தெம்மாங்கு 12
அன்புக்கரசனின் அத்தியாயம் முடிந்துவிட்டது. அதை ஏற்றுக் கொள்ளத்தான் எவராலும் முடியவில்லை. ‘முற்றும்’ என்ற பகுதியைக் கிழித்துப் போட்டுத் ‘தொடரும்’ என்ற வாசகத்தை எழுத மனம் துடித்தது. அழித்து எழுத முடியாத காகிதத்தில் அல்லவா அவன் உயிர் பிரிந்திருக்கிறது.
மருத்துவமனையில் இருந்தவனுக்கு அனைத்துச் சலுகைகளும் நடந்தது. கடைசியாக ஒவ்வொரு மனிதனுக்கும் நடக்கும் சலுகை அது. அவன் உத்தரவு இன்றி உடலைக் கிழித்துப் போதும் என்ற வரை ஆராய்ச்சி செய்தவர்கள், மாணிக்கம் அணு அணுவாய் உழைத்து உயிர் கொடுத்த உடலைத் தைத்து வெள்ளைத் துணியில் மூடினார்கள்.
மயக்கத்தில் இருந்து எழுந்தவள், அவனைக் காணச் சகிக்காது தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மயக்கத்திற்குச் சென்றாள். அவளை அங்குச் சேர்த்துப் பிடிக்கக் கூட ஒரு நாதி இல்லை. பெற்றவர்களைப் பார்த்ததும் வெறிகொண்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து துரத்தி விட்டாள். இந்திரா தோழியின் மகளைத் தாங்க முயல,
“உங்க நிழல் கூட என் மேலயும், என் புருஷன் மேலயும் படக்கூடாது. நீங்க எல்லாரும் ஒரே இனம். என் புருஷன் சாவுக்குக் காரணமானவங்க மட்டும் இல்ல, அவங்களைச் சுத்தி இருக்க யாரையும் நான் மன்னிக்க மாட்டேன். என் சாபத்தை வாங்கிக்காம மரியாதையாப் போயிடுங்க.” என்றவளைச் சமாதானப்படுத்த முடியாது அவரும் தன் கணவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
வெளியில் வரும் பொழுது மகன் இருக்கும் கோலத்தைப் பார்த்த தாய் உள்ளம், “குமரா…” என நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள முயன்றார்.
“யாராது என்னை நெருங்கனும்னு நினைச்சீங்கன்னா, அவன் கூடவே என்னையும் புதைக்க வேண்டியது வரும்.”
மகன் வார்த்தையில் அரண்டவர், சமாதானப்படுத்த முயற்சிப்பதற்குள் மனைவியை அழைத்துச் சென்று விட்டார் பேச்சியப்பன். அவருக்குள் ஆயிரம் சந்தேகங்கள். எதிலும் தலையிட முடியாமல் மகனுக்கான நேரத்தைக் கொடுக்க முடிவெடுத்தவர் தோழனிடம் பேச எண்ணினார். எல்லாம் முடிந்த பின் பேச என்ன இருக்கிறது? இனிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதைத் தாமதமாகத்தான் காலம் இவருக்கு உணர்த்தும்.
சந்தானமும், மலைக்குச்சி கிராமத்தில் இருக்கும் சில தெரிந்தவர்கள் மட்டும்தான் மாணிக்கத்திற்கு உதவினார்கள். உயிர்த்தோழன், உயிர் இருந்தும் இல்லாத நிலையில் பிரம்மை பிடித்தவன் போல் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள, அழுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாமல், ஆசை ஆசையாக மணம் முடித்தவன் இருக்கும் கோலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தேனிசை தேவி.
இரவெல்லாம் பல உயிர்களை அழ வைத்துப் படுத்திருந்த அன்புக்கரசன் மறுநாள் மதியம்போல் தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டான். அவனுக்கென அனுப்பி வைக்கப்பட்ட வாகனத்தில் ஏற முயன்றவனைத் தடுத்துக் கட்டி அணைத்தவள்,
“உன்னை நான் தான் இப்படி ஆக்கிட்டேன். என்னைக் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, இந்த நிலைமை உனக்கு வந்திருக்காது. இந்தப் பாவிய மன்னிச்சிடு… இந்தப் பாவிய மன்னிச்சிடு அன்பு.” கதறினாள்.
“ராசா… என் அழகு ராசா… என் மக பெத்த ரத்தினமே… தாத்தனைத் தனியா விட்டுட்டுப் போக எப்படி மனசு வந்துச்சு? ஒத்த உசுரையும் பறி கொடுத்துட்டு எத்தனை காலத்துக்கு உயிர் வாழப் போறன்னு தெரியலையே. மண்ணுக்குப் போறவன் உன்ன மண்ணுக்கு அனுப்பப் போறனே… இதைப் பார்க்கவா இத்தனை வருஷம் உன்னக் கஷ்டப்பட்டு வளர்த்தேன். என் உசுரு என்னை விட்டுப் போதே. என் உசுர எடுத்துக்கிட்டு அந்தக் கடவுள் உன்னை வாழ வச்சிருக்கக் கூடாதா…”
அரசு ஊழியர்கள் அவர்களைத் தடுத்து விட்டு அன்புக்கரசனை வாகனத்தில் ஏற்ற, அழுதவாறு இருவரும் உடன் சென்றனர். ஓரமாக அமர்ந்திருக்கும் குமரவேலனைப் பார்த்த சந்தானம்,
“ஏறு” என்றிட, அவனை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் விவரிக்க முடியாத துயரம்.
சிறு நீர்ப்படலம் கூடக் கண்ணில் உருவாகவில்லை. இமைக்காமல் பார்த்தவன் விழிகளுக்குள் எந்த உணர்வுகளும் இல்லை. அகன்ற முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை. உணர்வுகளைத் துடைத்து வைத்து, வெற்று உடம்பாகத் தன்னைப் பார்ப்பவனுக்கு என்ன பதில் கொடுப்பது என்று எதிரில் இருந்தவருக்குத் தெரியவில்லை. அழுத்தமான மனதோடு அமர்ந்திருக்கிறான் என்பதை மட்டும் அறிந்தார்.
இறுக்கி வைத்த கண்ணீருக்குப் பின் கடலளவு பாரம் இருப்பதை அவரும் அறிவார். மாய்ந்தவனுக்காகப் பருவம் எய்தும் வயதிற்கு முன்னரே பாய்ந்து அடித்தவன் அல்லவா இவன்! தான் இல்லாத பொழுது இதுபோன்று நடந்திருந்தாலே மனம் தளர்ந்து போயிருப்பவன், கண் முன்னால் நடந்ததை எப்படி ஜீரணிப்பான்? இந்தத் திடமான உடலுக்குள் அன்புக்கரசன் தானே உயிர். உயிரைத் தொலைத்த உடல் என்ன முகபாவனையைப் பறைசாற்றும்.
“வாய்யா… வந்து ஏறு.”
“நான் எதுக்கு ஏறனும்?”
“உன் நண்பனுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய வேணாமா?”
“அங்க இருக்குறது அன்புவா…”
“என்ன குமரா இப்படிக் கேக்குற?”
“அது என் அன்பு இல்ல! அவன் வேலைக்குப் போய் இருக்கான். என்னைப் பார்க்க அப்புறமா வருவான். நீ போயி நாங்க வரும்போது பாட்டுப் போட்டு விடு கிழவா. நேத்தே உன்ன ஒரு வழி பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தான். இன்னைக்கு ரெண்டு பேரும் வந்து அந்தப் புது ரேடியோவோட சேர்த்து உன்னையும் உடைப்போம்.”
தினமும் வரும்பொழுது, போகும்பொழுது எல்லாம் பாடலைப் போட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தவர் மனம் தாங்காது அழத் துவங்கி விட்டார். இப்படி ஒரு நிலைமையைப் பார்ப்போம் என்பதைச் சிறிது கூட யோசிக்காதவர் இனி அந்தப் பாடலைப் போட முடியாத நிலையை ஏற்றுக்கொள்ளத் துணியவில்லை. பல வருடங்களாக அவருக்குள் இருந்த பழக்கம் இது. புதுப்புது ரேடியோவை இவர்களுக்காகவே செலவழித்து வாங்கினார். அதற்கெல்லாம் அர்த்தமற்ற நிலை வரும் என்று அறியாதவர் அவன் தோளைத் தட்டிக் கொடுக்க,
“யோவ் கிழவா! உன் நடிப்புக்கு நாங்க மயங்க மாட்டோம். நீ வீட்டுக்குப் போ. இன்னைக்குக் கல்லக் கொண்டு கதையை முடிக்கிறேன்.” என்றான்.
“உன் நிலைமை புரியுது குமரா. இப்படி ஒன்ன என்னாலயே ஏத்துக்க முடியாமப் போகும்போது உனக்கு ரொம்பக் காலம் எடுக்கும். ஆனாலும், அவனுக்கு நீ தான எல்லாம். உன் நண்பன் போகும் போது தனியா அனுப்பப் போறியா? மாணிக்கத்தால எல்லாத்தையும் எடுத்துச் செய்ய முடியாது. ஆக வேண்டியதைப் பாரு.”
“ஓஹோ! என் அன்புவ வழி அனுப்பி வைக்கணுமா? என்னை விட்டுப் போக மாட்டேன்னு அடம் பிடிப்பானே. என்னாலயும் அவனை அனுப்பி வைக்க முடியாது. எங்கிட்டக் கொடுக்கச் சொல்லிடு கிழவா. என் ஆயுசு வரைக்கும் பக்கத்துலயே வச்சுப் பார்த்துக்குறேன்.”
“அவன் உடம்பத் தான் வழி அனுப்பி வைக்கப் போறியே தவிர உசுர இல்லை. அது உன் பக்கத்துல தான் உட்கார்ந்து இருக்கும். ரெட்டையா வாழ்ந்த நீங்க, இனி ஒத்தையா வாழப் போறீங்க. நிஜத்தைப் புரிஞ்சுக்கிட்டு எழுந்து வா… நீ செஞ்சாதான் அவன் நிம்மதியா கிளம்புவான்.”
“கிழவா…” எனப் பேச வந்தவனைத் தடுத்த சந்தானம் எழ வைக்க, “நேத்துக் கொஞ்சம் குடிச்சிட்டேன், அதுல கோச்சிக்கிட்டான். என்ன அன்பே…” என்று கேட்க, உள்ளே இருந்தவர்களின் அழுகை அதிகரித்தது.
ஒரு வழியாக அவனைச் சமாதானம் செய்து மலைக்குச்சி கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். வாகனம் வந்ததுமே ஊர் மக்களின் ஓலங்கள் உச்சியைத் தொட்டது. தலை விரித்த கோலமாகச் சொந்த பந்தங்கள் கண்ணீர் வடிக்க, ஆண்கள் நடந்ததைப் பற்றி அங்கும் இங்கும் கூட்டமாகப் பேசிக் கொண்டிருந்தனர். வண்டியில் ஏற மறுத்தவனைச் சந்தானம் தனியாகத் தன் வாகனத்தில் அழைத்து வந்தார்.
நண்பனின் வரவிற்கு முன்னால் மலைக்குச்சி கிராமத்தில் கால் வைத்தவன், தன்னைத்தானே ஒதுக்கிக் கொண்டு, என்றும் நண்பனோடு அமர்ந்து பேசும் திண்ணையில் அமர்ந்து கொண்டான். அவனுக்குள் பல வருடச் சிந்தனைகள். ஆண்டாண்டு காலமாக அமர்ந்து பேசிய இடத்தில் இன்று தனியாக அமர்வதைச் சகித்துக் கொள்ள முடியாமல் அப்படியே சுவரில் தலை சாய்ந்து விட்டான்.
வந்தவனை இறக்கி ஓய்வெடுக்க வைத்தனர். விடாமல் ஒட்டி வந்த தாலி கட்டியவள், பல கண்களுக்குப் பரிதாபமானாள். அரசல் புரசலாக, இவை அனைத்தும் கௌரவ நண்பர்கள் வேலை என்று பேசிக் கொண்டனர் ஊர்மக்கள். அந்தப் பேச்சுக்கள் அனைத்தும், அங்கு வந்த கௌரவ நண்பர்களோடு நின்று கொண்டது.
ஊரே என்ன நடக்கப் போகிறது என்று பதைபதைக்கப் பார்த்துக் கொண்டிருக்க, மாலையோடு வந்த கௌரவ நண்பர்கள், மனம் உறுத்தாமல் அன்புக்கரசன் காலடியில் நின்றார்கள். மாணிக்கம் பேரனைப் பார்த்தபடி ஐஸ் பெட்டியில் தலை வைத்துக் கொண்டார். அவரால் நடந்ததையும், வந்து நின்றவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. நான்கு அடி, உடல் நோகாமல் நடக்கக் கூட முடியாத நிலையில் சண்டை பிடிக்க எங்கிருந்து தெம்பு வரும்?
அமர்ந்திருந்தவன் கண்ணில் ரௌத்திரம் நெருப்பாய் எரிந்தது. காட்ட முடியாமல் அமர்ந்திருந்தவனுக்குப் பதிலாகப் பாய்ந்து இருவரின் சட்டையும் பிடித்தவள் பின்னுக்குத் தள்ளி விட்டாள். இரு அடி தள்ளி நின்றவர்களைக் கண்டு எச்சில் துப்பி,
“எவனாது இன்னொரு அடி எடுத்து வச்சீங்க, என் புருஷனுக்குத் துணைப் பிணமா போவீங்க. உங்களை மாதிரி ஒரு அருவருத்த ஜென்மத்தை நான் பார்த்ததே இல்லை. என்ன பிறவிடா நீங்க. நல்லா நடமாடிட்டு இருந்தவனை இப்படி ஆக்கிட்டு, மாலை போட வந்திருக்கீங்க. என் புருஷன் இங்க இருந்து போறதுக்குள்ள உங்களை ஜெயிலுக்குள்ள வைக்கல… அன்புவோட பொண்டாட்டி இல்ல நான்.” என்று மீண்டும் எச்சில் துப்பினாள்.
“நாங்க எதுவும் பண்ணல” என்ற பேச்சியப்பனைக் கை நீட்டி எச்சரித்தவள்,
“அசிங்கமா பேசிடப் போறேன். மரியாதையா போங்கடா இங்க இருந்து…” என்ற மகளைப் பார்த்தபடி வந்து நின்றார் பவானி.
“என் புருஷன் இல்லாம நான் வாழப் போற மாதிரி, புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டுத் தன்னந்தனியா வாழப் போற பாரும்மா. அதுக்கு உடந்தையா இருந்த உங்களுக்கும் அதே நிலைதான்.” என இந்திராவிடமும் தன் கோபத்தை உமிழ்ந்தவள்,
“இவங்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டுத் தான் என் புருஷனுக்குச் செய்ய வேண்டியதைச் செய்வேன். அதுவரைக்கும் சடங்கு, சம்பிரதாயம்னு ஒருத்தனும் கிட்ட வரக்கூடாது.” என்று அங்கிருந்து கிளம்பியவள் காவல் நிலையத்தில் நின்றாள்.
கௌரவ நண்பர்கள் மீது புகார் கொடுத்தவள், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல் நிலையத்தை விட்டு நகர மாட்டேன் என்று தர்ணா செய்ய ஆரம்பித்தாள். விஷயம் கௌரவ நண்பர் காதிலும் மலைக்குச்சி கிராமத்திலும் விழுந்தது. எது நடந்தாலும், அசைவின்றிக் குமரவேலன் அப்படியே அமர்ந்திருக்க, பெரிய பிரச்சனை ஆவதற்குள் தீர்க்க நினைத்த அதிகாரிகள், சம்பவத்தை நடத்திய ஆறு பேரில் இருவரைக் கைது செய்தனர்.
பிடித்து வந்த இருவரையும் தாக்க முயன்ற தேனிசை தேவியை அடக்கிய காவலர்கள், மீதம் இருப்பவர்களையும் பிடித்து விடுவதாகக் கூறிக் கிளம்ப வற்புறுத்தினர். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யும் வரை தன் நடவடிக்கை ஓயாது என ஒட்டாரமாக அங்கேயே அமர்ந்திருந்தாள். அன்புக்கரசனைக் காண வந்த அனைவரும், தேனிசையைக் காண காவல் நிலையத்திற்கு வந்தனர்.
அவளோடு ஒரு சில நல்ல மனம் படைத்த மனிதர்கள் கை கோர்த்தனர். அன்பு போன்ற நல்ல மனிதனைச் சிதைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். கலவரமானது மலைக்குச்சி காவல் நிலையம். இவை தொடர்ந்து நீடித்தால் தங்களுக்குப் பிரச்சனை வரும் என்று கலந்து ஆலோசித்த காவலர்கள் கௌரவ நண்பர்களைத் தொடர்பு கொண்டார்கள்.
இதைத் நாங்கள் செய்யவே இல்லை என்று அடித்துச் சாதித்தவர்களைச் சமாதானப்படுத்தினர். “நீங்க செய்யவே இல்லனாலும், அவங்க உங்களை தான் முதல்ல அரெஸ்ட் பண்ணச் சொல்றாங்க. நீங்க ஸ்டேஷனுக்கு வராம அவங்க இங்க இருந்து போக மாட்டாங்க. ஏற்கனவே அவங்க மேரேஜ் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்து பஞ்சாயத்து ஆகியிருக்கு. இது மேலிடம், மீடியான்னு போச்சுன்னா பிரச்சனை ரொம்பப் பெருசாகிடும். அதனால இப்போதைக்கு ஸ்டேஷனுக்கு வாங்க. மீதிய அப்புறம் பேசிக்கலாம்.” என்று.
“என்ன பொன்ராசு பண்ணலாம்?”
“இருக்கும்போதும் நமக்குப் பிரச்சனையைக் கொடுத்தவன், செத்தும் கொடுக்கிறான். காலச் சுத்துன பாம்பு போல அவன்.”
“நம்ம மானம், மருவாதி எல்லாம் மொத்தமா போகப்போகுது. கைகட்டி நின்னவனுங்க எல்லாம், போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிட்டு வந்தா கைதட்டிச் சிரிப்பானுங்க.”
“அதை நினைச்சுத் தான் பேசாம உட்கார்ந்து இருக்கேன் பேச்சி. நம்ம வக்கீல் கிட்டப் பேசிப் பார்க்கலாமா.”
“இப்படி நடக்கும்னு தெரிஞ்சதுமே பேசி வச்சிட்டேன். அவரும் இப்போதைக்குப் பிரச்சனை பண்ணாம ஸ்டேஷனுக்குப் போங்க, நான் பார்த்துக்கிறேன்னு சொல்றாரு.”
“அந்த நாய் செத்ததுக்கு நீங்க ஸ்டேஷனுக்குப் போகணுமா? வர முடியாதுன்னு சொல்லுங்க. என்ன பண்ணிக் கிழிக்கிறாங்கன்னு பார்த்துடலாம்.” என்ற கருப்பன் தங்கையை மனதில் நினைத்து,
“முடியப் பிடிச்சுத் தரதரன்னு அவளை இழுத்துட்டு வந்திருக்கனும். தாலி அறுத்துக் கடமையை முடிக்கட்டும்னு விட்டது தப்பாப் போச்சு. நியாயம் கேட்கிறாளாம், நியாயம்! கழுதையால குடும்ப மானமே போச்சு. அவனோட சேர்த்து இவளையும் வெட்டிப் புதைச்சு இருக்கணும்.” அவதூறாகப் பேசினான்.
“என்னப்பா, கூடப் பிறந்தவளை இப்படிப் பேசுற. என்னதான் அவ பண்ணது தப்பா இருந்தாலும் வாழ்க்கைய இழந்துட்டு நிற்கிறா. இனிமே அவ வாழ்க்கை என்னாகுமோன்னு கவலை இல்லையா உனக்கு.” என்ற அன்னையைக் கண்டு பல்லைக் கடித்தவன்,
“நான் எதுக்குக் கவலைப்படனும்? எப்போ அவ வீட்டை விட்டு ஓடினாளோ, அப்பவே அவளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்படி ஒரு நிலைமையில அவளைப் பார்க்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன். என்னையும், எங்க அப்பாவையும் அசிங்கப்படுத்துனதுக்கு நல்ல தண்டனையை அனுபவிச்சுட்டா. இப்பதான் என் மனசுக்குக் குளுகுளுன்னு இருக்கு.” என்றவனைப் பார்க்கப் பயமாக இருந்தது பவானிக்கு.
“உங்களுக்கும், அன்பு சாவுக்கும் சம்பந்தம் இருக்கா? தேனிசை சொல்ற மாதிரி நீங்க தான் அவனைக் கொன்னீங்களா?”
அங்கு அவர்களோடு நின்றிருந்த இந்திரா, பல மணி நேரங்களாகத் தனக்குள் ஓடிக் கொண்டிருந்ததைப் பட்டென்று சபையில் உடைத்து விட, வேர்த்துக் கொட்டியது சம்பந்தப்பட்டவர்களுக்கு. கேள்வி கேட்டவரின் முகத்தைப் பார்க்க முடியாமல் தடுமாறியவர்களைச் சந்தேகத்தோடு தோழிகள் நோக்க,
“தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணப் போற? எங்களை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிடுவானுங்கன்னு புலம்பிக்கிட்டு இருக்கோம், அவனை யாரு கொன்னதுனா முக்கியம்.” எனச் சிடுசிடுத்த பேச்சியப்பன் தன் நண்பனைப் பார்த்து,
“இதுக்குத் தான், ஆம்பளைங்க விஷயத்தைப் பொம்பளைங்களுக்கு நடுவுல பேசக் கூடாதுன்னு சொல்லுவாங்க.” என்றார்.
“நீங்க பேசுறதைப் பார்த்தா பயமா இருக்கு.”
“இந்தாடி! வீட்ல எதுவும் வேலை இல்லையா? எதுக்கு இங்க உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்க. கிளம்பி வீட்டுக்குப் போ, ஆத்தா தனியா இருக்கும்.”
“இப்ப எதுக்கு அண்ணிய விரட்டி விடுறீங்க? எனக்கும் உங்க மேல தான் சந்தேகமா இருக்கு. என் பொண்ணு பண்ண தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனை ரொம்ப அதிகம். வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கிற அவளைப் பார்க்க எப்படி முடியுது உங்களால. கொலை பண்ற அளவுக்கு இரக்கமில்லாதவங்களா நீங்க”
“அம்மா… என்னை வெறி ஏத்திப் பார்க்காத. அது உனக்கு நல்லது இல்லை. சும்மா என் பொண்ணு, என் பொண்ணுன்னு புராணம் பாடிட்டு இருந்த, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”
“என்னடா பண்ணுவ? பெத்தவளையே இப்படி மிரட்டுற. உங்க அப்பா கூட இருந்திருந்து, நீயும் மனுஷங்கறதையே மறந்துட்ட. உண்மையச் சொல்லுங்க அவனக் கொலை பண்ணது நீங்க தான.”
அங்கிருந்த நாற்காலியை எட்டி உதைத்தவன், “இதுக்கு மேல அம்மான்னு கூடப் பார்க்க மாட்டேன்.” என எரிந்து விழ,
“கருப்பா!” சடாரென்று அழைத்தவர் கண்ணால் கண்டித்தார்.
தந்தையின் கண் அசைவிற்குப் பின்னால் தன் நிலையைக் கட்டுப்படுத்தியவன் தாயிடம் பேசுவதைத் தவிர்க்க, பெற்ற பிள்ளை கோபம் கொண்டதையும், கணவன் அடக்கியதையும், உடன் நின்றிருந்தவர் அமைதியாக நின்றதையும், பார்த்த பவானி தன் தோழியைப் பார்த்தார். அவரும் இவரை மௌனமாகப் பார்க்க, இருவரும் மனதில் பேசிக் கொண்டனர்.
கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த அவனை, நல்லபடியாக அனுப்பி வைக்க வேண்டும் என முடிவெடுத்த அங்கிருந்த ஆண்கள் மாணிக்கத்திடம் உத்தரவு கேட்க, ஓரமாக அமர்ந்திருந்தவனைப் பார்த்தார். அவனோ வந்து அமர்ந்த நொடி முதல் ஆருயிர் நண்பனை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
தேனிசை தேவியை அழைத்து வருமாறு கூறியவர் பேரனைப் பார்த்தபடி தலை கவிழ்ந்து கொண்டார். எவ்வளவு நேரம் ஆனாலும் நகர மாட்டேன் என்று அடம் பிடித்தவளைச் சமாளிக்கத் திணறியது காக்கி உடைகள். அவர்களுக்கு, கௌரவ நண்பர்களை அழைத்து வருவதைத் தவிர வேறு வழி இல்லை. அவர்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டவர்கள், பலமுறை கையூட்டு வாங்கியவர்களைப் பணிவோடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
“நான் போனதுக்கு அப்புறம் இவங்களை வெளிய விட்டிங்கன்னா, எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டேன். எனக்கு என் புருஷன் சாவுக்கு நீதி வேணும். அவரக் கொன்னவனுங்க துடிதுடிச்சுச் சாகுறதை நான் பார்க்கணும். அதுவரைக்கும், இந்தத் தேனிசை தேவி ஓய மாட்டா.” என்ற சபதத்தோடு வெளியில் வந்தவள் முன்பு நின்றான் கருப்பன்.
உடன் பிறந்தவனைப் பார்த்ததும் கோபத் தீ கொழுந்து விட்டு எரிய, “இவ்ளோ நடந்தும் அடங்க மாட்டல்ல நீ…” என அவன் பல்லைக் கடிக்க,
“இதுல உனக்கும் பங்கு இருக்குன்னு தெரியும். முடிக்க வேண்டியதை முடிச்சிட்டு வந்து உனக்கு ஒரு முடிவு கட்டுறேன்.” என அவனைக் கடந்தாள்.
கணவன் நீதிக்காகப் போராடிய கண்ணகி, மலைக்குச்சியில் கால் வைத்ததுமே வலுவை இழந்து விட்டாள். அன்புவின் மனைவியாக மட்டுமே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள். அவளைப் பார்த்ததும் சற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓலங்கள் துவங்கியது. ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் பூமாதேவிக்கு விட்டுக் கொடுத்தவள் கணவனைக் கண்டு துடிதுடிக்க, தன் பேரனை நம்பி வந்து நிர்க்கதியாக நிற்கும் அவளைச் சேர்த்தணைத்துக் கொண்டு அழுதார் மாணிக்கம்.
பொழுது சாய்வதற்குள் கொண்டு செல்ல வேண்டும் என்றதும், அனுப்ப மறுத்து அவன் நெஞ்சில் சாய்ந்தவள் நிலை அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதையும் கரைத்தது. எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அதே நிலையில் அமர்ந்திருந்தான் அங்கு ஒருத்தன். பல பெண்கள் வந்து தேனிசை தேவியைத் தூக்க முற்பட, பசை போல் அவன் மார்பில் ஒட்டிக் கொண்டாள்.
“அந்தப் பொண்ண எழுப்புய்யா…” என மாணிக்கத்திடம் கூறினார் சந்தானம்.
தத்தித் தத்தி நடந்து அவள் தோள்களைப் பிடித்தவர், தெம்பு இல்லாமல் குமுறி அழ, “உங்க பேரனை எந்திரிக்கச் சொல்லுங்க தாத்தா.” கோரிக்கை வைத்து மன்றாடினாள்.
தான் அழைத்தால் பேரன் வந்து விடுவான் என்ற நம்பிக்கை இருந்தால், எப்போதோ அழைத்து இருப்பாரே. முடியாத செயலை எப்படிச் செய்ய நினைப்பார். தன் துயரங்களைத் தனக்குள் அடக்கிக் கொண்டவர் இளம் விதவையை எழுப்ப, மெல்ல நடந்தேறத் துவங்கியது சடங்குகள்.
அதையெல்லாம் பார்க்கச் சகிக்காது மயங்கிச் சரிந்தாள் தேனிசை. இவ்வளவு சங்கடங்கள் அங்கு நடந்தேறிக் கொண்டிருக்க, யாருக்கோ வந்த விதி என்று அமர்ந்திருக்கும் பேரனைப் பார்த்தார் மாணிக்கம். விஷயம் காதில் விழுந்த முதல் இந்த நொடி வரை குமரனை இப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காத பேரனின் எண்ணங்கள் புரியவில்லை அவருக்கு. அவருக்கு மட்டுமல்ல, அங்கிருந்த எவருக்கும் புரியவில்லை.
அவன் நடவடிக்கையில் சுற்றி இருந்தவர்கள் கூடச் சலசலத்தனர். நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒன்றாகச் சுற்றித் திரிந்தவனைக் கட்டியணைத்துக் கூட அழாத இவன், என்ன நண்பன் என்ற விமர்சனங்கள் எல்லாம் வந்த வண்ணம் இருந்தது. குமரவேலன் மீதான எண்ணங்கள் சகித்துக் கொள்ள முடியாததாக தான் இருந்தது. கட்டியவளும், தூக்கி வளர்த்த தாத்தனும் அழும் பொழுது இவன் அழாமல் இருப்பதை வைத்து அவ்வளவுதான் இவன் உறவு என்று பட்டம் சூட்டினர்.
“இவன் கூட இருந்தும் சாக விட்டுட்டான் பாரு. இவனையா நண்பன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். கொஞ்சம் கூடக் குற்றஉணர்ச்சி இல்லாம உட்கார்ந்து இருக்கான்.” என ஒருவர் பேசியதைக் கேட்டவாறு கண் திறந்தாள் தேனிசை தேவி.
பேரன் பக்கம் மெல்ல அடியெடுத்து வைத்தவர், “ராசா” என அவன் முகம் உயர்த்தி,
“என் பேரனை ஏன் ராசா நீ காப்பாத்தல. என் பேரனை இந்த நிலைமைக்கு விட்டுட்டியே. இவனை இப்படிப் பார்த்தும், ஒரு சொட்டுக் கண்ணீர் விடாம இருக்க எப்படி மனசு வருது. குமரா குமரான்னு வாய்க்கு வாய் சொல்லுவானே, அந்தப் பாசத்துக்காகவாது ஒரே ஒரு சொட்டு விடக் கூடாதா?
ரத்தம் நிறையப் போச்சுன்னு சொன்னாங்களே… உண்மையா ராசா? எப்பவாது சின்னதா காயம் வந்து ரத்தம் வந்தா கூட ராத்திரி எல்லாம் புலம்பிக்கிட்டு இருப்பான். அப்படிப்பட்டவன் ரத்தத்தை ஏன் ராசா போக விட்ட. உன் அன்புக்கு நீ செஞ்சது நியாயமா? நீ இப்படி அவனுக்குச் செஞ்சி இருக்கலாமா? உன்ன நம்பி தான அவன அனுப்பி வச்சேன். உயிரோடு அனுப்பி வச்சவன இப்படிப் பிணமா கைல கொடுத்து இருக்கியே… இதுக்கா அவனக் கூட்டிட்டுப் போன. இப்படி ஒன்னப் பார்க்கவா கூட சுத்துன…” என்ற அவரின் கேள்வி எல்லாம் நேரடியாக இதயத்தைக் கிழித்தது.
தெம்மாங்கு ஒலிக்கும்…