Loading

காலை வெயில் சுள்ளென முகத்தில் விழுந்தாலும், எழ மனமின்றி படுத்திருந்தான் நந்தேஷ்.

சில நாட்களாகவே மனம் அமைதி இன்றி தவிக்கிறது. காதல் தோல்வி, அதனை உணரும் முன்னே தான் உயிராய் காதலித்த பெண் இறந்தது, பின் இத்தனை வருட உழைப்பை ஆட்டிப்பார்ப்பது போல தொடர் கொலை. இந்தக் கொலைகள் அவர்களை சாய்த்து விட நடக்கிறதா அல்லது தற்செயலானதா?

இத்துடன் நின்று விடுமா? அல்லது இன்னும் தொடருமா?

ரோஜா தற்கொலை செய்து கொள்ள சாத்தியமில்லை எனும் போது அவளை யார் கொன்றிருக்க முடியும்?

இப்படி பலவித கேள்விகள் மூளைக்குள் குடைந்து எடுக்கிறது. காலை எழும் போதும், தூங்கும் போதெல்லாம் குடைச்சலைக் கொடுக்கிறது நடக்கும் நிகழ்வுகள்.

இதில் யுக்தா சாகித்யனின் வரவு வேறு. நெகட்டிவ் வைப்ரேஷன் போல தனது தங்கையை படுத்துகிறான்! இப்படி அனைத்தையும் யோசித்துக் குழம்பி அப்படியே படுத்திருந்தான்.

அலுவலகத்திற்கு கிளம்பி விட்ட ஷைலேந்தரி, ‘என்ன இவனை இன்னும் காணோம்…’ என்று நந்தேஷின் அறைக்கதவைத் தட்ட, அதைக் கூட உணராமல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பதில் வராமல் போனதில் கதவையே திறந்து விட்டவள், இன்னும் அவனது பள்ளி எழுச்சி முடியாமல் இருப்பதில் கடுப்பாகி,

“அடப்பாவி… உனக்கு எப்படிடா தூக்கம் வருது. ஹாயா ஒன்பது மணி வரை பஞ்சு மெத்தையில புரண்டுட்டு இருக்கியே. எனக்குலாம் தூக்கமே வர மாட்டேங்குது” என்று புலம்பித் தள்ள, தங்கையின் கூற்றில் கண்விழித்தவன், “நானே தூக்கம் வராம 4 மணிக்கு மேல தான் கண்ணசந்தேன். இப்பவும் எந்திரிச்சு ஆபிஸ் போனா, மறுபடியும் ஏதாவது அசம்பாவிதத்தைக் கேட்க வேண்டியது வருமோன்னு பயத்துல படுத்துருக்கேன். கொய்யால, கேள்வியைப் பாரு” என்று முறைத்தான்.

“ஆமாடா எனக்கும் தூக்கமே வர மாட்டேங்குது. அப்படியே தூங்குனாலும் கனவுல யுக்தா வந்து என்னை விசாரிக்கிற மாதிரியே இருக்குடா”

“என்ன விசாரிக்கிறான்?” நந்தேஷ் குழப்பத்துடன் கேட்க,

“அது தெரியல. நான் தான் கனவுல அவனைப் பார்த்ததும் மெய் மறந்து சைட் அடிக்க ஸ்டார்ட் பண்ணிடுவேனே. சோ என்ன கேட்குறான்னு காதுல வாங்குறது இல்ல. ஏதோ தூக்கமே வரலைன்னாலும், அவன் அப்போ அப்போ கனவுல வந்து தரிசனம் காட்டுறதுனால ஏதோ வாழ்க்கை கொஞ்சமே கொஞ்சம் கலரிங்கா போகுது. இல்லன்னா பிளாக் அண்ட் வைட்டா, கல்யாணம் vs கருமாரின்னு நகருது…” என வெகுவாய் சலித்துக் கொள்ள, அவள் மீது தலையணையை விட்டெறிந்தான் நந்தேஷ்.

“இந்த ரணகளத்துலயும் உனக்கு குதூகலம் கேட்குதுல்ல?”

