Loading

அன்றைய நிகழ்விற்கு பிறகான நாட்கள் இருவருக்குள்ளும் மெல்லிய திரையுடன் தான் நகர்ந்தது. பகலில் அவளுக்காக, அவளுக்குப் பிடித்ததைக் கேட்டு சமைத்து வைத்து விட்டு அலுவலகத்திற்கு செல்பவன், இரவில் இறுக்கத்துடன் குடியில் இறங்கி விடுவான். ஓரிரண்டு நாட்களில் அதுவும் அவளுக்கு பழகி விட்டது.

கோபம் கொண்டாலும், கெஞ்சிப் பார்த்தும் அவன் கேட்கவில்லை என்ற பிறகு வேறு என்ன பேசுவது.

அன்றும், காலையில் அவளுக்காக சமைத்துக் கொண்டிருந்தவன், எப்போதும் போல் “இன்னைக்கு என்ன பிளான்?” எனக் கேட்க, அவள் இஷாந்திற்கு உடை மாற்றி விட்டபடி, “பிளான் எதுவும் இல்ல” எனப் பதிலளித்தாள்.

“சோ, நீயா எதுவும் பிளான் பண்ண மாட்ட? ஓகே, இன்னைக்கு உனக்கு ஸ்கெடியூல் நான் சொல்றேன். உன் கடைக்கு கிளம்பு. மதியம் வரை அங்க இருந்துட்டு, ஆபிஸ்க்கு வந்து சேரு.” என உத்தரவு பிறப்பிக்க,

“இல்ல ஆரவ். நான் எங்கயும் போகல. அங்க சுதாகர் பார்த்துப்பான். உங்க ஆபிஸ்ல இருந்து ரிலீவ் ஆகிடுறேன். இன்னைக்கு வந்து ப்ரொசீஜர் மட்டும் முடிச்சுட்டு போறேன்.” என திட்டவட்டமாக உரைத்தாள்.

அதில், அவளை அழுத்தத்துடன் ஏறிட்டவன், “நீ என்ன பண்ண போறன்னு நான் கேட்கல. நான் சொல்றதை பண்ணுன்னு மட்டும் தான் சொன்னேன்.” என்றவனை, நிமிர்ந்து பார்த்தவள்,

“என் ஸ்பேஸ்ல நீங்க தலையிடாதீங்க.” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

ஒரு புருவத்தை உயர்த்தியவன், “வெல்… நீ வேலை பாக்குற ஆபிஸ் ஓட எம்டியா தலையிடலாம்ல. உன் இஷ்டத்துக்கு எல்லாம் உன்ன ரிலீவ் பண்ண முடியாது. நீ ஜாயின் பண்ணும் போதே, ஒன் இயர் ஒர்க் பண்ணுவேன்னு காண்ட்ரேக்ட்ல சைன் பண்ணிட்டு தான் ஜாயின் பண்ணிருக்க. அப்படியே நீ இடைல ரிலீவ் ஆகணும்ன்னாலும் 3 மாசத்துக்கு நோட்டீஸ் பீரியட்ல ஒர்க் பண்ணனும். இவ்ளோ நாள் நீ எடுத்த லீவை மேரேஜ்க்காக அலோ பண்ணிக்கிறேன். பட் இன்னைல இருந்து, யூ ஷுட் கம்.” என்று அவளை அலுவலக ரீதியாக தாக்கிட, அவள் தான் பேந்த பேந்த விழித்தாள்.

“நானும் வந்துட்டா இஷுவை எப்படி பார்த்துக்குறது? இப்போ தான் அவனே கரெக்ட் டைம்க்கு தூங்கி, சாப்பிட்டு பழகுறான்.” என அவளும் இஷாந்தை வைத்து அவனை சுற்றி வளைக்க, அவனும் தாடையை லேசாக தடவியபடி,

“ஓகே. டூ ஒன் திங்க். காலைல இருந்து மதியம் வரை ஆபிஸ்ல ஒர்க் பண்ணு. தென், லன்ச் அங்கேயே சாப்பிட்டுட்டு, இஷுவையும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, 2 ஹவர்ஸ் உன் கடைக்கு போய்டு. தென், ஈவினிங் இஷுவை கூட்டிட்டு வீட்டுக்கு வந்துடு.

இப்போதான் அவன் அவ்ளோவா அழுகுறது இல்லையே. மேனேஜ் பண்ணிக்கலாம்.” என்று அவளை திகைப்பில் ஆழ்த்தினான்.

நான் எங்கயும் வரல ஆரவ். எனக்கு வெளிய வரவே பிடிக்கல. நான் இங்கயே இருக்கேன். ப்ளீஸ். கிட்டத்தட்ட கெஞ்சியவளுக்கு கண்ணில் நீர் தேங்கி நின்றது. கூடவே, தலையை தாழ்த்தி எனக்கு எந்த வேலையும் ஒழுங்கா வராது. கடைக்கு போகவும் இன்டரஸ்ட் இல்ல என முணுமுணுப்பாகக் கூற, அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தான்.

ஆனாலும், அதனை சிறிதும் சட்டை செய்யாதவன், “பொறுப்ப தட்டிக் கழிக்கிறது எனக்கு பிடிக்காது மதி. அந்த கடை இப்ப உன் பேர்ல தான இருக்கு. உனக்கு சொந்தமான இடத்துல நீ தான் உழைக்கணும். நீ ஜாலியா வீட்ல இருந்துட்டு அங்க உன் அண்ணனை மட்டும் வேலை வாங்குறது நாட் ஃபேர்.” என்றவனுக்கு அவள் வீட்டினுள்ளேயே அடைந்து இருப்பது பிடிக்கவில்லை.

“நான் ஒண்ணும் அவனை அங்க வேலையே பாக்க சொல்லல. அவனா தான், எல்லாத்தையும் இழுத்து போட்டுட்டு செய்றான். இதுல மேனேஜருக்கு என்ன சம்பளமோ அதை மட்டும் எடுத்துட்டு ப்ராஃபிட் எல்லாம் எனக்கே போட்டு விடுறான்.” என புகாராக அவனை திட்ட,

“ஆமா, நீ எல்லாத்தையும் பொறுப்பெடுத்து செஞ்சா, அவனும் அவன் லைஃபை பாப்பான். நீ தான் எல்லாத்தையும் தட்டி கழிக்கிறியே. அப்போ அவனும் அதே கடைல கடைசி வரை கன்னிப்பையனா சாக வேண்டியது தான்…” என்று தோளைக் குலுக்கினான்.

அதில் தான் அவளுக்கு அதுவே உறைத்தது. அவனை ரொம்ப கஷ்டப்படுத்துறோமோ? என தனக்குள் சிந்தித்தவளுக்கு, உண்மையில் இரண்டாம் திருமணம் செய்து விட்டு வெளியே போகவே சங்கடமாக இருந்தது.

விவாகத்து பெற்று கணவனை பிரிந்து இருக்கும் போதே, சுற்றி இருப்பவர்களின் பார்வை அவள் மீது சுளிப்பாய் விழும். இப்போதோ சொல்லவும் வேண்டுமா? அதிலும், கடைக்கு சென்றால், தந்தையின் நண்பர் என்றும், உறவினர்கள் என்றும் யாராவது வந்து அவளை குத்தி விட்டு தான் செல்வார்கள். அதனாலேயே அக்கடையை தலை முழுகி விட்டு, மன நிம்மதிக்காக வேறு வேலைக்கு வந்தாள்.

இப்போதோ, ஆரவின் பிடிவாதம் அவளுக்கு சோர்வாக இருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில், அவனைப் பற்றி வெகுவாய் புரிந்து கொண்ட ஒன்று, அவன் சொன்னால் கேட்டே ஆக வேண்டும்… கேட்கவில்லை என்றாலும் எப்படியும் அதனை நடத்தி விடுவான். அவளுக்கு அவனிடம் வாதம் செய்யக் கூட தெம்பு இருக்கவில்லை.

சிறு அசைவிலும் அவளின் மன எண்ணத்தை கணிப்பவனுக்கு, தன் மனைவியின் தற்போதைய எண்ணம் புரியாமல் போய்விடுமா என்ன! ஆனாலும், அழுத்தமாக நின்றான்.

அவளும் வேறு வழியற்று, “சரி. நீங்க சொல்ற மாதிரி நான் போறேன். ஆனா, ரெண்டு கண்டிஷன்.” என்றாள் தலையை குனிந்தபடி.

ஆரவ் என்னவெனப் பார்க்க, “அது… ஆபிஸ்ல நம்ம மேரேஜ் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணாம்…” என தயங்கிக்கொண்டே கூற, அவளை இடுப்பில் கை வைத்து முறைத்தவன், “இன்னொன்னு என்ன?” எனக் கேட்டான் நக்கலாக.

“உங்க சொந்த விஷயத்துல நான் தலையிடல. ஆனா, ப்ளீஸ்… டின்னர் சாப்பிட்டுட்டு, நானும் இஷுவும் தூங்குனதுக்கு அப்பறம் ட்ரிங்க் பண்ணுங்க. இதுக்கு ஓகேன்னா நானும் நீங்க சொல்றதை கேக்குறேன்.” என அவனுக்கு கொக்கி போட்டாள்.

“ஸ்மார்ட் தான்…” என மெதுவாய் புன்னகைத்து, “ட்ரை பண்றேன். நொவ் கெட் ரெடி.” என்று பட்டும் படாமல் ஒப்புக்கொண்டவனைக் கண்டு கடுப்பு தான் வந்தது.

ஆனாலும், அவன் சொன்னது போன்றே பின் வந்த இரு நாட்களும் அலுவலகத்திலும், துணிக்கடையிலும், இடை இடையே இஷுவைப் பார்த்துக் கொள்வதிலும் மின்னல் வேகத்தில் பறந்தது.

அவள் அலுவலகம் வந்ததை கண்ட கவின் தான், “இப்ப நான் அவளுக்கு என்னடா வேலை குடுக்க. எக்ஸ்டரா வேலை குடுத்து, உன் கையால அடி வாங்க தான அவளை கூட்டிட்டு வந்துருக்க.” என்று பாவமாகக் கேட்க,

அதில் முறுவலித்த ஆரவ், “அவள் டீம் லீட் நீ தான. நீயே எவ்ளோ வேலை வேணும்ன்னாலும் குடுத்துக்கோ. இப்போதைக்கு அவள் என் வைஃப்ன்னு யாருக்கும் தெரியவேணாம்.” என்றதில் அவன் தலையை சொரிந்தான்.

“எக்ஸ்கியூஸ்மீ சார்.” எனக் கதவைத் தட்டி விட்டு, ஆரவ் அறைக்கு வந்த வான்மதியை ஒரு மாதிரியாக பார்த்த கவின், ‘எது சாரா?’ என்று புலம்பியபடி நகர்ந்து விட்டான்.

எப்போதும் அலுவலகத்தில் அவனை அப்படி அழைத்துப் பழகி விட, அப்போதும் வேலை குறித்த விவரங்களை கூறி விட்டு, இஷுவையும் பார்த்து விட்டு, கடைக்கு கிளம்பி விட்டாள்.

அவள் தினமும் வந்து மேற்பார்வை பார்ப்பதை கண்ட சுதாகருக்கு தான் மகிழ்ச்சி தாளவில்லை. அவளுக்குமே, இவை எல்லாம் மன ஆறுதலாகத் தான் இருந்தது. நாள் ஓடுவதே தெரியவில்லை. அங்கு வேலை முடிந்து கிளம்பும் போது, ஆரவ் இஷாந்துடன் வந்து விடுவான்.

“என்ன மேடம்… வேலை எல்லாம் முடிஞ்சுதா?” என கண் சிமிட்டிக் கேட்க, “ம்ம். இன்னும் கொஞ்சம் இருக்கு. வீட்ல போய் பாக்கலாம்ன்னு ரிப்போர்ட்ஸ் மட்டும் எடுத்துட்டு வரேன்.” என்றாள் அவளும் சிறு புன்னகையுடன்.

பின், அவளை வீட்டில் விட்டு விட்டு, அவன் அலுவலகம் சென்று இரவில் தான் வருவான். அவளிடம் கூறியது போல, இரவு உணவு வரை மதுவை தொடாமல் இருப்பவன், அதன்பிறகு தன்னறைக்குள் புகுந்து விடுவான் பாட்டிலுடன்.

அன்று காலையிலேயே, காலிங் பெல் அடிக்க, ஞாயிறு ஆதலால் இருவரும் சாவகாசமாகவே எழுந்தனர்.

அப்போது தான் குளித்து விட்டு வந்த வான்மதி, கதவைத் திறக்க அங்கு கோபமே உருவாக ஒரு பெண் நிற்பதைக் கண்டு புருவம் சுருக்கினாள்.

“கொய்யால. உன்ன போட்டு தள்ளுனா தான் என் கோபம் தீரும்” என அவள் கழுத்தை பிடிக்கப் போக, கவினும் தன்விக்கும் தான் அவளைத் தடுத்து நிறுத்தி, “ஏய் பைத்தியம். கொலை கேஸ்ல உள்ள போய்டுவ…” என்று அதட்டினர்.

வான்மதியோ, அவளை எந்தவித அலட்டலும் இல்லாமல் பார்த்து வைக்க, அவளுக்கு இன்னும் கோபம் தலைக்கேறியது.

“என்னடா இவ பயப்பட மாட்டுறா!” என பெருமூச்சுக்களுடன் கவினிடம் கிசுகிசுப்பாக கேட்க,

கவின், “அவளை நான்லாம் எப்படி மிரட்டி இருக்கேன் தெரியுமா. ஆனா, எனக்கே அவ பயப்பட மாட்டா.” என சலிப்புடன் கூறி விட்டு, “கொஞ்சம் நகருறது…” என வான்மதியைப் பார்க்க, அவளும் மூவருக்கும் வழி விட்டாள்.

உள்ளே நுழைந்ததும் தான் தாமதம், சோபாவில் இஷாந்தை மடியில் வைத்து அமர்ந்திருந்த ஆரவை சரமாரியாக அடித்தாள் லயா. காலையில் தான் சென்னை வந்து இறங்கினாள்.

“ஏய். அரை லூசு. கையில இஷு இருக்கான்டி. முதல்ல அடிக்கிறத நிறுத்து.” என்று சிரிப்புடன் கண்டிக்க,

“நீ பண்ண வேலைக்கு அவனையும் நாலு சாத்து சாத்தணும். அதெப்படிடா நீ அவளை கல்யாணம் பண்ணலாம். எனக்கு தெரியாது. ஒழுங்கா அவளை டைவர்ஸ் பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க.” என்றாள் கையை உதறி.

“சாரி. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.” என அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறியவனை மீண்டும் அவள் அடிக்க, வான்மதி ஒன்றும் பேசாமல் அவளறைக்குள் புகுந்து கொண்டாள்.

அதில் அவன் விழிகளும் அவளுடனே பயணிக்க, “டேய். நான் இங்க பேசிட்டு இருக்கேன். நீ என்னடா அவளை பாக்குற?” என விழி சுருக்கி முறைத்தாள்.

“கட்டுன பொண்டாட்டியை பார்க்க கூட கூடாதா…” ஆரவ் நக்கலாகக் கேட்டதில்,

“ஓ! நான் இருக்கும் போதே சைட் அடிக்கிற அளவுக்கு முத்திருச்சா. இங்க பாரு இப்ப கூட ஒண்ணும் குறைஞ்சு போகல. உன்னை ‘பொழச்சு போ’ன்னு அவ கூட சேர்த்து வைக்கிறேன். ஒழுங்கா அவளை வந்து எனக்கு பயப்பட சொல்லு. கழுத்தை பிடிக்க வரேன். கல்லு மாதிரி நிக்கிறாடா.” என அதட்டலாக பேசிக்கொண்டே வந்து இறுதியில் உதட்டை பிதுக்கி முடித்தாள்.

அவளை அறிந்த மூவரும் தான் பக்கென சிரித்து விட்டனர்.

கவினோ, “உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லைல.” என அவளை அளந்தபடி கேட்க, அவன் பார்வையில் ஒரு நொடி சுட்டவள், “இல்ல.” என்று தோளைக் குலுக்கினாள்.

பின் ஆரவிடம், “முதல்ல நீ ஒரு ப்ராமிஸ் பண்ணு. அவளை டைவர்ஸ் பண்ணுனா, நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கணும்.” என கையை நீட்ட, அவனோ யோசியாமல் “கண்டிப்பா. அப்படி ஒண்ணு நடந்தா பண்ணிக்கிறேன்.” என்று நமுட்டு சிரிப்பு சிரிக்க, ஏனோ அவளுக்கு இந்த ஆரவ் புதிதாக தெரிந்தான்.

அவளை விட்டுப் பிரியும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்ற அழுத்தம் அவன் விழிகளில் தெறிக்க தான் அவ்வார்த்தையையே கூறினான்.

அதில் மனதில் புன்னகைத்தாலும், வெளியில் “அப்போ உனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுக்குறது தான் என் ஃபுல் டைம் ஜாபே” என நம்பியார் போல கையை பிசைந்தாள்.

தன்விக் தான், “ஏன் லயா பார்ட் டைமா வக்கீலுக்கு படிச்சு இருக்கியா?” என சந்தேகமாக அவளை வாரி, அவளின் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டான்.

அதன் பிறகு, கேட்கவும் வேண்டுமா! இஷாந்தை தூக்கி வைத்துக்கொண்டு அவள் செய்த அலப்பறைகள். அவனுக்காக விளையாட்டு பொருட்கள் கடையையே வாங்கி வந்திருந்தாள். அவனும் சிறிது நேரம், அவளிடம் விளையாடி விட்டு, எப்போதும் போல வான்மதியின் அறையை கை காட்டி, “ப் ஆ…” என ஆரவிடம் ஏதோ கூறினான்.

அவன் கூறியது புரியாமல், “இஷு குட்டிக்கு என்ன வேணும்…? பசிக்குதா?” என கவின் கொஞ்சியபடி கேட்க, அவனிடமும், அவளின் அறையைக் காட்டி, “ஆ…” என மழலை மொழியில் ஏதோ கேட்டான்.

இஷாந்த் அறையை கை காட்டுவது மூவருக்குமே புரியவில்லை. லயா தான், “இவன் என்ன ஆரவ் கேக்குறான். டாய்ஸ் எதுவும் அங்க இருக்கா என்ன?” எனக் கேட்க, அதில் அழகாய் புன்னகைத்தவன், “அவன் அவனோட அம்மாவை தேடுறான்…” என்றதில், அங்கு பலத்த அமைதி.

அவர்களோ, மிருணாவைத் தான் சொல்கிறானோ என மனதில் வலியுடன் அமர்ந்திருக்க, ஆரவ் “மதி…” என அழைத்தான் சத்தமாக.

அதுவரை, அவர்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று அறையில் அமர்ந்திருந்தவள், ஆரவின் சத்தம் கேட்டதும், வெளியில் வந்து என்னவென பார்க்க, “உன்ன தேடுறான் பாரு.” என்று இஷுவை கை காட்ட, அவனும், அவளைக் கண்டதும் குஷியாக கையைத் தூக்கி ஏதோ பேசினான்.

அதில், அவனை தூக்கிக் கொண்டவள், “என்ன வேணுமாம் என் பேபிக்கு.” என கொஞ்சலாகக் கேட்க, இஷாந்த் அவள் தோளில் சாய்ந்து முகத்தை தேய்த்தான்.

இப்போதெல்லாம் பசி வந்தாலும், உறக்கம் வந்தாலும் அவளை மட்டுமே நாடத் தொடங்கி விட்டான். உறக்கம் வந்தால், முகத்தை தேய்ப்பதும், பசி வந்தால் அவளின் கன்னத்தை எச்சில் செய்வதிலும் தன்னை உணர்த்த, அவனை அணு அணுவாக உணர்ந்தவள்,

“என் இஷு பேபிக்கு தூக்கம் வந்துடுச்சா. இப்பவே தூங்குனா, நைட்டு வரை தூங்க மாட்ட பேபி. இங்க பாரு, ஆண்ட்டி உனக்கு டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துருக்காங்க.” என நாசுக்காக அவளை அத்தையாக்கி விட, லயாவோ ஆரவ் அம்மாவென்று மதியை தான் கூறி இருக்கிறான் என்றதையே உணர்ந்து உறைந்திருந்தாள்.

ஒரு முறை, இஷாந்த்திடம் தன்னை “மம்மி பாருங்க…” என கொஞ்சியவளிடம், அப்படி சொல்லக்கூடாது என்று முடிவாக மறுத்து விட்டான் ஆரவ். அவளும், எதார்த்தமாக தான் சொன்னாள். ஆனால், அவன் ஒப்புக்கொள்ளவே இல்லை. அதிலிருந்து ஹேமாவும் அத்தையென்ற முறையிலேயே தான் கொஞ்சுவாள்.

கவினும் தன்விக்கும் சொல்லவே வேண்டாம். புரிந்தும் புரியாமலும், அவர்கள் இருவரையும் குழப்பமாக பார்த்த கவினுக்கு மட்டும் என்னவோ உறுத்தியது. ‘ஏதோ இருக்கு ரெண்டு பேருக்குள்ள. ஆனா, என்ன அது?’ எனக் குழம்பினான்.

லயா, “அடிங்க… என்ன பார்த்தா உனக்கு ஆண்ட்டி மாதிரி இருக்கா?” என சண்டைக்கு வர, அதில் விழித்த வான்மதி, “அப்போ அத்தைன்னு சொல்லவா?” என்றாள்.

ஆரவ் முட்டிய சிரிப்புடன், “இந்த அசிங்கம் உனக்கு தேவையா?” என லயா காதில் முணுமுணுக்க, அவன் முடியை பற்றி சுற்றியவள், “எல்லாம் உன்னால தாண்டா. நீ கல்யாணம் பண்ணுனதுனால தான அவள் என்னை கலாய்க்கிறா.” என்று முறைத்தாள்.

வான்மதி பதில் கூறாமல், “நான் பேபிய தூங்க வைக்கிறேன்.” என்று ஆரவின் அறைக்கு செல்ல, அவள் செல்லும் வரை, அவளையே பார்த்திருந்தான்.

அவன் பார்வையைக் கண்டும் காணாமல் இருந்து விட்ட மூவரும், மதிய உணவிற்கு வெளியில் செல்லலாம் என திட்டமிட, ஆரவும் “ஓகே. நான் மதியை கிளம்ப சொல்றேன்.” என்று எழுந்தான்.

ஹேமாவும் வீட்டிலிருந்து ஹோட்டலுக்கு வந்து விடுவதாய் கூறி விட, அறைக்கு சென்ற ஆரவ், அப்போது தான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற மகனை பார்த்து விட்டு, வெளியில் செல்வதை கூற, அவளோ “நான் வரல ஆரவ். பேபியும் தூங்குறான். நாங்க வீட்ல இருக்கோம். நீங்க போயிட்டு வாங்க.” என்றாள்.

அவளை அமைதியாக பார்த்தவன், “அவள் ஒரு லூசு மதி. பேசுறதுல பாதி விளையாட்டு தான் பேசுவா…” எனக் கூற,

“செகண்ட் டைவர்ஸ் பண்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்றாள் அவனைப் பாராமல்.

அதில், அவளை அழுத்த நடையுடன் நெருங்கியவன், “கையெழுத்து போட கை இருந்தா தான பண்ணுவ…” என்று கீழ்க்கண்ணால் முறைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் புன்னகைக்கத் துடித்த அவனின் அதரங்களைக் கண்டு, மெலிதாக புன்னகைத்தாள்.

ஏதோவொரு நிம்மதி இருவரையும் சூழ, ஆரவ் மீண்டும், “இஷுவை தூக்கிட்டு போலாம் மதி. நீயும் வாயேன்.” கண்ணை சுருக்கி கெஞ்சலாகவே கேட்டான்.

உத்தரவிட்டால் கூட, பதிலுக்கு பேசலாம். ஆனால், இவனின் கெஞ்சும் மொழியில் அவளுக்குத் தான் எதையும் மறுக்க இயலவில்லை. அக்கெஞ்சல் கொண்டே, அவளை அவன் வசம் வீழ்த்தப் போகிறான் என்றும் அவள் அறியவில்லை…!

அதன் விளைவாக, காட்டன் புடவை ஒன்றை கட்டிக்கொண்டவள், உறங்கி இருந்த இஷுவையும் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தாள். லயா, “நான் தான் வச்சுப்பேன்.” என இஷுவை சிலுப்பிக்கொண்டு வாங்கி கொள்ள, அவளும் கண்டுகொள்ளவில்லை.

ஆரவின் காரிலேயே ஐவரும் செல்ல முடிவாக, ஆரவ் ஓட்டுநர் இருக்கைக்கு செல்லும்போதே, லயா வம்படியாக முன் சீட்டில் இஷுவுடன் அமர்ந்து கொண்டாள்.

வான்மதிக்கு தான் திகைப்பாக இருந்தது. என்ன தான் இருந்தாலும் இரு ஆண்களுடன் பின்னால் எப்படி அமர்வது எனக் காரில் ஏறாமல் கையை பிசைந்தபடி நின்றாள்.

நொடியில் நிலையை உள்வாங்கி கொண்ட ஆரவ், “கவி… ட்ரைவ் பண்ணு.” என சாவியை அவனுக்குத் தூக்கி போட்டு விட்டு, பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான்.

ஆரவின் அருகில் தான் அமரப் போகிறோம் என்றதும், உடனே காரில் ஏறிக் கொண்டவள், ஜன்னலோரம் ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

“அடிங் கொய்யால…” எனத் திரும்பி ஆரவை முறைத்து வைத்த லயா, முன்னால் திரும்பியதும், ‘பையன்… என்ன இப்படி மாட்டிக்கிட்டான்…’ என நக்கலாக புன்னகைத்துக் கொண்டாள்.

கவின் வேறு, கியர் போடுகிறேன் பேர்வழியென அவள் முட்டியை அவ்வப்பொழுது உரச, அதில் பல்லைக்கடித்தவள், காலை எடுத்துக்கொண்டாள். ‘அய்ய… ரொம்ப தான்…! எவ்ளோ நாள் நீ என்கிட்ட இருந்து தப்பிக்கிறன்னு நானும் பாக்குறேன்’ என அவனும் உள்ளுக்குள் முறுவலித்தான்.

பின்னால் இருந்த வான்மதி நிலையோ வெகு மோசமாக இருந்தது. ஆரவின் தோளோடு உரசி அமரும் நிலை தான். இதில் கவின் குறுக்கு வழியில் செல்லும் பொருட்டு, குறுகிய சாலை வழியே செல்ல, சாலையோ கரடு முரடாக இருந்தது.

அவனுக்கோ ஸ்பீட் ப்ரேக்கரில் பதமாகவும் செல்ல தெரியாது. அதில், வான்மதி இன்னுமாக அவனை இடித்துக் கொள்ள, கவினுக்கு பயம் வேறு.

இப்படி சென்றாலே ஆரவ் அவனை திட்டு திட்டென திட்டி விடுவான். ‘இன்னைக்கு என்ன இன்னும் ஸ்டார்ட் பண்ணாம இருக்கான்…’ என்றபடி மிரர் வழியே பின்னால் பார்க்க, அங்கோ அவன் அவனவளின் உரசலில் தன்னை மறந்து கண்ணை மூடி அவ்விதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

‘சம்திங் ராங். ஒருவேளை இவனுக்கு அவளை முன்னாடியே தெரியுமோ? லவ் எதுவும் பண்ணிருப்பாங்களோ…’ என எண்ணத்தை சிதற விட்டவனுக்கு, எவ்வளவு சிந்தித்து பார்த்தும் அப்படி வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை.

ஏனெனில், வான்மதியின் சொந்த ஊர் திருப்பூர். இவன் சென்னை தாண்டி வெளியூருக்கு தனியே சென்றதே இல்லை. நான்கு நாட்கள் கூட பார்க்காமல் இருந்தது கிடையாது. அப்படி இருக்கையில் காதல் எல்லாம் நூறு சதம் வாய்ப்பில்லை தான். ஆனாலும், எப்படி இருவருக்குள் இந்த புரிதல் வந்திருக்கும்’ என்றே குழம்பினான்.

தன்விக்கோ, யார்க்கு வந்து கேடோ என்பது போல் ஹோட்டலில் சென்று என்ன சாப்பிடலாம் என்ற தீவிர சிந்தனையில் இருக்க, வண்டி ஒரு பெரிய ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறங்கையில் பிடிமானம் இல்லாமல், வான்மதியின் கரங்கள் ஆரவின் தொடையில் ஒரு நொடி படிந்தது.

மறுநொடி சரட்டென கையை எடுத்துக் கொண்டவள், இன்னும் ஜன்னலோரம் ஒதுங்கினாள். அவனுக்கோ மூச்சு விடவே சிரமமாக இருந்தது. அவளின் கரங்களை இறுக்கி பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வு கட்டுக்கடங்காமல் எழ, முயன்று கையை இறுக்கி தன்னை அடக்கியவன், ‘இன்னைக்கு நாலு பாட்டில உள்ள தள்ளலைன்னா அவ்ளோ தான்…’ என தனக்குள் புலம்பிக் கொண்டான்.

அந்த கடுப்பில், “பரதேசி… மெதுவா ஓட்டி தொல!” என்று கவினிடம் காய்ந்தான்.

‘எப்படி பார்த்தாலும் இவனுக்கு நான் நல்லது தான பண்றேன்.’ என்ற ரீதியில் அவன் பார்த்து வைக்க, நல்லவேளையாக அதற்குள் உணவகம் வந்து விட்டது.

‘ஊஃப்…’ என நிம்மதி பெருமூச்சு விட்டவள், அவசரமாக இறங்கிக் கொள்ள, அனைவரும் உள்ளே சென்றனர். லயா, இஷாந்தை வான்மதியிடம் கொடுத்து விட்டு, கை கழுவ செல்ல, கவின் “டேய் வாடா.” என தன்விக்கை அழைத்தான்.

“அட போடா. சாப்பிட்டு கை கழுவிக்கலாம்” என மெனு கார்டை உற்றுப் பார்க்க, தலையில் அடித்துக் கொண்டவன், கை கழுவும் இடம் சென்று லயாவை வழி மறித்து நின்றான்.

“என்னடா?” என முறைப்புடன் அவள் வினவ, “எனக்கு எப்போ ஓகே சொல்லுவ?” எனக் கேட்டான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“சனியனே. உனக்கு விவஸ்தையே இல்லையா. நான் தான் உன் மேல லவ் வரலைன்னு சொல்லிட்டேன்ல”

“இதென்னடா வம்பா போச்சு. நீ மட்டும் ஆரவ் லவ் பண்ணலைன்னு தெரிஞ்சே அவன் பின்னாடி சுத்துன. இப்ப வரை சுத்துற. அதையே நான் செஞ்சா அது தப்பா.” என்றான் நியாயமாக.

“கடுப்பேத்தாத. உன் ப்ரெண்ட லவ் பண்றேன்னு உன்கிட்டயே சொல்லி இருக்கேன். நீ என்னன்னா வெட்கமே இல்லாம என்னை லவ் பண்றேன்னு சொல்ற.” எனக் கடுப்பானாள்.

அவனோ வாயை பொத்தி சிரித்து, “ஆமா, பெரிய ரோமியோ ஜுலியட் லவ்வு. நல்லா வாயில வந்துடும். அவனை நீ லவ் பண்ணி இருக்கலாம். ஆனா அவன் நோ சொன்னதுமே அது வெறும் க்ரஷ் – ஆ மாறிடுச்சு உனக்கு. அது எனக்கே தெரியுது. உனக்கு தெரியலையா.” என்றான் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

“இங்க பாரு இது க்ரஷோ லவ்வோ, பட் நான் உன்ன லவ் பண்ணல. தட்ஸ் இட்.” என திட்டவட்டமாக கூறி விட்டு நகர, ‘மூஞ்ச பாரு. பெரிய உலக அழகி. நீ இல்லன்னா வேற பொண்ணா இல்ல போடி…’ என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாலும், சிறு வலி இருக்கவே செய்தது ஆடவனுக்கு.

லயா வந்து அமர்ந்ததும், அவளுக்கு எதிரில் கவின் அமர, ஆரவ் தான் டேபிளில் தாளமிட்டபடி, “கையை மட்டும் கழுவ போனீங்களா. இல்ல வாஷ் ரூமையும் சேர்த்து கழுவிட்டு வந்தீங்களா?” எனக் கேட்டான் கிண்டலாக.

அதில், வான்மதி ‘கிளுக்’ என சிரித்து விட, கவினும் லயாவும் ஒரு சேர அவளை முறைத்தனர்.

வண்டியில் உணவகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஹேமா தான், ‘ஐயையோ லேட் ஆச்சே. இவனுங்க வேற நம்மளை விட்டுட்டு சாப்புட்டுருவானுங்களே.’ என வேகமாக வண்டியை பார்க் செய்து விட்டு, உள்ளே செல்லப் போக, அங்கு சுதாகரும் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டிருந்தான்.

“வாவ். நம்ம சைட்டு. ஹோட்டலுக்கு தான் சாப்பிட வரானோ. ஐ ஜாலி ஜாலி.” என குதூகலித்து, அவன் அவளை நோக்கி வந்ததும் “ஹாய் சுதாகர்!” என அனைத்துப் பற்களையும் காட்டினாள்.

அவனோ புருவம் சுருக்கி, “ஹாய். பட் நீங்க யாரு?” எனக் கேட்டதில் அவள் முகத்தில் ஈ ஆடவில்லை.

“நான் யாருன்னு உங்களுக்கு தெரியல?” என்று அவள் கடுப்புடன் கேட்க, அவனோ “சாரி. தெரியல” என்றான் குழப்பமாக.

“எக்ஸ்கியூஸ் மீ. கொஞ்சம் வழி விடுறீங்களா. நான் உள்ள போகணும்.” என்று அவன் கூறியதில் தான் வாசலை வழிமறித்து நிற்பதே அவளுக்கு புரிந்தது.

‘அற்ப பதரே! சோறு சாப்பிட அவ்ளோ அவசரமா’ என அவனை வாய்க்குள் நன்றாக திட்டியபடி வழிவிட்டவள், ‘நல்லவேளை நம்ம அசிங்கப்பட்டதை யாருமே பார்க்கல.’ என சுற்றி முற்றி பார்த்து நிம்மதியாகி விட்டு உள்ளே சென்றாள்.

சுதாகரை ஆரவ் தான் அழைத்திருந்தான். அதனால் நேராக ஆரவ் இருந்த டேபிளை நோக்கி செல்ல, அவனைக் கண்டதும் வான்மதி விழி விரித்து விட்டு, “நீ என்ன இங்க?” எனக் கேட்டாள்.

“நீ தான் கூப்பிடல. ஆனா, என் மச்சான் என்னை விட்டுட்டு சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம்…!” என அடக்கப்பட்ட புன்னகையுடன் ஆரவைப் பார்க்க, அவனோ ‘மூடு’ என சைகை காட்டினான்.

“மச்சானா அது யாரு?” எனக் கேட்டவளுக்கு இன்னும் புரியவில்லை.

“இருந்தாலும் நீ இவ்ளோ டியூப் லைட்டா இருக்க கூடாது வண்டு.” என சுதாகர் மேலும் வார, அதன் பிறகே புரிந்தவள், “மூடிட்டு உட்காரு” என்றாள் அடிக்குரலில்.

அவன் பின்னேயே தான் ஹேமாவும் வந்து, அவனை முறைத்தபடி எதிரில் அமர, அவனோ “நீங்க இங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்டான்.

கவின், “அவள் எங்க ப்ரெண்ட் தான். அன்னைக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பார்க்கல?” என பதில் கூற, அதன் பிறகே நினைவு வந்தவனாக, “ஓ! சாரி மறந்துட்டேன். கவனிக்கல.” என்றவன் சினேகமாக புன்னகைத்து வைக்க, ஹேமாவிற்கு குபுகுபுவென வந்தது.

வான்மதி தான், ‘அடப்பாவி’ என்று வாயில் கை வைத்தாள். “டேய். சுத்தி. உனக்கு அவளை ஞாபகம் இல்லயா? அன்னைக்கு தான் அவளை யாரு என்னன்னு கேட்டு விசாரிச்சுட்டு இருந்த. இப்ப பச்சையா பொய் சொல்ற…” யாருக்கும் கேட்கா வண்ணம் அவனின் காதை கடிக்க,

“இப்ப நீ மூடிட்டு உட்காருறியா…” என சிரித்த முகத்தை மாற்றாமலேயே தங்கையை அடக்கினான்.

தன்னை கவனிக்கவில்லை என்றதில், இன்னுமாக கடியான ஹேமா, கடுப்புடன் அமர்ந்திருக்க, லயா அவள் தலையில் கொட்டி, “பிசாசே. இங்க ஒருத்தி இருக்கேன் உன் கண்ணுக்கு தெரியல” என்றாள் முறைப்புடன்.

அதன் பிறகே, பல மாதங்கள் கழித்து ஊருக்கு திரும்பிய தோழியைக் காண தான் வந்திருக்கிறோம் என்றே உணர்ந்த ஹேமா, அசடு வழிந்து, அவளைக் கட்டிக்கொண்டாள்.

நடக்கும் உள் விளையாட்டுக்கள் அனைத்தும் ஆரவின் கண்ணில் இருந்து தப்பவே இல்லை.

அன்றைய பொழுது, நண்பர்களுடன் அரட்டை என கழிய, மறுநாள், எப்போதும் போல் பரபரப்பாக விடிந்தது.

அன்று சற்றே சோர்வாக இருந்த வான்மதி, “ஆரவ் இன்னைக்கு நான் எங்கயும் வரல. டயர்ட் – ஆ இருக்கு. ப்ளீஸ்.” என முகத்தை சுருக்க, அவனோ பதற்றத்தை முகத்தில் தாங்கி,

“என்னாச்சு மதி? உடம்பு சரி இல்லையா.” எனக் கேட்டான்.

“ம்ம்” என தலையை மட்டும் ஆட்டியவளிடம் வேறு கேள்வி எதுவும் கேட்காமல், “நீ ரெஸ்ட் எடு. நான் இஷுவை ஆபிஸ்க்கு கூட்டிட்டு போறேன்.” என்றான்.

“வேணாம் ஆரவ். அவன் இருக்கட்டும். ஒண்ணும் பிரச்சனை இல்ல.” என்றதில், “ஆர் யூ சியூர்? ரொம்ப முடியலைன்னா கால் பண்ணு.” என்றிட, “ம்ம்” என்றாள்.

ஆனால், அத்தனை சீக்கிரம் கிளம்பிவிட வில்லை அவன். அவளுக்கு சாப்பிட ஏதுவாக காரம் கம்மியாக சமைத்து வைத்தவன், ஒரு பாட்டிலில் பழச்சாறையும் நிரப்பி, டைனிங் டேபிளில் வைத்து விட்டு, “நான் வரும் போது இங்க இருக்கறதை எல்லாம் காலி பண்ணிருக்கனும்.” என எச்சரிக்க, மெலிதாய் புன்னகைத்தவள், தலையை ஆட்டினாள்.

அந்நேரம், இன்டர்காம் அழைக்க, செக்கியூரிட்டி தான் பேசினான்.

“சார். உங்களை பிளாட்க்கு கெஸ்ட் வந்துருக்காங்க. உள்ள அலோ பண்ணவா?” எனக் கேட்க, “யாரு” என்றபடி, ஜன்னலைத் திறந்து பார்த்தவனுக்கு கண்கள் சினத்தில் சிவந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
57
+1
210
+1
3
+1
8

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.