12 – விடா ரதி…
அவர்கள் சென்றதும் ரதி கண்கள் கலங்க செல்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்வேதா அனைத்தும் முன்பே சுந்தரியின் வழியாக அறிந்து இருந்ததால் அதிர்ச்சியாகவில்லை. சவிதா நடந்தவற்றைக் கண்டு குழப்பமும், வருத்தமும் கொண்டு தலையில் கைவைத்து அமர்ந்துக் கொண்டாள்.
உள்ளே நடந்த அனைத்தும் காவலுக்கு அமர்ந்து இருந்தவர் காதிலும் விழுந்தது. ரதியின் கலங்கிய கண்களைக் கண்டவர் ரகுவிற்கு அழைத்து விவரத்தைக் கூறிவிட்டார்.
“ரதி…. வந்து இங்க உக்காரு… இனிமேலாவது உன் வாழ்க்கைய நீ வாழு…. “, ஸ்வேதா அவளை ஆசுவாசப்படுத்தி அமரவைத்துத் தண்ணீர் பருக வைத்தாள்.
“முடியல ஸ்வே….. மனசு ரணமா இருக்கு…. நான் ஏன் இவளோ முட்டாளா இருக்கேன்? இத்தன வருசமா நான் கொண்டாடின ஒருத்திக்கு என்னை பிடிக்கவே இல்லைல…. அது எனக்கு புரியவும் இல்ல… நட்புங்கற பேர்ல அவளையும் கஷ்டப்படுத்தி, நானும் கஷ்டப்பட்டுட்டேன்….”, என அவள் தோள் சாய்ந்துக் கொண்டாள்.
“விடு ரதி…. உன் அன்பு அவளுக்கு புரியல….. எல்லாம் நல்லதுக்கு தான்.. உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம்…. கவலப்படாத…..”, என அவளை மடியில் படுக்கவைத்துத் தலையை வருடிக் கொடுத்தாள்.
சவிதாவும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு சமாதானம் கூற, ரதி மனதை சமன்படுத்திக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
“சவி .. நீ பிரியாவ பாக்கணும்னா போய் பாத்துட்டு வா….. நான் அதுக்குள்ள சாப்பாடு செஞ்சி வைக்கறேன்…. “, ரதி அவளைப் பார்த்துக் கூறினாள்.
“கண்டிப்பா… அவள பாக்கணும் தான்… நீ தைரியமா இரு…. நான் சுந்தரி வீட்ல சாப்டு வந்துடறேன்… எனக்கு சமைக்காத….. வரேன்….”, எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள்.
அவள் சென்ற சில நிமிடங்களில் ரகு இல்லம் வந்தான்.
“ரதி…. கிளம்பலாமா?”
“எங்க?”
“சாப்பிட வெளிய போலாம்ன்னு சொன்னேன்ல ….”
“சாரிப்பா…. மறந்துட்டேன்….. இருங்க ரெடியாகி வரோம்…”, என அறைக்குத் திரும்பினாள்.
“சீக்கிரம்… சிஸ்டர் நீங்க ரெடியா?”, ஸ்வேதாவைக் கேட்டான்.
“5 நிமிஷம் அண்ணா…. “, தன் ஃபோன் மற்றும் கைப்பையை எடுத்து வந்தாள்.
ரதியும் ஷார்ட் குர்த்தியுடன், அதற்கு ஏற்ற பலாஜ்ஜோ பாண்ட் அணிந்துத் தயாராகி வந்தாள்.
முகத்தில் ஒப்பணையை மீறி அழுத தடம் நன்றாகத் தெரிந்தது. தன்னை சமாளித்துக் கொண்டு அவள் வருவதைக் கண்டவன் ஒரு முடிவுடன் காரை எடுத்தான்.
காரில் அமைதி அதிகமாக கனக்க, ரகுவே பேச்சைத் தொடங்கினான்.
“என்ன சிஸ்டர் நீங்க இருக்க எடத்துல வசதி எல்லாம் எப்படி? விலைவாசி எல்லாம் பரவாலயா? நம்ம ஊரு சாப்பாடு கெடைக்குதா?”
“அதுலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணா…. எல்லாமே அங்க கிடைக்குது, ஆனா வெலை தான் கொஞ்சம் அதிகம். அரிசி தட்டுப்பாடு வராத வரைக்கும் நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடலாம்…. “
“அங்க கிறிஸ்துமஸ் மட்டும் தானே கொண்டாடுவாங்க?”
“ஆமாங்கண்ணா….. பெரிய கொண்டாட்டம் அது தான். அப்பப்போ எதாவது அந்த நாள் இந்த நாள்ன்னு வரும்.. நம்ம ஊரு பண்டிக மாதிரி எல்லாம் இல்ல… எல்லாத்துலயும் ஒரு செயற்கைத்தனம் தான் இருக்கும்… இயல்பா தெரியறது இல்ல… “, ஸ்வே குரலில் வருத்தம் நன்றாகத் தெரிந்தது.
“அப்பறம் எதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு அங்க இருக்கணும்? கம்முன்னு இங்க வந்துடுங்க…”
“இல்ல அண்ணா… கொஞ்ச வருஷம் அங்க வேலை பாத்து ஓரளவு செட்டில் ஆனதும் இங்க வரணும்ன்னு இருக்கோம்….”
“அதுவும் சரி தான்… சம்பாதிக்கிற நேரத்துல சம்பாதிச்சிக்கணும்….. வீட்ல எப்போ வராரு இங்க?”
“ரெண்டு நாள் கழிச்சி கெளம்புவாரு அண்ணா…. நான் சுந்தரி கல்யாணத்துக்காக முன்னவே வந்துட்டேன்…. “
“நல்லது…. உங்க செட்ல எல்லாருக்கும் ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சதுல்ல?” ரதியை ஓரக்கண்ணில் பார்த்தபடிக் கேட்டான்.
“ஆமாண்ணா.. உங்க பொண்டாட்டியா இவ ஆகறதுக்குள்ள நாங்க எல்லாரும் ஒரு வழி ஆகிட்டோம்… இனி நீங்களாச்சி.. இவளாச்சி….”
“அப்படி என்னடி உங்கள நான் கொடுமை பண்ணிட்டேன்? அவர்கிட்ட இப்படி சொல்ற?”, ரதி வருத்தம் விடுத்து வாய் திறந்தாள்.
“நீ என்ன பண்ணலன்னு சொல்லு டி…. ஒரு காதல்… அதுவும் ஒருதலைக்காதல்… அத பண்ணிட்டு, இனிமே கல்யாணம் பண்ணமாட்டேன்… அப்டி தான் இருப்பேன்.. இப்படி தான் போவேன்னு நாட்ட விட்டு ஓடிட்ட…. உன்ன மறுபடியும் இந்தியா கொண்டு வர்றதுக்கு எங்கண்ணன் தானே பிளான் போட்டு வரவைக்கவேண்டியதா இருந்தது…..”, ஸ்வேதா நன்றாகவே வாயைப் பிடுங்கினாள்.
“ஆமா… ஒருத்தர காதலிச்சிட்டு எப்படி இன்னொருத்தர கல்யாணம் பண்றது? என்னமோ தெரில இந்த மூஞ்சி மனச விட்டு போகவே இல்ல…. நானும் எவ்ளோ மறக்க முயற்சி பண்ணேன் தெரியுமா? குடிச்சா மறக்குமோன்னு அதுவும் பண்ணி ஹாஸ்டல்ல மாட்டி, வேற ஹாஸ்டல் மாறினேன்… எல்லாம் இந்த மனுஷனால தான்..”, என அவனை இடித்தாள்.
“ஏன்டி நீ பேசாம என் மூஞ்ச மட்டுமே பாத்துட்டு போயிட்டு வந்துட்டு இருந்தா நான் என்னடி பண்றது? வந்து பேச வேண்டியது தானே? வாய் தான் இந்த நீளத்துக்கு இருக்கே?”
“அன்னிக்கி நெறைய பேர் உன் பின்னாடி சுத்தறாங்கன்னு கொழுப்பு இருந்தது… அதான் ஒரு புள்ள வருஷக் கணக்கா பாத்தும் கூட வந்து பேசனும்ன்னு உனக்கு தோணவே இல்ல…. இதுல என்னைய குத்தம் சொல்றது…”, கழுத்தை வேகமாக தோளில் இடித்துத் திருப்பினாள்.
“பாத்து கழுத்து சுளுக்கிற போகுது….. இடம் வந்துருச்சு இறங்கு…. “, என அவனும் சிரிப்பை அடக்கியபடி இறங்கினான்.
மாறி மாறி பேசிக்கொண்டே வந்ததன் விளைவாக ரதியும் ஓரளவு மனம் தெளிந்துப் புன்னகையுடன் இருந்தாள்.
மூவரும் சாப்பிட்டு முடித்து இல்லம் வந்து சேர்ந்தபின், பச்சையப்பன் கிளம்பினார்.
“பச்சையண்ணா …… இந்தாங்க இதுல டிஃபன் இருக்கு… வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிடுங்க….”, என ஒரு பார்சலைக் கொடுத்தாள்.
சவிதாவும் ஸ்வேதாவை அழைத்து இல்லம் வந்துவிட்டனரா என்று கேட்டபின் வந்து சேர்ந்தாள். ஸ்வேதாவும், சவிதாவும் ஒரே அறையில் தங்கிக் கொண்டனர்.
அவர்களுக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்துக் கொடுத்தபின் ரதி உறங்கச் சென்றாள்.
ரகு அவளுக்காக குளித்துவிட்டு உடைமாற்றி ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். அவளும் உள்ளே வந்து தண்ணீர் குடுவையை வைத்துவிட்டு முகம் கழுவ சென்று, இரவு உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.
இன்றைய நாள் அவளின் வாழ்வில் மனதைக் காயப்படுத்திய நாள் தான். இந்த காயம் ஆற பல மாதங்கள் ஆகலாம்.. வடு மறையாது தான். ஆனாலும் இதையும் அவள் கடந்துச் சென்று தானே ஆகவேண்டும்.
“ரதி….”, கண்ணாடி முன் நின்று முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளை அழைத்தான்.
“என்ன ராக்கி?”
“இங்க வா….”
அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவளை இழுத்து தன் மடியில் அமரவைத்து இடையைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்.
“என்னாச்சி என் செல்லத்துக்கு?”
“எல்லாம் தெரிஞ்சி தானே அப்பவே வீட்டுக்கு வந்த? அப்பறம் என்ன?”
“உனக்கு யார் சொன்னது பிரியா என்கிட்ட பேசினது பத்தி?”, அவள் கன்னத்தை வருடியபடிக் கேட்டான்.
“இன்னிக்கு தான்…. அது எதிர்பாராதவிதமா நாம சுந்தரி வீட்ல இருந்து கெளம்பரப்ப தெரிஞ்சது…. சுகன்யா சுந்தரியோட தூரத்து சொந்தம். சுந்தரி கல்யாண போட்டோவ சொந்தக்காரங்க யாரோ ஸ்டேடஸ் போட்டப்போ உன்னையும் என்னையும் அதுல பாத்துட்டு சுகன்யா தான் பெருமை பேசறதுக்கு அவங்ககிட்ட வாய் விட்டிருக்கா….. அவங்க சுந்தரிகிட்ட சொல்றப்ப கேட்டேன் ….. அப்போ தான் எல்லாத்தையும் யோசிச்சி பாத்ததுல இதான் விசயம்ன்னு புரிஞ்சுது….”
“ம்ம் … பிரியாவ மன்னிக்க மாட்டியா?”
“அவள மன்னிக்க நான் யாரு ராக்கி? என் முட்டாள்தனம் இன்னிக்காவது அவ விசயத்துல புரிஞ்சதேன்னு சந்தோச படறதா? இத்தன நாள் புரியலன்னு வேதனை படறதா தெரியல ப்பா…”, என அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
“விடுடா பேபி… இனிமே கண்மூடித்தனமா யார் மேலயும் அன்பு வைக்காத….”, அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து சமாதானம் செய்தான்.
“இது பத்து வயசுல வந்த அன்பு… அப்போ பிரிச்சி பாக்க தெரியலப்பா…”, அவள் கண்ணீர் அவன் கழுத்தில் இறங்கியது.
“இங்க பாரு அழக்கூடாது….”
“பிளீஸ் ராக்கி… என் மனசு பாரமா இருக்கு.. கொஞ்ச நேரம் இப்படி நீ தோள் குடு போதும்.. நானே சரியாகிடுவேன்….. “, எனக் கூறிவிட்டு அவன் தோளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுக் கண்ணீர் சிந்தினாள்.
அவனுக்கு அவளின் கண்ணீர் கஷ்டமாக இருந்தாலும், அவளின் அன்பு பொய்த்து போன வருத்தம் கரையவேண்டும் என்றுணர்ந்து அவள் முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தான்.
அரைமணி நேரத்தில் அவன் தோளிலேயே உறங்கியும் போனாள். கைக்குழந்தையைப் போல அவளைத் தன் கைகளில் முன்பக்கமாக ஏந்தி அவளைப் பார்த்தான்.
சன்னமாக பிளந்த இதழ்கள் கண்டு மெல்லிய சிரிப்பொன்று அவன் இதழ்களில் உதித்தது. வளர்ந்த குழந்தையாக இருப்பவளைக் கண்டு அவன் மனம் உருகிக் கொண்டிருந்தது.
அவளின் மீதான அன்பும், அக்கறையும் அவனுக்குள் கூடுவதை நன்றாக உணரத்தொடங்கினான். இனி அவள் கண்களில் வலியுடன் கூடிய கண்ணீர் வராதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று திடமாக முடிவெடுத்தான்.
அவளின் உறக்கம் கலையாமல் தூக்கி வந்து மெத்தையில் படுக்கவைத்துவிட்டு, உப்பரிகை கதவினைச் சாற்றிவிட்டு, போர்வையை இருவருக்கும் போற்றிக்கொண்டு அவளைப் பின்னிருந்து அணைத்து, அவளின் வாசத்தை நுகர்ந்தபடி அவனும் உறங்கினான்.