“க்கும் உனக்கு என்னப்பா நீ கமுக்கமா லவ்வு ரொமான்ஸுன்னு ஏதோ ஒன்னைப் பார்த்துட்ட. நான் அப்படியா இந்த வாழ்க்கை எதை நோக்கிப் போகுதுன்னே தெரியாம, ஒரு ஒன் சைட் லவ் கூட இல்லாம தவிச்சுப் போறேன். அந்த யுக்தா கூட என்னை மதிக்காம உன் தங்கச்சியை தான்டா சைட் அடிக்கிறான். இன்னும் கொஞ்சம் அழகைக் கூட்டணும் போல…” என்று அவள் தீவிர சிந்தனையில் இருக்க, அந்நேரம் நந்தேஷின் அறைக்குள் நுழைந்த விஸ்வயுகா அவள் தலையில் அடித்தாள்.

“ஆஆ… ஏண்டி அடிக்கிற. ஹேர் ஸ்டைல் கலையுது” எனக் கவலை கொண்டதில்,

நந்தேஷ் “அவளா இருந்தனால கையில அடிச்சா நானா இருந்திருந்தா கம்பியை வச்சு அடிச்சுருப்பேன். நான் ரொமான்ஸ் பண்ணேன்னு நீ பார்த்தியா. அந்த சிபிஐ இவளை பார்க்குற பார்வையே எனக்குப் பிடிக்கல. மத்த நேரமா இருந்துருந்தா அவன் கண்ணை நோண்டிருப்பேன். இப்ப ஹெவியா எல்லாரும் லாக் ஆகிருக்கோம். அதான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பேச வேண்டியதா இருக்கு அவன்கிட்ட” என்று எரிச்சல் அடைந்தான்.

விஸ்வயுகா தான் “ஓ காட்! காலைல எந்திரிச்சதும் அவனை ஏன்டா ஞாபகப்படுத்துறீங்க. இரிடேட் ஆகுது” என முகத்தை சுளிக்க வந்தவள் கவனமாக இயல்பு தொனியில் பேசினாள். அதுவே அவளுக்கு கடுப்பையும் கொடுத்தது.

“சரி இப்படியே புலம்பிட்டு இருந்தா ஆச்சா? எந்திரிச்சு வா போகலாம்” என்று தமையனைக் கிளப்ப,

“விஸ்வூ அம்மாவுக்கு வேற ஏதோ சந்தேகம் வந்துருச்சு போல. நேத்து என்கிட்ட கரெக்ட்டா கேட்டாங்க, நம்ம மேட்ரிமோனில நடக்க இருந்த கல்யாணம் நின்னுப் போச்சான்னு” என்றான் கலக்கமாக.

“இன்னும் இதே மாதிரி கன்டின்யூ ஆனா அவங்ககிட்ட இருந்து மறைக்கிறது கஷ்டம் நந்து. அதுக்குள்ள அந்த யுக்தா எதையாவது கண்டுபிடிக்கிறானான்னு பார்ப்போம்… கெட் அப்” என்றிட,

“ப்ச் போடி இன்னைக்கு நான் லீவு… மைண்டும் பாடியும் செம்ம டயர்டா இருக்கு” என்று அவன் முகத்தைச் சுருக்க, ஷைலேந்தரி “அப்போ எனக்கும் லீவ் வேணும்” என்றாள் வேகமாக.

விஸ்வயுகா இருவரையும் கண்டனத்துடன் பார்த்து, “ஒழுங்கா தூங்கலைன்னா இப்படி தான் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கும். நீங்க தூங்காம இருக்குறதுனால எதுவும் மாறப்போறது இல்ல. ஒழுங்கு மரியாதையா கிளம்புங்க” என மிரட்ட,

ஷைலேந்தரி தான், “உனக்கு மட்டும் எப்படிடி இந்தக் கலவரத்துல கரெக்ட் டைம்க்கு தூக்கம் வருது. மண்டைக்குள்ள இது கொலையா தற்கொலையான்னு பட்டிமன்றம் ஓடல உனக்கு..” கேட்டபிறகே நாக்கை அழுந்தக் கடித்துக் கொண்டாள்.

நொடியில் சுண்டிப்போன முகத்தை அவர்கள் உணரும்முன்னே சீர் செய்து கொண்ட விஸ்வயுகா, “பட்டிமன்றம் ஓட, இங்க என்ன பாப்பையாவா வந்துருக்காரு. அந்தப் பரதேசி தான இருக்கான்…” என பேச்சை மாற்றி விட்டாலும், தவறு செய்த குழந்தையாய் ஷைலேந்தரி “சாரிக்கா” என்றாள்.

அதற்கும் விஸ்வயுகா முறைத்து விட்டு, “லூசு… நான் முன்னாடி போறேன் கிளம்பி வாங்க…” என்று விறுவிறுவென வெளியில் சென்று விட, ஷைலேந்தரிக்கு இன்னும் முகம் மாறவில்லை.

“லூஸ் டாக் ஓவரா பண்றேன்ல” எனத் தமையனிடமும் தவிப்புடன் கேட்க, “ஹே இட்ஸ் ஓகே விடு. எல்லாம் கடந்து வந்தாச்சுல. ஒரு 10 மினிட்ஸ்ல நானும் கிளம்பி வரேன். சேர்ந்து போலாம்.” என்று நந்தேஷும் துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

ஷவரின் அடியில் நின்றவனுக்கு நெஞ்சின் எரிச்சல் அடங்க மறுத்தது. கடந்த காலமென்று ஒன்று இல்லாமலே போயிருந்தால் இந்த வாழ்க்கை எத்தனை நலமாக இருந்திருக்கும்! இதில் இலவச இணைப்பாக தன் பிரச்சனை வேறு! இந்தக் காதலால் இத்தனை பெரிய இழுக்கு நேருமென்று அவன் என்ன கனவா கண்டான்?

இங்கோ தனதறைக்கு வந்து கட்டிலில் தலையைப் பிடித்து அமர்ந்திருந்தாள் ஷைலேந்தரி.

குடும்பத்தாரிடம் காட்டும் குறும்புத்தனம் இப்போது சுத்தமாக அவளிடம் இல்லை. ஆறாத வேதனையை சுமந்திருந்த எண்ணங்களை கலைத்தது அலைபேசி.

மைத்ரேயன் தான் அழைத்தான்.

உடனே அழைப்பை ஏற்றவளிடம், “எங்கடி இருக்கீங்க? யாரையுமே ஆபிஸ்ல காணோம். குடும்பமா லீவ் போட்டுட்டீங்களா?” என மடமடவெனப் பேச, “கிளம்பிட்டு இருக்கேன் மைத்ரா…” என்றாள் மெதுவாக.

குரலில் இருந்த மாற்றத்தை சடுதியில் கண்டு கொண்ட மைத்ரேயன், சில நொடிகளை அமைதியில் கழித்து விட்டு, “நீ ஓகே இல்லன்னு தெரியுது. பட்… எதையும் மாத்த முடியாது” என்றவனுக்கும் அவளது வேதனை கடத்தப்பட்டது.

“மூளைக்குப் புரியுது. ஆனா மனசு தான் ஏத்துக்க மாட்டேங்குது. எவ்ளோ தான் நார்மலா இருக்க ட்ரை பண்ணாலும் ஒரு அளவுக்கு மேல முடியல மைத்ரா” என்னும் போதே அவள் குரலும் கண்ணும் கலங்கி இருந்தது.

காரின் வேகம் 140 ஐத் தாண்டி நெருஞ்சாலையில் பறந்து கொண்டிருந்தது.

ஓட்டுனரை மறுத்து விட்டு, விஸ்வயுகாவே காரை எடுத்துச் சென்றாள். காரின் வேகம் அவளது எண்ணங்களை போலவே சீறிப்பாய்ந்தது.

**********************
“யுகாம்மா… மணி எட்டாச்சு இன்னைக்கு காலேஜுக்கு மொதோ நாள் தான எந்திரிம்மா…” 36 வயதில் இளமை துளியும் குறையாமல் சிவப்பில் மஞ்சள் கலந்த காட்டன் புடவையை அணிந்திருந்தார் அஸ்வினி. அப்போது தான் குளித்து முடித்ததற்கான அடையாளமாகத் தலையில் துவாலையைக் கட்டி இருந்தவர், கையில் காபி கப்புடன் விஸ்வயுகாவின் அருகில் நின்று எழுப்ப போராடிக்கொண்டிருந்தார்.

“இன்னும் பைவ் மோர் மினிட்ஸ் சித்தி…” உறக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் விஸ்வயுகா உருண்டு படுக்க, “என் ஏஞ்சல் பொண்ணுல. சமத்தா எந்திரிச்சு காபி குடிப்பீங்களாம். நான் போய் உன் அண்ணனையும் தங்கச்சியையும் கிளப்பி விட்டுட்டு வரேன்…” என்று அவள் கன்னம் கிள்ளிட அதற்குள் நந்தேஷின் குரல் கேட்டது.

“சித்தி என் ஐடி கார்டை காணோம்”

“இதோ வரேன் நந்து… உன் வார்ட்ரோப்ல தான இருக்கும் பாரு” என்றவர் சொன்னதோடு இல்லாமல் எடுத்தும் கொடுத்தார்.

“தலைக்கு எண்ணெய் வை நந்து. பாரு பரட்டை மாதிரி இருக்கு” என்றதும் திருதிருவென விழித்தவன், “சித்தி… ஆயிரக்கணக்குல செலவு பண்ணி ஹேர் ஸ்பா, கலரிங் பண்ணிருந்தா இப்படி பரட்டைன்னு அசிங்கப்படுத்திட்டீங்களே” என கலர் செய்யப்பட்ட சில முடிகளை மட்டும் கோதி விட,

“என்னமோ போ… அழகா முடி வெட்டி, கருப்பு கலர்ல இருந்தா தான் முடிக்கே அழகு. இப்படி கண்ட கண்ட கெமிக்கலை யூஸ் பண்ணாதன்னு சொன்னா கேட்குறதே இல்ல” எனச் செல்லமாகக் கண்டித்தவரின் தோள் பற்றி வெளியில் இழுத்து வந்தவன், “இது ஹெர்பல் தான் சித்தி. உங்க ஆளு மட்டும் தலைக்கு டை அடிக்கிறாரு… அவரைக் கேட்க மாட்டீங்களே” என சிலுப்பினான்.

அதில் அவருக்கு லேசான வெட்கம் எழ, “எத்தனை தடவை சொல்றது நட்ட நடு ஹால்ல நின்னுட்டு இப்படி ஆளுன்னு பேசாதன்னு. உன் அம்மா காதுல விழுந்தா திட்டுவாங்க…” என்று பதறி திரும்பி திரும்பி பார்க்க,

“அம்மா காலைலயே வேலை விஷயமா கிளம்பிட்டாங்க சித்தி. கூல்!” எனும் போதே ஷைலேந்தரியின் கத்தல் குரல் கேட்டது.

“அடுத்து அவள் ஸ்டார்ட் பண்ணிட்டா” என நந்தேஷ் குறும்பாய் சிரிக்க, “இன்னும் நீங்க மூணு பேரும் வளரவே இல்லை நந்து” என்று சலித்தாலும் அவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதில் அவருக்கு அலாதி இன்பம்.

ஷைலேந்தரியோ அறையையே கலைத்துப் போட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

“என்ன ஷைலாம்மா இப்படி கலைச்சுப்போட்டுருக்க” அஸ்வினி கன்னத்தில் கை வைத்துக் கேட்க,

“சித்தி… இந்த ப்ளூ ட்ரெஸ்க்கு மேட்சா நீங்க எனக்கு ஒரு இயர்ரிங் வாங்கி குடுத்தீங்கள்ல அதைக் காணோம்…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.

அவளது பெற்றோர்களான அசோக்கும் காயத்ரியும் அவளுக்கு வைர நகைகளே வாங்கி வைத்திருக்க, அவளோ அஸ்வினி வாங்கித் தரும் நளினமான கவரிங் நகைகளையே அணிந்து கொள்வாள். விஸ்வயுகாவிற்கும் அதுவே பழக்கம்.

கேட்டால் இது தான் ஆடைக்கு ஏதுவாக அழகாக இருக்கிறது என்று கூறிக்கொள்வார்கள். அவர்களது அன்பின் வெளிப்பாடாக அஸ்வினியின் கண்களில் நீர் தேங்கும்.

இன்றும் ஷைலேந்தரி கவரிங் தோடினை தேட, அஸ்வினி தயங்கினார்.

“அதெல்லாம் போட்டுக்கிட்டா சீப்பா இருக்குன்னு, காயத்ரி அக்கா வாங்கிக்குடுத்த என்னை திட்டுறாங்க ஷைலா. லாக்கர்ல இதே ட்ரெஸ்க்கு மேட்சா ப்ளூ கல் வச்ச வைரத்தோடு இருந்துச்சேடா…”

“எனக்கு நீங்க வாங்கி குடுத்தது தான் வேணும். எங்க வச்சீங்க அதை போய் எடுத்துட்டு வாங்க” என்று அவள் ஒற்றைக்காலில் நிற்க, நடக்கும் கலவரம் அறிந்து காயத்ரியும் வந்து விட்டார்.

வந்தவர் அஸ்வினியை முறைக்க, அதில் தலையைக் குனிந்து கொண்டவர் “நான் எடுத்துட்டு வரேன்” என்று அவர் அறைக்குச் சென்று விட்டார்.

கணவனை எழுப்பி விட்டு தான் சென்றார். ஆனால், இன்னும் எழாமல் குப்புற அடித்து உறங்கி கொண்டிருந்த சௌந்தரைக் கண்டு அவர் முகத்தில் மலர்ந்த புன்னகை.

“என்னங்க… எந்திரிங்க. சின்னப் பசங்க கூட கிளம்பிட்டாங்க” என்று செல்லமாய் அலுத்துக் கொள்ள, ஒற்றைக்கண்ணை விழித்துப் பார்த்த சௌந்தர் எப்போதும் போல மனையாளின் கொள்ளை அழகில் மயங்கி அவரை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டார்.

தினமும் நடக்கும் நிகழ்வு தான் என்றாலும், இப்போதும் சிவந்து போன அஸ்வினி, “என்னங்க விடுங்க ஷைலா தோடு கேட்டா. இங்கயே தேடி வந்துடப்போறா” என்று அவரிடம் இருந்து விலக முற்பட, சௌந்தர் அதற்கு அனுமதியே தரவில்லை.

“எவ்ளோ நேரம் ஈரத்துண்டோட இருப்ப. தலையைத் துவட்டலையா?” என்று துவாலையை எடுத்து விட்டு தலையை துவட்டி விட்டார்.

கண்ணை மூடியபடியே அவர்கள் அறைக்குள் வந்த விஸ்வயுகா, “உங்க ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சுதா” எனக் கேட்டபடி சௌந்தரின் அருகில் படுத்துக் கொண்டாள்.

அப்போதும் சௌந்தர் மனையாளை விடவில்லையே. “இன்னும் முடியலை. உன்னை யாரு அதுக்குள்ள வர சொன்னது” என்றதில்,

“நானும் வருவேன்…” அஸ்வினியைப் பிடித்திருந்த சௌந்தரின் ஒரு கையை எடுத்து அவள் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்.

அஸ்வினிக்கு வெட்கம் பிய்த்துத் தின்றது. “விடுங்க” எனப் பல்லைக்கடித்து நகர முற்பட,

“அன்ரொமான்டிக் சித்தில சித்தப்பா…” விஸ்வயுகா குறும்புடன் கேட்டதில், “சிலநேரம் அதுவும் இன்டரஸ்டிங்கா தான் இருக்கும் யுகா…” என்றார் நக்கலாக.

அதில் வெடுக்கென எழுந்த அஸ்வினி, “ச்சை அப்பாவுக்கும் பொண்ணுக்கும் பேச்சைப் பாரு. எந்திரிச்சு கிளம்புங்க ரெண்டு பேரும்” என மிரட்ட முயன்று விட்டு வெளியில் ஓடி விட்டார். ஆனாலும் இருவரின் சிரிப்பு சத்தம் காதை நிறைத்ததில் அவருக்கும் பொன்முறுவல் பூத்தது.

ஷைலேந்தரி கேட்ட தோடை எடுத்துக் கொடுத்தவர், அடுக்களைக்குச் சென்று உணவும் கட்டி வைத்தார்.

அந்நேரம் “ஆண்ட்டி…” எனப் பின்னால் வந்து நின்ற மைத்ரேயன், “இன்னைக்கு எனக்கு என்ன ஸ்பெஷல்” என்று உணவுப் பாத்திரத்தை எட்டிப் பார்த்தான்.

“என்ன மைத்ரா கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. நைட்டு சரியா தூங்கலையா?” என்று அக்கறையாய் விசாரிக்க, எப்போதும் போல அதில் நெகிழ்ந்தவன், “ம்ம் ஆமா ஆண்ட்டி. கொஞ்சம் படிக்க வேண்டியது இருந்துச்சு. அதான் நைட்டு சரியா தூங்கல” என்றான்.

“அப்படி எதுக்கு கண்ணு முழிச்சு படிக்கிற மைத்ரா. தூங்க வேண்டிய நேரத்துக்கு சரியா தூங்கணும். அப்பறம் உடம்பும் மைண்டும் அப்செட் ஆகிடும்” என்று கண்டிப்புடன் அறிவுத்தியவர், “இன்னைக்கு உனக்குப் பிடிச்ச காம்பினேஷன் தான். சாம்பார் பிஷ் ப்ரை” என அவனுக்கும் டிபன் பாக்ஸை தயார் செய்தார்.

எப்போதும் இங்கு வந்து விட்டு, நந்தேஷுடன் தான் கல்லூரிக்குச் செல்வான். அஸ்வினிக்கும் அவன் செல்லப்பிள்ளையே.

பின் அனைவருமே அவரவர் கல்லூரிக்கு கிளம்பி விட, சௌந்தரையும் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டவரிடம் வந்து நின்றாள் விஸ்வயுகா.

“சித்தி போலாமா?” கல்லூரிப் பையை சோதித்தபடி வந்து நின்றவளிடம், “காலேஜ்கே போகப்போற, இன்னும் நான் தான் உனக்குத் துணைக்கு வரணுமா ஏஞ்சல்?” எனத் தலையாட்டி சிரித்துக் கொண்டார்.

“நீங்க இல்லாம நான் எங்க தனியா போயிருக்கேன். வாங்க சித்தி லேட் ஆகுது” என்றதில்,

“காலேஜ்ல சேர்ந்ததும் தனியா போறேன்னு என்கிட்ட ப்ராமிஸ் பண்ணுன தான. சிவகாமி அக்கா கோபப்படுறாங்க ஏஞ்சல்” என்றார் பாவமாக.

“நான் நாளைல இருந்து கண்டிப்பா தனியா தான் போவேன். இன்னைக்கு பர்ஸ்ட் டே’ ல சோ சென்டிமென்ட்டா நீங்க என்கூட வந்தே ஆகணும். அப்ப தான் எனக்கு எல்லாமே கரெக்ட்டா நடக்கும்” என்றாள் கண்சிமிட்டி.

“நான் வரலைன்னாலும் உனக்கு எப்பவும் எல்லாமே நல்லதா தான் நடக்கும் யுகா. ஏன்னா நீ என் ஏஞ்சல் ஆச்சே!” என அவள் கன்னம் கிள்ளினார்.

“பட் இந்த ஏஞ்சலோட லக்கி சார்ம் நீங்க தான் சித்தி” என அவரைப் போலவே கொஞ்சினாள்.

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா. வா போலாம்” என்று காருக்குச் செல்ல, “சித்தி சித்தி… கொஞ்ச தூரம் நான் கார் ஓட்டுறேன்…” என அவரிடம் வம்பு வளர்க்க, “ஐயோ உனக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகல யுகா. வேணாம்” என்றார் பயத்துடன்.

“நான் சும்மா கொஞ்ச தூரம் தான் ஓட்டுவேன் சித்தி. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…”

“எனக்கு நான் கார் ஓட்டிட்டு போனாலே பயமா தான் இருக்கும். இதுல நீ வேற ஓட்டுனா எனக்கு நெஞ்சு வலியே வந்துடும் ஏஞ்சல்!”

“அதெல்லாம் ஒன்னும் வராது. உங்களை விட நான் நல்லாவே ஓட்டுவேன்” என்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவள் காரை இலாவகமாகவே ஓட்டினாள்.

ஆனாலும் அஸ்வினிக்கு பயமாகத்தான் இருந்தது.

“கொஞ்சம் மெதுவா போ ஏஞ்சல்.”

அவரை முறைத்துப் பார்த்தவள் “இதுக்கு மேல மெதுவா போகணும்னா இறங்கி தான் தள்ளனும்” என்றதில், “சரி சரி நீ அங்க பார்த்து ஓட்டு… அங்க பாரு எதிர்ல வேன் வருது. ஏஞ்சல் பார்த்து போ. ஏஞ்சல்… ஏஞ்சல்…” இப்போதும் அவர் தனக்கு அருகில் அமர்ந்து கத்துவது போல இருக்க, “சித்தி.” என முணுமுணுத்தவள் சாலையைப் பார்த்தாள்.

அதன்பிறகே அவளது கார் கட்டுப்பாடில்லா வேகத்துடன் செல்வது உணர்ந்து பிரேக் போட கூட இயலாமல், சட்டென ஸ்டியரிங்கை வளைத்து மரத்தில் மோதி நின்றாள்.

காருக்குத் தான் பலத்த அடி. அவள் ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடித்தபடி சீட்டின் பின்னால் சாய்ந்து கண்ணை மூடினாள். மூடிய விழிகளுக்கு இடையில் அஸ்வினி தான் மென்புன்னகை பூத்தார், “காரை வேகமா ஓட்டாதன்னு சொன்னா கேட்கவே மாட்டியா ஏஞ்சல்” என்ற செல்ல முறைப்புடன். தானாக கண்ணின் இருபக்கமும் விழிநீர் வழிந்தது அவளுக்கு.

அந்நேரம் அவளது அலைபேசி அழைக்க, கண்ணைத் திறவாமலேயே ஸ்டியரிங்கில் இருக்கும் ப்ளூடூத் பட்டனை அழுத்தி “ம்ம்” என்றாள்.

எதிர்முனையில் யுக்தா சாகித்யனே தான். “ஆர் யூ ஸ்டில் அலைவ் ஏஞ்சல்?” என்ற கேள்வியுடன் ஆரம்பித்தான்.

வெடுக்கென கண்ணைத் திறந்தவள், “வாட்?” எனப் புருவம் சுருக்க,

“டிராபிக் போலீசைக் கூட மதிக்காம புயல் வேகத்துல கார் ஓட்டுனியே. இன்னும் இருக்கியா… இல்ல உன் ஆவி பேசுதா?” என்றான் படு நக்கலாக.

“ஆவியானா ஈஸி தான… உன்னை பொஸ்ஸஸ் பண்ணி சூசைட் பண்ண வச்சுடுவேன். அப்பறம் உன் மர்டர் கேஸை நாலு பேர் விசாரிக்கணும்” என அவளும் மிடுக்காக பதிலளித்தாள்.

அவனிடம் இருந்து மெல்லிய நகை வெளிவர, “என் மேல உனக்கு எவ்ளோ ஆசைல… செத்தப்பறமும் என் ஞாபகமாவே இருக்கப்போற. நினைக்கும் போதே புல்லரிக்குது ஏஞ்சல்… அண்ட் என் மர்டர் கேஸை எல்லாம் எவனும் தோண்ட மாட்டான். மொதோ பாடியை வாங்க யாராவது வரணுமே!” எனத் தோள்களைக் குலுக்கிக் கொண்டதில், முதலில் கோபம் கொள்ள எத்தனித்தவள் இறுதி வரியில் ஏனோ சட்டென அமைதியாகி விட்டாள்.

அவளையே பின் தொடர்ந்து வந்திருந்தவன், தனது காரை அவளது காருக்குப் பின்னால் நிறுத்தி விட்டு, “கார் ஹெவி டேமேஜ் போலயே” என காதில் இருந்த ப்ளூடூத்தில் பேசியபடி இறங்கி வந்தான்.

உள்ளிருந்தபடியே அவனைத் திகைப்புடன் பார்த்த விஸ்வயுகாவின் விழிகளை தனது காந்த விழிகளால் ஊடுருவியவன், “கம்” எனக் கதவைத் திறக்க முயல, கதவு ஸ்ட்ரக் ஆகி விட்டது.

விஸ்வயுகாவும் உள்ளே இருந்து திறக்க முயல, முடியவில்லை.

“ஓ ஷிட்!” எனத் தன்னையே நிந்தித்துக் கொண்டவளிடம், “இதெல்லாம் இடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும்” எனக் கண்டிப்பாய் கூறியவன், மற்ற கதவையும் திறக்க முயன்று முடியாமல், “நீ பேக் சீட்டுக்குப் போ” என்றான்.

“எதுக்கு?” அவள் புரியாமல் வினவ,

“ஜஸ்ட் கோ” என்றான் உறுமலுடன்.

அதில் அவனை முறைத்தபடி சீட் பெல்ட்டைக் கழற்றி விட்டு, அவள் பின் சீட்டிற்குச் செல்ல, தனது காரில் வைத்திருந்த ஒரு இரும்பு ராடை எடுத்து முன்பக்க கண்ணாடியை முழுதும் உடைத்தான்.

நுனிக்கண்ணாடியை கூட விட்டு வைக்காமல் முழுதையும் உடைத்து முடித்தவன், தன்னிடம் இருந்த முழு ரெய்ன் கோர்ட், பூட்ஸ், கனமான கையுறை என அனைத்தையும் கொடுத்துப் போடச் சொல்லி விட்டு, முன்பக்க பேனட்டின் மீது ஒரு முட்டியை மடக்கி அமர்ந்து அவளை நோக்கி கையை நீட்டினான்.

அவள் எதையும் தொட்டுக்கூட பார்க்கவில்லை.

“நீ ஹெல்ப் பண்ணி நான் ஒன்னும் என் ரத்தத்தை சேவ் பண்ண தேவையில்ல” வீம்பாக வெளிவந்த குரலில் பிடிவாதம் தெரிந்தது.

“ஏஞ்சல்… ஐ வார்ன்ட் யூ. இதெல்லாம் போட்டுக்கோ!” என அவன் கண்டிக்க,

“நோ வே. இப்படியே தான் வருவேன்” என்று அவள் எழும்முன்னே, “வெய்ட்” என்றவன், அவனது கார் கவரை எடுத்து வந்து முன்பக்கம் சிதறி இருந்த கண்ணாடித் துகள்களை ஒதுக்கி விட்டு, அவள் வருவதற்கு ஏதுவாக போட்டு விட்டான்.

அவளோ அவனைக் கூர்மையுடன் ஏறிட்டு, “இதெல்லாம் செஞ்சு என்னை இம்ப்ரெஸ் பண்ணப் பாக்குறியா?” என எரிச்சலுடன் கேட்க,

லேசாய் இதழ் வளைத்தவன், “உன்னை இம்ப்ரெஸ் பண்ண இவ்ளோ ஹார்ட் வொர்க் பண்ணனும்னு தேவை இல்ல ஏஞ்சல்!” என்றான் கர்வமாக.

“தலைக்கணத்துல ஆடாத… ஐ ஹேட் யூ”

“ஓகே நான் ஆடல. நீ பர்ஸ்ட் வெளில வா. யூ ஆர் ஸ்வெட்டிங்.”

அவளுக்கும் அதற்குமேல் உள்ளே அமர இயலவில்லை. அதில் முன் சீட்டிற்கு வந்தவள், கண்ணாடி குத்தாமல் வெளியில் செல்ல எத்தனிக்க, யுக்தா அவளைக் கைப்பிடித்து தூக்கினான்.

கைப்பிடித்து தான் தூக்கப் போகிறானென விஸ்வயுகா எண்ணி இருக்க, அவள் லேசாய் வெளியில் வந்ததுமே மொத்தமாய் குனிந்து அவளைக் கையில் அள்ளிக்கொண்ட யுக்தா, எந்தப்பக்கமும் கண்ணாடி குத்தாதவாறு கவனமாக அவளை வெளியில் எடுத்தான்.

அவளைத் தூக்கியபடியே பேனட்டில் இருந்து இறங்கி விட்டே அவளையும் இறக்கி விட்டவன், அவளது அதிர்ந்த கருவிழிகளில் கவரப்பட்டு, “சோ சாஃப்ட்” என்றான் ரசனையுடன்.

“ஹான்?”

“உன் ஹிப். வெரி சாஃப்ட்” என்ற பிறகே இன்னும் அவனது அரவணைப்பில் இருப்பதை உணர்ந்து படக்கென பின்னால் நகர்ந்தவள், “ஸ்டே இன் யுவர் லிமிட்!” என்று விரல் நீட்டி எச்சரிக்க,

அதன் பிறகே அவனது கை முஷ்டியில் கண்ணாடிக் குத்தி குருதி வழிவதைக் கண்டு திகைத்து நின்றாள்.

மோகம் வலுக்கும்
மேகா

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
83
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. யுகா புதிர் தான்