அத்தியாயம் 12
அந்த காலை நேரத்து இதமான வெயில் கூட எரிச்சலை தர, அதனால் உண்டான முகச்சுருக்கத்தை வெளிக்காட்டியபடி நின்றிருந்த துவாரகாவை பார்த்த மயூரனோ, வெயில் அவள் மீது படாதவாறு தள்ளி நின்று கொண்டான்.
அதைக் கண்டவளோ உதட்டை சுழித்து திரும்பிக் கொண்டாள். அவளுக்கென்ன வெயில் மட்டுமா பிரச்சனை?
புதிதாக உடுத்தியிருந்த புடவை முதல், அதற்கு தோதாக அடுக்கியிருந்த நகைகள் வரை அனைத்துமே அவளுக்கு பிரச்சனை தானே!
அதோடு, என்னதான் திருமணத்திற்கு தயாராகி வந்து விட்டாலும், மயூரன் பேசிய வார்த்தைகள் எல்லாம் இன்னமும் அவள் மனதோரத்தில் முனுக்கென்று குத்திக் கொண்டு தானே இருக்கின்றன.
அது கொடுத்த எரிச்சல் மற்றவற்றை பின்னுக்கு தள்ளிவிட, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே கடவுளின் முன் நின்றிருந்தாள் அவள். அந்த கடவுளையும் விடவில்லை, மனதிற்குள் திட்டிக் கொண்டு தான் இருந்தாள்.
மணமகள் இப்படி என்றால், மணமகனோ வேறு விதத்தில் பதற்றமாக இருந்தான்.
அவன் தாத்தாவிடம் பேசி வைத்த நிமிடத்திலிருந்தே, இந்த திருமணத்தை பற்றி விசாரிக்க என்று அவன் குடும்பத்தினர் படையெடுத்து அவனிடம் பேச ஆரம்பித்து விட்டனர்.
சிலர், அதை நிறுத்தக் கோரியும், சிலர் அவர்களிடம் ஏன் சொல்லவில்லை என்று கோபித்துக் கொண்டும் மயூரனின் நேரத்தை களவாடி விட்டனர்.
அது மட்டுமா? கார்த்திகேயனும் குமரகுருபரனும், “என்ன ப்ரோ, அவளையே கல்யாணம் பண்ணிக்க போறீயாமே? எங்ககிட்ட இருந்து காப்பாத்தவா? நீ கல்யாணம் பண்ணிட்டா மட்டும் அவ பாதுகாப்பா இருப்பான்னு நினைப்பா? இனிமே, உன்னோட சேர்ந்து அவளும் அனுபவிக்கப் போறா! எனிவே, அவளுக்கு இந்த கொழுந்தங்க ரெண்டு பேரும் விஷ் பண்ணோம்னு சொல்லிடு.” என்று கிட்டத்தட்ட மிரட்டிவிட்டே அழைப்பை துண்டித்திருந்தனர்.
இவை அனைத்தும் சேர்ந்து மயூரனுக்கு, எப்போதடா இந்த திருமணம் நல்லபடியாக முடியும் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தது.
இதோ, இப்போது கடவுளின் முன் அவனவளோடு நிற்கும்போது தான், அந்த பதற்றமெல்லாம் நீங்கி சற்று ஆசுவாசமாக உணர்ந்தான்.
இடையில், அவள் முகம் காட்டிய ஜாலங்கள் அவனுக்கு பொழுதுபோக்காக மாறின.
இருவரும் இப்படி வேறுபட்ட மனநிலையில் இருக்க, அவர்களை அதற்கு மேலும் காக்க வைக்காமல் அர்ச்சகர் தாலியை எடுத்து நீட்ட, அவனோ தாலியை கையில் வைத்துக் கொண்டே அவள் பார்ப்பதற்காக காத்திருந்தான்.
அவளோ மனதிற்குள், ‘போச்சு போச்சு! இனி அவ்ளோ தான்… எனக்கு கல்யாணம் நடக்கப் போகுது. ஹையோ, என் பேச்சுலர் வாழ்க்கை முடியப் போகுதே. க்கும், இந்த கலவரத்துல என் ஃபிரெண்ட்ஸுக்கு பேச்சுலர் பார்ட்டி கூட குடுக்கல.’ என்று புலம்பிக் கொண்டல்லவா இருந்தாள்.
அவளுக்காக அவன் காத்திருக்கலாம். ஆனால், மற்றவர்கள் ஏன் காத்திருக்க வேண்டும்?
கையில் தாலியை வைத்துக் கொண்டு துவாரகாவையே பார்த்துக் கொண்டிருந்த மயூரனை நெருங்கிய பாஸ்கரோ, “இப்போ எதுக்கு இந்த போஸ்? சட்டுபுட்டுன்னு தாலியை கட்டு மச்சான். அடுத்து ஏகப்பட்ட வேலை இருக்கு.” என்றவன், “க்கும், இருக்க வேலையில சாப்பாடு போட மறந்துட போறாங்க!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
வாய்விட்டு திட்டி விட முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட மயூரனோ பாஸ்கரை பார்வையாலேயே எரிக்க, “கூல் கூல், இப்போ என்னவாம்?” என்று பாஸ்கர் அவனை சமாதானப்படுத்த முயல, அவனோ கண்களாலேயே அவனின் சரிபாதியாகப் போகிறவளை சுட்டிக் காட்டினான்.
‘ஷப்பா, ஒரு வார திடீர் கல்யாணத்துக்கு இவனுங்க பண்ற அலப்பறை இருக்கே!’ என்று கவனமாக மனதிற்குள் மட்டும் சலித்துக் கொண்ட பாஸ்கரோ, “எம்மா தங்கச்சி, ரொம்ப நேரமா அந்த விளக்கை எதுக்கு உத்து பார்த்துட்டு இருக்க? உன் பார்வை உஷ்ணத்தை தாங்காம ஜீனி கீனி வெளிய வந்துடப் போகுது!” என்று ஏதோ பெரிய நகைச்சுவை செய்ததை போல அவனே சிரித்துக் கொள்ள, இம்முறை அவளின் பார்வையின் உஷ்ணம் பாஸ்கரை தாக்கியது.
அதில் சட்டென்று பின்வாங்கிய பாஸ்கரோ, “மச்சான், இனி உன் சாமர்த்தியம்!” என்று பம்மி விட்டான்.
அப்போது தான் துவாரகாவின் விழிகளில் தாலியை கரத்தில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த மயூரன் தென்பட்டான்.
ஆளை துளைக்கும் அவன் பார்வையில் அவள் சிக்கிக் கொள்ள, அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதவனாக, விழிகளாலேயே அவளிடம் சம்மதம் கேட்டான் மயூரன்.
அத்தனை நேரம் நெஞ்சுக்குள் வட்டமிட்டுக் கொண்டிருந்த அவன் பேசிய வார்த்தைகள் சட்டென்று ஓடி மறைந்து விட, அந்த இடத்தை அவன் மீது அவள் கொண்டிருந்த காதல் பிடித்துக் கொள்ள, அவளின் சிரம் தன்னால் அசைந்து அவனுக்கு சம்மதம் வழங்கியது.
அவனவள் தந்த சம்மதத்தில் மனம் நிறைந்தவனாக அவளின் வெண்சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டு துவாரகாவை தன் மனையாளாக்கிக் கொண்டான் மயூரன்.
மயூரனின் துவாரகை இவள் தான் என்பதற்கு அவள் மார்பில் தவழ்ந்து கொண்டிருந்த தாலி ஆதாரமானது!
இருவரும் மோன நிலையில் இருக்க, அதை கலைக்கும் விதத்தில் நண்பனின் கையால் மொத்து வாங்க வேண்டும் என்பதற்காகவே பேச ஆரம்பித்தான் பாஸ்கர்.
“கிஷோரு, உண்மைலேயே ஆவி தான்டா அவனுக்குள்ள புகுந்துருக்கு. கோவிலுக்குள்ளேயே வர அளவுக்கு பவர்ஃபுல்லான ஆவி போல.” என்று பாஸ்கர் கூற, அதைக் கேட்ட அனைவருக்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தாலும், இருக்கும் இடம் கருதி அமைதியாக இருந்தனர்.
மயூரனோ பாஸ்கரின் தலையில் தட்ட, “அப்பாலே போ சாத்தானே.” என்று கத்தியபடி திரும்பினான் பாஸ்கர்.
அவர்களை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த துவாரகாவோ, கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், “அண்ணா, உங்களுக்கும் அப்படி தான் தோணுதா? எனக்கும் கூட அப்படி தான் தோணுது.” என்று கூற, அவள் கூறியதை ஆமோதித்த பாஸ்கரை கிஷோருடன் முன்னே அனுப்பி வைத்து விட்டான் மயூரன்.
“க்கும், உண்மையை சொன்னா பொறுக்காதே.” என்று சலித்துக் கொண்ட துவாரகாவை நெருங்கிய மயூரன், அவள் தலையில் விழுந்திருந்த அட்சதையை எடுப்பதை போல, அவள் செவியருகே குனிந்து, “உண்மையை வேணும்னா ப்ரூவ் பண்ணி காட்டவா… உனக்கு மட்டும்!” என்று கண்ணடித்தான்.
அவனின் குரலும் குறும்பும் அவளை சந்தேகப் பார்வை பார்க்க செய்ய, பின்னர் அதுவே அவஸ்தையாகிப் போனது.
ஆம் அவஸ்தை தான்!
அவனின் இமை சிமிட்டாத பார்வை உண்டாக்கிய அவஸ்தை!
அவனின் மூச்சுக்காற்று அவளுடையதோடு கலப்பது போல இருக்கும் அவனின் நெருக்கம் தந்த அவஸ்தை!
அவளை வேறு எங்கும் காண முடியாதபடி கட்டிப்போடும் அவனின் உதட்டோர சிரிப்பு கொடுத்த அவஸ்தை!
அந்த அவஸ்தைகளில் மூழ்கி அவளையே தொலைக்கும் அபாயத்திலிருந்து காப்பாற்றியது அவளின் அலைபேசி ஒலி.
அவர்களை சுற்றி இருந்த மோனநிலை அறுந்து போக, ஒரு பெருமூச்சுடன் அவனை விட்டு வேகமாக விலகியவள், தடுமாற்றத்துடன் அலைபேசியை பார்க்க, அழைத்தது அவளின் தந்தை தான் என்பது தெரிந்தது.
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அழைப்பை தட்டுத்தடுமாறி ஏற்றவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க, அதற்குள் மறுமுனையிலிருந்த கோபிநாத், பல முறை மகளை அழைத்து பார்த்து, கிட்டத்தட்ட பதறியே விட்டார்.
மனைவியின் நிலையை உணர்ந்த கணவனோ, அவள் இப்போதைக்கு பேச மாட்டாள் என்பதை அறிந்தவனாக, அவள் கரத்திலிருந்த அலைபேசியை வாங்கி, மாமனரிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அப்போது தான் முழுதாக தன்னிலை அடைந்தாள் துவாரகா.
மயூரனின் நமுட்டுச் சிரிப்பிலிருந்தும் கேலிப் பார்வையிலிருந்தும் தப்பிக்க எண்ணி கோபத்தை கையிலெடுத்தாள் பெண்ணவள்.
“இப்போ எதுக்கு என் மொபைலை பிடுங்குனீங்க?” என்று கோபமாக கேட்டவளை, கையை கட்டிக் கொண்டு பார்த்தவன், “இன்னும் ஒரு நிமிஷம் லேட் பண்ணியிருந்தாலும், ‘என் பொண்ணுக்கு என்னமோ ஆகிடுச்சு!’னு பதறியிருப்பாரு உன் அப்பா!” என்றவாறே அவளை நெருங்க, பின்னாடி சென்றபடி, “என்ன… என்ன…” என்று பதறினாள் அவள்.
மீண்டும் ஒரு அவஸ்தையில் சிக்கிக் கொள்ளும் மனதைரியம் அவளிடம் தற்சமயம் இல்லை போலும்!
மீண்டும் அவள் செவியருகே குனிந்தவன், “ஒண்ணுமே செய்யல… இதுக்கே இப்படி! இதுல, ஃபர்ஸ்ட் மீட்லேயே, ‘மிங்கிலாகலாமா?’னு கேட்டவ நீ!” என்றவன் பட்டென்று விலகி முன்னே சென்றான்.
அவனை பின்தொடர்ந்தவளின் மனதிலோ, ‘ஒரு முடிவோட தான் இருக்கான் போல! எப்பவும் விட, இன்னைக்கு ஓவரால இருக்கு! அந்த கண்ணு… இன்னைக்கு ஏதோ டிஃபரண்ட்டா இருக்கே… ப்ச், கேர்ஃபுல்லா தான் இருக்கணும்!’ என்ற எண்ணங்கள் அவளுக்குள் சுழன்றபடி இருந்தன.
*****
கார்த்திகேயன் அவனின் அலுவலக அறையில் யோசனையுடன் அமர்ந்திருக்க, “என்ன ப்ரோ, என்ன யோசனை?” என்று வந்தான் குமரகுருபரன்.
வந்தவனிடம் அலைபேசியில் வந்திருந்த புகைப்படத்தை கார்த்திகேயன் காட்ட, “ஓஹ், கல்யாணமே முடிஞ்சடுச்சு போல? காசு இல்லாதவன் மாதிரி கோவில்ல கல்யாணம் பண்ணியிருக்கான். இதை பார்த்து நியாயமா சந்தோஷமா தான இருக்கணும். நீ ஏன் எதையோ யோசிச்சுட்டு இருக்க?” என்று கேலியாக ஆரம்பித்து கேள்வியில் முடித்தான் குமரகுருபரன்.
“ப்ச், ஏதோ தப்பா இருக்கு குரு. அவன் எதுக்கு அவசரமா கல்யாணம் பண்ணனும்? இந்த விஷயத்தை தாத்தா கிட்ட சொன்னா, ஏதாவது நடக்கும்னு பார்த்தா, ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல. ஏதோ இருக்கு…” என்று தீவிர பாவனையுடன் கார்த்திகேயன் கூறினான்.
அதை அலட்சியப்படுத்திய குமரகுருபரனோ, “ஃப்ரீயா விடு ப்ரோ. அவளை கல்யாணம் பண்ணிட்டா மட்டும்… அவனால ஒன்னும் பிடுங்க முடியாது. நீ ரொம்ப டென்ஷனா இருக்க. வா ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.” என்று அண்ணனை சமாதானப்படுத்திய தம்பி, அவர்களின் ஆஸ்தான இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
இப்போது அலட்சியப்படுத்திய விஷயம் தான், பின்னர் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதற்கு ஆதாரமாக அமையப் போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
*****
திருமணம் முடிந்த கையோடு, திருமணத்தை பதிவு செய்தவர்கள், பாஸ்கரின் நச்சரிப்பில் உயர்தர உணவகத்தில் காலை விருந்தையும் முடித்தனர்.
கோபிநாத்திற்கு, ஒரே மகளின் திருமணம் இப்படி எளிய முறையில் நடந்தது சற்று சுணக்கத்தை கொடுத்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மகிழ்வுடனே வளைய வந்தார்.
ஒருவழியாக அனைத்தையும் முடித்து துவாரகாவின் இல்லத்திற்கு வந்தனர். இனி, அவளின் பிறந்த வீடு என்று கூற வேண்டுமோ?
வழியிலேயே பாஸ்கரும் கிஷோரும் வேலை இருக்கிறது என்று சென்று விட, மற்ற மூவரும் தான் வீட்டை அடைந்தனர்.
திருமணம் முடிந்து முதல் முறை மணமக்கள் இல்லத்திற்கு வருவதால், வீட்டில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து ஆரத்தி எடுக்க சொன்னார் கோபிநாத்.
காலையில் விரைவாக எழுந்ததிலிருந்து, தொடர்ந்து ஒவ்வொரு இடங்களாக அலைந்தது என்று ஏற்கனவே சோர்வில் இருந்த துவாரகா, உள்ளே நுழைந்ததும் அவளறைக்கு செல்ல எத்தனித்தாள்.
அவளின் அவசரத்திற்கு சோர்வு மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது தான்!
மாடிப்படிகளில் ஏறப் போனவளை தடுத்த கோபிநாத், “பூஜை ரூம்ல விளக்கு ஏத்தனும் துவாம்மா.” என்று கூற, அவரின் மகளோ சிணுங்கிக் கொண்டே வந்தாள்.
அங்கு கடவுள் படங்களுடன் துவாரகாவின் அன்னை காயத்திரி தேவியின் புகைப்படமும் இருந்தது.
அங்கிருந்த மூவரும் வெவ்வேறு எண்ணத்தில் பயணித்துக்குக் கொண்டிருந்தனர்.
கோபிநாத்தின் மனம் நிம்மதியிலும், துவாரகாவின் மனம் குழப்பத்திலும், மயூரனின் மனம் என்னவென்று பிரித்தறிய முடிந்திடாத எண்ணத்திலும் மூழ்கி இருந்தன.
அதே மனநிலையில் விளக்கை ஏற்றி கடவுளை வழிபட்டனர் மணமக்கள் இருவரும்.
சில நிமிடங்களில், “ரெண்டு பேரும் சாமி கும்பிட்டீங்கன்னா, வெளிய போங்க. நான் என் அம்மாவோட தனியா பேசணும்.” என்றாள் துவாரகா.
அதில் மாமனாரும் மருமகனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தபடி வெளியேறினர்.
அவர்கள் சென்று விட்டதை உறுதி செய்து கொண்ட துவாரகாவோ, அவள் மனதில் உள்ளவற்றை கடவுளாகிப் போன தாயிடம் கொட்டி விட்டாள்.
“அம்மா, இந்த திடீர் கல்யாணம்… எனக்கு ஹேண்டில் பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு! அதுவும், என்னை ஹர்ட் பண்ணவனை… ப்ச், நான் எப்படி இதுக்கு சம்மதிச்சேன்னு இன்னும் எனக்கு புரியல. அப்போ நான் அவனை மன்னிச்சுட்டேனா? மறந்துட்டேனா? இவ்ளோ தான் என் கோபமா? இல்லையே… அந்த வார்த்தைகளை நினைக்கும்போது இப்போ கூட எனக்கு கஷ்டமா தான் இருக்கு! அப்படி இருக்குறப்போ, இந்த கல்யாணம் வேண்டாம்னு ஸ்டிராங்கா ஏன் சொல்லல? என்னையே நான் ஏமாத்திக்குற மாதிரி இருக்கு. எனக்கு என்ன செய்யன்னே தெரியல. இதுல, அவன் பார்வை வேற… ஒரு மாதிரி… எப்பவும் இல்லாம டிஃப்ரண்டா இருக்கு. எப்படி சமாளிக்க போறேனோ! எப்பவும் போல, இந்த சிசுவேஷன்லயும் நீங்க தான் எனக்கு கூடவே இருந்து ஹெல்ப் பண்ணனும்.” என்று குழப்பத்தில் ஆரம்பித்து வேண்டுதலில் முடித்தாள் துவாரகா.
அனைத்தையும் அன்னையிடம் சொல்லிவிட்ட பின்னர், அவளின் மனம் சற்று லேசாக இருக்க, அது கொடுத்த தெளிவோடு வெளியே வந்தாள் அவள்.
அங்கு கோபிநாத்தும் மயூரனும் நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருக்க, சோர்வின் காரணமாக அறைக்கு செல்ல முயன்றவளை மீண்டும் தடுத்தார் கோபிநாத்.
அதில் கடுப்பாக திரும்பியவள், “மிஸ்டர். கோபி, எனக்கு தூக்கம் தூக்கமா வருது. அதை டிஸ்டர்ப் பண்ணா சேதாரம் உங்களுக்கு தான்!” என்று கோபமூச்சுக்களை வெளியிட்டவாறு அவள் கூற, அதற்கு ஏதோ கூற வந்த கோபிநாத்தை தடுத்த மயூரனோ, “விடுங்க மாமா. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்றான்.
அப்போதும் பார்வையாலேயே ஏதோ சொல்லியவரை கண்டு கொள்ளாமல், விறுவிறுவென்று மாடிப்படிகளில் ஏறினாள் துவாரகா.
“துவாம்மா மயூரனையும் ரூமுக்கு கூட்டிட்டு போ. ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று கோபிநாத் கிட்டத்தட்ட கத்த, அங்கிருந்தே இடுப்பில் கைவைத்து முறைத்தவள், “விட்டா தூக்கிட்டு போக சொல்வீங்க போல.” என்று பதிலுக்கு கத்தினாள் அவரின் மகள்.
“மாமா, போதும். அவ ஏற்கனவே டென்ஷன்ல இருக்கா. விட்டுடுங்க, இல்லன்னா இன்னும் என் மானம் தான் போகும்!” என்றான் மயூரன்.
மருமகனுக்கு பாவம் பார்த்தோ என்னவோ, அதற்கு மேல் கோபிநாத் எதுவும் கூறவில்லை.
துவாரகாவும் அவளின் அறைக்குள் வந்தவள், “ஷப்பா, ஒருநாள் ஒரு பொழுது சமாளிக்கவே நாக்கு தள்ளுது. எப்படி தான் லைஃப் லாங் குப்பை கொட்டப் போறேனோ தெரியல!” என்று வாய்விட்டே புலம்பினாள்.
சரியாக அதே சமயம், “வேணும்னா வாழ்றதுக்கு முன்னாடி ஒரு ரிகர்சல் பார்ப்போமா?” என்ற குரல் பின்னிருந்து கேட்க, தூக்கி வாரிப்போட்டது துவாரகாவிற்கு.
‘அதுக்குள்ள எப்படி வந்தான்?’ என்ற கேள்வியே அவளின் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அவனின் நெருக்கம் அவள் மூளையை சென்றடையவில்லை.
மேலும், அவளை நெருங்கியவன் அவன் நெஞ்சளவே இருந்த அவளின் முகத்தில் அவனின் மூச்சுக்காற்றை ஊத, அப்போது தான் சுயத்தை அடைந்தவள், இருவருக்கும் இடையே இருந்த நூலளவு இடைவெளியை உணர்ந்தாள்.
அதில், பதறியவள் பின்னால் நடக்க பார்க்க, கட்டிலின் கால் இடறி, அதிலேயே தொப்பென்று அமர்ந்து விட, அது அவனுக்கு மேலும் எளிதாக அமைந்து விட்டது.
எதற்கா? அவளருகே அமர்ந்து பேசத்தான்!
“ஏதோ சமாளிக்க முடியலன்னு சொல்லிட்டு இருந்தியே, எனி ஹெல்ப்?” என்று அவன் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, “எப்பா சாமி, ஆளை விடுங்க… தெரியாம உங்களை லவ் பண்ணி தொலைச்சுட்டேன்.” என்று சொல்லியவாறு, அவனை தள்ளி விட்டு குளியலறைக்குள் சென்று மறைந்து விட்டாள்.
அவளைக் கண்டு வாய்விட்டு சிரித்தவனோ, “நானும் தெரியாம உன்னை ஹர்ட் பண்ணிட்டேன் குட்டிம்மா. இனி, எப்பவும் அந்த தப்பை செய்ய மாட்டேன்.” என்று மென்குரலில் கூறியவனுக்கு காலம் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்பது தெரியாது தானே!
தொடரும்…