Loading

 

 

ஜீவா கொடுத்த முத்தத்தில், விறுவிறுவென குடிலுக்கு வந்த கயலை பின் தொடர்ந்த ஜீவா, ஒரு மூலையில் அவள் அமர்ந்திருப்பதை கண்டு, “ஸ்வீட் ஹார்ட்” என்று அழைக்க,

அவள் அந்த எருக்கம்பூ மாலையை வேகமாக கழற்றி, “கார்த்திக்காக தான் இதெல்லாம் பண்ணுனீங்கன்னு எனக்கு தெரியும்…” என்று சொல்ல,

அவன் “நான் எதுக்கு அவனுக்காக பண்ணனும்… கயல்… நீ என் பொண்டாட்டி. அந்த உரிமைல” என்று பேசும் முன்,

“நான் உங்க பொண்டாட்டியா… அதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு. உங்க ஸ்டேட்டஸ் வேற என் ஸ்டேட்டஸ் வேற. உங்க பேரை சொல்ல கூட எனக்கு தகுதி இல்லாதப்போ எப்படி நான் உங்க பொண்டாட்டியா இருக்க முடியும்” என்று சொன்னதை கேட்டு, ஜீவா திகைத்து விட்டான்.

தான் சொன்னதே தனக்கு பெரும் அடியாய் வர, அவன் சொன்ன வார்த்தைகளே அவனைக் கொன்று புதைத்தது.

மேலும் கயல், “இப்போ வரை நான் உங்க வேலைக்காரி மட்டும் தான். அப்படி உங்ககூட நான் இருக்கணும்னா நான் உங்க வப்பாட்டியா தான இருக்கணும். என்னால அப்படி இருக்க முடியாது” என்று குரல் கமற சொல்ல, ஜீவாவுக்கு தான் எங்கேயாவது முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.

அவளை நெருங்கி, அவளின் கையைப் பிடித்து, “ஸ்வீட் ஹார்ட்… நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு…” என்று சொல்ல,

அவள் கையை வெடுக்கென அவனிடம் இருந்து பிடுங்கி விட்டு, “நீங்க உங்க ஸ்டேட்டஸ்க்கு ஏத்தமாதிரி பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. ஊருக்கு போனதும் நான் என் வீட்டுக்கே போய்டுறேன்” என்று கண்ணீருடன் சொல்ல, அப்போதும் ஜீவா, அவளைக் காயப்படுத்தி விட்ட வருத்தத்தில்

“கயல், சாரி டி… நான் தெரியாம தாண்டி பண்ணுனேன். இப்போ நீ என் பொண்டாட்டி டி. நான் எப்படி வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்க முடியும்… நீ தாண்டி எனக்கு எல்லாம்” என்று கிட்டத்தட்ட அவனுக்கு பழக்கமே இல்லாத குரலில் கெஞ்சவே செய்தான்.

அதையும் அவள் முழுதாய் காதில் வாங்காமல், “நான் உங்களுக்கு டிவோர்ஸ் குடுத்தா நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கலாம்ல. நம்ம டிவோர்ஸ் பண்ணி” என்று சொல்லி கூட முடிக்கவில்லை. அவளுக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது.

மலங்க மலங்க முழித்து கொண்டு எதிரில் பார்க்க, ஜீவா வெறி கொண்ட வேங்கையாய் நின்றிருந்தான்.

அவன் முகத்தில் இதுவரை அவ்வளவு இறுக்கத்தையும், கடுமையையும் அவள் பார்த்ததே இல்லை.

அவளை சுவற்றோடு சுவராக நெருக்கியவன், “என்னடி சொன்ன… சொல்லு என்ன சொன்ன?” என்று கத்தியபடி கேட்க, அவளுக்கு சப்த நாடியும் அடங்கி போனது.

அவள் கழுத்தைப் பற்றியவன் சிவந்த கண்களுடன் “என்னடி சொன்ன சொல்லு?” என்று மேலும் கத்தியதில் அவள் மிரண்டு திக்கி திணறி “டி டி டிவோர்ஸ்” என்று கூற, அவள் கழுத்தை வெகுவாய் அழுத்தி இருந்தான்.

அவள் முகத்திற்கு நேராய் நெருங்கி, பல்லைக்கடித்துக் கொண்டு,”டிவோர்ஸ் பண்ணுவியா…? யாருடி உனக்கு அந்த ரைட்ஸ் குடுத்தது. நீ என்ன பண்ணனும், என்ன பண்ணக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும். நீ வாழணுமா சாகணுமான்னு கூட நான் தான் டிசைட் பண்ணனும்.” என்று உச்சகட்ட கோபத்தில் பேச, கயல் கண்ணில் பொங்கிய நீருடன், அவன் கையை கழுத்தில் இருந்து எடுக்க போராடிக்கொண்டிருந்தாள்.

அவள் மூச்சு வாங்கவே சிரமப்படுவதைக்க கண்டதும் கையை எடுத்தவன், அவள் வேக மூச்சுக்களை எடுத்து கொண்டு, இருமிக்கொண்டிருப்பதை கண்டு, சுவற்றில் நங்கு நங்கு என்று அவன் இரு கையையும் குத்திக்கொண்டவன், அங்கும் இங்கும் நடந்து கொண்டே மீண்டும், அவள் அருகில் வந்தான்.

அவள் தோள்பட்டையை இறுகப் பற்றி, “யாரை கேட்டு நீ இப்படி யோசிச்ச… ம்ம்? இப்படி யோசிக்கிற அதிகாரத்தை உனக்கு யாரு குடுத்தது… ஹான்” என்று தீப்பொறி பறக்க கேட்டவன், மீண்டும் சற்று தள்ளி, அவன் கையை இறுக மூடி, நங்கென்று தன் தொடையில் குத்திக் கொண்டு, கோபத்தை கட்டுப்படுத்த முயன்று முடியாமல், மறுபடியும் கயலின் அருகில் வர, அவளுக்கோ ஜீவாவைப் பார்த்து, பயத்தில் இதயத்துடிப்பு எகிறியது.

ஜீவா, அவள் முகத்தை ஒரு கையால் அழுத்தமாக பற்றி, “எப்படி நீ இப்படி சொல்லலாம்… டிவோர்ஸ் டிவோர்ஸ். இந்த வார்த்தை இந்த வார்த்தை இனிமே இந்த வாயில இருந்து வந்துச்சு. என்ன பண்ணலாம் ஹான்… என்னடி பண்ண. இன்னொரு தடவை சொல்லுவியா சொல்லு சொல்லுவியா” என்று கத்தியதில் அவள் அரண்டு, இல்ல இல்ல என்று தலையாட்ட, தன்னிச்சையாய் அவள் அழுந்த பற்றியதில் கன்னங்கள் ரத்தமென சிவந்து வலித்து, கண்ணில் நீர் ஆறாக பெருகிக் கொண்டிருந்தது.

அவளை கோபத்துடன் விட்டவன், அப்படியும் அவனால் கோபத்தை அடக்க முடியாமல், மீண்டும் சுவற்றில் ஐந்து நிமிடமாய் விடாமல் குத்தியதில், வெறும் சிறிய  சிறிய கல்லையும் மண்ணையும் வைத்து கட்டிய அந்த சிறிய குடிலின் அந்த சுவற்றின் ஒரு பகுதியே உடைந்து  விழுந்தது.

அதனைக் கண்டு அதிர்ந்தவள், அவனின் இந்த அவதாரத்தில் பேச்சு மூச்சே இல்லாமல் மயங்கி விழுந்தாள்.

 கையில் வழிந்த ரத்தத்துடன், கயலை பார்த்தவன், அங்கு வைத்திருந்த தண்ணியை எடுத்து அவள் மேல் தெளித்து கன்னத்தை தட்டி “ஏய் எந்திரிடி…” என்று  எழுப்ப, தண்ணீர் பட்டதில் சற்று சுயநினைவு வந்தவள், கண் விழித்து பார்க்க அவன் கண்ணில் கோபம் மறையாமல் இன்னும் அதே, அளவில் இருப்பதை கண்டதும், “ஐயோ இந்த பாழா போன மயக்கம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்க கூடாதா” என்று இருந்தது.

அதன் பின்னே, அவன் கையில் இ ரத்தத்தை பார்த்தவள், பதறிப்போக அவன் அதனை உணராமல், ரத்தம் வழிந்த கையினை கொண்டு, அவளின் முகத்தில் அழுத்திக் கோலமிட்டு, கோபம் குறையாத குரலில்,

“லுக் ஸ்வீட் ஹார்ட்… நீ இப்போ என் பொண்டாட்டி. இப்போ நீ என் சொந்தம். எனக்கு உன் மேல எல்லா உரிமையும் இருக்கு. அதுக்கு நீ என்ன பேர் வேணும்னாலும் வச்சுக்கோ ஐ டோன்ட் கேர்… இனிமே உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் என் கூட குடும்பம் நடத்தி தான் ஆகணும். யு காண்ட் எஸ்கேப் ஃப்ரம் மீ… இன்னொரு தடவை அந்த வார்த்தையை பத்தி நீ யோசிச்சா கூட அடுத்த நிமிஷம் யோசிக்க மூளை உன் தலைல இருக்காது” என்று அவள் தலையை தட்டி சொல்ல, அவளோ உள்ளுக்குள் உடைந்து போனாள்.

இப்போது கூட, அவனின் காதலை பற்றி எடுத்துரைக்காமல், கோபத்திலேயே பேசியதில் தான், அவள் மேலும் உடைந்தாள்.

அவனின் கோபம், அவளுக்கு அவன் காதலை உணர வைக்கவில்லை. அவனின் வேதனையை உணர வைக்கவில்லை. அவள் அவன் தன்னை ஒரு பொருளாக நினைத்து, திருமணம் செய்து விட்டதால் மட்டுமே, இப்படி பேசுகிறான் என்றே நினைத்து கொண்டவள் சிறிது யோசித்திருந்தால், அவனின் குரலில் இருந்த கோபத்தை மீறிய வேதனை புரிந்திருக்கும்.

அவனிடம் காதலினை மட்டுமே எதிர்பார்க்கும் கயலுக்கு அவன் அழுத்தமாய் அவளை பொண்டாட்டி என்று சொன்னது மனதில் நிற்கவில்லை.

அவள் அப்படியே நிற்பதை பார்த்தவன், “என்ன இன்னும் உன் மரமண்டையில நான் சொன்னது ஏறலையா… உன் மேல இருக்குற உரிமைல சாம்பில் கொஞ்சம் காட்டவா… ஹ்ம்” என்று அவளை நெருங்கியவன் அவளை இழுத்து , எலும்பே நொறுங்கும் படி இறுக்கி அணைத்து, பின், அவனின் ரத்த கைகளை கொண்டு, அவள் முகத்தைப் பற்றி, முரட்டுத்தனமாய் அவள் இதழில் அவனின் உரிமையை நிலை நாட்டிக் கொண்டிருந்தான்.

அவளோ ஆடாமல் அசையாமல் அவனின் செயல்களுக்கு அமைதியவே கடைபிடிக்க அவள் தடுக்காதது கூட அவனுக்கு ஒரு கோபத்தை தான் கொடுத்தது.

அதில் மேலும் அவளின் இதழை வதைக்க, அவளின் கண்ணீரின் சுவையையும் ரத்த சுவையும் ஒருங்கே உணர்ந்ததும் தான் அவளை விட்டான்.

கயல் தலையை குனிந்து கொண்டு, அப்படியே நிற்க, அவளை பாராமல் திரும்பி தன்னை நிலைப்படுத்தியவனின் கோபம் அப்போது தான் சற்று மட்டுப்பட்டு இருந்தது. விறுவிறுவென வெளியில் சென்று, அங்கிருந்த திண்ணையில், அந்த பனியில் அப்படியே படுத்து விட்டான்.

வெகுநேரம் பிரம்மை பிடித்த படி நின்றிருந்த கயல், கன்னத்தில் அவனின் ரத்தக் கரையை தடவி பார்த்த பின்பு தான் அவனின் காயம் நினைவு வர, இவ்வளவு நேரம் அவன் காயப்படுத்தியதை மறந்து, வெளியில் சென்று பார்க்க, ஆங்காங்கே மரத்தில் தீப்பந்தம் மட்டும் வைத்து அந்த இடம் மங்கிய வெளிச்சத்துடன் இருந்தது.

அன்று அனைவரும் கோவிலிலேயே தங்கியதாலும், மேலும் அன்று இரவு முழுக்க, எதாவது சடங்குகள் நடந்து கொண்டே இருப்பதாலும், இவன் கத்திப் பேசியதும் சுவற்றை உடைத்ததும் யார் காதிற்கும் கேட்கவில்லை. கார்த்தியும் உடல் வலியில் அசந்து தூங்கியதால், அவனுக்கும் சத்தம் எதுவும் கேட்கவில்லை.

சில்லென்ற பனிக்காற்று, உடலை ஊடுருவ, அடிபடாத ஒரு கையை மட்டும் தலைக்கு கொடுத்து, மற்றொரு கையை ரத்தம் வழிய விட்டு, கண்ணை மூடி படுத்திருந்தவனைக் கண்டாள்.

இன்னும் ரத்தம் நிற்காமல் வருவதை கண்டு, பூவரசி கார்த்தியின் காயத்திற்கு போடும் ஒரு மூலிகை செடியை கார்த்தியின் குடிலுக்கு சென்று எடுத்து வந்து, அதனை அரைத்து, அவன் அருகில் வர, அவன் இதனை எதுவும் உணராமல், ஏதேதோ சிந்தனையில் மூழ்கி இருந்தான்.

அவன் உறங்கி விட்டதாய் நினைத்தவள், அவன் கையை எடுத்து மடிமேல் வைத்து, மெல்ல மருந்தை இட, திடீரென சுள்ளென்று வலித்ததில், ஷ் என்று கையை இழுத்தவன், கயல் இருப்பதை பார்த்து விட்டு அமைதியாகி விட, கயல் முதலில் அவன் விழித்ததை கண்டு அதிர்ந்து விட்டு, பின் அவனை பாராமல் மீண்டும் அவன் கையை எடுத்து மருந்தை போட்டு, அவள் துப்பட்டாவின் ஒரு பகுதியை கிழித்து கட்டு போட்டு விட்டாள்.

ஜீவா, அவள் முகத்தையே சலனமின்றி பார்க்க, கயல் “உள்ள வந்து படுங்க… வெளிய பனியா இருக்கு” என்று சிறிய குரலில் சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

அவளின் கண்கள் கலங்கி சிவந்து,  கன்னத்திலும் கழுத்திலும் அவனின் கை ரேகை பதிந்திருப்பதை கண்டு, “சாரி டி… உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல. அது எனக்கே புரியுது ஆனால்… என்னால கோபத்தை கட்டுப்படுத்த தான் முடியல.” என்று பெருமூச்சு விட்டு, மீண்டும் அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று பயந்து உள்ளே செல்லாமல் அப்படியே படுத்திருக்க,

அவன் வருவானென்று சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்த கயல், ஜீவா உள்ளே வரவில்லை என்று அறிந்ததும், நீர்த்துளிகள் கண்ணை விட்டு எட்டிப் பார்க்க, அவள் கைப்பையை எடுத்து, ஒரு புகைப்படத்தை வெளியில் எடுத்தாள்.

அது ஜீவாவின் புகைப்படம் தான். கயலின் தோழி கல்யாணத்தின் போது அவனை முதல் முதலில் பார்த்தது. அவன் நடந்து வருகையில் போட்டோக்ராஃபரினால் எடுக்கப் பட்டிருந்தது.

அவளின் தோழி திருமணம் முடிந்து, அவளைப் பார்க்க செல்கையில் எதேச்சையாய் அவளின் திருமண ஆல்பம் பார்த்தாள்.

அதில் இவனின் புகைப்படமும் இருந்ததில், ஏன் அதை எடுக்கிறோம் என்றே தெரியாமல், அதனை சுட்டுக்கொண்டு வந்திருந்தாள். தினமும் ஒரு முறை கூட அவள் அந்த புகைப்படத்தில் இருக்கும் ஜீவாவை கண்ணில் பருகாமல் உறங்கியது கிடையாது.

சரியாக அவன் தலையை கோதுகையில், அவன் சற்று திமிராய் பார்ப்பது போல் இருக்கும். அந்த திமிரில் தினமும் கரைபவள், அதன் பிறகே அவனை அலுவலகத்தில் பார்த்தது, காதலித்தது எல்லாம்.

அந்த புகைப்படத்தையே ஆசையாய் வருடியவள், “என்னை ஏன் ஏமாத்துனீங்க ஜீவா… உங்களை காதலிச்சு தான் இந்த போட்டோவை கூட திருடுனேனான்னு எனக்கு தெரியாது… ஆனா, அப்போவே என் மனசுல ஆழமாய் பதிஞ்சிடீங்க.

உங்களை மறுபடியும் பார்க்கும் போது, நீங்க என்கிட்ட பேசும்போது கூட, நீங்க… நீங்க என்னை அவ்ளோ மோசமானவளா நினைச்சு தான் பழகிருக்கீங்கன்னு நினைக்கும் போது, ரொம்ப அருவருப்பா இருக்கு.

நீங்க செஞ்சது தப்புன்னு ஒத்துக்கிட்டீங்க. ஆனா…ஆனா… என் காதல் என்ன ஆச்சு ஜீவா?

நீங்க என்னை ஏமாத்த லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அன்னைக்கு நீங்க சொன்னதெல்லாம் உங்க மனசுல இருந்து வந்தது தான. உங்களுக்கு நான் எந்த விதத்துலயும் பொருத்தமா இருக்கமாட்டேன் தான. அப்பறம் ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க. இன்னும் உங்களுக்கு என்கிட்ட இருந்து என்ன தான் வேணும் ஜீவா…” என்று மனதிலேயே கதறியவள், அவன் போட்டோவையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

காதலா காதலா
காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே
அழைக்கிறேன்

அவனின் நினைவிலேயே கண்ணீரில் கரைந்தவள், அவள் பொண்டாட்டி என்று சொன்னதை நினைத்து, “நான் உங்க பொண்டாட்டியா ஜீவா… உண்மையிலேயே நீங்க என்னை அப்படிதான் பார்க்குறீங்களா? இல்ல… இன்னும் என்னை தப்பானவளா தான் நினைக்கிறீங்களா.

இல்ல, கல்யாணம் பண்ணுனனால வேற வழி இல்லாமல் என்னை சகிச்சுக்கிறீங்களா. என்னை போக சொன்னா கார்த்திக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கும்ன்னு தான நீங்க என்னை உங்க கூட வாழ சொல்றீங்க. இப்போ கூட உங்க மனசுல சின்னதா, ஒரு ஓரமா கூட, என் மேல காதல் இல்லையா ஜீவா…” என்று ஏக்கமாக அவன் போட்டோவை பார்க்க கண்ணில் நீர் நிறைந்தது.

நாள்தோறும்
வீசும் பூங்காற்றை
கேளு என் வேதனை
சொல்லும்

நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று உன்
ஞாபகம் கொல்லும்

தன்னந்தனியாக
சின்னஞ்சிறு கிளி தத்தி
தவிக்கையில் கண்ணில்
மழைத்துளி இந்த ஈரம்
என்று மாறுமோ
ஓஓஓஓஓஹோ

திண்ணையில் கண் மூடி படுத்திருந்த ஜீவா, கயலையே தான் நினைத்து கொண்டிருந்தான்.

அவளை முதன் முதலாய் பார்த்த தருணத்தையும், அவளின் அமைதி கொஞ்சும் எழிலில் தான் மொத்தமாய் வீழ்ந்ததையும் எண்ணியவன், போனில், அவனையே அறியாமல், அவளை விழிகளுக்கு சிறைப்படுத்தியது போதாதென்று செல்போனிலும் அவளை படம் பிடித்திருந்ததையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில், மழைத்துளிகள் மண்ணோடு சேர்த்து மங்கையவளையும் நனைக்க, அவளோ, பிறந்து சிறிது நேரமே ஆன அந்த குட்டி நாய்க்குட்டி மழையில் நனையாதவாறு குடை பிடித்திருந்தாள்.

வேலை விசயமாக கோயம்பத்தூர் வந்திருந்த ஜீவா, எதேச்சியாய் அந்த இடத்தை கடக்கையில், மனது மட்டும் அவளை கடக்க மாட்டேன் என்று அடம்பிடித்தது.

அந்த கவிதையான தருணத்தை வீணாக்க விரும்பாமல் அதனை அப்படியே புகைப்படம் எடுத்திருந்தான். அப்பொழுதே, அவள் முகம் அவன் ஆழ்மனதில் அழுத்தமாய் அமர்ந்திருந்தது. அதன் பிறகு, ஒவ்வொரு முறை கோயம்பத்தூர் வரும் போதும், அந்த முகத்தையே செல்லும் இடமெங்கும் தேடி கண்கள் அலைபாயும்.

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா
அன்பே அழைக்கிறேன்

அது காதல் தானா என்றெல்லாம், அவன் உணரவில்லை. ஆனால் அவளை நினைக்கும்போதெல்லாம் மனதில் சில்லென்ற மழைக்காற்று தழுவுவது போல் தான் இருக்கும்.

அப்படி அவளையே நினைக்கும் தருணத்தில் தான் அவளை கார்த்தியின் கல்லூரியில் கண்டான்.

அதிலும் தன் மனதை கவர்ந்தவள், தன் தம்பியை ஏமாற்றியவள் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மேலும், கார்த்தியின் இறப்பு அவனுக்கு மேலும் மேலும் கோபத்தீயை ஏற்றியதில், அவளை வதைக்கிறோம் என்ற பெயரில், வேண்டுமென்றே ஏமாற்றித் திருமணம்  செய்து கொண்டான்.

ஆனால், அனைத்துமே தன் முட்டாள்த்தனம் என்று உணர்ந்தவன், இப்பொழுது வரை அவளைக் காயப்படுத்திக் கொண்டு இருப்பதை மட்டுமே நினைத்து சுக்கு நூறாய் உடைந்து போனான்.

தான், மன்னிப்பு கேட்டும் அவள் மனமிரங்காமல் தன்னை இப்படி சோதிக்கிறாளே… எப்போதடி என்னை மன்னிப்பாய்… என்று  உருகியவன், அந்த புகைப்படத்தையே வருடி விட்டு, நெஞ்சோடு புதைத்துக் கொண்டான்.

ஓயாத தாபம்
உண்டாகும் நேரம்
நோயானதே நெஞ்சம்

ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்

நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப்போகுமா…

இருவரும் வெவ்வேறு உணர்ச்சிப் பிடிகளுக்கு மத்தியில் சொல்லாத காதலுடன் உறங்கிப் போக, விடியும் முன்பு கயலுக்கு விழிப்பு தட்ட, வெளியில் வந்து பார்த்தவள், ஜீவா குளிரில் உடலை சுருக்கி படுத்திருப்பதை கண்டு, வேகமாக அவன் கொண்டு வந்திருந்த ஒரு போர்வையை எடுத்து அவனுக்கு போர்த்தி விட்டாள்.

கையில் போனுடன் உறங்கியிருப்பதை பார்த்து, அவன் உறக்கம் கலையாமல் மெல்ல அதனை எடுத்து, ஒரு ஓரமாக வைத்து விட்டு திரும்பியவள், ஏதோ தோன்ற, அவனின் போனை எடுத்து பார்த்தாள்.

அப்பொழுது தான், கண் விழித்த ஜீவா, கயல் போனை வைத்திருப்பதை கண்டு, அதனை வெடுக்கென்று பிடுங்க, கயல் பேந்த பேந்த முழித்து, “அது போனை கைல வச்சுருந்தீங்க அதான்…” என்று மென்று முழுங்கினாள்.

அவன், “ம்ம்” என்று போர்வையை எடுத்து தன்னை போர்த்திக் கொண்டு, உள்ளே செல்ல, அங்கு ஏதோ புகைப்படம் போல் இருப்பதை பார்த்து விட்டு, அதனை எடுக்க போக, இப்போது கயல் சட்டென்று வந்து, அதனை அவனிடம் இருந்து பருங்கினாள்.

ஜீவா புரியாமல் பார்க்க, கயல், “அது… அது என்னோடது…” என்று அதனை பேகில் திணித்து விட்டு, அவனை பாராமல் வெளியில் சென்றிட, “எதை என்கிட்ட இருந்து மறைக்கிறாள்” என்று யோசித்தவன்,

அவள் வெளியில் சென்றதும், அந்த பேகை எடுக்க போக, மீண்டும் கயல் உள்ளே வந்து, ஜீவா பேகை எடுக்க போவதை பார்த்து, “எதை பண்ணாதன்னு சொல்றோமோ அதை தான் முதல்ல பண்ணுவாரு” என்று முணுமுணுத்து விட்டு, அந்த பேகையும் கையோடு எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டாள்.

அவளின் முணுமுணுப்பு ஜீவாவின் காதில் நன்கு எட்டியதில், ‘அப்படி இவள் சொல்லி நம்ம என்ன கேட்கலைன்னு இப்படி புலம்பிட்டு போறாள்… நீ என்ன பண்ணனும்னு சொல்லுடி. அதை உடனே பண்றதை விட எனக்கு வேற வேலையே இல்லயே.’ என்று தனக்குள் புன்னகைத்து கொண்டான் ஜீவா…

தொடரும்
மேகா..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
78
+1
8
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment