1,743 views

 

தரணீஸ்வரன் தூக்கம் கலையாதவாறு அறையை விட்டு வெளியில் வந்தவள் மாமனார் மாமியார் இருவருக்கும் காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தாள். கைகள் வேலையை கவனித்தாலும் சிந்தனைகள் கணவனை சுற்றி ஓடியது. இந்த இருபது நாட்களாக அவளுக்குள் பெரும் மாற்றம். இப்பொழுதும் கணவன் மீதும் அவன் வீட்டு ஆட்கள் மீதும் கோபம் இருக்கிறது. அதெல்லாம் காட்ட முடியாத அளவிற்கு சூழ்நிலை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது அவளை.

அதிலும் தரணீஸ்வரன் கடந்த நாட்களாக துடிப்பதை பார்த்து எப்படியாவது தேற்ற வேண்டும் என்று எண்ணினாளே தவிர சிறு துளி கூட அவன் மீது கோபம் வரவில்லை. அங்கும் இங்கும் சுற்றி அவளின் கடந்த காலத்திற்கு வந்து நின்றது.

***

சிவானி பெற்றோர்கள் வீட்டிற்கு செல்வதாக கூற, அவள் மனக்காயத்திற்கு மருந்திட நினைத்தவன் சம்மதித்தான். அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து தன்னுடைய காரில் அனுப்பி வைத்தான். காரில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இருப்பதால் பத்திரமாக திருநெல்வேலி சென்று விட்டாளா என்பதை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அவள் பெற்றோர்கள் இருக்கும் இடத்தில்  கார் நின்றது. உடனே மனைவியை அழைத்தான். அவளும் நன்றாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள். மனைவி இல்லாது நாட்களைக் கடத்த சங்கடப்பட்டான். தாலி கட்டி வாழ்ந்தவள் வீட்டில் இல்லாமல் எந்த ஆண் தான் சுகமாக வாழ்வான். இரண்டு நாட்கள் சென்றதும் மீண்டும் அழைத்து எப்பொழுது வருவாய் என்று விசாரிக்க,

“கொஞ்ச நாளைக்கு போன் பண்ணி என்னை டார்ச்சர் பண்ணாத. என் பிள்ளை இல்லாத சோகத்தை நான் மறக்கணும். மனசு லேசானா நானே வரேன்.” என்றதோடு அவன் அழைப்பையும் நிறுத்தி வைத்து விட்டாள்  அழைக்காதவாறு.

வீட்டில் பெற்றோர்களும் பேசவில்லை மனைவியும் பேசவில்லை. தன்னுடன் இருந்த அனைத்தும் காணாமல் போனது போல் உணர்ந்தவன் மனம் முதல் முறையாக ஒருவித அழுத்தத்திற்கு ஆளானது. அடுத்து இரண்டு நாட்கள் ஓட, காரின் ஜிபிஎஸ் கருவி அதிக வேகத்தை கொடுப்பதாக ஒலி எழுப்பியது. உடனே அதை ஆராய்ந்தான்.

அதிகளவு வேகத்தில் மனைவி எங்கோ சென்று கொண்டிருக்கிறாள் என்பதை பார்த்தவன் அதிர்ந்தான். உடனே அவளுக்கு அழைக்க, ஏற்கப்படவில்லை. அவளின் பெற்றோர்களுக்கு அழைக்க, அவர்களின் நம்பரும் ஏற்க மறுத்தது அழைப்பை. இவ்வளவு வேகம் ஆகாது என்ற பயத்தில் அவன் மனைவியை எண்ணி பரிதவித்தான்.

ஒரு கட்டத்தில் அவனால் தாக்குப் பிடிக்க முடியாமல் போக உடனே புறப்பட்டான் திருநெல்வேலிக்கு. பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் பொழுது கார் வேறொரு இடத்திற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தது. நடுவில் ஒவ்வொரு இடமாக நிறுத்தி இருபது நிமிடங்கள் கடந்த பின் ஓட்டம் பிடித்தது. மாமியார் வீட்டிற்கு செல்வதற்கு பதில் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்தவன் கருவியின் உதவியால் பின் தொடர்ந்தான்.

கார் கேரளாவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தது. விடாமல் காரில் எங்கு சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்ற யோசனையோடு அவனும் பின் தொடர்ந்தான். கிட்டத்தட்ட நெருங்கி விட்டான் கேரளாவை. அதற்குள் கேரளாவை விட்டு வெளியேற முயன்றது கார். இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான் வந்து கொண்டிருப்பதால் காத்துக் கொண்டிருந்தான் அவளை பிடிக்க.

சில நொடிகளில் தன்னுடைய கார் கண்ணில் பட, அதை தடுத்து நிறுத்த முயன்றவனின் நடவடிக்கையை தவிடு பொடியாக்கிய கார் அசுர வேகத்தில் பறந்தது. உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஒதுங்கி நின்றவன் விழிகளில் கார் சீட்டில் இருக்கும் ஒருவன் விழுந்தான். தன்னுடைய காரில் யாரோ ஒருவன் இருப்பதை அறிந்து யோசனைக்கு ஆளானவன் வேகமாக பின் தொடர்ந்தான்.

டோல்கேட் ஒன்றில் நிற்க வேண்டிய கட்டாயத்தால் கார் நின்றது. உடனே ஓடியவன் காரில் இருப்பவனை இழுத்து கீழே தள்ளினான். மனைவியைப் பற்றி விசாரிக்க, அவன் தப்பி ஓட முயன்றான். சிவானிக்கு எதுவோ ஆகிவிட்டது என்ற பதட்டத்தில் தப்பிக்க விடாமல் தனக்குள் சிறை பிடித்துக் கொண்டவன்,

“சிவா எங்க? அவளை என்ன பண்ண? ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லிடு.” என்று அடித்து நொறுக்கினான்.

முதலில் முரண்டு பிடித்தவன் வாங்கிய அடியில் உடலை காப்பாற்றிக்கொள்ள உண்மையை சொன்னான்… “அவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியாது சார். நான் வேலை பார்க்கிற முதலாளிக்கு அவங்க நல்ல பழக்கம். சென்னைய விட்டு அவுட்டர் வந்ததும் இந்த கார் எடுத்துட்டு திருநெல்வேலி போக சொன்னாங்க. முதலாளி சொன்னதால நானும் எடுத்துட்டு வந்துட்டேன்.” என்று.

‘இது என்ன புது குழப்பம்!’ என்று குழம்பிய மனநிலையில் இருந்தவன், “எதுக்காக உன்ன எடுத்துட்டு போக சொன்னாங்கன்னு தெரியுமா?” எனக் கேள்வி எழுப்பிட,

“தெரியாதுங்க சார். அவங்க வீட்டு அட்ரஸ் கொடுத்து அங்க கார நிறுத்தி வைக்க சொன்னாங்க. நான் சொல்லும் போது காரை கொண்டு வந்து கொடுக்கணும்னு  சொல்லி காசு கொடுத்தாங்க சார்.  நான்தான் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதுன்னு ஊர் சுத்தி பார்க்கலாம்னு கிளம்பிட்டேன்.” என்றவன் வார்த்தையை முதலில் நம்பவில்லை தரணீஸ்வரன்.

எத்தனை முறை அடித்து கேட்டாலும் சத்தியம் செய்யாத குறையாக அவன் சொன்னதையே சொல்ல, அவனுக்குள் பல சிந்தனை. அதெல்லாம் மனைவிக்கு எதிரானது அல்ல. குழந்தை இல்லாத சோகத்தில் தன்னை விட்டு எங்கோ சென்று விட்டாளோ என்ற பயத்தில் இருந்தது.

தன் கையில் சிக்கியவனுக்கு பணத்தை கொடுத்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடு அனுப்பி வைத்தான். காரை மீட்கும் படியான ஓரிடத்தில் விட்டவன் மாமியார் வீட்டிற்கு சென்றான். மருமகனை கண்டதும் அவர்கள் வேண்டா வெறுப்பாக நலம் விசாரிக்க, நாசுக்காக மனைவி இங்கு வந்தாளா என்று விசாரித்தான்.

அவனுக்கு சாதகமான பதில் கிடைக்காததால் வேலை விஷயமாக வந்ததாக வெளியேறினான். எங்கு சென்று அவளை தேடுவது என்று தெரியாமல் குழம்பிப் போனான். சோகத்தோடு வீடு வந்தவன் சண்டையை மறந்து அன்னையிடம் அடைக்கலம் ஆனான். அவர்களுக்கும் மகன் மீது கோபம் இருந்தாலும் வருத்தப்படும் பொழுது ஆறுதல் சொல்வது மட்டுமே சரி என்பதால் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

அடுத்த ஒரு நாளும் ஓடி விட, “இப்படியே இருந்தா எதுவும் ஆகாது. அவளோட ஃப்ரெண்ட்ஸ், குடும்பம்னு  எல்லார்கிட்டயும் விசாரிச்சாச்சு எங்கயும் இல்ல. யாரும் கண்டுபிடிக்க கூடாதுன்னு தான் சொல்லாம போயிருக்கா. எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் இருக்காரு. அவர பார்த்து உன் பொண்டாட்டி விபரத்தை சொல்லு சீக்கிரமா விசாரிச்சு சொல்லுவாரு.” என்ற ஆதிலட்சுமி உளவு தொழில் செய்யும் நம்பகமான ஆள் ஒருவரை அறிமுகப்படுத்தினார் மகனுக்கு.

அவரை சந்தித்தான் தரணி. நுணுக்கமான கேள்விகள் முதற்கொண்டு அனைத்திற்கும் பதில் கொடுத்தான். இதை முடித்து தருவதாக வாக்குறுதி கொடுத்தவர் மறுநாள் நள்ளிரவு மூன்று மணிக்கு அவனை அழைத்தார். மனைவி சிந்தனையில் இருந்தவன் உடனே எடுக்க,

“உங்க மனைவி ஏற்காடு பக்கம் இருக்காங்க.” என்று தகவல் கொடுத்தார்.

போன உயிர் வந்தது போல் உணர்ந்தவன் மேற்கொண்டு விசாரிக்க, “அவங்க இங்க வந்து ஒரு வாரம் ஆகுது. விடுதில தங்கி இருக்காங்க. நாளைக்கு ராத்திரி கிளம்ப போறதா தகவல் வந்திருக்கு.” என்றார்.

மனைவியிடம் பேச வைக்க முடியுமா என்ற கோரிக்கையை அவன் கேட்க, “சாரி சார், அது என்னோட வேலை கிடையாது. நீங்க கேட்ட தகவலை கொடுத்துட்டோம் நாங்க கிளம்புறோம்.” என்றவர்களிடம் கெஞ்சி,

“ப்ளீஸ் சார்! நான் வரதுக்குள்ள என் மனைவி எங்கயாது கிளம்பிட போறாங்க. கொஞ்சம் எனக்காக அவங்களை கண்காணிச்சுட்டு இருங்க.” என்ற கோரிக்கை வைத்து புறப்பட்டான்.

தெரிந்தவர் மகன் என்பதால் உளவு பார்க்க வந்தவரும் சம்மதித்தார். சென்னையிலிருந்து புறப்பட்டவன் வந்து சேர்ந்தான் ஏலகிரிக்கு. முதலில் தனக்கு உதவியதற்காக அவருக்கு நன்றி சொல்ல,

“இது என்னோட வேலை சார். உங்க மனைவி இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். முடிஞ்ச அளவுக்கு அமைதியா பேசி வீட்டுக்கு கூட்டிட்டு போக பாருங்க.” என்று விட்டு விடை பெற்றார்.

சிவானி பார்க்கப் போகும் ஆர்வத்தில் அவள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றான். அங்கு இருப்பவர்கள் விசாரிக்க, எதற்கும் ஒரு அறை இருக்கட்டும் என்று தங்கும் அறையை வாடகைக்கு எடுத்தான். அவள் தங்கியிருக்கும் அறை எண் எதுவென்று தெரியும் என்பதால் நேராக அங்கு சென்றான். தொந்தரவு செய்யாதீர்கள் என்ற பலகையோடு அறை கதவு சாத்தப்பட்டிருந்தது.

அதையும் மீறி கதவை தட்டினான். திறக்கப்படவில்லை அவள் கதவு. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் நின்றிருக்க, விடுதியின் பணியாளர் வந்து விசாரித்தார். நாசுக்காக நழுவியவன் அவரிடமே சிவானியைப் பற்றி விசாரித்தான். அவர் ஏதோ முரண்பாடான தகவல் சொல்ல, நன்றாக திட்டி விட்டான் கோபத்தில்.

விடுதி நிர்வாகம் சூழ்ந்து கொண்டது அவனை. தங்கியிருக்கும் விருந்தாளி பற்றி தகவல் சொல்லியதால் பணியாளருக்கும் திட்டு விழுந்தது. அவரை இரண்டு நாள் பணி நீக்கம் செய்த விடுதி உடனே தரணியை வெளியேற உத்தரவிட்டது. அவனுக்கும் அங்கு இருக்க பிடிக்காது போனதால் வெளியேறினான் மனைவியை வெளியில் பார்த்துக் கொள்ளலாம் என்று.

விடுதியின் வெளியில் காத்திருந்தவன் ஒரு வழியாக மனைவியை கண்டு விட்டான். கூடவே தன்னுடைய நண்பன் சூர்யாவையும். இருவரையும் ஒன்றாக பார்த்தவன் குழம்பி நிற்க, காரில் புறப்பட்டார்கள். தவறாக எதுவும் இருக்காது என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டவன் பின் தொடர்ந்தான். கார் ஆள் இல்லாத இடத்தில் நின்றது. அவனும் சற்று தூரத்தில் நிற்க, இருவரும் இறங்கினார்கள்.

மலைகளை நோக்கி அவர்கள் நடை இருக்க, அவர்களை நோக்கி தரணியின் நடை இருந்தது. அப்போது கூட அவன் மனம் துளி கூட மனைவியை சந்தேகப்படவில்லை. என்னவோ காரணம் இருக்கும் என்று பின் தொடர்ந்து சென்றவன் இதயம் செயல் இழந்து விட்டது இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பதை பார்த்து. மலை உச்சியில் இருந்து பாறை உருண்டோடி தன் நெஞ்சில் விழுந்தது போல் துடித்துப் போனான்.

அதை அறியாதவர்கள் யாரும் தங்களை கவனிக்கவில்லை என்று காதல் சேட்டைகள் செய்வதாக எண்ணி தவறான சேட்டைகள் செய்து கொண்டிருக்க,  மண்டியிட்டான் இருக்கும் இடத்திலேயே தரணீஸ்வரன். பார்க்கக் கூடாத காட்சிகளை அவர் கண்கள் முழுவதுமாக பார்த்தது. கேட்கக்கூடாத வசனங்களையும் கேட்டது.

ஒரு மணி நேரங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் காரில் பயணப்பட, மலை தேவதைகள் அசுரனிடம் சிக்கிக் கொண்டது போல் அதிர்ந்து தரணியை பார்த்தார்கள் அவன் அழுகை சத்தத்தில். தான் கண்டது நிஜம் தானா என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டவன் நிஜமாக இருக்கக் கூடாது என்றும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பார்த்ததும் கேட்டதும் முழுவதும் உண்மை என்பதை ஆழ்மனம் எப்படி உணர்த்துவது என்று தெரியாமல் அவனோடு கண்ணீர் வடித்தது.

***

நள்ளிரவு நேரம் யாரோ கதவை விடாமல் தட்டிக் கொண்டிருக்க, தூக்கத்தில் இருந்தவர் சிரமப்பட்டு கதவை திறந்தார். அன்னையைப் பார்த்ததும் அழுத்தமாக கட்டிக் கொண்டவன் அழுதான் நிறுத்தாமல். திடீரென்று மகனின் அழுகையை கண்டவர் பதற்றத்தோடு விசாரிக்க,

“மாம்…அவ…அவ” அதற்கு மேல் சொல்ல முடியாதவன் தேம்பி அழுக, சத்தமிட்டு கணவனை அழைத்தார். பிள்ளையை பெற்றோர்கள் இருவரும் தாங்கிக் கொள்ள, “எனக்கு துரோகம் பண்ணிட்டா…” என்று வீடு அதிரும்படி கத்தினான்.

