Loading

துருவ் இவர்கள் பேசியதைக் கேட்டு யோசனையுடன், வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் இருவர் தவிர வேறு யாரிடமும் அவன் பேசியதும் இல்லை. பாசம் வைத்ததும் இல்லை. ஆனால் அவன் கொண்டது தகுதியற்றவர் மேல் வைத்த பாசம் என்று அவனுக்கு அப்பொழுது புரியவில்லை.

அந்த நேரத்தில் அவனின் அம்மா கீதா போன் செய்ய, அதனை எடுத்துப் பேசினான்.

கீதா, “துருவ் உங்க அப்பா பண்றது கொஞ்சம் கூட சரி இல்லை. என் க்ளப்ல இன்னைக்கு ஒரு பார்ட்டி போகணும்னு சொல்லிருந்தேன். உன் அப்பா மீட்டிங் இருக்குன்னு போய்ட்டாரு. அந்த இடத்துல எனக்கு எவ்ளோ இன்சல்ட் ஆ இருக்கும்?” என்று சரமாரியாகத் திட்ட,

அவன் “மாம்… அப்பாவுக்கு ஏதாவது வேலை இருந்துருக்கும்” எனக் கூறி முடிக்கும் முன்,

அவர் “ஓ அவருக்கு என்னைவிட வேலை முக்கியமா போச்சு. இப்ப எனக்கு என் மானம் மரியாதையே போச்சே. கொஞ்சமாவது அதைப் பத்தி நினைச்சு பார்க்கிறாரா” என்று அவர் திட்டிக்கொண்டிருக்கையிலேயே, ராமர் மற்றொரு லைனில் வந்தார்.

“மா நான் திரும்பக் கூப்புடுறேன் வைங்க” என்று அப்பாவின் போனை எடுக்க, அவர் கீதாவிற்கு மேல், அவனிடம் திட்ட ஆரம்பித்தார். “உங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணதுக்கு என்னை டார்ச்சர் பண்ணி பைத்தியமா தான் அலைய விட்றா. வேலை இருக்குன்னு சொன்னா புருஞ்சுக்காம நொட்டு நொட்டுன்னு போன் பண்ணிகிட்டே இருக்காள்… சே!” என்று அவனிடம் கத்த, அவன் உட்சபட்ச கடுப்புடன் போனை அணைத்து வைத்து விட்டான்.

இவர்களின் சண்டைக்குப் பயந்தே அவன் தனியாக வீடு எடுத்துத் தங்கி இருக்கிறான். மேலும், காதல், கல்யாணம் என்றாலே அவனுக்கு அவனின் அப்பா அம்மா ஞாபகம் தான் வரும். கூடவே அவர்கள் போடும் சண்டையும் ஞாபகம் வர, காதல், அன்பு அனைத்தையும் முற்றிலும் தவிர்த்தான். அவன் அத்தை காஞ்சனாவிடம் கூட அவன் சரியாகப் பேசியது கிடையாது. அவன் வாய் திறந்து சாதாரணமாகப் பேசுவதே ரிஷியிடமும் சைதன்யாவிடமும் தான்.

ரிஷிக்காக என்று தான் வேறு வழி இல்லாமல், உத்ராவை கூட வைத்திருக்கிறான். இதில், பாசமாக வேறு பேசச் சொன்னால், அவனுக்கு எப்படி பேசுவது என்று கூடத் தெரியவில்லை. இது எங்க போய் முடியப்போகுதோ? என்று தன்னை நொந்தவன், மறுநாள் எப்போதும் போல் 4 மணிக்கு அவள் வீட்டு காலிங் பெல்லை அடிக்க, அவள் கதவைத் திறக்கவே இல்லை.

அதில் கடுப்பானவன், விடாமல் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டே இருந்தான். அவள் கதவைத் திறந்ததும், “ப்ச்! சீக்கிரம் எந்திரிக்க மாட்டியா நீ! யூஸ் லெஸ்! 10 நாளாச்சு இன்னும் சீக்கிரம் எந்திரிக்க பழகல. உன் பின்னாடியே நான் அலைஞ்சுட்டு இருக்க முடியுமா?” என சரமாரியாகக் கத்தியவன் அதன் பின்னே அவளைப் பார்க்க, அவள் சோர்ந்து போய் நின்றிருந்தாள்.

“இல்லை துருவ்… எனக்கு ‘பெல்’ அடிச்சது கேட்கல. இன்னைக்கு நான் ஜாகிங் வரல” என்று சற்று சோர்வுடன் கூற, அவன் “ஏன்” என்றான்.

“உடம்பு சரி இல்லை” என்றதும், தோளைக் குலுக்கி கொண்டு, “இன்னைக்கு ஒரு நாள் தான்” என்று உத்தரவிட்டுப் போனான். அவளுக்கு என்ன ஆயிற்று என்று கூட அவன் கேட்கவில்லை.

அன்று முழுதும் சோர்வாகவே இருந்தவளை, கண்டுகொள்ளாமல் இருந்தவன், மறுநாள் ஜாகிங் கூப்பிட, அப்பொழுதும் அவள் வரவில்லை என்றதும், “இப்படியே ஏதாவது காரணம் சொன்னா, அப்பறம் எப்படி அவ்ளோ பிஸினஸையும் பார்த்துப்ப. இதெல்லாம் சும்மா, 9 டு 5 ஆஃபீஸ் போனா போதும்ன்னு நினைச்சுகிட்டு இருக்கியா? ராத்திரி பகலா உடம்பு நல்லாருந்தாலும் இல்லைனாலும் வேலை பார்க்கணும். அப்போதான் இதை எல்லாம் வச்சு மேனேஜ் பண்ண முடியும் ஒரு நாள் நீ படுத்துட்டாலும் 10 நாளைக்கு தொழில் மொத்தமா படுத்துடும்” என்று திட்டியவன்,

” கிளம்பி வா” என்று கட்டளையைக் கொடுத்து விட்டு, வெளியில் சென்றான்.

அவள் நிற்கக் கூட முடியாமல் வர, அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், “ரன்” என்றான்.

உத்ரா, “நான் இன்னைக்கு வாக்கிங் வரேனே… ப்ளீஸ்!” எனக் கெஞ்சலாய் கேட்க, அவளை முறைத்து விட்டு, “ஏன் ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு அங்கபிரதட்சணம் வாயேன்” என்று கடுப்படித்தவன், எப்படியாவது அவளை ஓட விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தான். இந்தப் பாசமாய் பேசுவதெல்லாம் நமக்கு ‘செட்’ ஆகாது என்று நினைத்து.

அவள் முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டு நடந்து வர, சிறிது தூரம் சென்றதும் “துருவ் என்னால நடக்க முடியல…” என்றாள் பாவமாக. அப்பொழுதும் அவன் அவளுக்கு என்ன செய்கிறது என்று ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. “பரவாயில்லை மெதுவா நடந்து வா!” என்று விட்டு முன்னே சென்றான்.

பின் ஒரு போன் வர, நின்று பேசிக் கொண்டிருந்தவன் அவனைத் தாண்டி நடந்த உத்ராவை பார்த்து “ஸ்ஸ்ஸ்” என்று தலையில் கை வைத்துக் கொண்டு, “உத்ரா” என்று அழைத்தான். அவள் என்னவென்று பார்க்க, “வா வீட்டுக்குப் போலாம்” என்றதும், அவள் “ஹப்பாடா” எனத் திரும்பி நடந்தாள்.

அவள் மெதுவாய் நடக்க, அவன் அதற்கு மேல் மெதுவாய் அவள் பின்னாலேயே நடந்து வந்துகொண்டிருந்தான். ‘இவன் ஏன் என் பின்னாடி நடந்து வரான்?’ என்று திரும்பி அவனைப் பார்த்து என்னவென்று கேட்க, அவன் “நத்திங் நட!” என்றான்.

வீடுவரைக்கும் அவளுக்கு அரணாய் அவள் பின்னாலேயே வர, அவள் “எதுக்கு என் பின்னாடியே வரீங்க?” எனக் கேட்டதும், துருவ் “அது… உன் டிரஸ்ல ப்ளட்…” என்றான் தயக்கமாய்.

அதன்பிறகே அவளும் அதனைக் கவனித்தாள்.

துருவ், “இதான் ப்ராப்லம்ன்னு சொல்லிருக்கலாம்ல?” எனத் தயக்கத்துடன் கேட்டதும்,

“மறந்துட்டேன் துருவ்… நெக்ஸ்ட் மந்த்ல இருந்து, போஸ்டர் அடிச்சு ஒட்டிடறேன்… ஹ்ம்ம்” என்றவள் “எனிவே என் பின்னாடியே பாடி கார்டா வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று விட்டு வீட்டினுள் சென்றாள்.

துருவ் தான் பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றிருந்தான். ‘இவளுக்குலாம் பாவமே பார்க்கக் கூடாது… பேச்சைப் பாரு’ என்றவனுக்கு சிரிப்பும் சேர்ந்தே தான் வந்தது அவள் போஸ்டர் அடித்து ஒட்டுகிறேன் என்றதை கேட்டு.

அன்று முழுதும், அவளை வீட்டிலேயே ஓய்வெடுக்க சொல்லி விட்டு அலுவலகம் சென்று விட்டான். உத்ரா தான் ‘ரெஸ்ட்லாம் எடுக்கச் சொல்றான் அதிசயம் தான்’ என்றெண்ணியவள், காலையில் அவன் பின்னாலேயே வந்ததை நினைத்துச் சிரித்து கொண்டாள்.

அவளுக்கு அவன் திட்டுவதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவே இல்லை. அவள் வீட்டில் எல்லாரும் அவள் சொல்லுவதை தான் சட்டமாகச் செய்வார்கள். அதிலும், அர்ஜுன், அஜய், விது மூவரும் அவள் ‘எள்’ என்றால் எண்ணையாக வந்து நிற்பார்கள். அவளைத் திட்டுவது அவள் பெரியப்பா மட்டுமே. அப்பொழுதும் அவள் அவர் சொல்வதை கேட்காமல் எஸ்கேப் ஆகி விடுவாள்.

இவளைக் கண்டாலே வழிந்து கொண்டு நின்று பேசும் இளைஞர்களைக் கண்டவளுக்கு துருவ் சற்று வித்தியாசமானவனாகவே தெரிந்தான். வீட்டு வாசல் படியைத் தாண்டி உள்ளே வராத அவனின் கண்ணியமும், தான் சொல்வதை கேட்டே ஆக வேண்டும் என்று அவளைத் திட்டும் அவனின் வீம்பும் அவளுக்கு அவனின் மேல் ஒரு ஈர்ப்பை கொடுத்தது.

அதனாலேயே ஒரு ஆர்வத்தில் அவன் என்ன திட்டினாலும் அதனைக் கண்டுகொள்ளாமல், அவன் சொன்னதெல்லாம் செய்தாள்.

மறுநாள், அவளை லண்டனை சுத்தி காட்டுகிறேன் என்று வெளியில் அழைத்துச் சென்றான் துருவேந்திரன். அவளுக்குத் தான் ஒரே ஆச்சர்யம். ‘இந்த சிடுமூஞ்சியா நம்மளை வெளிய கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்றான்’ என்று.

அவனுக்கு இவளை வெளியில் அழைத்துச் செல்வதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை. அவள்தான் அலுவலகம் வந்தால் அவனைப் பார்த்தே ஏதாவது கற்றுக்கொண்டு அவனிடமே கேள்வி கேட்கிறாளே!!!

“என்ன துருவேந்திரன் சார் திடீர்னு வெளிய எல்லாம் கூட்டிட்டு போறீங்க?” என உத்ரா கேட்க, அவனோ “நீ லண்டனை பத்தி தெரிஞ்சுக்கணும்ல, அதான்” என்று ஊரைச் சுற்றி காட்டினான். அவளும், ஜாலியாக அவனுடன் எதையாவது பேசிக்கொண்டு வந்தாள். அவள் பேசியதற்கு எல்லாம் சிறு தலையசைப்பை மட்டும் தான் கொடுத்தான்.

அடுத்து வந்த நாட்களும், இதே மாதிரி செல்ல அலுவலகத்திற்கு சென்றாலும் அவள் அவனிடம் எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள். அவனும் வேலை கற்று கொடுக்க சொல்லி கேட்காதவரைக்கும் நிம்மதி தான் என்று அமைதியாய் இருந்தான்.

இதில் அவனுக்குப் பெரும் தலைவலியாய் இருந்தது, அவள் வார்த்தைக்கு வார்த்தை அர்ஜுன், அஜய், விது என்று பேசியது தான். அதிலும் அஜய், பஜ்ஜி என்று சுஜியை கலாய்த்ததை ஒரு 10 தடவையாவது அவனிடம் ஏதோ முதல் முறை சொல்வது போலவே சொல்வாள்.

அதிலும், அவள் வீட்டில் அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா என்று பேசப் பேச அவனுக்கு ஏதோ கதை அளப்பது போல் தான் இருக்கும். இப்படியும் பாசமாகவா இருப்பார்கள்? என்று அதையெல்லாம் நம்ப மறுத்து விட்டான்.

அதற்கு மேல், அவர்கள் வேண்டும் என்றே செய்த தவறை மறைக்க, இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வான்.

வீட்டில் இருக்கும் அத்தனை பேரைப் பற்றியும் தினமும் பேசி அவனைக் கடுப்பேத்துவாள். அவனும் லேசாய் வராத சிரிப்பை வர வைத்துக் கேட்டு கொள்வான். அவ்வப்பொழுது அவளிடம் சிறிது கேரிங் ஆக இருப்பது போல் காட்டிக்கொள்வான். இப்படியே அடுத்த 10 நாட்கள் சென்றிட, உத்ராவிற்கு துருவின் மேல் ஈர்ப்பையும் தாண்டி ஒரு உணர்வு பிறந்தது. அவனைக் காதலிக்க ஆரம்பித்தாள். அதனை அவனிடம் சொல்லவும் செய்தாள்.

வெட்கப்பட்டு கொண்டு, கூச்சத்துடன் எல்லாம் இல்லை. அவன் கண்ணை நேராய் பார்த்து, “எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. என்னம்மோ தெரியல உங்க கூடவே லைஃப் லாங் இருக்கணும் போல இருக்கு… ஏதோ பல வருஷம் பழகுன மாதிரி ஒரு ஃபீலிங்! இதுக்கு பேர் தான் லவ்வான்னு தெரியல… அப்படி இதான் லவ் அப்டின்னா… எஸ் ஐ லவ் யு!” என்றாள் சிறு புன்னகையுடன்.

இதனைக் கேட்டு அதிர்ந்த துருவ், “வாட்?” என்றான்.

அந்த நேரத்தில் ரிஷி அவனுக்கு போன் செய்திட, தனியாக சென்று அதனை எடுத்துப் பேசியவன் கோபமாக, “டேய்! உன் தங்கச்சி என்னை லவ் பண்றேன்னு சொல்றாடா” என்றிட, லௌட் ஸ்பீக்கரில் அவன் பேசியதை கேட்ட, ரிஷி, காஞ்சனா, மற்றும் சைதன்யா மூவரும் வில்லங்கமாகச் சிரித்து கொண்டனர்.

ரிஷி “அவள் லவ் பண்றதை என்கிட்டே ஏண்டா சொல்ற…?” என்று அசால்டாகக் கேட்க, துருவ் “கடுப்பேத்ததடா! நான் போய் அவளை நாலு திட்டு திட்டுறேன்” என்று போனை வைக்க ஆயத்தமானான்.

ரிஷியோ, “நண்பா அப்படி எதுவும் பண்ணிடாதடா… அவள் உன்னை லவ் பண்றேன்னு சொன்னது பெரிய ஆச்சர்யம் தான். அவள் அவ்ளோ சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டாள். உன்னை லவ் பண்றேன்னு சொல்றான்னா உன்னை ரொம்ப நம்புறான்னு அர்த்தம். நீ அவளுக்கு ஓகே சொல்லுடா” என்றான்.

அதில் கோபத்தின் உச்சிக்கே சென்றவன், “டேய் விளையாடாத, உனக்கே தெரியும் எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு… அப்பறம் எப்படி டா? அதுவும் அந்த இரிடேடிங் கேர்ள் சான்ஸ்ஸே இல்லை” என்றான் அழுத்தமாய்.

“நண்பா, நான் என்ன உன்னை உண்மையிலேயேவா அவளை லவ் பண்ண சொல்றேன். ஜஸ்ட் லவ் பண்ற மாதிரி நடிக்கத்தான் சொல்றேன். அதுவும் இன்னொரு பத்து நாளைக்கு தான். அதுக்கு அப்பறம் அவளால உனக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது. ஒரு பத்து நாள் அடஜஸ்ட் பண்ணுடா ப்ளீஸ்” என்று கெஞ்சுவது போல் பேச,

துருவ் “என்னால அவளுக்கு ஓகேலாம் முடியாது. இன்னும் 10 நாள் தான் உனக்கு டைம் நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. அவள் இங்க இருக்க கூடாது. புரியுதா?” எனக் கோபத்துடன் பேசி விட்டு போனை வைத்தவன், உத்ராவின் அருகில் வர, அவள் போனில் தீவிரமாக ‘கேம்’ விளையாடிக்கொண்டிருந்தாள்.

அதனை பார்த்துத் தலையில் அடித்தவன், தொண்டையை செரும, அவள் நிமிர்ந்து பார்த்து, “என்ன?” என்று கேட்டாள். அவன் அவளை திட்டத் தான் வந்தான். ஆனால் அது முடியாமல், “ஒண்ணும் இல்ல” என்று தலையாட்டினான்.

பின் அவளே, “சரி நான் சொன்னதுக்கு நீங்க எதுவுமே சொல்லல?” எனக் கேட்க,

அவன் “என்ன சொல்லனும்?” என்றான் அமைதியாக.

அவள் சாதாரணமாக “ஐ லவ் யு தான்” என்றதும் வந்த கோபத்தை அடக்கி விட்டு, “லவ் யு” என்றான் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு.

அவள் கலகலவெனச் சிரித்து, “இவ்ளோ ரொமான்டிக்கா யாராலயும் ப்ரொபோஸ் பண்ண முடியாது” என்று அவனைக் கலாய்க்க, துருவ் அவளை முறைத்தான்.

உத்ரா தான், “விடுங்க! விடுங்க! உங்களுக்கு முறைக்கிறது தவிர மத்ததெல்லாம் வராதுன்னு எனக்கே தெரியும்” என்று மேலும் கிண்டலடித்து விட்டுச் சென்றாள்.

அடுத்த பத்து நாளில், அவனை வெகுவாய் காதலிக்க ஆரம்பித்தாள் உத்ரா. அவன் சாப்பிடவில்லை என்றால் சாப்பிட வைப்பதும், அவன் தோளில் சாய்ந்து கொள்வதும், அவன் மடியில் படுத்துக் கொள்வதும், அவன் சொன்னதை அடுத்த நொடியே செய்து முடிப்பதும் என அவன் நிழலாகவே இருந்தாள்.

துருவ் அவள் சுண்டு விரலை கூடத் தொடவில்லை. அவள் செய்வதை ஆட்சேபிக்கவும் இல்லை. அவனுக்கு மேலும் மேலும் கோபம் தான் வந்தது. ‘அவள் அப்பா உடம்பு சரி இல்லாமல் சொத்தை இவளை நம்பி எழுதி வைக்கிறேன்னு சொன்னால், கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாமல் என்கூட கூத்தடிச்சுக்கிட்டு இருக்காள்… ஆமா, அதான் என்கிட்ட நிறைய பணம் இருக்கே. அப்பறம் எதுக்கு அவளுக்கு அப்பா, அவரோட சொத்துலாம்’ என்று அவளைத் தவறாக நினைத்தான்.

இதற்கிடையில், காஞ்சனா அவளால் ப்ரொஜெக்ட்டை முடிக்க முடியவில்லை என்றும், இந்த சொத்துக்கள் எனக்கு வேண்டாம் என்றும், ஒரு பத்திரத்தை ரெடி செய்து, துருவிடம் கொடுத்து அவளுக்குத் தெரியாமல் கையெழுத்து வாங்க சொன்னாள்.

துருவ் யோசனையாய் புருவத்தைச் சுருக்கி, “இது எதுக்கு இப்போ? அதான் அவள் இன்னும் ப்ரொஜெக்ட் ஸ்டார்ட் பண்ணவே இல்லையே” என்றதும், அவர் அவரின் அழுகை நாடகத்தை அரங்கேற்றி, “உனக்கு இந்தியால இருக்குறவங்களை பத்தி தெரியாதுப்பா, சொத்துக்காக ரிஷியையும், ரிஷி அப்பாவையும் கூடக் கொலை பண்ண தயங்க மாட்டாங்க. இதெல்லாம் நான் ரிஷிக்காகத் தான் பண்றேன்” என்று சொல்ல, அந்த நேரத்திலும் துருவ் அவர்களை நம்பினான்.

“ஆனால் என்னதான் நம்பிக்கை இருந்தாலும், எப்படி படித்துப் பார்க்காமல் சைன் பண்ணுவாள்” என்று அவன் குழம்பிட, அவளிடம் கையெழுத்து வாங்குவது உன் பொறுப்பு என அவனிடம் கூறி அவளிடம் அனுப்பினர். அவனுக்கு இவளிடமிருந்து தப்பினாள் போதும் என்று மட்டும் தான் இருந்தது.

அதனால், அவளிடம் பத்திரத்துடன் சென்றவன், “இதுல சைன் பண்ணு!” என்றான். அவள் புரியாமல் “என்ன துருவ் இது?” எனக் கேட்க, துருவோ “அது 6 மாசம் ட்ரைனிங் எடுக்குறீல அதுக்கு அக்ரீமென்ட்” என்று சற்று உளறினான்.

அவள் அதனை படிக்கப் போகையில், ஒரு நொடி பதறியவன், சட்டென்று அவளைப் பின்னிருந்து அணைத்து கொண்டான். தன்னவனின் முதல் அணைப்பில் உருகிய உத்ரா, தன்னிலை மறந்தாள். பின்னிருந்து கொண்டே, அவள் கைபிடித்து, அவனே கையெழுத்து போட்டான்.

அவனின் தொடுகையில் சிவந்தவள், கண் மூடி நிற்க, அவன் ஹப்பா என்று சட்டென்று விலகி, “ஒரு வேலை இருக்கு போயிட்டு வரேன்” என்று சொல்லிக்கொண்டு விட்டால் போதும் என வெளியில் சென்று விட்டான். உத்ரா தான், “என்னாச்சு இவனுக்கு” என்று புரியாமல் பார்த்தாள் அவன் திடீர் அணைப்பிலும் விலகலிலும்.

அந்த பத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, சிரித்து கொண்டிருந்தாள் காஞ்சனா. சைதன்யா, “ஆண்ட்டி உங்க வேல முடிஞ்சுது. இப்போ அந்த உத்ராவை என்கிட்ட குடுத்துடுங்க நான் பார்த்துக்கறேன்” என்க, அவள், “தாராளமா ஆனா திரும்ப அவள் எந்திரிக்கவே கூடாது” என்றாள் வெறியுடன்.

மறுநாள், காஞ்சனா துருவிடம் அவளை வீட்டில் வந்து விடுமாறு கூறி, இனிமேல் அவளை நாங்க பாத்துக்குறோம் என்றதும், அவனும் நிம்மதிடா என்று நினைத்துக் கொண்டு மறுநாள், அவளை அழைத்துச் சென்றான்.

அவளும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவனின் தோளில் சாய்ந்து பேசிக்கொண்டே வர, துருவிற்கு அவளிடம் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று தோன்றியதில், “ஆமா நீ வந்ததே தொழில் கத்துக்கவும், அந்த ப்ராஜக்டை முடிக்கவும் தான். ஆனால் நீ இப்பவரை ஒண்ணுமே கத்துக்கலை. நீ பாட்டுக்கு லவ் பண்ணிக்கிட்டு இருக்க. சொத்துலாம் உனக்கு என்ன அதுவா பறந்து வருமா” என்று சிறிது கடுப்புடன் கேட்டான்.

அவள் மெலிதாய் சிரித்து கொண்டு, “யாருக்கு வேணும் இந்த சொத்துலாம்? எங்க அப்பா ஃபீல் பண்ண கூடாதுன்னு தான் நான் கத்துக்குற மாதிரி இங்க வந்தேன். ஆக்சுவல்லி ஒரு மரியாதைக்காக உங்ககிட்ட நேர்ல வந்து இந்த ப்ரொஜெக்ட்டை நான் பண்ணலைன்னு சொல்லத்தான் வந்தேன். பட் உங்களைப் பார்த்ததும், என்னால இங்க இருந்து போக முடியல. நீங்க என்ன தான் பண்றீங்கன்னு பாப்போம்னு தான் நான் இங்கயே இருந்தேன்” என்று சொன்னதில் அவன் அதிர்ந்து விட்டான்.

அப்படியும் அவன் நம்பாமல், “இது என்ன புது கதை?” என்று புருவத்தைச் சுருக்க, உத்ரா “புதுசுலாம் இல்லை ரொம்ப பழசு தான். எனக்கு என் பெரியப்பாவும், மாமாவுமே நான் என்ன கேட்டாலும் செய்வாங்க. எனக்கு ஏகப்பட்ட சொத்து என் பேர்ல அவங்களே சேர்த்து வச்சுருக்காங்க. அப்பாவைப் பார்த்துட்டு போலாமேன்னு தான் நான் இங்க வந்தேன். வந்த இடத்துல இப்படியொரு குண்டு போடுவாருன்னு நான் நினைக்கவே இல்லை. காஞ்சனா பத்தி அவருக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும். அவள் நிச்சயமா ஏதாவது பண்ணுவாள். சரியான பணப்பேய்!

என் அண்ணன் மனசுல விஷத்தை ஏத்தி, அவனை மனுஷனா வளர்க்காம மிருகமா வளர்த்துருக்காள். அவனை வளர்த்தது கூட இந்த சொத்துக்காகத்தான் மத்தபடி பாசத்துக்காக இல்லை” என்று கோபத்துடன் கூறியவள் பின், கண் கலங்க,

“என் அம்மா இறக்கும்போது எனக்கு நாலு வயசுதான். அப்போ எங்க அப்பாவும் அந்த காஞ்சனா பேச்சைக் கேட்டு என் அம்மாவைக் கொன்னது என் வீட்ல இருக்குறவங்க தான்னு தப்பா நினைச்சு என்னையும் இங்க கூட்டிட்டு வந்துட்டாரு

சித்தி கொடுமைன்னா என்னன்னு கதைல படிச்சிருப்போம். ஆனால் நான் நிஜத்துல அனுபவிச்சேன். இதுல, ரிஷிக்கு என் மேல சுத்தமா பாசமே இல்லாத மாதிரி காஞ்சனா வச்சுட்டாள். ஆனால் எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.

பட் அவனுக்கு சின்ன வயசுல இருந்து என் மேல பகை தான். அதுலயும், நான் இந்தியா போனதுக்கு அப்பறம் அது அதிகம் ஆகிடுச்சு.

10 வயசு வரைக்கும் நான் இங்க தான் இருந்தேன். அவங்க என்ன சொன்னாலும் கண்டுக்காமல், நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். ஆனால் ஆனால்…” என்றவள் வார்த்தை வராமல், அவன் தோளிலேயே புதைந்து கொண்டு கண்ணீருடன்,

“என் அம்மாவைக் கொன்னது காஞ்சனா தான்னு என்னைக்கு தெரிஞ்சுச்சோ அன்னைக்கே என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல…” என்று சொன்னதில், துருவிற்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை. தான் மிகப்பெரிய தவறு இழைத்து விட்டோம் என்று மட்டும் புரிந்தது.

ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தி “என்ன சொல்ற?” என்று புரியாமல் கேட்க,

“அன்னைக்கு ஸ்கூல் முடிச்சு, வீட்டுக்கு வந்தப்போ தான், காஞ்சனா போன்ல யார்கிட்டயோ என் அம்மாவை படியிலிருந்து தள்ளி விட்டதா சொன்னாள். எனக்கு ரொம்ப கோபம் வந்து நான் போய்க் கேட்டதுக்கு, அப்பா கிட்ட என்னைப் பத்தி இல்லாததை எல்லாம் சொல்லி, அவரையே என்மேல கோபப்பட வச்சுட்டாள். அதுக்கு அப்புறம் அப்பாகிட்ட சொல்லியும் எதுவும் ஆகப்போறது இல்லைன்னு புரிஞ்சுகிட்டு, அடம்பிடிச்சு இந்தியாவுக்கு போய்ட்டேன்.

இதைப் பத்தி வேற யார்கிட்டயும் சொல்லல. அந்த நேரத்துல ரிஷிக்குக் கால்ல அடி பட்டு ரொம்ப உடம்பு சரி இல்லாமல் இருந்தான். அதுக்கும் கண்டிப்பா அவள் தான் காரணமா இருந்துருப்பா. அப்போ காஞ்சனாவை தவிர, வேற யாரையும் அவன் பக்கத்துலயே வர விடல. இப்போ போய்ச் சொன்னா அவன் ஹெல்த் பாதிச்சுடும்னு நான் சொல்லலாமலேயே விட்டுட்டேன்” என்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு,

“பட் உங்களை எப்படி லவ் பண்ணுனேன்னுலாம் எனக்குத் தெரியல… எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு.” என அவன் கையுடன் அவள் கையைக் கோர்த்துக் கொண்டு, “ஐ லவ் யு துருவ்” என அவள் கூறி முடிக்கவும், வீடு வரவும் சரியாக இருந்தது.

துருவ் சிலையாக சமைந்திருக்க, உத்ராவோ “அப்பாவைப் பார்க்க வந்தோமா துருவ்” என உற்சாகமாகக் கேட்டு உள்ளே சென்றாள். அங்கு காஞ்சனா, ரிஷி, சைதன்யா இருக்க அவர்களைப் புரியாமல் பார்த்தாள். பின், துருவை திரும்பிப் பார்க்க, அவன் அசையாமல் நின்றான்.

சைதன்யா, “என்ன டார்லிங் என் நண்பனைப் பாக்குற? அவன் எதுக்கு உன்னை இங்க கூட்டிட்டு வந்தான்னா இல்ல… உன்னை எங்ககிட்ட இருந்து காப்பாத்துவான்னு பாக்குறியா?” என்று நக்கலாகக் கேட்க, அவள் “நண்பனா?” என்று திகைப்புடன் துருவை நோக்கினாள்.

ரிஷி, “என்ன ஷாக்கா இருக்கா? துருவ் என் ஆருயிர் நண்பன். அவன் உனக்கும் அத்தை பையன் தான் உத்ரா. நான் தான் அப்பா சொன்ன அட்ரெஸ்ஸை மாத்தி வைக்கச் சொல்லி, உன்னை இவன் கிட்ட அனுப்புனேன். நான் நினைச்ச மாதிரி எல்லாமே இப்போவரை கரெக்ட் ஆ நடந்துடுச்சு” என்றவன், அவள் கையெழுத்திட்ட பத்திரத்தையும், அவளிடம் காட்டி, “ச்சு! ச்சு! ரொம்ப லவ்வோ என் நண்பன் மேல…” என்று நக்கலாகக் கேட்க, அவள் அப்பொழுது தான் அதனை நன்றாகப் பார்த்து அதிர்ந்தாள்.

சைதன்யா அவளைப் பளாரென அறைய, உத்ரா சுருண்டு போய்க் கீழே விழுந்தாள். அப்பொழுதும் அவள் எதிர்த்து அவனை அடிக்கவில்லை. துருவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். சைதன்யா அடித்ததில் துருவ் அதிர்ந்து நிற்க,

சைதன்யா “என்னையவாடி அடிக்கிற? இந்த கை தான அன்னைக்கு என் கையில ஃபோர்க்கை வச்சு குத்துனது…” என்று அவள் உள்ளங்களையில் ஏறி நின்று பூட்ஸ் காலால் மிதித்து நசுக்கினான். வலியில் கதறியவள், அப்பொழுதும் துருவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

துருவிற்கு தான் தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை. அவன் அவளைக் காதலிக்கலாம் இல்லை. ஆனால் ஒரு நல்ல பெண்ணைக் காயப்படுத்திவிட்டோம் என்று மட்டும் புரிந்தது. ஆனால் எதிரில் இருப்பது நண்பர்கள் ஆயிற்றே.

காஞ்சனா அவளை இதழில் உறைந்த இளக்கார புன்னகையுடன் பார்க்க, ரிஷி அவளைக் கண்டுகொள்ள கூட இல்லை. சைதன்யா அவளை அன்று பார்த்ததை விட அசிங்கமான ஒரு பார்வை பார்த்து, “நான் பார்த்தா என் கண்ணை நோண்டிடுவியா? இப்போ நான் உன்னை இன்ச் பை இன்ச்சா பாக்குறேன் கண்ணை நோண்டு பாப்போம்…” என்று அவளைப் பார்க்க, அவள் வலியில் பல்லைக்கடித்துக் கொண்டு, துருவையே பார்த்தாள்.

‘என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே…? இந்த வலியைவிட என் மனதில் நீ கொடுத்த வலியை என்னால் தாங்க முடியவில்லையே. அவனைத் திரும்பி அடிக்க, என் உடலில் பலம் இருந்தாலும், என் மனதில் பலம் இல்லையே… இது தான் உன் காதலா? என்று அவனையே வெறித்தாள்.

உள்ளுக்குள்ள முள்ள வச்சு
எதுக்கு நீ சிரிச்ச
காதல் என்னும் பேரச்சொல்லி
கழுத்த நீ நெறிச்ச

ஒன்ன நெனச்ச பாவத்துக்கு
இதுதான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே
சோதனையா

ஒரே ஒரு வார்த்தையாலே
என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு துரோகம் தாங்க
என் நெஞ்சில் பலமில்லையே

யாரோ மனச உலுக்க
ஏதொ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக

உறைதல் தொடரும்…
-மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
53
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்