Loading

சித்ராக்ஷியை சுவாரஸ்யமாய் பார்த்த இளமாறனுக்கு முதலில் தான் காதலித்தவனை மறக்க இயலவில்லை என அவள் கூறியது திகைப்பையும் வலியையும் கொடுத்தது உண்மைதான். ஆனால், அதன் பிறகு, அவள் நிலையை உணர்ந்து கொண்டவன், எப்படியும் அவள் மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நிச்சயத்திற்கு கோவிலுக்கு செல்ல, அப்போது தான் செல்வியும் விஷயம் அறிந்து அதிர்ந்தாள்.

ஆனால் உடனேயே, முகுந்திடம் இளமாறனின் எண்ணை வாங்கி, ‘அவள் காதலிச்சது உண்மை தான். ஆனால் கண்டிப்பா இப்போ அவள் மனசுல அவன் இல்ல. அவள் என்னைக்கோ அவனை தூக்கி எறிஞ்சுட்டா! ப்ளீஸ் அவளை தப்பா நினைக்காதீங்க’ என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.

ஹோட்டலில் இருக்கும் போது தான் அவனும் அந்த குறுஞ்செய்தியை பார்த்து சற்று இலகுவாகி, ஏன் இப்படி செய்கிறாள் என குழம்பி, அவளிடமே கேட்டான். அதோடு, காதலையும் உரைத்து விட்டான்.

அதன் பிறகு, அன்று இரவே செல்வியிடம் போன் செய்து பேசி, “நான் தப்பாலாம் நினைக்கல. என்ன ஆனாலும் அவளை தான் திருமணம் செய்வேன்” என்று கூறியதில், செல்வி மேலும் பேச வர, அவளை தடுத்தவன், “வேணாம் செல்வி. அவளோட கடந்த காலத்தை நான் அவள்கிட்டயே கேட்டுக்குறேன். எனக்கு இப்போ எதுவும் தெரியவேணாம். கூல்!” என்றான் அவளை சமன் செய்யும் நோக்கில்.

செல்விக்கு அவன் பேச்சில் ஒரு நம்பிக்கையும், அவன் மேல் ஒரு மரியாதையும் வர, அவனிடம் சரளமாகவே பேச ஆரம்பித்து விட்டாள். சித்ராக்ஷியோ செல்வியை பாவமாக பார்த்த படி இருக்க, அவள் இவளை கண்டுகொள்ளாமல் “நான் வரேன்” என்று வீட்டிற்கு சென்று விட்டாள்.

பின் இளமாறனே, “சோ, ஹாஸ்பிடல் போகலாமா?” எனக் கேட்க, அவள் “அதான் இன்பார்ம் பண்ணியாச்சே! அவங்க பார்த்துப்பாங்க” என்றதில், ஏதோ யோசித்தவன், “இல்ல, நம்ம போய் பார்த்துட்டு வரலாம். இப்படி பாதியில வந்தா சரியா வராது” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

வேறு வழியில்லாது, அவனுடன் மீண்டும் மருத்துவமனை சென்றவள், அங்கு ரோஹித் பதட்டத்துடன் ஐசியூவை பார்ப்பதை கண்டு ஒரு நொடி நின்று விட்டு மீண்டும் நடந்தாள். அவனும் அவளை பார்த்து விட்டு, “சித்ரா, என்ன ஆச்சு? அப்பாவுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு” எனக் கேட்க, அவள் பதில் கூறும் அவன் யாரென்று உணர்ந்து கொண்டவன், அவனே நடந்ததை விளக்கினான்.

அதில் ‘இவன் யாரு?’ என்பது போல் இளமாறனை பார்த்தவன், மருத்துவர் வரவில் கலைந்து, அவரிடம் விசாரிக்க, பலத்த காயம் என்றும், ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் கூறியதில் தான் அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.

கூடவே சித்ராவும் சற்று நிம்மதியாக, “கிளம்பலாமா இளா?” எனக் கேட்டாள்.

ரோஹித் வேகமாக “தேங்க்ஸ் சித்ரா… அப்பாவை” என ஆரம்பிக்க, அவனை எரிக்கும் பார்வை ஒன்றை பார்த்தவள், “உன் அப்பான்னு தெரிஞ்சுருந்தா நான் காப்பாத்திருக்கவே மாட்டேன்…” என்று சுள்ளென உரைத்து விட்டு, இளமாறனை இழுத்துக் கொண்டு செல்ல, மாறனே சற்று வியந்திருந்தான்.

என்னடா, ‘அக்காவும் தங்கச்சியும் பார்க்க பச்சை மண்ணு மாதிரி இருந்துகிட்டு, இந்த போடு போடுதுங்க’ என மனதினுள் புன்னகைத்துக் கொண்டவனுக்கு, அவள் இன்னும் தன் கைப்பற்றி இருந்ததில் மேலும் புன்னகை வந்தது.

“ஹே! பட பட பாலோ மைன் (pal – o – mine)” என அவளை அழைக்க, அதில் நின்றவள், “என்னது பாலோ மைன் ஆ?” என்று புரியாமல் விழித்தாள். அவள் விழியில் கவிழ்ந்தவன், “ம்ம், அது ஒரு கனடா சாக்லேட்” என்றவன் மேலும், “அது ஒரு டார்க் சாக்லேட். அதை சுத்தி க்ரன்ச்சியா வேர்க்கடலை இருக்கும். பட் சென்டர்ல சாஃப்டா இருக்கும்… அது மாதிரி தான் நீயும் இருக்க” என்று கண்ணடிக்க அதில் உறைந்தவளுக்கு அவன் பேச்சு சிவக்க வேறு வைக்க, அதனை மறைத்துக் கொண்டு முறைத்தாள்.

“நீங்க சாக்லேட் பேர்லாம் ஒன்னும் வைக்க வேணாம். கிளம்புங்க” என வேறு எங்கோ பார்த்து கூற, அவனோ குறுநகையுடன், “அதுக்கு கேண்டி என் கையை விடணுமே?” என்றதில், அப்போது தான் அவன் கையை பிடித்திருந்தப்பதை கண்டவள் ‘ஐயோ’ என நொந்து கொண்டு சட்டென நகன்றாள்.

பின், அவளை பார்த்தபடியே வண்டியை எடுத்தவன், “சிட்!” என பின் புறம் காட்ட, எதுவும் பேசாமல் அமர்ந்தவளை கடற்கரைக்கு தான் அழைத்து சென்றான். அப்போதே நன்றாக இருட்டி இருக்க, முழு நிலவு கடற்பரப்பின் மேல் பரவி, மெல்லொளியை மினுமினுப்பாய் கொடுத்தது.

அவள் எதுவும் பேசாமல் கடல் அலைகளை சுவாரஸ்யமாய் பார்ப்பது போல் பாவனை செய்ததில் மாறன், “இதுக்கு முன்னாடி நீ பீச் பார்த்தது இல்லையா?” என கேள்வியாய் கேட்க, அதில் தான் திரும்பியவளிடம் “இல்ல, ஏதோ புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறியே அதான் கேட்டேன்” என குறும்பாய் சிரித்தவன், “சரி சொல்லு!” என்றான் அசட்டையாக.

அவளோ குழம்பி “என்ன சொல்லணும்?” என்று கேட்க, “ம்ம்ம்ம்” என சிந்தித்தவன், “ஒன்னு இப்போவே ஐ லவ் யூ சொல்லு. இல்லைனா உன் லவ் ஸ்டோரி சொல்லு” என தோளை குலுக்க அவளோ திகைத்து பின், “நீங்க எதையும் நார்மலாவே பண்ண மாட்டீங்களா?” என்றாள் முறைத்து.

அவனோ, “ம்ம்ஹும்” என மறுப்பாக தலையாட்ட, இவனை என்ன பண்றதுன்னே தெரியல என்று தவித்து போனவளை அழுத்தமாக பார்த்தான். இரண்டில் ஒன்றை செய்யாமல் எப்படியும் தன்னை அனுப்ப போவதில்லை என்ற ரீதியில்.

அதில் சில நிமிடம் அமைதி காத்தவள், “ரோஹித் என் காலேஜ் பிரெண்ட். ரெண்டும் பேரும் கேம்பஸ் ல ஒண்ணா தான் செலக்ட் ஆனோம். சோ ஒரே ஆபிஸ். ஹி வாஸ் மை குட் பிரெண்ட். அப்பறம் கொஞ்ச நாள்ல அவன் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணான்” என்றவள் காயம் தந்த காலத்திற்குள் சென்றாள்.

“மா லேட் ஆச்சு” என காலை நேர பரபரப்பில் அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள் சித்ராக்ஷி. “ஒரு ரெண்டு நிமிஷம் இரு சித்ராம்மா, டிபன் முடிஞ்சது” என பர்வதம் சமையலில் மூழ்க, செல்வி தான், அன்று காலையிலேயே வந்து, “முடியை சடை பின்னாம எப்படி போட்டுருக்க பாரு. இதுல காயுறதுக்கு முன்னாடியே  ரப்பர் பேண்ட் போட்டுருக்க…” என முறைத்தவளை “லேட் ஆகிடுச்சு அக்கா. இன்னைக்கு ஒரு நாள் விட்டுடேன். உன் அட்வைஸை” என்று கண் சிமிட்டியவள், சிட்டாய் பறந்து விட்டாள்.

இவள் இருக்காளே என கடிந்த செல்வி, “நான் போயிட்டு வரேன் சித்தி” என்று அவள் வீட்டை நோக்கி சென்றாள். எப்போதும் காலையும் மாலையும் சித்தப்பா வீட்டிற்கு வந்து தன் தங்கையை பார்த்தால் தான் அவளுக்கு நிம்மதியாக இருக்கும்.

ஏனோ, இது நீலாவிற்கு சுத்தமாக பிடிக்காது. அதிலும், சித்ரா படிப்பதும், வேலைக்கு செல்வதும், இதில் தன் சம்பளத்தில் சேர்த்து வைத்து வண்டி வாங்கினேன் என்று செல்வியை கூட்டிக்கொண்டு சுத்துவதும் எரிச்சலாக தான் இருக்கும். ஒன்று, அடக்க ஒடுக்கமா வளர்க்காம படிக்க வைக்கிறேன்னு சொல்லி, இவளை கெடுத்து வச்சுருக்காங்க என்ற எண்ணம். மற்றொன்று, புகுந்த வீட்டை ஆரம்பித்தில் இருந்தே பிடிக்காமல் போனது.

ஆனால் சித்ராக்ஷி வேலை இல்லை என்றாலும் செல்வியின் வீட்டில் தான் எப்போதும் இருப்பாள். பெரியம்மா கரித்து கொட்டினாலும், அதனை விளையாட்டாய் எடுத்து அவரை கிண்டல் செய்து விட்டு செல்வாள்.பெரியப்பா ராஜேந்திரனும் அவளை ஒன்றும் சொல்ல மாட்டார் அதனால் நீலா அமைதியா இருக்க வேண்டியதாக விட்டது.

“டேய்! ரோஹி இன்னைக்கு ப்ராஜக்ட் ரிலீஸ் இருக்காமே… எப்படியும் இன்னைக்கு ஆன் டைம் வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்களா” என புலம்பிய சித்ராக்ஷியை கண்டு, “இவனுங்க ப்ராஜக்ட் ரிலீஸ் பண்றானுங்களோ இல்லையோ, நான் இன்னைக்கு ரிலீஸ் ஆகுற விஜய் படத்துக்கு போக போறேன் டாட்” என்றான் நக்கலாக.

அவளோ “உன்ன தான் மானேஜர் விட மாட்டாரே?” என்று கேள்வியாய் கேட்க, அவனோ, “அந்த சொட்டை மண்டையன் கிட்ட பேசுற விதமா பேசி, எப்படி பெர்மிஷன் வாங்குறேன்னு பாரு. நான் பண்ற ஆக்டிங் ல அவன் அப்படியே ஆடிப்போய்டுவான்” என்று அவன் போக்கில் பேச, சித்ராக்ஷி “ஓ! இருந்தாலும் நீ நம்ம மேனேஜர அப்படி எல்லாம் சொல்லக் கூடாது” என்று நல்லபிள்ளையாய் பேச, அவன் திரு திரு வென விழித்து, பின்னால் திரும்பி பார்த்து அதிர்ந்து விட்டான்.

அங்கு அவனின் மேனேஜர் அவனை முறைத்தபடி நிற்க, இங்கோ ரோஹித் சித்ராக்ஷியை முறைத்தவன், அவள் தீவிரமாய் மடிக்கணினியில் வேலை பார்ப்பதை கண்டு மேலும் முறைத்தான்.

பின் மேனேஜரிடம் பல திட்டுக்களை பரிசாக வாங்கி விட்டு, அவரிடம் கெஞ்சி கூத்தாடி அலுவலகம் முடியும் நேரம் அவன் இடத்திற்கு வர, அங்கு சித்ராக்ஷி, “என்னடா நல்ல படியா திட்டு வாங்குனியா? சரி சரி, எனக்கு ஒர்க் முடிஞ்சுது. நான் கிளம்புறேன்” என்று கிண்டலாக கூறியதில், கடுப்பானவன், அவளை துரத்த ஆரம்பிக்க, அவள் பார்க்கிங்கிற்கே ஓடி விட்டாள்.

“ஓடாத, சித்ரா ஒழுங்கா நில்லு…!” என்று எச்சரிக்க, அவள் “முடியாது. முடியாது” என மேலும் ஓடிட, இறுதியில் அவனின் பல்சர் பைக்கில் வந்து நின்றவள், “டேய், அடிக்காத. வலிக்கும் ப்ளீஸ் ரோஹித்” என்று கெஞ்சியபடி நிற்க, அவளை சிறு சிரிப்புடன் பார்த்தான்.

“உன்னை அடிச்சா எனக்கும் வலிக்கும்” என சற்று ரசனையுடன் கூறியதில் கண் விழித்து பார்த்தவள், “என்ன?” என்று புரியாமல் பார்த்தாள். அவனோ “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சித்ரா. நம்ம நல்ல பிரெண்ட்ஸ் உம் கூட, ஏன் நம்ம நல்ல லைஃப் பார்ட்னர்ஸ் ஆகவும் இருக்க கூடாது?” என கேள்வியாய் வினவிட, அதில் அவள் தான் அமைதியாகி விட்டாள்.

அதுவும் திடீரென இப்படி கேட்பான் என உணராது திகைத்தவள், யோசனையில் மூழ்க, “நான் உன்னை டிராப் பண்ணவா சித்ரா?” எனக் கேட்டான். அதில் ம்ம் என அவள் தலையசைக்க, அவனின் பல்சரில் அமர்ந்தவளுக்கு சட்டென வானில் பறப்பது போன்றதொரு உணர்வு.

அவனோ நேராக காபி டே க்கு அழைத்து செல்ல, அவள் “இங்க எதுக்கு?” என்று பார்த்தாள். “ம்ம், ஒரு காப்பச்சினோ” என்று குறும்பாய் கேட்டிட, அவளும் மென்னகையுடன் “ம்ம்” என்றாள்.

பின் இருவரும் அமைதியாகவே அங்கு சிறிது நேரம் பொழுதை கழிக்க, ரோஹித், “ஐ லவ் யூ சித்ரா” என்றான் ரசனையாக. அவளோ அவனை பாராமல், “முதல்ல வீட்டுல பேசுவோம் ரோஹித் அவங்களுக்கு ஓகே னா…” என கூறும்போதே, அவன் “நான் அப்பா கிட்ட பேசிட்டேன்…” என்றான் மெதுவாக.

அதில் விழித்தி விரித்தவள், “ஹோ! சார் அப்போ எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் என்கிட்ட பேசுறீங்க. நான் முடியாதுன்னு சொன்னா…” என கேள்வியாய் கேட்டவளிடம் “அதான் நீ இன்னும் நோ சொல்லலையே…” என்று அவளை மடக்க, “அய்ய… நான் அப்பா அம்மா கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்றாள் முடிவாக.

“கல்யாணத்துக்கு அவங்க கிட்ட கேட்கலாம். காதலுக்குமா?” என வினவியவனிடம், “ஏன், கல்யாணத்தை கேட்டு பண்ணும் போது காதல கேட்டு பண்ண கூடாதா?” என்று விழி உயர்த்தியதில், “நான் சரண்டர்” என்றான் கையெடுத்து கும்பிட்டு. அதில் அவள் கலகலவென சிரித்திட, பின் ஸ்வீட் நத்திங்ஸ் பேசி விட்டு இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

அடுத்த நாளே, அவளின் அப்பாவிடம் ரோஹித் பேசியதை கூறிட, வீட்டினருக்கும் அவனையும் அவன் குடும்பத்தையும் தெரியும் என்பதால் பெண் கேட்க வர சொன்னார்.

ஆனால், சித்ரா அதனை ரோஹித்திடம் கூறாமல் நாட்களை தள்ளி போட, அவனோ தினமும் வீட்டுல பேசுனியா? இல்ல நான் பேசவா? என நச்சரிக்க, அதில் அவள் “நான் பேசிட்டேன் டா. அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க ஆனால்…” என்று இழுக்க, அதில் “வாவ்!” என துள்ளி குதித்தவன், “அப்பறம் என்ன சித்ரா கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் குஷியாக.

அவளோ, “இல்ல ரோஹித். செல்வி அக்காக்கு இன்னும் மேரேஜ் செட் ஆகாம நான் மட்டும் எப்படி பண்ண முடியும் அக்காவுக்கு முதல்ல மாப்பிள்ளை கிடைக்கட்டும் அப்பறம் பார்க்கலாம்” என்றிட, அவனோ “சித்ரா நான் அப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி பெர்மிஷன் வாங்கியிருக்கேன். நீ ஏன் இப்படி ட்விஸ்ட் வைக்கிற? அவங்க ஒன்னும் உன் கூட பிறந்த அக்கா இல்லையே” என்றதில் அவனை தீயாக முறைத்தவள்,

அவள் “என் கூட பிறந்த அக்கா மாதிரின்னு உனக்கும் தெரியும் ரோஹித்!” என்றாள் காரமாக.

உடனே, “எனக்கு தெரியும் சித்ரா ஆனால்…” என்றதில், அவள் அதனை கேளாமல், “என்னமோ வீட்ல ஓகே சொல்லிட்டாங்கன்னு சொன்ன, இப்போ என்னமோ அங்கிள கட்டாயப்படுத்தி ஒத்துக்க வைச்ச மாதிரி சொல்ற? அப்போ அவங்க மனசார சம்மதிக்கலையா?” எனக் கேட்டாள் கூர்மையாக.

“அது… எந்த வீட்டுல உடனே ஒத்துப்பாங்க. நான் தான் உனக்காக பேசி, உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேன். அதுக்கு அப்பறம் ஓகே சொல்லிட்டாங்க” என்று பேசிட, அதில் சாந்தமானவள், “சரி ரோஹித். கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் பொண்ணு கேட்டு வரச்சொல்லு” என்றதில் அவன் முகம் மலர்ந்தது.

அதன்பிறகு, ரோஹித்தின் தூரத்து சொந்தத்தில் ஒரு மாப்பிள்ளை இருக்க, அவனையே செல்விக்கும் பேசினர். அவனை பற்றி விசாரித்ததிலும் நல்ல முறையிலேயே கூற, இரு வீட்டு பெரியவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது. இரு பெண்களுக்கும் நிச்சயமும் ஒன்றாக வைக்க விழையும் நேரத்தில் தான்… என கூறிக்கொண்டே வந்தவள், சட்டென “அப்பறம் கொஞ்சம் ப்ராப்லம் ஆனதுல கல்யாணம் நின்னுடுச்சு. ரொம்ப டைம் ஆச்சு கிளம்பலாமா?” என நிகழ்வுக்கு வந்து மாறனிடம் வினவியவளை புரியாமல் பார்த்தவன், “என்ன பிரச்சனை ஆச்சு?” எனக் கேட்டான்.

அவளோ “கிளம்பலாம் இளா… வீட்டுல தேடுவாங்க” என்றதில், அவன் “அப்பறம் என்ன ஆச்சுன்னு கேட்டேன்… பதில் வருமா வராதா?” என்றான் அழுத்தமாக.

அதில் நொந்த சித்ராக்ஷி, “அதுக்கு அப்பறம் கொஞ்சம் சாதி பிரச்சனை. அதுல நின்னுடுச்சு” என்றதில், அவன் வேறேதோ யோசனைக்கு சென்றான். அவனின் அத்தை சாரதாவிற்கு கூட இதே பிரச்சனை தானே. அவரும் காதலித்து மணந்தவர் தான். காதலிக்கும் போது தெரியாத சாதி, திருமணத்திற்கு பின் பெரியதாக தெரிய, புகுந்த வீட்டில் சிக்கி பல இடிபாடுகளை பெற்றார்.

அதோடு கட்டிய கணவனும் வீட்டினர் சொல்லை கேட்டு, அவரை துன்புறுத்த, காதலும் வாழ்க்கையும் கசந்து அவன் வீட்டிற்கு கண்கள் சிவந்து, முகம் வீங்கி வந்தவரை இப்போது வரை அவனால் மறக்க இயலாது.

அவன் எங்கோ வெறிப்பதை கண்டு, “இளா” என அழைத்தவள் அவன் திரும்பாமல் இருக்கவும், “இளா…” என்றாள் அவன் தோளை தட்டி. அதில் தான் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன், “கிளம்பலாம்” என்றான் இறுக்கமாக.

அவளோ, “நம்ம மேல தான் கோபமா இருக்காரோ!” என்றெண்ணி ஏனென்றே அறியாமல் மனம் தவிக்க, கூடவே தான் காதலித்தோம் என்றதை எப்படி எடுத்துக் கொண்டார் என்று கூட புரியாது மேலும் தவித்தாள். பின், அவர் தவறாக எடுத்துக் கொண்டால் கூட நல்லது தான். அதன்பிறகு திருமணம் செய்ய சொல்லி கூற மாட்டாரே… என்று ஏதேதோ எண்ணியபடி வீட்டிற்கு செல்ல, இளமாறனோ இதே யோசனையுடன், அவன் வீட்டிற்கு வந்து சாரதாவின் மடியில் படுத்துக் கொண்டான்.

அவர் தான், என்ன ஆச்சு இவனுக்கு என்று புரியாமல், அவன் முடியை கோதி விட்டு, “என்ன மாறா? ஏன் இப்படி இருக்க?” என்றார் பரிவாக. அவருக்கு தெரியும், தான் இங்கு வந்ததில் இருந்து “ஏன் அத்தை இப்படி இருக்க. ஏன் அழுவுற?” என்று பல பல கேள்வி கேட்டு தன்னை குடைந்தவன், என்றாவது தான் அழுத ஞாபகம் வந்து விட்டால் அவர் மடியில் படுத்துக் கொள்வான் என்று.

ஆனால் அது நினைவு வரும் அளவு என்ன நடந்திருக்கும் என்றது புரியாது, அவர் அமர்ந்திருக்க முகுந்த் வந்தவன், “என்னவாம்?” என்பது போல் பார்த்தான். பின் இளமாறனே தன்னை சமன்படுத்திக் கொண்டு எழுந்து அமர்ந்ததால் சாரதா அவனை வாஞ்சையுடன் நோக்க, அவனோ வெகு தீவிரமாக, “அத்தை, நீ ரொம்ப வெய்ட் போட்டுட்டன்னு நினைக்கிறேன் உன் மடியே மெத்தை மாதிரி இருக்கு” என யோசனையுடன் குறும்பாக கேட்டதில், அவர் கண்ணை சுருக்கி முறைத்தார்.

அதில் முகுந்த் வாயை பொத்திக் கொண்டு சிரிக்க, சாரதா இளமாறனை துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பித்தார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
44
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்