என்ன துரோகம் என்று அறியாததால் மகனை மேம்போக்காக சமாதானப்படுத்தினார்கள். அதையெல்லாம் ஒதுக்கி தள்ளி கண்ணால் பார்த்ததை சொல்ல முடியாமல் சொன்னான். பேச்சு எழவில்லை இருவருக்கும். மகன் சொல்லியது உண்மை தான் என்பதை நம்பவே வெகு நேரம் தேவைப்பட்டது. தங்களுடைய நிலைமையே இப்படி இருந்தால் கூடவே வாழ்ந்தவன் நிலை என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

குழந்தைகள் ஊசிக்கு அழுவதற்கு கூட சிறுவயதில் அழுததில்லை தரணீஸ்வரன். எதிலும் ஒரு தைரியமும் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் பயந்து தன்னை அனுப்ப மறுக்கும் பெற்றோர்களை புன்னகை முகமாக தைரியப்படுத்துவான். அப்படிப்பட்டவன் கண்ணீரே சொல்லாமல் சொல்லியது அவன் வலியை.

தேற்றுவதற்கு தெம்பு இல்லாமல் இருந்தவர்கள் மகன் நிலைமையை மனதில் வைத்து அழுகையை நிறுத்தினார்கள். அன்னை மடி மீது சாய்ந்துக் கொண்டவன் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். முகம் மட்டும் உணர்ச்சி கண்ணீரில் நனைய, உடலை யாரோ வெட்டி எடுத்து தனியாக வைத்தது போல் உணர்ந்தான்.

இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிரம்மை பிடித்தவன் போல் வெறித்துக் கொண்டிருந்தான் எதையோ. தன் மகனை தேற்ற அவர்கள் எவ்வளவு முயன்றாலும் வெளியில் மட்டுமே உணர்வு தெரிந்தது. உடல் மொத்தமும் படுத்த படுக்கையானது.

அதட்டி அவனுக்கு சாப்பாடு கொடுக்க, ஒரு வாய் வாங்கியவன் அதை மென்னு முழுங்காமல், “என்னை ஏமாத்த அவளுக்கு எப்படி அம்மா மனசு வந்துச்சு? நண்பன்னு கூட இருந்த ஒருத்தன் முதுகுல குத்திட்டானே… வலிக்குது ம்மா ரொம்ப. செத்து போலாம் போல இருக்கு.” என்று அவரைக் கட்டிக்கொண்டு கதறினான்.

மகன் வார்த்தையில் பயம் கொண்டவர்கள் அவனை விட்டு எங்கும் நகரவில்லை. இரவில் ஒருவர் முழித்திருக்க, பகலில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் மற்றொருவர் தூங்கினார். அந்த பாதுகாப்பையும் மீறி மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான் தரணீஸ்வரன். முழித்துக் கொண்டிருந்த ஆதிலட்சுமிக்கு லேசாக கண்ணை கட்ட,  பார்த்தவன் இருவருக்கும் தொல்லை தராமல் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தான்.

அன்னை உள்ளம் மகனின் எண்ணத்தை அறிந்ததோ… வேகமாக எழுந்தவர் மகன் இல்லாததால் சத்தமிட்டார். தயாளனும் எழுந்துக்கொள்ள, ஆளுக்கு ஒரு பக்கம் தேடினார்கள். வெளியில் வந்த தயாளன் பார்வையில் மொட்டை மாடியில் இருக்கும் மகன் தெரிய, வயதை மறந்து ஓட்டப்பந்தயம் நடத்தினார். பெற்றோர்கள் இருவரும் தன்னை தேடுகிறார்கள் என்பதை அறியாமல் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

கண்முன் அவன் கண்ட காட்சி வர, தற்கொலை செய்வதற்கு முன் இருபுறமும் பிள்ளையை கட்டி அணைத்து பாதுகாத்தார்கள். இந்த முறை கண்ணில் நீர் இல்லை. ஆனால் முகம் விரக்தியில் சோர்ந்து இருந்தது. இருபுறமும் தோளில் சாய்ந்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு,

“முடியல ரொம்ப வலிக்குது என்னை கொன்னுடுங்க.” என்றான் மெதுவாக.

இந்த வார்த்தையை கேட்கவா பெற்றோர்கள் ஒத்த பிள்ளையை உயரத்தில் வைத்து அழகு பார்த்தது. தயாளன் பொறுமையாக எடுத்துச் சொல்ல, “எங்க பேச்சைக் கேட்காததால தான் நீ இந்த நிலைமைல இருக்க. அவ செஞ்ச தப்புக்கு நாங்க என்னடா பண்ணோம். நீ எங்களுக்கு ஒரே மகன் உன்னை பறிகொடுத்துட்டு நாங்க மட்டும் எதுக்காக வாழனும். சேர்ந்தே சாகலாம் வா.” என்று அவனோடு குதிக்க முயன்றார் ஆதிலட்சுமி.

பெற்றோர்களின் நிலை உணர்ந்து அதை கைவிட்டவன் மனதை மட்டும் பாரமாக வைத்துக் கொண்டிருந்தான். முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருக்க, யாரை வைத்து சிவானியை கண்டுபிடித்தார்களோ அவரை வீட்டுக்கு அழைத்து இருந்தார்கள். வந்தவரிடம் விஷயத்தை சொல்ல,

“அந்த பொண்ணு கூட ஒரு ஆண் தங்கி இருக்கிறதா எங்களுக்கு தகவல் வந்துச்சு. ஆனா உண்மை என்னன்னு தெரியாம வதந்தி பரப்ப கூடாதுன்னு இருக்குற தகவல மட்டும் சொன்னேன்.” என்றார்.

“எவ்ளோ நாளா இது நடக்குது. அவளை பத்தின கடந்த காலங்கள் எல்லாத்தையும் நீங்க தான் கண்டுபிடிச்சு சொல்லணும்.” என்றவர்கள் கோரிக்கையை ஏற்றவர் ஒரு வாரத்தில் அவர்கள் முன்பு நின்றார்.

“காலேஜ் படிக்கும் போது அந்த பொண்ணுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்திருக்காங்க. வீட்டை எதிர்த்து சென்னைக்கு படிக்க வந்திருக்கா. உங்க மகனோட பழகிட்டு இருந்த சமயத்துல அவளுக்கு இன்னொரு ஆண் நட்பும் இருந்திருக்கு. அந்தப் பையனுக்கும் சிவானிக்கும் நடந்த பிரச்சினையில தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்து உங்க பையன டார்ச்சர் பண்ணி இருக்கா.

கல்யாணத்துக்கு அப்புறம் பழைய நட்புகள் எதுவும் இல்லை. உங்க பையனோட பிரண்டு கிட்ட மட்டும் தான் பேசிட்டு இருந்திருக்கா. அடிக்கடி அவனோட வெளிய போறதை வாடிக்கையா வச்சிருக்கா. உங்க மகன் காசை செலவு பண்றது, தேவைக்கு பணம் இல்லன்னு உங்க வீட்டு பீரோல கை வச்சது எல்லாமே ஊர் சுத்த தான். இங்க இருந்து திருநெல்வேலி போறன்னு சொல்லிட்டு ஒவ்வொரு ஊரா சுத்திட்டு இருக்காங்க.

கார்ல ஜிபிஎஸ் இருக்குன்னு தெரிஞ்சு சந்தேகம் வரக்கூடாதுன்னு ஒரு ஆள செட் பண்ணி இருக்காங்க. இந்த விஷயம் எதுவும் அவளோட அப்பா அம்மாக்கு தெரியாது. அவங்க அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னது பொய். முக்கியமா உங்க மருமக கர்பமா இருக்கன்னு சொன்னது பொய். அதுக்கான எந்த ஆதாரமும் இல்லை.” என்றிட காயம் பட்ட இடத்தில் நகம் வைத்து கூறியது போல் இருந்தது தரணீஸ்வரனுக்கு.

அவர் சொன்னது அனைத்தும் உண்மை. கூடாத நட்பில் கல்லூரி படிக்கும் பொழுது பல பழக்கங்களை கற்றுக் கொண்டாள்‌. சென்னை வந்த பின்பும் அது தொடர, ஆண் நண்பனின் தொந்தரவில் அவன் நட்பை முறித்தாள். தரணி விஷயம் அவனுக்கு தெரியும் என்பதால் அதை வைத்து அவளை மிரட்டினான்.

விஷயம் தரணீஸ்வரன் காதிற்கு செல்வதற்கு முன் திருமணத்தை முடிக்க எண்ணியவள்  காரியத்தை சாதித்துக் கொண்டாள். முதலில் சூர்யாவுடன் நட்போடு பழகிக் கொண்டிருந்தவள் நாளடைவில் அவனின் வசதியான தோற்றத்தில் கவர்ந்தாள். தரணியுடன் சண்டை ஏற்பட்ட காலத்தில் அவள் அவன் வீட்டில் தங்கி இருக்க, நண்பனின் மனைவி என்ற எண்ணத்தை மறந்தவன் அவளுடன் இணைந்தான்.

அந்த நேரம்  சமாதானம் செய்வதற்காக தரணீஸ்வரன் வர,   வேறு வழி இல்லாமல் அவள் சாப்பிடாமல் இருக்கிறாள் என நல்லவர்கள் வேஷம் போட்டார்கள். அதன் பின் அவர்கள் சந்திப்பு தினமும் அரங்கேற ஆரம்பித்தது.

சிவானியின் உறவில் நண்பனின் உணர்வுகளை மறந்தான் சூர்யா. அவன் தனக்கு செலவு செய்வதுபோல் தானும் செய்ய வேண்டும் என்பதால் தரணியின் காசை கரியாக்கினாள். அவையும் போதாது என்று ஆதிலட்சுமியை நோட்டமிட்டு பீரோ சாவி எங்கு இருக்கிறது என்பதை அறிந்து நகைகளை திருடினாள்.

அவன் வெளியூர் செல்லும் நாட்களில் சூர்யாவுடன் பொழுதை கழிக்க விரும்ப, குழந்தை பொய் சொன்னதால் மாட்டிக்கொண்டாள் நன்றாக. உடனே அவன் ஊர் திரும்புவான் என்பதை எதிர்பார்க்காதவள் விஷயத்தை சூர்யாவிடம் சொல்ல, அவனோ சண்டையிட்டான். அவனை சமாதானம் செய்ய முடிவெடுத்தவள் தாய் வீட்டிற்கு செல்வதாக நம்ப வைத்து ஏமாற்றினாள்.

இதை அறியாத இருவரும் ஒரு மாத காலம் ஊர் சுற்றி விட்டு சென்னை திரும்பினார்கள். எதுவும் நடக்காதது போல் அவள் காதல் கணவனை தேட, ஆதிலட்சுமி அடித்த அடியில் வீட்டின் மூலையில் சுருண்டு விழுந்தாள்.

சிவானி திரும்பித் தாக்க வருவதற்குள் மகனுக்கு செய்த துரோகத்தை நினைத்து தன்னால் முடிந்தவரை அடித்தார். அவளின் அலறல் சத்தம் காதில் விழுந்தாலும் பார்க்க துணிவு இல்லாமல் அறையில் படுத்து இருந்தான் தரணி.

உயிரை காப்பாற்றிக் கொண்டவள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். காயங்களுடன் வந்த பெண் பக்கம் நின்றார்கள் காவலர்கள். ஆதிலட்சுமி முன்பு விசாரணைக்காக நிற்க, ராட்சசி முகத்தில் விசிறி அடித்தார் அவர் சேகரித்த தகவல்களை. குட்டு உடைந்து விட்டது என்பதை அறிந்து அவள் கூனி குறுகவில்லை.

“தெரிஞ்சிருச்சா ரொம்ப நல்லது. உங்க மகனோட வாழ எனக்கும் விருப்பமில்லை. ஏதாச்சும் ஒரு சாக்க சொல்லி  ஓடலாம்னு தான் வந்தேன். வேலைய மிச்சம் ஆகிட்டீங்க. சீக்கிரமா விவாகரத்து பத்திரத்தை கொடுத்துடுங்க நானும் சூர்யாவும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.” என்ற வார்த்தை செவியில் விழுந்ததும் கண்களை இறுக்கமாக ஓடிக் கொண்டான் தரணீஸ்வரன்.

விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நண்பனுக்கு தெரிந்து விட்டதும் சூர்யாவின் மனம் ஒரு நொடி வருத்தப்பட்டது. அதையெல்லாம் அடுத்த நொடியே மாற்றிவிட்டாள் அவள். சூர்யாவின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாதது வசதியாகி போனது இருவருக்கும். விவாகரத்து நாளை கொண்டாடினார்கள் அங்கு ஒருவன் மரணத்தின் அம்பை தினமும் மார்பில் எய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாமல்.

இரவெல்லாம் தூங்காமல் அவள் செய்த துரோகத்தை எண்ணியவன் முற்றிலும் மாறிப் போனான். மகனை விட்டு எங்கும் நகரவில்லை பெற்றோர்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது தான் வேதனை அதிகமானது. நினைவில் இருவரையும் ஒன்றாக பார்த்த காட்சி  அடிக்கடி வந்து இம்சை செய்தது.

மறக்க வழி அறியாது மதுவை தொட்டான். முதல் முறையாக மகனை அந்த கோலத்தில் பார்த்தவர்கள் கலங்கி நின்றார்கள். அவன் இருக்கும் நிலைமைக்கு தடுக்க தோன்றாமல் அமைதியாக இருக்க, நாளடைவில் அதுவே பழக்கம் ஆகிப்போனது அவனுக்கு. இரவு மட்டும் குடித்துக் கொண்டிருந்தவன் கம்பெனி செல்வதை நிறுத்திவிட்டு முழு நேரமாக குடிக்க ஆரம்பித்தான்.

பெற்றோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை அவன். காலங்கள் காயத்தை முழுவதுமாக ஆற்றி இருந்தாலும் வடு மட்டும் மேனியை விட்டு நகராமல் இருந்தது. அவளை மறக்க குடிக்க ஆரம்பித்தவன் தன்னை மறந்து குடித்துக் கொண்டிருந்தான். மகனின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து அழுத அன்னை அகல்யாவை அவன் வாழ்வில் சேர்த்தார்.

“நான் இன்னைக்கு கம்பெனிக்கு போறேன்.” என்ற கணவனின் வார்த்தையில் அவனின் கடந்த கால நினைவில் இருந்து வெளி வந்தாள் அகல்யா.

சிந்தனைகளை அவனிடம் காட்டிக் கொள்ளாமல், “வாழ்த்துக்கள்!” என்றாள் புன்னகை முகமாக.

“ஏதாச்சும் உதவி பண்ணட்டுமா?” என்றவனை அவள் ஆச்சரியமாக பார்க்க, பதில் கிடைப்பதற்கு முன் உதவி செய்ய ஆரம்பித்தான். இருவரும் பேசிக் கொண்டு காலை உணவை தயாரித்தார்கள்.

“உங்க அம்மா கிட்ட சொல்லிட்டு  கிளம்புங்க. மதியம் போல நானும் அங்க வந்துடுறேன்.” என்றவளுக்கு சம்மதமாக தலையசைத்தவன் தன்னை தயார் படுத்திக் கொள்ள சென்றான்.

குளித்து முடித்து வந்தவன் அலமாரியை திறக்க, நான்கு வருடங்களுக்கு மேலாக தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற கோபத்தோடு ஆடைகள் அவனை முறைத்தது. அனைத்தையும் ஒருமுறை வருடி புன்னகைத்தவன் அழகாக தரிசனம் கொடுத்தான் மனைவிக்கு.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
66
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *