362 views

 அத்தியாயம் 12

தன்னிடம் வம்பிழுத்துக் கொண்டு , ‘காட்டுத்தீ ஹரீஷ் ‘ என்றெல்லாம் அழைத்துத் தன்னை சீண்டிக் கொண்டு இருக்கும் நண்பன் கோவர்த்தனன் இன்றைக்கு அதை ஓரமாக ஓய்வெடுக்க அனுப்பி விட்டானோ ? ஹரீஷிற்கு அவனது நண்பனின் செயல்கள் பார்த்து இவை தான் தோன்றிற்று.

 

” அநியாயத்துக்கு வேலை பாக்குறானே ! ” 

அவனை சீண்டி விளையாட பரபரத்தவன் , ஆட்டத்தைத் தொடங்கி விட்டான்.

 

” டேய் கோவர்த்தனா ! கம்ப்யூட்டரைக் கண் வச்சுட்டு இருக்காத அப்பறம் அதுக்கு திருஷ்டி கழிக்க வேண்டியதா போய்டும் ! ” 

 

தனது கணிணியை இயக்கிக் கொண்டே இவனிடம் பேசினான் ஹரீஷ்.

 

” என்ன ஹரீஷ் ? ” 

 

அவன் கூறியது அரைகுறையாக காதில் விழுந்ததால் , மறுபடியும் கூறுமாறு கேட்டான்.

 

” ஆஆ.. போடா ! “

 

கோபித்துக் கொண்ட ஹரீஷ் அவனுக்கு எதுவும் பதிலளிக்க முற்படாமல் திரும்பிக் கொண்டான்.

 

நண்பன் கோபித்துக் கொண்டது இவனை என்னவோ செய்திட , 

 

” சாரி சாரி ஹரீஷா ! ப்ளீஸ் இன்னொரு தடவை சொல்லுடா ” 

 

இடைவிடாது தோளைச் சுரண்டிக் கொண்டே , மன்னிப்பையும் யாசித்தவனைப் பார்த்து , கோபத்தை அத்துடன் குழி தோண்டி புதைத்து விட்டு , 

 

” கம்ப்யூட்டரையே கண்ணு வைக்காத திருஷ்டி ஆகிடப் போகுதுன்னு சொன்னேன்டா ! “

 

அவன் கேட்டதற்காக மீண்டும் ஒருமுறை கூறியவன் , நண்பனின் உதடுகளில் தெரிந்த மெலிதான புன்னகையைத் தவிர வேறொன்றும் பெரிதாக பதில் கிடைக்கவில்லை ஹரீஷிற்கு.

 

” இன்னைக்கு என்ன ஆச்சு ? எப்பவும் பிரகாசமாக இருக்குற ஃபேஸ் இன்னைக்கு இருட்டா  இருக்கு ? வீட்ல அம்மாவுக்கு மறுபடியும் எதாவது மனசு சரியில்லையா ? “

 

கலாய்ப்பது மட்டும் இல்லாமல் , நண்பனின் கவலையையும் கண்டறிந்து சரி செய்து விடுபவன் தானே ஹரீஷ் ! 

 

இன்றும் அதையே செய்ய நினைத்து வினவினான்.

 

” இல்ல நண்பா ! ” 

 

கணிணியில் இருந்து தன் கண்களைப் பிரித்தெடுத்து , நண்பனைப் பார்த்தான் கோவர்த்தனன்.

 

” தென்  ? ” பிறகு ஏன் இந்த கவலை , சோகம் ?  இவை அடங்கி இருந்தன அந்த கேள்வியில்.

 

அதற்கும் கோவர்த்தனனிடமிருந்து பதிலில்லை.

 

” சொன்னா தானடா தெரியும் ? நான் எதாவது பண்ணிட்டேனா ? நீ இருக்கிற மைண்ட்செட் தெரியாம கலாய்ச்சுட்டேனா ? ” 

 

தன்னால் கூட இவன் இப்படி இருக்கலாமே ! என்று தோன்றியது.

 

” அதில்லைடா ” 

 

மீண்டும் ஒரு மறுப்பு அவனிடமிருந்து.

 

” சொல்லுடா. இப்படியே இருக்காத ! “

அதட்டியவன் நாற்காலியை இவன் புறம் திருப்பிப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

 

” இளந்தளிர் சிஸ்டர் பத்தி நினைச்சுட்டு இருக்கியா ? ” 

 

ஹரீஷ் இப்போது சரியாக அவனது மனக்கிலேசத்திற்கான காரணத்தைக் கூறிக் கேட்டிட , 

 

” அதான் ” 

இவனைப் பார்த்தும் பார்க்காதது போல சென்றவளது அந்த அலட்சியத் தோற்றம் தான் அழியாது உள்ளே நுழைந்து உருட்டிக் கொண்டு இருந்தது மனதை.

 

” அன்னைக்கு பாத்தும் பாக்காத மாதிரி போனாங்களே அந்த நினைப்பா ? ” 

 

அவள் சம்பிரதாயத்திற்குக் கூட தன்னைப் பார்த்து சிரிக்காமல் , கடந்து விட்டதை இவனும் கவனித்தானே ! 

 

ஒருவேளை தன்னை மறந்திருப்பாளோ ? 

இரண்டே இரண்டு நாட்கள் சந்திப்பு என்னைப் பற்றி அவளிடம் எந்த நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ? 

 

சிநேகம் பாராட்டக் கூட அவள் விருப்பப்படவில்லை என்றால் , அவனைத் தவிர்க்கிறாள் என்பதே அதில் நிறைந்திருக்கும் மறைமுகப் பொருளல்லவா ? 

 

அது புரிந்து விட்ட போதும் , தனக்காக அவளிடம் போய் தன்னிலையை உணர்த்தி ஏன் பேசாமல் சென்று விட்டாய் ? 

என் மேல் எதுவும் பிழை கண்டாயா ? 

என்று கேட்டு விட அவளென்ன இவளுக்கு உறவா ? 

 

அப்படி கேட்டால் தான் அவள் மறுமொழி அளிப்பாளா ?

 

இளந்தளிர் இவனைத் தவிர்த்திட , இவன் மட்டும் அவளிடம் வலிய போய் பேசுவது நாகரீகமோ ! 

 

தூர நிற்க அவள் முடிவெடுத்திட்டாள் , தூரமாய் நின்று  ஏங்கித் தவித்திட இவனுக்கு அனுமதி உள்ளதோ ? 

 

” நண்பா ! ஏன்டா மலைச்சுப் போய் இருக்க ? ” 

ஹரீஷ் அவனை உலுக்கிட ,

 

” இல்லடா. அவங்களே அவாய்ட் பண்றப்போ நான் , போய் போய் பேசி டிஸ்டர்ப் பண்றது அவ்ளோ நல்லதில்லை. எதிர்பாராமல் நடந்த மீட்டிங்ஸ் , ஆட்டிட்யூட் பிடிச்சிருந்துச்சு , மறுபடியும் மீட் பண்ணுவோமான்னு எக்ஸ்பெக்ட்டேஷன்ஸூம் கூட இருந்துச்சு தான். ஆனால் பிடிக்காதவங்களைத் துரத்தி பிடிச்சு , வலுக்கட்டாயமாக பேசி என்ன ஆகப் போகுது ! விடு ” 

 

கோவர்த்தனன் கூறியது கூட எல்லா வகையிலும் சரியாகவே இருந்தது.

” அவங்களுக்கு பிடிக்கலன்னா விட்டுட்றது சரிதான் டா. அந்த விஷயத்துக்கு தான் இப்போ டிசிஷன் எடுத்தாச்சே. நீ எதுக்கு எல்லா நேரத்துலயும் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்க ? வீக் எண்ட் – ல படத்துக்குப் போகலாம்டா. சனிக்கிழமை ஈவ்னிங் வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு , ஈவ்னிங் ஷோ போகலாம் ” 

 

அவனது மனமாற்றம் முக்கியமாகப்பட்டது ஹரீஷிற்கு.

 

” சண்டே ரெண்டு பேரும் கோயிலுக்கு போறது வழக்கம் தான அன்னைக்கே போகலாம் “

 

கோவர்த்தனன் தெளிந்த மனநிலையில் வந்து விட்டதை இது உணர்த்த ,

” போகலாம்டா. ஆமா இந்த மெயில்லை இருக்குறதைப் பாரு , டீம் லீட் தான் அனுப்பி இருக்காரு ? ” 

என்று மின்னஞ்சலைக் காட்ட,

 

” எனக்கும் மெயில் செஞ்சிருக்காரு டா. ஆல்மோஸ்ட் முடிச்ச வேலையில் பாதியை மாத்திக் கொடுக்கனும் . இட்ஸ் வெரி டிஃபிக்கல்ட் ஹரீஷ் ” 

 

ஏற்கனவே பாதி வேலை முடிந்து மீண்டும் அதில் மாற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டுமே ! இதற்கு முன்னரே இந்த வேலைக்காக இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு , திருத்தம் செய்து , மண்டை காய்ந்து போயிருந்தவர்கள் , இப்படியொரு உத்தரவு வந்திருப்பது கண்டு , ஏமாற்றம் தானே அடைவார்கள்.

 

” பியூன் அண்ணா கிட்ட காஃபி வாங்கிட்டு வர சொல்லிக் குடிச்சுட்டே வேலையைப் பாக்கலாமா ? என்ன சொல்ற ? ” 

 

என்று கோவர்த்தனன் கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பதால் , கொட்டை வடிநீரைப் பருகி விட்டு , தங்களைப் புத்துணர்வாக்கிக் கொண்டு , பிறகு வேலையைத் தொடர நினைக்க , அதை அவரிடம் உரைக்க ,  பியூன் அண்ணாவும் சிறிது நேரத்தில்  இருவருக்கும் சேர்த்து கொட்டை வடிநீரை பேப்பர் கப் இல்  கொண்டு வந்து வைத்திட , 

 

” தாங்க்ஸ்ண்ணா ” கொண்டு வந்தவருக்கு நன்றி சொல்லி விட்டு , அதைப் பருகி முடித்தனர்.

 

கோவர்த்தனன் , வேலைக்கு இடையில் நினைத்தது இது ஒன்று தான்.

 

‘ என்னைப் போலவே அவளுக்கும் என் நினைவுகள் மனதை உலுக்கி இருக்கக் கூடுமா ? ‘

 

‘தளிரவளுக்குள்ளும் என் ஞாபகங்களால் சலனங்கள் ஏற்பட்டு , வேலைத் தடைபட்டிருக்கவும் சாத்தியம் உண்டோ ? ‘

 

‘ அவளுக்கு ஏற்றவனாக என்னை ஏற்றுக் கொள்ளத் தோன்றவில்லையே ? ‘ 

 

சிநேகதனாகக் கூட ஏற்றாளில்லையே ? 

 

வதனமதை என்னிடம் இருந்து வேறு பக்கம் இடமாற்றி இதயத்தில் சுருக்கென்று தைத்த வலியை உணரச் செய்தாளே ! 

 

இப்படியான சிந்தனைகள் , இடையில் வேலை என்று ஒருவாறு மாலை வரை தாக்குப் பிடித்தவர்கள் அதன் பிறகு தங்களது வீட்டை நோக்கிப் பயணமானார்கள்.

 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

ஞாயிற்றுக்கிழமையன்று ,

” அம்மா நானும் , ஹரீஷூம் அவ்ட்டிங் போறோம் ? “

 

தட்டிலிருந்த சோற்றின் மேல் அன்று காலையில் வைத்த மட்டன் குழம்பை கரண்டியில் ஊற்றிக் கொண்டு , மகன் கூறியதைக் கேட்ட சுமதி இதழ்கள் விரித்துச் சிரித்தார்.

 

” ஏன்ம்மா சிரிக்குறீங்க ? ” 

சினுங்கல் வந்தது மகனிடத்திலிருந்து.

 

” அவ்ட்டிங்ன்னு சொன்னியா அதான் சிரிப்பு வந்துருச்சு. நீ தான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்காம இருக்க. ஹரீஷூக்கு இந்நேரம் பொண்ணுப் பாக்க ஆரம்பிச்சு இருப்பாங்களே ? அவனுக்குக் கல்யாணம் ஆகிட்டா அதுக்கப்புறம் உன்கூட அவ்ட்டிங்க்கு யாரு வருவா ? “

 

கேட்டுக் கொண்டே , இறால் வறுவலை  பரிமாறினார் சுமதி.

 

அதைக் குழம்பு சோறுக்குச் சற்றுத் தள்ளி, தட்டின் ஓரத்தில் ஒதுக்கி வைத்தான்.

 

ஒருவாய் சோற்றுக் கவளத்தின் மேல் இறால் துண்டை வைத்து வாயில் போட்டு மென்றான் கோவர்த்தனன்.

 

அதை முழுவதுமாக முழுங்கிய பிறகு ,

” அதுக்கப்புறம் அவனைக் கழட்டி விட்டுடுவேன்ம்மா ” 

 

தாயிடம் இப்படிக் கூற , சுமதியோ ,

” அப்படி இருந்தாக் கூட கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல மாட்ட அதானே ? ” 

 

கண்டனமாக ஒலித்தது இவரது குரல். சுமதியும் மகனுக்குத் திருமணத்தை முடித்துவிட நினைக்க அவனோ முடியாது என்று ஒரேயடியாக மறுத்து விடாமல் , அதற்கு நேரம் இப்போது வரவில்லையே அம்மா என்று  காரணம் கூறி விடுவான். 

 

இறாலின் சுவையால் , இவன் ஏகப்பட்ட கவளங்கள் உள்ளேத் தள்ளுவதற்கு உதவிய கைகளை அலுங்காமல் தண்ணீரால் அலம்பிக் கொண்டான் கோவர்த்தனன்.

 

” ம்மா. நான் கல்யாணம் பண்ணிக்கனும் . சரி. ஆனா இப்போ இல்லை. இன்னும் ஒரு வாரம் கழிச்சு ஓகே சொன்னா சந்தோஷப்படுவீங்க தான ? ” 

 

” அது ஏன் ஒரு வாரக் கெடு ? ” 

 

உடனே சரியென்று கூறுவது தானே ! ஒரு வார கால இடைவெளி இப்போது எதற்கு ? 

 

” சொல்லுங்கம்மா. உங்களுக்கு ஓகே தான ? ” 

அவர் சம்மதமே பிரதானம் என்று காட்டிக் கொண்டான் தனயன்.

 

” ஓகே தான் கோவர்த்தனனா. பொண்ணைப் பாத்தாச்சு. அவங்கப் பொண்ணும் சம்மதிச்சுட்டா , உன்னோட சம்மதமும் கிடைச்சுட்டா கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்தி வச்சுடலாம் ” 

 

ஆனந்தத்தில் மகனிடம் கூறவே கூடாது என்று நினைத்திருந்த ஒரு விஷயத்தைப் போட்டுடைத்திருந்தார் சுமதி.

 

” என்னது பொண்ணுப் பாத்தாச்சாம்மா ? அவங்க என் ஃபோட்டோவைப் பாத்துட்டாங்களாம்மா ? இன்னும் சம்மதம் சொல்லலன்னா அவங்களுக்கு என்னைப் பிடிக்காம இருக்குன்னு தானே அர்த்தம்.  அவங்களை வற்புறுத்தி எங்களுக்கு வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ண வேண்டாமேம்மா ! “

 

” பொண்ணுக்கும் விஷயம் தெரியும்ன்னு மட்டும் தான் சொன்னேன். நீ வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு க்ளாஸ் எடுக்குற ! மகனே அந்த பொண்ணுகிட்ட உன்னைப் பத்தியும் சொல்லல , உன் ஃபோட்டோவையும் குடுக்கல. அவளும் கொஞ்ச நாள் போகட்டும் அப்பறம் சம்மதம் சொல்றேன்னு சொல்லி இருக்கா.நீ உணர்ச்சி வசப்பட்டு அவளோட நம்பர்லாம் எங்கிட்ட கேட்றாத. ஒன் வீக் அப்பறம் உன் முடிவை மட்டும் சொல்லு. இப்போ படத்தைப் பாக்கக் கிளம்பு ” 

 

சுமதி மகனின் தலையில் கொட்டி அனுப்பி விட்டார்.

 

அவன் ஹரீஷிற்கு அழைத்து ,

” எங்கடா இருக்க ? கிளம்பிட்டியா ? ” 

 

” கிளம்பிட்டே இருக்கேன்டா. நீ ஸ்ட்ரைட் ஆக தியேட்டருக்குப் போய்டு. நான் அங்க வந்து ஜாய்ன் செய்துக்கிறேன் ” 

 

கோவர்த்தனன் திரையரங்கிற்குச் சென்று , நண்பனுக்காக காத்திருந்தான்.

 

அதே நேரம் ஸ்கூட்டியில் ஜாக்கிரதையாகத் தங்கை சுபாஷினியைக் கூட்டிக் கொண்டு வந்து இறங்கிய இளந்தளிரைக் காண நேரிட்டது கோவர்த்தனனுக்கு.

 

இவள் வ்கூட்டியைப் பார்க் செய்து விட்டு , டிக்கெட் வாங்க அவனைக் கடந்து தான் செல்ல வேண்டிய நிலை. அந்த சமயத்தில் தான் அவனையும் பார்த்து விட்டாள்.

 

சுபாஷினி ,

” ஹேய் !  கோவர்த்தனன் சார் ” 

 

கீச்சுக்குரலில் அவனைக் கண்ட மகிழ்ச்சியில் கொஞ்சம் அதிகமாகவே குரலை உயர்த்தி அவனது நாமத்தைச் சொல்லி அழைத்தாள்.

 

இளந்தளிரின் பார்வையும் இவன் மேல் பட , 

அந்த நேரம் பார்த்து வந்து சேர்ந்தான் கோவர்த்தனனின் ஆருயிர் நண்பன் ஹரீஷ்.

 

– தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்