392 views
12. உனதன்பிலே பல மின்னலே
அந்தப் பின்னூட்டம்:
“அதிரூபா!! அழகானப் பேர். பார்க்க அழகாகவும் இருக்காங்க. காம்ப்ளிமெண்ட் ஆகத் தான் சொல்றேன். தப்பாக எடுத்துக்காதீங்க பிரித்வி”
ஏனோ பிரித்விக்குக் கோபத்தைத் தூண்டி விடுவது போல் தான் இருந்தது அந்தப் பின்னூட்டம். அது அதிரூபாவிற்கும் தொற்றிக் கொள்ள, தன்வந்த்தின் கீழான குணத்தால், அவன் உள்ளாகப் போகும் அவதிக்கு இப்போது அதிரூபாவும் காரணமாகப் போகிறாள்!
தனக்கு ஆள்பலம் இல்லை தான்! மூளையின் ஆற்றல் அதிகம். எனவே, அவளது அடுத்தச் செயல்பாடுகளை இப்போதே திட்டமிட்டாள்.
அதற்குள் மிக முக்கியமான ஒன்றைத் தெரிந்து கொள்ள விழைந்தாள்.
நேரடியான தாக்குதல் இல்லையென்றால், தங்களை அடுத்து என்ன மாதிரியான தாக்குதல் நடத்தி நிலைகுலைய வைக்கப் போகிறான் என்பதைத் தான் யோசித்தாள்.
தனக்குத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் தன்வந்த்துடைய அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொடுக்கச் சொன்னாள் அதிரூபா.
அவளுக்குத் தான் இன்னமும், பிரித்வி இதையெல்லாம் முன்னரே, தெரிந்து கொண்டு தன்வந்த்தை அழிக்க முடிவெடுத்து இருந்தான் என்பது தெரியாதே!
தான் சேகரித்து வைக்கப் போகும் விவரங்களையும் தாண்டி, அதிரூபாவிற்கு நம்பிக்கையான ஆட்கள் அதிகம் தேவைப்பட்டனர்.
இவள் இந்தக் காரியங்களை எல்லாம் செய்வது அடிபட்டுக் கிடக்கும் பிரித்விக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும்.
செல்பேசியை அணைத்து வைத்த அதிரூபா, தன் கணவன் பிரித்வி கண் விழிப்பதற்காக காத்திருந்தாள்.
“ரூபா” என்று கிருஷ்ணவேணி மகளிடம் வந்தார்.
“என்னம்மா?”
“கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலேயே மாப்பிள்ளைக்கு இப்படி ஆயிடுச்சுன்னு வருத்தமாகத் தான் இருக்கு ரூபா. சம்பந்தி உன்னோட ராசின்னு சொல்லாமல் விட்டாங்களே! அது போதும்” என்று தன் மனதிலிருந்ததை அவளிடம் பகிர்ந்து கொண்டார்.
“அதெல்லாம் அவங்களுக்கு முக்கியம் இல்லை ம்மா. என்னை யாரும் எதுவும் சொல்லலை. அதை நினைச்சு நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று தயாருக்கு ஆறுதல் அளித்தாள் அதிரூபா.
இரண்டு நாட்கள் சென்று விட்ட நிலையில், அதிரூபாவிற்குக் கணவனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது.
எப்போது பிரித்வியை நார்மல் வார்டிற்கு மாற்றுவார்கள் என்று மூன்றாம் நாள் காத்திருந்தாள் அதிரூபா.
“இன்னும் அரை மணி நேரம் தான் பிரித்வியை நார்மல் வார்ட்டுக்கு மாத்திடுவாங்க” என்று மகேஸ்வரன் தகவல் தெரிவித்தார்.
அதிரூபாவின் விழிகளில் தெரிந்த ஏக்கத்தைப் புரிந்து கொண்ட சகுந்தலா,
அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டார்.
அந்த அரைமணி நேரமும் கடந்திருக்க ,
பிரித்வியை வேறு அறைக்கு மாற்றினர்.
“ஒரு டென் மினிட்ஸ்” என்று சொல்லி விட்டு , அறையைத் தயார் செய்து பிரித்வியை படுக்கையில் படுக்க வைத்தனர்.
“இப்போ உள்ளே போய் ஒவ்வொருத்தரா பாருங்க” என்று வழி விட்டு நகர்ந்தார் மருத்துவர்.
யோசிக்காமல், “ரூபா ம்மா. போய்ப் பாருடா” என்று அவளை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்தாற் போல், அதிரூபா அறைக்குள் புகுந்தாள்.
வாடி வதங்கிப் போய், படுக்கையில் கிடந்தான் பிரித்வி.
தலை கோதியபடியே படுக்கையின் விளிம்பில் அமர்ந்தாள் அதிரூபா.
அவளது மெல்லிய ஸ்பரிசம் பட்டதும் விழித்துப் பார்த்தான் பிரித்வி.
“அதி” சோர்வான குரலில் விளித்தான்.
“பிரித்வி” என்று பொங்கி வந்த அழுகையுடன் அழைத்தாள் கணவனை.
“அழக் கூடாதுடா அதி. எனக்குச் சீக்கிரம் சரியாகிடும்” என்று அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான்.
அவனது நெற்றியில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள் அதிரூபா.
“எல்லாரும் எப்படி இருக்காங்க? ரொம்ப உடைஞ்சுட்டாங்களா?” என்று அக்கறையாக கேட்டான்.
“ஆமாம் பிரித்வி. உங்களை ரொம்ப மிஸ் பண்ணோம். முடியலை” என்று விழிகளிலிருந்து கண்ணீரை இறக்கினாள்.
“ப்ச்! அதி!! நீயும் ஃபீல் பண்ணாத. எல்லாரையும் உள்ளே வர சொல்லு” என்று குடும்பம் மொத்தத்தையும் உள்ளே அழைத்து வர கூறினான்.
அதிரூபாவும், “உள்ளே வாங்க” என்று அழைத்தாள்.
“பிரித்வி!” என்று கண்கள் கலங்க அழைத்துக் கொண்டு, நின்றிருந்த மொத்த குடும்பத்தையும் பார்த்து தவித்துப் போனான்.
“நான் கண் விழிச்சதும் நீங்க எல்லாரும் அழுதுக்கிட்டு இருக்கீங்களே? பாசிட்டிவ் ஆக இருங்களேன். அப்போது தானே எனக்கும் கொஞ்சம் பலம் வரும்”
என்று அவர்களைத் தேற்ற முயன்றான்.
“அண்ணா!” என்று லயா கதறியே விட்டாள்.
“லயா ம்மா! அழுகாதடா. ப்ளீஸ்” என்று தன் புறம் அவளை அழைத்தான் பிரித்வி.
அவனிடம் சென்ற தங்கை கதறலை நிறுத்தவில்லை.
மகேஷ்வரனும், சகுந்தலாவும் மௌனமாக கண்ணீர் வடித்தனர்.
அவர்களை கண்களாலேயே சமாதானப்படுத்தினான்.
தள்ளி நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் அதிரூபா.
உள்ளே வந்த மருத்துவர், “இவ்ளோ பேர் நிற்காமல் வெளியே வாங்க. அவரைச் செக் பண்ணனும்” என்று அவர்களை வெளியேறச் சொன்னார்.
சிறிது நேரம் கழித்து வெளியேறிய மருத்துவர்,
“அவர் மனதளவில் ரொம்ப ஸ்ட்ராங். அதனால் சீக்கிரம் சரியாகிடுவார்” என்று மற்ற முக்கியமான விவரங்களையும் கூறினார்.
குணமாகி வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு இன்னும் ஐந்து நாட்கள் ஆகும் என்று கூறியிருந்ததால், பெண்களை வீட்டிலிருக்குமாறு கூறினார் மகேஸ்வரன்.
“லயா நீ வீட்டுக்குப் போ” என்று தந்தை கூறவும்,
“என்னப்பா? நான் இங்கேயே இருக்கேன்” என்று பிடிவாதம் பிடித்தாள் லயா.
“புரிஞ்சுக்கோடா.அண்ணாவுக்குச் சரி ஆகட்டும். அவன் வீட்டுக்கு வருவான்ல அப்போ பார்த்துக்கோ. கூடவே இரு. இப்போ வீட்டுக்குப் போ” என்று அனுப்பி வைத்தார் மகேஸ்வரன்.
மனைவியையும் அதையே சொல்லி அனுப்பியவர் அதிரூபாவை அவ்வளவு சீக்கிரத்தில் அனுப்ப இயலவில்லை.
“இருக்கட்டும் மாமா. அவர் கண் முழிக்கவே ரொம்ப நாளாச்சு. இதில் அப்படியே விட்டுட்டு வீட்டுக்குப் போனால் எனக்கு அவர் ஞாபகமாகவே தான் இருக்கும். டிஸ்சார்ஜ் பண்ற வரைக்கும் நான் இங்கேயே இருக்கேன்” என்று உறுதியாக கூறி விட்டாள்.
அதற்குப் பிறகு அவளை யாரும் வற்புறுத்தவில்லை.
பிரித்விக்கு அந்த மூன்று நாட்களிலும் சகலமும் அதிரூபாவே தான் செய்தாள்.
மகேஷ்வரனும் , அவளும் பிரித்வியை நன்றாக பார்த்துக் கொண்டனர்.
சகுந்தலா தினந்தோறும் கணவனுக்கும், மருமகளுக்கும் உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போவார்.
லயா மதிய நேரங்களில் வந்து அண்ணனைப் பார்ப்பாள்.
“அதி! எனக்கு நீ ஒரு ப்ராமிஸ் பண்ணு” என்று தன்னிடம் பழச்சாறைக் கொடுத்தவளிடம் கேட்டான்.
“எதுக்கு ப்ராமிஸ்ன்னு சொல்லுங்க பிரித்வி?” என்றாள்.
“இனிமேல் நீ எங்கே போனாலும் எனக்குத் தகவல் சொல்லிட்டுப் போகனும். இது உன்னை நான் வேவு பார்க்கிறேன்னு நினைக்காதே. உன்னோட பாதுகாப்புக்குத் தான் சொல்றேன்” என்று விளக்கினான்.
“புரியுது பிரித்வி ” என்று கூறிவிட்டு, அவன் பழச்சாறு பருகி முடித்தவுடன் , காலி தம்ளரை வாங்கிக் கொண்டாள்.
” என்னோட மொபைல் வீட்டில் இருந்தால் அம்மாவை எடுத்துட்டு வர சொல்றியா?”
ஆனால் பிரித்வியின் செல்பேசி இவளது கைப் பையில் தானே இருக்கிறது.
“என்கிட்ட தான் இருக்கு பிரித்வி” என்று தனது பையிலிருந்த அவனது செல்பேசியை எடுத்துக் கொடுத்தாள் அதிரூபா.
“தாங்க்ஸ் அதி. முக்கியமான கால் பேச வேண்டியிருக்கு”
என்று செல்பேசியில் இலக்கங்களை அழுத்தினான்.
அவன் பேசட்டும் என்று தனிமை கொடுத்து வெளியேறினாள் அதிரூபா.
“ஹலோ ! பிரித்வி சார்!”
“பாரத்! நானே தான். எனக்கு ஆக்ஸிடன்ட் ஆனது உனக்குத் தெரியும் தான?”
“தெரியும் சார். உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கலையேன்னு ரொம்ப ஃபீல் பண்ணினேன். இப்போ எப்படியிருக்கீங்க?” என்று விசாரித்தான்.
“நான் இன்னும் மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிடுவேன் பாரத். நான் சொன்ன வேலை என்னாச்சு?”
“அதெல்லாம் பக்காவா இருக்கு சார். அதுக்கு முன்னாடி அந்த தன்வந்த்தை நீங்க கண் முழிக்கிறதுக்குள்ள தூக்கிச் சித்திரவதை பண்ணனும்னு நினைச்சேன். ஆனால் நீங்க வந்ததும் உங்க கண்ணு முன்னாடி அதை நிறைவேத்தனும்னு முடிவு பண்ணிட்டேன்” என்று தீர்க்கமாக பேசினான்.
“நானும் அதுக்காக தான் காத்திருக்கேன். கொஞ்ச நாள் பொறு. நான் நல்லா குணமானதும் அவனைத் தூக்கிடு.அதுவரைக்கும் என்ன தான் பண்ணறான்னு பார்க்கலாம்” என்று அவனிடம் சில ஆலோசனைகளைக் கூறி வைத்தான் பிரித்வி.
முக்கால மணி நேரம் கழித்து உள்ளே வந்த அதிரூபாவிடம்,
“அதி! வந்து என் பக்கத்தில் உட்கார்” என்று அழைத்தான்.
ஒன்றும் பேசாமல் அவனருகே அமர்ந்தாள்.
“எனக்கு ஆக்ஸிடன்ட் ஆகுறதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தோம். அது இன்னும் உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.
அவனது கைகள் தன்னவளது விரல்களைப் பற்றிக் கொண்டு யாசிப்பதைப் போல இருந்தது.
“பிரித்வி…” கரத்தை உருவிக் கொள்ள முயலவில்லை அவள்.
ஆனால் அவனது விழிகளைக் காண்பதை தவிர்த்தாள்.
“ப்ளீஸ் அதி. ஞாபகமில்லை. மறந்துட்டேன்னு சொல்லு?” என்று கெஞ்சினான்.
“ஞாபகம் இருக்கு பிரித்வி. அது இன்னும் என்னைக் காயப்படுத்திட்டு தான் இருக்கு. அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியல. ஆனாலும் ட்ரை பண்றேன்” என்று உண்மையைக் கூறிய மனைவியின் கரத்தில் இதழ் பதித்தான் கணவன்.
“மறக்க ட்ரை பண்றேன்னு நீ சொன்னதே போதும் அதி” என அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான் பிரித்வி.
மார்பில் தஞ்சம் புகுந்தவள், கடந்த காலத்தை மறக்கும் சக்தி தனக்குக் கிடைக்கட்டும் என்று வேண்டுதல் வைத்தாள்.
மூன்று நாட்களுக்குப் பிறகு , பிரித்விக்கு வீல் சேர் தயார் செய்யப்பட்டு, அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நேரமும் வந்தது.
அவனுடைய குடும்பம் மட்டுமின்றி, தீனதயாளன் மற்றும் கிருஷ்ணவேணியும் வந்து சேர்ந்தனர்.
“வீட்டில் வேலையாள் கிட்ட ஆரத்திக் கரைச்சி வைக்கச் சொல்லிட்டீங்களா சம்பந்தி?” என்று கேட்டார் கிருஷ்ணவேணி.
“சொல்லிட்டேன் சம்பந்தி.சாப்பாடும் தயாராக இருக்கும். நீங்க அங்கேயே சாப்பிடுங்க” என்று சகுந்தலா பதிலளித்தார்.
வீட்டை அடைந்ததும், ஆரத்தி சுற்றப்பட்டு பிரித்வி உள்ளே அனுப்பி வைக்கப்பட்டான்.
அதிரூபா அவனுக்கு உதவி புரிந்தவாறே வீட்டினுள் சென்றாள்.
வீல் சேரில் இருந்து சோபாவில் அமர்ந்த பிரித்வி,
“சாப்பாடு காரசாரமாக இருக்கனும் அம்மா” என்று கூறினான்.
“அடி வாங்கிடாதே பிரித்வி. நீ காரம் குறைவாக பத்திய சாப்பாடு தான் சாப்பிடனும். உனக்காக நாங்களும் அப்படித்தான் சாப்பிடப் போறோம்” என்று மிரட்டினார் சகுந்தலா.
“எனக்கு குணமாகிடுச்சு அம்மா. உடம்பில் தான் வலி. மத்தபடி சாப்பாட்டில் பத்தியம் இருக்கிற அளவுக்குப் போகலையே?” என்று குறைபட்டான்.
“உனக்குப் பத்தியச் சாப்பாடு தான்” என்று ஒரே போடாக போட்டு விட்டார் சகுந்தலா.
“அண்ணா! நாங்களும் அதே தான சாப்பிடப் போறோம். ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்று அண்ணனை சமாதானம் செய்தாள் லயா.
“ஹாஸ்பிடலில் இருந்து வந்திருக்கோம். ஒவ்வொருத்தராக போய் குளிச்சிட்டு வருவோம். ரூபா நீ போய் முதல்ல குளி. அதுவரை இவனை நாங்க பாத்துக்கிறோம்” என்று கூறினார் சகுந்தலா.
அதிரூபா குளித்து முடித்து வந்ததும் மற்றவர்களும் தயாராகி உணவு மேஜைக்கு வந்தனர்.
“நான் இவர் சோபாவிலேயே இருக்கட்டும். நான் சாப்பாடு ஊட்டி விட்டுட்டு சாப்பிட்றேன்” என்று பிரித்விக்கு உணவைக் கொடுத்தாள் அதிரூபா.
சகுந்தலாவும் , கிருஷ்ணவேணியும் அவளுடன் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மற்றவர்களுக்கு உணவைப் பரிமாறினர்.
பத்திய உணவு என்றாலும் மனைவியின் கையால் உண்பதால், முகம் கோணாமல் உண்டான் பிரித்வி.
– தொடரும்