கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்த தேவஸ்மிதாவின் கையில் சூப் கப்பைக் கொண்டு சூடு வைத்து தான் தன்னிலைக்கு வரவைக்க வேண்டியதாகப் போயிற்று.
தனது தவத்தைக் கலைத்த தயானந்தனை திரும்பி பார்வையால் சுட்டதில், ‘கேவலமா அவன்கிட்ட மாட்டிக்காத’ என்று முணுமுணுக்க அவள் சற்றே தணிந்தாள்.
பின் அமர மகரந்தனின் பார்வை அவளைத் துளைத்ததில் அசடு வழிந்தவள், “அதாவது அமர்… இப்ப நடக்குற பிரச்சனையைப் பத்தி சொல்லணும்ன்னா நம்ம ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி போகணும்” என்று பாக்கியராஜ் போல் கையை அவன் முகத்தின் முன் வைத்து பார்க்க, மிருணா சிரிப்பை அடக்கியபடி, “ஆனா பகையே பதினஞ்சு வருஷமான்னு தான சொன்ன?” எனக் கேட்டாள்.
கையை சட்டென கீழே போட்டவள், “நான் ஒரு புளோல சொல்லிட்டு இருக்கேன்ல குறுக்க பேசாத.” என்றதில், “ம்ம்க்கும் விடிஞ்சுடும்” என்று நெற்றியை நீவிக்கொண்டாள் மிருணாளினி.
அமர் தான், “சரி இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே போ. டைம் டிராவல் மெஷின் வேணும்ன்னா வாங்கி தரவா?” என நக்கலடிக்க, “சே சே அவ்ளோ பின்னாடி நான் போனா, உங்களை பார்க்க முடியாதே” என்று கள்ளச் சிரிப்புடன் கூறியதில் அவன் புருவம் உயர்த்தினான் அமர்த்தலாக.
“அது… உங்களையும் மிருவையும் பார்க்க முடியாதுல” என சமாளித்ததில் மிருணா, “ஓஹோ நம்பிட்டேன்” என்று கேலி புரிந்தாள்.
“ம்ம்ஹும் இன்னைக்கு என்ன அண்ணனும் தங்கச்சியும் ஒரு ஃபார்ம்ல இருக்கீங்க.” என்று அவள் ஆராய, அமரோ “உனக்கு க்ரில் சிக்கன் தான சாப்பிடணும்னு ஆசைப்பட்ட. கவலைப்படாத… உன்னையவே நான் க்ரில் சிக்கனா மாத்திடுறேன்.” என்று சட்டையின் கைப்பகுதி பட்டனை கழற்ற எத்தனிக்க,
“அமர் அமர் அமர்… பகையே எங்களுக்கும் அவனுங்களுக்கும் தான். இடைல நீங்க வேற ஏன் வன்முறையை தூண்டுறீங்க.” என்று அவன் தோளைப் பற்றி அமர வைக்க, அவளது உரசல்கள் அவனுள் மெல்ல மெல்ல நேச இரசாயனங்களை கலக்கத் துடித்தது.
அதுவரை அமைதியாக இருந்த தயாவோ, “உன் பொருளில் குற்றம் உள்ளது” என்று நக்கீரன் போல ஆரம்பிக்க, தட்டில் இருந்த ஃபோர்க் ஸ்பூனை எடுத்து அவன் தலையிலேயே அடித்தான் அமர மகரந்தன்.
“ஐயோ அம்மா!” என்று அவன் தலையைப் பிடித்ததில், முதலில் பதறி துடித்தது மிருணாளினி தான்.
“என்ன அண்ணா நீ!” எனத் தமையனைக் கடிந்து கொண்டவள், தயாவின் தலையை தேய்த்து விட முயல, சட்டென தான் செய்யப் போகும் காரியம் உணர்ந்து அப்படியே உறைந்து விட்டாள்.
அமர் தங்கையை முறைக்க, தயாவோ அவளது பதற்றத்தில் கண்களில் ஹார்ட் விட்டபடி அவள் தலையை தேய்த்து விடுவதற்கு ஏதுவாக குனிந்து கொண்டான்.
மிருணா தயக்கத்துடன் “எ… என்ன?” எனக் கேட்க, “தேய்ச்சு விடு நல்லி. இட்ஸ் ஹர்ட்டிங்!” என்றவனின் இறுதி வரி கமறலாக வெளிவர அதில் நிச்சயம் விளையாட்டு இல்லை.
உண்மையில் வலித்தது. அதனை விழுங்கிக் கொண்டவன், “இந்த பாரில் மானுடனுக்கு பரிதாபம் கொள்ளவொரு பெண்ணில்லையே!” என கவிஞன் போல பேச, “இந்த நேரத்தில நீ ஏண்டா பாருக்கு போற?” என்று தேவா கேட்டபடி சகோதரனின் தலையை தேய்த்து விட்டதில், “ஐயகோ!” என நொந்து கொண்டான்.
கையில் ஸ்பூனுடன் கடுகடுக்க நின்ற அமரைக் கண்டு, “கூல் கூல். உட்காருங்க.” என அவனை பவ்யமாக அமர வைத்தவள், “அதாவது அமர்…” என ஆரம்பிக்க,
“அடியேய் ஒழுங்கா விஷயத்துக்கு வா. அதாவது இதாவதுன்னு ஆரம்பிச்ச?” என்று பல்லைக்கடித்தபடி ஃபோர்க்கை தொண்டைக்கு அருகில் கொண்டு வர,
“பிளாஷ்பேக்ல பகையானதுக்கு தான் அவனுங்க அருவாளை தூக்கிட்டு வர்றானுங்கன்னு பார்த்தா, நீங்க பிளாஷ்பேக் சொல்லாததுக்கு ஃபோர்க்க அருவாளை யூஸ் பண்றீங்களே அமர்.” என்று பாவமாகக் கூறியதில், அத்தனை நேரம் இழுத்துப் பிடித்த சிரிப்பை உதித்து விட்டான்.
“ஹப்பா சிரிச்சுட்டீங்களா இப்படி சிரிச்சுக்கிட்டே கேட்டா நானும் சமத்தா சொல்லுவேன்ல” என்று அவனது சிரிப்பில் அவள் தொலைந்து போக, தயா தான் “நம்ம சொல்லப் போறது சீரியஸ் பிளேஷ்பேக்டி. அதை போய் சிரிச்சுட்டு கேட்க சொல்ற” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
தேவா நமுட்டு சிரிப்புடன் “சரி சரி விஷயத்துக்கு வரேன். என் மம்மியும் டேடியும் லவ் மேரேஜ் அமர். இந்த லவ் பேர்ட்ஸால வந்த வினைகள் இதெல்லாம்.” என்றிட, அமரோ, “அவங்களே தாத்தா பாட்டி ஆகிட்டாங்க. இன்னுமா இதுக்கான பிரச்சனை முடியல” என்று வியப்பாகக் கேட்டான்.
“ப்ச்… இது கொஞ்சம் காம்ப்ளிகேட்டான பிரச்சனை ஆகிடுச்சு அமர். என் மம்மியும் டேடியும் சேலத்துப் பக்கம் தரமங்கலம். ஒரே ஊர் தான். அப்பாவோட வீட்டுல எல்லாரும் வசதியானவங்க. அந்த ஊர் நிலக்காரர்ன்னு தான் என் தாத்தாவை சொல்லுவாங்களாம். மம்மியோட வீட்லயும் வசதிக்கு குறைவு இல்லை தான். அவங்களும் ஊருக்குள்ள பெரிய கை தான்.” என்று பேசிக்கொண்டே வர, மிருணாவோ “பெரிய கையோடவா இருப்பாங்க” என்று கேட்டாள் யோசனையாக.
“ஸ்ஸ்ஸ்… பெரிய ஆளுன்னு சொல்றா நல்லி. க்ளாஸ்ல டவுட்டு கேட்க சொன்னா கேட்காத. இங்க வந்து பெரிய கையா சின்ன கையான்னு கேளு” என்று தயா வாரியதில் மிருணாளினி முறைத்தாள்.
தேவா மெல்ல சிரித்து விட்டு, மீண்டும் தொடர்ந்தாள்.
“மம்மியும் டேடியும் அந்த நேரத்துல வெளியூர்ல தங்கி ஒரே காலேஜ்ல வேற வேற ஹாஸ்டல்ல தான் படிச்சு இருக்காங்க. அந்த டைம்ல ரெண்டு பேருக்கும் லவ்வாங்கி ஆக, காலேஜ் முடிக்கவும் டேடி அவர் வீட்ல சொல்லி இருக்காரு.” என்று மூச்சு வாங்க பேசி விட்டு ஜூஸை ஒரு மிடறு விழுங்கினாள்.
அந்த இடைவெளியில் தயா, “இந்த காதல் கதையை கேட்ட என் தாத்தா, நம்ம குடும்பத்துக்கு மான மரியாதை தான் முக்கியம். நம்ம என்ன தேங்காய் பர்பிக்கு அலையுற குடும்பமான்னு சீன் போட, என் அப்பா கெஞ்சி கதற அதை காதுல வாங்காத அந்த பெருசு, என் அப்பாவுக்கும் அவரோட ஒரே தங்கச்சியான என் மிதிலா அத்தையோட நாத்தனாருக்கும் கல்யாணம் பேசிட்டாரு.” என்றதும், அனைத்தையும் கூர்மையுடன் கேட்ட அமர், “ம்ம் அந்த மிதிலா அத்தையோட பையன் தான் மகேஷா?” என்றான்.
தேவாவோ “வாவ்… நீங்க பிளாஷ்பேக்கை கரெக்ட்டா கேட்ச்சப் பண்றீங்க அமர்.” என்று சிலாகித்துக் கொண்டாள்.
‘இந்த எருமைக்கு இது ஒரு பெருமை’ என சகோதரியை அசூசையாகப் பார்த்த தயா, “எஸ். மிதிலா அத்தையோட பையன் தான் மகேஷ். மிதிலா அத்தையோட வூட்டுக்காரரு அதான் என் மாமா சுந்தரம் சரியான முரட்டு பீசு. என் தாத்தா சீர் வரிசையை வரிசையா செஞ்சா கூட, அதுக்குலாம் திருப்தி படாத ஆளு. அவரோட ஒரே தங்கச்சியை மச்சானுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்து மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாம்ன்னு ஐயா பிளான் பண்ணிருக்காரு.” என்றதும், மிருணா “நல்ல பிளானிங் தான் அப்பறம் என்ன ஆச்சு?” எனக் கேட்டாள்.
தேவஸ்மிதா, “இது ஒரு பக்கம் இருக்க, இந்த பக்கம் என் மம்மி வீட்ல அடுத்த வெடி. படிக்க காலேஜுக்கு அனுப்புனா என்ன பண்ணிட்டு வந்துருக்கன்னு என் தாத்தாவும் பாட்டியும் என் மம்மியை அடி வெளுக்க, இடியே விழுந்தாலும் லவ் பண்ணவனை மறக்க முடியாதுன்னு என் மம்மி கெடுபிடியா பேச, அதுல கடியான என் தாத்தா, அவசர அவசரமா வேற மாப்பிளைப் பார்த்து இருக்காரு. ஹே வெய்ட் வெய்ட் வெய்ட்… வெடி அடி இடி கடி வாவ் ரைமிங்ல பிச்சு உதறுறேன்ல” எனப் பெருமையாகக் கேட்டு காலரை தூக்கி விட்டுக்கொள்ள,
“ஆமா ஆமா அவார்டு குடுத்துடலாம் அடச்சீ அடுத்து சொல்லு” என்று அமர் அவளை அசிங்கப்படுத்தியதில் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாள் பாவம்.
“அடுத்து என்ன… வழக்கம் போல லவ் ஜோடிங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிச்சுங்க. என் சுந்தரம் மாமா முரட்டுப் பீசுன்னா, என் அம்மாவோட வீட்டாளுங்க சரியான முட்டா பீசுங்க. என் அம்மாவோட மனசை கலைச்சது என் அப்பா தான்னு, அவர் வீட்டுக்குப் போய் சண்டை போட்டு இருக்காங்க.” என்று பேசும் போதே தயானந்தன் இடைபுகுந்தான்.
“இதுல இன்னொரு பாயிண்ட்டும் இருக்கு அமர். அந்த ஊர்ல ஒருத்தரோட குடும்பத்தை தெரிஞ்சோ தெரியாமலோ யாராவது தாக்கிட்டா, அதுக்கு பழி வாங்காம விடவே மாட்டாங்க. அவங்க பழி வாங்கும் படலம்ல குடும்பத்துல பிறந்த குழந்தையைக் கூட விடமாட்டாங்க.” என்றதும் அமரும் மிருணாவும் திகைத்தனர்.
தேவா, “ஹ்ம்ம்… அதுவும் என் அப்பா குடும்பமும் அம்மா குடும்பமும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்ல. பேசி பேசி, வார்த்தையை விட்டு, அப்பறம் கை கலப்பு ஆகி, சுந்தரம் மாமா என் அம்மா வீட்டாளுங்க யாரையோ வெட்டப் போய், அவங்க திரும்ப என் அப்பா வீட்டாளுங்க ஒரு ஆளை வெட்டின்னு, ஊரே ரத்தக்களரி ஆகிடுச்சு. அதுல ஒருத்தர் ரெண்டு பேர் காயம் ஆழமா பட்டு இறந்தும் போய்ட்டாங்க. இப்ப வந்து மிரட்டிட்டுப் போனாரே அவரு எனக்கு மாமா முறை தான். என் அம்மாவோட ஒன்னு விட்ட அண்ணன் பழனிச்சாமி. அவரு குடும்பத்துல இருக்குற யாரையோ சுந்தரம் மாமா வெட்டிட்டதால அவர் மேல பகையோடயே அலைஞ்சுட்டு இருந்தாரு.
அதுக்கு அப்பறம், அப்பா அம்மாவால ஊருக்கும் போக முடியலை. அவங்களுக்கு புரிய வைக்கவும் முடியல. அந்த நேரத்துல டேடியோட பிரெண்டோட அப்பா சென்னைல தான் டி. எஸ். பி யா இருந்தாரு. போலீஸ் ப்ரொடெக்ஷன் கொஞ்சம் இருந்ததுனால, அதுக்கு அப்பறம் அவங்க இங்க வந்து எங்களை அட்டாக் பண்ண நினைக்கல.
அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டு தீராத பகையோட அலைஞ்சுட்டு இருந்தாங்க. இப்படியே பத்து வருஷமும் போச்சு. திடீர்ன்னு ஒரு நாள், அப்பா வழி தாத்தா உசுரை கைல பிடிச்சுட்டு இருக்குறதாவும் கடைசியா ஒரு தடவை அப்பாவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறதாவும் கேள்விப்பட்டதுல அப்பாவால அமைதியா இருக்க முடியல. குடும்பத்தோட கூட்டிட்டுப் போக பயந்துக்கிட்டு, அவரு மட்டும் ஊருக்குப் போனாரு.
இங்க தான் டிவிஸ்ட்டே… மனுஷன் ஊருக்குப் போய் இறங்கி வீட்டுக்குப் போற வழில ஒரு இடத்தில சுந்தரம் மாமாவை யாரோ வெட்டிப் போட்டுட்டாங்க. ஆனா, அதை என் அப்பா தான் பண்ணுனாருன்னு சொல்லி போலீஸ் புடிச்சுட்டுப் போய்டுச்சு. ஊர்க்காரங்களும் மாமாவை அப்பா தான் கொன்னாருன்னு சொன்னதுல லேசா அமைதியான பூகம்பம் மறுபடியும் வர ஆரம்பிச்சுடுச்சு” என்றவளின் கூற்றில் மெல்ல வேதனை எழுந்தது.
தயாவின் முகமும் கவலையைத் தாங்கி இருக்க, “அப்பா எவ்ளோவோ சொல்லியும் யாரும் கேட்கல. ஆனா ஆதாரம் எல்லாம் அப்பாவுக்கு ஆதரவா இருந்ததுனால அப்போதைக்கு விட்டுட்டாங்க. ஆனா, மாமா வீட்டாளுங்க அப்பா மேல கேஸ் போட, அது எந்த பக்கமும் முடிவுக்கு வராமல் இத்தனை வருஷமா இழுத்துட்டு இருக்கு. கோர்ட்டுக்கும் வீட்டுக்குமா அலைஞ்சே அப்பா பல நாள் நொந்து போயிருக்காரு.
இதுக்கு இடைல மாமாவோட இறப்புல பழனிச்சாமி மாமா மேலயும் சந்தேகம் வர அவரோட வீட்டுலையும் ஒருத்தரை வெட்டிட்டாங்க. அதுக்குப் பழி வாங்க சுந்தரம் மாமாவோட பசங்களை கொல்ல இவரு வெறிப்பிடிச்சு அலைஞ்சாரு.” என்றான் தாங்களுடன்.
தேவாவோ, “ம்ம்… அப்போ மகேஷும் அவன் தங்கச்சியும் சின்ன பசங்க. மிதிலா அத்தைக்கு எப்பவுமோ என் அப்பா மேல பாசம் அதிகம். அப்போ அப்போ மாமாவுக்கு தெரியாமல் அப்பாகிட்ட பேசிக்குவாங்க. அன்பார்ச்சுனேட்லி, சுந்தரம் மாமாவோட டார்ச்சர் தாங்க முடியாம அவர் சாகுறதுக்கு ஜஸ்ட் ஒரு மாசத்துக்கு முன்னாடி தூக்கு மாட்டி இறந்துட்டாங்க.
ஏற்கனவே அம்மா இல்லாமல் தத்தளிச்சுட்டு இருந்தவங்க அப்பாவும் இறக்கவும் உடைஞ்சு போய்ட்டாங்க. பட் இதுல பியூட்டி என்னன்னா, மகேஷ்ஷும் சுந்தரம் மாமா இறந்த இடத்துல தான் இருந்துருக்கான். அவன் வேற யாரோ அவனோட அப்பாவை கொலை பண்ணிட்டதா சொன்னானாம். அவனுக்கும் அந்த அதிர்ச்சில அது சரியா தெரியல. ஆனா அப்பா கொலை பண்ணலைன்னு உறுதியா சொன்னான்.
அப்பாவுக்கு அந்த பசங்களோட உயிர் ஆபத்துல இருக்குன்னு தெரிஞ்சதும் அப்படியே விட்டுட்டு வர மனசில்லை. அதனால தங்கச்சி பசங்களை அவரே யாருக்கும் தெரியாம சென்னைக்கு கூட்டிட்டு வந்துடலாம்ன்னு யோசனைல மகேஷ்கிட்ட கேட்க, அவனும் உடனே ஒத்துக்கிட்டான்.
ஆனா அதுக்கு முட்டுக்கட்டையா வந்தா மகேஷோட தங்கச்சி மைதிலி. தன்னோட அப்பாவை கொன்னவனுக்கு நீ எப்படி சப்போர்ட் பண்ணலாம்ன்னு அவள் மகேஷ் மேல கோபப்பட, அவன் எவ்வளவு சொல்லியும் அவள் காதிலேயே வாங்கல.
அதுல அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டதுல, சுந்தரம் மாமாவோட வீட்டாளுங்க, அவங்களோட தூரத்து சொந்தம் யாரோ கல்கட்டால செட்டில் ஆகி இருந்ததுல, அவங்க உயிரை காப்பாத்த அங்க அனுப்ப பிளான் பண்ணுனாங்க.
மைதிலி தான், அப்பாவை கொன்னவனுக்கு சப்போர்ட் பண்ணவன் என் அண்ணனே இல்லைன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி அவங்களோடயே போய்ட்டா. தானும் அவள் பின்னாடியே போனா, ரெண்டு பேரையும் ஒண்ணா பிடிச்சு கொல்ல வாய்ப்பு இருக்குன்னு, அவளை கண் காணாத இடத்துக்கு அனுப்பிட்டு, இவன் மட்டும் அவங்க முன்னாடியே நடமாட்டிட்டு இருக்கான். அதுக்கு அப்பறம் அவன் மைதிலியை பார்க்கவும் இல்லை. நாங்களும் பார்த்தது இல்ல. அவளும் அவள் கோபத்தை குறைச்ச மாதிரி தெரியல.
இதுல ஹை ஹையான ஹைலைட்டே, இப்ப அப்பா வீட்டாளுங்களும் சரி அம்மா வீட்டாளுங்களும் சரி ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் நாங்க தான் காரணம்ன்னு இப்ப எங்க மொத்த குடும்பத்தையும் கொல்ல நினைக்குது. கேஸ் முடியிற வரை எந்த உயிர் சேதமும் நடக்கக்கூடாதுன்னு கோர்ட்ல ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அதனால இத்தனை வருஷமா தப்பிச்சுட்டோம். ஆனா கேஸ் முடிஞ்சுட்டா, அவங்க அருவாள்ல நல்ல அரு ]வாளா பார்த்து நாங்களே செலக்ட் பண்ணிக்க வேண்டியதா இருக்கும்” என தீவிரத்துடன் பேசிக்கொண்டே வந்தவள் இறுதியில் குறும்புடன் முடித்தாள்.
மிருணாளினிக்கு தான் தலையே சுற்றியது. “ப்பா… கேட்க கேட்க நெஞ்சே வெடிக்குது. இவ்ளோ பெரிய விஷயத்தை என்ன ரெண்டு பேரும் இவ்ளோ சாதாரணமா பேசுறீங்க.” என்று படபடக்க, தயானந்தன், “அட ஒரு நாள் கேக்குறனால உனக்கு அப்படி இருக்கு நல்லி. தினமும் இதை பத்தி பேசி பேசி எங்களுக்கு அட போங்கடா வெட்டுனா வெட்டிக்கங்கன்ற ஜென் நிலைக்கு வந்துட்டோம்.” என்றவனின் நக்கலிலேயே அவர்களது விரக்தியும் வலியும் அப்பட்டமாக தெரிந்தது.
அமரோ கேள்விப்பட்ட விஷயங்களை எண்ணி திகைத்து பின் தன்னவளை சூழ்ந்திருக்கும் இக்கட்டை சரி செய்யும் வழியை யோசிக்கலானான்.
அந்நேரம், தேவாவே “இதுக்கு தான் நான் ஒரு பிளான் பண்ணி வச்சுருக்கேன்…” என்று இழுத்தவள், யோசனையைக் கூறியதில் மூவரும் அவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்தனர்.
உயிர் வளரும்
மேகா
ஹாய் டியர் பிரெண்ட்ஸ்… ஸ்டோரி எப்படி போய்ட்டு இருக்கு 😍 இது ஒரு லாங்க் content ஸ்டோரி. கதை முழுக்க அப்படியே ஒரு flow vaa pogum. Max fun a ve tha pogum. Mudincha alavu daily ud thara try panren or oru naal vitu oru naal tharen drs… Keep supporting me 😍😍🤩🤩