1,248 views

மணப்பெண்ணை அழைக்க சென்றவர்கள் திரும்பாமல் இருக்க பரமேஸ்வரி அங்கு சென்றார். மணப்பெண்ணோ அக்னி வேண்டாம் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்க,
“என்னம்மா கடைசி நேரத்துல இப்படி சொல்ற. என்ன காரணம்?” என்று பரிதவிப்போடு கேட்டார்.

“என்ன மன்னிச்சிடுங்க எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. நான் சொல்லியும் கேட்காம எங்க வீட்டுல இருக்கவங்க தான் கட்டாயப்படுத்தி இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்தாங்க. நீங்களாது புரிஞ்சுக்கிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்துங்க.” என்ற பெரும் இடியை பரமேஸ்வரி தலையில் போட்டாள் மணப்பெண்.

கதி கலங்கி நின்றவர் அப்பெண்ணை சமாதானப்படுத்த பேச வர, அப்போதுதான் அவள் கையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தார். அதில் அக்னி சந்திரன், அன்பினிசித்திரை இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தது. பார்க்க கூடாததை பார்த்தது போல்
திடுக்கிட்டு நின்றார்.

“அம்மா யாரோ ஒரு பொண்ணு அண்ணன் பக்கத்துல உக்காந்துட்டு தாலி கட்ட சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க.” என்று ஓடி வந்தாள் திவ்யா.

பதறி அடித்து மணமேடை சென்றார். அன்பினி அக்னியின் அருகில் அமர்ந்திருந்தாள் ஜோடியாக. பார்த்ததும் தெரிந்துக் கொண்டார் புகைப்படத்தில் இருக்கும் பெண் தான் இவள் என்று.

“யாருமா நீ இங்க வந்து எதுக்கு பிரச்சனை பண்ணிட்டு இருக்க முதல்ல எழுந்திடு.” என்று மணிவண்ணன் கூற,

“நான் யாருன்னு உங்க மகன் கிட்ட கேளுங்க.” என்றவளை அக்னியை விட அதிகமான உஷ்ணத்தோடு பார்த்தான் அக்னிசந்திரன்.

விஷயம்  அறிந்த பெண் வீட்டுக்காரர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள் அக்னியின் பெற்றோர்களை. பெண் வீட்டு சொந்தங்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, மணப்பெண்ணும் அவளின் பெற்றோர்களும் அமைதியாக நின்றிருந்தார்கள்.

கூட்டத்தில் ஒருவர், “யாருமா நீ முகூர்த்த நேரத்துல வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்க.” என்று கேட்க,

“அதைக் கேட்க நீ யாரு?” என்றவளின் பார்வை அக்னி மீது தான் இருந்தது.

“எங்க பொண்ணு கல்யாணத்துல பிரச்சனை பண்றதும் இல்லாம நான் யாருன்னு கேக்குற. .” என்றவரை  பார்த்தவள்,

“என்ன வயசு இருக்கும் உங்களுக்கு .” என்று அளவிடும் பார்வையில் பார்த்தாள்.

அவள் பேச்சில் அங்கிருந்த அனைவரும் சத்தம் போட ஆரம்பிக்க, “சும்மா சத்தம் போடாதீங்க! உங்க பொண்ணுக்கே இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. வேணும்னா கேட்டு பாருங்க” என்றாள்.

அன்பினியின் வார்த்தையை கேட்ட மணிவண்ணன் அதிர்வோடு தன் மனைவியை பார்க்க, அவரோ அழுதுக் கொண்டு நின்றிருந்தார்.

அனைவரின் பார்வையும் மணப்பெண் மீது இருக்க, அவளோ பெற்றோர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் கையில் இருக்கும் புகைப்படத்தை பார்க்க நேரிட்டது. அதைப் பார்த்து தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்தவர்கள், “இந்த போட்டோவுக்கு என்ன அர்த்தம்.  இந்த பொண்ணு கூட பழிக்கிட்டு எங்க வீட்டு பொண்ண ஏமாத்த பார்த்திருக்கியா.” என்று அக்னியிடம் வாதம் புரிய,

“இது எங்களோட பர்சனல். யாருக்கும் கேள்வி கேக்குற உரிய இல்ல. உங்க பொண்ணு விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா கூட்டிட்டு கிளம்புங்க.” என்றாள் அன்பினி.

“அந்த பொண்ணே அதிர்ச்சில பேச முடியாம பாவமா நிக்குது. நீ பாட்டுக்கு பிடிக்கலன்னு சொன்னதா சொல்ற. என்னம்மா காதுல பூ சுத்துற.” என்றவரை பார்த்து,

“அப்படியா!” என்றவள் மணப்பெண்ணை மூக்கு விடைக்க முறைக்க, “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல கட்டாயப்படுத்தி தான் சம்மதிக்க வச்சாங்க.” என்று பட படவென வெடித்தாள் மணப்பெண் அலங்காரத்தில் இருந்த ஒருத்தி.

“எல்லாரும் கேட்டீங்களா. இனி ஒரு வார்த்தை பேசக்கூடாது வந்த வழியே கிளம்பனும். தேவையில்லாம ஏதாவது பேசிட்டு இருந்தீங்க அவ்ளோ தான்.” என்று மிரட்டினாள் அன்பினி.

திமிராக பேசும் அன்பினி மீது கோபமும், பாதிக்கப்பட்ட பெண் மீது இரக்கமும் வர கும்பலாக சேர்ந்து கேள்விகளால் துளைத்து எடுத்தனர். அந்தக் கூட்டத்தை தனி ஒருத்தியாக சமாளித்தாள் அன்பினி.

நடப்பதை பார்த்த பரமேஸ்வரி, “எதுக்குமா இங்க வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்க உனக்கு என்ன வேணும்.” அந்த பதட்டத்திலும் பொறுமையாக கேட்டார் .

“உங்க பையன் தான் வேணும்.” பட்டென்று பதில் சொல்லியவளை அவர் திகைப்போடு பார்த்தார்.

“கல்யாணமாக போறவனை வந்து கேட்கிற என்னமா உனக்கு பிரச்சனை.” மணிவண்ணன் கோபத்தோடு வினவ,

“அதான்  பொண்ணே வேணாம்னு சொல்லிடுச்சுல அப்புறம் என்ன. நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம் கல்யாணம் பண்ணி வைங்க. .” என்றதும் இடி இடித்தது போல் இருந்தது பெற்றோருக்கு.

வார்த்தையின் பொருளை உணர முடியாமல் அக்னிசந்திரன் பெற்றோர்கள் தடுமாறிக் கொண்டிருக்க,

“இன்னும் எவ்ளோ நேரம் தான் இதே இடத்துல உட்கார்ந்துட்டு  இருக்குறது. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள தாலி கட்ட சொல்லுங்க.‌ பார்ட்டிக்கு வேற போகணும்.” என்ற அன்பினி சித்திரையை நெருங்கினான் அக்னிசந்திரன்

“வாழ ஆசை இருந்தா வந்த வழியே போயிடு. தாலி கட்ட சொல்லி சாவ தேடிக்காத. ” சவரம் செய்த தடைகள் கோபத்தில் பற்களை கடித்து நொறுக்க,

“உம்ம்ம்மா! கோபத்துல கூட அழகு அள்ளுது போடா.” என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு, “அச்சோ! புருஷன் பேர சொல்ல கூடாதுல. கோபத்துல கூட அழகா இருக்கீங்க மாமா. ” என்று தலை குனிந்து வெட்கப்பட்டாள்.

நடப்பதை பார்த்த பெண் வீட்டுக்காரர்கள் செல்வகுமாரை மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். கணவன் தன் முன்னால் அவமானப்படுவதை சகித்துக் கொள்ள முடியாத பரமேஸ்வரி அவர்களை பார்த்து கை வணங்கிட,

“அம்மா!” என்று கத்தியவன் மேடையை விட்டு இறங்க முற்பட்டான்.

எழுந்தவனை தடுத்த சித்திரை, “தாலி கட்டிட்டு நகரு.” என்றாள் விடாப்பிடியாக.

“முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்க.” என்றான் அக்னியும் தீர்க்கமாக.

“இங்க பாருமா தயவு செஞ்சு ஓரமா போய் நில்லு. ஏற்கனவே பொண்ணு கல்யாணம் வேணாம்னு சொல்லிக்கிட்டு இருக்கு. இதுல நீ ஒரு பக்கம் பிரச்சினை பண்ணாத.” வேண்டுதல் வைத்தார் பரமேஸ்வரி.

சபையில் இருப்பவர்கள் முன் ஒய்யாரமாக நின்றவள், “இங்கே இருக்க பெரியவங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க. இவனோட மாமன் பொண்ணு தான் நான்.” என்றதும் அக்னியின் குடும்பத்து ஆட்கள் திடுக்கிட்டார்கள்.

“வாய்க்கு வந்ததை சொல்லிட்டு இருக்காதம்மா. எங்களுக்கு சொந்தம்ன்னு யாரும் இல்லை.” என்ற மணிவண்ணனை ‘அப்படியா’ என்ற முகத்தோடு பார்த்தவள்,

“உங்களுக்கு இல்ல ஆனா உங்க பொண்டாட்டிக்கு இருக்காங்க. அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பசங்க ரெண்டு பேருன்னு ஒரு குடும்பம் இருக்கு.” என்று பரமேஸ்வரியை பார்த்தாள்.

அவரோ கண்மூடி சுவற்றில் சாய, “செல்வகுமார் பொண்ணு அன்பினிசித்திரை.” என்றாள் அவரிடம்.

மணிவண்ணன் மகனைப் பார்க்க, அவனோ, “ஏய்! இங்கே இருந்து கிளம்பிடு.”  எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவிற்கு சிவந்து பேசினான்.

அவன் வார்த்தையை அலட்சியம் செய்தவள்”இத்தனை நாளா உங்க மகன் வேலை பார்த்துட்டு இருந்தது எங்க ஆபீஸ்ல. உங்களை ஏமாற்றி வாங்குன கம்பெனிய திரும்பவும் வாங்கறதுக்கு சாதாரண வேலைக்காரனா உள்ள நுழைஞ்சி எல்லாரையும் ஏமாத்திட்டான். இதுக்கு நடுவுல என்னை காதலிச்சிட்டு குடும்பத்துல இருக்கிற பகையை காரணம் காட்டி வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க பார்க்கிறான்.  என் காதல் தெரிஞ்சு வீட்டை விட்டு துரத்திட்டாரு எங்க அப்பா. எனக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்க கிளம்புறேன்.” என்றவள் மண மேடையில் அமர்ந்துக் கொண்டாள்.

பரமேஸ்வரி கண் மூடியபடி அமர்ந்திருக்க, மணிவண்ணன்  நகர்ந்து இருக்கையில் அமர்ந்து கொண்டார். அன்பினி அங்கிருந்த மணப்பெண்ணின் பெற்றோர்களை ஓடி விடும்படி எச்சரித்தாள். எப்படி தப்பிப்பது என்று பதட்டத்தில் இருந்தவர்கள் தங்களுக்காக பேசிய குடும்ப உறுப்பினர்களை சமாதானப்படுத்தி, கிளம்பி விட்டார்கள்.

அனைவரும் சென்ற பின் அக்னியின் வீட்டு சார்பாக சிலர் மட்டுமே இருக்க, அன்பினியை பார்த்தவன், “இதுக்கு மேலயும் நீ என் கண்ணு முன்னாடி இருந்தன்னா சத்தியமா சொல்றேன் சாவடிச்சிடுவேன். என் அம்மா முகம் சுளிச்சாலே தாங்க மாட்டேன். அவங்களை இத்தனை பேருக்கு முன்னாடி அசிங்கப்படுத்திட்ட. இதுக்கான தண்டனை ரொம்ப கொடூரமாக இருக்கும் அன்பினிசித்திரை. எந்த உண்மையும் எங்க அம்மாக்கு தெரியக் கூடாதுன்னு தான் நீ வந்ததுக்கு அப்புறமும் எதுவும் பேசாம அமைதியா இருந்தேன். இப்ப தான் எல்லாம் தெரிஞ்சிருச்சே  கிளம்பு.”  என்றவன் பரமேஸ்வரி அருகில் சென்றான். அவரோ விழித்திறக்காமல் இருந்தார்.

“அம்மா” என்றதும்,

“செல்வகுமார் பொண்ணா இவ.” கேட்டார் பரமேஸ்வரி.

“எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன் ம்மா இப்ப வாங்க வீட்டுக்கு போகலாம்.” என்றவன் அவர் அருகில் செல்ல,

“திவ்யா உங்க அண்ணன கிட்ட வர வேணாம்னு சொல்லு.” என்று சத்தமாக கட்டளையிட்டார்.

அன்னையிடம் நகர்ந்தவன் அப்படியே நின்று விட, “போய் மணமேடையில உட்காரு” என்று விழி திறந்தார்.

“பரமு என்ன பண்ற?” என்ற கணவனுக்கு,

“என் பையன் காதலிச்ச பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வைக்க போறேன்.” என்றார்.

“அம்மா  அண்ணனை சந்தேகப்படுறியா?” என்ற திவ்யாவிற்கு பதில் சொல்லும் முன் தன் மகனைப் பார்த்தவர்,

“இந்த பொண்ணு இல்ல அந்த சாமியே வந்து சொன்னாலும் என் மகனை நான் சந்தேகப்பட மாட்டேன். ஆனா இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் இப்ப வரைக்கும் அந்த பொண்ண நான் காதலிக்கலன்னு ஒரு வார்த்தை  சொல்லல.” என்றவர் வேதனையோடு அக்னியை பார்த்தார்.

அவரைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தான் அக்னி. மகனின் செய்கையில் விரக்தியாக சிரித்தவர் எழுந்து நின்றார்.

“கரெக்ட் மாமியாரே இப்ப தான் பாயிண்ட்ட பிடிச்சீங்க. அப்புறம் என்ன கல்யாண மாப்பிள்ளை வந்து பக்கத்துல உட்காருங்க.” என்ற அன்பினிசித்திரை கழுத்தில் இருக்கும் மாலையை சரி செய்து கொண்டு நேராக அமர்ந்தாள்.

மணமேடையில் அமர்ந்திருக்கும் அன்பினியை பார்த்தவர், “உங்க அப்பாக்கு இந்த விஷயம் தெரியும்னு சொன்னியே உண்மையா?” என கேட்டதும்,

“ம்ம்” என்ற சத்தம் மட்டுமே அவளிடம்.

“ரெண்டு குடும்பத்துக்கும் தீராத பகை. இதுல உன்னை எப்படி அனுப்புனாரு.”

“அனுப்பல துரத்தி விட்டுட்டாரு இனிமே என் வீட்டுக்கு வராதன்னு.”

“என்னங்க சேர்ந்து நில்லுங்க ஆசீர்வாதம் பண்ணுவோம்.” என்றதும் மணிவண்ணன் பக்கத்தில் நிற்க, அட்சதையை வாங்கிக்கொண்டு அமைதியாக நின்றார் பரமேஸ்வரி.

மனம் எல்லாம் குற்றம் குடியேற அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி. நிமிடங்கள் சென்றதே தவிர இருவரிடமும் மாற்றமில்லை. தலை கவிழ்ந்தபடி மணமேடை ஏறினான். மகிழ்வோடு நடக்க வேண்டிய திருமணம் உயிர் இல்லா உடல் போல் அமைதியாக நடக்க தொடங்கியது.

நல்லநேரம் முக்கால்வாசி முடிந்திருக்க, கடைசி பத்து நிமிடத்தில் அவசரமாக தாலியை எடுத்து கையில் கொடுத்தார் ஐயர். வாங்கியவன் பரமேஸ்வரியை பார்க்க, அவரும் மகனை தான் பார்த்துக் கொண்டிருந்தார். கண்மூடி தனக்குள் கட்டளைகளை போட்டவன் மூன்று முடிச்சு போட்டான் பக்கத்தில் இருந்தவளுக்கு.

“லவ் யூ அக்னி.” என்றவளை  சாதாரணமாக பார்த்தவன் கன்னத்தை இரண்டு முறை தட்ட, உள்ளுக்குள் அன்பினிசித்திரைக்கு கிலி பறந்தாலும், “பார்த்துக்கலாம் அக்னி.” என்றாள் சிரிப்போடு.

உடனே மணமேடை விட்டு நகர பார்த்தவனை பரமேஸ்வரி கண்டித்து அடுத்தடுத்து செய்ய வேண்டியதை முறையாக செய்து முடித்தார்.

தாலி கட்டுவதற்கு முன் அதிகாரமாக பேசியவள் தாலி கட்டியதும் ஏனோ பெரும் அமைதியைக் கடைப்பிடித்து கொண்டிருக்க… நோட்டம் விட்டாள் ஒருவனை. அன்பினி பார்ப்பதை கூட உணராமல் போனில் யாருக்கோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தான். தனக்குள் சிரித்துக் கொண்டவள் தன் குடும்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

வந்திருந்த  தெரிந்தவர்கள் பிடித்தமும், பிடிக்காத தன்மையும் வெளிக்காட்டி விட்டு சென்றிருக்க, அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தார் மணிவண்ணன். அவர் நினைவுகள் கடந்த காலங்களை வட்டமிட, கர்மா வேலை செய்ததாக நினைத்துக் கொண்டார். கணவனின் எண்ணங்களை அழகாக படித்த பரமேஸ்வரி கண்டுகொள்ளாமல் இருந்தார்.

“திவ்யா நீங்க நடக்க வேண்டியதை பாருங்க. அப்பா கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்.” என்ற தந்தையை காண முடியாமல் தலையசைத்தாள் திவ்யா.

***

மண்டப வாசல் நோக்கி சென்றவருக்கு எதிரில் வந்து நின்றார் செல்வகுமார். சட்டையை பிடித்து  “ஏன்டா உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா ரெண்டாவது தடவையா இந்த வேலையை பார்த்திருப்ப. எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வச்சிருப்ப, அதுவும் உன் பையனுக்கு.உன்னை எல்லாம் சும்மா விட கூடாது. இன்னைக்கு உன்னை கொன்னு என் குடும்ப மானத்தை காப்பாத்தல நான் செல்வகுமார் இல்லடா.”என்று ஆவேசமாக மணிவண்ணனை  தாக்க சென்றவரின் கைகளை  தடுத்த பரமேஸ்வரி,

“இங்க பாரு தேவையில்லாம என் புருஷன் மேல கைய வச்ச  அப்புறம்  அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன்.”என்றவரின் வார்த்தை திவ்யாவிற்கு புதிதாக இருந்தது.

இதுவரை தாய் தந்தை குடும்பத்தை பற்றி எதுவுமே தெரியாமல் வளர்ந்தாள். தன் தந்தை அனாதை என்றும், தாய்க்கு பெரிய சொந்தம் இல்லை என்றும் கூறியே வளர்க்கப்பட்டாள். 

“அட ச்சீ! வாய மூடு யாருக்கு யார் அண்ணன். என் தங்கச்சி செத்து பல வருஷம் ஆகுது. என்னைக்கு கல்யாண மண்டபத்துல இருந்து இதோ இங்க நிக்கிறானே இந்த பொறுக்கி கூட ஓடி வந்தியோ அப்பவே அவ செத்துட்டா.  உன் புருஷன் உன் மூலமா என் சொத்தை அடைய நினைச்சான் . அது முடியாம போச்சு. பையனை அனுப்பி கம்பெனிய வாங்கிட்டான்.  இப்போ என் பொண்ணு மூலமா சொத்த அடைய  பார்க்கிறான் அயோக்கிய பையன்.” என்ற செல்வகுமாரின் வார்த்தையில் அக்னியாய் கொதித்தவன்,

“என் அப்பா பொறுக்கின்னா  இத்தனை பேருக்கு முன்னாடி  இல்லாத பொய்யை சொல்லி தாலி கட்டிக்கிட்ட உங்க பொண்ணு யாரு.  உங்க வளர்ப்போட லட்சணம் தான் இந்த கல்யாணத்துக்கே காரணம். உங்க பொண்ண கட்டாயப்படுத்தி இங்க யாரும் தாலி கட்டல. உங்க அருமை மக தான் கட்டுனா என்னை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சி எனக்கு பார்த்த பொண்ண துரத்தி விட்டுட்டு தாலி கட்டிக்கிட்டா.” என்றவன் அன்பினியை கோபத்தோடு பார்க்க,
அவளோ கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.

அந்த கோபத்தையும் சேர்த்து, “தொழில்  போச்சு  எதாச்சும்  காசு கொடுங்கன்னு கேட்டா தர போறேன். அதை விட்டுட்டு இப்படி பொண்ண முன்னாடி அனுப்பிட்டு பின்னாடி வந்து சண்டை போடுறீங்க வெட்கமா இல்ல மானம் கெட்டவங்களா .” என்றதும் அங்கே நின்றிருந்த விக்ரம் அக்னியின் சட்டையை பிடிக்க,

நக்கல் பார்வையுடன் பிடித்த கையை எடுத்து விட்டவன்  “பணத்துக்காக பொண்ண அனுப்பி விட்டுட்டு என்னா நடிப்புடா சாமி. நீயும் அவன் பையன் தான. அதான் தங்கச்சி பண்ண காரியத்துக்கு நாலு விடாம அப்பா பின்னாடி ஒளிஞ்சிகிட்டு நிற்கிற. இந்த லட்சணத்துல ஐயாக்கு கோபம் வேற.” என்றான்.

தந்தையுடன் வந்த விக்ரமிற்கு கட்டுக்கடங்காத கோபம் இருந்தது உண்மையே . ஆனால் தன் தந்தையின் வார்த்தையில் இது தொழிலையும் தாண்டி குடும்பப் பிரச்சினை என்பதை உணர்ந்தவன் அமைதியாக இருந்தான். அதையே தன் கோழைத்தனமாக எண்ணிய அக்னியை  அடிக்க கையை ஓங்க,

“விக்ரம் என் புருஷன் மேல இருந்து கையை எடு.” அமைதியாக இருந்த அன்பினி கூற, அதில் கடுப்பானான் விக்ரம்.

“எல்லாமே உன்னால தான். இவன் ஒரு ஆளுன்னு இவன் பின்னாடி வந்திருக்க ‌.” என்றவன் அவளை அடிக்க செல்ல,

“உன் வேலையை மட்டும் பாரு தேவை இல்லாம என்கிட்ட பாயாத. நீ பண்றதை பார்த்துட்டு என் புருஷன் சும்மா இருக்க மாட்டான்.” என்றவளை முறைத்தான் அக்னிசந்திரன்.

“என்னடி பண்ணுவான் வர சொல்லு இப்பவே அவனா நானான்னு பார்க்கிறேன் ‌.”

“என்ன பண்ணுவான் அவன் உன்னை அடிப்பான் நீ அவனை அடிப்ப. அந்த ஆக்ஷன் சீனை பார்க்கவா கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை நிறுத்தி, உங்களுக்கு விஷயம் தெரியும்னு நம்ப வச்சு  கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இங்க பாரு யாரும் என்னை கடத்திட்டு வந்து கட்டாயக் கல்யாணம் பண்ணல. என் விருப்பத்தோட தான் எல்லாம் நடந்திருக்கு. மத்தபடி என் மாமனார் பொறுக்கியும் இல்ல. என் அப்பா மானங்கெட்டவரும் இல்ல. நீ நடிக்கவும் இல்லை புரிஞ்சுதா எல்லாருக்கும். தாலி கட்டிக்கிட்டு தனியா நின்னுட்டு இருக்கேன் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம சண்டை போட்டுட்டு இருக்கீங்க. தள்ளுங்க!” என்றுவிட்டு  வெளியில் நின்றிருந்த அக்னியின் காரில்  அமர்ந்துக் கொண்டாள்.

அக்னி தான்,  “இப்போ தெரியுதா யார் பொறுக்கின்னு. பொண்ண ஆம்பளையாவும், இதோ இங்க நிற்கிறானே இந்த ஆம்பளைய பொண்ணாவும் வளத்து வச்சிருக்க  செல்வகுமார்.” என நக்கலான சிரிப்பை சிரித்து மேலும் அவ்விருவரையும் கடுப்பேற்ற,

அருகிலிருந்த பரமேஸ்வரி ” போதும் நம்ம கிளம்பலாம். ” என்று அழைத்துச் சென்றார்.

***

“மாமியாரே ஆரத்தி எங்க?” வாசலில் நின்றிருந்த அன்பினிசித்திரை கேள்வி கேட்க,
அவளுக்கு பதில் சொல்லாதவர் அமைதியாக சென்று விட்டார். பக்கத்தில் நின்றிருந்த திவ்யாவிடம்,

“நாத்தனாரே அண்ணிய வரவேற்க எதாச்சும் ஸ்பெஷலா ஒரு சாங் போடு.”என்றாள்.

அவள் திரும்பி அக்னியை பார்க்க, உள்ளே போகுமாறு சைகை செய்தான் . அண்ணனின் சொல்படி அமைதியாக தன் அறைக்கு சென்று விட்டாள் திவ்யா.

“இங்க பாருடா அண்ணன் மகுடிக்கு கட்டுப்பட்ட நாத்தனார் பாம்பு.” என்றவளை மணிவண்ணன் முறைக்க,

“அக்னி அப்படியே உங்களை மாதிரி மாமா!.” என்றாள் இருக்கும் நிலையை உதாசீனம்  செய்து.

அவள் வார்த்தையில் வீட்டிற்குள் செல்லாமல் வெளியில் சென்று விட்டார் மணிவண்ணன். இருவர் மட்டுமே வாசல் நிற்க, “அக்னி வா ரெண்டு பேரும் ஒன்னா வலது கால் எடுத்து வைப்போம்.” என்று அவனின் கைப்பிடித்தாள்.

அவள் கையை சுழற்றியவன் கைக்குள் அடக்கிக் கொண்டு அழுத்த, வலி உயிர் போனது அவளுக்கு. கொடுத்த அழுத்தத்தில் மூட்டுக்கு கீழுள்ள தசைகளுக்கு ரத்தம் செல்லாமல் இறுகி போவதை உணர்ந்தவள் எடுக்க முயற்சித்தாள்.
அவனிடம் மல்லுக்கட்டி தோற்றவள் கண்கள் கலங்கும்  நேரம் கைகளை விடுவித்தவன் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்.

வீட்டிற்கு வந்த அன்பினியை யாரும் கண்டுகொள்ளவில்லை . அவளும் அதற்கு வருந்தவும் இல்லை. அப்படி இப்படி என இரவு வேளையும் நெருங்க, அதுவரை வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்த அன்பினிசித்திரை அங்கிருக்கும் வேலையாளை அழைத்து முதலிரவுக்கு தேவையான பூ, பழங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்ய சொன்னாள்.

அதை கேட்ட பரமேஸ்வரி ஏதோ அரிய வகை  ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து வைத்தார் அன்பினியை. அப்பார்வையை அவளும் உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருக்கும்  குளிர்சாதனைப் பெட்டியில் இருந்த பாலை எடுத்து காய்ச்சினாள்.

அதில் பாதாம் ,பிஸ்தா, முந்திரி, திராட்சை என கையில் கிடைத்த அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து இரவு எடுத்து செல்வதற்காக தனியாக எடுத்து வைத்தாள்.

பின் , “திவ்யா” என சத்தமாக அழைத்தாள். அக்குரலில்   வெளியில் வந்த திவ்யாவிடம்,
“இன்னைக்கு எங்களுக்கு முதலிரவு. அதுக்காக நான் ரெடி ஆகணும். உன் ரூம் தேவைப்படுது நீ கொஞ்ச நேரம் வெளிய இரு.” என்றவள் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

 

திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவன் ‘ஓஹோ! மேடம்க்கு முதலிரவு கேக்குதா சிறப்பா கொண்டாடிடலாம் வா.’ என நினைத்தவன் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து கொள்ள, அவனது அறை முதலிரவுக்கு தயார் படுத்தப்பட்டது.

ஒப்பனைகளை முடித்துக்கொண்டு வெளியில் வந்த அன்பினி   தயார்ப்படுத்தி வைத்திருந்த பாலை எடுத்துக் கொண்டு நேராக  பரமேஸ்வரியிடம் சென்றாள்‌.

“மாமியாரே! என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க. ” என்றவளை  அவர் முறைக்க,

அதற்கெல்லாம் அஞ்சும் ரகம் இல்லாத அன்பினி அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.

நடக்க போவதை அறிந்தும் உள்ளே சென்ற அன்பினியை வரவேற்றது என்னமோ அலங்கரித்த ஆள் இல்லாத அறை தான். ‘எங்கே அவன்’ என தேடியவாறு உள்ளே வந்தவளின் மேல் நீர் கொட்ட, குமட்ட ஆரம்பித்தது அவளுக்கு

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
33
+1
2
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *