435 views

 

“யாழு என்னாச்சு உனக்கு.” வெகு நேரமாக பார்த்துக் கொண்டிருக்கும் மாமன் மகளிடம் இத்தோடு ஆறாவது முறையாக கேட்டு விட்டான் கண்ணன்.

அவனோடு சேர்ந்து சண்முகம், பரிமளம் கூட இரு முறை மகளை அழைத்து விட்டார்கள். எதற்கும் அசையாமல் அப்படியே நின்றுக் கொண்டிருக்கிறாள் யாழினி.

“யாழூழூ…” பரிமளம் மகளின் தோளை தட்ட,

“ஆஹான்!” என முழிக்க ஆரம்பித்து விட்டாள்.

“என்னடி பேய் ஏதாச்சும் பிடிச்சிருச்சா. எவ்ளோ நேரமா கூப்பிட்டு இருக்கோம் சிலையா நிக்கிற.” என்றதும் சுற்று முற்றும் பார்க்க ஆரம்பித்த விழிகள் கடைசியாக கண்ணன் மீது நின்றது.

‘இவ என்ன சினிமா நடிகன் மாதிரி இருக்கான். கலர் வேற ஏகத்துக்கும் ஏறி இருக்கு. இங்க இருந்து போகும் போது சப்பாணி மாதிரி இருந்துட்டு இப்போ சிவாஜி படத்துல வர ரஜினிகாந்த் மாதிரி மின்னுறான். இவன் உண்மையாவே கண்ணன் தானா!’

“யாழு இதுக்கு மேல இதே மாதிரி நின்னுட்டு இருந்த விளக்குமாறு பிஞ்சு போற அளவுக்கு பூஜை போட்டுருவேன். வாயைத் திறந்து என்னன்னு சொல்லுடி.”

“விடுங்க அத்தை ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கிறதால அடையாளம் தெரியலையோ என்னமோ.” என்று சிரித்தவன் அவள் அருகில் நெருங்கினான்.

யாழினி மனம் காரணம் தெரியாமல் தடதடக் ஓசையை உருவாக்க, அவை அப்படியே நின்றது கண்ணன் நெருங்கியதால். அருகில் வந்தவன் கையசைத்து, “நான் தான் கண்ணன். உன் சின்ன மாமா பையன்.” என்று தனக்குத்தானே அறிமுகம் செய்து கொண்டான்.

லேசாக புன்னகை எட்டிப் பார்க்க, “அப்பாடா! என்னை அடையாளம் தெரிஞ்சிடுச்சு, ரொம்ப சந்தோஷம்.” என்ற கண்ணன் வார்த்தையில் இன்னும் புன்னகை பூவாய் மலர்ந்தது.

“அதெல்லாம் தெரியாம இல்ல… இப்படி ஆளே தெரியாம மாறிட்டியேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.‌”

“நீ கூட தான் ஆளே மாறிட்ட.” என்றதும் குனிந்து தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டவள்,

“நான் என்ன மாறிட்டேன்.” கேட்டாள் அவனிடம்.

“அடக்கமா இருந்த ஒத்த சடை இப்ப  வீட்டையே பெருக்குது. எதுக்கு இப்படி விரிச்சு போட்டிருக்க. பார்க்க அப்படியே பேய் மாதிரி தெரியுற .” என்றதும் அவள் பெருமூச்சு விட்டு முறைக்க,

“அப்புறம் இந்த கண்ணு சின்ன பிள்ளைல நாலு அங்குலத்துக்கு விரியும். இப்போ பத்து அங்குலம் நீளுது.” என்றான் தனக்குள் எழும் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.

“கண்ணா!” என்று சிணுங்கியவள் காலை தரையில் உதைக்க,

“யாழு என்ன இது மாமாவ பேர்  சொல்லி பேசிக்கிட்டு மரியாதையா மாமான்னு கூப்பிடு.” மகளை அதட்டினார் சண்முகம்.

தந்தைக்கு ஒரு பதிலும் சொல்லாதவள் கண்ணனிடம் வக்கனை செய்து, “அதெல்லாம் கூப்பிட முடியாது.” என்றாள் திமிராக.

“இந்த திமிர் மட்டும் தான் மாறாம அப்படியே இருக்கு யாழு ” என்றதும் அவனிடம் புருவம் உயர்த்தியவள்,

“எதுவும் மாறல. எல்லாம் அப்படியே தான் இருக்கு.” என்றாள்.

“யாழு பேசிட்டு இருக்காம மாமனுக்கு காபி கொண்டு வா.” என்றவர் வார்த்தைக்கு  முன்பிருந்தால் மறுப்பு சொல்லி இருப்பாள், இப்பொழுது விரும்பியே சமையல்கட்டிற்கு சென்றாள்.

காபி போட்டுக் கொண்டிருந்தவள் செவியில், “சின்னப் பிள்ளைல உங்களை கண்டாலே ஓடுவா மாப்பிள்ளை. இப்ப பாரு எவ்ளோ தைரியமா பேசுறா. வருங்காலத்துல நீ என்ன கஷ்டப்பட போறியோ இவ கிட்ட.” சண்முகம் பேசிக் கொண்டிருக்கும் பேச்சுக்கள் விழுந்தது.

கடைசி வார்த்தையில் கண்ணனின் பதில் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அவள் காதுகள் துடித்தது. பதில் ஏதும் வராமல் போக அவன் சிரிப்பை உணர்ந்தவள் சிரித்துக் கொண்டாள் உள்ளுக்குள்.

காபியோடு கண்ணனை நெருங்க, மீண்டும் அவள் மனம் தடதடக்கும் ஓசையை அதிகமாக்கியது. அதை அமைதிப்படுத்திக் கொண்டு நடந்தவள் கால்கள் நகர மறுத்து அங்கபிரதேசம் செய்து கொண்டிருந்தது. மகளின் நடவடிக்கையை கண்ட பரிமளம்,

“யாழு உனக்கு பிடிக்கவே இல்லனாலும் வீட்டுக்கு வந்தவன் கிட்ட இப்படி நடந்துக்காத. கண்ணனுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவான். அவன் போற வரைக்கும் சிரிச்சு பேசு.”

‘இந்த அம்மா வேற என் நிலைமை தெரியாம அட்வைஸ் பண்ணி கழுத்தை அறுக்குது. நானே என்னமோ புதுசா அவனை பார்க்கிற மாதிரி விக்கிகிட்டு நிக்கிறேன் இவங்க வேற.’ மனதில் தன் போக்கில் தாயை அர்ச்சித்துக் கொண்டிருந்தவள் கால்கள் அவனுக்கு நெருக்கமாக நின்றது.

“சின்னப் பிள்ளைல உப்பு போட்ட மாதிரி இப்போ ஒண்ணும் பண்ணலையே!” என்றவன் சிரித்துக் கொண்டு காப்பியை வாங்கிக் கொண்டான்.

“அதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கா மாப்பிள்ளை”

மாமாவின் கேள்வியில் ஒருமுறை யாழினியை பார்த்தவன், “அது எப்படி மாமா மறக்க முடியும். இவ பண்ண எல்லா கூத்தையும் மறக்காம ஞாபகம் வச்சிருக்கேன்.” என்றவன் இப்போதும் யாழினியை பார்த்து சிரித்தான்.

‘நம்ம இவனை மறந்துட்டோம் இவன் எல்லாத்தையும் ஞாபகம் வச்சு இருக்கானே!’  மனசாட்சியிடம் சிந்தனையை கொட்டினாள்.

“அதுவும் சரிதான் கட்டிக்க போற பிள்ளைய மறக்க முடியுமா.” என்று மருமகனின் தோளை தட்டினார் சண்முகம்.

“எப்ப கண்ணா திரும்ப காலேஜ் போற.”

“பத்து நாள் லீவு அத்தை. வந்து ரெண்டு நாள் தான் ஆகுது இன்னும் எட்டு நாள் இங்க இருப்பேன்.”

‘நம்ம இன்னும் நாலு நாள்ல கிளம்பிடுவோமே! பேசாம இவன் போற வரைக்கும் லீவ்வ போற்றுவோம்.’

“அப்போ திருவிழா முடிச்சிட்டு போக சரியா இருக்கும் கண்ணா. அடிக்கடி இந்த மாதிரி ஊர் பக்கம் வா. ரொம்ப வருஷம் பார்க்காம இருக்கிறது கஷ்டமா இருக்கு.”

“புரியுது அத்தை. ஆனா படிப்ப விட்டுட்டு வர முடியல. இன்னும் ஒரு வருஷத்துல எல்லாம் முடிஞ்சிடும்.”

“அதுக்கப்புறம் இங்கயே மொத்தமா வந்துடுவீங்க தான மாப்பிள்ளை.”

“தெரியல மாமா. அதை பத்தி இன்னும் பிளான் பண்ணல. எனக்கு அங்கயே செட்டில் ஆகணும்னு ஆசை இருக்கு.”

“அப்பா அம்மாவ விட்டுட்டு எவ்ளோ நாளைக்கு தனியா இருப்ப கண்ணா.”

“வேலை செட் ஆகுற வரைக்கும் தனியா இருப்பேன் அத்தை. அப்புறம் ஆராதனாக்கு கல்யாணத்தை முடிச்சிட்டு அம்மா அப்பாவ என்கூட கூட்டிட்டு போய்டுவேன்.”

கண்ணனின் பேச்சுக்கள் யாவும் யாழினி நினைத்திருந்த எண்ணங்களுக்கு ஒத்துப் போனது. இன்னும் அவனின் எதிர்கால திட்டங்கள் என்னவென்று அறிந்து கொள்ள காதுகளை தீட்டி வைத்தாள் அவன் புறம்.

“என்ன மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டீங்க. ஒத்த பொண்ண உங்களுக்கு கட்டி கொடுத்துட்டு பக்கத்துலயே இருந்துக்கலாம்னு கனவு கண்டுட்டு இருக்கேன் நீங்க இப்படி சொல்றீங்க.” என்ற சண்முகத்தை பார்த்தவன்,

“இங்க இருந்து எட்டு மணி நேரம் டிராவல் பண்ணா அங்க வந்துடலாம் மாமா. இதெல்லாம் ஒரு விஷயம்னு கவலைப்பட்டு இருக்கீங்க.”

தந்தையின் பேச்சும் அதற்கு கண்ணன் கொடுக்கும் பதிலையும் கேட்டவள், ‘அப்பா இவ்ளோ பேசுறாரு மறுக்காம சிரிச்சுக்கிட்டே பதில் சொல்றான். அப்போ இவனுக்கும் என்னை கல்யாணம் பண்றதுல ஓகே தானா.’

“அதெல்லாம் சரி தான் மாப்பிள்ளை இங்கயே ஏதாச்சும் நல்ல ஆஸ்பத்திரியா  பார்த்து வேலைக்கு போக முடியாதா?”

“அண்ணனும் இப்படி தான் சொன்னான் மாமா. ஆனா எனக்கு ஒத்து வரும்னு தோணல. இவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சிட்டு இந்த கிராமத்துல சேவை செஞ்சுட்டு இருக்க முடியாது. ஒரு பத்து பதினஞ்சு வருஷம் நல்லா சம்பாதிச்சிட்டு அப்புறம் இங்கயே வந்துடலாம்.” என்று தன் எண்ணங்களை விளக்கினான்.

“படிச்சவங்க நல்லதா தான் யோசிப்பீங்க. எதுவா இருந்தாலும் எங்களையும் மனசுல வச்சு முடிவெடுங்க மாப்பிள்ளை.” என்றதோடு சண்முகம் தன் பேச்சை நிறுத்த,

“சரிங்க மாமா நான் கிளம்புறேன்.” அவர்களிடமிருந்து விடை பெற இருக்கையில் இருந்து எழுந்தான்.

“அட என்ன மாப்பிள்ளை! இப்ப தான் வந்தீங்க அதுக்குள்ள போறீங்க. இருந்து மதிய சாப்பாட்ட முடிச்சுட்டு போங்க.” என்றவர் தன் வீட்டு பெண்களைப் பார்த்து,

“ரெண்டு பேரும் என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க. வெரசா சமையல முடிக்க பாருங்க. மாப்பிள்ளை சாப்பிட்டு தான் போகணும்.” என கட்டளையிட்டார்.

“அதெல்லாம் வேணாம் மாமா யாழ பார்க்கலாம்னு தான் வந்தேன். இங்க தான இருக்க போறேன் இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன்.”

“இரு  கண்ணா அப்பா தான் சொல்றாங்கல.”

“யாழு! இப்ப தான் சொன்ன மாப்பிள்ளைய பேர் சொல்லி கூப்பிடாதன்னு.”

யாழினி முகம் பிதுக்கிக் கொள்ள, “விடுங்க மாமா அவ ஆசைப்படுற மாதிரி கூப்பிட்டு போகட்டும் ஒரே வயசு தான.” அவளுக்காக பேசினான் கண்ணன்.

சிரிப்போடு இந்த முறை தந்தைக்கு வக்கனை செய்தாள். அதைக் கண்டு முறைத்த சண்முகம், “கூப்பிடக் கூடாதவனை மாமான்னு கூப்பிடுறா உங்கள கூப்பிடுறதுக்கு என்ன.” என்று  மறைமுகமாக சாடினார் தேவநந்தனை.

கண்ணனுக்கு யார் என்று புரியாததால் அவன் கேள்வியாக பார்த்துக் கொண்டிருக்க, “இப்ப எதுக்கு என் மாமனை வம்பு இழுக்கறீங்க. அவர் உங்களை பத்தி ஏதாச்சும் பேசுறாரா நீங்க மட்டும் எப்ப பாரு மட்டம் தட்டிட்டு இருக்கீங்க. எனக்கு யாரை பிடிக்குதோ அவங்களை தான்  மாமானு கூப்பிடுவேன்.” என்றவள் கோபத்தில் தான் விளங்கியது கண்ணனுக்கு.

“நாக்க அடக்கு யாழு! வளந்துட்டன்னு பார்க்கிறேன் இல்லன்னா தோலை உரிச்சிடுவேன்.”

“இப்ப எதுக்கு மாமா அவள திட்டுறீங்க. அப்படி என்ன அவ தப்பா சொல்லிட்டா. என்னை விட அண்ணன் பெரியவங்க அதுவும் அவளுக்கு மாமா வேற.  மாமான்னு சொல்லாம வேற எப்படி கூப்பிட முடியும். எனக்கும் அவளுக்கும் ஒரே வயசு தான ஆகுது அதனால கூட கூப்பிட தயக்கமாக இருக்கலாம். அதுவுமில்லாம எனக்கு இந்த மாமான்னு கூப்பிடறது எல்லாம் பிடிக்கல மாமா. எதோ வயசான பீல் வருது.” என்ற மருமகனின் வார்த்தைக்கு பதில் பேச முடியாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்தார் சண்முகம்.

“உனக்கென்ன இன்னும் இள வயசா ஆகுது. இதான் சாக்குன்னு  சின்ன பையன் நானுன்னு சபைக்கு நடுவுல அறிக்க விடுற.”

“உனக்கு சப்போர்ட் பண்ணல எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். அடுத்த தடவை மாமா திட்டும் போது இன்னும் நல்லா திட்ட சொல்றேன்.”

“சொல்லு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அன்னைக்கு அடிக்க கை ஓங்குனதுக்கே மாமா கோபப்பட்டாங்க. இப்ப திட்டுனது தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ!” என்றவள் விழிகள் தந்தையை கேலி செய்ய மறக்கவில்லை.

இதற்கு மேல் பேச விட்டால் நல்ல சூழ்நிலை மோசமாகிவிடும் என்பதால், “போதும் யாழு வா சமைக்கலாம்.” மகளை அழைத்துக் கொண்டு நகர்ந்தார் பரிமளம்.

“அத்தை அவ காபி போட்டதே பெரிய விஷயம் சமைக்க கூப்பிட்டு போறீங்க.” என்றவன் கேலியில் அடுப்பங்கரையிலிருந்து வெளியில் வந்தவள்,

“சாப்பாட்டுல உப்பு அள்ளி போடுறேன் இரு.” விரல் நீட்டி மிரட்டினாள் யாழினி.

 

“தயவு செஞ்சு கொஞ்சம் நிறைய அள்ளி போடு” என்றவனை அவள் குழப்பமாக பார்க்க,

“எப்படியா இருந்தாலும் நீ செஞ்சா உப்பு, உரப்பு, காரம்னு ஒரு சொரணையும் இருக்காது. அட்லீஸ்ட் உப்பையாது தின்னுட்டு போறேன்.” என்றவனுக்கு செல்போன் ஒலி வர, பேசுவதற்காக பின்புறம் சென்றான்.

அன்னையோடு அடுப்பங்கரையில் இருந்தவள் எண்ணமெல்லாம் கண்ணன் மீது இருக்க, எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். வெகு நேரமாகியும் அவன் வராமல் இருக்க, மெல்ல நகர்ந்தாள் அவனிடம் செல்ல.

“யாழு இந்த தேங்காய கொஞ்சம் அரைச்சு எடுத்துட்டு வா.” என்றதும்,

“உனக்கு வேற வேலையே இல்லையா ம்மா! என்னால  இதெல்லாம் பண்ண முடியாது.” என்று வெடிக்கினாள் கழுத்தை.

“போற வீட்டுல இப்படி சொன்னா விளக்கு மாத்தல அடிப்பாங்க.”

“நான் என்னத்துக்கு சமைச்சு தர சொல்ற வீட்டுக்கு போக போறேன். சமைக்க ஆள் போட்டு மகாராணி மாதிரி பார்த்துக்கிற வீட்டுக்கு தான் போவேன்.”

“இப்படியே பேசிக்கிட்டு இரு கடைசில புல்லாங்குழல் ஊதுற மாதிரி புனல் எடுத்து ஊதிக்கிட்டு இருக்க போற அடுப்பை.”

“உன் வாய கழுவு ம்மா அப்படி எல்லாம்  எதுவும் நடக்காது.”

யாழினியின் கால்கள் அங்கு இருக்க மறுத்தது. அன்னையிடம் இதற்கு மேல் பேச பொறுமை இல்லாமல் அவள் வேகமாக ஓடி விட, மனதில் திட்டிக்கொண்டார் மகளை பரிமளம்.

“இதுக்கு எதுக்கு பேபி ஃபீல் பண்ற. உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடு. தாலி கட்டிட்டான்ற ஒண்ணுக்காக பொண்ணுங்க வாழ்க்கை முழுக்க அடிமையா இருக்கணும்னு அவசியம் இல்ல. எனக்கு இந்த மாதிரி அடிமை தனமா வச்சிருக்க ஆம்பளைங்கள சுத்தமா பிடிக்காது.” என்றவனுக்கு பின்னால் நின்றவள் இந்த வார்த்தை எல்லாம் கேட்டு உள்ளம் மகிழ்ந்தாள்.

எதிர்ப்புறத்தில் இருந்து எந்த பதில் வந்ததோ தெரியவில்லை…இவன் உரைத்தான், “கண்டிப்பா பேபி என்னை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண அவ இஷ்டத்துக்கு  விடுவேனே தவிர எனக்காக அவ சந்தோஷத்தை கெடுக்க மாட்டேன்.”

….

“ஹா! ஹா!! கண்டிப்பா கையில இல்ல தலையில வைச்சு தாங்குவேன்‌ என் மனைவியை.”

….

“பேச்சுக்கு சொல்லல சத்தியமா சொல்றேன் பேபி. என் பொண்டாட்டிய ஒரு நாளும் அடிமை மாதிரி நடத்த மாட்டேன். எங்க தனிப்பட்ட விஷயத்துல கூட அவ விருப்பம் ரொம்ப முக்கியம் எனக்கு.”

மனதில் யாழினி வைத்த இடத்திலிருந்து மிகவும் உயர்ந்து விட்டான் கண்ணன். அவள் எதிர்பார்ப்பதும் இவை தானே! தந்தை பலமுறை அன்னையை அதட்டி தனக்கு கீழ் வைத்திருப்பதை கண்டு எரிச்சலுற்று இருக்கிறாள். அவருக்கு பிடித்ததை மட்டுமே செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் பொழுது ஒரு நாளும் தாயைப் போல் தவிக்கக்கூடாது என்று எண்ணி இருக்கிறாள்.

மனைவியிடம் மட்டுமல்ல பிள்ளைகளிடமும் சண்முகம் கடுமையாகவே நடப்பார். அவர் விருப்பத்தை தாண்டி தான் தனிப்பட்டவர்களின் விருப்பம் என்பது போல் எல்லா முடிவையும் அவரே எடுப்பார். தேவநந்தனுக்கு அடுத்து அவள் ஒருவனை உயர்வாக எண்ணினாள் என்றால் அது கண்ணனே!

இன்னும் நிறைய பேசினான். அவன் எதிர்கால கனவுகளும் மனைவியோடு அமைக்க இருக்கும் வாழ்க்கையையும் பேசிக்கொண்டே செல்ல, அவள் மனம் அப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் எப்படி இருக்கும் என்று கனவு காண ஆரம்பித்தது. நேற்று வரை பிடிக்காத ஒருவன் இன்று பிடித்துப் போனான்.

பேசிவிட்டு திரும்பியவன் திடுக்கிட்டு நகர்ந்து நின்றான் யாழினியை பார்த்து. அதைக் கூட உணராமல் அவள் அப்படியே நின்று இருக்க, “ஏ லூசு! இப்படியா பின்னாடி நிற்கிறது. காட்டேரி தான்  நிக்குதுன்னு நினைச்சு பயந்துட்டேன்.” என அவள் தலையில் தட்டினான்.

“ஆஹான்! என்ன சொன்ன கேட்கல.” திரு திருவென்று யாழினி முழித்துக் கொண்டிருக்க,

“உனக்கு என்ன தான் ஆச்சு வந்ததுல இருந்து இதே ரியாக்க்ஷனை கொடுத்துட்டு இருக்க.”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல.”

“அதுசரி ஏதோ பாம்பு கடிச்சிடிச்சுன்னு எங்க அண்ணனை அடி வாங்க வச்சியாமே. எருமை மாடு வயசாகியும் இன்னும் பாம்பு கடிக்கும் பூச்சி கடிக்கும் வித்தியாசம் தெரியலையா உனக்கு.”

“யாருக்கு எருமை மாடு வயசாகுது.”

“வேற யாருக்கு உனக்கு தான். உன்னால என்னோட அண்ணன் தான் தேவை இல்லாம அடி வாங்கி இருக்கான். மாமா மேலயும் உன் மேலயும் செம கோவம் எனக்கு.”

“பயத்துல என்ன கடிச்சதுன்னு தெரியாம ஒரு வார்த்தை சொல்லிட்டேன். மாமா தான் அதுக்கு தூக்கிட்டு ஓடுச்சு.” என்றவள் பாவமாக முகத்தை வைத்தாள்.

“உன்ன பத்தி எனக்கு தெரியாதா! சின்ன விஷயமா இருந்தாலும் நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவ. சும்மாவே அண்ணனுக்கு நீ முகம் சுழிச்சா தாங்காது. கத்தி கலாட்டா பண்ணவும் அவரும் பயந்து ஓடி இருப்பாரு.” அவள் செய்ததையும் அங்கு நடந்ததையும் பார்க்காமலே கண்ணன் கூற,

“நல்லவேளை கூட மாமா இருந்தாங்க. நீ இருந்திருந்தா கல்ல தூக்கி போட்டு கொன்னுருப்ப போல அதான் சாக்குனு.” அவன் வார்த்தையை கேட்ட பின் சலித்துக் கொண்டு பேசினாள்.

“செஞ்சாலும் செஞ்சி இருப்பேன். அண்ணன் அளவுக்கு எனக்கு பொறுமையும் கிடையாது. உன்னை தூக்கிட்டு ஓடுற அளவுக்கு தெம்பும் கிடையாது.”

“அதான! என் மாமன் அளவுக்கு  தெம்பு ஏது உனக்கு. “

“ஹேய்! எனக்கு என்ன தலை எழுத்து எருமை மாட்ட தூக்கிட்டு ஓடணும்னு.”

“இங்க பாரு ரெண்டு தடவ எருமை மாடுன்னு சொல்லிட்ட. இன்னொரு தடவை சொன்ன அவ்ளோ தான்.”

“சொன்ன என்ன பண்ணுவ எரும மாடு.” என்றதும் வேக வேகமாக மூச்சுகளை வெளியிட்டவள்,

“நீதான் எரும மாடு. மூஞ்சிய பாரு கண்ட கருமத்தையும் போட்டு விலக்கி வைச்ச பாத்திரம் மாதிரி வந்திருக்க. என் மாமன் கிட்ட சொன்ன அவ்ளோ தான் பேச வாய் இருக்காது.” என்று திட்ட துவங்கினாள்.

“பொறாமை உனக்கு யாழு…” என்றவனுக்கு மீண்டும் ஃபோன் வர, “ஒரு நிமிஷம் இரு  பேசிட்டு வந்துடுறேன்.” என்று நகர்ந்து விட்டான்.

***

“நல்லா சாப்பிடுங்க மாப்பிள்ளை. என்ன ஒவ்வொரு பருக்கையா எடுத்து சாப்பிட்டுட்டு இருக்கீங்க.” சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கண்ணனை விழுந்து விழுந்து கவனித்தார் சண்முகம்.

“நீங்க இவ்ளோ வச்சா எப்படி மாமா சாப்பிட முடியும்.” இலையில் இருக்கும் அத்தனை பதார்த்தங்களையும் பார்த்து திண்டாடிப் போனான்.

“வயசு பிள்ளை இது கூட சாப்பிடலன்னா எப்படி மாப்பிள்ளை. ” என்றவர் இன்னும் கறி துண்டுகளை அள்ளி இலையில் வைத்தார்.

அவன் போதும் என்று மறுத்துக் கொண்டிருக்க, அதை எல்லாம் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.

“மாப்பிள்ளை சாப்பிடும் போது அங்க நின்னுட்டு இருக்க, வந்து பரிமாறு.” என்றதும் அவன் பக்கத்தில் அமர்ந்தவள் அனைத்தையும் செய்தாள்.

கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரம் கிருஷ்ணன் வீட்டுக்கு வர, “என்ன மச்சான் எப்ப வந்தீங்க.” என்று நலம் விசாரித்தான்.

“இப்ப தான் கொஞ்ச நேரம் ஆகுது” என்று விட்டு, “நீங்களும் சாப்பிட வாங்க.” அழைத்தான் கிருஷ்ணனை.

“நீங்க சாப்பிடுங்க மச்சான் கை கழுவிட்டு வந்துடுறேன்.” என்று கிருஷ்ணன் நகர்ந்து கொள்ள, கவனிப்பு நின்ற பாடில்லை கண்ணனுக்கு.

“காலையில ஆராதனா வந்திருந்தாங்க வீட்டுக்கு.” சாப்பிட அமர்ந்த கிருஷ்ணன் அப்போது தான் முதல் வாய் எடுத்து வைத்திருக்க, சாப்பாடு புரை ஏறியது.

“யாழு அண்ணனுக்கு தண்ணி எடுத்து வை”  என்றவர்,

“எப்பமா ” என மனைவியிடம் விசாரித்தார் சண்முகம்.

“காலையில வந்திருந்தாங்க. கொஞ்ச நேரம் இருந்துட்டு  காலேஜுக்கு கிளம்பிட்டா.” என்றவர் மகனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.

“உன்ன தான் அண்ணா ஆராதனா வீட்டுக்கு வந்ததும் வராதுமா கேட்டா.” என்ற தங்கையின் வார்த்தையில் மீண்டும் அவனுக்கு புரை ஏறியது.

அவன் நடவடிக்கைகளை கண்டு சிரித்த யாழினி, “அது மட்டும் இல்ல உன்ன பத்தி பக்கத்துக்கு பக்கம் பெருமையா வேற பேச்சு. இந்த வீட்டுலயே எங்க எல்லாரையும் விட உன்ன தான் ரொம்ப புடிச்சிருக்கு போல.” என்று உசுப்பி விட்டாள் அவன் முக பாவனைகளை.

கிருஷ்ணன் எதையும் காட்டிக் கொள்ளாமல் சாப்பிடும் வேலையில் இருக்க, “அப்பா உங்கள கூட ரொம்ப ஆசையா விசாரிச்சா. இந்த வீட்டு மேல அவளுக்கு ரொம்ப பாசம். ரொம்ப நல்ல பொண்ணு ப்பா.” என்று தந்தையின் முகத்தை ஆராய, அவரும் புன்னகை முகமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஆமாங்க வார்த்தைக்கு வார்த்தை பெரிய மாமா பெரிய மாமான்னு ஒரே பேச்சு உங்கள பத்தி.” பரிமளமும் மகளுக்கு தோதாக வருங்கால மருமகளின் பல்லவியைப் பாடினார்.

“வருங்கால மாமனாருக்கு இப்பவே ஐஸ் வைக்கிறா என் மருமக வேற ஒண்ணும் இல்ல.”  என்று கைவிசிரியை வீசிக்கொண்டு சிரித்தவர்,

“யாழு கண்ணன் கல்யாணத்தை பேசி முடிச்சிட்டு, கிருஷ்ணன் ஆராதனா கல்யாணத்தை மச்சான் கிட்ட பேசணும்.” என்றதும் இந்த முறை புரை ஏறியது கண்ணனுக்கு.

தலையில் தட்ட சென்ற யாழினி மனம் அதை செய்ய முடியாமல் தடுமாற, “பொறுமையா சாப்பிடுங்க மாப்பிள்ளை” என்றார் சண்முகம்.

இலையில் இருக்கும் பாதி சாப்பாட்டை அப்படியே  வைத்து விட்டான் கண்ணன். அதைப் பார்த்தவர் இன்னும் சாப்பிட சொல்லி வற்புறுத்த, “ஐயோ மாமா! இதுவே ரொம்ப அதிகம். உங்களுக்காக தான் சாப்பிட்டேன். டயட் இருக்கும் போது இவ்ளோ சாப்டா சதை போட்டுடும்.” என்று அவரிடமிருந்து தப்பித்தவன் கைகளை கழுவிக் கொண்டான்.

“ஊருக்கு போற வரைக்கும் தினமும் மதியம் இங்க சாப்பிட வந்திடுங்க மாப்பிள்ளை.” என்பவருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் முழிக்க,

“ஆமா மச்சான் மதியம் இனிமே இங்க தான் உங்களுக்கு சாப்பாடு.” என்றான் கிருஷ்ணனும்.

“பார்க்கிறேன் மாமா. ஊருக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது இங்க இருக்க பிரெண்ட்ஸ்ங்கள போய் பார்க்கணும். அண்ணனுக்கு வேற ஏதோ முதுகுல காயம் பட்டதா பெரியம்மா சொல்லிட்டு இருந்தாங்க அங்கயும் போகணும். ஆராதனாக்கு படிப்பு முடிய போகுது அடுத்து என்ன படிக்க வைக்கணும்னு யோசிக்கணும். நிறைய வேலை இருக்கு மாமா எல்லாத்தையும் முடிச்சிட்டு கண்டிப்பா வரேன்.” என்று நேரிடையாக மறுக்காமல் மறைமுகமாக மறுத்தான்.

“நமக்கு ஆகாதவங்க வீட்டுக்கு அதிகம் போகாதீங்க மாப்பிள்ளை.”

“உங்களுக்கு தான் மாமா அவங்க ஆவாதவங்க. எனக்கு அவங்க பெரியம்மா. சின்ன பிள்ளையில இருந்து தூக்கி வளர்த்து, பெத்த அம்மாவ விட அதிகம் பாசம் காட்டினவங்க. ஒரு நாளும் பெரியம்மாவ ஒதுக்கி வச்சிட்டு மத்த உறவை தலையில தூக்கி வைக்க மாட்டேன்.” வெடுக்கென்று பதில் சொன்னான்.

வேறு யாராக இருந்திருந்தால் உடனே பதில் கொடுக்கும் சண்முகம் மருமகனை எதிர்த்து வாதிட முடியாமல் மௌனமாக இருந்து கொண்டார்.

அவரின் முக மாறுதல்களை கவனிக்காதது போல், “நான் வரேன் மாமா.” என்றான்.

என்ன கோபம் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு இன்முகத்தோடு வழி அனுப்பினார் மருமகனை

***

கண்ணன் சென்றதும் யாழினி மனமும் அவன் பின்னால் சென்று விட்டது. மெத்தையில் படுத்தவள் மனம் அவனைப் பற்றிய சிந்தனைகளில் உலாவி கொண்டிருந்தது. இத்தனை நாள் பிடித்தம் கொள்ளாதவன் இன்று ஒரே நொடியில் பிடித்துப் போன மாயத்தை எண்ணி அவள் வியந்து கொண்டு இருக்க, தான் நினைப்பது சரியா தவறா என்ற எண்ணமும் கூடவே எழுந்தது. 

கண்ணனை திருமணம் செய்து கொண்டால் குடும்பத்திலும் பிரச்சினை வராது அதே நேரம் தான் ஆசைப்பட்டது போல் இந்த ஊருக்கு வராமல் வாழலாம் என்று ஒரு மனமும், தோற்றம் மட்டும் போதுமா அவன் குணம் எப்படி இருக்குமோ! என்று மற்றொரு மனமும் ஒரே நேரத்தில் அவளை இம்சை செய்து கொண்டிருந்தது.

‘அதான் யார் கிட்டயோ போன் பேசும் போது சொன்னானே… எனக்கு வர பொண்டாட்டிய அடிமை மாதிரி நடத்த மாட்டன்னு.’ கேள்வி கேட்ட மனதிற்கு இவளே பதில் கொடுக்க,

‘இப்ப பேசுற வாய் நாளைக்கு பேசும்னு என்ன ஆதாரம் இருக்கு.’ மறு கேள்வி கேட்டது மனம்.

‘கண்ணன பத்தி ரொம்ப இல்லனாலும் கொஞ்சம் தெரியும். அவன் அந்த மாதிரி குணம் மாறுற ஆள் கிடையாது.’

கண்ணன் பற்றிய நினைவுகளை யோசித்துக் கொண்டே சாப்பிட மறந்து தூங்கிப் போனாள் யாழினி. நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது யாருக்கோ திருமணம் நடப்பது போல் தோன்றியது. கனவுகளில் மிதந்து கொண்டிருந்தவள் அது யார் என்று ஆராய முற்பட, மெல்ல கண்ணனின் காட்சிகள் உயிர் பெற்றது.

தூக்கத்திலும் கூட அவள் உணர்வுகள் ஏகத்துக்கும் எகிறி குதித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருக்கும் பெண்ணை பார்க்க முயன்றாள். குடும்பம் மொத்தமும் சூழ்ந்து கொண்டு நின்றிருக்க, கண்ணனின் பக்கத்தில் மணப்பெண் அலங்காரத்தில் நின்றிருந்தாள் யாழினி.

அதுதான் அவள் கண்ட கடைசி காட்சி. அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் கனவில் இருந்து. கனவுகளைப் பற்றி சிந்தித்து கொண்டிருந்தவள் மனதில் பயமும், ஆசையும் சேர்ந்து உருவாக, உறுதியாக முடிவெடுத்து விட்டாள் கண்ணனை திருமணம் செய்து கொள்ளலாம் என்று.

சிறந்த கண்களை மூடாமல் அப்படியே படுத்திருந்தாள் யாழினி. அடுத்து என்ன செய்வதென்று அவள் மனம் யோசித்துக் கொண்டிருந்தது. முதலில் அவனிடம் பேசி பழக வேண்டும் என்று முடிவெடுத்தவள் அதை செயல்படுத்த கிளம்பினாள் சின்ன அத்தை வீட்டிற்கு.

