Loading

நிலா வெளிச்சம் மலர் தோட்டத்தை நிறைத்தாலும், முழு வெளிச்சம் தருவதில்லையே. ஆங்காங்கே இருட்டின் நிழல் இருக்கும் தானே! அந்த இருட்டிற்குள் நுழைந்து தன்னையே தொலைத்து விட்ட மைதிலியின் கருவிழிகள் இன்னும் கூட அந்த இருளில் தான் துழாவியது.

“அம்மா…” எனக் கண்ணைக் கசக்கியபடி வெளியில் வந்த மகிழினி அழுது கொண்டிருந்தாள்.

மகளை அவசரமாகத் தூக்கிய மைதிலி, “ஓகே டா ஓகேடா” எனத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுக்க, அருகில் இருவரும் இல்லாததால் பயந்து விழித்து தேடி வந்திருக்கிறாளென புரிந்து சமாதானம் செய்ய அவள் அழுகையை நிறுத்தவில்லை.

பின், பிரஷாந்த் மகிழினியை சமாதானம் செய்த பின் தான் சற்று இயல்பாகி அவன் தோளிலேயே உறங்கி விட்டாள்.

பின், அவளை மீண்டும் மெத்தையில் கிடத்தி விட்டு தோட்டத்திற்கு வர, இன்னும் மைதிலி அதே நிலையில் தான் நின்று கொண்டிருந்தாள்.

“இருட்டுக்குள்ள எந்த பதிலையும் தேடாத மைலி! வந்து தூங்கு.” என்று கையை கட்டிக்கொண்டு கூறியதில், அவள் அவனைப் பாராமல் உள்ளே சென்றாள்.

மனதிலிருக்கும் புழுக்கத்தை வெளியில் உதறிவிட்டதாலோ என்னவோ படுத்ததும் உறங்கி விட்டாள். அவன் தான் உறக்கம் தொலைத்து மைதிலியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மறுநாள், சஞ்சீவின் வீட்டிற்கு சென்று விட்டு பின் அப்படியே விமான நிலையத்திற்கு செல்வதென்று முடிவானது.

காலை வேளை காபியுடன் குவார்ட்டர்ஸில் அமைந்த சிறிய அளவிலான சிட் அவுட்டில் கையில் செய்தித் தாளுடன் அமர்ந்திருந்தார் மோனி ஜாய்.

அவருக்கு எதிரில் அமர்ந்த பிரஷாந்த் “குட் மார்னிங் அங்கிள்” என்றவன், “நீங்க இயர்லி மார்னிங்கே எந்திரிச்சுடுறீங்களே. இப்ப தான் காபி குடிக்கிறீங்களா?” எனப் பேச்சுக் கொடுத்தான்.

“இது ரெண்டாவது காபி பிரஷாந்த். ஷோமா!” என்று அவனுக்கு பதில் அளித்து விட்டு மனையாளை அழைக்க, அடுத்த நொடி அவர் முன் நின்ற ஷோமாவிடம், “ஹாட் வாட்டர் ரெடியா?” எனக் கேட்டார்.

“ரெடிங்க” என்றவர் பிரஷாந்திற்கும் பிளாஸ்கில் இருந்து காபியை ஊற்றப் போக, “நான் குடிச்சுக்குறேன் ஆண்ட்டி. நீங்க போங்க” என்று விட்டு,

“வீட்ல ஹீட்டர் இருக்கு தான அங்கிள். அப்பறம் எதுக்கு ஹாட் வாட்டர் ரெடியானு அவங்க கிட்ட கேட்குறீங்க.” எனக் கேட்க,

அவருக்கு முன் ஷோமா பதில் கூறினார்.

“அவருக்கு மிதமான சூட்டுல கலந்து வச்சுடனும் தம்பி. அதான்…”

“ஓஹோ! அப்போ ஆர்மி கேம்ப்ல இதெல்லாம் யார் செஞ்சு குடுப்பா அங்கிள்?” கிண்டல் தொனியில் வந்ததோ அவன் கேள்வி என்ற சந்தேகத்துடன் அவனைப் பார்த்த மோனி,

“அங்க யாரும் செய்ய மாட்டாங்க. இந்த மாதிரி பக்குவம் பண்றதுக்கு எல்லாம் நேரம் இருக்காது. எந்நேரமும் நாங்க அலெர்ட்டா இருக்கணும். அதனால தான் லீவ்ல வரும் போது எல்லாமே ஆற அமர செஞ்சுக்குறோம். என்னைக் கவனிக்கவே அவளுக்கும் நேரம் போய்டும்” என்றபடி அவரது முறுக்கு மீசையை பெருமையாக தடவி விட்டார்.

“அது சரி… லீவ் நாள்லயாவது உங்களை அவங்க கவனிச்சுக்குறாங்க. அப்போ, உங்களை கவனிச்சுக்குற ஆண்ட்டியை யாரு கவனிச்சுப்பா அங்கிள்?” அழுத்த விழிகளுடன் அவன் வினா எழுப்ப, மோனி புருவம் சுருக்கினார்.

“ஏன் அவளுக்கு என்ன, இங்க சேஃப்டி இருக்கு. காய்கறி எல்லாமே சொன்னா வாங்கிட்டு வந்து கொடுக்க ஆள் இருக்கு. வெளில போகணும்னா கார் இருக்கு. பங்களா மாதிரி வீடு இருக்கு. வீட்ல தேவையான எல்லாமே இருக்கு” என்றார் வேகமாக.

இவர்களது பேச்சைக் கேட்டபடி வந்த மைதிலி பிரஷாந்தை கண்டிப்புடன் பார்த்தபடி அவர்களுடன் அமர, அவன் அவளைக் கண்டுகொண்டானில்லை.

ஷோமா தான் நிற்பதா வேண்டாமா எனப் புரியாமல் கையைப் பிசைந்தார்.

“கரெக்ட் தான் அங்கிள். அப்போ நீங்க லீவுக்கு வரும் போது நீங்க சொன்ன எல்லாமே உங்களுக்கும் இருக்குமே. அப்பறம் எதுக்கு உங்களுக்கு எக்ஸ்டரா வேலை செய்ய ஒரு ஆளு. நீங்களே செஞ்சுக்கலாம் தான?” எனக் குத்தலாகக் கேட்க,

“என் பொண்டாட்டி எனக்காக செய்யிறா… இதுல என்ன இருக்கு. நாட்டுக்காக நாட்டோட எல்லைல போராடுற எங்களுக்கு வீட்டுல கூட நிம்மதி இருக்கக் கூடாதா?” பொசுக்கென கோபம் வந்து விட்டது மோனிக்கு.

“நாட்டுக்காக நாட்டோட எல்லைல போராடுறீங்க தான். இல்லைன்னு சொல்லல. ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான ஜாப். லீவ் கிடைக்கும் போது தான் குடும்பத்தைப் பார்க்க முடியும். இதெல்லாம் நான் குறைச்சு சொல்லல. நீங்க தியாகி தான். இதுல மாற்றுக்கருத்தும் இல்ல. ஆனா நீங்க மட்டும் தான் தியாகின்னு நினைக்கிறீங்க பார்த்தீங்களா அது தப்பு” என்று திட்டவட்டமாக அவரது முகத்திற்கு நேரே கூறி விட, மைதிலி அடிக்குரலில் “பிரஷாந்த்” என்றாள் பல்லைக்கடித்து.

“இரு மைலி பேசிட்டு இருக்கேன்ல” என்று பொறுமையாக அவளை அதட்டியவன், மோனியை புருவம் உயர்த்திப் பார்க்க, அவர் முகமே கோபத்தில் சிவந்திருந்தது.

“தப்பா எது தப்பு? டிசிப்பிளீனா இருக்குறது தப்பா? இல்ல ஆர்மி மேனா இருக்குறதே தப்பா? அங்க நாட்டோட பாதுகாப்புக்கு போராடுனா கூட ஆர்மி மேனுக்குனு ஒரு மரியாதை இருக்க மாட்டேங்குது” என்று பொங்கினார்.

தலையாட்டி சிரித்துக் கொண்ட பிரஷாந்த், “இப்ப தான் தெரியுது, ரகுகிட்ட இருந்த குணம் யார்கிட்ட இருந்து வந்துச்சுன்னு. அதெப்படி ரெண்டு பேருமே, நாங்க ஒன்னு சொன்னா நீங்க அதை வேற மாதிரி தான் எடுத்துப்பீங்களா? டிசிப்பிளீனா இருக்குறது ஆர்மி மேனா இருக்குறது எல்லாம் தப்பு கிடையாது அங்கிள். நீங்க இந்த பொசிஷன்ல இருக்குறதுக்கு நீங்க மட்டுமே காரணம்னு நினைக்கிறீங்களே அது தப்பு.

உங்க குடும்பத்தோட ஒத்துழைப்பு இல்லாம, அவங்களோட தியாகம் இல்லாம நீங்க தியாகி ஆகியிருக்க முடியாது. ஒரு ஆர்மி மேன் பீல்டுல இறங்கி வேலை செஞ்சு வாங்குற நல்ல பேர்ல, ஒரு சதவீதம் கூட அவன் மனைவிக்கு கொடுக்குறது இல்லை.

அவங்களுக்கு என்ன ஜாலியா பங்களா ஏசி ரூம், கார்னு இருக்காங்கனு சொல்றீங்களே. அதெல்லாம் கூட சேர்ந்து பேசுமா? தலைவலின்னா என்னன்னு கேட்குமா? அக்கறை எடுத்துக்குமா? நீங்க செய்ற சேக்ரிபைஸ விட அவங்க செய்ற சேக்ரிபைஸ் ஒரு மடங்கு உயர்ந்தது அங்கிள். இங்க உங்க வைஃப் அப்படின்ற மரியாதைய காப்பாத்திட்டு நீங்க வர்ற நாளை எதிர்பார்த்துட்டு இருக்குறவங்க ஒரு நாள் சொல்லாம கொள்ளாம ஓடிப் போய் இருந்தா? உங்க பொண்ணு உங்களை மதிக்காம உங்க அனுமதி இல்லாம கல்யாணம் பண்ணிருந்தா? இங்க எல்லாருக்கும் அவங்க அவங்க ஆசையை நிறைவேத்த நிறையவே ஆசை இருக்கும் அங்கிள். அதை மீறி உங்களை மதிக்கிறாங்கன்னா, உங்களுக்காக இல்லை. அது இந்த நாட்டுக்காக நீங்க செய்ற வேலைக்காக. அந்த வேலைக்கு மரியாதை குடுத்து, உங்க கஷ்டத்த புருஞ்சுக்கிட்டவங்களுக்கு என்ன கிடைக்குது அங்கிள்? மெச்சூரிட்டி இல்லைன்ற பேர் தான்ல?” ரகுவீரின் மீதிருந்த ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் சேர்த்தே கம்பீரக் குரலில் கொட்டி இருந்தான் பிரஷாந்த்.

அவனிடம் இருந்து இப்படியான எதிர்வினையை எதிர்பாராமல் மைதிலி கண்ணிமைக்காமல் அமர்ந்திருக்க, மோனியின் முகத்தில் சிறு திகைப்பு.

பிரஷாந்த் அத்துடன் விடவில்லை. “சரி அதை விடுங்க. நீங்களும் ஆர்மில இருக்கீங்க. ரகுவும் ஆர்மி தான். அப்பறம் ஏன் உங்க பொண்ணை மட்டும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்த்தீங்க?” என்று கேள்வியுடன் அவரை அழுத்தப்பார்வை பார்க்க, அதில் சட்டென பார்வையை திருப்பினார்.

முதன்முறை ஒரு திணறல். “அது… அவளுக்கு ஆர்மி ஆபிசரை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு தான் ஆசை. ஆனா அவள் தான் முடிவா ஆர்மி மேன் வேணாம்னு சொல்லிட்டா”

“ஏன்?” ஒற்றைப் புருவம் உயர்ந்தது அவனுக்கு.

“அவளுக்கு இண்டரெஸ்ட் இல்லன்னு சொன்னா”

“நீங்க போர்ஸ் பண்ணலையா?”

“பண்ணுனேன். ஆனா அவள் கேட்கல. என்னால என் அம்மா மாதிரி புருஷனை அனுப்பிட்டு இருக்க முடியாது. வேணாம்னு முடிவாசொல்லிட்டா”

“அவள் சின்னப் பொண்ணு. மெச்சூரிட்டி இல்லாம புரியாம பேசி இருப்பா. நீங்க கம்பெல் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கணுமே அங்கிள்…” பல்லைக்கடித்துக்கொண்டு கேலியுடன் கேட்டதில் மோனியின் முகம் வெளிறியது.

“அவளுக்குப் புரிய வைக்க முடியல. சின்னப் பொண்ணு தான…” கம்பீரம் மெல்ல மெல்ல தொலைந்தது மோனிக்கு.

“உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணும் போது என்ன வயசு?”

“என்ன ஒரு 25 இருக்கும்…”

“ஓஹோ 25 சின்ன வயசு. சோ புரிய வைக்க முடியல. ஆனா 21 வயசுல இந்த வாழ்க்கைக்கு தயாரே ஆகாம கல்யாணம் பண்ணிக்கிட்ட மைதிலி மட்டும் மெச்சூரிட்டியோட புரிஞ்சு நடந்துக்கணும். பெத்த பொண்ணையும் மத்த பொண்ணையுமே சமமா நடத்தத் தெரியாத நீங்க எப்படி இந்தியா எனது நாடு. இந்திய மக்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்னு உறுதிமொழி எடுக்க முடியுது அங்கிள்?” வார்த்தைகளில் நெருப்பைக் கொட்டினான்.

“பிரஷாந்த் ப்ளீஸ்… தேவையில்லாத விவாதம் வேணாமே” மைதிலி சலிப்புடன் கெஞ்ச,

“இங்க விவாதம் பண்றதே தேவையில்லைன்னு விட முடியாது மைலி. இப்ப நான் கேக்குறது சரி தப்புன்ற விவாதம் இல்ல. நியாயம்! உனக்கான நியாயத்தை கேட்க வேண்டிய உன் சித்தப்பாவும் இல்ல உன் ஆசைக் காதலனும் இல்ல. சோ, இவருகிட்ட தான கேட்க முடியும். உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட ரகு செஞ்சது சரி. ஆனா அதை எதிர்த்து கேள்வி கேட்ட உன்மேல தப்புன்னா, இங்க அடிப்படையே தப்பா இருக்கே. மக்களை சரிசமமா நடத்த வேண்டிய பொறுப்புல இருக்குறவங்களே இப்படி செஞ்சுட்டு, மத்தவங்களை குறை சொல்றது மல்லாக்கப்படுத்து காரி துப்புறதுக்கு சமம்…” என்று விட்டு எழுந்தவன்,

“நான் நைட்டோட நைட்டா கிளம்பி இருப்பேன். உங்ககிட்ட ரெண்டு வார்த்தையாவது கேட்டுட்டு போகலைன்னா மனசு கேட்காது. அதான் இருந்தேன்” என கண்ணைச் சுருக்கி கூறி விட்டு, “கிளம்பலாம் மைலி. மகியை கூட்டிட்டு வா. நான் கேப் புக் பண்றேன்” என்று மடமடவென வெளியில் சென்றான்.

இன்னும் அவன் பேசியதில் இருந்து வெளியில் வராத மோனி தான் அசையாமல் அமர்ந்திருந்தார்.

அடுத்ததாக மூவரும் சஞ்சீவின் வீட்டிற்கு சென்றனர். காரில் போகும் போதும் இருவரிடமும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.

அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற சஞ்சீவ், மகிழினியை தூக்கிக் கொள்ள, அவனது பெற்றோர் மாலதி மற்றும் சண்முகமும் அவர்களை அன்பாய் அழைத்தனர்.

பிரஷாந்த்தின் முகத்தில் தான் முந்தைய நாள் இருந்த இளக்கம் சுத்தமாக இல்லை. மரியாதைக்காக இரு வார்த்தை பேசியவன் பின் கையைக் கட்டிக்கொண்டு மௌனத்தில் ஆழ்ந்து விட்டான். சண்முகம் மகிழினியை வெளியில் வைத்து விளையாட்டுக் காட்ட, மாலதி அடுக்களையில் இருந்தார்.

அதை சஞ்சீவ் உணர்ந்து கொண்டாலும், “என்னஜி டிராவல் டயர்டா அமைதியா இருக்கீங்க” என்று கேட்டு விட, “என்ன பேசணும்?” என்றான் கூர்மையுடன்.

அவனது செயல்பாடுகளில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்த மைதிலியும் “பிரஷாந்த்…” என்று ஹஸ்கி குரலில் கண்டிக்க, அந்நேரம் மாலதி வந்தவர், “ஜூஸ் எடுத்துக்கோங்க” என்று கொடுத்து விட்டு, “சஞ்சீவ் ஊருக்கு வர்ற நேரம் எல்லாம் உன்னைப் பத்தி தான்மா பேசுவான். கல்யாணத்துக்கும் எங்களால வர முடியல…” என ரகுவுடன் நடந்த திருமணத்தைக் கூறி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்.

அவள் அதற்கு சங்கடப்படாமல் “பரவாயில்லைமா” என சிறு புன்னகையுடன் கூற, அதிலேயே அவளை மிகவும் பிடித்து விட்டது அவருக்கு.

சஞ்சீவி கைகாட்டி, “எனக்கும் இவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா இருக்கு. அதுக்கு இவன் ஒத்துக்கிட்டா தான” என்று சலித்துக் கொள்ள, சஞ்சீவ் “ம்மா இன்னைக்குமா. வந்தவங்க காதுல ரத்தம் வர வச்சுடாதீங்க. சாப்பாடு ரெடியா?” எனப் பேச்சை மாற்றினான்.

“அதெல்லாம் ரெடி தான். நீ என்னை டைவர்ட் பண்ணாத” என மகனை முறைக்க, மைதிலியும், “கல்யாணம் பண்ணிக்கலாமேண்ணா” என்றாள்.

“எனக்கு பெருசா விருப்பம் இல்ல மைதிலி. என்ன இருந்தாலும் ஒரு பொண்ணோட சாதாரண எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய பொசிஷன்ல நான் இல்ல. அந்தப் பாவம் எனக்கு வேணாம்” என்று இறுகளுடன் கூறி விட்டதில் மைதிலி கன்றிய முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.

“நீங்க என்ன பொய் சொல்லியா கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. அதுவும் இல்லாம, ஆர்மி மேனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற பொண்ணுங்களும் இருக்க தான் செய்றாங்கண்ணா. நான் தியாகி இல்ல. ஆனா நீங்க செய்ற தியாகத்தை ஏத்துக்கிட்டு, சாக்ரிபைஸ் பண்ண நினைக்கிற பொண்ணுங்க நிறைய பேர் இருக்காங்க. ஏன் இப்படி மொத்தமா வேணாம்னு இருக்கீங்க. அடுத்த தடவை வரும் போது நீங்க கமிட்டடா இருக்கணும். இப்படியே போனா நேரா அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும். வயசு என்ன இப்படியே இருக்குமா?” தங்கை என்ற உரிமையில் கடிந்து கொண்டவள், அவன் பேச வரும் முன் அதனை தடுத்து மாலதியிடம், “சாப்பிட்டு கிளம்புறோம்மா பிளைட்க்கு நேராச்சு” என்று விட, மாலதியும் உணவை எடுத்து வைக்கச் சென்றார்.

பிரஷாந்தின் பார்வை சஞ்சீவைத் துளைக்க, அவனோ அவனது பார்வையை எதிர்கொள்ள இயலாமல் திணறினான். மைதிலி நடந்ததை இப்போது தான் அவனுக்கு கூறி இருக்கிறாளெனப் புரிந்தது.

மீண்டும், “என்ன ஆச்சு பிரஷாந்த்?” என்றிட,

“என்ன ஆகணும்ஜி? அதான் எல்லாம் சிறப்பா நடந்து முடிஞ்சுருச்சே. எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் சஞ்சீவ். ஒரு அண்ணனா அவளுக்கு இருப்பேன்னு சொல்லிருந்தீங்களே, உண்மையாவே உங்க தங்கச்சியை ஒருத்தன் ஏமாத்தி இருந்தா இப்படி தான் எதுவுமே செய்ய முடியாத நிலைமைல வேடிக்கை பார்த்து இருப்பீங்களா? வெறும் உங்க சப்போர்ட் மட்டுமே அவள் வாழ்க்கைலயும் சரி ரகுவோட குணத்துலயும் சரி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதப்ப, வெறும் அன்பை மட்டும் வச்சு ஊறுகாய் கூட போட முடியாதுல” என்று குத்தலாகப் பேசி விட்டு எழுந்தவன் “கிளம்பலாம்…” என்று மைதிலியைப் பார்த்துக் கூற, அவள் திருதிருவென விழித்தாள்.

மாலதி டைனிங் டேபிளில் உணவை வைத்து விட்டு வந்தவர், பிரஷாந்த் கிளம்பத் தயாராக இருப்பதைக் கண்டு புரியாமல் திகைக்க,

சஞ்சீவிற்கு நெஞ்சம் வலித்தது.

“ஜி ப்ளீஸ்…” என்று அவன் பேசத் தெரியாமல் திணற, “உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங்க சஞ்சீவ். வந்து விருந்தே சாப்புடுறோம். உங்க கல்யாணப் பத்திரிகையை எதிர்பார்த்துட்டு இருப்பேன்” என்றவன், விறுவிறுவென வெளியில் சென்று மகிழினியைத் தூக்கிக்கொண்டு பெரியவர்களிடம் சொல்லி விட்டு காத்திருந்த கேபை நோக்கிச் சென்றான்.

மைதிலி இன்னும் நகராமல் அதே இடத்தில் திகைத்து நின்றதில், மீண்டும் மடமடவென உள்ளே வந்தவன், “நீ இருந்துட்டு வர்றதுன்னா வா. நான் மகி பேபி கூட கார்ல இருக்கேன்” என்று கூறி விட்டு காரில் ஏறி அமர்ந்து விட, அவள் சஞ்சீவைப் பாவமாகப் பார்த்தாள்.

ஏற்கனவே ஒரு வித குற்ற உணர்வில் இருந்தவனுக்கு பிரஷாந்தின் பேச்சு இதயத்தைத் துளைத்தது.

மைதிலிக்கு பிரஷாந்தின் கோபம் ஒரு ஓரத்தில் ஆறுதல் கொடுத்தாலும் அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

‘இப்ப எதுக்கு இவன் ஓவரா போறான். எனக்கு என்ன ஆனா இவனுக்கு என்ன… என்மேல எந்த அட்வான்டேஜும் அவன் எடுத்துக்கத் தேவை இல்லை’ என்று மானசீகமாக மனம் அதிரக் கத்தியவளுக்கு, அவனை மீறி அங்கு நிற்கவும் கால்கள் ஒத்துழைக்கவில்லை.

‘அவன் சொன்னா நான் கேட்கணுமா? நான் இருந்துட்டு தான் வருவேன்’ என்று மூளை தீர்மானமாகக் கூறினாலும், கால்கள் தானாக காரை நோக்கி நகர்ந்தது.

அவளைக் கண்டதும் பிரஷாந்தின் இதழ்களில் சிறு கர்வ நகை வீச, “ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு ஏர்போர்ட் போகலாம் மைலி. உனக்கு என்ன வேணும், வெஜ் ஆர் நான் வெஜ்” எனக் கேட்டுக்கொள்ள, மைதிலி தீயாக முறைத்து வைத்தாள்.

“அங்கிள் எனக்கு பிரியாணி வேணும்” என்று மகிழினி முதல் ஆளாக கேட்டதில், “டன் பேபி” என்றவன் உணவகத்திற்கு அழைத்துச் செல்ல, மைதிலி காரை விட்டு இறங்கவில்லை.

“மகி அம்மாவுக்குப் பசிக்கல. நீ அங்கிள் கூட சாப்பிட்டு வா” என்றதும் மகிழினி பிரஷாந்தைப் பார்த்தாள்.

“நீ சாப்பிட வேணாம். வந்து கம்பெனி குடுக்கலாம்ல” எனப் பிரஷாந்த் கேட்டதில், அவள் அவனுக்குப் பதில் கூறாமல் அமர்ந்திருந்ததில், “இப்ப என்ன பிரச்சனை உனக்கு?” என்றான் நிதானமாக.

“இங்க பாருங்க… ஏதோ ஒரு நினைப்புல உங்ககிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டேன் அவ்ளோ தான். அதுக்காக நீங்க எனக்காக யாரையும் பகைச்சுக்கிட்டு நியாயம் கேட்கணும்னு அவசியம் இல்லை. எனக்காக யாரும் எதுக்காகவும் மெனக்கெட வேணாம். இதுக்கு முன்னாடி எப்படி இருந்தோமோ அதே மாதிரி தான் கடைசி வரை நம்ம ரிலேஷன்ஷிப் இருக்கும்” என்றதும் பிரஷாந்த் இதழ் மடித்து சிரித்தான்.

“இப்ப என்ன நான் காமெடி பண்ணேன்னு சிரிக்கிறீங்க?” கோபத்தில் சிவந்து கேட்டவளிடம்,

“முன்னாடி எல்லாம் எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லுவ. இப்போ ஒரு நூலளவுன்னாலும் ரிலேஷன்ஷிப் இருக்குன்னு சொல்ற அளவு நான் முன்னேறி இருக்கேனே அதை நினைச்சு எனக்கு ஒரே குஜால் ஆகிடுச்சு மைலி. அதை கொண்டாடுற விதமா என்னோட ட்ரீட் இன்னைக்கு. வா வா!” என்று அழைக்க, மைதிலி கடுமையாக முறைத்து வைத்தாள்.

“சரி, நீ வர்ற வரை நாங்களும் இப்படியே நிக்கிறோம். பிளைட் மிஸ் ஆனாலும் பரவாயில்லை” என்று கையைக் கட்டிக்கொண்டு நிற்க, எல்லாம் புரிந்தது போல மகிழினியும் அவனைப் போலவே முகத்தை வீம்பாக வைத்துக்கொண்டு கையைக் கட்டியபடி நின்றாள்.

மூச்சு முட்ட இருவரையும் முறைத்தவள், “இப்படி கார்னர் பண்ற வேலை எல்லாம் இனிமே வச்சுக்காதீங்க சொல்லிட்டேன்” என்று எரிந்து விழுந்து விட்டு உணவகத்திற்குள் நுழைய, பிரஷாந்தும் மகிழினியும் மெல்லச் சிரித்து ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.

அந்நேரம் இவர்கள் வராததை உணர்ந்து மைதிலி திரும்பியதில் இவை அனைத்தும் கண்ணில் பட, அவளையும் மீறி சிறு துளி புன்னகை உதட்டினுள் பூத்தது.

அவர்களே அறியாத சதிவலை அவர்களை சுற்றி பின்னப்பட்டிருப்பதை உணராமலேயே பழைய நினைவுகளை கல்கத்தாவிலேயே விட்டு விட்டு சென்னை வந்திறங்கினர். வந்தவர்களுக்கு முதல் அதிர்ச்சிப் படலமாக அமைந்தது பிரஷாந்துடைய பெற்றோரின் வரவு!

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
77
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்