599 views

 

 

“என்ன மருமகனே வெற்றிவாகை சூடி வந்திருக்கீங்களா, இல்ல தோல்விய ஒப்புக்க முடியாம ஓடி வந்திருக்கீங்களா” என்ற அழகுசுந்தரத்தை திமிராக பார்த்து,

 

“என் பொண்டாட்டி மாதிரி ஒரு பொண்ண கொடுத்ததுக்கு உன்னை தூக்கி போட்டு மிதிச்சிருவேன் மாமனாரே.” என்றான்.

 

“காலம் தாழ்ந்து குறை சொல்லி என்ன ஆகப்போகுது.” என்றவர் கையில் தேநீர் கோப்பையை திணித்து, “அப்படி ஓரமா உட்காரு கதை பேசுவோம்.” என்றார். 

 

இருவரும் நன்றாக கதை அளந்து அன்றைய நாளை நிறைவு செய்தார்கள். விடியல் பிறந்ததும் புதிதாக வந்த உறவுக்கு தேனீர் கலந்து கொடுத்தார் அழகு சுந்தரம்.

 

கையில் இருக்கும் தேநீரை குடிக்காமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான் ரகுவரன். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், “என்னப்பா திடீர்னு சோகமாகிட்ட” கேட்க,

 

“குழந்தைங்க நாங்க இல்லாம என்ன பண்றாங்கன்னு யோசனையா இருக்கு.” என்றான் பார்வையை மாற்றாமல்.

 

 

“உன் குழந்தைங்க ரெண்டு பேரும் நீ இல்லாம இருப்பாங்களா.” 

 

“அதெல்லாம் இருந்துருவாங்க ரெண்டு பேரும் சமத்து பசங்க. பையன் அழுதா கூட என் தங்கம் சமாதானப்படுத்திடும்.”

 

“பரவால்ல குழந்தைகளை ரொம்ப அருமையா வளர்த்து வச்சிருக்கீங்க.”

 

“இந்த விஷயத்துல என் மனைவி ரொம்பவே நல்ல அம்மாவா நடந்துப்பா. குழந்தைங்கன்னு ஒரு இடத்துல பொத்தி வைக்காம துணிஞ்சு அவங்களையே செய்ய வைப்பா. எனக்குத்தான் அவங்க ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் போது உதறல் எடுக்கும்.” பலமுறை அனுபவம் கண்டதால் புன்னகைத்தான் இதழை லேசாக வளைத்து.

 

“பொண்டாட்டி மேல ரொம்ப லவ்வோ…” என்றவரை இந்த முறை நேருக்கு நேராக பார்த்தவன், “என்னை விட அவளுக்குத்தான் என் மேல அதிக லவ். நான் அடிக்கடி காட்டுறதால  பெருசா இருக்கும். ரகசியமா அவ பார்க்குற ஒத்த பார்வையில அளவு கடந்த காதல் இருக்கிறது எனக்கு மட்டும்தான் தெரியும்.” மனைவியை அம்மாவாக நினைத்து பேசும் பொழுது வந்த சிரிப்பை விட இப்பொழுது அதிகமாகவே சிரிப்பு வந்தது.

 

“இந்த அளவுக்கு இருந்துட்டு எப்படி?” என்றவரை அவன் புருவம் உயர்த்த, “சண்டை வந்துச்சுன்னு கேட்டேன் ” விளக்கினார் தன் வார்த்தையை.

 

 

“சில நேரம் அதிக காதல் தான் பிரிவுக்கு காரணமா இருக்கும்.” என்றதோடு தன் பேச்சை நிறுத்தினான். ரகுவரன் முகத்தில் தெரியும் வருத்தத்தை உணர்ந்த அழகுசுந்தரம் எதையும் மேற்கொண்டு பேசாமல் அவனுக்கு தனிமை கொடுத்துவிட்டு நகர்ந்தார். 

 

பக்கத்து பால்கனியில் அமர்ந்திருந்த மகிழினி கணவனின் வார்த்தையை கேட்டு கொண்டிருந்தாள். யாரோ ஒருத்தரிடம் தன்னை நல்ல அம்மா என்று பட்டம் கொடுக்கும் கணவன் அன்று ஒரு நாள் திட்டியது ஞாபகத்திற்கு வந்தது. 

 

 

“அம்மா மான்குட்டிக்கு வெளிய போகணும்.” பள்ளி விட்டு வந்ததும் உடையை கூட மாற்றாமல் அன்னையை நச்சரித்துக் கொண்டிருந்தாள் மான்விழி.

 

“மானு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டிஸ்டர்ப் பண்ணாத.”

 

“நேத்து கூட்டிட்டு போறன்னு சொல்லிட்டு கூட்டிட்டு போகலம்மா நீங்க. இன்னைக்கு மான்குட்டிக்கு வெளிய போயே ஆகணும்.” விடாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

 

“அம்மாக்கு திடீர்னு ஒரு கேஸ் வந்துடுச்சு மானு. இன்னும் மூணு நாளைக்கு அம்மாவால எங்கேயும் வர முடியாது.”

 

மகள் அடம் பிடிக்க, தாய் திட்ட என்று நேரம் நகர்ந்தது. தூங்கி எழுந்து வந்த மகிழ்வரன் வெற்றுடலோடு அம்மாவின் முடியை பிடித்து இழுத்தான். “ஆஆஆ” என்ற ஓசையோடு அவள் மகனை முறைக்க,

 

“அக்காவ கூட்டு போ” என்றான் முகத்தை ரகுவரன் போல் கடுகடுவென்று வைத்து.

 

“கை ரொம்ப நீண்டு போச்சு மகிழ் உனக்கு.” என்றதோடு நிறுத்தாமல் மகனை ஒரு அடி வைக்க கையை தூக்க, அதற்குள் அவனது அக்கா  தடுத்து விட்டாள்.

 

 

அன்னை அடிக்க கை ஓங்கியதை பார்த்தவன் சிறிதும் பயப்படாமல், “அப்பா கிட்ட சொல்லிடுவேன்.” என்று ஒரு விரலைக் காட்டி மிரட்ட, “உங்க அப்பன் கிட்ட இருந்து நீ அடி வாங்காம தினமும் காப்பாத்துனது தப்பா போயிடுச்சு. வீட்டுக்கு வந்ததும் முதல்ல உன் மேல தான் கைய வைப்பான் அப்ப அம்மான்னு அழுது பாரு அப்புறம் இருக்கு உனக்கு.” ஒவ்வொரு முறையும் காப்பாற்ற போராடும் தன்னையே எதிர்த்து நிற்கும் மகனால் கோபம் கொண்டவள் தன் வேலையை கவனித்தாள்.

 

அன்னையின் கோபத்தை அறிந்த மான்குட்டி தம்பியை மேற்கொண்டு பேசவிடாமல் தனியாக அழைத்துச் சென்றாள். கேட்டதை மறந்த மான்குட்டி தன் போக்கில் விளையாடிக் கொண்டிருக்க, மகிழ்வரன் முகம் ஒரு மாதிரியான கோபத்தில் இருந்தது. அன்னை பேசிய வார்த்தை உள்ளுக்குள் ரோஷத்தை கொடுக்க, அக்கா அறியாது மெதுவாக வீட்டை விட்டு வெளியேறி படியிறங்கினான். 

 

 

கால் இன்னும் முழுதாக வளர்ச்சி பெறாத நிலையில் படிக்கட்டில் இருக்கும் கம்பிகளை பிடித்துக்கொண்டு கவனமாக இறங்கினான். பேரன் இறங்க சிரமப்படுவதை எதிர்புறத்தில் இருந்து ஏறிய லட்சுமி கவனித்து, “மகிழ் என்னப்பா தனியா இறங்கி வர, அம்மா அக்கா எங்க?” என தூக்கிக்கொண்டார்.

 

 

“பாட்டி அப்பாக்கு போன் பண்ணனும், போன் கொடுங்க.”

 

“எதுக்குப்பா?” என்றவரை பட்டென்று முறைத்து விட்டது சில்வண்டு.

 

அவர் ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக்கொண்டு, “என்ன ஆச்சுப்பா?” என அக்கரையாக கேட்க, “அப்பா கிட்ட பேசணும்னு போன் கேட்டா அம்மா மாதிரி கொஸ்டின் கேட்டு டார்ச்சர் பண்ணுறீங்க. என்  அக்காவ திட்டிட்டாங்க நான் அப்பா கிட்ட சொல்லி சண்டை போட வைக்க போறேன்.” இடுப்பில் இருந்து அவசரமாக இறங்கிய பேரனை இன்னமும் புரியாமல் பார்த்தார் லட்சுமி.

 

அவனோ கால் சட்டை கூட அணியாத பிறந்த மேனியை காட்டிக் கொண்டு டிங்கு டிங்கு என இடுப்பை வளைத்து படி இறங்கினான். பேரன் படும் அவஸ்தையை உணர்ந்தவர் தூக்க செல்ல, “மகிழ்வரன் பெரிய போலீஸ் பாட்டி அவனே இறங்கிப்பான்.” என்று சொல்லியவாறு இறங்கும்போதே படிக்கட்டு தடுக்கி விழப் பார்த்தான்.

 

“மகிழு” பேரனை உடனே தூக்கிக் கொண்டார்.

 

ரகுவரன் ரத்தம் அவனைப் போல் தானே இருக்கும்! விழுந்ததை சமாளிக்க எண்ணியது, “பாட்டி நான் விழல, விழுற மாதிரி நடிச்சேன்.” என்று சத்தம் இல்லாமல் வாயை வளைத்து சிரித்தான்.

 

 

பேரனின் நடவடிக்கைகள் யாவும் மகனை நினைவு படுத்தியது லட்சுமிக்கு. பேச்சு கொடுக்காமல் கீழிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல, “வாங்க ராசா” ஆசையாக அழைத்தார் சாந்தி.

 

 

குட்டி ரகுவரனும் உடனே லட்சுமி பாட்டியின் இடுப்பை விட்டு இறங்கினான். பேரன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த சாந்தி ஆசையாக கைநீட்ட, சிரித்தவாறு ஓடி வந்தவன் சாந்தி பக்கத்தில் இருக்கும் கைபேசியை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். 

 

இனிப்புக்கு ஏமாந்த பிள்ளை போல் பார்த்தார் சாந்தி. அவரின் தோரணையில் சிரித்த லட்சுமி, “மேல ஏதோ நடந்திருக்கும் போல இந்த சார் கோபமா இருக்காரு.” என்றார்.

 

 

சாந்தி பேரனை பார்க்க, அவனோ அழகாக கைபேசியில் இருக்கும் ரகசிய திறவுகோல் எண்ணை அழுத்தி உள்ளே சென்றது. ஒவ்வொரு முறையும் பாட்டி அழைக்கும் போது இடுப்பில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மகிழ்வரனுக்கு பெரிதாக தேட வேண்டிய வேலை இல்லாமல் போனது தந்தையின் புகைப்படத்தை வைத்து எண் இருந்ததால். 

 

 

தினமும் அவனிடம் கேட்டுத்தான் மதிய சமையலை‌ முடிப்பார் சாந்தி. அதனால் அவனின் எண் முதலிலேயே இருக்க, டயல் செய்த சின்ன ரகுவரன் பெரிய ரகுவரனின் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தான். 

 

வேலையில் இருந்தவன் சாந்தி எண்ணை கண்டு உடனே எடுக்க, “அப்பா நான் பாட்டி இல்ல மகிழ்வரன் போலீஸ் பேசுறேன்.” என்றதும் மூத்தவர்கள் இருவரும் சிரித்தார்கள்.

 

 

“அப்பா ஒரு நிமிஷம்” பேச வந்த ரகுவரனை தடுத்து நிறுத்திய சின்னவன், “போலீஸ பார்த்து சிரிச்சா ஜெயில்ல போட்டுடுவேன்.” என்று மிரட்டி விட்டு தந்தையிடம் பேச ஆரம்பித்தான்.

 

“என்னடா எல்லாரையும் மிரட்டிட்டு இருக்க, அக்கா எங்க?”

 

 

“அக்கா சோகமா உக்காந்துட்டு இருக்கு அப்பா.” என்றதும், காரணம் கேட்டான் ரகுவரன்.

 

“அக்கா வெளிய கூட்டிட்டு போக சொல்லி அம்மா கிட்ட கேட்டுச்சு. அம்மா அங்க எல்லாம் போக கூடாது போய் படி அப்படின்னு அக்காவை திட்டிடுச்சு. நான் போய் கேட்டதுக்கு என்னையும் அம்மா திட்டிடுச்சு. அக்கா சோகமா நான் எங்கயும் வரலன்னு படிக்குது. உடனே வீட்டுக்கு வாப்பா. அம்மாவ விட்டுட்டு நம்ம மூணு பேரும் வெளிய போலாம்.” நடந்தது நடக்காதது இரண்டையும் சேர்த்து திரித்து நாரதர் வேலையை பார்த்தான் மகிழ்வரன்.

 

“சரிடா நீ அக்காவை ரெடியா இருக்க சொல்லு அப்பா வந்துட்டே இருக்கேன்.” என்றவனின் அழைப்பு மனைவிக்குச் சென்றது.  

 

வேலையில் மும்முறமாக இருந்தவள் அவன் அழைப்பை எடுக்காமல் போக, சாந்தியை அழைத்தவன் அவளிடம் கொடுக்க சொன்னான். முதியவர் மூட்டு வலியோடு படியேற முயல, “பாட்டி நான் எடுத்துட்டு போறேன் கொடுங்க” என்று வாங்காமல் பிடுங்கிக் கொண்டு அதே டிங்கு டிங்கு இடுப்பு வளைவோடு படி ஏறினான்.

 

 

***

 

அன்னை முன்பு திமிரோடு நின்றான் மகிழ். அதையும் கவனிக்காமல் மகிழினி வேலை பார்த்துக் கொண்டிருக்க, அன்னை முகத்திற்கு நேராக கைபேசியை நீட்டினான்.

 

 

கவனம் திரும்பியவளுக்கு, “அப்பா” என்ற பதிலை கொடுக்க, புருவம் உயர்த்தி மகனை பார்த்தவள் கைபேசியை காதில் வைத்தாள்.

 

 

“எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ண திட்டி இருப்ப. அவளை கவனிக்கிறதை தவிர அப்படி என்னடி உனக்கு வேலை. நீ எல்லாம் ஒரு அம்மாவாடி. உன்னை நம்பி என் பிள்ளைகளை விட்டுட்டு வந்தா திட்டி அழ வச்சிட்டு இருக்க. நீ என்னடி என் பசங்கள வெளிய கூட்டிட்டு போறது. அப்பா நான் இருக்கேன் இரண்டு பிள்ளைகளையும் இரண்டு தோள் மேல உட்கார வைச்சு இந்த உலகத்தை சுத்தி காட்டுவேன்.” என்றவனுக்கு பதில் சொல்லாத மகிழினி, 

 

 

“நாரதர் வேலையா பார்க்குற.”  மகனின் தலையை பதம் பார்த்தாள்.

 

 

“அப்பா” என்று சின்னவன் கதற, “கைய ஒடச்சிடுவேன்டி என் பசங்க மேல கை வைச்சின்னா.” கைபேசி வழியாக குரல் கொடுத்தான் ரகுவரன்.

 

“என்னடா பையன் மேல திடீர் பாசம். நான் நல்ல அம்மாவா இருக்கிறதால தான் கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்றேன். ரெண்டு நாள் கழிச்சு இன்னைக்கு தான் உன் பொண்ணுக்கு ஜுரம் விட்டிருக்கு. வெளிய கூட்டிட்டு போனா சும்மா இருக்க மாட்டா. எதையாது சாப்ட்டு திரும்ப படுத்துட்டா நீயா பக்கத்துல இருந்து பார்ப்ப. 

 

ஒழுங்கா உன் வேலைய மட்டும் பாரு என் பசங்கள எப்போ எங்க கூட்டிட்டு போகணும்னு எனக்கு தெரியும்.” என்றவள் பேச்சு கொடுக்கும் கணவனின் வார்த்தையை சிறிது மதிக்காமல் கைபேசியை வைத்து விட்டாள்.

 

***

 

மகிழினி இவ்வாறு பேசியபின் ரகுவரன் பொறுமையாக இருப்பானா என்ன! உடனே படையெடுத்தான் வீட்டிற்கு. தந்தையை கண்ட மான்விழி துள்ளி குதித்து கட்டிக் கொள்ள, மகன் என்றும் இல்லாத அதிசயமாக தோள் மீது ஏறிக்கொண்டான்.

 

 

“எங்கடா உங்க அம்மா?” 

 

“நம்ம வீட்ல இருக்காங்க அப்பா. வந்து நல்லா சண்டை போட்டு டிஸ்யூம் டிஸ்யூம் அடிங்க.” மகனின் வார்த்தைக்கு தலையசைத்தவாறு படியேறினான். 

 

ரகுவரன் கதவை திறப்பதற்கு முன் அவன் வருகையை உணர்ந்து கொண்டாள் மூவர் போடும் கும்மாளத்தில். வந்ததும் குதிக்கப் போகிறான் என்ற கணிப்பில் தயாராக இருக்க, அவள் எண்ணம் பொய்யாகவில்லை…

 

“ஏய் வக்கீலு! உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பசங்கள வெளிய கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லுவ. மரியாதையா கிளம்பு, என் பசங்க எங்கெல்லாம் போகணும்னு ஆசைப்படுறாங்களோ அங்க எல்லாம் நீ வரணும்.” என்ற திமிரான வாசகத்தில்.

 

ஒரு முறை கணவன் முகத்தை பார்த்தவள் தன் வேலைகளை கவனிக்க, “அப்பா, அம்மா நீங்க சொல்றதை கேட்காத மாதிரி வேலை பார்க்கிறாங்க” அன்னை அறியாது ரகசியமாக காதில் பேசினான் மகிழ்.

 

 

ஏற்கனவே அதை கவனித்து கொந்தளிக்க எண்ணியவன் மகனின் பேச்சையும் கேட்டு, “அடியே!” என்றான் வேகமாக அவளை திருப்பி.

 

 

“ரகு எனக்கு ரொம்ப வேலை இருக்கு என்னை தொந்தரவு பண்ணாம மூணு பேரும் எங்கயாது போய் தொலைங்க.” வாய் மட்டும்தான் பதில் சொன்னது ரகுவரனிடம். விழியும் கையும் வேலையில் மும்முறமாக இருந்தது.

 

“அப்பா நான் சும்மாதான் அம்மா கிட்ட வெளிய போகணும்னு கேட்டேன். அம்மா வேலையெல்லாம் முடிச்சிட்டு என்னைக்கி ஃப்ரீயா இருக்காங்களோ அன்னைக்கு போகலாம்.” என்ற அன்பு மகளின் வார்த்தையை கேட்டு சிரித்தாள் மகிழினி.

 

“அக்கா பாவம் அப்பா அம்மாக்காக பேசுறாங்க. நம்ம ரெண்டு பேரும் கூட்டிட்டு போகலாம்.” இன்னைக்கு மகிழ்வரனுக்கு என்ன ஆனதோ தந்தையோடு பெரும் கூட்டணியை உருவாக்கினான்.

 

“தங்கம் அவளுக்கு எப்ப பார்த்தாலும் வேலை இருக்க தான்டா செய்யும். நீ வா அப்பா உன்னை வெளிய கூட்டிட்டு போறேன். உனக்கு எங்க போகணுமோ என்னெல்லாம் வாங்கணுமோ எல்லாத்தையும் அப்பா வாங்கி தரேண்டா.” 

 

மகளின் பேச்சில் புன்னகைத்த மகி கணவனின் பேச்சில் கோப மூச்சுகளை வெளியிட்டாள். அதைக் கண்டு கொண்ட மான்விழி, “அம்மா இல்லாம நம்ம மட்டும் போனா நல்லாவே இருக்காது அப்பா. இன்னொரு நாள் போகலாம்.” என்றாள்.

 

 

தந்தையின் முதுகில் வௌவால் போல் தொற்றிக் கொண்டிருந்த மகிழ்வரனின் முகம் மாறியது அக்காவின் வார்த்தையில். அக்காவின் பெயரைச் சொல்லி ஊர் சுற்றி பார்க்கலாம் என்ற எண்ணம் பலிக்காமல் போய்விடும் என்ற பயத்தில், “அக்கா அப்படி எல்லாம் அப்பாவை மீறி பேசக்கூடாது. வா நம்ம போயிட்டு வரலாம்.” என்றவன் மகிழினி பக்கம் திரும்பவே இல்லை அவள் முறைப்பதை அறிந்து.

 

 

நால்வரும் மாற்றி மாற்றி வாக்குவாதங்களை செய்து கடைசியாக, “நீ வரலைன்னா போடி பொண்டாட்டி. நான் பசங்களை கூட்டிட்டு போயிட்டு வரேன்.” இறுதி முடிவு எடுத்தான் ரகுவரன்.

 

 

“ப்ச்! அதெல்லாம் ஒன்னும் வேணாம் ரகு. ரெண்டு பேரையும் வச்சு உன்னால சமாளிக்க முடியாது. அதுவுமில்லாம முன்னாடி சொன்ன மாதிரி மானுக்கு இப்பதான் ஃபீவர் விட்டு இருக்கு. எதையாது வாங்கி கொடுத்து திரும்பவும் அவளை படுக்க வச்ச… டென்ஷன் ஆகிடுவேன்.”

 

 

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது பொண்டாட்டி. நீ உன் வேலைய பாரு நான் ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்கிறேன்.” 

 

“சொன்னா கேளு ரகு. உன் பொண்ணு உன் பேச்சைக் கேட்டு சமத்தா இருப்பா. உன் பையன் அந்த குரங்கு அப்படி இல்ல.” தினமும் தந்தை தன்னை குரங்கு என்று அழைக்கும் பெயரை தாய் அழைத்ததும் கோபம் கொண்டவன் வேகமாக இறங்கினான்.

 

மூவரும் அவனைப் பார்க்க, யாரையும் கண்டுகொள்ளாமல் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்தான் சோபாவில். மகன் செய்யும் அலப்பறைகளை கண்டும் காணாமலும் மகி ஒதுங்கிக்கொள்ள, “தம்பி பாப்பா” என பாசமாக அவனை சமாதானம் செய்தாள் குட்டி இளவரசி.

 

 

அதிகாரம் செய்து முடியாமல் போனதால் கொஞ்சி குழைந்து சம்மதம் வாங்கினான் மனைவியிடம். பிள்ளைகள் இருவரும் வெளியில் செல்வதால் மகிழ்வோடு கிளம்ப, “ரகு ரெண்டு பேரையும் ரெண்டு கைல புடிச்சுக்கோ. மகிழ் சேட்டை பண்ணா திட்டாம வீடு வந்து சேரு.” மனைவியின் அறிவுரையை கேட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

 

 

பிள்ளைகள் இருவரும் படிக்கட்டில் முன்னாள் நடக்க, “மானு என்ன கேட்டாலும் வாங்கி தராத ரகு.” பிள்ளைகளுக்காக தயார் செய்து வைத்திருந்த சுடு தண்ணீரோடு பின் தொடர்ந்தாள்.

 

 

நால்வரும் வெளியில் கிளம்புவதாக எண்ணிய பெரியவர்கள், “ஆள் ஆளுக்கு குடும்பமா வெளிய போறீங்க எங்களை விட்டுட்டு” என்றார்கள் குறையாக.

 

“யாரு போனாங்க?” ரகு.

 

“இப்பதான் இனியா, இனன்யா ரெண்டு பேரும் அவங்க புருஷங்களை இழுத்துட்டு போனாங்க படத்துக்கு.” லஷ்மி.

 

 

“நான் போல அத்தை. இந்த மூணு குரங்குங்க மட்டும் தான் வெளிய போதுங்க.” மூவரும் மகிழினியை வெறிக்கொண்டு முறைக்க,

 

“நீயும் போயிட்டு வரது தான மகி.” என்றார் சாந்தி.

 

“இல்ல அத்தை, எனக்கு நிறைய வேலை இருக்கு.” 

 

“நீங்க ரெண்டு பேரும் வாங்க பாட்டி.” என்ற பேத்தியின் கோரிக்கையை நிராகரித்த இருவரும் புன்னகையோடு அனுப்பி வைத்தார்கள்.

 

 

ஆயிரம் அறிவுரைகளை சொல்லி வழிய அனுப்பி வைத்தாள் மகிழினி. அத்தனைக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிய மூவரும் ஆனந்தமாக புறப்பட்டார்கள் அவர்களுக்கு விருப்பமான மாலுக்கு. 

 

 

ஃபன் சிட்டி உள்ளே சென்ற மழலைகள் அவர்கள் உலகில் ஐக்கியமாக, பிள்ளைகள் இருவர் மீதும் இரு கண்ணை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக நின்றிருந்தான் ரகுவரன். 

 

 

ஒவ்வொரு முறையும் அதிசயிக்கும் குழந்தைகள் தந்தையை அழைத்து தங்கள் மகிழ்வை காண்பிக்க, பிள்ளைகளின் சிரிப்பில் ஆயிரம் மடங்கு மகிழ்ந்தான் தந்தையானவன். மான்விழி தன் விளையாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு தம்பியோடு விளையாடச் சென்றாள் அவன் தொந்தரவு தாங்காமல். 

 

 

மகனின் அடாவடியில் பொய் கோபம் கொண்டவன், “மகிழ் அக்கா விளையாட வேண்டாமா.” என லேசாக குரல் உயர்த்த, முகத்தை தொங்க போட்டது குட்டி.

 

“நான் விளையாடி முடிச்சிட்டேன் ப்பா. தம்பி கூட இருக்கேன் அவன் விளையாடட்டும்.” தந்தையை சமாதானம் செய்து தம்பியோடு விளையாடினாள்.

 

மூவரும் வெளியில் சென்று வெகு நேரம் ஆகிவிட்டதால் மகிழினி கைப்பேசி வழியாக தொடர்பு கொண்டு, “டைம் ஆயிடுச்சு ரகு ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வா.” என்றாள் அக்கறையாக.

 

“என்னடி ரொம்ப பண்ணிட்டு இருக்க. நான் அவங்கள பத்திரமா பார்த்துக்க மாட்டேனா. டென்ஷன் ஆகாம உன்னோட வேலைய கவனி. நாங்க நல்லா என்ஜாய் பண்ணிட்டு பொறுமையா வீட்டுக்கு வரோம்.” 

 

கணவனின் வார்த்தையில் நம்பிக்கை இருந்தாலும் தாயாக பத்திரமாக வீடு வர வேண்டும் என்ற வேண்டுதலை கடவுளிடம் வைத்தாள். 

 

 

மகிழ்வரன் வேர்த்து கொட்டி முடியாமல் மூச்சு வாங்கும் வரை அக்காவோடு விளையாடி தீர்த்தான். இருவரின் களைப்பை பார்த்தவன் அதன்பின் விளையாட்டை தொடர வைக்கவில்லை. வெளியில் அழைத்து வந்தவன் இருக்கையில் அமர வைத்து இருவருக்கும் தண்ணீர் கொடுத்தான். 

 

 

சாதாரண மூச்சு வரும் வரை பிள்ளைகளை அமர வைத்திருந்தவன் அங்கிருக்கும் கடைகளை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். மகிழ்வரன் தந்தையின் கையில் இருந்து கொள்ள, மான்விழியை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

 

 

 

உணவு கடையை பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் அங்கே கை காட்டினார்கள். வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றான் மனைவியை மனதில் வைத்து. எடுத்ததும் மான்விழி ஐஸ்கிரீம் கேட்டு தந்தையை பாவமாக பார்க்க, “தங்கம் சொன்னா கேளுங்க இப்பதான் உங்களுக்கு ஜுரம் விட்டு இருக்கு.” என்றதும் இன்னும் பாவமாக முகத்தை வைத்தாள்.

 

 

மகளின் முகபாவணையில் அவனையும் அறியாமல் புன்னகை தோன்ற, “மான்குட்டி பாவம் அப்பா. ஜுரம் வந்ததுல இருந்து நாக்கு கசப்பா இருக்கு.” என்று நாக்கை நீட்டி அருவருப்பாக காட்டியவள்,

 

“கொஞ்சூண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டா போதும் மான்குட்டி நாக்கு இனிப்பாகிடும். உங்க மான்குட்டிக்கு நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டா தான் ஜுரம் வரும். இத்துனூண்டு சாப்பிட்டா ஒன்னும் ஆகாது அப்பா.” இவ்வார்த்தைகளைப் பேசி முடிப்பதற்குள் ஆயிரம் முக பாவனைகளை கொடுத்தவள் அழகில் சொக்கி போனான்.

 

 

இருந்தும் அவள் நலன் மீது அதிக அக்கறை கொண்டவன், “தங்கம் அம்மாக்கு தெரிஞ்சா அப்பாவை அவ்ளோ தான்டா.” என்று மனைவியை துணைக்கு இழுக்க, “அம்மா கிட்ட அக்கா சொல்லாத அப்பா.” குட்டி முந்திரிக்கொட்டை முந்திக்கொண்டு பதில் அளித்தது.

 

தம்பியின் வார்த்தைக்கு தோதாக அவள் ‘ஆமாம்’ என்று தலையசைக்க, “தங்கம் இன்னும் ரெண்டு மூணு நாள் போகட்டும் அப்பா திரும்பவும் உன்னை கூட்டிட்டு வந்து இத்துனூண்டு ஐஸ்கிரீம் இல்ல இவ்ளோ ஐஸ்கிரீம் வாங்கி தரேன்.” கைகளை அகலமாக விரித்து காண்பித்தான்.

 

 

சமாதானமாகாமல் மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்த மகளை கெஞ்சி வழிக்கு கொண்டு வந்தான். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு குழந்தையும் தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க, ஐஸ்கிரீமை தவிர அவளுக்கு விருப்பமான அனைத்தையும் வாங்கி கொடுத்தான். இருப்பினும் குழந்தையின் எண்ணம் அதன் மீது இருக்க, பாவமாக சாப்பிட்டு முடித்தது.

 

 

வெகு நேரம் ஆகிவிட்டதால் சேட்டைகளை ஓரம் கட்டி வைத்த ரகுவரன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். தந்தையின் கை பிடித்துக் கொண்டு வந்த மான்விழி சோகமாகவே வர, “தங்கம் எதுக்குடா முகத்தை இப்படி வச்சிருக்க.” கேட்டான்.

 

பதில் சொல்லாதவள் தலையை ஒரு பக்கமாக கோணிக் கொண்டு நடக்க, “ஐஸ்கிரீம் வாங்கி தரலைன்னு அக்கா கோபமா இருக்கு.” பதில் கொடுத்தான் மகிழ்வரன்.

 

“அப்பா இன்னொரு நாள் கண்டிப்பா வாங்கி தரேன்டா தங்கம். முகத்தை இப்படி வச்சிருக்காம சிரிச்சுக்கிட்டே வாங்க அப்போதான் அப்பாவும் சிரிக்க முடியும்.” என்ற பின்பும் கூட மான்விழியின் மனம் சமாதானமாக வில்லை.

 

 

எப்பொழுது வெளியில் வந்தாலும் அவள் கேட்கும் ஐஸ்கிரீமை வாங்கி கொடுப்பான் ரகுவரன். கூடவே சுடு தண்ணீரும் வாங்கிக் கொடுத்து உணவு குழாய் குளிராதவாறு பார்த்துக் கொள்வான். அவற்றை பழக்கப்படுத்தியவன் இன்று முடிவாக மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்