“ஏண்டி மதியம் கூட சாப்பிடலையே எங்க கிளம்புற இப்போ.” அரக்க பறக்க ஓடிக்கொண்டிருக்கும் மகளை பரிமளம் அதட்ட,

“எதுக்கு ம்மா இப்படி காட்டு கத்து கத்துற நான் பக்கத்துல தான இருக்கேன்.” சிடுசிடுத்தாள்.

“கேள்வி கேட்டா பதில் சொல்லுடி.”

“அத்தை வீட்டுக்கு போறேன்.” என்றவள் காலணிகளை மாட்ட,

“எத்தனை தடவை யாழு உனக்கு சொல்றது அந்த வீட்டு பக்கம் போக கூடாதுன்னு. நமக்கும் அவங்களுக்கும் ஒத்து வராதுன்னு பல தடவை சொல்லிட்டேன். அதையும் மீறி போயிட்டு இருக்கிறது நல்லா இல்ல.” மகள் அன்னம் வீட்டிற்கு தான் போகிறாள் என்று தவறாக நினைத்து சண்முகம் திட்ட துவங்கினார்.

“வள்ளி அத்தை வீட்டுக்கு போறேன் ப்பா.” என்றாள் பொறுமையாக.

உடனே சண்முகத்தின் முகம் சர்க்கரையைக் கண்ட எறும்பை போல் குதுக்களித்தது. மகள் அருகில் எழுந்து வந்தவர் சிரித்த முகத்தோடு, “அப்படியாடா! பார்த்து பத்திரமா போயிட்டு வா.” என வழி அனுப்பினார்.

சற்று முன் காட்டிய முகத்திற்கும் இந்த முகத்திற்கும் உள்ள வித்தியாசங்களை அறிந்த யாழினி தந்தையை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

“என்னம்மா அப்படி பார்க்குற”  தலையை தடவிக் கொண்டு கேட்டார்.

“எப்படி ப்பா நிமிஷத்துக்கு நிமிஷம் இப்படி உடனே மாறுறீங்க. வள்ளி அத்தை மாதிரி தான உங்களுக்கு அன்னம் அத்தையும். இப்ப போறது வேணா வள்ளி அத்தை வீட்டுக்கா இருக்கலாம் அடுத்து நான் நிக்க போற வீடு அன்னம் அத்தையோடது.”

யாழினி வார்த்தையை கேட்டவர் பக்கத்தில் நின்றிருக்கும் மனைவியிடம், “என்னடி பொண்ணு வளர்த்து வச்சிருக்க நான் எது சொன்னாலும் எதிர்த்து பேசுறா. சொல்லி வை ஒவ்வொரு தடவையும் இதே மாதிரி அமைதியா இருக்க மாட்டேன். எனக்கு இருக்குறது ஒரே ஒரு தங்கச்சி வள்ளி மட்டும் தான். அவ புள்ள மட்டும் தான் இவளுக்கு மாமா. அவன தான் இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன். தேவை இல்லாம அங்க இங்க அலையாம வாழ போற வீட்டுல நல்ல பேர் எடுக்க சொல்லு.” என்றவர்,

“எனக்கு பொறந்துட்டு தகுதி தராதரம் இல்லாம எப்படி தான் பழக முடியுதோ! ”  தனக்குத்தானே புலம்பி கொண்டு சென்று விட்டார்.

அவர் தலை மறையும் வரை அமைதியாக இருந்த பரிமளம், “கூறு கெட்டவளே! உங்க அப்பா தான் இப்படி பேசுறாருன்னு தெரியுதுல. அப்புறம் எதுக்கு அவரையே சீண்டிக்கிட்டு இருக்க. போறவ அமைதியா போக வேண்டியது தான.” என்று திட்டி சலித்தவர் இப்போது கணவனைப் போல புலம்பிக்கொண்டே நடந்தார்…

“பெரிய பொல்லாத தகுதி தராதரம் பார்த்துட்டாரு மனுஷன். என் மருமகன் குணத்துக்கு முன்னாடி அதெல்லாம் கால் தூசின்னு எப்போ தான் புரியப் போகுதோ!.” என்று.

பெற்றவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த யாழினி தலையை சுவற்றில் முட்டிக் கொள்ளாத குறையாக வெளியேறினாள்.

***

வீரமாக வள்ளி வீடு வரைக்கும் வந்தவளுக்கு உள்ளே செல்ல இல்லாமல் போனது தைரியம். வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள் கண்ணன் இருக்கிறானா என்று. வாசலில் சின்ன மாமா செருப்பை பார்த்தவள் அதற்குப் பக்கத்தில் புதிதாக இருக்கும் செருப்புகளை பார்த்து குழம்பினாள்.

‘இது என்ன இவ்ளோ செருப்பு இருக்கு. உள்ள யாரு இருக்கான்னு தெரியலையே…போகலாமா வேணாமா’ தனக்குள் குழம்பிக் கொண்டிருக்க,

“உள்ள போகாம இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க.” அவள் பின்னால் இருந்து குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பினாள்.

அவள் அலறியதை பார்த்த ஆராதனா சத்தமிட்டு கொக்கலிக்க, “பிசாசு! முன்னாடி வந்து கேட்க தெரியாதா.” என்று முறைத்தாள் .

“எனக்கு என்ன தெரியும் நீ இவ்ளோ பெரிய பயந்தாங்கோலியா இருப்பன்னு. உங்க அண்ணனுக்கு மேல இருப்ப போல இந்த விஷயத்துல நீ.”

“அதை நீ சொல்லாத தாயே! அன்னைக்கு தான் உன் தைரியம் எந்த லட்சனம்னு பார்த்தேனே”

“அது வேற… இது வேற…”

“எல்லாம் ஒண்ணு தான். உன் லட்சணம் எனக்கு நல்லா தெரிஞ்சிருச்சு சீன் போடாத.”

“சரி, நான் அதுக்கு பயந்தேன் நீ இதுக்கு பயந்த முடிஞ்சு போச்சு. பாபா கதம் கதம்.” என்றவள் சமாதான தூதாக கை நீட்ட,

“மீசையில மண் பட்டா பரவால்ல மண்ணுல தான் மீசையே இருக்கு.” என்றவளை கண்டு முறைத்து பஸ்பம் ஆக்கினாள் ஆராதனா.

உள்ளிருந்து ஒரே சிரிப்பு சத்தங்களாக கேட்டுக் கொண்டிருக்க, “யாரு இருக்கா உள்ள.” விசாரித்தாள் யாழினி.

“அண்ணனோட பிரெண்ட்ஸ். நாளையில இருந்து திருவிழா ஆரம்பம் ஆகுதுல அதை  பார்த்துட்டு போக வந்திருக்காங்க.”

“ஓஹோ….!” என்று யாழினி யோசித்துக் கொண்டு நிற்க,

“என்ன இழுக்குற வா உள்ள போகலாம்.” அவள் கை பிடித்து அழைத்துச் சென்றாள் ஆராதனா.

“வேணாம் ஆரு நான் இன்னொரு நாளைக்கு வரேன்.”

“வாசல் வரைக்கும் வந்துட்டு உள்ள வராம போற.”

“இல்ல ஆரு இன்னைக்கு தான் பிரண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நான் எதுக்கு சங்கடமா. பெரிய அத்தை வீட்டுக்கு போறேன் விடு!”

தான் சொன்னால் கேட்க மாட்டாள் என்பதை உணர்ந்து ஆராதனா, “அம்மா உங்க மருமக வாசல் வரைக்கும் வந்துட்டு வீட்டுக்கு வராம போறா.” என்று கத்தினாள் உரக்க.

வேகமாக வாயைப் பொத்திய யாழினி, “அடியே! கொழுப்பா டி உனக்கு.” என்று திட்டி முடிப்பதற்குள் மகளின் குரல் கேட்டு வெளியில் வந்த வள்ளி மருமகளை இழுத்துச் சென்றார் உள்ளே.

ஆண் பெண் என மொத்தம் எட்டு பேர் இருந்தார்கள் அங்கு. புதிதாக பார்த்தவர்களை கண்டு யாழினி தயக்கத்தோடு நின்று கொள்ள, “இவ யாழினி. என்னோட மாமா பொண்ணு. ” அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் கண்ணன்.

“ஹாய்!” என ஒரு சிலர் அங்கு அவளுக்கு பதில் கொடுக்க, சிரிப்போடு நிறுத்திக் கொண்டாள்.

மூன்று பெண்கள் ஐந்து ஆண்களோடு கண்ணன் வெகு நேரமாக கதை அளந்து கொண்டிருந்தான். அதையெல்லாம் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி

“வந்ததுல இருந்து ஒரு வார்த்தை கூட பேசலயே உன் மாமா பொண்ணு. எங்க எல்லார் கிட்டயும் பேச கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கியா.” என்று கண்ணனின் தோழி நித்தியா சிரித்துக் கொண்டே கேட்க, யாழினி அதற்கும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தாள்.

“நீ வேற நித்தி. அவளை பத்தி உனக்கு தெரியாது.”

“உன்ன பத்தி கூட தான் எங்களுக்கு தெரியாது.” என்று ஒரு கவுண்டர் போட்டான் கண்ணனின் தோழன் கணேசன்.

“இதெல்லாம் ஒரு காமெடின்னு சொல்ற பார்த்தியா த்தூ” என்று நித்யா அவனை வார,

“இந்த அசிங்கம் தேவையாடா!” தன் பங்கிற்கு கேலி செய்தான் கண்ணன்.

வள்ளி அனைவருக்கும் இனிப்பு பதார்த்தங்களை கையில் நிறைக்க, “எனக்கு வேணாம் அத்தை இப்ப தான் சாப்பிட்டு வந்தேன்.” தனக்கு கொடுத்ததை மறுத்து விட்டாள் யாழினி.

“நாங்க இருக்கிறதால கூச்சப்படாதீங்க சிஸ்டர் நல்லா சாப்பிடுங்க.” என்ற கணேசன் வார்த்தையில் அவள் திரும்பிக் கண்ணனை பார்த்தாள்.

“சிஸ்டர் இவன் இத்தனை நாளா எங்க கூட பழகியும் இப்படி ஒரு அழகான அத்தை பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்ல.” என்று நித்தியா அவன் தோளில் தட்டி சிரிக்க, பதிலுக்கு கண்ணனும் அவள் தலையில் கொட்டினான்.

“அத்தை பொண்ணு இருக்கும் போது எதுக்குடா இவள டச் பண்ற பேட் பாய். ” என்ற கணேசன் யாழினியிடம்,

“உன் மாமாக்கு எங்க எல்லாரையும் விட நித்யா தான் ரொம்ப க்ளோஸ். ஃப்யூச்சர்ல உனக்கு போட்டியா வந்தாலும் வந்துடுவா. இப்பவே கண்ணனை அடக்கி வை.” என்ற நண்பனின் வார்த்தையில் கண்ணன் முறைக்க, யாழினி சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தாள் அவன் பக்கத்தில்.

“என்ன சிஸ்டர் இதுக்கும் சிரிக்கிறீங்க. இந்த மாமன் பையன் பொஸசிவ்னஸ் எதுவும் உங்களுக்கு இல்லையா!” என்றவனுக்கு ‘இல்லை’ என்று தலையாட்டினாள் யாழினி.

அதன்பின்னும் கண்ணனின் தோழர் தோழிகள் விடாமல் யாழினியை வம்பு இழுத்துக் கொண்டிருக்க, சிரித்த முகமாகவே இருந்தாள்.

“இப்படி சிரிச்சு அமைதியா நிக்கிறான்னு தப்பா நினைச்சுடாதீங்க. சரியான வாலு இவ. சின்னப் பிள்ளையில இவள கண்டாலே நான் ஓடுவேன் அந்த அளவுக்கு சேட்டை பண்ணுவா.” என்றவனின் கையை கிள்ளியவள்,

“சும்மா இரு கண்ணா.” என்றாள் ரகசியமாக.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
16
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *