவன் மிரண்டு கோப்பை கொடுத்து விட்டு வெளியில் சென்று விட்டான்.

முதலில் அனைவருக்கும் சஹஸ்ராவை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தனக்குள் குறித்துக் கொண்டவன், அந்த கோப்பில் கையெழுத்து இட்டு மூடி வைத்து விட்டு, சஹஸ்ரா புறம் திரும்ப அவள் சங்கடத்துடன் நெளிந்தாள்.

“நீங்க வரலைன்னு தான் பார்க்க வந்தேன். கிளம்புறேன்.” என்றவளுக்கு அங்கு நிற்கவே என்னவோ போல் இருக்க, தீரன் அவளைத் தடுத்தான்.

“சாரிடி. நான் தான் நம்ம மேரேஜ் பத்தி அனொன்ஸ் பண்ணிருக்கணும். சீக்கிரமே பண்றேன்.” எனக் கூற, தலையை ஆட்டி கிளம்ப எத்தனித்தவள் சரட்டென நின்றாள்.

ஏதோ தோன்ற, அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க இப்போ எந்த கைல சைன் பண்ணீங்க?” எனக் கேட்க, அவனோ புரியாமல் விழித்தான்.

அவள் விடாமல், அவன் கையெழுத்திட்டு வைத்திருந்த கோப்பை எடுத்து பிரித்து பார்த்த கணம் அதனை பிடுங்கியவன், “நீ கிளம்பு சஹி” என்றான் உத்தரவாக.

அவன் கோப்பை கைப்பற்றும் நேரத்திலேயே அவள் அனைத்தையும் பார்த்து விட, கண்ணை இருட்டியது. நடந்ததும், நடப்பதும் உண்மை தானா என்றே நம்ப இயலாமல் தள்ளாடியவள், கீழே விழப் போக, அவன் அவளை பிடிக்க வந்த நேரம், வெடுக்கென விலகிப் போனாள்.

“நா… நான் பார்த்தது உண்மையா? சொல்லுடா நான் பார்த்தது உண்மையா?” பொறுமை இழந்து அவள் கத்திட, அவளையே அமைதியாக பார்த்தவன், உண்மை தான் என்பது போல தலையை ஆட்ட, பேரிடி தாக்கியது போல நிலைகுலைந்து போனாள்.

“சஹி…” என அவன் பதற்றத்துடன் அவளருகில் வர, பளாரென கன்னத்தில் அறைந்தவள்,

“பொறுக்கி நாயே. அவர கொன்னதும் இல்லாம, என்கிட்ட புருஷனா நடிச்சுட்டு இருந்துருக்க. யூ ப்ளடி சீட்டர்…” என மீண்டும் அறைய போக, மறுநொடி ஆடவனின் கரங்கள் கோபத்துடன் அவள் கழுத்தை நெறித்தது.

விழிகள் கனலை கக்க, அவள் எதிரில் ஆத்திரத்தின் மறு உருவாய் நின்றிருந்தான் தீரனின் இரட்டை சகோதரனான, ரேயன் என்கிற தீரஜ் ஆத்ரேயன்.

யாரோ இவள்(ன்)
மேகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
68
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments