1,177 views

நேற்று இரவு தன்னை தனியாக விட்டுவிட்டு அக்னியுடன் அன்பினி சென்று விட்டதை போதை தெளிந்து உணர்ந்தவன் தன்னை தூய்மை கூட படுத்திக் கொள்ளாமல் கோபத்தோடு அலுவலகம் வந்தான். 

 
அவன் வந்த நேரம் தான் அன்பினி அக்னியின் சட்டையை பிடித்து பேசிக் கொண்டிருக்க, மனம் கலங்கியவன் செய்வதறியாது வெளியேறினான்.  பித்து பிடித்தவன் போல் புலம்பிக் கொண்டு வந்த மகேஷ் எதிரில் வந்த பெண் மீது மோதி விட்டான். ஆடவன் இடமிருந்து வரும் மது வாடையும், இடித்ததில் கோபமும் ஒருசேர வர, அப்பெண் அவனை திட்ட தொடங்கினான். உள்ளே இருக்கும் இருவரின் மீது இருந்த கோபத்தில்,
 
“ஆமா வேணும்னு தான் இடிச்சேன் இப்ப பாரு சொல்லிட்டே இடிக்கிறேன்.” என்று அப்பெண்ணை இடித்தான். இந்த முறை திட்டாமல் அழ தொடங்கி விட்டாள் அப்பாவை. அன்பினியிடம் பேசிவிட்டு வந்த அக்னி இதை பார்த்து, மகேஷை  அடித்தான்.
 
அக்னியை தனியாக பார்த்தவன், “நீ யாருடா என்னை அடிக்க. நான் யாரு என் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியாம அடிக்கவா செய்யுற … உன்ன உரு தெரியாம அழிக்கிறேன்.” என்று சவால் விட, அவன் கன்னம் ஆப்பிள் பழம் போல் சிவந்து விட்டது அக்னியின் கோபப்பரிசில். 
 
மகேஷ் இட்ட சத்தத்தில் அலுவலக ஊழியர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள். அச்சத்தம் அன்பினி காதிற்கும் சென்றது. 
 
அக்னி அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க சொல்ல, அவன் முடியாது என்றான். அந்தப் போர்க்களத்தில் அக்னி இன்னும் உடலை சிவக்க வைக்க, கோபம் கொண்ட மகேஷ் அடிக்க கை ஓங்கினான். சரியாக அவன் கையைப் பிடித்த அன்பினி, 
 
“அக்னி மேல ஒரு அடி பட்டுச்சு கைய ஒடச்சிடுவேன்.” என்று அவனின் கையை பின்தள்ளி விட்டாள்.
 
“சித் அவன் தான் என்கிட்ட வம்பு பண்ணான். அவன கேட்காம என்னை திட்டுற.” என்று பொங்கும் மகேஷை அடித்தான் அக்னி. அன்பினி அவனை அடிக்க விடாமல் தடுக்க, கேட்பதாய் இல்லை.
 
“ஸ்டாப் இட் அக்னி.”  கத்தியவள் சண்டையை நிறுத்த,
 
“எதுக்குடி என்னை நிறுத்த சொல்ற அவன் என்ன பண்ணான்னு முதல்ல கேளு.”கோபத்தோடு திரும்பி நின்றான்.
 
“அவன் என்ன வேணா பண்ணி இருக்கட்டும் அதுக்காக இப்படித்தான் அடிப்பியா?” என்றதும் திரும்பி  அன்பினியை முறைத்தான்.
 
நடந்ததை விசாரிக்க… பாதிக்கப்பட்ட பெண் அழுகையோடு சொல்லி முடித்தாள். நியாயமாக மகேஷை அடிக்க வேண்டியவள் அப்பெண்ணை அடித்தாள்.
 
அன்பினி செயலில் கடுங்கோபம் கொண்ட அக்னி அவளை அடிக்க வரும் நேரம், “அவன் உன்ன இடிச்ச அந்த நிமிஷமே இந்த அடியை கொடுத்து இருக்கணும். அதை விட்டுட்டு அழுதுகிட்டு நிக்கிற அசிங்கமா இல்ல. உனக்கு ஆதரவா ஒரு ஆம்பள தான் வந்து நிக்கணுமா.  ஆயிரம் பேர் வேலை பார்க்கிற ஒரு இடத்துலயே உன்னால குரல் உயர்த்த முடியலன்னா தனியா இருக்கும் போது என்ன பண்ணுவ. இவன் மட்டும் இல்ல உன்கிட்ட வேற யாரு தப்பா நடந்துக்கிட்டாலும் உன் உயிர் போற கடைசி நொடி வரைக்கும் போராடு.” என்ற அன்பினியின் வார்த்தையை கேட்ட பின் பாதிக்கப்பட்ட பெண் அனைவரின் முன்பும் மகேஷை அடித்தாள்.
 
 
சுற்றியும் ஆட்கள் நிற்க அக்னி அடித்ததையே சகித்துக் கொள்ள முடியாதவன் ஒரு பெண் அடித்து, அதுவும் அன்பினி சொல்லி அடித்ததை ஜீரணிக்க முடியாமல்,
 
“சித் இவன் பேச்சைக் கேட்டு இத்தனை பேருக்கு முன்னாடி ஒரு பொண்ண விட்டு என்னை அடிக்க வச்சுட்டல இனி உனக்கு எமன் நான் தான். வாழ்நாள் முழுக்க உனக்கு தண்டனை கொடுத்துக்கிட்டே இருப்பேன்.” என்று சபதம் போட்டவனை அக்னி அடிக்க வர, அன்பினி தடுத்து விட்டாள்.
 
“நீ என்னோட ஃப்ரெண்ட் தான் அதுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்க மாட்டேன். முதல்ல ஒரு பொண்ணா எனக்கு சுய கௌரவம் ரொம்ப முக்கியம். நீ மட்டும் இல்ல இந்த இடத்துல என் அப்பாவாவே இருந்தாலும் இதைத்தான் பண்ணி இருப்பேன். இதுக்காக நீ கோபப்பட்டினா நான் ஒன்னும் பண்ண முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.” என்றவள் அனைவரையும் அனுப்பிவிட்டு முறைத்துக் கொண்டு நிற்கும் அக்னியையும் அழைத்துக் கொண்டு  சென்று விட்டாள். 
 
***
செல்வகுமார் தன் பணிகளை முடித்துவிட்டு விக்ரமோடு சென்னைக்கு வந்து விட்டார். ஒரு நாள் ஓய்வெடுத்தவர் மறுநாள் அலுவலகத்திற்கு வந்துவிட, இந்த இடைப்பட்ட நாட்களில் விக்ரமிற்கு அலுவலகத்தின் மீதான பொறுப்பு அதிகமானது. தந்தையுடைய செயல், திறன், அர்ப்பணிப்பு அத்தனையும் பார்த்தவன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாக உணர்ந்து ஆத்மார்த்தமாக அவருக்கு உதவியாக இருந்தான். மகனின் நடவடிக்கையை உணர்ந்த செல்வகுமார் பெருமைப்பட்டார்.  அவரை மேலும் பெருமைப்பட செய்து விட்டான் மறுநாளே அலுவலகத்திற்கு வந்து. 
 
 
வந்தவன் தன்னுடைய தனிப்பட்ட வெறுப்பை காட்டாமல் அக்னிடம் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களின் நடவடிக்கையும் தெரிந்து கொண்டான். இருவரும் ஆலோசனைகளை முடித்துவிட்டு செல்வகுமார் முன்பு நின்றார்கள்.
 
 
ஒப்பந்தத்தை ஒரு முறை பார்த்து விட்டால் அனுப்பி விடலாம் என்று அக்னி கூற, “நீ பண்ணா சரியா தான் இருக்கும் அனுப்பிடு சந்திரா.” என்றார்.
 
செல்வகுமாரின் கனவு அக்னியின் கைகளால் நிறைவேற்றப்பட்டது. அனுப்பி முடித்தவன் அவரிடம், “சார் இன்னும் ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம்.” என்ற இன்ப அதிர்வை  அவருக்கு கொடுத்தான்.
 
“என்ன சந்திரா சொல்ற பொண்ண தான பார்க்க போன இப்ப கல்யாணம்னு சொல்ற.” அதிர்வு கலந்த ஆனந்தத்தோடு செல்வகுமார் கேட்க,
 
“பொண்ண வீட்ல இருக்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போயிடுச்சு சார். அதான் இவ்ளோ சீக்கிரமா கல்யாணத்தை முடிவு பண்ணிட்டாங்க.  இந்த ஒப்பந்தத்தை முடிச்சிட்டு சொல்லலாம்னு விட்டுட்டேன்.” என்றவன் அங்கு இருந்த அன்பினிசித்திரையை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
“எனிவே சந்திரா உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப லக்கி.” என்றவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
“சாரி சார் ” 
 
“எதுக்கு சந்திரா”
 
உங்க கிட்ட ஒரு மாசம் லீவு கேட்டு இருந்தேன்.  இப்போ திடீர்னு கிளம்ப வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு. இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பிக்ஸ் ஆகும்னு நானே எதிர்பார்க்கல.” என்றான்.
 
“இதுல என்ன இருக்கு சந்திரா. நல்லபடியா கல்யாணத்தை முடிச்சிட்டு உனக்கு எவ்ளோ நாள் வேணுமோ நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வா.” என்றவருக்கு சம்மதமாக தலையசைத்தவன் அங்கிருந்து விடைபெற,
 
“சந்திரா ஒப்பந்தம் டெண்டர் விடுற அன்னைக்கு மட்டும் கொஞ்சம் வரியா.” என கோரிக்கை வைத்தார் செல்வகுமார்.
 
“நீங்க கேட்கவே வேணாம் சார் நான் நிச்சயம் அன்னைக்கு உங்க கூட தான் இருப்பேன்.” என்றவன் அன்பினியை பார்க்க, அவளோ தலை நிமிராமல் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
***
 
அக்னி நேரில் இருக்கும் போது கண்டுகொள்ளாத அன்பினி அவன் சென்ற பின் வெறுமையை உணர்ந்தாள். அவன் இருந்த அறைக்குச் சென்றவள் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அவனுடனான சந்திப்புகளை நினைத்து பார்த்தாள். எதிலும் அவனே வெற்றி பெற்றதாய் உணர்ந்தவள் அவனையே வெற்றியாய் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். 
 
 
அக்னி அலுவலகம் வராமல் இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்து விட்டது. பித்து பிடிக்காத குறையாக சுற்றிக் கொண்டிருந்தாள் அன்பினி. எங்கும் அவனே தெரிவதால் வீட்டிற்கு வந்தவள் பாட்டி அறைக்கு சென்றாள்.  அன்பினியின் பாட்டி அவ்வீட்டில் தான் இருக்கிறார். வயது முதுமையின் காரணமாக வெளியில் வராமல் அறையே உலகமென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். 
 
சிறுவயதில் அன்பினியின் உலகம் அவர் மட்டுமே. விக்ரம் பாட்டியின் பாசமிகு பேரன். இருவரையும் அன்பாக வளர்த்தவர் இப்போது குழந்தையாய் இருக்கிறார் வயது மூப்பில்.
 
 
அவரிடம் சிறிது நேரம் பொழுதை கழித்த அன்பினி புறப்பட்டாள் அக்னியின் வீட்டிற்கு. அவன் இல்லாத இந்த நாட்களில் தினமும் இரவு அக்னியின் வீட்டு முன்பு தான் கழியும் அன்பினிக்கு. அன்றொரு நாள் அவனைப் பார்க்க சென்ற இடத்தில் தினமும் காத்திருக்க, அவன் தரிசனம் கிடைக்கவில்லை. 
 
***
 
அக்னியின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே பாக்கி இருக்க கல்யாண மாப்பிள்ளை வந்திருந்தான் ஒப்பந்தம் ஏலம் விடும் இடத்திற்கு. அரசாங்க ஒப்பந்த ஏலம் என்பதால் உயர் அதிகாரிகள், ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட வல்லுனர்கள், சக போட்டியாளர்கள் என அந்த இடம் மேல் தட்டு மக்களால் நிரம்பி இருந்தது. 
 
செல்வகுமார் தன் மகள் மகன் இருவரையும் அறிமுகப்படுத்துவதற்கு பதில் அனைவரிடமும் அக்னியை அறிமுகப்படுத்தினார் பெருமையோடு. இதற்கு முன்னர் சில தொழில் வட்டார நண்பர்களுக்கு மட்டுமே அவன் முகம் தெரியும். மற்றபடி செல்வகுமாரின் பின்னால் அக்னி என்ற ஒருவன் இருக்கிறான் என்று அனைவருக்கும் தெரியும். இன்று தான் தொழில் உலகம் செல்வகுமாரோடு நிற்கும் அக்னியை முழுசாக தரிசித்தது. அன்பினிக்கு அக்னியின் செயல்கள் சுவாரசியத்தை கொடுத்தது. 
 
 
யாரிடமாவது செல்வகுமார் அறிமுகப்படுத்தும் பொழுது அடக்கமாக நிற்பவன் அவர்களிடம் பேச்சுக் கொடுக்கும் போது நாசுக்காக செயல்படுவதை கண்டுபிடித்ததால் சுவாரஸ்யம் கூடியது அவளுக்கு. இன்று அக்னியின்  ஆட்டம் நிச்சயம் வெளிப்படும் என்பதை அவள் மட்டுமே கண்டு கொண்டாள். 
 
 
ஒப்பந்தம் தொடங்கப்பட்டது. செல்வகுமார் ஆர்வம் கலந்த பயத்தோடு  அமர்ந்திருந்தார். அவன் பக்கத்தில் அன்பினி அமர்ந்துக் கொண்டு யாரும் அறியா வண்ணம் அக்னியின் கை பிடித்தாள். செல்வகுமாரை பார்த்தவன் அவர் உணரா வண்ணம் அவள் கைகளை எடுத்து விட,
 
“ஆங்கிரி பேர்ட் உன் அவதாரத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்.” என்றாள். இதழ்கள் ஒரு ஓரமாக வளைந்து ஏளனமாக சிரிக்க,
“என் அவதாரம் உன்னையும் வதைக்கும்.” என்றான். 
 
 
 
ஒப்பந்த ஏலம் தொடங்கப்பட்டதும் சீட்டுக்கட்டில் ஒன்றை எடுத்தால் மற்றொன்று சரிந்து கொண்டே செல்வது போல் அனைவரின் ஒப்பந்தமும் பின் சென்று கொண்டிருந்தது. அதையெல்லாம் கேட்ட செல்வக்குமார் ஆர்வத்தோடு அக்னியின் கையை பிடித்தார். அதை வெடிக்கென்று தட்டி விட்டான் அக்னி. செல்வகுமார் ஒரு நொடி குழம்பி அவன் முகத்தைக் காண, எரிமலை ஆக்ரோஷம் வெடித்து சிதறியது அவன் முகத்தில். 
 
பார்ப்பது உண்மைதானா என்ற ஆராய்ச்சியில் அவர் இருக்க… சத்தமாக ஒலித்தது,
 
“இந்த வருட அரசாங்க ஒப்பந்தம் பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் நிறுவனம் கைப்பற்றுகிறது.” என்ற கம்பீரமான வெற்றி நிமிடம்.
 
 
சந்தோஷத்தில் வானை முட்டிக்கொண்டு நின்றார் செல்வகுமார். வெற்றிக் களிப்பில் பேச்சை இழந்தவர் ஆரவார சத்தங்களுக்கு நடுவில் கம்பீரமாக எழுந்து நிற்க, “வாழ்த்துக்கள் பரமேஸ்வரி டெக்னாலஜிஸ்  எம்டி மிஸ்டர் அக்னிசந்திரன் மணிவண்ணன்.” என்ற ஒரே வாசகத்தில் நெஞ்சில் ஆயிரம் அம்பு எய்திய வலியை பெற்றவர் சரிந்தார் இருக்கையில்.
 
 
கண்கள் நிலையை மறந்து விரிந்தது. மூச்சு வாங்க திரும்பியவர் அவரது சந்திராவை பார்க்க, அவனோ கோர்ட் பட்டனை போட்டுக்கொண்டு கம்பீரமாக மேடை ஏறினான். 
 
 
ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதற்கான அரசாங்க பத்திரம் அவனிடம் கொடுக்கப்பட, உண்மையான உழைப்பை கொடுத்து அரசாங்கத்தின் நன்மதிப்பை பெறுவேன் என்ற உறுதி மொழியோடு கீழ் இறங்கினான். 
 
 
விக்ரம் நம்ப முடியாத அதிர்வில் தந்தையைப் போல் பிரம்மை பிடித்து நிற்க, அன்பினி சிரிப்போடு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் அக்னியை. 
 
“என்ன செல்வகுமார் பையன் இருக்கும் போது வேலை பார்த்த ஒருத்தனுக்கு கம்பெனிய  கொடுத்திருக்க.” என்று அவரின் அங்கிருந்த நண்பர்கள் கேட்க, பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். 
 
 
ஆளுக்கு ஒரு விதமாக இவ்வெற்றியை விமர்சிக்க, அவரோ மேடையில் இருந்து கீழ் இறங்கும் அக்னியை பார்த்துக் கொண்டிருந்தார். அவனும் இவரையே கர்வம் பூக்க பார்த்துக் கொண்டு இறங்கினான். 
 
 
“மிஸ்டர்.செல்வகுமார் நீங்க ஆசைப்பட்ட மாதிரி இந்த ஒப்பந்தத்தை வாங்கிட்டேன். ஆனா சின்ன மாற்றம் என் பேர்ல.” என்றதும் அவன் சட்டையை பிடித்து விக்ரம்,
 
“ஃபிராடு என்ன பண்ணிடா இதை பண்ண. நான் அப்பவே உன்னை சந்தேகப்பட்டேன்.” என ஆக்ரோஷமாக பேசினான்.
 
புன்னகை தவறா முகத்தோடு,
“கைய எடுத்துடு ஆள் இருக்காங்கன்னு கூட பார்க்க மாட்டேன். ஏற்கனவே உங்க அப்பன் நிலைகுலைந்து போயிருக்கான் மொத்தமா மேல போக வச்சிடாத.” என்றவன் எடுக்க மறுக்கும் விக்ரமின் கைகளை அழுத்தமாக எடுத்து விட்டான். 
 
 
“என்ன செல்வகுமார் அதிர்ச்சியா இருக்கா? எப்படி இந்த மணிவண்ணன் பிள்ளை அக்னிசந்திரன்.” ஐ விரல்களையும் தன்னை நோக்கி கீழிருந்து மேலாக அசைத்தவன்,
 
“எங்க அம்மாவோட உழைப்ப  வாங்கும் போது அவங்களுக்கும் வலிச்சிருக்கும் தான இதே மாதிரி. எங்க அம்மா நிர்வாகம் பண்ண அலுவலகத்தை நிர்வாகம் பண்ற அளவுக்கு உனக்கு திறமை இல்லை. அக்னி உள்ள வந்தான் பண்ணிட்டான்.” என்றவனை இன்னும் ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் அன்பினி.
 
 
அதிர்ச்சியில் இருக்கையில் அமர்ந்தவர் நிலை மோசமாகியது. தந்தையின் நிலையை உணர்ந்த அன்பினி அக்னியை மறந்து மருத்துவமனைக்கு விரைந்தாள். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் செல்வகுமார். அதையெல்லாம் கண்டு கொள்ளாத அக்னி அங்கு ஆக வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டான். தனக்கு வேண்டிய அத்தனை உடைமைகளையும் எடுத்தவன் செல்வகுமார் அனுமதிக்க பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வந்தான். 
 
 
விக்ரம் உண்மை புரியாது சண்டையிட, “ரொம்ப துள்ளாதடா என் கிட்ட தான் வேலைக்கு வரனும். மாச சம்பளத்தை பிடித்துடுவேன்.” என அக்னி கூறியதும் இன்னும் சண்டையிட்டான் .
 
உடல் நலம் தேறிய செல்வகுமார் மகனை அடக்க, “இனி இந்த பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் என்னோட கண்ட்ரோல். அதாவது நீங்க என் அம்மா கிட்ட இருந்து வாங்கின கம்பெனிய திரும்ப அவங்க பையனே வாங்கிட்டான். எப்படின்னு யோசிக்காதீங்க உங்க விசுவாசிய நம்பி பக்கம் பக்கமா கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கீங்க.  மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். என் தாத்தாவோட மகனா உங்களுக்கு அந்த ஆபீஸ்ல கொஞ்சூண்டு உரிமை இருக்கு. அதுக்காக வேணா மாசம் கொஞ்சம் காசை பிச்சை போடுறேன். அதுவும் போதலனா  நீங்களும் உங்க மகனும் என் ஆபீஸ்ல வந்து வேலை பாருங்க.” என்றான் அக்னி.
 
“டேய் நீ யாருடா எங்க அப்பாவை வேலை பார்க்க சொல்ல.” நிறுத்தாமல் குதித்துக் கொண்டிருக்கும் விக்ரமின் வாயில் ஒரு குத்து விட்ட அக்னி, 
 
“இங்க பாரு உன் கிட்டயும் ஒரு கையெழுத்து வாங்கி வச்சிருக்கேன். இதுல என்ன வேணா என்னால எழுத முடியும். உன்ன அடிமையா என் ஆபீஸ்ல ஒப்பந்தத்திற்கு வாட்ச்மேன் வேலை செய்ய வைக்க முடியும் ஞாபகம் வச்சுக்க. இந்த திமிர் எல்லாத்தையும் உங்க அப்பனோட நிறுத்திக்க. சும்மாவே அக்னி உனக்கு அடங்க மாட்டான் இனி அடக்கிடுவான் மொத்தமா .” என்ற கர்ஜனையோடு அவன் அங்கிருந்து வெளியேற,
 
“கையெழுத்து போட்டுட்டா உனக்கு சொந்தம் ஆகிடுமா. இதை போலின்னு என்னால நிரூபிக்க முடியும்.”  மிதமான குரலில் செல்வக்குமார் கூற,
 
 
“ஹா! ஹா! இன்ட்ரஸ்டிங் மிஸ்டர் செல்வகுமார். தாராளமா பண்ணுங்க ஆனா அதை நிரூபிக்க கொறஞ்சது பத்து பதினைந்து வருஷமாவது ஆகும். அதுக்குள்ள உங்களுக்கு பால் ஊத்திட போறாங்க பார்த்து.”என்ற அக்னியின் பேச்சு அவர் மீது இருப்பதற்கு பதில் அன்பினி மீது தான் இருந்தது. 
 
 
அவளோ கண்சிமிட்டாமல் அக்னியை ரசித்துக் கொண்டிருக்க, அதில் தொலையாமல் இருக்கவே விரைவாக வெளியேறி விட்டான்.
 
நந்தினி அக்னியின் நடவடிக்கையில் அழுகையோடு நின்றருக்க, அன்பினி அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
 
இரவு வீட்டிற்கு வந்த செல்வகுமார் யாரும் அறியா வண்ணம் அவரின்  நண்பன் நாகராஜை தொடர்பு கொண்டார். 
 
எடுத்ததும் எதிரில் இருந்த ஆள் ஒப்பந்தம் தொடர்பாக பேச, நடந்த அனைத்தையும் சொன்னார். “உன்னையும் என்னையும் அசிங்கப்படுத்திட்டு ஓடுனவ பையனுக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். நீ என்ன பண்ணுவியோ தெரியாது அந்த கல்யாணம் நடக்கக் கூடாது. நம்ம பட்ட அவமானத்தை அவளும் கூட்டிட்டு ஓடினான் பாரு அவனும் அனுபவிக்கணும். அதெல்லாம் விட ஒரு பொடி பையன் இத்தனை வருஷமா என்னை ஏமாத்திட்டான். அவன் உலகத்துக்கு முன்னாடி தலை குனிஞ்சு நிக்கணும்.” நேற்று வரை அன்போடு பாராட்டிய ஒருவனை இன்று அடியோடு அழிக்க நினைத்தார் செல்வகுமார்.
 
எதிரில் இருந்த நாகராஜ், “உனக்காக இல்லனாலும் எனக்காக நிச்சயம் இந்த கல்யாணத்தை நிறுத்துவேன். என்னை அவமானப்படுத்தினவ அதே அவமானத்தை அனுபவிக்கணும்.” என்றார்.
 
இருவரும் பேசிக் கொண்டிருக்க, “அப்பா” என்று அழைத்தாள் அன்பினி.
 
திடுக்கிட்டு திரும்பியவர் அவசரமாக போனை கட் செய்ய, “அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.” என்று உடனே வெளியேறி விட்டாள் அவரை பார்க்காமல்.
 
***
வீட்டிற்கு வந்த அக்னி யாரிடமும் எதையும் சொல்லவில்லை. எதுவும் நடக்காதது போல் குடும்பத்தோடு ஆனந்தமாக இருந்தான். ஆனால் மனதில் அன்னைக்கு தெரிந்தால் என்ன சொல்வார் என்ற பயத்தில் சுழன்று கொண்டு இருந்தான். இதுவரை மகன்  செல்வகுமாரிடம் தான் வேலை பார்க்கிறான் என்பதை அறியவில்லை பரமேஸ்வரி. நாசுக்காக அதை மறைத்தான் அக்னி. 
 
 
திருமணம் முடிந்ததும் இதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று  முடிவெடுத்திருந்தான் அன்னையின் மனம் இதை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளாது என்பதை தெரியாமல். யாருக்காகவும் காத்திருக்காமல் இரண்டு நாள் ஓடியது.  விவரம் அறிந்த அவரின் தாய் அன்னபூரணி மகனைப் பார்க்க அறையை விட்டு வெளியில் வந்தார்.
 
***
 
இவர்கள் வீடு சோகத்தில் மூழ்கி இருக்க, அக்னியின் வீடு மங்களகரமான கல்யாணத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தது. இன்று தான் அக்னியின் திருமணம். அன்னையின் ஆசைக்காக மகன் செய்யப் போகும் திருமணம். கனவுகளை மறந்து குடும்பத்திற்காக வாழ்ந்த பரமேஸ்வரியின் ஆசையை நிறைவேற்ற அவருக்கு பிடித்த பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தான் அக்னி. 
 
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமோகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான மேற்பார்வையை மணிவண்ணன் பார்த்துக் கொண்டிருக்க பெண் வீட்டுக்காரர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். 
 
 
சம்மந்தியிடம் ஆர்வமாக மணிவண்ணன் பேச, “மன்னிச்சிடுங்க சம்பந்தி இப்பதான் எங்களுக்கு விவரம் தெரியும். எங்க வீட்டுல கல்யாணத்துக்கு அப்புறம் தான் ரிசப்ஷன் வைப்பாங்களாம். கோச்சுக்காம இதை கல்யாணத்துக்கு அப்புறம் மாத்த முடியுமா.” என்று எதிர்புறத்தில் இருந்து அன்போடு கோரிக்கை வைக்க, சங்கடப்பட்டது தந்தையின் மனது.
 
விஷயம் பரமேஸ்வரி காதிற்கு எட்டியது. விருப்பமில்லை என்றாலும் வருங்கால மருமகளுக்காக விட்டுக் கொடுத்தார். வந்திருந்த அனைவரும் வரவேற்பு ஏன் நடக்கவில்லை என்று கேள்வி எழுப்ப சங்கடம் இருந்தாலும் சிரித்த முகமாக சமாளித்தார்கள்.   
 
 
சூரிய உதயத்தில் மங்கள இசை ஒலிக்கப்பட்டது. மணிவண்ணன் பொறுப்பாக அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டிருக்க, திவ்யா நாத்தனார் உரிமையோடு வளம் வந்து கொண்டிருந்தாள் மண்டபத்தை.
 
பரமேஸ்வரி மகிழ்விற்கு எல்லையே இல்லை. பெற்ற பிள்ளை உயிருக்கு போராடிய நிலையில் ஊசலாடி கொண்டிருக்க, அவனை காப்பாற்ற செய்யாத தவமில்லை பரமேஸ்வரி. மடிப்பிச்சை ஏந்தி தன் மகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர் இன்று அடுத்த தலைமுறையை உருவாக்க அடி எடுத்து வைத்து விட்டார்.
 
 
எமனிடமிருந்து தன் மகனை மீட்டவர் குழந்தைக்கு அழகு பார்ப்பது போல் சீவி சிங்காரித்து கொண்டிருந்தார் அக்னியை. அன்னையின் மகிழ்வில் மனம் நிறைந்தவன் மனதின் ஒரு ஓரத்தில் இருக்கும் அன்பினி நினைவை ஒதுக்கி தள்ளினான். 
 
“என் அழகு ராஜா” என்று நெட்டி முறித்தவர் மகனுக்கு முத்தமிட்டார். தாயைப்போல் நெட்டி முறித்து, “என் அழகு ராஜாவோட அம்மா .” என்றான் அவனும். 
 
 
உள்ளே நுழைந்த திவ்யா, “என் அழகு ராஜா தங்கச்சி” என்று அவளுக்கு அவளே நெட்டி முறித்துக் கொள்ள சிரிப்பு மழை பொங்கியது. தாயும் மகனும் வீட்டின் இளவரசியை திருஷ்டி கழிக்க, அச்சாணி மணிவண்ணன் அங்கு வந்தார். 
 
 
நால்வரும் ஒருவரை ஒருவர் ஆறத் தழுவி தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, முகூர்த்த நேரம் வந்து விட்டதாக அழைத்தார்கள். தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன் மேடை ஏறினான்.
 
 
புகை ஓரளவிற்கு உயிர் பெற்றிட ஐயரின் மந்திரங்கள் அதற்கு அழகு சேர்த்தது. பட்டு வேட்டி சட்டையில் அக்னி சந்திரன் மாலையோடு அமர்ந்திருக்க, அவனைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள் பெற்றோர்கள். திவ்யா ஆசையோடு அண்ணனின் கல்யாணத்தை பார்க்க நின்றிருக்க, மணப்பெண்ணை அழைத்து வரச் சொல்லி உத்தரவு பறந்தது.
 
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
31
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *