ஜீவன் 11
காலை நடந்த கலவரத்தில் அவரவர் ஓய்வெடுக்க அறையில் தஞ்சம் புகுந்துக் கொண்டனர். குழப்பத்தில் யோசித்துக் கொண்டிருந்த அகல்யாவும் பால்கனியில் படுத்து விட்டாள். நேரங்கள் கடந்து லேசாக முழிப்பு தட்டியது அவளுக்கு. இமை திறந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள் முழு இருட்டில் அறை இருப்பதை கண்டு.
மதிய உணவை முடித்தவள் உறங்கி இரவு உணவிற்கு தான் எழுந்து இருக்கிறாள். அறையின் விளக்கை போட்டவள் பார்வை காலியாக இருக்கும் மெத்தை மீது விழுந்தது. ‘எங்க அவனைக் காணோம்!’ யோசித்தவள் தூய்மைப்படுத்திக் கொண்டு வர, கைப்பேசி ஒலித்தது.
“சொல்லும்மா”
“உங்க மாமியார் ஏதாச்சும் சொன்னாங்களா அகல்”
“ஏதாச்சும் சொன்னாங்களான்னு மொட்டையா கேட்டா என்ன அர்த்தம்? எதை பத்தின்னு சொல்லிட்டு அப்புறம் கேள்வி கேளு.”
“எதுக்குடி இப்போ இப்படி வெடிக்கிற. நிதானமா பேச தெரியாதா உனக்கு?”
“புரியிற மாதிரி கேள்வி கேட்க தெரியாதா உனக்கு?”
“உன்ன மறுவீட்டுக்கு கூப்பிட்டு இருந்தேன். அதை பத்தி பேசுனாங்களா?”
அம்மாவின் வார்த்தையில் அகல்யாவின் பொறுமை காற்றில் பறந்தது. இருந்தும் கட்டுப்படித்துக் கொண்டு அமைதிக்காக்க, துருவி துருவி கேள்வி கேட்டார் சுகன்யா.
“உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இல்லவே இல்லையாம்மா. என் கல்யாணம் எந்த மாதிரி ஒரு சூழ்நிலைல நடந்துச்சுன்னு உனக்கு தெரியாதா? என்னமோ ஆச ஆசையா கட்டிக்கிட்ட மாதிரி மறுவீட்டுக்கு கூப்பிடுற. உன் மருமகன் குடிச்சிட்டு உடம்பு முடியாம ஆஸ்பத்திரில படுத்திருந்து இப்ப தான் வீட்டுக்கு வந்தாரு. இந்த லட்சணத்துல மறுவீடு ஒன்னு தான் குறை.”
“என்னடி சொல்ற?”
ஆதிலட்சுமி பெண் கேட்டு வரும்போது முதலில் மறுத்தவர் பின் நல்ல குடும்பம் என்று சம்மதித்தார். அனைத்தையும் எடுத்துச் சொன்ன ஆதிலட்சுமி மகன் குடிப்பான் என்பதை மட்டும் மறைத்தார். திருமணத்தன்று மகள் சொல்லி கேட்டு மிகவும் வருத்தமடைந்தவருக்கு இந்த செய்தி இன்னும் வருத்தத்தை கூட்டியது.
“அங்க என்ன தான்டி நடக்குது. என்ன நினைச்சிட்டு இருக்காங்க அந்த வீட்ல இருக்க எல்லாரும். ஏற்கனவே உண்மைய மறைச்சு உன்னை கல்யாணம் பண்ணிட்டு போனதும் இல்லாம இதையும் மறைக்கிறாங்க. நீ போன வை. இப்பவே நான் அங்க வரேன்.” என்ற அன்னையின் வார்த்தையில் தான் கோபத்தில் உளறிவிட்டதை உணர்ந்தாள்.
ஏற்கனவே கலவரத்தோடு இருக்கும் இவ்விடத்தை இன்னும் கலவரப்படுத்த விரும்பாதவள், “நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்லம்மா. உன் மருமகனுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போயிடுச்சு. ட்ரிப்ஸ் போட்டுட்டு வந்தோம் மதியம் தான்.” என்றாள் பொறுமையாக.
“எதனால உடம்பு முடியாம போச்சு?” என அவர் அடுத்த கேள்வியை முன்வைக்க,
“கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டாங்க போல.” என்றதும் சுகன்யாவின் கோபம் இன்னும் அதிகரித்தது. அதை மறைக்காமல் மகளிடம் காட்டி விட,
“அவங்களை கேள்வி கேட்குறதுக்கு முன்னாடி நீ சரியா இருந்தியான்னு யோசிச்சு பாரும்மா. என்ன ஏதுன்னு முழுசா விசாரிக்காம கல்யாணம் பண்ணி கொடுத்தது நீ. இதுல அவங்களை குறை சொல்லிட்டு இருக்க. உன் மருமகன் இப்போ நல்லா இருக்காரு. தேவை இல்லாம பேசாம போன வை” கோபத்தை அவளும் பறைசாற்றினாள்.
“இப்படி எல்லாம் ஆகும்னு நான் என்ன கனவா கண்டேன். கல்யாணம் ஆனதுக்கப்புறமாது பையனை கொஞ்சம் அடக்கி வைக்க கூடாத அவங்க.”
“ஆமா! உன் மருமகன் கைக்குழந்த பொட்டியில போட்டு அடக்கி வைக்க.”
“விளையாட்டு பேச்சுக்கு இது நேரமில்ல அகல். நீயாது உன் புருஷனை திருத்த பாரு. இப்படியே விட்டா உன் வாழ்க்கை தான் நாசமா போகும்.”
அவள் வாழ்வை பாதுகாக்க நல் மனதோடு அறிவுரை கூற, அவை தான் அகல்யாவின் கோபத்தை அதிகமாக தூண்டியது.
“இதுக்கு மேல நாசமா போக என்ன இருக்கு. அதைத்தான் நீ நல்லா பண்ணிட்டியே. சும்மா வாய் பேச்சாளா என்னை கோபப்படுத்தி பார்க்காதம்மா.” என்று அவர் பதில் மொழியை கேட்கக் கூட விருப்பம் இல்லாமல் வைத்து விட்டாள்.
நிம்மதியோடு தூங்கி எழுந்தவள் அவற்றை முழுவதும் தொலைத்து விட்டதால் கடுப்போடு கீழ் இறங்கினாள். தயாளன் சமைத்துக் கொண்டிருந்தார். அவர் கோலத்தைப் பார்த்தவள்,
“இதெல்லாம் எதுக்காக நீங்க பண்றீங்க.” கேட்டாள்.
“எப்பவும் பண்றது தான்மா.” என்றார் புன்னகையோடு.
பதில் எதுவும் பேசாதவள் அவர் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்து உதவிகளை செய்ய முயன்றாள். மருமகளின் செயலை பார்த்தவர் உள்ளம் மகிழ, “பரவால்லடா. நீ கொஞ்ச நேரம் போய் டிவி பாரு. உன் அத்தை எழுந்து வரதுக்குள்ள எல்லாருக்கும் டின்னர் செஞ்சிடுவேன்.” என்றார்.
“இருக்கட்டும். டிவி பார்க்கிற பழக்கம் எனக்கு இல்லை.”
“அப்போ கொஞ்ச நேரம் போய் தூங்குமா.”
“இவ்ளோ நேரம் அதை தான் பண்ணிட்டு வரேன்.” என்றவளுக்கு அவர் அடுத்து எதுவும் கட்டளை இடாமல் சமையலை கவனித்தார்.
மருமகளோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே சட்னி அரைத்தவர் தெரியாமல் அதை கீழே கொட்டி விட்டார். துடைக்க வந்த தயாளனின் கைப்பிடித்து மறுத்தவள், “நீங்க போய் உட்காருங்க நான் கிளீன் பண்ணிக்கிறேன்.” என்றாள்.
அவரோ மருமகளின் பேச்சை மறுத்து அனைத்தையும் சுத்தம் செய்தார். கீழே சிதறிய சட்னி சில துளி அவள் காலில் பட்டிருந்தது. அதை கவனித்து, “சாரிம்மா, கால்ல பட்டுடுச்சு. நீ அப்படி ஓரமா நில்லு.” என்றவர் அடுத்து செய்த செயலை பார்த்து பதறிவிட்டாள் அகல்யா.
அங்கிருக்கும் வேறொரு புது துணியை எடுத்து வந்து மருமகள் கால்களை துடைக்க முயன்றார். தடுத்து நிறுத்தியவள் குறையாத பதட்டத்தோடு, “நீங்க நகருங்க நானே பார்த்துக்குறேன்.” என்றாள்.
“இதுல என்னடா இருக்கு. என் மருமகள் எனக்கு மக மாதிரி. அவ கால பிடிக்கிறதால என் கௌரவம் ஒன்னும் குறைஞ்சிடாது. உனக்கு உடம்பு முடியாம இருந்தா இதெல்லாம் பண்ண மாட்டேனா. இப்ப வரைக்கும் உங்க அத்தைக்கு தினமும் கால் பிடிச்சு விடுவேன் தெரியுமா.”
என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவித கூச்சத்தோடு இருந்தவள் அவரை சமாதானப்படுத்தி தானே கால்களை சுத்தப்படுத்திக் கொண்டாள். அத்தோடு மீதம் இருந்த இடத்தையும் சுத்தம் செய்து அங்கிருந்த பாத்திரங்களையும் எடுத்து போட்டு கழுவினாள். அவர் எவ்வளவு மறுத்தும் காது கொடுத்து கேட்காதவள், “நீங்க போய் டிவி பாருங்க மாமா. நான் வேலைய முடிச்சுட்டு கூப்பிடுறேன்.” முடிவாக அங்கிருந்து விரட்டி விட்டாள்.
மருமகளின் வார்த்தையில் உள்ளம் மகிழ, புன்னகையோடு வெளியில் வந்தார். அங்கு அவரை விட அதிக புன்னகையோடு நின்றிருந்தார் ஆதிலட்சுமி. தூங்கி எழுந்து வந்தவர் கணவனை தேடி வர, கண்கொள்ளா காட்சியாக விருந்தாகினார்கள் இருவரும். மனைவியை பார்த்தவர் புன்னகையை மட்டுமே சிந்த, பதிலுக்கு அவரும் அதே புன்னகையை கொடுத்தார்.
இரவு சமையலை முடித்தவள் இருவரையும் சாப்பிட அழைத்தாள். ஏதாவது பேசி அவள் மாற்றத்தை கெடுக்க விரும்பாதவர்கள் அமைதியாக சாப்பிட அமர்ந்தார்கள். தேவையான உணவை தட்டில் வைத்தவள் சங்கடத்தோடவே நின்றிருந்தாள். அதை புரிந்து கொண்டார்களோ என்னவோ, “நீயும் உட்காருமா சாப்பிடலாம்.” என்றார்கள் ஒரு சேர.
பிறகு சாப்பிட்டுக் கொள்வதாக கூற, கேட்காமல் தங்களுடன் அமர வைத்தார்கள். குடும்பத்தை தவிர மற்ற பேச்சுக்கள் ஓடியது அங்கு. சாப்பிட்டு முடித்த தயாளன், “நீங்க சாப்டுட்டே இருங்க நான் தரணியை கூட்டிட்டு வரேன்.” என்று மேலே சென்றார்.
மகனின் அறை வாசலில் நின்றவர் அவனை காணாமல் கீழே வர, “தெரியல. நான் எழுந்திருக்கும் போதே ரூம்ல இல்ல.” கணவனைப் பற்றி விசாரித்த மாமனாருக்கு பதில் சொன்னாள்.
“பின்னாடி எங்கயாது இருப்பான் நான் கூட்டிட்டு வரேன்.” என்றவர் வீடு முழுவதும் அலசி ஆராய்ந்தார். எங்கும் அவனின் உருவம் இருப்பதாக தெரியவில்லை.
குழப்பத்தோடு உள்ளே வந்தவர் இருவரிடமும் விஷயத்தை சொல்ல, இருவருக்கும் பலத்த யோசனை. தரணிக்கு அழைப்பு விடுக்க, ஓசை அவன் அறையில் கேட்டது. மூவரும் அங்கு செல்ல, கைபேசி மட்டும் தான் தனியாக மெத்தையில் கிடந்தது.
உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்தவன் எங்கு சென்று இருப்பான் என்ற குழப்பத்தில் மூவரும் அமர்ந்திருக்க, தள்ளாத நடையோடு அவர்கள் முன் நின்றான் தரணீஸ்வரன். மகனைப் பார்த்த இருவருக்கும் பேரதிர்ச்சி.
தயாளன் மகனை கண்டபடி வசைபாட, எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து தன் அறைக்கு சென்று விட்டார் ஆதிலட்சுமி. அகல்யாவிற்கு அவனின் கோலம் பெரும் கடுப்பை கொடுத்தது. தன் கோபம் முழுவதையும் காட்டிய தயாளன் அங்கிருந்து நகர,
“போங்க! எல்லாரும் என்னை விட்டு போங்க.” என்றவாறு படியேறினான்.
தரணியின் பேச்சும் செய்கையும் இருக்கும் கடுப்பை இன்னும் அதிகரிக்க, தலையில் அடித்துக் கொண்டு அவளும் நடந்தாள். பாதி படிக்கட்டு ஏறியவன் மயக்கத்தில் தடுமாறி விழப்போனான். பின்னால் வந்தவள் சுதாரித்து தாங்கிக் கொள்ள,
“என்னை தொடாத!” என்று தள்ளினான்.
“இப்ப மட்டும் நான் பிடிக்காம விட்டிருந்தா மண்டை உடைஞ்சு செத்து இருப்படா குடிகாரா.”
“யாரடி குடிகாரன்னு சொல்ற. தரணீஸ்வரன் ஒழுக்கமானவன். அவனுக்கு மது வாடையே பிடிக்காது.”
“மூஞ்சில துப்பிடுவேன். பேசாம வந்து தொல.” என்றவள் ஒருவழியாக அவனை அறைக்கு கூட்டி வந்தாள்.
உள்ளே வந்தவன் தரையில் தொப்பென்று விழுந்தான். நன்றாக இருந்திருந்தால் கோபத்தை காட்டி அவனை வாட்டி வதைத்து இருப்பாள். சுயநினைவு இல்லாதவனிடம் என்ன பேசுவது என்று தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டவள் எழுப்ப முயற்சித்தாள்.
அவன் உடலை அசைக்கக்கூட முடியவில்லை அவளால். சோர்ந்து பக்கத்தில் அமர்ந்தவள் செவியில் விடாமல் அவன் புலம்பல் விழுந்தது. இருக்கும் கோபத்தில் குளியலறை சென்றவள் ஒரு மக் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் வீசி அடித்தாள்.
“ஏய்! தரணி மேல யாரு சுச்சு போறது. எழுந்தன்னு வைச்சுக்கோ அவ்ளோ தான்.” என்று எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
அப்படியே அழைத்துச் சென்று மெத்தையில் படுக்க வைக்கலாம் என்ற முயற்சி தோல்வி அடைந்தது மீண்டும் அவன் தரையில் விழுந்ததால். மனதில் விடாமல் அவனை திட்டிக் கொண்டே இருந்தாள். தன்னால் எழுப்ப முடியாது என்பதால் அங்கிருக்கும் பொருட்களை அவன் மீது தூக்கி அடித்து எழுப்பிக் கொண்டிருந்தாள்.
தள்ளாடி… தள்ளாடி நடந்தவன் மெத்தையில் விழுவான் என்று எதிர்பார்த்தவள் இன்னும் கோபமாகி போனால் குளியல் அறையில் விழுந்ததில்.
ஜீவன் துடிக்கும்...
ஜீவன் 12.
குளியலறை நுழைவாயிலில் விழுந்தவன் உளறிக் கொண்டிருக்க, எத்தனை முறை தான் அவன் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாளோ பாவம் இந்த முறையும் அடித்துக் கொண்டு நின்றாள். திடீரென்று ஒரு யோசனை தோன்ற குளியலறைக்குள் நுழைந்தவள் அவனை இழுத்து குழாய் அடியில் படுக்க வைத்தாள்.
தண்ணீரைத் திறந்து விட்டாள். சரியாக அவன் தலையை நனைத்தது. முதலில் கண்டு கொள்ளாதவன் பின் எழ முயல, வலுக்கட்டாயமாக பிடித்து உட்கார வைத்தாள்.
“அய்யோ! மழை பெய்து… நனைஞ்சா எங்க அம்மா திட்டுவாங்க.”
“பண்ற வேலை எல்லாம் பண்ணிட்டு அம்மாக்கு பயப்படுற பிள்ளை மாதிரியே பேசாதடா.”
“ஏய்! யாரடி “டா” போட்டு பேசுற. நான் எங்க அம்மாக்கு பயந்த பிள்ளை தான் தெரியுமா.”
“பேசாம உக்கார்ந்திடு இருக்குற கோபத்துக்கு கழுத்தை நசுக்கி கொன்னுடுவேன்.” என்றவள் முன்பு வீரமாக நெஞ்சை நிமிர்த்தி நின்றவன்,
“கொன்னுடு என்னை கொன்னுடு. எல்லாரையும் கஷ்டப்படுத்துறேன். முக்கியமா எங்க அம்மாவ. எனக்காக ஹாஸ்பிடல்ல எப்படி அழுதாங்க தெரியுமா.” என்றவன் நேற்று போல் அழத் துவங்கி விட்டான்.
“இவ்ளோ அக்கறை இருக்கிறவன் எதுக்கு இப்ப குடிச்சிட்டு வந்த.”
“வேற என்ன பண்றது. நான் தான் தப்பு பண்ணிட்டேனே. நான் உயிரோடவே இருக்கக் கூடாது. இப்பவே சாகுறேன்.”
ஷவர் குழாயை எடுத்தவன் கழுத்தை நெறித்துக் கொள்ள ஆரம்பித்தான். அவன் செயலில் திகைத்தவள், “என்ன பண்ற விடு.” என்று தடுத்துக் கொண்டிருந்தாள்.
கேட்காமல் இன்னும் தன் கழுத்தை இறுக்க ஆரம்பித்தான். வெகு சிரமப்பட்டு அவன் அசந்த நேரம் பார்த்து அவன் கையில் இருந்ததை அகல்யா உருவ, “இப்படிதான் அன்னைக்கு சாகப்போகும் போதும் என்னை காப்பாத்திட்டாங்க. இல்லன்னா நான் செத்துப் போய் இருப்பேன் நிம்மதியா. எங்க அம்மாவும் அப்பாவும் இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்க மாட்டாங்க.” என்று மண்டியிட்டு அழ துவங்கினான்.
தற்கொலை செய்யும் அளவிற்கு அப்படி என்ன இவன் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் என்ற சிந்தனையில் அவனை கவனிக்க மறந்து விட்டாள். அழுது கொண்டிருந்தவன் வேகமாக அங்கிருந்த குழாயில் முட்டிக் கொண்டான்.
இடித்த வேகத்தில் ரத்தம் பீறிட்டு அடித்தது. தண்ணீர் குழாய் இன்னும் மூடாமல் இருக்க, அத்தோடு சேர்ந்து ரத்தமும் காட்சி அளித்தது அகல்யாவிற்கு. பதறியவள் அவன் செயலை தடுக்க பார்க்க, விடுவதாக இல்லை தரணீஸ்வரன். பொறுமையாக கையாண்டு கொண்டிருந்தவள் அசுர வேகம் எடுக்க, இருவரும் சற்று தூரம் சென்று விழுந்தார்கள்.
தெளிந்த மயக்கமும் ரத்தத்தில் சோர்ந்து விட, அவனும் சோர்ந்து அங்கேயே படுத்து விட்டான். ரத்தத்தோடு கிடப்பவன் கோலத்தை பார்க்க கவலையாக இருந்தது அவளுக்கு. ரத்தத்தை நிறுத்துவதற்கான அனைத்தையும் மேற்கொண்டாள். அவை பலன் அளிக்காமல் போக வேறு வழியில்லாமல் தயாளனை அழைக்கச் சென்றாள்.
அவரோ அப்போது தான் மனைவியை சமாதானப்படுத்தி தூங்க வைத்திருந்தார். மருமகள் வார்த்தையில் மனம் நொந்து மகனைக் காண வந்தார். அவன் இருக்கும் கோலம் ரத்த கண்ணீரை வரவழைக்க, அழுகையோடு மெத்தையில் கிடத்தினார். தனக்குத் தெரிந்த மருத்துவரை தொடர்பு கொண்டவர் என்ன செய்வதென்று விசாரிக்க, மதுவில் மிதந்து கொண்டிருப்பவனை மருத்துவமனை அழைத்துச் சென்றாலும் சிகிச்சை மேற்கொள்ளப்படாது என்றார்.
அவை தயாளனுக்கும் தெரியும் என்பதால் தற்காலிகமாக ரத்தத்தை நிறுத்த உதவி கேட்க, அவர் கொடுத்த மருத்துவ உதவியால் ரத்தம் நின்றது. அதற்கு மேல் மகனைப் பார்க்க முடியாது என்பதால் அழுகையோடு அங்கிருந்து நகர்ந்து விட்டார். அகல்யாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை. வெகு நேரமாக தரணீஸ்வரனை பார்த்தபடி யோசனையில் நின்றிருந்தாள்.
நின்றிருந்த கால்கள் வலியை கொடுக்க அவன் பக்கத்தில் அமர்ந்தாள். அப்போது தான் ஈரமான உடையோடு இருக்கிறான் என்பது புரிய, பல நேர யோசனைகளுக்கு பிறகு உடையை மாற்றி விட முடிவு செய்தாள். முதலில் அவன் மேல் கை வைக்க கூச்சம் கொண்டது கைகள். உதவுவதாக மனதை தைரியப்படுத்தியவள் ஆடையை கழட்டினாள்.
சங்கடத்தோடு செய்து கொண்டிருந்தவள் கைகள் அப்படியே நின்றது அவன் நெஞ்சில் இருக்கும் தழும்பை பார்த்து. சூடு வைத்திருப்பான் போல பெரிய தழும்பாக காட்சியளித்தது. ஏன் என்று தெரியாமல் அவள் கை அந்த இடத்தை தொட்டது.
உடனே ஆக்ரோஷமாக அவளின் கை ஒரு கரம் பிடித்தது. அதிர்ந்து தரணியை பார்க்க, “என்னை தொடாதடி. அந்த அருகதைய நீ எப்போவோ இழந்துட்ட. அதனால தான் உன் பேர இங்க இருந்து அழிச்சிட்டேன். செத்தா கூட இனிமே என் வாழ்க்கையில உனக்கு இடம் இல்லை.” என்று வேகமாக அவளின் கையை தள்ளிவிட்டான்.
மயக்கம் சற்று தெளிந்திருந்தது அவனிடம். ஏதேதோ உளறிக் கொண்டிருந்தான். அத்தனையும் கேட்டவளுக்கு ஓரளவிற்கு புரிந்தது. மனைவியின் பெயரை அழித்து இருக்கிறான் கசப்பான சம்பவங்களால் என்று. அவளின் மூளை என்ன பெயராக இருக்கும் என்ற யோசனையில் இறங்க, பார்வை அந்த இடத்தை மொய்த்தது.
கைகள் தானாக சூடு பட்ட தழும்பை வருட, இந்த முறையும் தள்ளிவிட்டான். “சிவா என்னை தொடாத.” என்றவன் வார்த்தையில் அருவருப்பை உணர்ந்தவள் கைகளை எடுத்துக் கொண்டாள்.
“உன்ன கல்யாணம் பண்ணது தப்பு. உனக்காக என் அப்பா அம்மாவ தனியா விட்டுட்டு போனது தப்பு. உன்ன நம்பி உன்னை தனியா விட்டது தப்பு. எல்லா தப்பையும் பண்ணிட்டு இன்னும் உயிரோட இருக்கேன் இது தான் பெரிய தப்பு.” என்றவன் தன் கன்னத்தை தானே வேக வேகமாக அடித்துக் கொண்டான்.
மனதில் இருக்கும் வலியை தனக்குள் மறைத்தவள் அந்த நிலையிலும் அவனை தடுத்தாள். வேகமாக கைகளை தள்ளி விட்டு மீண்டும் முன்னாள் மனைவியின் பெயரை கூற, அவனுக்கு “சுளீர்” என வலிக்குமாறு கன்னத்தில் ஒன்று வைத்து,
“நான் அகல்யா” என்றாள்.
அதன்பின் எதுவும் பேசவில்லை தரணீஸ்வரன். அவன் நடவடிக்கையை பார்த்து பாதி சுயநினைவில் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டாள். சில நொடிகள் கடந்து அடித்தது தவறு என புரிந்தது அவளுக்கு. இருந்தும் இன்னொரு பெண்ணின் பெயரை தனக்கு சூட்டுவதை விரும்பவில்லை அவள்.
எதற்கு இந்த நிலைமை என்று எண்ணிக் கொண்டிருந்தவள் கண்களில் லேசாக நீர் கூட உருவாகியது. தன்னைத்தானே வெறுத்தவள் அவனை விட்டு எழ முயல, “சாரி” என்ற முணங்கல் ஓசை அவள் நடையை நிறுத்தியது.
திரும்பி அவன் முகம் பார்க்க, “சாரி” மீண்டும் சொன்னவன் திரும்பிப் படுத்தான்.
வெளியேறும் செயலை நிறுத்தியவள் அவன் பக்கத்தில் அமர்ந்தாள். மீண்டும் யோசனைகள் அவளை சூழ்ந்துக் கொண்டது. அதையும் தாண்டி அவன் முணங்கள் சத்தம் காதை நிறைக்க, உற்றுக்கேட்க ஆரம்பித்தாள்.
“உன்னையும் கஷ்டப்படுத்துறதுக்கு சாரி. என்னை விட்டு நீ போய்டு. இல்லனா என் அம்மா அப்பா மாதிரி கடைசி வரைக்கும் அழுதுட்டு தான் இருக்கணும்.”
இவை மட்டும்தான் அவள் காதில் விழுந்தது. அதன்பின் பேசியதெல்லாம் அரைகுறையாக செவியை நிறைக்க, சரியாக புரியவில்லை. இவன் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை உணர முடியவில்லை அவளால்.
தரணி திரும்பி படுத்ததும் மெத்தை முழுவதும் நிறைந்திருத்த ஈரம் காட்சியளித்தது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லை இதில் மீண்டும் ரத்தம் வரும் அளவிற்கு காயம் வேறு. ஈரமான உடையோடு இருந்தால் இன்னும் மோசமான உடல்நிலைக்கு ஆளாவான் என்பதால் சட்டையை மாற்ற மீண்டும் முயன்றாள். தடை போட்டான் விடாமல்.
விட்டுக் கொடுத்துப் போனவள் ஒரு கட்டத்தில் சலிப்பாக, “இப்படியே இருந்தா ஜுரம் வந்து செத்துருவ. உனக்காக இல்லனாலும் உன் அம்மா அப்பாக்காக சும்மா இரு.” என்றதும் தடுக்கும் கைகள் நின்றது.
‘ஃபிராடு! நல்லா சுய நினைவா தான் இருக்கான்.’
உள்ளுக்குள் அவனை வசை பாடியவள் ஒருவழியாக மேல் ஆடையை கழட்டி விட்டாள். அலமாரியை திறந்து கைக்கு கிடைத்த ஒரு ஆடையை எடுக்க, முகம் அழிக்கப்பட்ட புகைப்படம் அவள் காலடியில் விழுந்தது.
கீழே குனிந்தவள் பார்வையில் திருமண கோலத்தில் இருக்கும் தரணீஸ்வரன் தெரிந்தான். அவன் பக்கத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை. தாலி கட்டியவன் இன்னொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்தவள் உடனே அழுது விட்டாள். எப்படி எல்லாம் தன் திருமணத்தை நினைத்து கனவு கண்டாளோ அதற்கு எதிராக அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது.
புகைப்படத்தை கையில் எடுத்தவள் தன் கோபம் முழுவதையும் காட்டினாள் அதைக் கிழித்து. இருந்தும் கோபம் தீராதவள் அத்தனை கோபத்தையும் ஒன்று திரட்டி காட்டினாள் அவனிடம். அடித்தடித்து கைகள் தான் ஓய்ந்தது வலியில். அவள் அழுகையில் கணவனின் மயக்கம் முக்கால்வாசி குறைந்து இருந்தது.
எழுந்து உட்கார்ந்தவன் எப்படி கேட்பது என்று தெரியாமல் மௌனம் காக்க, “உன் முன்னால் பொண்டாட்டி சம்பந்தமான ஒரு பொருள் இனி இந்த வீட்ல இருக்கக் கூடாது. அப்படி ஏதாச்சும் என் கண்ணுல சிக்குச்சு நீ என்ன சாகுறது நானே உன்னை கொன்னுடுவேன்.” என்று கத்தினாள்.
வெகு நேரம் கழித்து அவனிடமிருந்து பதில் வந்தது, “அவ சம்பந்தமான எந்த பொருளும் என்கிட்ட இல்ல. ரெண்டு போட்டோ மட்டும் தான் இருக்கு. இனிமே அதுவும் இருக்காது.” என்று.
உள்ளுக்குள் இருக்கும் கோபம் வார்த்தைகளாக வெளிவந்தது, “உயிரில்லா பொருள் அத்தனையும் தூக்கி போட்டுட்ட. இதோ! நீ இருக்கியே அசிங்கமா… உன்ன என்ன பண்றது. அவளோட பழகுனதை மறக்க முடியுமா உன்னால. அவ தொட்ட இந்த உடம்ப அழிச்சுக்க முடியுமா உன்னால. என் வாழ்க்கைய இப்படி மாத்திட்டியே.
என் வருங்கால புருஷனுக்கு ஒரு முன்னாள் காதலி இருந்திருந்தா கூட நான் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பேன். அப்படிப்பட்ட எனக்கு எதுக்காக உன்ன கொடுத்தாரு கடவுள் .” என சத்தமிட்டு தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
எதுவும் பேசாமல் வெளியேறியவன் மீண்டும் நல்ல போதையில் உள்ளே வந்தான். அவன் சென்று இருபது நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். அதற்குள் எங்கிருந்து தன்னுடைய போதை உலகத்தை கையில் எடுத்தானோ!
“திரும்ப கல்யாணம் பண்ணுவன்னு கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை. எல்லாம் என் கைய மீறி நடந்துடுச்சு. உனக்கு நான் டைவர்ஸ் தரேன். யார பிடிக்குதோ அவனை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழு. என்னை மாதிரி ஒரு அசிங்கமானவன் உனக்கு வேணாம். எனக்கு ஒரு மூணு மாசம் மட்டும் டைம் கொடு. எப்படியாது இந்த நரகத்துல இருந்து உனக்கு விடுதலை தரேன்.” என்றவன் சுயநினைவு இன்றி தள்ளாடி மெத்தையில் சரிந்தான்.
ஜீவன் துடிக்கும்…
Veetula ay saraku olichu vaychurupan pola. Kasta kaalam