Loading

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்த விபரீதத்தை ஜீரணிக்கவே சில நிமிடம் தேவைப்பட்டது ஏழு பேருக்கும்.

தேஜஸ்வின், மிரண்டு நின்றிருந்தான்.

“இந்த பாடியை டிஸ்போஸ் பண்ணு!” என்ற ஸ்வரூப்பின் கட்டளையைக் கூட அவன் செவிகள் ஏற்கவில்லை.

“தேஜா” இம்முறை ஸ்வரூப் அழுத்தத்துடன் அழைத்ததில் தான், அச்சிலைக்கு உயிர் வந்து திரும்பியது.

“பா… பாஸ்!” என மிரட்சியுடன் அழைக்க, “நீ ஷாக் ஆகி நின்னது போதும். இந்த நாயை முதல்ல டிஸ்போஸ் பண்ணு” என்றான் எரிச்சலாக.

அவனுக்கு பின்னால் ஒளிந்திருந்து, கருகிப் போன சடலத்தைக் கண்ணை மூடியும் திறந்துமாக பார்த்திருந்த உத்ஷவி, “அது நாய் இல்ல டைனோசர். பேய். ஆவியா எதுவும் கிளம்பி வந்துட மாட்டானே?” எனக் கேட்டாள் அரண்டு.

“அப்படி ஆவியா வந்தாவது, எதுக்கு இதெல்லாம் செஞ்சு தொலைஞ்சான்னு சொன்னா, நிம்மதியா இருக்கும்” எனத் தாடையை தடவிக் கூறியவனை, கொலைவெறியுடன் பார்த்தவள், “அநியாயமா, ஒரு மனுஷனை மிருகமாக்கி, அருவமாக்கி வச்சு இருக்கியேடா. இனிமே எங்களுக்கு யாரு ப்ராஜக்ட் தருவா. முதல்ல, இந்த ப்ராஜெக்ட்டை அட்டெம்ப்ட் பண்ணுனதுக்கு ஆன செலவுக்கு யாரு காசு தருவா?” எனக் கடுப்புடன் கேட்டாள்.

நடுக்கத்துடன், ஜோஷித்தின் கைகளை இறுக்கமாகப் பற்றி நின்ற விஹானாவும், “ஆமா டார்லிங்… வெளில நிக்கிற ஆம்னி வேனுக்கு கூட இன்னும் வாடகைக் கொடுக்கல. மகராசன், நம்மளை இவனுங்ககிட்ட கோர்த்து விட்டுட்டு, போய் சேர்ந்துட்டான்.” என்றாள் எச்சிலை விழுங்கி.

இன்னும் அக்ஷிதா, கட்டிலை விட்டு இறங்கவில்லை. எங்கே… எழுந்து மீண்டும் நரியாக அவதாரம் எடுத்து விடுவானோ என்ற பயம் அகலாமல், “நம்ம கிளம்பிடலாம் டார்ல்ஸ். இனி இவனுங்க இந்த பேய் நாயை வச்சு என்ன வேணாலும் செஞ்சுக்கட்டும். வேணும்ன்னா, அவுஜா போர்ட் வச்சு, இவன் ஆன்மாவை கூட எழுப்பி உண்மையை தெரிஞ்சுக்கட்டும் நம்ம கிளம்பிடலாம்.” எனப் பயத்துடன் கூறினாள்.

உத்ஷவியும் அதனை ஆமோதித்து, “ஆமா டைனோசர் சாரி ஸ்வரூப், நடந்த குழப்பத்துக்கு காரணம் இவன் தான். இனிமே, உன் டாக்குமெண்ட்டை எடுத்து, யார்ட்ட கொடுக்குறது. சோ ஆபரேஷன் அபார்ட் ஆகிடுச்சு. எடுத்து வச்ச எங்க திங்க்ஸ், என் லேப்டாப் எல்லாத்தையும் குடுத்துட்டீனா, நாங்க கிளம்பி எங்க பொழப்பை பார்ப்போம்.” என வெகு பணிவாகவே கேட்டாள்.

எப்படியோ, இந்த பிரச்சனையில் மாட்டாமல், தப்பித்தால் போதுமென்றிருந்தது. பின், இந்த இறப்பிற்கான காரணத்தைத் தேடி, காவலர்கள் வந்தால், இவர்களும் அல்லவோ மாட்டிக்கொள்வார்கள்!

ஸ்வரூப் ஏற்கனவே பயங்கர குழப்பத்திலும் கோபத்திலும் பொசுங்கி கொண்டிருந்தான். இந்நிலையில் பெண்களின் தொணதொணப்பு மேலும் எரிச்சலூட்ட, “திருட்டு வேலை தான பாக்க போற. என்னமோ, கலெக்டர் வேலையை விட்டுட்டு வந்த மாதிரி, கால்ல சுடு தண்ணி ஊத்தாத குறையா குதிக்கிற. என் அனுமதி இல்லாம, மூணு பேரும் அசைய கூட கூடாது.” என்றான் மிரட்டலாக.

இப்படியே இவர்களிடம் கெஞ்சினால் வேலைக்கு ஆகாது என்றுணர்ந்த உத்ஷவி, மற்ற இருவருக்கும் கண்ணைக் காட்டினாள்.

மேலும் இரு ஆட்களை வரவழைத்து, தேஜஸ்வின் ராகேஷின் உடலை வெளியில் கொண்டு போகும் முயற்சியில் ஈடு பட, ஜோஷித் ராகேஷைப் பற்றிய தகவல்களை திரட்ட முயன்று யாருக்கோ போன் பேசிக்கொண்டிருந்தான்.

சஜித்தின் கரத்தில் ஏற்பட்ட கீறலின் வலி அதிகமாக, அக்ஷிதா அவனை விட்டு நான்கடி தள்ளியே நின்று கொண்டாள்.

தம்பியின் முகம் வலியில் கசங்கி இருந்ததில், ஸ்வரூப்பின் மனதிலும் பெரும் வலி எழுந்தது.

அதில், அவனருகில் செல்லப் போக, அக்ஷிதா அமைதியாக இராமல், “ஹே ஸ்வரூப், அவன் பக்கத்துல போகாத. நீ ஜாம்பி படம் எல்லாம் பார்த்தது இல்லையா. ஜாம்பியால அட்டாக் ஆனவங்க, அட்டாக் பண்ணுனா, மத்தவங்களும் ஜாம்பியா மாறிடுவாங்கள்ல, அதுமாதிரி உன் தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல நாயா மாற போறான்.” என்றதில், சஜித் அவளை முறைத்து வைத்தான்.

ஸ்வரூப்போ, “அப்படி மாறுனா, முதல்ல உன்னை தான் பிராண்ட சொல்லுவேன். மூடிட்டு அமைதியா இரு.” என சீறியவன், சஜித்திற்கு முதலுதவி செய்ய, ஹாலுக்கு அழைத்து வந்தான்.

இம்முறை சஜித்தும் தடுக்கவில்லை. உத்ஷவி தான் அவ்வப்பொழுது, “நாய் மாதிரி குரைக்கணும் போல இருக்கா? நாலு கால்ல நடக்கணும் போல இருக்கா?” என சஜித்திடம் சந்தேகம் கேட்டுக்கொள்ள,

விஹானா, “உனக்கு எலும்புத் துண்டும் பிஸ்கட்டும் சாப்பிடணும் போல இருக்கு தான?” என்றாள் எதையோ கண்டுபிடித்த பாவனையில்.

“ப்ச், சும்மா இருங்கடி! கோபப்பட்டு கடிச்சு வச்சுட போறான். தொப்புளை சுத்தி என்னால ஊசி எல்லாம் போட முடியாது.” என்னும் போதே, இவர்களின் பேச்சில் கடியான சஜித், ஸ்வரூப் மருந்திட்டுக் கொண்டிருந்த கையை வெடுக்கென இழுத்துக்கொண்டு, தள்ளி நின்றிருந்த அக்ஷிதாவைப்  பிடித்து இழுத்தான்.

அவளது கையை பற்தடம் பதியுமளவு கடித்து விட்டவன், “நாயாகி சாவு போ!” என சாபமிட்டு விட, அக்ஷிதா தான், வலியில் அலறி, நாயாக மாறிவிடுவோமோ என்ற அச்சத்தில் மிரண்டாள்.

அந்நேரம், ஸ்வரூப்பிற்கு அலைபேசி அழைப்பு வர, “ஏய் வாயை மூடித் தொலை” என அக்ஷிதாவின் தலையில் நங்கென கொட்டி விட்டு, தனியே சென்றான்.

எதிர்முனையில் கேள்விப்பட்டத் தகவல், அவனை இன்னும் கோபப்படுத்த, “ஷிட்!” என்று காலை சுவற்றில் எத்தினான். அவனது நினைவுகளோ இரு வருடங்களுக்கு முன்னோக்கி சென்றது.

சித்தூரில், மலைக்கிராமத்தில் இருக்கும் இன்றைய தலைமுறையினருக்கு, இப்போது தான் சிறிது சிறிதாக படிப்பறிவைப் புகட்டிக்கொண்டிருக்கின்றனர் நாயகர்கள்.

அதில், மருத்துவம் பயின்ற பெண்மணிகளும், அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றவர்களும் அதிகம்.

அப்படிப்பட்ட மலைக்கிராமத்தில், அவ்தேஷ குடும்பத்தின் ஆதரவில் படித்தவள் தான் நாகவல்லி.

ஆந்திரப் பிரதேஷில் அமைந்திருக்கும் நெல்லூர் மாவட்டத்தில் தான் மாவட்ட ஆட்சியராக அமர்த்தப்பட்டாள்.

வேலைக்கு சேரும் முன்னர், அவள் அண்ணன்களாக எண்ணும் மூன்று ஆடவர்களிடமும் ஆசி பெற்றுக்கொண்டவள், “உங்களை போல நானும் மக்களுக்கு சேவை செய்வேன் அண்ணய்யா.” என்றாள் உறுதியாக.

அவளைப் பெருமை பொங்க பார்த்த ஸ்வரூப், “எந்த பிரச்சனை வந்தாலும், உனக்கு அண்ணன்ங்க நாங்க இருக்கோம்ன்னு மறந்துடாத தங்கச்சிம்மா.” என்றதில்,

ஜோஷித் கேலியுடன், “அவள் வேற ஊருக்கு போனதும் நம்மளை மறந்தே போய்டுவா ஸ்வரூ.” என அவளைக் கேலி செய்ய, “என்ன அண்ணய்யா இப்படி சொல்லிட்டீங்க. எனக்கு வாழ்க்கை குடுத்த உங்களை நான் சாகுற வரை மறக்க மாட்டேன்” என்று உணர்ச்சி மிகுதியில் கண் கலங்கி இருந்தாள்.

உடனே சஜித், “அவன் உன்னை கிண்டல் பண்றான்ம்மா. பத்தரமா போயிட்டு வா.” என்றதும், மெல்ல புன்னகைத்தவள், “அம்மா, அப்பாவையும் கூட தான் கூட்டிட்டு போறேன்” என்றாள் தயக்கமாக.

அவளை புருவம் சுருக்கிப் பார்த்த ஸ்வரூப் அவ்தேஷ், “ஏன் தங்கச்சிம்மா, அவங்களை கூட்டிட்டு போய்ட்டா, இங்க இருக்குற நிலத்தை யாரு பாக்குறது?” எனக் கேட்டதில் நாகவல்லி நெளிந்தாள்.

“அதில்ல அண்ணய்யா. அம்மா, அப்பாவை கூட வச்சு பார்த்துக்கணும்ன்னு ஆசை. அதான், நிலத்தை வித்துட்டு போகலாம்ன்னு” என மென்று விழுங்கினாள்.

“ம்ம் நிலத்தை வித்துட்டு, ஊரை விட்டு மொத்தமா போய்டலாம்ன்னு முடிவு பண்ணிட்ட அதான?” என்றவனின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம், விழிகளிலும் பிரதிபலித்தது.

“ஐயோ அப்படி இல்ல அண்ணய்யா.” என்று மேலும் தடுமாறியவளை, கடுமையுடன் ஏறிட்ட ஸ்வரூப்,

“படிச்ச எல்லாரும், கிராமத்தை விட்டு, பெட்டரான இடம் தேடி போய்டுறது.  அப்பறம், மக்களோட புழக்கம் கம்மியாகிடுச்சுன்னு, மலையையும்  காட்டையும் அழிச்சு எட்டு வழி சாலை ஆக்குறேன், பத்து வழி சாலையாக்குறேன்னு வர்ற அரசாங்கத்தை குறை சொல்றது. போன வருஷத்தை விட, இந்த வருஷம், உன் கிராமத்துல 30 சதவீதம் மக்கள் தொகை குறைஞ்சுருக்கு தெரியுமா நாகா. இதே மாதிரி, தான் சுத்தி இருக்குற மலை கிராமத்துலயும். நடக்குது. உங்களை அரசாங்கத்தோட சட்ட திட்டத்தை எல்லாம் மீறி, படிக்க வைக்கிறதும், அரசாங்க உத்யோகம் வாங்கிக் குடுக்குறதும், உங்களோட அடையாளத்தை அழிக்கிறதுக்கு இல்ல.” என்றவனின் பேச்சில் உஷ்ணம் கூடியது.

எச்சிலைக் கூட்டி விழுங்கிய நாகவல்லி, “அப்படி மொத்தமா எல்லாம் போகல அண்ணய்யா. கொஞ்ச நாள்ல திரும்ப வந்துடுவோம். என் கிராமத்தை நான் விட்டுட மாட்டேன்” என்றாள் சிறுகுரலில்.

ஜோஷித் தான், “அப்பறம் ஏன் நிலத்தை வித்துட்டு போற நாகா?” என முறைப்புடன் கேட்டதும், “அடிக்கடி வந்து பாத்துக்குறது சிரமம் அண்ணய்யா அதான்…” என்றதில், ஸ்வரூப் சற்று சிந்தித்து விட்டு, “நிலத்தை வெளி ஆட்களுக்கு விற்க கூடாதுன்னு ஏற்கனவே சொன்னதா ஞாபகம்!” என்றான் கூர்மையுடன்.

“ஐயோ இல்லங்க அண்ணய்யா. வெளி ஆளலாம் பார்க்கல. உங்ககிட்ட தான் கேட்டு, உங்க விருப்பத்தோட தான் விற்கலாம்ன்னு இருந்தேன்.” என அவசரமாகக் கூறியதும், சஜித், “டேய்… ஏன்டா அவளை இவ்ளோ கேள்வி கேக்குறீங்க. நீ எதுவும் யோசிக்காம கிளம்பு தங்கச்சிம்மா. நிலத்தை நம்ம ஆளுங்க பாத்துக்குவாங்க. இப்போதைக்கு விற்க வேணாம்” என்று ஆறுதலாய் பேசியதும், அவளுக்கும் சற்று நிம்மதி பரவியது.

“சரிங்க அண்ணய்யா” எனப் புன்னகையுடன் கிளம்ப எத்தனித்தவளை, ஸ்வரூப்பின் அழைப்பு தடுத்து நிறுத்தியது.

“ஒரு நிமிஷம் இரு.” என அவளை நிறுத்தியவன், “அம்மா…” எனக் குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன்ப்பா.” என்றபடி கையில் தட்டுடன் வந்தார் சித்தாரா.

புன்னகைக் கொஞ்சும் அமைதி முகம். கையில் வைத்திருந்தத் தாம்பூலத் தட்டில், பணக்கட்டும், பழ வகைகளும், புதுப் புடவையும், மஞ்சள் குங்குமமும் நிறைந்து இருந்தது.

வீட்டிற்கு வந்து நிற்கும் எவராகினும் சரி, மனதைக் குளிர வைத்து அனுப்புவதே அவ்வீட்டினரின் வழக்கம். அந்த வழக்கத்தையும் வீட்டுப்பெண்கள் தான் செய்ய வேண்டும்.

சித்தாராவைக் கண்டதும், அவரது காலிலும் விழுந்து ஆசி பெற்ற நாகவல்லி, அவர் அன்பாய் வழங்கிய தாம்பூலத் தட்டை வாங்கி விட்டு, “ஐயா இல்லைங்களாம்மா.” எனக் கேட்டாள்.

“இல்லம்மா. எல்லாரும் ஒரு விசேஷத்துக்கு போயிருக்காங்க. நீ இன்னைக்கு ஊருக்கு கிளம்புறன்னு தான், நான் மட்டும் வீட்ல இருந்தேன். உனக்கு செய்ய வேண்டியதை செஞ்சு அனுப்புறது எங்க கடமை.” என்றவரின் வார்த்தைகளில் இருந்த அன்பில் உருகியவள், கண்கள் பனிக்க அவர்களிடம் இருந்து விடை பெற்றாள்.

அவள் சென்றதும், சித்தாராவின் தோளில் கை போட்டுக்கொண்ட ஜோஷித், “சித்தும்மா, இன்னைக்கு எங்களுக்கும் உங்க பொன்னான கடமையை நிறைவேத்த வேண்டியது இருக்கு.” என்று விழிகளை உருட்டிக் கூறிட, அவர் புரியாமல் பார்த்தார்.

சஜித்தோ, “என்ன சித்தும்மா, இப்படி முழிக்கிறீங்க. இன்னைக்கு வீட்ல யாரும் இல்ல. அதனால இன்னைக்கு எங்களுக்கு ஃபாஸ்ட் புட் தான் வேணும். எனக்கு நூடுல்ஸ், பிரெட் டோஸ்ட்” என்று ஆஜர் ஆக,

“எனக்கு பிரைட் ரைஸ் வேணும் சித்தும்மா” என்று ஜோஷித் கொஞ்சினான்.

இருவரையும் கண்டு சிரித்த சித்தாரா, “இன்னைக்கு காலைலயே உங்களுக்கு பிடிச்சதை செய்றதுக்கு தேவையான பொருளெல்லாம் வாங்கி வச்சுட்டேன் கண்ணுங்களா. ஆனா, எல்லாரும் வந்ததும், உளறி வச்சுடாதீங்க” என்று கட்டளையிட, இரு ஆண்களும் வாயைப் பொத்தி, “சொல்லவே மாட்டோம்” என்று தலையாட்டினர்.

ஸ்வரூப் தான், “ஆனா நான் சொல்லுவேனே.” என முறைத்து விட்டு, “ம்மா, பாஸ்ட் புட் எல்லாம் சாப்பிட கூடாதுன்னு அப்பா சொல்லிருக்காருல. உமாம்மாவும், ரூபி அம்மாவும் வந்தா, உங்களை டின்னு கட்டிடுவாங்க.” என்றான் மிரட்டலாக.

“இதுலாம் அநியாயம்டா, நீ மட்டும் எங்க அம்மாட்ட, பிரிஞ்சி செஞ்சு கேக்குறதும், வகையா சாப்புடுறதும் பண்ணலாமாம். அதை நாங்க பண்ண கூடாதாம்” என்று ஜோஷித் சண்டைக்கு வர,

சஜித்தோ, “அது மட்டும் இல்ல… இவருக்கு என் அம்மா அதான் ஊட்டி வேற விடணுமாம். ஒரு தடவை எனக்கு ஊட்டி விட சொன்னா கூட, எங்க அம்மா என்னை கண்டுக்கறதே ஜோ.” எனக் குறை சொல்லியதில், ஸ்வரூப் கேலியாய் புன்னகைத்தான்.

“அதுக்குலாம் ஒரு முகராசி வேணும்டா. நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க. அம்மா, இன்னைக்கு நீங்க எனக்கு பிடிச்சது தான் செஞ்சு தரணும்.” என முகத்தைச் சுருக்க,

“சும்மா இரு ஸ்வரூ. பாவம் பசங்க, பிடிச்சதை சாப்பிட முடியாம, உங்க அப்பா சித்தப்பா எல்லாரும் ரூல்ஸ் ராமானுஜம் மாதிரி, ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டு வைக்கிறாங்க. வயசுப் பசங்க இப்ப சாப்பிடாம எப்ப தான் இதெல்லாம் சாப்பிடுவீங்க. நீங்களும் கொஞ்சமாவது இந்த காலத்து பசங்க மாதிரி, தியேட்டர், டூருன்னு என்ஜாய் பண்றீங்களா? அதுவும் இல்ல. எப்பப் பார்த்தாலும், பிசினஸ், ஊர் பஞ்சாயத்து, குடும்ப கவுரம்ன்னு கடிவாளம் கட்டி விட்ட மாதிரி சுத்துறீங்க.” என இடுப்பில் கை வைத்து கூறியதில், மூவரும் சிரித்தனர்.

“அப்போ நாங்க இப்படி இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா சித்தும்மா?” என ஜோஷித் கேட்டதில்,

“பிடிக்கலைன்னு இல்ல ஜோ. என் பசங்க, ரொம்ப நல்லவங்க, யாரையும் கஷ்டப்படுத்த மாட்டாங்க. முக்கியமா, வீட்டுப் பெரியவங்களை மதிக்கிறவங்க. பிசினஸ்ல உங்களை அடிச்சுக்க ஆள் இல்ல. அதே மாதிரி தான் ஊர் மக்களை பாத்துக்குறதுலயும். எல்லாத்தையும் நினைச்சா எனக்கு பெருமையா தான் இருக்கு. நான் இல்லன்னு சொல்லல. அப்போ அப்போ, உங்களுக்காகவும் கொஞ்சம் வாழுங்கன்னு தான் சொல்றேன். சின்ன சின்ன விஷயத்தைக் கூட தியாகம் பண்ணிட்டு, ஒரு வட்டத்துக்குள்ள இருக்காதீங்க.” என்றதும்,

“இத மட்டும் இப்ப தாத்தா கேட்கணுமாம்!” என நமுட்டு நகை புரிந்த ஸ்வரூப்பை முறைத்து பார்த்தவர், “இப்ப ஏன்ப்பா அவரை இழுக்குற.” என மிரண்டு சுற்றும் முற்றும் பார்த்தார் சித்தாரா. “உங்களுக்காக பேசுனேன் பாரு என்னை சொல்லணும்.” என்று மூச்சிரைக்க, ஸ்வரூப் வாய் விட்டு சிரித்தான்.

பின் ஜோஷித், “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சித்தும்மா. நாங்க ஜாலியா தான் இருக்கோம். எங்களுக்கு பிடிச்சு தான் இதெல்லாம் பண்றோம்.” என்று அவர் மனதை சாந்தப்படுத்த, மூவரையும் அமைதியாக ஏறிட்டவர், “எல்லாமே பிடிச்சு தான் பண்றீங்களா?” எனக் கேட்டார்.

சஜித், “ஆமா சித்தும்மா. நம்ம குடும்பத்தோட பழக்க வழக்கத்தை கடைபிடிக்கிறது தான முறை. அது தான் உங்க எல்லாருக்குமே மரியாதையும் கூட.” என்றான் மென்மையாக.

“அப்போ, உங்க அத்தை பொண்ணுங்களை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு உங்க தாத்தா எடுத்த முடிவும் உங்களுக்கு பிடிச்சு தான் இருக்கா?” எனக் கேட்டார் சலனமற்று.

அதில் மூவரின் முகமும் சற்று வாடித்தான் போனது. பிடிக்கவில்லை என்றதை விட, சிறு வயதிலிருந்து உடன் வளர்ந்த பெண்களின் மீது எவ்வித ஈர்ப்பும் வரவில்லை என்பதே உண்மை.

அதனைக் கனக்கச்சிதமாக தங்களுக்குள் மறைத்துக் கொண்டனர்.

ஸ்வரூப் சிறு நகையுடன், “ஏன்ம்மா, அவங்களுக்கு என்ன குறை. அழகா இருக்காங்க. நல்லா படிச்சு இருக்காங்க. நம்ம சொந்தத்துக்குள்ள இருக்குற பொண்ணுங்க. அதுவும் சொந்த அத்தை பொண்ணுங்க. குடும்பத்தோட பழக்க வழக்குமெல்லாம் அவங்களுக்கு அத்துப்படி. இதுக்கு மேல இதுல பிடிக்காம போக என்ன இருக்கு… நீங்க எங்களை பத்தி ரொம்ப கவலைப்படுறீங்கன்னு நினைக்கிறேன். அதான் இப்படியெல்லாம் தோணுது.” என்றதும், சித்தாரா மகனை அழுத்தமாக பார்த்தார்.

அப்பார்வையின் அழுத்தம் அவனைச் சுட்டதோ என்னவோ, சட்டென அவரைப் பாராமல் திரும்பிக் கொண்டான்.

சஜித் அவனைக் காப்பாற்றும் விதமாக, “அது சரி… இப்படியே பேசி எஸ்கேப் ஆகிடலாம்ன்னு நினைப்பா. எனக்கு செம்மயா பசிக்குது சித்தும்மா.” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு கொஞ்சியவன், “வாங்க, உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.” என்று அவரை அடுக்களைக்கு இழுத்துச் சென்றான்.

சித்தாரா சென்றதும், ஸ்வரூப்பும் ஜோஸித்தும் தான் யோசனையில் மூழ்கினர்.

“டேய் ஸ்வரூ, உண்மையாவே உனக்கு தாத்தா முடிவு ஓகே வா?” எனக் கேட்க,

“தாத்தா முடிவு பண்ணிட்டாரு. அப்பா மூணு பேருக்குமே இதுல ரொம்ப சந்தோசம். அத்தை பொண்ணுங்க தான, கல்யாணம் ஆகிட்டா, செட் ஆகிடும் ஜோ. உனக்கு பிடிக்கலையா?” எனக் கேட்டான் வருத்தமாக.

“சே சே இல்லடா. நீ சொன்ன மாதிரி கல்யாணம் ஆகிட்டா, சரி ஆகிடும். அதுவும் உடனேவா கல்யாணம் பண்ண போறாங்க. நிச்சயத்துக்கே இன்னும் ரெண்டு வருஷம் டைம் கேட்டு இருக்கோமே. அதுக்குள்ள, அவங்களோட மெர்ஜ் ஆக ட்ரை பண்ணலாம்.” என்று சமாளித்தான்.

சஜித்தின் நிலையோ வெகு மோசம். கல்யாணம் செய்யாமல், சந்நியாசியாக சென்று விடலாமா என்றே சிந்தித்து விட்டான். அது அனைவரையும் வருத்தப்பட வைக்கும் என்றே, முயன்று மனதை சமாதானம் செய்து கொண்டிருக்கிறான்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட, ஸ்வரூப் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு ஹாலுக்கு வர, அங்கு ஜோஷித் சஜித்தின் காயத்தைக் கண்டு வருந்தி, “ஹாஸ்பிடல் போகலாமாடா?” எனக் கேட்டுக்கொண்டிருந்தான்.

சஜித்தோ, “எதுக்கு போஸ்ட் மார்ட்டம் பண்ணவா?” எனக் காரமாக கேட்டு வைக்க, ஜோஷித்தின் முகம் சுருங்கிப் போனது.

அவர்களுக்கு அருகில் வந்த ஸ்வரூப்பை இருவருமே நிமிர்ந்து பாராமல் திரும்பிக்கொள்ள, அவனும் அவர்களைப் பாராமல், “நாகவல்லியை யாரோ கடத்திட்டு போய்ட்டாங்க. ஷீ இஸ் மிஸ்ஸிங்.” என்று கனத்த குரலில் கூறியதில், “வாட்?” என இருவரும் சட்டென நிமிர்ந்து ஒருசேர அதிர்ந்தனர்.

சஜித்தோ, “இங்க என்ன தான் நடக்குது? எதையோ தேடி இங்க வந்தா, இங்க என்னென்னமோ நடக்குது.” என நொந்து கொள்ள, ஜோஷித்தும் புரியாமல் நின்றான்.

அப்போது தான், சுற்றி முற்றி தேடிய ஸ்வரூப், “ஹே… அந்த மூணு இம்சைங்களும் எங்க போனாளுங்க? ஏய் திருடி எங்கடி இருக்க?” எனக் கேட்டு பல்லைக்கடித்து கர்ஜித்தவன், மூவரும் அங்கிருந்து தப்பித்திருந்ததை அறிந்து ஆத்திரத்தைக் கக்கினான்.

முதலும் முடிவும் நீ!
மேகா!

  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
29
+1
2
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். வரலாற்று சிறப்பு மிக்க கதைக்கருவும், பழங்காலத் தமிழின் எழுத்து நடையும் அபாரம். படிப்பதற்கு மிகவும் இனிமையாகவும் அதே நேரம் பண்டைய கால தமிழின் சிறப்பை உணர்த்தும் விதமுமாக அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  2. Indhu Mathy

   சஜித் 🤣🤣🤣 மூணு பேரும் பேசிப் பேசியே அவனுக்கு வெறி பிடிக்க வச்சுடுவாங்க போல… 🤭🤭🤭🤭

   யார் அந்த எதிரிங்க. .. இவங்களுக்கு எதிரா எல்லாமே நடக்குது…. 😱😱😱😱😱😱